கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 29,679 
 
 

ஞாயிற்றுக்கிழமை காலை மூர்த்தி அவளை அழைத்து வந்தான். சம்பிரதாய அறிமுகம் இல்லாமல், ”ராமு, இவ பேரு சத்யா. மாதம் பூரா இவ உன்கூட இருக்கப் போறா.”அவன் அழைத்து வந்த பெண்ணுக்குப் பத்தொன்பது வயசு இருக்கும். கலைந்த தலை, தீவிரமான தோற்றம். சகல சொத்துக்களும் முதுகுச் சுமையில் அடங்கி இருந்தது. என்னைப் பார்த்துச் சிரிக்கவும் இல்லை, முறைக்கவும் இல்லை. நின்றுகொண்டு இருக்கும்போதே புத்தகம் படித்துக் கொண்டு இருந்தாள்.”சத்யா, இதுதான் ராமு. நான் சொன்னனே, இங்கதான் நீ இருக்கப்போறே” என்றான்.

”எனக்கு இதில் ஏதாவது உரிமை இருக்கா என்ன? என் ரூமைக் காட்டினா அங்கே போறேன்” என்றாள் அந்தப் பெண்.
”நீதானே சொன்னே. உன் மனைவி பிரசவத்துக்குப் போயிருக்கா. சில மாதங்களுக்கு யாரும் இருக்க மாட்டானு, கம்பெனிக்காக யாரையாவது அனுப்புன்னு?”மூர்த்தி என்னைச் சற்றுத் தர்மசங்கடமாகப் பார்த்தான். ”அவ ஒரு மாதிரி” என்றான். மூர்த்தியைத் தனியாக அழைத்து ”மூர்த்தி, நீ செய்யற காரியம் உனக்கே நல்லா இருக்கா?”

”அதுக்காக இந்த மாதிரி சிடுமூஞ்சிப் பெண்ணையா சொன்னேன்?”

”ஏன் இவளுக்கு என்ன?”

”என்ன மூர்த்தி, அவளைப் பார்த்தா ஒரு மாதிரி இல்லை?”

மூர்த்தி என்னை நிதானமாகப் பார்த்து, ”ராமு, நீ… நீ எப்படி முடிவெடுக்க முடியும்? அவளோடு ஒரு வார்த்தை பேசியிருக்கியா இதுவரைக்கும்? பேசிப் பாரு.”

”தோற்றத்தைப் பார்த்தாலே தெரியவில்லையா?”

”என்ன தெரியுது?”

‘ஒரு மாதிரின்னு.”

”ஒரு மாதிரின்னா என்ன? புரியலை. நான் வேணா சொல்லிர்றன், சுத்தமாகக் குளிக்கும்படி. ராமு, நான் ஒரு இக்கட்டில் இருக்கேன். எக்ஸ்சேஞ் புரொகிராம்படி இவள என் வீட்டுக்கு அனுப்பியிருக்காங்க. எனக்கு இப்ப இக்கட்டான நிலை. என் மாமனார் பரிவாரத்தோட கண் ஆபரேஷனுக்கு வந்திருக்கார். அதனால் வீட்ல இடம் இல்லை. அரசாங்கத்துக்கு இவளைச் சேர்த்துக்கறதா ஒப்புத்துக்கிட்டேன். அதனால் நீ இவள ஒரு மாதம் சகிச்சுக்கிட்டா போதும். எப்ப பார்த்தாலும் புஸ்தகம் படிப்பாளாம். இவளால தொந்தரவு எதுவும் இருக்காது.” அவளை இங்கி ருந்து பார்த்தேன். நின்றுகொண்டு புத்தகம் படித்துக்கொண்டு இருந்தாள்.

”இவ யாரு?”

”ஏதோ அரசாங்க ஆராய்ச்சிக்கு முக்கியமா தேவைப்படறா. முக்கியமான அப்ஸர்வேஷனுக்கு முந்தி ஓரியண்டேஷனுக்கு அனுப்பப் போறாங்களாம். கொஞ்சம் பேச்சுக் கொடுத்துப் பாரு. நல்ல புத்திசாலிதான். என்ன, கொஞ்சம் பேச்சு கம்மி, அவ்வளவுதான். சாப்பாடு எல்லாம் வெளியே போய்ச் சாப்பிட்டுப்பா. மாடி சாவி கொடு போதும். அப்புறம் இவளால எந்தத் தொந்தரவும் இருக்காது.”

”சோப்புக்கே செலவாகும் போல இருக்கே, நாமெல்லாம் எத்தனை சுத்தமான பிரஜைங்க.”

”எல்லாம் சரியாப்போய்டும் ராமு. தயவுசெய்து என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாத்தின, உனக்குப் பிரதியுதவி…”

”தேவையில்லை, நண்பர்களுக்குள்ள என்ன” என்றேன்.

மூர்த்தி போனதும் அவளை அழைத்து மாடி ரூமைக் காட்டினேன்.

அவள் உள்ளே நுழைந்து படுக்கையில் படுத்துக்கொண்டு படிப்பதைத் தொடர்ந்தாள். கையில் ஒரு குடை வைத்திருந்தாள். இந்த ஊர்ல மழையே கிடையாது. குடை எதுக்கு?

”சாப்பிட ஏதாவது இருக்குமா?” என்றாள்.

”எங்க சாப்பாடு உனக்குப் பிடிக்குமா” என்றேன் சாமர்த்தியமாக.

”வேற வழி” என்றாள் சுத்தமாக. நான் அறையைவிட்டு விலகக் காத்திருந்தாள்.

மூர்த்தி சொன்னது போல் அவளால் எந்தத் தொந்தரவும் இல்லை. மாடியில் இருக்கிறாளா என்று தெரியாத அளவு சின்னச் சத்தம்கூட வரவில்லை. ஒரு முறை மாடிக்குப் போய்ப் பார்த்தபோது மிகமிக நிசப்தமாக இருந்தது. இவள் என்ன இப்படியா தூங்குவாள் என்று கதவைத் தட்டிப் பார்த்தேன். பதிலே இல்லை.

நீண்ட நேரம் தட்டின பிற்பாடு எட்டிப் பார்த்ததில் எனக்கு அவள் தூங்கிய விதம் விநோதமாக இருந்தது. ஒரு சலனமும் இல்லாமல் இப்படியா பிணம் போல… இல்லை, ஏதாவது மருந்தின் விளைவா?

யார் இந்த அந்நியள்?

காலை அவள் இறங்கி வந்தபோது புன்னகைக்கவில்லை. செய்தித்தாளை அவளிடத்தில் கொடுத்தேன். அவள் அதைப் படிக்கவில்லை. அதனால் தன் காலணிகளைச் சுத்தம் செய்துகொண்டாள்.

”உங்கள் செய்திகளில் இஷ்டமில்லை” என்றாள்.

உங்கள் செய்தி!

”பின் என்ன செய்தித்தாள் வேண்டும்?” என்று கேட்டேன்.

”எதும் வேண்டாம் எனக்கு” என்றாள்.

”என்ன சாப்பிடுகிறாய்?” என்றேன்.

”நான் இனி இங்கே சாப்பிடப்போவதில்லை, கேன்டீனில் எனக்கு ஏற்ற உணவு தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். கிடைக்கும்” என்றாள்.

”என்ன மாதிரி உணவு? சொல், நான் ஏற்பாடு செய்கிறேன்.”

”வேண்டாம்.”

ஏன் தன் உணவுப் பழக்கத்தை என்னிடம் சொல்ல மாட்டேன் என்கிறாள்?

காலை மேஜை மேல் போட்டுக்கொண்டு புத்தகம் படித்தாள். ”கெடல் எஷர் பாக் சென்ற நூற்றாண்டுப் புத்தகமா” என்றேன். கவனிக்காமல் நிதானமாகப் படித்தாள்.

”உன் சொந்த ஊர் எது, சத்யா?” என்றேன்.

”இந்த ஊர் இல்லை.”

”வேற்றுக் கிரகமா?” என்றேன். அவள் என்னை நிமிர்ந்து பார்த்து, ”அந்த ரங்கமான கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண் டிய கட்டாயம் இல்லை.”

அவள் செய்யும் காரியங்கள் எல்லாம் ஒருவாறு நம்மிடமிருந்து வித்தியாசப் பட்டது போல் இருந்தது. பேச்சு, நடை, உடை, பாவனை எல்லாமே நிச்சயம் இவள் நம்மவள் இல்லைஎன்ற சந்தேகத்தை என்னுள் விதைத்தது. படிக்கும் புத்தகங்கள் நம்மிலிருந்து வேறுபட்டவை. பேச்சுவார்த்தைகளில் ‘விடையிறுக்க’, ‘பயன்பாடு’, ‘துல்லியம்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினாள். யார் இவள்? எப்படி அதைத் தீர்மானமாகக் கண்டுபிடிப்பது? பிடி கொடுத்தே பேச மாட்டேன் என்கிறாளே. என் ஆர்வம் அதிகரித்தது. கை கால்களை முழுவதும் மறைத்து ஏன் உடையணிகிறாள்? பேசும் போதெல்லாம் தலையையும் புஜங்களையும் ஏன் இவ்வாறு ஆட்டி ஆட்டிப் பேசுகிறாள்? யார் இவள்? கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்கிற ஜுரம் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வமாக அப்புறம் வெறியாக மாறிற்று. என் ஆராய்ச்சியைத் துவங்கிவிட்டேன். முதலில் அவளை ஆடையில்லாமல் பார்க்க விழைந்தேன். இதில் என்னைச் செலுத்தியது ஒரு விதமான விஞ்ஞான ஆர்வமே தவிர, வேறு எந்த விபரீத இச்சையும் இல்லை என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன். அவளுடைய உள் அங்கங்கள் நம் அங்கங்கள் போல இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ளவே இந்த யத்தனம்.

அவள் இரவு ஏழு மணிக்கு அப்புறம், ஆனால் நான் அலுவலகத்திலிருந்து வருவதற்குள் குளிக்கிறாள் என்பதை அறிந்தேன்.

ஒருமுறை குளியல் அறையை ஒட்டியிருக்கும் அறையில் என் மனைவி பழைய துணிகளையெல்லாம், கண்டாமுண்டா சாமான் களையெல்லாம் அடுக்கியிருந்தாள். சாதாரண நாட்களில் நான் அந்த அறைக்குள் போனதே இல்லை. அந்த அறைக்கும் குளிக்கும் அறைக்கும் கதவு இருப்பது தெரியும். அன்றைக்கு அரை நாள் விடுமுறை எனக்கு. அதனால் சீக்கிரமே திரும்பிவிட்டேன். மாடியில் அவள் பாடிக்கொண்டே குளிக்கும் சத்தம் கேட்டது. தண்ணீரைத் திறந்துவிட்ட ‘சோ’வென்ற சீரான இரைச்சல் கேட்டது. மெள்ள, மிக மெள்ள, அடுத்த அறைக்குள் நுழைந்து, சன்னமாக ஒரு இன்ச் அந்தக் கதவைத் திறந்து உள்ளே பார்த்தேன். அவளை மெல்லிய நீராவிப் புகை மறைத்திருந்தது. அவ்வப்போது அவள் உடலின் வேறுவேறு பாகங்கள் ஆவித்திரையினூடே கோடி காட்டியது. இங்கே ஒரு புஜம். அங்கே ஒரு முழங்கால் அழுந்திய வயிறு, மார்பு. எனக்கு அனைத்தும் ஆச்சர்யம் அளித்தது. அவள் பாகங்கள் எதுவும் நம்மைப் போல் இல்லை. எனக்கு வியர்த்துவிட்டது. இவள் நம்மவள் இல்லை. வேற்றுக் கிரகத்துப் பிரஜை என்பது திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது. சற்று நேரத்தில் குளித்து முடித்து, தன் உடைகளை மேலே போர்த்திக்கொண்டு இருந்தவள் சட்டென்று சற்றும் எதிர்பாராமல் அந்தக் கதவருகே வந்து சரேல் என்று திறந்து, ”எனக்குத் தெரியும் இந்த மாதிரி எதாவது நடக்கும் என்று. என் உள்ளுக்குள் தெரிந்துவிட்டது. உணர்வு சொல்லிவிட்டது. உனக்கு வெட்கமாக இல்லையா? ஒரு பெண் குளிப்பதை மறைந்திருந்து பார்ப்பது எத்தனை கேவலம்? இந்த முறை உன்னை மன்னித்தேன். இனிமேல் இந்த வேலை வைத்துக்கொள்ள வேண்டாம். அடுத்த முறை இம்மாதிரி நடந்தால், உன் மேற்பார்வை அதிகாரிக்குச் சொல்ல வேண்டி வரும்” என்றாள்.

எனக்கு அவமானமாக இருந்தது. ”இனி இவ்வாறு நடக்காது” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ஆனால், என் ஆர்வம் தணியவில்லை. கேவலம் இந்தப் பெண்! வேற்றுக் கிரகத்துப் பெண் என்பது எனக்கு முழுவதும் தெரிந்ததா? இவளிடம் நாம் ஏமாறுவதா என்று என் நண்பன் தணிகையிடம் சொன்னேன். ”எப்படிச் சொல்கிறாய் அவள் வேற்றுக் கிரகத்துப் பெண் என்று?” தணிகை எதிலும் சந்தேகன்.

”குளிக்கும்போது பார்த்துவிட்டேன் தணி! அங்கங்கள் எல்லாம் நம் மாதிரியே இல்லை.”

”அதனால் வேற்றுக் கிரகம் என்று சொல்ல முடியாது. நம்மில் எத்தனையோ வகை.”

”பின் எப்படிச் சொல்ல முடியும் என்கிறாய்?”

”ஒரே ஒரு வழி, ரத்தப் பரிசோதனை. அவளைக் கத்தியால் கீறிப் பார்ப்பதுதான். ரத்தம் வருகிறதா இல்லையா என்று கண்டுபிடிக்க வேண்டும்.”

தணிகை தன் அலமாரிக்குச் சென்று பளபளப்பான சிறிய கத்தி ஒன்றை எடுத்து ”இதை அவள் முதுகில் அல்லது முழங்காலில் கழுத்தில் கீறாதே மற்ற எந்த இடத்திலாவது கீறிப் பார். வலி அதிகம் இருக்காது. அதன் கூர்மை அப்படிப்பட்டது. மிக மெலிதாகத்தான் சருமங்களைக் கீறும். நம் சர்ஜன்கள் பயன்படுத்தும் லேசர் விளிம்புக் கத்தி இது.”

அவன் அந்த அருமையான கத்தியை ஒரு சின்ன உறைக்குள் போட்டுக் கொடுத்தான். அதை வாங்கிக்கொள்ளத் தயங்கினேன்.

”பயமாக இருக்கிறது.”

”ஒன்று செய்து பார். அவள் நெஞ்சில் கை வைத்துப் பார். ஏதாவது அடித்துக்கொள்கிறதா? க்ளாக் ஏதாவது இருக்கிறதா பார்த்துவிடு. அதைவிடக் கீறிப் பார்த்துவிடுவதுதான் உத்தமம். ரத்தம் உத்தரவாதமாகக் காட்டிக் கொடுத்துவிடும்.”

”அவள் பயத்தில் சத்தம் போட்டு அதிகாரிகளுக்குப் புகார் கொடுத்தால்?”

”கொடுப்பாளா?”

”ஆம். சண்டைக்காரி. குளிக்கும்போது பார்த்ததற்கே ரொம்ப ரகளை செய்தாள்.”

”ஆர்வம் இருப்பவர்களுக்குத் தைரியம் வேண்டும். எப்படியாவது ஏதாவது விபத்து போலக்கூட ஏற்பாடு செய்து கீறிப் பார்த்துவிடலாம். இல்லை, தூங்கும்போது கீறிப் பார்க்கலாம். இல்லை, என்னை அழைத்தால் நான் உத்தமமாகக் காரியத்தை முடிக்கிறேன். நீ பிடித்துக்கொள். நான் கீறுகிறேன், பெண்தானே!”

”இல்லை தணிகை, முதலில் நீ அவளுடன் பேசிப் பார். அதன்பின் இந்தக் கீறல் சமாசாரம்எல்லாம் வைத்துக்கொள்ளலாம்” என்றேன்.

தணிகை சிரித்தான். ”சரி” என்றான்.

பத்தாம் தேதி தணிகை வீட்டுக்கு வந்தான். பெட்டியில் நியூஸ் போட்டுப் பார்த்தான். மற்றொரு கப்பல் நிறைய முந்நூறு பேர் அகதிகளாக அனுமதிக்கப்பட்டுஇருக்கிறார்கள் என்று. அவர்கள் ராக்கெட் தளத்தில் வந்து இறங்கும் காட்சியையும் மேயர் அவர்களை வரவேற்பதையும் காட்டினார்கள்.

”இந்தக் கதியில் இவர்கள் ஜனத்தொகை அதிகாரித்துவிடும் போல் இருக்கிறதே!” என்றான்.

”கட்டுப்பாடாகத்தான் செய்கிறார்கள். வீட்டு வேலைக்குத் தேவைப்படுகிறார்களே” என்றேன்.

அப்போது அந்தப் பெண் சத்யா உள்ளே வந்தாள்.

”சத்யா ஒரு நிமிஷம். இது தணிகை, என் நண்பன்.”

சத்யா அவனை உணர்ச்சியில்லாமல் பார்த்து ‘ஹலோ’ என்றாள். மாடிக்குப் புறப்பட்டாள்.

”உன்னுடன் பேச வந்திருக்கிறான்.”

”மன்னிக்கவும், நான் பேசும் நிலையில் இல்லை. வினோதகர்களுடன் பேச எனக்கு இஷ்டம்இல்லை.”

எனக்குக் கோபம் வந்து தணிகையைப் பார்த்தபோது, அவன் என்னைச் சைகையால் நிறுத்தினான்.

”சத்யா, உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” என்றான்.

அவள் கண்கள் சற்று விரிந்தன. ”என்ன உதவி?”

”இங்கிருந்து தப்பிக்க.”

”இங்கிருந்து தப்பிக்க முடியாது. எனக்குத் தெரியும். நீ அரசாங்க ஒற்றன்.”

அவள் அலட்சியமாகப் புறப்பட, தணிகை அவள் கையைப் பிடித்தான்.

”விடு என் கையை” என்றாள். அவள் முகம் வெளிறியது.

”உனக்குள்ளே என்ன ரத்தம் இருக்கிறது என்று பார்த்தே ஆக வேண்டும். நீ மனுஷியா? உனக்குள் ஓடுவது என்ன? ரத்தமா, இல்லை வேறு ஏதாவது சிலிக்கோன் திரவமா? பார்த்தே ஆக வேண்டும். ராமு, எடு கத்தியை!”

”விடு, வலிக்கிறது.”

”இந்த வலி என்பது செயற்கை வலியா, இயற்கை வலியா? தெரிய வேண்டும்.”

”ப்ளீஸ் விடு” என்ற அவள் கண்களில் கண்ணீர் தெரிந்தது.

”இந்தக் கண்ணீர் சிந்தட்டிக்கா, இல்லை இயற்கையா?”

கத்தி வெளிச்சத்தில் ஒரு செகண்டுக்கு மின்னல் அடித்து அவள் மென்மையான கன்னத்தில் பிரதிபலித்தது.

”வேண்டாம், என்னைக் கொல்லாதே.”

”கொல்லவில்லை, ஒரு சின்ன வெட்டு, ஒரு சொட்டு ரத்தப் பரிசோதனை. உன் ரத்தம் என்ன நிறம்? சிவப்பா அல்லது எங்கள் நோரா கிரகத்து பிரஜைகள் போல மஞ்சளா? அவ்வளவுதான் தெரிய வேண்டும்!”

அவள் அலறினாள். ”வேண்டாம், வேண்டாம். சொல்கிறேன். நான் பூமியைச் சேர்ந்தவள். மனுஷி. என் ரத்தம் நிறம் சிவப்பு. அடிமைக் கப்பலில் வந்தவள்” என்றாள்.

அதற்குள் லேசாகக் காயம்பட்டு அவள் கன்னத்தில் ஒரு ரத்த முத்து புறப்பட்டது, சிவப்பாக!

————————————————————————————————————

இந்தக் கதை சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள்
தொகுப்பில் 45-வது கதையாக இடம் பெற்றுள்ளது.
எழுதிய வருடம் : 1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *