கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 10,977 
 
 

அதிகாலையிற்தான் அந்தக் கனவு வந்தது. கனவில் மனைவி வந்தாள். கமலநாதனுக்குத் திடுக்குற்று விழிப்பு ஏற்பட்டது. பொதுவாக, மனைவி என்பது பலருக்குத் திடுக்குறல் ஏற்படுத்தும் விஷயம்தான். ஆனால் இது அந்த மாதிரியான திடுக்குறல் அல்ல. சற்று வித்தியாசமான, சற்று பரவசம் கலந்த திடுக்குறல் என்று சொல்லலாம்.

விழிப்பு வந்ததும் எழுந்து கட்டிலில் அமர்ந்தான். தான் வீட்டிற்தான் இருக்கிறேனா அல்லது கப்பலிற் தன் கபினுக்குள்ளா என உணர்வுக்குத் தட்டுப்படாமல் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்து விழித்தான். கப்பலில் ஜெனரேட்டரின் இரைச்சல் அப்போதுதான் காதுக்கு எட்டுவதுபோலிருந்தது. அட, நீயெங்கோ நானெங்கோ என்ற சலிப்புடன் மீண்டும் படுக்கையில் விழுந்தான். மறுபக்கம் திரும்பித் தலையணையை அணைத்துக்கொண்டு கண்களை மூடினான். கனவில் மூழ்கிவிட ஆசையாயிருந்தது.

கனவில் மனைவி மிக அழகாகவும் இளமையாகவும் தோன்றினாள். மென்மையாகவும் இனிமையாகவும் பேசினாள். கனவுகள் எப்போதுமே இப்படித்தான் போலும். மனசு விரும்புவதை படம் பிடித்து காட்டுகின்றன. ‘தொட்டதெற்கெல்லாம்’ கூச்சமைடைந்தாள். ‘சும்மா இருங்கோ’ எனப் பொய்க்கோபத்துடன் கையில் ஒரு அடியும் போட்டாள். அவ்வளவுதான். அத்தோடு விழிப்பு வந்துவிட்டது.

அதிகாலையிற் கண்ட கனவென்றால், அது பலிக்கும் என்பார்கள். ஆனால் இது பலிக்கப்போவதில்லை என்பது கமலநாதனுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இலங்கையிலிருக்கும் மனைவி, கனவு கண்ட மாத்திரத்தில் ருமேனியாவுக்கு வந்துவிடுவாளா?

பஞ்சம் பிழைப்பதற்காக மனைவியைப் பிரிந்து வந்து ஏழெட்டு மாதங்காளாகிறது. கப்பலில் வேலை. கொன்ஸ்ரான்ரா துறைமுகத்துக்கு வந்து வெளிக்கடலில் நங்கூரமிடப்பட்டிருக்கிறது கப்பல். காலையில் பேர்த் பண்ணப்படும். ஏஜன்ட்காரன் வரும்போது கடிதங்கள் கொண்டுவருவான். அந்த நினைவு ஆறுதலிப்பதாயிருந்தது. அன்றாடம் வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது மனைவியின் நினைவுகள் சுற்றிக்கொண்டிருக்கும். பரந்த சமுத்திரங்களில் நாட்கணக்கில், மாதக்கணக்கில் கப்பல் செயிலிக்கும்போதெல்லாம் அவளது நினைவுகளும் தொடர்ந்து வரும். அவளோடு பேசுவது போல, பலமுறை காற்றோடு பேசியிருக்கிறான். பிரிவின் துயரைச் சுமந்துகொண்டு யாருடனும் முகம் மலர்த்திப் பேசமுடியாது வாடித் திரிந்திருக்கிறான். மனைவியின் கடிதங்கள் வந்தால் அது நாட்பட்ட கடிதமாயினும் சரி, கவலையான செய்திகளைச் சுமந்துவரும் கடிதமாயினும் சரி, சற்று ஆறுதலைத் தரும். மனைவியின் குரலைக் கேட்பதுபோல ஓர் உணர்வு கிடைக்கும்.

காலை பதினொரு மணியளவில் கப்பல் பேர்த் பண்ணப்பட்டு ஏஜன்ட்காரன் வரும்வரை தவிப்பாயிருந்தது.. கடிதம் வருமா, கடிதம் வருமா என்று! வந்தது. மனைவி எழுதிய மூன்று கடிதங்கள் ஒருசேரக் கிடைத்தன.

மதிய இடைவேளையின் போது அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு கபினுக்குள் வந்திருந்து ஆறுதலாக வாசித்தான் கமலன்.

‘வாழ்க்கையில் நாங்கள் சேர்ந்திருந்த நாட்களை விட, பிரிந்திருந்த நாட்களே அதிகம். இளமைக்காலங்களெல்லாம் இழந்த காலங்கலாகவே போய்க்கொண்டிருக்கின்றன… எந்த வேலையைச் செய்தாலும் அதில் ஏதோ ஒரு வகையில் உங்கள் நினைவு கலந்திருக்கும். சமையல் செய்யும்போதுகூட அதை ருசித்து சாப்பிட நீங்கள் இங்கு இல்லையே என்று ஏக்கமாய் இருக்கும். ஒரு பிடிப்பு, ஈடுபாடு இல்லாத வாழ்க்கை. மனதில் விரக்திதான் மிஞ்சுகிறது. பிள்ளைகளை நினைத்துக்கொண்டு அவர்களுக்காகக் கடமையே என அன்றாடம் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்…’

‘…. இந்தமுறை மாமரம் நிறையக் காய்த்தது. உங்களுக்கு மாம்பழம் என்றால் கொள்ளை ஆசைதானே? போனமுறை நின்றபோது விரும்பிச் சாப்பிட்டது நினைவில் வந்தது. பிள்ளைகள் சாப்பிடும்போது, நல்லா இருக்கு சாப்பிடுங்கோ என்று வற்புறுத்தினார்கள். எனக்கென்றால் ஒரு துண்டுதன்னும் வாயில் வைக்க விருப்பமில்லை. இப்படிதான் எதை எடுத்தாலும் உங்கட நினைவுதான்…’

‘…. பிள்ளைகளுக்கும் மனதில் கவலை இருக்கிறது. வெளியே காட்டுவதில்லை. சிலவேளைகளில் ‘அப்பா எப்ப வருவாரம்மா?’ என்று கேட்பார்கள். அவர்களும் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். தனியே இருந்து அவர்களை எப்படிக் கவனிப்பது என்று பயமாயிருக்கும். நாட்டு நிலமைகள் சீரடைந்தால் நீங்கள் விட்டுட்டு ஊரோடை வந்து ஏதாவது செய்து கொண்டிருக்கலாம்தானே…?’

அநேகமாக எல்லாக் கடிதங்களிலும் ‘ஊரோடு வந்து விட்டால் நல்லது….கஷ்டமோ நஷ்டமோ எல்லாரும் ஒன்றாயிருக்கலாம்’ என அர்த்தப்பட எழுதியிருப்பாள். தனிமை அவளுக்குள் தாங்கமுடியாததாயிருக்கிறது. தனிமை மன வருத்தத்தையும் உடல் வருத்தத்தையும் தருகிறது.

‘எனக்கு இப்ப வருத்தங்களும் அதிகம். உடல் உளைவு, நாரிக்குத்து. இரண்டு நாளாய் இடது கை ஒரே குத்துளைவாய்க் கிடக்குது. டொக்டரிட்டை போறதென்றாலும் என்னைக் கூட்டிக்கொண்டு போக ஆர் இருக்கினம்?’

கடிதத்தின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் தனிமையின் விரக்தி தொனித்திருப்பதைப் பார்த்தால், வேலையை விட்டு ஊரோடு போய்ச் சேர்ந்துவிடலாம் என்றுதான் தோன்றும். போய் என்ன செய்வது? வாழ்க்கைக்குப் பணம் மிகவும் தேவைப்படுகிறது. அன்றாடச் சாப்பாட்டுச் செலவுகள், பிள்ளைகளின் ஸ்கூல் செலவுகளைக் குறிப்பிட்டு எழுதியிருப்பாள். மாதத்திற்கு இவ்வளவு தேவைப்படுகிறதா என மலைப்பாக இருக்கும்.

‘… என்றாலும் மிகவும் கட்டுப்பாட்டுடன் செலவு செய்து சீவிக்கிறோம். நீங்கள் போகமுந்தி கடன் தந்தவையள் காசுக்கு நெருக்குகினம். ஆனால் அதுக்காக நீங்கள் கவலைப்படவேண்டாம். நான் எப்படியாவது சமாளிச்;சுக்கொள்ளுறன். வசதியென்றால் கொஞ்சக் காசு அனுப்பி வையுங்கோ…’

நேரத்தை பார்த்துக்கொண்டு வேலைக்கு ஆயத்தமானான். கை சப்பாத்து போடும் அலுவலைச் செய்துகொண்டிருந்தாலும் மனம் இன்னும் வீட்டு நினைவுகளில் அலைந்தது. சரி, பணம் அனுப்புவதற்கு ஏதாவது ஒழுங்கு செய்யலாம் என எண்ணிக்கொண்டே கடிதத்தை வைத்துவிட்டுக் கபினிலிருந்து வெளியேறினான்;.

திருத்துவதற்காக கழற்றப்பட்டிருந்த இயந்திரத்தின் உதிரிப்பாகங்களைச் சரி பார்த்து மீண்டும் பொருத்தும் வேலையில் ஈடுபட்டான். கண் பார்த்து, கைகள் வேலை செய்துகொண்டிருந்தன. மனதில் சிக்கியிருந்த மனைவியின் நினைவுகள் மெல்ல குமிழ் விட்டு எழுந்துவந்தன… அவளது நிலைமையை எண்ணிக் கவலை மேலிட்டது கமலநாதனுக்கு. தனியாளாக சகல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கிறாள். அதற்குரிய மனோபலம் அவளுக்கு இருக்குமா? எனினும், ‘நீங்கள் கவலைப்படவேண்டாம் எப்படியாவது சமாளித்துவிடுவேன்’ எனவும் எழுதியிருக்கிறாள். மானசீகமாக மனைவியைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவளது தலைமுடியை ஆதரவாகக் கோதிவிட்டான். செய்துகொண்டிருந்த வேலையைச் சற்று நிறுத்தி கண்களில் பனித்த கண்ணீரை விரலினால் துடைத்தான்.
‘இதுதான் வாழ்க்கை… என் நண்பனே!’

பக்கத்தில் நின்ற ஈகரின் குரல் அது. ஈகர் தொழில் ரீதியாக கமலநாதனின் உதவியாளன். உக்ரையின் நாட்டைச் சேர்ந்தவன். அவனிடம் பிடிபட்டுவிட்டேனே எனக் கூச்சமாயிருந்தது. அவனைப் பார்த்து, புன்னைகைத்துச் சமாளிக்க முயன்றான்.

“மனைவியின் லெட்டர் வந்தது! அதுதான்…”

“பிரிவு எங்களுக்குத் தவிர்க்கமுடியாதது. அதுக்காக எந்த நேரமும் ஏன் வருந்துகிறாய்?”

“வீட்டுக்கே போயிடலாம் என்று நினைக்கிறன்…” கமலநாதன் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினான்.

ஈகர் அட்டகாசமாகச் சிரித்தான். “இதை நீ எத்தனை தடவை சொல்லிவிட்டாய்..? அந்த ஆசையெல்லாம் வேண்டாம் நண்பனே.. உனக்குப் பணம் தேவையில்லையா? கவலையை விடு. எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக்கொள்!”

கமலன் ஏதும் பேசாது மீண்டும் வேலையில் ஈடுப்பட்டான். ஈகர் மேலும் சீண்டினான்.

“லெட்டரைக் கண்டதும் மனைவியின் நினைவு வந்துவிட்டதா…?”
அது எப்போதுதான் இல்லாமற்போனது என்று தோன்றியது கமலனுக்கு. இந்த நினைவுகளும் கனவுகளும்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. ஒரு வகையிற் பார்த்தால்… வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுத்தி வைத்திருப்பது நினைவுகளும் கனவுகளும்தானே?

“கமல் ஈவினிங் வெளியே போகலாம்! வருகிறாயா?”

“ஐயோ நான் வரவில்லை” கமலநாதனிடமிருந்து சட்டெனப் பதில் வந்தது.

“ஏன் பயப்பிடுகிறாய்…? வெளியே போனால் வீட்டுக் கவலைகளை மறக்கலாம் உல்லாசமாகப் பொழுதைப் போக்க அழகான பெண்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்…”

இதற்கு முதல்முறை ருமேனியாவுக்குக் கப்பல் வந்தபோது ஈகருடன் வெளியே புறப்பட்டுப், பட்ட அனுபவம் நினைவிலிருந்தது. புதிய இடத்திற்கு வந்திருக்கிறோம் சுற்றி பார்த்து வரலாம் என்ற ஆர்வத்திற்தான் ஈகருடன் வெளியே போனான். சில தெருக்களில் ஈகர் கூட்டிப்போனபோது இளம் பெண்கள் ‘வெளிப்படையாகத்’ தங்கள் அழகைக் காட்டியபடி நெருங்கி வந்தார்கள். “மாலைப் பொழுதை இனிமையாகக் கழிக்கலாம் வாருங்கள்..”

கமலன் விலகி ஓடினான். அவர்கள் அவனை ஏளனம் செய்து சிரித்தார்கள். “ழெ டிழலஇ ழெ டிழல..” ‘நீ ஆண் பையனில்லை!’ என்ற அர்த்தத்திற்தான் அப்படிக் கூறினார்கள். ஈகர் குறிப்பாக இந்தத் தெருக்களுக்கு காரணமாகத்தான் அழைத்து வந்திருக்கிறான் என்பது பின்னர்தான் விளங்கியது. அந்த வில்லங்கம் இனி வேண்டாம்.

ஈகர் விடுவாதாயில்லை. “இரவு டிஸ்கோவுக்குப் போகலாம் வா கமலன். உனக்கு அதன் அருமை பெருமையெல்லாம் தெரியாது.. நிறையக் குடித்து அழகிகளுடன் ஆடிப் பாடி மனதிலுள்ள பாரங்களையெல்லாம் இறக்கி வைத்துவிட்டுப் புது மனிதனாக மீண்டும் வரலாம்.”

போனமுறை ருமேனியா வந்தபோது ஈகர் நடந்துகொண்ட முறையை நினைத்துப் பார்த்தான் கமலன். இரவு டிஸ்கோ முடிந்து.. நிறைய தண்ணியில் யாராவது அழகிகளின் துணையுடன்தான் கப்பலுக்கு வருவான். திரும்பவும் கப்பல் ருமேனியாவுக்கு வருகிறதென்ற செய்தி அறிந்த நாளிலிருந்தே ஈகர் பரவசமடைந்திருந்தான். இந்த நாட்களை எப்படி அனுபவிப்பது என ஒரு திட்டமே போட்டிருந்தான். அவனது வாழ்க்கை முறையைப் பார்த்தால் வேடிக்கையாயிருக்கும். குடும்பத்தில் அக்கறை பற்று இல்லாதவனென்றும் சொல்ல முடியாது. ஒரு மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், மூத்த மகள் பல்கலைக்கழகத்திலும், அடுத்தவள் கல்லூரியிலும் படிப்பதாக கூறியிருக்கிறான். எங்காவது ஒரு துறைமுகத்தைக் கப்பல் வந்தடைந்ததும் முதல் வேலையாகக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு பேசுவதற்காக ரெலிஃபோனுக்கு ஓடுவான். ‘மூத்த மகளுக்கு அவளது ஃபோய் ஃபிரண்ட்டுடன் மனஸ்தாபமாம்.. விட்டுப் போய்விட்டான். பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்… கருத்தடை மாத்திரைகளை பாவிக்கும் முறைகளைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும்படி மனைவிக்குச் சொல்லிருக்கிறேன்..’ இந்த மாதிரி ஏதாவது குடும்பக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருப்பான்.

“கமல்… என்ன யோசிக்கிறாய்? என்னோடு வந்தாயென்றால்… வாழ்க்கையின் இனிமையை, அதன் ரகசியங்களைக் கண்டுகொள்வாய். உனது மனைவியைப்போல பல அழகிகளை அங்கே காணலாம்..”

“எனக்கு அதெல்லாம் சரிப்பட்டுவராது ஈகர்…”

“இது பைத்தியக்காரத்தனம் கமல்! குடும்பத்திற்காக உழைக்க வந்திருக்கிறாய்… உணர்ச்சிகளை அடக்கி ஒடுக்கி வருத்தக்காரனாக மாறிவிடாதே!”

“எனக்கு ஒரு வருத்தமும் வராது ஈகர். நீதான் வருத்தத்தைத் தொற்றிக்கொண்டு வருவாயோ என்று பயமாயிருக்கு! இப்போது மூலை முடுக்கெல்லாம் எயிட்ஸ் பரவிக்கொண்டிருப்பது தெரியும்தானே…?”

அதற்கெல்லாம் ஈகரிடமிருந்து அலட்சியமான சிரிப்புத்தான் வெளிவரும்.

“இதுதான் உனது பயமா…? நீ அதிகமாகக் கற்பனை செய்து குளம்புகிறாய். அதற்குரிய பாதுகாப்பான முறைகளில் நடந்துகொள்ளும் வழி வகைகள் உண்டு. இதில் ஈடுபடுபவர்கள் தங்களைத் தொடர்ச்சியாக மெடிக்கல் செக்அப் செய்து கொள்வார்கள். அவர்களுக்கு எயிட்ஸ் இல்லை என டொக்டர் கொடுத்த சேர்ட்டிபிக்கட்டும் அவர்களிடம் உண்டு..”

“தயவு செய்து என்னை வற்புறுத்த வேண்டாம் ஈகர்… நான் வெளியே வரவில்லை..”

“உனது நிலைமையைப் பார்க்கக் கவலையாயிருந்தது. அதுதான் கேட்டேன். மன்னித்துக்கொள்..”

மாலையில் வேலை முடிந்து அறைக்கு வந்தபோது கமலனுக்கு சற்றுக் குதூகலமாயிருந்தது. மனைவியின் கடிதத்தை வாசித்து அவளுக்குப் பதில் எழுதவேண்டும் என்ற நினைவில் கிடைக்கும் அற்ப சுகமே மனதைச் சற்று ஆறுதற்படுத்துவதாயிருந்தது.

குளித்து பிராத்தனை செய்துவிட்டு வந்து ரீவியை ஓன் பண்ணி டெக்கில் சினிமா பாடலை ஓடவிட்டான். இந்த நேரத்தில் ரீவிக்கு முன்னால் அமர்ந்து ஏதாவது புத்தகத்தை வாசிப்பது வழக்கம். ரீவியில் ஒரு கண் புத்தகத்தில் ஒரு கண்ணாகப் பொழுது கழியும். இன்றைக்குப் புத்தகம் தேவைப்படாது.

மனைவியின் கடிதங்களைக் கையில் எடுத்தான். முதலில் அவற்றை இலக்க வாரியாக ஃபைலிட்டான். மனைவி கடிதங்களை இலக்கமிட்டுத்தான் எழுதுவாள். அவற்றை தனியொரு ஃபைலில் கோர்த்து வைப்பான். கடலில் நீண்ட பயணம் செய்து மனம் சலிக்கும் நாட்களில் இந்தக் கடிதங்களை எடுத்து வாசிப்பதுண்டு.
கமலனது கபின் வாசலில் யாரோ நிற்பதுபோல.. அவர்கள் ஓசையின்றி உரையாடும் அசுகை கேட்டது. முதலிற் கமலன் அதைப் பொருட்படுத்தவில்லை. கடித வாசிப்பில் மூழ்கிக்கொண்டிருந்தான். உடனடியாக மனைவிக்குப் பணம் அனுப்புவது எப்படியென்று உள்ளே யோசனை ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் வாசலில் நிற்பவர்கள் அங்கிருந்து விலகிப் போவதற்கான அறிகுறி எதுவும் தென்படாமலிருந்தது. கப்பலில் வேலை செய்யும் ஏனையோரும் அநேகமாக வெளியே போய்விட்டார்கள். இது யாராக இருக்கும்?

கமலநாதன் எழுந்து வாசலுக்கு வந்தான். அங்கே ஜொனி ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தான். ஜொனி வழமையாகக் கப்பல் பேர்த் பண்ணப்பட்டதும், கப்பற் தொழிலாளர்களுக்குத் தேவையான பொருட்களை சப்ளை பண்ணுவதற்கு வரும் ஆள்.. ஒரு ஏஜன்ட்டைப் போல. ருத் பேஸ்ட், சேவிங் கிறீம், சம்பூ, குளிர்கால ஸ்வெட்டர் போன்ற சிறு சிறு பொருட்களை விற்பனை செய்வான். கையடக்க ரெலிஃபோனுடன் அன்றாடம் கப்பலுக்கு வந்து தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்கு உதவுவது போன்ற ‘சகல’ சேவைகளையும் செய்பவன். இப்போது ஒரு பெண்ணுடன் வந்து நிற்கிறான். யாருக்காக?

சென்ற முறை கப்பல் இந்தப் போர்ட்டுக்கு வந்தபோது கப்டின் முதற் கொண்டு ஒவ்வொரு அறைகளிலும் அழகுப் பெண்கள்! டைனிங் மேசைக்கு போனால் அங்கேயும் அவர்கள் இவர்களை அணைத்தபடி…! அல்லது இவர்கள் அவர்களை அணைத்தபடி! கப்டினிடம் இதுபற்றிப் பிரஸ்தாபித்தால் எப்போதும் அவரது பதில் இந்த ஸ்டைலிற்தான் வந்தது, ‘கப்பல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா..! கடலில் அலைந்து வருபவர்கள் ரிலாக்ஸ்சாகச் சில நாட்களைக் கழிக்கத்தானே வேண்டும்?’

ஜொனி யாரையாவது தேடி வந்திருக்கக்கூடும்.. போய்விடுவான் என எண்ணிக்கொண்டு திரும்ப வந்து அமர்ந்திருந்தான் கமலன். ஆனால் அவர்களது உரையாடல் அவனது கவனத்தை ஈர்க்கும்படியாக இன்னும் சற்று உரத்துக் கேட்டது. எழுந்து வாசலுக்கு வந்தான். “யாரையாவது பார்த்துக்கொண்டு நிற்கிறீர்களா?”

“யேஸ்… தேர்ட் இன்ஜினியரை”

தேர்ட் இன்ஜினியரென்டால் ராகவனாயிருக்குமோ? ராகவன் முதல்முறையாகக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தவன். அண்மையிற்தான் திருமணமானவன். கப்பற்காரரின் கதையைக் கேட்டு சற்று பரவசமடைந்தவன் போலக் காணப்பட்டான். அவனுக்கு படித்துப் படித்துச் சொன்ன புத்திமதிகளையெல்லாம் அசட்டை செய்து விட்டானோ? ‘தம்பி… காசு சம்பாதிக்க வந்து.. கடைசியா எயிட்ஸ்சை சம்பாதித்துக்கொண்டு போகக்கூடாது. வலு கவனமாயிருக்க வேணும்’

‘சரி அண்ணை…’ நல்ல பிள்ளையைப்போலக் கேட்டுக்கொண்டிருப்பான். அதிகம் பேசமாட்டான். ஆள் அமுசடக்கிக் கள்ளனாயிருப்பானோ? அவனது அறையிற் போய்ச் செக்பண்ணிப் பார்க்கவேண்டும்.

அல்லது.., தேர்ட் இன்ஜினியராக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவனும் இருக்கிறான். இது அவனுடைய வேலையாகத்தானிருக்கும். ஜொனியிடமே கேட்டுப்பார்க்கலாம். கமலன் இருக்கையை விட்டு எழுந்தான். பிறகு ‘எனக்கேன் இவ்வளவு கரிசனை?’ என்ற எண்ணம் வந்தது. ‘யாரும் யாரோடும் போகட்டும்’ எனத் தனக்குத்தானே கூறியவாறு அமர்ந்தான். தான் கொஞ்சம் கலவரமடைகிறேனோ என்று தோன்றியது கமலனுக்கு.

சற்று நேரத்தில் ஜொனி கதவை மெல்லத் தட்ட கவனம் திரும்பியது. ரீவியைப் பார்த்தவாறு, “இன்டியன்ஃபிலிம்?” எனக் கேட்டான் ஜொனி.

“யேஸ்…பாட்டுக்கள்!”

“நாங்களும் பார்க்கலாமா?” கேட்டவாறே ஜொனி உள் நுழைந்தான். ‘சரி… உள்ளே வரலாம்’ எனும் பதில்கூட அவனுக்குத் தேவைப்படவில்லைப் போலிருந்தது. அந்தப் பெண் அவனைத் தொடர்ந்து உள்ளே வந்தாள்.

“வெரி நைஸ்!..” ஜொனி ரீவியில் ஓடும் படத்தைப் புகழ்ந்தபடி கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந்தான்.

மேனி அழகைப் பிடித்துக் காட்டும் உடலிறுக்க உடையுடன் அவள் தோன்றினாள். சின்னஞ்சிறு பெண். கண்களில் மிரட்சி தெரிந்தது. ஒரு புதிய ஆளிடம் அறிமுகமாகும் தயக்கமும் அதனால் மௌனமும் அவளிடம் தோன்றியிருந்தது. இருக்க இன்னொரு கதிரையின்றி அவள் நின்றுகொண்டிருப்பதை உணர்ந்துகொள்ள கமலனுக்குச் சற்று நேரம் பிடித்தது. உள்ளே, படுக்கையறையில் ஒரு கதிரை இருந்தது. அதை எடுத்துவந்து அவளுக்காகப் போட்டான். அதில் அவள் நன்றியுடன் அமர்ந்துகொண்டாள். அதைக் கண்கள் சொல்லின. அவள், தனக்குள்ளே ஒரு பதற்றத்தையும் கொண்டிருப்பது கமலனுக்கு விளங்கக்கூடியதாயிருந்தது. புதியவளோ? வுற்புறுத்திக் கூட்டிவந்திருப்பானோ?

ஜொனி ஒரு சிகரட்டைப் புகைத்தவாறு அவளுக்கும் நீட்டினான். தன் மெல்லிய விரல்களினிடுக்கில் சிகரட்டை எடுத்து இதழ்களிடையில் வைத்துப் பற்றவைத்தாள். கமலன் அவசரமாக ஆஸ்ட்றேயை எடுத்துவந்து அவர்கள் முன் வைத்தான். கமலனுக்கு ஜொனி சிகரெட்டை நீட்ட, “நோ…தாங்ஸ்..” என்றான். கமலன் புகைப்பதில்லை. சிகரட்புகை மணம் அவனுக்குப் பிடிக்காது. கப்பலில் மற்றவர்களுக்கு அது தெரியுமாகையால், யாரும் அவனது அறையுட் புகைப்பதில்லை. புதியவர்கள் யாராவது வந்து புகைக்கத் தொடங்கினால் அதைத் தடுப்பது இங்கிதமற்றதாயிருக்குமெனத் தடுக்கமாட்டான். அவர்கள் போனதும் ஆஸ்ட்றேயை வெளியே கொட்டிக் கழுவிவிடுவான்.
அவள் மௌனமாயிருந்தாள். ஜொனி மட்டும் எதையாவது பேசிக்கொண்டிருந்தான். பின்னர் சட்டென எழுந்தான்.

“இவள் இங்கேயே இருக்கட்டும்! எனக்கு வேறொரு அவசர வேலை உள்ளது… ஒரு மணித்தியாலத்தில் எப்படியாவது வந்து விடுவேன்! ஆட்சேபனையில்லையே?”

கமலநாதன் தனக்கு அது பற்றி ஏதாவது ஆட்சேபனை உள்ளதா, இல்லையா எனத் தீர்மானிக்க முன்னரே ஜொனி வெளியேறிப் போனான். தனக்கு ஆட்சேபனை இருக்குமாயினும் அவன் அதைப் பொருட்படுத்தியிருக்கமாட்டான் என்றே தோன்றியது. இந்தப் பெண் ரீவியில் ஓடும் படத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். தன்னைப் பார்ப்பதை அவள் தவிர்த்துக்கொள்கிறாளோ எனக் கமலன் எண்ணினான். ஏன்? வெட்கபடுகிறாளா?

தன் அறைக்குள் வந்திருப்பவளோடு தானும் பேசாமலே இருப்பது சரியா என கமலனுக்குச் சங்கடமாயிருந்தது. தான் பேசினாற்தானே அவளும் பேசுவாள்?

“ஏதாவது குடிக்கிறீங்களா?”

சட்டெனக் கேட்ட கேள்வியில், அவள் தடுமாற்றமடைந்து பின்னர் தலையசைத்தாள். அந்தமாதிரியான தலையசைவுக்கு என்ன அர்த்தம் என்றும் கமலனுக்குப் புரியவில்லை. ஏதோ புரிந்தகொண்டவன்போலக் கேட்டான்..

“என்ன வேண்டும்?”

அவள் பதில் சொல்ல முயன்று, பின் மழுப்பிச் சிரித்தாள். ஆங்கிலத்தில் சரியாகப் பேசத் தெரியாது கூச்சப்படுவது போலிருந்தது. ஒரு கோக்கா கோலாவை அவள் முன் எடுத்து வைத்தான். இவளுக்கு எத்தனை வயதிருக்கும்? தன் வயதில் அரைவாசியாவது இருக்குமா என யோசித்தான்.

ஈகர் சொன்னது ஞாபத்துக்கு வந்தது. ‘யுனிவர்சிட்டியில் படிக்கும் பெண்கள் கூட இங்கே இந்தத் தொழிலில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்… அவர்களுக்குப் படிப்பதற்கு பணம் தேவைப்படுகிறது’ கப்பலுக்கு வந்த பெண்களில் ஒருத்தி ஓர் கேள்விக்கொத்தை கப்பற் தொழிலாளர்களிடம் கொடுத்திருந்தாள் ‘மணம் முடித்த ஆண்கள் வேறு பெண்களை நாடுவதற்கான காரணம்’ எனும் பொருள் பற்றி அவள் மேற்கொள்ளும் ய+னிவர்சிட்டி ஆய்வுக்கான தகவல்களைத் திரட்டுவதற்காகத் தரப்பட்ட கேள்விக்கொத்து அது. அதில் ‘பொழுது போக்கிற்காகவா? தனிமையா, பிரிவுத் துயரமா? மனக்கசப்பா? மனம் ஒத்துப்போகாமையா? வயது வித்தியாச பிரச்சினையா? பார்ட்னருக்கு நோய் காரணமாகவா? புதிய தேடலுக்காகவா? உல்லாசத்திற்காகவா? திருப்திக்காகவா?’ இப்படிப் பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

இவளும் கல்லூரியிலோ, யுனிவர்சிட்டியிலோ படிக்கிற பெண்ணாக இருக்குமோ? இந்தப் பெண்களின் வாழ்க்கை இப்படியே சீரழிந்துபோய்விடுமோ எனக் கவலையாயிருந்தது. இது பற்றி அவர்களுக்கு எவ்விதப் பிரக்ஞையும் இருக்காதா?

“இதையெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டாற் சரி…” ஈகரின் இந்தக் கருத்து சரியானதா என கமலனுக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தப் பெண்களைப் பார்க்க ஒருவித அனுதாபமே ஏற்படுகிறது. அவளுடன் ஏதாவது பேசவேண்டும்போல கமலனுக்கு ஆர்வம் எழுந்தது. கூச்சமாயுமிருந்தது. அவளுக்கு ஆங்கிலத்திற் பேசுவது கஷ்டமாயிருக்கிறதுபோலும். அதனாற் தான் மௌனமாயிருக்கிறாள். எனினும் கைப் பாசையையும் சேர்த்து ஒருவாறு சமாளித்துவிடலாம். தானாகத்தான் பேச்சை ஆரம்பிக்கவேண்டும். என்ன பேசுவது?

பெயர் என்ன என்று கேட்கலாமா? படிக்கிறாயா? ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாய்?

இதெல்லாம் அவளுக்கு முட்டாள்தனமாய்த் தோன்றலாம். ரீவியை பார்த்துக்கொண்டிருந்த அல்லது பார்ப்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்த அந்தப் பெண் கமலனின் பக்கம் திரும்பிப் புன்னகைத்தாள். அப்போதுதான் கமலனுக்கு, தான் சற்று நேரமாக அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் அதை அவளும் கவனித்துவிட்டாள் என்பதும் உணர்விற் தட்டியது.

ஒரு மணித்தியாலத்தில் வருவதாகக் கூறிச் சென்ற ஜொனி இன்னும் வரவில்லை. ஓரறைத் தனிமையில் இருந்துகொண்டு ஒருவருக்கொருவர் பேசாமலிருப்பது வேடிக்கையாகவும் சற்று அசௌகரியமாகவும் இருந்தது. ஜொனி இனிமேல் வந்து இவளை எங்கு கொண்டுபோய் விடுவானோ? கப்பல்களிலுள்ள சில முரட்டுத்தனமான மனிதப்பிசாசுகளை நினைத்துப்பார்த்தான் கமலன். அப்படியானவர்களின் கைகளில் இந்தக் கோழிக்குஞ்சைக் கொண்டுபோய்க் கொடுத்துவிடுவானோ? அல்லது அவளை இங்கிருந்து கூட்டிப்போக வராமலே விட்டுவிடுவானோ? இது ஈகரின் மறைமுகமான திட்டமாய்க்கூட இருக்கலாம்.

இன்றைய இரவு இவள் இங்கே இந்த அறையிற்தான் தங்குவாளா?
ஜொனி மிகவும் தாமதமாகத்தான் வந்தான். மன்னிப்புக் கேட்டவாறு கபினுக்குள் நுழைந்தான். அவளையும் கமலநாதனையும் மாறி மாறிப் பார்த்தான். சிரித்தான். பின்னர் கேட்டான், “இவள் எப்படி?”

“இவள் மிக அழகாயிருக்கிறாள்… நல்ல பெண்”

“உனக்கு இவள் வேணுமா..? இன்றைய இரவுக்கு?”

கமலநாதன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். தனது பதிலை அறிவதற்கு அவளிடத்தில் ஆர்வம் தோன்றியதுபோல அவள் முகத்தில் ஒரு மாற்றம் வந்தது.

“இல்லை! வேண்டாம்! எனக்கு என் மனைவி இருக்கிறாள்!”

“அவள் இங்கே இல்லையே!”

“இல்லை! இங்கேதான் இருக்கிறாள்…!”– கமலன் சினிமாப்பட ஸ்டைலில் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.

அந்தப் பெண் இருக்கையை விட்டு எழுந்தாள். உள்ளே வந்தபோதிருந்த மலர்ச்சியை ஓர் இருட்டு வந்து மறைத்ததுபோல முகம் மாறியது. தான் அல்லது தனது அழகு அவமதிக்கப்பட்டுவிட்டதாக அவள் கருதியிருப்பாளோ என்ற கவலை கமலனுக்கு ஏற்ப்பட்டது.

அவளை அழைத்துக் கொண்டு ஜொனி வெளியேறினான்.
மனைவியின் கடிதத்தைக் கையில் எடுத்தான் கமலன்.. அவளுக்கு எழுதவேண்டும்.

– தினக்குரல் பத்திரிகையிற் பிரசுரமானது (13.08.2000)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *