கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 12,823 
 
 

‘புரிந்துணர்வுப் போர்நிறுத்தம்’, ‘தற்காலிகப் பேச்சு வார்த்தை’, ‘புலிகளே முன்வரும் போர்நிறுத்தம்’, ‘இனி வடக்குக்கும் போய் வரலாம்’, ‘ஏ – 9 பாதை திறப்பு’, ‘ஆஹா! இனி வடக்குக்கும் தெற்குக்கும் இடையே போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை…’, ‘நாகதீபத்துக்குச் சென்று எத்தனை வருடங்களாகிவிட்டன’, ‘அந்தப் புத்த பகவானின் கருணை விழிகளின் முன்றலிலே அன்றலர்ந்த வெண்தாமரைகளாகிப் பனித்துளி மின்னக் கிடந்த காலைப் பொழுதுகள் தான் எத்தனை……?’ ஆத்மலயமும், சுருதியும் பிரபஞ்ச வெளியில் மோனரகஸ்யங்களுடன் ஒன்றி… ஒரே வெளிச்ச வீட்டில் வாசம் செய்த புலரிகள்தான் என்ன சுகமானவை!

மாயாவதி கனவுகளில் ஆழ்ந்து போனாள்.

‘அம்மே!…. அம்மே!…’ – யாரோ உலுக்கி எழுப்புகிறார்கள்.

மகன் கருணாரத்ன வாலிப மிடுக்குடன் நிற்கிறான்.

‘ஆ!… எவ்வளவு வளர்ந்து விட்டான்!…’ அவனையே வைத்த விழி மூடாமல் ஆர்வத்துடன் பார்த்தாள். அவன், யாழ்ப்பாணத்தில் இருந்து வீட்டைத் துறந்து, பேக்கரியை விட்டு, எல்லாவற்றை யும் குடும்ப நண்பர்…. சிவப்பிரகாசத்திடம் ‘என்ன செய்வியோ ?… ஏது செய்வியோ….. எல்லாம் உன் பொறுப்பு!’ என்று ஒப்படைத்து விட்டுப் புறப்பட்டபோது இவன் கைக்குழந்தை. இவன் அழுதபோது ‘அம்மா’ என்றது இப்போது ஞாபகம் வருகிறது. ஆனால், இன்றோ ….?

வடக்கு என்றால் முகத்தில் வாட்டம் வருகிறது. எங்களது சொத்து, சுகம் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு எங்கள் நிலத்திலிருந்து துரத்தி அனுப்பியவர்கள்…..! துவேஷம் கசந்து வழிகிறது. எண்பதுக்கு முன்னும் பின்னுமாகப் பிறந்த சந்ததிகள் இரு பக்கமும் தத்தம் சூழல்களில் இருந்து சிந்திக்கப் பழகி விட்டார்கள். மோசமான சூழலை ஏற்படுத்திய அரசியல்வாதிகளை மறந்து, சுயநலங்களை மறந்து அடித்துப் பிடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

எத்தனை அழிவு…. இழப்பு… உயிர்…. பொருள்… சுகம்…. அமைதி…. விழிகள் அவனை வெறித்துப் பார்த்தனவேயொழிய, அவன் புலன்கள் எல்லாம் சப்தசமாதியாகி, எங்கோ ஒரு மையப் புள்ளியில் ஒடுங்கியதென….

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தி, காலை நாலு மணியளவி லேயே உயிர்ப்புக் கொள்ளத் தொடங்கிவிடும். யாழ்ப்பாண புகையிரத நிலையப் பரபரப்பு சந்தி வரைக்கும் நிலவும். காலை யாழ்தேவியில் கொழும்பு செல்லும் பயணிகள் டாக்ஸி…. கார்…. சைக்கிள் கரியரில்’ பயணம் செய்யும் எல்லாரும் சந்திக்கடை மலையாளத்தான் கடை… மாதவன் கடை… எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டு…. ‘சுடுசுடு மசால் வடை’, கிழங்கும் இஞ்சியும் போடப்பட்ட உழுந்து வடை, அற்புதமான தேனீர் என்பவற்றுக்காக இறங்கித்தான் போவார்கள். அதனருகே இவர்கள் வீடும், வளவும், பாண் பேக்கரியும். இங்கும் வியாபாரத்துக்குப் பஞ்சம் இல்லை. இவர்களின் பாணுக்கும், சீனிச் சம்பலுக்கும், மாலு பணிசுக்கும் பெரிய கிராக்கி. எல்லாவற்றுக்கும் காரணம் சுத்தம்…. சுவை… நிறைவு….. மலிவு…

வீதியில் வடக்கு நோக்கித் திரும்ப, இடது வளைவில் ஸ்ரீ நாகவிகாரையும் விழித்தெழும்பி இருக்கும். ‘பிரித்’ ஓதும் ஒலிகள் எழ ஆரம்பிக்கும். ஆலமரக் கிளிகளும், மஞ்சள் மைனாக்களும், கடற் காக்கைகளும் சில வேளைகளில் செம்போத்துக்களும் என பல்லினப் பட்சிகள் படபடத்துப் பறக்கும் ஒலிகள், பிரதேசத்தையே மயக்கங் கொள்ள வைக்க, காலை இளந்தென்றல் காவி வரும் நல்லூர்க் கந்தன் ஆலயமணி ஓசையுடன், ஏனைய சிறு கோயில்களின் பூசை மணியோசையும், சோனகர் தெருவிலிருந்தும், பெரிய கடையிலிருந்தும், காங்கேசன்துறை வீதியிலிருந்தும், பள்ளி வாசல்களிலிருந்தும் வந்து கலக்கும் ‘பாங்கு’ ஒலிகள் இடை – யிடையே வந்து இணையும். தெய்வீகம் இணையும். மானிடமா? மானிடத்தின் இயல்பான இயற்கையா?

ஆரியகுளம் தெருவோர வாகை மரங்கள், எச்சமிடுவதுபோல் விழும் காய்களால் நீர் வளையமிட்டு அழகுக் கோலமிடும். படிப்படி யாகப் பலாலி வீதி, பருத்தித்துறை வீதி எல்லாமே விழிப்புக் காணத் தொடங்கிவிடும். முதல் பஸ்கள் ஆஸ்பத்திரி, பெரியகடை என ஓட ஆரம்பித்துவிடும். ஆரியகுளம் சந்தியில் இருந்து ஒரு ஆரை எடுத்து வட்டம் போட்டால், கச்சேரி, பிரபல பாடசாலைகள், கோயில்கள், சந்தைகள் எல்லாம் அதற்குள் அடங்கி விடும். பெரிய பெரிய மாளிகைகளும், கடைகளும், மெத்தை வீடுகளும், சாய்ப்புக் கடைகள் கொண்ட பறங்கித் தெருவும் (தற்போது பிரதான வீதி) உள்ளடங்கிவிடும்.

காலை எட்டு மணியளவில் அவள் தன் பெற்றோருக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு, ‘ஸ்கூலுக்குப் போகத் தயாராக இருப்பாள். அவள் படிக்கும் ‘சிங்களப் பாடசாலை’ மிகமிக அண்மையில் இருந்தது. அவள் வீட்டில் இருந்து பலாலி வீதி வழியாகவோ, அருகிலுள்ள புகையிரதப் பாதை வழியாகவோ பாடசாலைக்குச் செல்லலாம். பலாலி வீதியை வெட்டிச் செல்லும் ஆஸ்பத்திரி வீதியை இடது பக்கமாகக் கடந்தால், அடைக்கல மாதா கோயில் வரும். அதன் அருகே பரந்த நிலத்தில் அவள் பாடசாலை இருந்தது. பாடசாலையில் சிங்கள நண்பிகள் இருந்தாலும், வீட்டுக்குப் பக்கமாக எல்லாருமே தமிழர்கள்தான். மொழி வேறுபாடு அவர்களிடையே இருந்ததில்லை.

ஆண்கள் விகாரைக்கு முன்னால் உள்ள பள்ள நிலத்தில் காற்பந்தோ, கிரிக்கெட்டோ விளையாடுவார்கள். பெண் பிள்ளைகள் வீட்டிலேயே கெந்திப் பிடித்தோ, ‘கிளிபூந்தோ’, ‘கொக்கான் வெட்டி’யோ, அல்லது வீடுகளில் ‘பூசை’ வைத்தோ விளையாடு வார்கள். வெசாக் காலங்களில் புத்தர், விஷணு, பிள்ளையார், முருகன் தெய்வங்கள் அவர்கள் பூசையில் இடம்பெறும். ஆடி, ஆவணி மாதங்களில் முருகன் முதலிடம் பெறுவார். நல்லூர், கதிர்காமம். மார்கழியில் கிருஷணன் இடம்பெறுவார். பக்கத்து வீட்டுச் சிவப்பிரகாசம் குழந்தைகளின் விளையாட்டுக்காக ஒரு சிறு கோயிலையே கட்டிக் கொடுத்தார். சிறு செடிகள் என வேம்பும், அரசும் இணைந்து வளர்ந்திருந்த மரத்தினடியில் சிறுவருக்காகக் கட்டிய கோயிலில் எப்படி எல்லாத் தெய்வங்களும் நிறைந்து குடியேறின என்பது தெரியாமலேயே பெரியவர்களும் பயபக்தியுடன் கொண்டாடும் கோயிலாகி விட்டது. நோய் நொடி காலங்களில் அந்தந்தத் தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செய்வதும், நூல் கட்டு வதும் தெய்வீகம் பெற்று விட்டது.

சிவப்பிரகாசத்தாரின் வீடும் அங்கிருந்தவர்களும் உறவினர் களாகி விட்டனர். சிவப்பிரகாசத்தாரின் மகள் மைதிலி அவள் உயிர்த் தோழியாகி விட்டாள். இருவரையும் பிரித்துப் பார்ப்பது அரிதாகி விட்டது. ஆனாலும், பிரிய வேண்டிய வேளை வந்து விட்டது. தமிழர்களிடையே பல குழுக்கள் எதனை…. யார்… எப்போது… ஏன் செய்கிறார்கள்….? என்பதனை அறிய முடியாத பீதி அவர்கள் மனதை நிறைத்தது. வெளியே செல்வது குறைந்தது. வியாபாரம் படுத்தது. ஆனாலும், வீட்டைவிட்டு வெளியேற மனம் வரவில்லை . அதற்கும் ஒருநாள் காலை முடிவு வந்தது.

“படார்!… படார்!…” என்ற சம்மட்டிகளின் சப்தங்களும் பெரிய பெரிய கற்கள் சரிந்து விழும் பேரோசைகளும் ஒருநாள் காலையில் அந்தப் பிரதேசத்தையே கிடுகிடுக்க வைத்தது. திடுக்கிட்டு விழித்தவள் வேகமாகச் சந்திக்கு ஓடினாள். விகாரைப் பக்கமாகவே சப்தம் எழுந்துகொண்டிருந்தது. அவளைப் பயம் பீடித்தது. மேனி நடுங்கியது. புறாக் குஞ்சின் நெஞ்சாக மார்பு துடித்தது. ஏராளமான இளைஞர்கள் தாதுகோபத்தை இடித்துக்கொண்டிருந்தார்கள். வெண்மொட்டென வானோக்கி எழுந்திருந்த தாதுகோபத்தின் அரசிலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.

அவள் வீட்டை நோக்கி ஓடினாள். பயம், கண்ணீர், கவலை.

– எல்லாவற்றையும் நிறைத்துக் கொண்டு மறந்திருந்த சொந்தங் களைத் தேடித் தெற்கு நோக்கி அவர்கள் குடும்பம் நகர்ந்தது. மைதிலியையும், அவள் குடும்பத்தாரையும் பிரிவதுதான் அவள் வேதனையை அதிகரிக்க வைத்தது.

‘மீண்டும்’ ஒருக்கா யாழ்ப்பாணம் செல்ல வேண்டும். பழைய வீட்டைப் பார்க்க வேண்டும். மைதிலி குடும்பத்தைப் பார்க்க வேண்டும். அவள்… குழந்தைகள்… கணவன்… ஏ-9 பாதை திறப்போடு ஒருக்காப் போய்ப் பார்த்திட்டுத்தான் வரவேண்டும்.

ஏ-9 பாதை திறந்த சில மாதங்களாக இந்தச் சிந்தனைகள் அவளை இயக்கிக் கொண்டிருக்கிறது. வீட்டில் அவள் பெற்றோர்கள் காலமாகிவிட்டார்கள். மகனுக்கோ, கணவனுக்கோ வடக்கு என்றாலே பத்திவருகிறது. அவர்கள் ஒழுங்காக விகாரைகளுக்கும் கோயில் களுக்கும் சென்று வருகிறார்கள்.

அங்கு புத்தரின் போதனைகளைவிட ‘புத்த மதத்தைக் காக்க இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும்’ என்ற ‘மதப் போதனைகளையே பிக்குகள் செய்து கொண்டிருந்தார்கள். இளைஞர்களைப் போர்முனைக்குச் செல்லத் தூண்டிக் கொண்டி ருந்தார்கள். அனுப்பிக் கொண்டிருந்தார்கள். போரில் இறந்த உடல்கள் உருக்குலைந்து ஊருக்கு வந்தபொழுதெல்லாம் சடலங்களுக்கு எரியூட்டுவதற்கப் பதிலாக மரணச் சடங்குக்கு வந்த இளைஞர்களுக்கு எரியூட்டிக் கொண்டிருந்தனர். அரசியல்வாதிகள், படையினர், இராணுவ அதிகாரிகள் போரினால் பெரும் பணம் ஈட்டிக் கொண்டிருந்தனர். வாழ்வுக்கும், வரலாற்றுக்கும், மதத்துக்கும் புதிய புதிய சாயம் பூசத் தொடங்கப் புதிய வர்ணம், விடயம் இன்னதென்று புரியாத புதிய இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியூட்டிக் கொண்டிருக்க, மனதில் மானிடம் மறைய துவேஷம்’ ‘அருள்’ கொண்டது. இதற்கு மாயாவதியின் கணவனும், மகனும் பலி யானதில் வியப்பில்லை. வீட்டில் நாள் தோறும் விவாதம். சாப்பாட்டு அறை விவாத மேடையாகும்.

‘அம்மே!… அம்மே!..’ தாயின் வெறித்த பார்வையைக் கண்டு பயந்துபோன கருணாரத்ன அவள் தேளைப் பிடித்து உலுக்கினான். அவள் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தாள். அவளை அறியாமலேயே வாய் மெல்ல முணுமுணுத்தது. ‘நான் ஒருக்கா யாழ்ப்பாணம் போய்வரவேணும்’ அவனுக்கு அவள் சொன்னது கேட்டதோ, என்னவோ? அவன் உற்சாகமாகக் கூறினான். அம்மே!.. விஜய ரட்ணா நேற்று லீவில் வந்திருக்கிறான். யாழ்ப்பாணம் பற்றிக் கதைகதையாகக் கூறுகிறான். தான் ஆனையிறவு போரில் பத்துப் போராளிகளைக் கொன்றதாகக் கூறுகிறான். அதாலதான் தனக்குச் சுலபமாக லீவு கிடைத்ததாம். தன்னை இப்பகூட இதாலதான் விமானத்தில் அனுப்பினதாம். இல்லாட்டித் தரைவழியாகவோ, கப்பல் வழியாகவோதான் அனுப்புவினமாம். தனக்கு லீவு முடிஞ்சு போனா புறமோசன் காத்திருக்காம்.

“வேறென்ன சொன்னான்?”

“இப்ப யாழ்ப்பாணம் வந்து போற சிங்கள மக்கள் அதிகமாம். யாழ்ப்பாணம் இப்ப ஒரு ரூரிஸ்ட் ஸ்பொட்’ ஆகிவிட்டதாம். எல்லாம் தாங்கள் செய்த அடிபாடுதான் காரணமாம்” பெரிதாகக் கூறுகிறான்.

‘அதுசரி ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரை…?’ அவள் தயக்கமாகக் கேட்டாள்.

எல்லாம் நல்லபடியாத் திருத்தியாகிவிட்டதாம். தங்க ஏற்றவாறு அதுக்கு முன்னாலேயே இடம் இருக்குதாம். ஹாமத்துருதான் மேற்பார்வையாம். ஒரு பயமும் இல்லையாம். இராணவத்தினர்கூட வந்து போகினமாம்.

அவள் கண்கள் ஒளிர்ந்தன. அந்த ரூரிஸ்ட் பேரூந்து ஏ-9 பாதையில் விரைந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக மாயாவதிக்கு ஜன்னல் பக்கமாக இருக்கை கிடைத்தது. வெளியே காட்சிகளில் பெரிதும் மாற்றம் இல்லை. அப்படி மாறியிருந்தால் முன்பு பொட்டல்கள், வெளியாக இருந்த இடங்களில் கட்டடங்கள் முளைத்திருந்தன. இல்லாவிட்டால் முன்பு சிறு கட்டடங்களாக இருந்தவை தலை நீட்டி மாடிகளாக உயர்ந்திருந்தன. பாதைகள் நன்றாக இருந்தன. பயணம் சுகமாகப் போய்க் கொண்டிருந்த தெல்லாம் அனுராதபுரம், மதவாச்சி தாண்டு மட்டும்தான்.

பிறகு வெகுவேகமாகக் காட்சிகளும், கோலங்களும் மாறத் தொடங்கின. அவள் வியப்பினுள் புதைந்து போனாள். கரையோர மரங்கள் கருகி நின்றன. முன்பு பச்சைப் பசேலென பற்றைகளாலும், காட்டு மரங்களாலும் சூழப்பட்டிருந்த இடங்கள்…… ஆங்காங்கே புற்கள் பற்றியெரிந்த கோலத்தில் …. கருமையும் மஞ்சளுமாக மண்டிக் காணப்பட்டன. வவுனியா, ஓமந்தைப் பகுதிகளைத் தாண்டியதும் கரையோர வீடுகள், சிறுகோவில்கள், பாடசாலைகள் எல்லாம் கூரையின்றியும், பக்கச்சுவர் இன்றியும், எல்லைகள் இன்றியும் பரிதவித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. மக்கள் வாழ்ந்த பிரதேசம் எனக் கூற அகழ்வாராச்சிக்காரரைத்தான் தேடி ஓட வேண்டும். அதிலும் அரசியல் நிச்சயம் புகுந்துவிடும். நிலத்தடியில் காணப்படும் நாகரிகம் ஆரியமா? திராவிடமா? என்று தவித்த முயலை அடித்துக் கொல்லத் தொடங்கிவிடும் இன்றைய நாகரிகம்.

பேரூந்து முறிகண்டியில் நின்றபோது அவளுள் ஒரு பரவசம் ஏற்பட்டது. முறிகண்டிப் பிள்ளையார் எல்லா வழிப்பயணிகளுக்கும் செல்லப் பிள்ளையார். மத, இன, மொழி வேறுபாடற்ற வழித் துணைவர். இன்றும் பல தென்பகுதிப் பயணிகள் வாகனங்களால் சூழ்ந்து காணப்பட்டார். பிள்ளையாரை வழிபட்டு மீண்டும் பேரூந்தில் வந்தமர்ந்தபோது அவள் மனம் ஏனோ எதிர்காலம் பற்றி நம்பிக்கை கொண்டிருந்தது.

பேரூந்து புறப்பட்டது.

கிளிநொச்சி, பரந்தன் என்று பயணம் நீண்டபோது மனம் வேதனையில் ஆழ்ந்தது. கிளிநொச்சி நகரம் எங்கே? பஸ் ஸ்ராண்ட் எங்கே? கடை கண்ணிகள் எங்கே? வீடுகள் எங்கே? காடுகளாக எல்லை வரித்திருந்த பசுமைகள் எங்கே?… அவற்றில் தாவித் திரிந்த நரைக் குரங்கினங்கள் எங்கே? பாதைகள் குன்றும் குழியுமாக…… ஏ-9 பாதையும் அகலப்படுத்துவதாக….. மஞ்சள் கறுப்புப் பட்டிகளால் நிலக் கண்ணிப் பகுதிகள் எல்லை காட்டப்பட்டனவாக…. அந்துவான வெளியில் நிற்பதான ‘தனியன் மரங்களில்கூட மண்டை யோடும் எலும்புக் குருசு’களும் அபாயம் கூறிக் கொண்டிருக்க பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தது.

இதுவரையும் ஏற்படாத கவலை அவளுக்கு ஏற்பட்டது.

நான் போட்ட கடிதம் மைதிலி குடும்பத்தாருக்குக் கிட்டி யிருக்குமோ? இடப்பெயர்வினால் அவர்களும் எங்காவது போயிருப்பினமோ? பழைய விலாசத்தில்தான் இருக்கிறார்களோ? இல்லாவிட்டால் வந்த நோக்கம் பாழாகி விடுமே? பழைய பாசம் இப்போதும் இருக்குமோ…. வரவேற்பு எப்படி இருக்குமோ?

பேரூந்து வேகம் எடுத்தது. ஜன்னல் வழியாகக் காற்றுப் பலமாக முகத்திலறைந்தது. மயிரிழைகள் மூக்கிலும், வாயிலும் புகுந்து கீச்சுமூச்சுக் காட்டின. வெட்ட வெளியில் மாடுகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. குறிசுட்ட மாடுகளாகத் தெரிய வில்லை . எல்லாம் குளுவன்கள். குழுக்களாகத் திரிந்தன. எந்தக் குழுவிலும் ஐம்பது மாடுகளுக்குக் குறையாமல் இருந்தன.

திடீரென இருபுறமும் வெட்ட வெளியெனப் பாலை தெரிந்தது. இது எந்த இடம்? புரியவில்லையே? முன்பு எவ்வளவு காலம் இந்தப் பாதையால் வந்து போயிருக்கிறேன். இது என்ன மயக்கம்?

யாரோ பின்னாலிருந்து கூறுகிறார்கள்.. இதுதான் ஆனையிறவு!

ஆனையிறவா? உப்பளங்கள் எங்கே? அதன் அலுவலகங்கள் எங்கே? புகையிரதப் பாதை….. அதன் பெட்டிகள்…. எஞ்சின்கள்…. ஸ்ரேசன்…. வாடி வீடு…. இவையெல்லாம் எங்கே போயின? என்ன வாயின? இங்கு வேலை பார்த்தவர்கள்…. அவர்கள் இருப்பிடங்கள்….

ஏ-9 பாதையின் கரையோர மேட்டில் ஒரு ‘பவள்’ வாகனம் கறையேறிச் சரிந்து கிடந்தது…. சற்று நேரத்திற்கெல்லாம் பூவரச மரக் கூடலிடையே பாரிய கவசவாகனம் இரும்பணைபோல் எழுந்து நின்றது. அதில் தமிழில் எழுதப்பட்ட விடுதலை வீரர்களின் பெயர்கள் வேகமாகச் சென்று மறைந்தன. பாதைகள் மேடும், பள்ளமும் உப பாதைகளுமாக வளைந்தும், நெளிந்தும், சகதியுமாகக் காணப் பட வாகனம் உடலைக் குலுக்கி எடுத்தது. இப்பொழுதுதான் போரின் உக்கிரம் மாயாவதிக்குப் புலப்படத் தொடங்கியது.

‘இதால இப்பவும் இராணுவ டாங்கிகள் போறதோ?’ யாரோ கேட்கிறார்கள். சிரிப்பொலி எழும்புகிறது.

‘நல்ல கதை இதால டாங்கிகள் போக வர புலிகள் விடுமே?’

விட்டாலும்தான் இராணுவம் இந்தப் பாதையால் வராது. இதுக்குச் சமனாக இன்னொரு பாதை அமைத்துத்தான் வரும்.’

‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’

‘இதால லீவுக்குப் போற இராணுவத்தினரையும் அனுப்புற தில்லை. ஏனென்றால், இதால போற ஆமி இங்க இருக்கிற நிலையைப் பார்த்தா பயம் ஏற்பட்டு சண்டையைப் பற்றியே நினைக்காது. உளவியல் தாக்கத்துக்கு ஆளாகிவிடும் எனப் பயந்து இந்தப் பாதையை பத்தாண்டுகளுக்காவது நினைக்காது.’

மாயாவுக்கு இப்போது சிரிப்புக்கூட வந்தது.

‘விஜயரட்ணா புழுகியது இதைத்தானா? இப்படித்தான் புலிகளைப் பற்றிய பொய் வதந்திகளைப் பரப்புகினம்.’ அவள் சிந்தனை விரிந்தது.

இந்த யாழ்ப்பாணத்து தமிழ் பொடியன்களா இப்படி மாறினார்கள். வயது வந்த பொடியன்கள் கூட அம்மாவின் முந்தானையை விட்டுவிட்டு இலேசில் வந்து விட மாட்டார்கள். படிப்பு…. படிப்பு… படிப்பு….. இரவு மெயில் வண்டியில் ஏறினால், அனுராதபுரம் வந்துவிட்டால் பாதித் தூக்கத்தில் தன்னையறியாமல் எழுந்து காலை மடக்கி உட்காருவார்கள்…. இவர்களா இன்று….. எப்படி?

பேரூந்து இப்போது கடக்கும் பாதையில் ஆயிரங்கால் மண்டப மென பல்லாயிரக் கணக்கான தென்னை மரங்கள் வட்டுக் களைந்து முண்டமாக நின்றன. பனைகளின் வட்டுக்களும் அப்படியே. குடா நாட்டின் தேசிய செல்வம் ஆமியால் பாழ் படுத்தப்பட்டிருந்தது. இது தேசிய போராட்டமல்ல, இன ஒழிப்புப் போராட்டம். தமிழினம் தலையெடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட அடக்கு முறை. பளை, கொடிகாமம்…. பார்க்கும் இடமெல்லாம் றொக்கட் லோஞ்சர், ஷெல் என்பவற்றின் கோரத் தாண்டவம்…. வீடு வாசல், கோயில், பாடசாலை, என்ற வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் நடந்தேறியிருந்தது.

‘ததாதகரே! இதென்ன கொடுமை. நீர் சுழற்றிய தர்மசக்கர பிரவர்த்தனம் என்னவாயிற்று?’

அடுத்தது சாவகச்சேரி. நினைத்தபோதே வாய் இனித்தது. மாம்பழம், பலாப்பழம் என்றால் சாவகச்சேரிக்குத் தந்தை சைக்கிள் உழக்கியது ஞாபகம் வந்தது.

எங்கே சாவகச்சேரி?

மயான வெளியாகப் பரந்து உடும்பு, பன்றி, முயல் ஓட களம் அமைத்திருப்பது தான் சாவகச்சேரி.

அவள் தலை சுழன்றது. ஜன்னல் கம்பியில் தலை சாய்ந்தாள்.

அவள் கண் விழித்தபோது பேரூந்து ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையில் நின்றிருந்தது. யாரோ ‘மாயா’ என்று அழைப்பது கேட்டது. நிமிர்ந்தாள். அதிர்ந்து போனாள். பேரூந்தின் உள்ளே அவளருகே நிற்பது யார்?

மைதிலி. அருகே இன்னொரு குட்டி மைதிலி. “என்ன அன்ரி இறங்க மனமில்லையா?”

மாயா மைதிலியைத் தாவி அணைத்தாள். பேரூந்தில் இருந்து அனைவரும் அக்காட்சியை கண் கொட்டாமல் பார்த்தார்கள். புலிகளின் பூமியில் இப்படி ஒரு அரவணைப்பா?

சாமான்களை எடுத்துக்கொண்டு இறங்கினார்கள்.

‘மைதிலி! ‘பாக்’கை இப்படிக் கொடு…..’

நடுத்தரவு வயதுக்காரர் பாக்கை கையிலெடுத்தார்.

“இவளின்ரை அப்பா?”

“ஆ! குடும்பமே என்னை வரவேற்க வந்திருக்கிறது. இவர்களுடனா?…. இவ்வளவு காலமும் போரிட்டோம். கருணை வள்ளலே! இனியாவது….. இனியாவது…. சமாதானம் கொள்ள வழி செய்யும்….. அவள் விழித்திரையில் கண்ணீர் திரண்டது.

அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். விகாரை நவீனத்துவம் பெற முனைந்து கொண்டிருந்தது. ஆரியகுளம் தாமரைக் குளமாக மாறி வெண்தாமரையையும், செந்தாமரையையும் காடாகப் புஷபித்தி ருக்கிறது. அவர்கள் வீடு இருந்த அடையாளம் தெரியாமல் சிதில மடைந்து கிடக்கிறது. நெஞ்சம் துடிக்கிறது. இதெல்லாம் ஏன்? ஏன்? அருகேதான் மைதிலி வீடு. அவர்கள் வீட்டின் முன்புறம் ஓடுகள் காணாமல் போயிருக்கின்றன. முன்னைய குசினி சிதைந்து போயிருக்க புதிதாகப் பத்தி இறக்கி சமையல் வேலை நடக்கிறது. அவள் முன்பு தாங்கள் வழிபட்ட கோயிலைப் பார்க்கப் போகிறாள். அங்கு கோயிலிருந்த அடையாளமே தெரியாமல் யாரோ சிதைத் திருக்கிறார்கள். மைதிலியின் இடப்பெயர்வின்போது நிகழ்ந்ததாகக் கூறுகிறார்கள். மைதிலியின் குழந்தைகளுக்கு தமிழ் நன்றாகப் பேசுகின்ற சிங்கள அன்ரியை நன்றாகப் பிடித்துக்கொண்டது. தான் படித்த பாடசாலை வெறும் நிலமாகக் காட்சி தருவதும், பறங்கித் தெரு வீடுகள் பரதேசியின் கொப்பறையாகத் தெரிவதும் மாநகர சபை, வாடி வீடு, பொலிஸ் ஸ்ரேசன், கோட்டை, பெரிய தபாற் கந்தோர், றீகல் தியேட்டர், சாந்தி தியேட்டர், வின்சர் தியேட்டர், மனோகரா தியேட்டர், ராணி, ஸ்ரீதர் தியேட்டர், வீரசிங்க மண்டபம் எல்லாம் எரியூட்டலுக்கும், பொம்பர் தாக்குதலுக்கும் ஆளாகி இருக்கும் நிலை அவளைத் திகிலூட்ட வைக்கின்றன. அவளிருந்த நான்கு நாட்களும் அவளுக்குச் சொர்க்கத்தைக் காட்டின. ஒருநாள் மைதிலி குடும்பம் அவளை நாகதீபத்தைப் பார்க்கக் கூட்டிச் சென்றது.

அங்கு ஹாமத்துருக்களை விட இராணுவத்தினரே அதிகமாக வழிபாட்டு ஏற்பாடுகளைச் செய்வதையும், கோயில் விகாரைக்குச் செல்வதற்கு முன்னர் இராணுவ சோதனை நிகழ்வதையும் அவளால் சகிக்க முடியவில்லை.

நாளை விடிகாலை அவர்கள் வந்த பேரூந்து தென்னிலங்கை நோக்கிப் புறப்படப்போகிறது. அவள் பேரூந்தில் இருந்தவர்களுக்கு ஒரு விசேட பிரார்த்தனை இருப்பதாகச் செய்தி வருகிறது. கூட்டத் தோடு கூட்டமாக அவளும் செல்கிறாள். அங்கே ஹாமத்துருவுடன் சில இராணுவ அதிகாரிகளும் இருக்கின்றனர்.

சமயச்சடங்குகள் ஆரம்பமாகி முடிகின்றன. எல்லோரும் புத்தரின் கருணை தங்களின் மேல் குவிய வேண்டும், பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.

ஹாமத்துரு எழுகிறார். “இந்த நாடு எங்களுடையது. புத்தரின் கருணை எங்களுக்கு மட்டுமே உரியது. புத்தமத நாடு என்று உலகிலேயே எங்கள் நாட்டைத்தான் சொல்வார்கள். இதை மீட்பதும், பாதுகாப்பதும் உங்கள் கையில்தான் உள்ளது என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். உங்கள் ஊரில் போய்க் கூறுங்கள்…”

மாயா அழுகிறாள். அவள் மனதின் சாந்தி இப்போது மறைந்துவிட்டது.

– நமது ஈழநாடு, 01.10.2004 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email
இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *