கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 11,753 
 

மெக்கானிக் சுதனுக்கு ஞாயிறு தோறும் ஷிப்ட் மாறும். அந்த வாரம் அவனுக்கு இரவு ஷிப்ட் கடந்த இரண்டு நாட்களாகவே கனத்த மழை பெய்வதால் சைக்கிளில் செல்லாமல் நடந்தே தொழிற்சாலைக்குச் சென்று கொண்டிருந்தான்.

அன்று மழையும் மிக அதிகமாக இருந்தது, மின்சாரமும் போய்விட்டிருந்தது. பணிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சுதனிடம் அவன் மனைவி டார்ச் லைட்டை கையில் தந்தாள்.

உங்களுக்கு? என்று சுதன் கேட்க “நாங்கள் மெழுகுவர்த்தியை வைத்து சமாளித்துக் கொள்வோம்.

ரோடெல்லாம் ஒரே கும்மிருட்டு. வெள்ளக் காடாக வேறு ஆகி விட்டிருக்கின்றது. இருட்டில் குண்டு குழி தெரியாமல் விழுந்து வைக்கப் போகிறீர்கள். எடுத்துச் செல்லுங்கள்” என்றாள் அவன் மனைவி.

மாடிப்படி இறங்கி வரும் காலடிச்சத்தம் கேட்டு கீழ் போர்ஷனில் இருக்கும் அவன் நண்பனும் கூட வேலை செய்பவனுமான ரமேஷ் இணைந்து கொள்ள, இருவரும் தொழிற்சாலை சென்றடையும் பொழுது தொப்பலாக நனைந்திருந்தார்கள். இந்தக் காலத்துக் குடை அழகுக்குத் தான். காத்துக்கும் கனத்த மழைக்கும் குடை அடிக்கடி மடங்கிக் கொண்டு அவர்களை மழையில் நன்றாக நனைத்து விட்டிருந்தது.

என்ன சார்! கொஞ்சம் மழை நின்று கிளம்பியிருக்கப்படாதா? என்று கேட்டான். வாட்ச்மேன், தங்கசாமி. “இதென்ன நிற்கிற மழை மாதிரியா இருக்கு. இரண்டு நாளா கொட்டு கொட்டேன கொட்டுகிறது. நின்று வருவதென்றால் பணிக்கு நாளைக்குத் தான் வரமுடியும்” என்றான் சுதன். “ஆமாம் சார்! சில சமயம் தினசரிகளில் வருமே வானத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று எனக்கு என்ன என்று புரியாமல் தானிருந்தேன். ஆனால் இப்போழுது பெய்கிற மழையை ப் பார்த்தால் நம்ம சென்னைக்கு மேல உள்ள வானம் மெய்யாலுமே பொத்துக்கிடுத்தோ” என்று தோனுது. சார்! முதலில் போய் ஈரத்தையெல்லாம் விழுத்துவிட்டு பேன் கீழே போய் நில்லுங்கள்.

துணிகளயும் பேனின் முன் காய வையுங்கள். ஈரத்தோடு இருந்தால் காய்ச்சல் வந்துவிடப் போகிறது என்றான். சுதனுக்கு வெற்றுடம்பில் நிற்க முடியவில்லை. குளிரில் உடம்பு நடுங்க ஆரம்பித்துவிட்டது. பூமி நன்கு குளிர்ந்து விட்டதல்லவா. உடம்புச் சூட்டில் காயும் என்று நன்கு பிழிந்து ஆடைகளை மீண்டும் அணிந்து கொண்டு சூடாக டீ குடித்து விட்டு வேலையைத் தொடங்கினான். முக்கால் வாசிப் பேர் வேலைக்கு வரவில்லை. அப்பப்ப டீ குடிக்க கேண்டினுக்கு ச் செல்லும் பொழுது பார்த்தால் மழை விடாமல் அடித்து ப் பெய்வது தெரிந்தது.

ஈரத்தோடே இருந்ததாலோ என்னவோ சுதனுக்கு தொண்டையெல்லாம் கரகரத்து காய்ச்சலடிக்க ஆரம்பித்துவிட்டது. அதைக் கண்டுபிடித்துவிட்ட தங்கசாமி அங்கு குவார்ட்டர்ஸில் தங்கியிருக்கும் டாக்டரிடம் கூட்டிப் போனான். அவர் சுதனுக்கு மருந்தும் தந்து ஊசியும் போட்டார். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.

“வீடு எங்கிருக்கிறது? எப்படிப் போகப் போகிறீர்கள்?” என்று கேட்க

“ வீடு ரொம்ப அருகில் தான். நடந்து போய்விடுவேன்” என்றான்.

டாக்டர் சுதனை அவர் காரிலேயே கொண்டு வீட்டில் விட்டார். போகிற வழியெல்லாம் ஒரே வெள்ளக் காடாக இருந்தது. சுதனைப் பார்த்ததும் அவன் அம்மா “உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கிறதே காய்ச்சல் அடிக்கிறதா”என்று கேட்டாள்.

“டாக்டர் பார்த்து ஊசி யெல்லாம் போட்டு மருந்தும் கொடுத்திருக்கிறார். எல்லாம் சரியாகிவிடும் “என்றான் சுதன். மதனுக்கு போன் போட்டு “எப்படியிருக்கிறானென்று கேள்? கழிந்த தீபாவளி ஒட்டிய மழையிலேயே வீட்டிற்குள் எல்லாம் வெள்ளம் வந்து கஷ்டப் பட்டதாக ச் சொன்னான். ரெண்டு நாளா விடாமக் கொட்டறது மழை. மின்சாரமும் இல்லை.உன் மனைவியுடைய ‘செல்லில் சார்ஜ்’ இல்லையாம். அதனால் தான் உன்னிடம் சொல்கிறேன்” என்றாள்அவன் அம்மா.

சுதன், அண்ணன் மதன், மற்றும் அண்ணி இருவரது எண்களுக்கும் மாறி மாறி தொடர்பு கொள்ள ப் பார்த்தான். அணைக்கப் பட்டிருப்பதாக தகவல் வந்து கொண்டே இருந்தது. “சார்ஜ் இல்லாட்டா அப்படித்தான் வரும். ஒரு வேளை அவர்களிடத்திலும் மின்சாரமில்லையோ என்னவோ!” என்றான் சுதன். கூடவே போன மழையின் போது அவர்கள் வீட்டிற்கு உதவிக்கு ப் போயிருந்த போதே சொன்னேன்” இந்த மழை சீசன் முடியும் வரை எங்களோடு வந்து தங்கு என்று. உங்கள் வீடு ரொம்ப ச் சின்னது சௌகரியப்படாது என்று அண்ணனும் அண்ணியும் சேர்ந்து சொல்லிவிட்டார்கள்” என்றான் சுதன்.

உடனே அவன் அம்மா உன் வீடு சின்னதாக இருந்தாலும் உன் மனசு பெரிசு. ஆனால் அவர்களோடுது அப்படியா!. பூர்வீக வீட்டை விற்றதில் உனக்குள்ள பங்கை கொடுத்திருந்தால் நீயும் உனக்கொரு வீட்டை உண்டாக்கிக் கொண்டிருப்பாய். பூர்வீக வீடு விற்கப்படும் பொழுது நீ படித்து க் கொண்டிருந்தாய். உன் பங்கை பேங்கில் போட்டு விடும் படி சொன்னேன்உன் அண்ணனிடம். உன் அண்ணி நய வஞ்சகி. சென்னையில் கட்டவிருக்கும் வீ ட் டை கொஞ்சம் பெரிதாகக் கட்டிக் கொண்டால் தான் நாம் எல்லோரும் சௌகரியமாக வாழமுடியும் என்று உங்கண்ணனை சொல்ல வைத்து வீட்டை நல்ல வசதியாகக் கட்டி கொண்டார்கள். நீ கூச்ச சுபாவம் உடையவன்.உன் பங்கை என்றுமே கேட்க மாட்டாய் என்பதால் என் கடமையை செய்ய வேண்டுமே என்று கொஞ்ச மாதங்கள் முன்னாடி உன் அண்ணனிடம் உன் பங்கைத் தரச் சொன்னேன். “என்னால் தற்பொழுது பணம் ஒன்னும் புரட்ட முடியாது. பின்னால் தருகிறேன்” என்று மனசாட்சியில்லாமல் சொல்லி விட்டான்.இப்படியெல்லாம் வருமென்று தெரிந்துதான் அன்றே சுதனின் பங்கை பேங்கில் போடச் சொன்னேன் என்று சொல்ல நாங்களென்ன ஏமாத்திட்டு ஓடியாப் போயிட்டோம் என்று தாறு மாறுமாகப் பேச ஆரம்பித்தாள் உன் அண்ணி. அவள் ஒரு கிராதகி. பூர்வீக வீட்டிலிருந்து கொண்டு வந்த ஊஞ்சல், கட்டில்கள் , பீரோக்கள் எல்லாம் அந்தக் காலத்துது. என்ன வேலப்பாடு. எவ்வளவு கனம். தூக்கிப் போட்டாலும் உடையாது. அதிலாவது அவன் பங்கைக் கொடுத்துவிடு என்றேன். அவன் இருக்கும் சின்ன வீட்டில் போட முடியாது என்று தட்டிக் கழித்து விடப் பார்த்தான். எனக்குக் கோபம் வர துரியோதனன் மாதிரி எல்லாவற்றையும் நீயே அனுபவிக்க நினைப்பது பெரிய அதர்மம் என்று சொல்ல நீங்கள் ஒன்னும் எங்களுக்கு தர்மம் அதர்மம் சொல்லித் தர வேண்டாமென்று சொன்னதுடன் உன் அண்ணி தாறு மாறாகப் பேச ஆரம்பித்தாள். அவள் வெறும் பேராசைக்காரி என்பது எனக்கு நன்றாக புரிந்தது அதற்கப்புறம் தான் அவர்கள் வீட்டிற்கு ப் போவதை நிறுத்திவிட்டேன்.

“இவ்வளவு நடந்திருக்கா! எனக்குத் தெரியவே தெரியாதே! அதனால் தான் இப்பொழுதெல்லாம் எங்கு பார்த்தாலும் அண்ணன் என்னிடம் ஒழுங்காக ப் பேச மாட்டேங்கிறார். அவர் நான் தான் உனனைத் தூண்டிவிட்டேன் என்று நினைக்கிறார் போலிருக்கிறது”. என்று வருத்தப் பட்டான் சுதன். நடந்ததெல்லாம் உன் மனைவிக்குத் தெரியும். விடுங்கள் அத்தை! ஆண்டவன் நமக்கு கைகால்கள் கொடுத்திருக்கான்.உழைத்துச் சாப்பிடுவோம் என்று சொன்னது மட்டுமல்ல அதைப் பற்றி ஒரு மூச்சுக் கூட உன்னிடம் விடவில்லை. உங்கள் இருவரின் நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. அவனுக்கு குற்ற உணர்வு அதனால் தான் உன்னிடமிருந்து ஒதுங்குகிறான். ஆனால் அவர்களிருவரும் நல்லவர்களில்லை. அவர்களை நல்லவர்களாக்கிக் கொள்ள உங்களைப் பற்றி நம் சொந்தக் காரர்களிடமெல்லாம் இல்லாதது பொல்லததெல்லாம் சொல்லித் திரிகிறார்கள்.

” தெய்வம் நின்னு கொல்லும் ” என்பது புரியவில்லை என்றாள். அம்மா நீ வீட்டிற்கு ப் பெரியவள். பணம் கிடக்கு. அவர்களை சபிக்காதே என்றான் சுதன். மழை விடாமல் பெய்ததால் பள்ளிகளுக்கெல்லாம் லீவு விட்டு விட்டார்கள். மின்சாரமில்லாததால் சுற்றி வர என்ன நடக்கிறது என்றறிய முடியவில்லை சுதனுக்கு. அவனது டிரான்ஸிஸ்டர் ஞாபகம் வரவே அதைத் தேடி எடுத்தான். ஆனால் அதற்கும் பேட்டரி தேவைப் பட்டது. தெரு முனையில் கடை வைத்திருப்பவர் பக்கத்து வீட்டில் தான் குடியிருக்கிறார். அவரிடம் போய் விஷயத்தைச் சொன்னவுடன் அவருக்கும் விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இருவருமாக சென்று கடையைத் திறந்து டிரான்ஸிஸ்டருக்கு பேட்டரி போட்டுக் கேட்க நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டதாகவும், தண்ட வாளங்களில் தண்ணீர் தேங்கி விட்டதால் மின்சார ரயில் போக்குவரத்தும் நிறுத்தப் பட்டுவிட்டதாகவும் அறியமுடிந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் அதிகமாக த் திறந்து விடப் பட்டதால் அடையாறில் வெள்ளம் போவதாகவும் சைதாப் பேட்டை, வேளச்சோ¢, தி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலெல்லாம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளக் காடாக காட்சி அளிப்பதாகவும், தாம்பரத்திலும் அதனை ச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக அதிக் மழைப் பொழிவால் வீடுகள் எல்லாம் மழை வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பது போல் காட்சி அளிக்கிறது என்றும் அறிய முடிந்தது. அதிலும் தாம்பரத்தில் முடிச்சூர் பகுதி அதிக பாதிப்புள்ளாகியிருக்கிறது என்ற செய்தி கேட்டவுடன். சுதனின் அம்மா கலங்கிப் போய் புலம்ப ஆரம்பித்து விட்டாள். ஏனேன்றால் மதனின் வீடு முடிச்சூரில் தான் இருக்கிறது.

சுதன் “நான் வேண்டுமானால் போய் பார்த்து விட்டு வரட்டுமா” என்று அம்மாவிடம் கேட்க “வேண்டாம்! வேண்டாம்! ஓரே வெள்ளக் காடாக இருக்கிறது என்கிறார்கள். ரயில் போக்குவரத்தும் இல்லை. வெள்ளக் காடாக இருந்தால் பஸ் போக்குவரத்தும் இருக்காது. நீ வேறு வெள்ளத்தில் போய் மாட்டிக் கொண்டு விடாதே. எல்லாம் கடவுள் விட்ட வழி என்று பேசாமல் இருக்க வேண்டியது தான். முடிந்தால் ‘செல்லில்’ மாத்திரம் தொடர்பு கொள்ள முயற்சி செய்” என்றாள்.”நான் செய்து கொண்டுதானிருக்கிறேன்” என்றான் சுதன்.

அடுத்த நாள் காலை மழை கொஞ்சம் விட்டிருந்தது. சுதன் நேரில் தாம்பரம் போய் பார்த்துவிட்டு வருவது என்று தீர்மானித்துப் புறப்பட்டான். சுதன் ரோட்டில் போகின்ற வண்டிகளைக் கைகாட்டி நிறுத்தி எப்படியோ தாம்பரம் வந்து சேர்ந்து விட்டான். தாம்பரத்தில் ரப்பர் படகுகளை வைத்துக் கொண்டு இரவு பகல் பாராமல் மனிதாபி மானத்துடன் உதவிக் கொண்டிருந்த கடற் படை வீரர்களை அணுகி தன் அண்ணன் குடும்பத்தைப் பற்றிக் கேட்டான். உடனே சுதனை ஒரு படகில் ஏறச் சொல்லி மூன்று வீரர்கள் அவனுடன் கிளம்பினார்கள். முடிச்சூரில் அண்ணனுடைய வீடு ஒதுக்குபுறமான தனி வீடு. பக்கத்தில் வீடுகள்எதுவும்கிடையாது. எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளம். வீடுகளெல்லாம் தண்ணிரில் மூழ்கிக் கிடந்தது. அவனால் அண்ணனின் வீட்டை அடையாளங்காண முடியவில்லை. அதற்குள் வேறு சில விடுகளின் கூரையில் நின்று கொண்டிருந்த வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உதவி கேட்கவே அவர்களை நோக்கி படகு செல்ல அந்த வீரர்களுடன் சுதனும் சேர்ந்து உதவி அவர்கள்னைவரையும் படகில் ஏற்றி தாம்பரம் கொண்டு வந்து சேர்த்தார்கள். அதன்பின் நடத்திய இரண்டு மூன்று முயற்சிகளிலும் சுதனுக்கு வெற்றி கிட்டவிலலை. ஆனால் பா¢தாபமாக உயிருக்குப் போராடிக் கொண்டு நின்றிருந்த பலரை க் காப்பாற்ற முடிந்தது.

இருட்ட ஆரம்பித்ததும் வீட்டில் தன்னைத் தேடுவார்களே என்ற நினைப்பு வர புறப்படத் தயாரானான். அம்மாவிடம் அடையாறில் மிக அதிகமாக வெள்ளம் போவதால் யாரையும் சைதாப் பேட்டை பாலத்தில் செல்ல அனுமதிக்கவில்லை.இவ்வளவு நேரம் காத்திருந்து போராடிவிட்டு வருகிறேன் என்று சொல்ல வேண்டுமென முடிவு செய்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

சுதன் அடுத்த நாள் காலை சீக்கிரமே புறப்பட்டான் தாம்பரத்திற்கு. மிந்தின நாளாவது விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. அன்று மழை முழுவதுமாக நின்று விட்டிருந்தது. சுதன் புறப்படுவதற்கு முன் தான் காரியங்களை முடித்துவிட்டுத்தான் திரும்புவேன் ஒரு வேளை ரொம்ப லேட்டாகி விட்டால் எங்கேயாவது தங்கிவிட்டு அடுத்த நாள் காலை வீடு திரும்பிவிடுவதாக சொல்லிவிட்டுத் தான் புறப்பட்டான்.

தாம்பரத்தில் சுதனைப் பார்த்தவுடன் மிந்தின நாள் அவனுடன் பயணித்திருந்த அந்த கடற்படை வீரன் சுதனிடம் இன்று எப்படியாவது உங்கள் அண்ணன் வீட்டை அடைந்து அவர்களை க் காப்பாற்றி விடுவோம் வாருங்கள் ! என்றான். வெள்ளம் கொஞ்சம் வத்தியிருந்ததால் வீடுகளின் தலை கூட தெரியாமலிருந்த நிலை மாறி வீடுகளின் மேலுடம்புகளெல்லாம் தெரிய ஆரம்பித்திருந்தது. அண்ணன் வீட்டை அடையாளங்கண்டு நெருங்கியதில் அங்கு யாரும் இருப்பதற்கான சுவடே இல்லை. படகை வீட்டின் மிக அருகே கொண்டு சென்று வீட்டை சுற்றி வர பின்பக்கம் சுவரிடிந்து ஒரு ஆறடி அகலத்திற்கு வீட்டின் முழு உயரத்திற்கு பெரிய ஓட்டை விழுந்திருந்தது தெரிந்தது.அது வழியாக சுதன் உள்ளே பார்க்க அடுக்களையிலுள்ள பரணில் யாரோ அமர்ந்திருப்பது போல் தெரிய அதை வீரர்களிடம் காண்பித்தான் . அவர்கள் கயிறு போட்டு நீந்திப் போய் தூக்கி வந்து விட்டார்கள். பார்த்தால் அது சுதனின் அண்ணன் மதன். மயங்கிக் கிடந்தான். சுவாசம் வந்து கொண்டிருந்தது. படகை வேகமாகச் செலுத்திக் கொண்டு வந்து ஆம்புலன்ஸில் ஏற்றி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்தான் சுதன். முதலுதவிகள் அனைத்தையும் செய்தார்க்ள்

ICU வில் சேர்த்து விட்டு அடுத்த நாள் காலையில் தான் எதுவும் சொல்ல முடியும் என்று கூறி விட சுதன் அங்கேயே ஒரு பெஞ்சில் படுத்துக் கொண்டான். சாப்பிட எதுவும் தோன்றவில்லை. உடம்பிலிருந்த அசதி அவனையறியாமல் தூக்கம் ஆட்கொண்டது.
அடுத்த நாள் காலை சுதன் நர்ஸிடம் கேட்க அண்ணனின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்றும் பார்த்து விட்டு வர அனுமதியும் கொடுத்தாள். வீடு திரும்பிய சுதன் நடந்ததனைத்தையும் சொல்ல அவன் அம்மா தன்னையும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போகும்படி வேண்டினாள். ரயில் பஸ் போக்குவரத்து எல்லாம் இன்று தொடங்கிவிடும் என்று சொல்கிறார்கள். எல்லாம் சரியாகிவிட்டால் அடுத்த நாள் போவோம் என்று சொல்லிவிட்டு அவன் தொழிற்சாலை மேலாளரை போனில் தொடர்பு கொண்டு விஷயங்களைச் சொன்னான். “எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வா! லீவைப் பற்றிக் கவலைப் படாதே. வேறு ஏதாவது உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேள்!” என்று ஆறுதலாக ச் சொன்னார். அன்று அங்குள்ள முகாம்களிலெல்லாம் தேடி அண்ணியையும் குழந்தையையும் கண்டுபிடித்துவிட்டு ஆஸ்பத்திரியில் சென்று அண்ணனையும் பார்த்துவிட்டுத் தான் திரும்ப வேண்டும் என்ற தீர்மானத்துடன் புறப்பட்டான்.எங்கு தேடியும் அண்ணியும் குழந்தையும் அகப்படவில்லை. கடைசியில் ஆஸ்பத்திரிக்கு வந்து அண்ணனைப் பார்த்தான். சுதனைப் பார்த்ததும் சின்ன முறுவலை உதிர்த்தான் மதன்.சந்தோஷமாக் இருந்தது சுதனுக்கு. நர்ஸ் சுதனிடம் நாளை ஜெனரல் வார்டுக்கு மாற்றி விடுவோம். ஒறிரு நாளில் வீட்டிற்கு கூட்டிப் போகலாம் என்று சொன்னாள். ரயில் பஸ் போக்குவரத்து சீராகியிருந்தது.

அடுத்த நாள் எல்லோரையும் கூட்டிக் கொண்டு சுதன் ஆஸ்பத்திரிக்கு வந்தான். அண்ணனை ஜெனரல் வார்டுக்கு மாற்றி இருந்தார்கள். அவர்களிடம் அண்ணனைப் பார்த்துக்க ச் சொல்லிவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் கிளம்பினான். ராயப்பேட்டை, கீழ்பாக்கம் போன்ற அரசாங்க ஆஸ்பத்திரிக்ளுக்கெல்லாம் போய் அங்குள்ள பிணவறைகளை நோட்டம் விட்டான்.எதுவும் கிடைக்கவில்லை. எல்லோரையும் கூட்டிக் கொண்டு வீடு போய் சேர்ந்தான். அடுத்த நாள்அண்ணனை ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்கு கூட்டி வந்தான். அண்ணன் பேச ஆரம்பித்திருந்தான்.அம்மா சுதனிடம் “அண்ணியையும் குழந்தையையும் தேட வேண்டாமா?” என்று கேட்டாள். சுதன் அங்குள்ள அனைத்து முகாம்களிலும் தேடியாகிவிட்டது. ஒரு தகவலும் கிடைக்க மாட்டேங்கிறது என்று வருத்தத்துடன் சொன்னான். அண்ணனிடம் அன்று என்ன நடந்தது என்று எதாவது ஞாபகம் இருக்கிறதா ?என்று கேட்டான் சுதன். மதன் சொல்ல ஆரம்பித்தான்:

மின்சாரமில்லாமல் இருந்தது. வெளியே கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. மெழுகு வர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு எல்லோரும் படுத்துக் கொண்டோம். ஒரே சத்தம். தண்ணீர் கதவின் இடுக்கின் வழியாக உள்ளே வருவது போல் தோன்றியது. கட்டிலின் உள்புறம் நான் படுத்திருந்ததால் அவள் சுலபமாக எழுந்திருந்து கதவை மட்ட மடக்க த் திறந்தாள். உள்ளே பாய்ந்த வெள்ளம் அவளயும் குழந்தையையும் வாரிச் சுருட்டி வெளியே இழுத்தது. நான் தாவி பேனின் கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தேன். ஓரே இருட்டு. ஒன்றும் தெரியவில்லை. வெள்ளம் என் கழுத்துக்கும் மேல் வரை வந்துவிட்டது. கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டே இருந்தேன். நேரம் போய்க் கொண்டே இருந்தது கை இத்து ஒடிந்து விடுவது போல் இருந்தது. கொஞ்சம் வெளிச்சம் வர ஆரம்பிக்கவே விடிய ஆரம்பித்து விட்டதோ என்று தோன்றியது. கம்பியைப் பிடித்துக் கொண்டு தாக்கு பிடிக்க முடியாது என்று தோன்றவே நீஞ்சிப் போய் அடுக்களைப் பரண் மேல் ஏறி உட்கார்ந்துவிடுவது என்று தீர்மானித்து செயலாற்றினேன். பரணிலும் தண்ணி ஏறி இருந்தது. அங்கு நீட்டிக் கொண்டிருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு தண்ணீரிலேயே பரண் மேல் ஏறி உட்கார்ந்து விட்டேன். .கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய சத்தம். பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. வெளிசசம் நன்றாக உள்ளே வர ஆரம்பித்தது.எல்லாம் நன்மைக்குத் தான். யாராவது பார்த்து காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கை வந்தது. ஆள் அரவமே இல்லாமலிருந்தது. அதன்பின் மயங்கி விட்டேன் போலிருக்கிறது. வேகமாக வந்த வெள்ளம் அவர்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போனதால் அவர்களை முகாம்களில் தேடுவதில் அர்த்தமில்லை. மற்ற அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பார்த்தாகிவிட்டதா என்று சுதனிடம் கேட்டான் மதன். “ஆகிவிட்டது. ஒன்னும் தகவலில்லை” என்றான் சுதன்.

நாட்கள் நகர்ந்தது. அண்ணி குழந்தை பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. சுதனும் அவன் அம்மாவும் முடிச்சூர் வீட்டிற்குப் போய்ப் பார்த்தார்கள். சேறும் சகதியுமாக் இருந்தது. வீட்டிற்குள் எதுவுமில்லை. போதாக்குறைக்கு பின் பக்கம் சுவர் வேறு இடிந்து வீடு ப்ப! என்று திறந்து கிடந்தது. அம்மாவிற்கு அந்தப் பூர்வீக வீடு அதிலிருந்த நல்ல வேலைப்பாடுகளுடனிருந்த பழைய காலத்துக் கட்டில்கள், ஊஞ்சல், சோபாக்கள்,மேஜை, நாற்காலிகள், பீரோக்கள் எல்லாம் ஒனொன்றாய் கண் முன் வந்து போக உங்கண்ணன்
நான் சொல்ல சொல்லக் கேட்காமல் அந்த வீட்டையும் விற்று இருந்த நல்ல சாமான்களை எல்லாம் தொலைத்து விட்டானே. நாலைந்து மாதமுன்பு நான் போய்க் கேட்டபொழுது கொஞ்சம் சாமான்களையாவது உன் பங்குக்குக் கொடுத்திருந்தால் அதுவாவது மிஞ்சியிருக்குமே. வெறும் பேராசைக்காரன். இன்று எல்லாமிழந்து அனாதையாக நிற்கிறான் என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள். சுதன் அம்மாவிடம் அம்மா! நடந்த தெல்லாம் நடந்துவிட்டது.இனிமேல் இது பற்றிப் பேசுவதால் ஏதாவது திரும்பக் கிடைக்குமா. வீணாக நம் மன அமைதிதான் குலையும். புரிந்து கொள். தயவு செய்து இது பற்றிப் பேசாதே என்று அம்மாவிடம் நல்ல வார்த்தை சொல்லி அவளைத் தேற்றினான்.

மதன் சுதனிடம் நடந்தவைகளுக்கெல்லாம் வருத்தப் பட்டான். அவன் மனைவிதான் மனதைப் பாழ்படுத்தி விட்டதாக பழித்து அவளை த் திட்டினான். சுதன் போனால் போகட்டும் விட்டுத் தள்ளு! என்று மதனைத் தேற்றினான். சுதன் மதனிடம் நீ எங்களோடயே தங்கி விடு ! என்று சொல்ல மதனும் சம்மதித்தான்.

பையன்களின் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்த அவர்களின் அம்மா அங்கு வந்து மதனிடம் “ கிண்டியில் நீ வேலை பார்க்கும் இடத்திற்கருகிலேயே ஒரு சின்ன இடம் பார். நான் உன்னுடன் வந்து விடுகிறேன்” என்றாள். சுதன் “என்னம்மா! எல்லோரும் ஒற்றுமையாக ச் சேர்ந்து இருப்போம் என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது நீ எங்களை விட்டே போகிறேன் என்று பேசுகிறாயே” என்று கோபப்பட்டான். “நான் வயதானவள். உன் மனைவி ஒரு குழந்தையை ப் பெற்று விட்டாலும் அவள் சின்னப் பெண்தான். உங்களுக்கும் பெரிதாக வயதாகி விடவில்லை. மனித மனது குரங்காக்கும். சந்தர்ப்ப சூழ் நிலைக்கேற்ப மாறி க் கொண்டே இருக்கும். நான் அனுபவமிக்க பெரியவள். அன்று பூர்வீக வீட்டை விற்க வேண்டாம் என்றேன் கேட்கவில்லை. இப்ப எல்லாத்தையும் இழந்து நிற்கிறோம். நான் பலதையும் யோசித்துத் தான் சொல்கிறேன். இப்போழுது இருப்பது போல் நீங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொல்கிறேன். சில விஷயங்களை விளக்கமாகப் பேச முடியாது. ஆனால் நான் உங்கள் தாயார். எல்லோருக்கும் நல்லது தான் நினைப்பேன்” என்பதை நம்புங்கள்.

“மதன்! என்ன கிண்டியில் வீடு பார்க்கின்றாயா?. உன் மனைவி வந்து சேரும்வரை நான் உனக்கு சமைத்துப் போடுகிறேன்.”என்றாள். மதன்! சரி! என்றான். “இன்னொன்று அந்த முடிச்சூர் வீட்டை ரிப்பேர் எதுவும் செய்ய வேண்டாம். இன்னும் இரண்டொரு வருஷத்தில் விலைக்குக் கொடுக்க முடியுமென்றால் கொடுத்துவிட்டு உன் தம்பியிடம் நீ பட்ட கடனைக் கொஞ்சமாவது அடை. நான் சொல்வது கசப்பாக இருக்கலாம் ஆனால் அதுவும் உன் நன்மைக்குத்தான்” என்று முடித்தாள். சுதனின் மனைவிக்கு அததையின் பேச்சின் சூஷ்மம் புரிந்தது. அவளும் பெண்ணல்லவா! எதையும் எட்டி ஆலோசிக்கத் தெரிந்தவர்கள். அத்தையை நன்றியோடு பார்த்தாள் சுதனின் மனைவி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *