விஜயா சித்தி போன் செய்து, ப்ளஸ் டூ ரிசல்ட்ஸ் வந்தது முதல் கவலையுடன் இருந்த சலபதியும், சுஜாதாவும் அவர்களின் ஒரே மகன் இப்படி வீட்டை விட்டு போய் விட்டதில் ரொம்பவும் குன்றி போய்விட்டார்கள் என்றும், அவன் நலமாக இருக்கிறானோ இல்லையோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொன்னாள்.
பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் மனச்சோர்வில் ஆழ்ந்து விட்டிருந்த பையனுக்கு அப்பொழுதுதான் கௌன்சலிங் செய்து விட்டு வந்திருப்பதாலோ என்னவோ, சலபதியின் மீதும், சுஜாதாவின் மீதும் எல்லையில்லாத கோபம் வந்தது எனக்கு. இது போன்ற பெற்றோர்களின் எண்ணிக்கை கூடக் கூட மன நோயாளிகளின் எண்ணிக்கையும், மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. சிறிய குடும்பங்களாக மாறிவிட்டது, பெரியவர்களின் தலையீடு இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பது, தாம் மட்டுமே புத்திசாலிகள் என்றும், எஞ்சியவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்றும், குழந்தைகளை சிறப்பாக வளர்க்கக் கூடிய மேதாவிகள் தாம் மட்டும்தான் என்றும் தமக்குத் தாமே நினைத்து பெருமைப்பட்டுக் கொள்வது, அந்தக் குழந்தைகளுக்கு எந்த விதமான கஷ்டம் வந்தாலும் பகிர்ந்து கொள்வதற்கு வீட்டில் பாட்டியோ, தாத்தாவோ இருக்கும் வாய்ப்பு இல்லாமல் போவது.. இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மனதில் வருத்தமாக இருந்தது.
தம்மால் சாதிக்க முடியாதவற்றை எல்லாம் தம்முடைய வளர்ப்பில் குழந்தைகள் சாதித்து, சிறந்து விளங்குவார்கள் என்றும், பணமும் புகழும் சம்பாதிப்பார்கள் என்றும், அப்பொழுது உலகம் தங்களை அடையாளம் கண்டுகொண்டு ஆரத்தி எடுக்கும் என்றும் … ஒவ்வொரு தம்பதியும் சீட்டுக்கட்டு மாளிகை போல், கனவு காண்பது எனக்கு புரியாத புதிராக இருந்தது.
எதிர் வீட்டிலேயோ, பக்கத்துத் தெருவிலோ, இல்லையென்றால் உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்திலேயோ போட்டி பரீட்சைகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் யாராவது இருந்தால் அவர்களுடன் ஒப்பிட்டு, “அவர்களை விட உனக்கு என்ன வசதிகள் குறைவாக செய்து விட்டோம்?” என்று அந்த குழந்தைகளின் மீது சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவது, அவர்களை பிரமாதமாக ஊக்குவிக்கிறோம் என்ற பிரமையில் குத்திக்காட்டி பேசுவது. இதெல்லாம் என்ன?
குழந்தைகளால் பெற்றோரின் நிலைமையைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். அவர்களுக்கு அந்த அனுபவம் இல்லை என்பதால். இந்த பெற்றோர்களுக்கு என்ன வந்தது? அவர்களும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள்தானே? தங்களுடைய ஆசைகளின் பாரத்தைத் தாங்க முடியாமல், கட்டுப்பாடுகளின் கடுமைக்கு மிரண்டு போய் அந்த சிறுவர்கள் பின் வாங்க முடியாத முடிவை எடுத்து விட்டால், தலையில் இடி விழுந்தாற்போல் அதிர்ச்சிக்கு ஆளாவது.
போகட்டும், அப்படி அடி வாங்கியவர்களைப் பார்த்தாவது மற்றவர்கள் பாடம் கற்றுக் கொள்வார்களா? ஊஹும்.. தம் குழந்தைகள் வித்தியாசமானவர்கள் என்று நினைத்துக் கொண்டே அதே தவறை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பார்கள். முட்டாள்கள்!
சமீபத்தில் என்னிடம் வந்த இது போன்ற கேசுகள் நினைவுக்கு வந்தன. தலைவலி குறையக்கூடும் என்று பச்சைத் தண்ணீரில் தலைக்குக் குளித்துவிட்டு, கையில் காபி கோப்பையுடன் பால்கனியில் வந்து அமர்ந்து கொண்டேன். கருமை நிறத்தில் மாறிக்கொண்டிருக்கும் வானத்தை, பளபளவென்று ஒவ்வொன்றாய் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டே சூடான காபியை ரசித்து பருகிக் கொண்டிருக்கையில் அம்மாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு.
விஜயா சித்தி சொன்ன விஷயத்தையே திரும்பவும் சொல்லிவிட்டு, “அம்மாளம்! ஒரு தடவை போய் பார்த்து விட்டு வாயேன். காரில் போனால் பத்து நிமிடங்கள்தானே. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார். ஒரே மகன். அவன் மீது உயிரையே வைத்திருந்தார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். அவன் ஏதாவது வேண்டாத காரியத்தை செய்து விடப் போகிறானே என்று பயந்து கொண்டிருக்கிறார்களாம். விஜயா சொன்னாள். ஒரு தடவை நேரில் போய் பேசி விட்டு வாயேன்” என்றாள்.
“நான் போக மாட்டேன். எனக்கு விருப்பம் இல்லை. பெற்றோர்களின் முட்டாள்தனத்திற்கு எத்தனை குழந்தைகள் பலியாகி கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? அவர்களைப் பார்த்தாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா? பத்தாவது வகுப்பு ரிசல்ட்ஸ் வந்ததோ இல்லையோ பிகாஷை அந்த பெஸ்ட் ப்ரெயின்ஸ் கல்லூரியில் சேர்த்து விட்டார்கள் என்று தெரிந்த போது நான் என்ன சொன்னேன் என்று நினைவு இருக்கிறதா? ஒரு மணி நேரம் உட்கார்ந்து தொடர்ந்து படிப்பதற்குள் திண்டாடிப் போகிறவனை கொண்டு போய் ஏசி அறைகள், சிறப்பான வசதிகள் கொண்ட சூப்பர் கல்லூரியில் சேர்த்தால் மட்டும், கல்லூரி நிர்வாகத்தினர்களே அவனை பட்டை தீட்டி, ஐ.ஐ.டி. தேர்வில் ரேங் வரவழைத்துக் கொடுப்பார்கள் என்று எப்படி நினைத்தார்களாம்?” எரிச்சலுடன் சொன்னேன்.
ஹைதராபாத் முழுவதும் உறவினர் கூட்டம்தான். எப்போது பார்த்தாலும் யாராவது ஒருத்தருக்கு ஏதோ ஒரு தேவை வந்து விடும். கேட்டாலும் கேட்காவிட்டாலும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது அம்மாவின் தவிப்பு. அம்மா விரும்பியது போல் வாழ வேண்டும் என்றால் நமக்கு என்று கொஞ்சம் சமயம் கூட எஞ்சி இருக்காது. அதோடு இந்த காலத்தில் கேட்காமல் உதவி செய்யக் கிளம்பி விட்டால் அதை அனாவசிய தலையீடு என்று சொல்லுவார்கள் என்று அம்மாவுக்குத் தெரியாது.
“நீரஜா! எல்லோருடைய பிரச்சினைகளும் ஒன்று போல் இருக்காது. இருந்தாலும் இது வாத விவாதங்களுக்கு சமயம் இல்லை. உனக்கு முடியாது என்றால் அப்பாவுக்கு வேறு ஏற்பாடு செய்துவிட்டு நானே கிளம்பி வருகிறேன். இது போன்ற சமயத்தில் பெரியவர்களின் துணை அவசியம். இரவு பேருந்தில் கிளம்பினால் காலையில் அவர்கள் வீட்டில் இருப்பேன். கடவுளின் கிருபையால் அவன் திரும்பி வந்தால் அப்பொழுது உன் சொற்பொழிவை கேட்டுக் கொள்கிறேன்” என்றாள் நிஷ்டூரமாய்.
“அம்மா! ஆஸ்பத்திரியிலிருந்து இப்பொழுதுதான் வந்தேன். காலை முதல் ஒரே நோயாளிகள்தான். மூளை சூடாகி விட்டது. இப்பொழுதுதான் வீட்டுக்கு வந்து காபி குடித்துக்கொண்டு இருக்கிறேன். நாளை காலையில் போகிறேன். சரிதானே” என்றேன் நயமான குரலில்.
“சரி கண்ணம்மா!” என்றவள், “கொஞ்சம் அவர்களுடன் சமரசமாக..” என்று மேலும் ஏதோ சொல்லப் போனாள்.
“அம்மா! எனக்கு அந்த அளவுக்குக்கூட தெரியாதா? நாளுக்கு பத்து பேருக்கு கௌன்சலிங் செய்து கொண்டிருந்தாலும் சரி உன் பார்வையில் வெறும் அப்பாவிப் பெண் தான்” என்றேன் சிரித்துக்கொண்டே.
“ஏதோ என்னுடைய அஞ்ஞானம். போகட்டும் விடு. காபி மட்டும் குடித்துவிட்டு அப்படியே தூங்கி போய் விடாதே. குளுமையாக கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொள்.” ஒரு தடவைக்கு இரண்டு தடவை சொல்லிவிட்டு வைத்து விட்டாள்.
காலையில் ஒன்பது மணிக்குக் கொடுத்த அப்பாயின்ட்மென்ட்களை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு, காலை நடைப் பயிற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எட்டு மணிக்கே வீட்டை விட்டு கிளம்பி விட்டேன். சலபதியின் வீட்டை அடையும் போது எட்டே முக்கால் ஆகி விட்டது. சரியாய் அரைமணி நேரம் இருந்து விட்டு கிளம்பி விடணும் என்று நினைத்துக்கொண்டே உள்ளே அடியெடுத்து வைத்தேன்.
மூன்றாவது மாடியில் அபார்ட்மெண்ட் கதவு திறந்தே இருந்தது. ஹாலில் யாரும் இருக்கவில்லை. காலிங் பெல் அடிப்பதா வேண்டாமா என்று யோசிக்கும் போதே, அறையிலிருந்து வெளியே வந்தபடி சலபதி தென்பட்டான். காதில் செல் போன்.
“ஆகட்டும் அண்ணா! நாங்கள் நலமாகத்தான் இருக்கிறோம். கவலைப் படாதே. மறுபடியும் போன் பண்ணுகிறேன்” என்று செல்லை அணைத்துவிட்டு, என்னை விசாரித்து சோபாவில் உட்காரும்படி கையைக் காட்டினான்.
“அம்மாவும், விஜயா சித்தியும் போன் செய்தார்கள். இருப்புக் கொள்ளாமல் வந்தேன். ஏதாவது செய்தி தெரிந்ததா?” என்றேன்.
“ரொம்ப தாங்க்ஸ் அக்கா. உன் பிசி ஷெட்யூலுக்கு இடையே எங்களுக்காக வந்தாய். நேற்று இரவு பதினோரு பணிக்கு ரயில்வே ஸ்டேஷனில் தென்பட்டான். அழைத்து வந்தோம்” என்றான்.
எனக்கு சொல்ல முடியாத நிம்மதி ஏற்பட்டது. “அப்பாடா! நல்ல செய்தியைச் சொன்னாய். மனம் சமாதானமாக இருக்கிறது.” சோபாவில் உட்கார்ந்து கொண்டே அவன் கண்களுக்குள் பார்த்தேன். மிகவும் களைத்துப் போனாற்போல் தென்பட்டான். அவன் கண்களில் களைப்புடன் வேறு எதோ உணர்வும் கலந்து இருந்தது.
“சுஜாதா எங்கே?” என்றேன். அவன் பதில் சொல்வதற்குள் செல் போனும், லான்ட் போனும் இரண்டும் ஒரே சமயத்தில் ஒலித்தன. ஒன்றை ஆன் செய்துகொண்டே, மற்றதையும் எடுத்தான். என்னைப் பார்த்து விட்டு, ‘உள்ளே போ’ என்பது போல் ஜாடை காட்டினான்.
அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்து அங்கே யாரும் இருக்காததால், படுக்கை அறை கர்டெனை விலக்கி உள்ளே பார்த்தேன்.
சுஜாதா இன்னும் எழுந்திருக்கவில்லை! உடம்பு சரியாக இல்லையோ என்று சந்தேகம் வந்து நெற்றியின் மீது கையைப் பதித்தேன். சாதாரணமாகத்தான் இருந்தாள். ஆனால் அவள் படுத்திருந்த தோரணை, மெல்லிய குறட்டைச்சத்தம் அசாதாரணமாக பட்டது. ஓசை படுத்தாமல் வெளியே வந்து அடுத்த அறைக்கு போனேன். சலபதி இன்னும் போனில் உரையாடிக் கொண்டிருந்தான், மறுபக்கத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது போல். பையன் எப்போது போனானோ, எங்கே கிடைத்தானோ… திரும்பத்திரும்ப அதே தகவல்கள்!
இரண்டாவது அறையில் கட்டில் மீது சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்து இருந்தான் பிரகாஷ். எப்பொழுது எழுந்து கொண்டானோ தெரியவில்லை. கலைந்த தலைமுடி முன்னெற்றில் தாறுமாறாக படிந்திருந்தது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தவன் அரவம் கேட்டு தலையைத் திருப்பி என் பக்கம் உணர்ச்சியற்று பார்த்தான். போனில் அவன் தந்தை பேசிக் கொண்டிருந்தது அறைக்குள் கேட்டுக் கொண்டிருந்தது.
“ஒன்றரை லட்சம் பீசு கட்டி இருக்கிறேன் பைத்தியம் போல். கூரை ஏறி கோழியைப் பிடிக்க முடியாதவன் சுவர்க்கத்திற்கு தாவ நினைத்தானாம். வீண் சவடால் எதுக்கு? அவனும் என்னைப் போல் குமாஸ்தாவாக போதும் போதாதுமான சம்பளத்தில் இழுபறியான வாழ்க்கையை வாழணும் என்று தலையில் எழுதி இருக்கோ என்னவோ. நானும் அவன் அம்மாவும் ஓடாய் உழைப்பதால் மட்டும் ஜாதகம் மாறி விடுமா என்ன? அந்த விஷயத்தை விட்டு விடு. பெரியம்மா நன்றாக இருக்கிறாளா? குழந்தைகளும் ஜானகியும் நலம்தானே?”
கேட்டுக் கொண்டிருந்த என் மனம் பாரமாகி விட்டது. ‘பின்னே நீ மட்டும் நீ குமாஸ்தாவாகவே இருந்துவிட்டாய்? அவன் சாதிக்க வேண்டும் என்று நீ எதிர்பார்த்ததை, நீ சாதிக்க வேண்டும் என்று உன் தந்தை விரும்பவில்லையா? எப்போதும் முதல் மதிப்பெண்கள் வாங்காத நீ, மகன் மட்டும் போட்டி பரீட்சைகளில் முதல் வரிசையில் இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறாய்?’
சலபதியையும், சுஜாதாவையும் கூண்டில் நிற்கவைத்துக் கேள்வி கேட்கணும் போல் இருந்தது. பெற்றோரின் நிறைவேறாத கோரிக்கைகள்! குழந்தைகளிடம் அவர்களுடைய எதிர்பார்ப்புகள்! அந்த பாரத்தின் கீழே நலிந்து போய்க் கொண்டிருக்கும் மனதளவில் முதிர்ச்சி அடையாத குழந்தைகள். நினைத்துப் பார்க்கும்போதே பயமாக இருந்தது. இவர்களுக்கு எதிர்ப்படும் அனுபவங்கள் இவர்களை ஏதாவது தவறான பாதையில் திசை திருப்பி விடுமோ?
பிரகாஷின் முகத்தைப் பார்த்தேன். அவன் முகம் ஆவேசத்தில் கன்றி சிவந்திருந்தது. அருகில் சென்று அவன் கைமீது கையை வைத்து கட்டில் மீது உட்கார்ந்து கொண்டேன். என் மனம் முழுவதும் அவன் பால் இரக்கத்தால் நிரம்பி வழிந்தது.
“இத்தனை பரீட்சைகள், போட்டிகள் இல்லாத காலத்தில் சுமாரான மதிப்பெண்கள் வாங்கியவர் என்னை மட்டும் தொண்ணூறு பர்சென்ட் வாங்கவில்லை என்றும், காலையில் நான்கு மணிக்கு எழுந்து கொள்ளவில்லை என்றும் வார்த்தைகளாலேயே பொசுக்குவார். ரமேஷுக்கு டர்பிள் ஐ.டி.யில் சீட் வந்தாலும் வந்தது. எனக்கு கேடுகாலம் வந்து விட்டது. அவன் அவன்தான். நான் நான்தான். அவனைப் போல் என்னால் எப்படி இருக்க முடியும்? எப்போதும் ஒப்பீடுதான். அதனால்தான் எனக்கு அவனைக் கண்டால் வெறுப்பு! படிப்பின் மீது துவேஷம்!”
என் பக்கம் பார்க்காமலே தாழ்ந்த குரலில் தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினான்.
அவன் அருகில் நகர்ந்து தலையைத் தடவிக் கொடுத்தபடி, “உன் வேதனை எனக்குப் புரிகிறது கண்ணா. ஆனால் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பெற்றோர்கள் ஒரு வார்த்தைச் சொன்னால்…”
என் வாயிலிருந்த வார்த்தை இன்னும் முடியக்கூடவில்லை.
“இல்லை அத்தை! இது நாங்கள் முன்னேறுவதற்காக இல்லை. அவர்களால் செய்ய முடியாததை நாங்கள் சாதித்துத் தீர வேண்டும் என்று வற்புறுத்துவது.” ஆவேசமாகச் சொன்னான்.
அவன் கையை நயமாக அழுத்திக்கொண்டே, “சில நாட்கள் என்னிடம் வந்து இருக்கலாம் இல்லையா. மாமாவும் ஊரில் இல்லை. நாம் இருவரும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்” என்றேன்.
“கௌன்சிலிங்கா?” என்றான் ஒரு மாதிரியாக சிரித்துக்கொண்டே.
அவனைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே, “எங்கள் தலைமுறையினர் உங்களைப் போன்ற இளைஞர்களிடமிருந்து கௌன்சிலிங் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை வந்து விட்டது கண்ணா! இது உண்மை” என்று கைக் கடியாரத்தை பார்த்துக் கொண்டேன். உடனே கிளம்பினால்தான் சரியாக இருக்கும். அன்புடன் அவன் தலையை வருடிவிட்டு, “திரும்பவும் சந்திப்போம்” என்று வெளியே வந்தேன். தொலைபேசி அழைப்புகளுக்கு இடையே கொஞ்சம் சமயம் கிடைத்தது போலும். சலபதி சமையல் அறையில் காபி கலந்து கொண்டிருந்தான்.
“காபி கலந்து கொண்டிருக்கிறாயா? எனக்கு எதுவும் வேண்டாம். இன்றைக்கு நிறைய அப்பாயின்மென்ட்ஸ் இருக்கு” என்றேன்.
“அப்படியா! அடடா! உன் பிசி ஷெட்யூல் பற்றி தெரிந்தது தானே. சுஜாதாவுக்காக கலந்தேன். அரை கோப்பை குடி” என்று இரண்டு கோப்பைகளில் காபியை ஊற்றினான்.
எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. சாதரணமாக சலபதி சமையல் அறைக்குள் அவ்வளவாக வர மாட்டான். வீட்டு வேலைகளை எல்லாம் சுஜாதாதான் பரபரவென்று முடித்து விடுவாள். இன்று இத்தனை தொலை பேசி அழைப்புகள் வந்துகொண்டிருக்கும்போது, அவள் அப்படிப் படுத்துக்கிடப்பது, சலபதி காபி கலந்தது..
என் யோசனைகளைச் சிதறடித்தபடி…
“அவள் மூன்று நாட்களாக சாப்பிடவே இல்லை. நேற்று இரவு அவன் வந்த பிறகு ஒரு வாய் சாப்பிட்டாள். ஆனால் செரிக்கவில்லை போலும். நெஞ்சு வலிப்பது போல் வேதனையுடன் துடித்தாள். ஏற்கனவே ஊரெல்லாம் சுற்றி வந்ததில் களைத்து விட்டேனோ என்னவோ, பிரகாஷ் பக்கத்தில் படுத்திருந்தவன் காலையில் எழுந்து வந்து பார்த்தால் வாயிலெடுத்து விட்டு வந்து கட்டிலில் படுத்திருக்கிறாள். கொஞ்சம் உறக்கத்தில் ஆழ்ந்ததும் போர்த்திவிட்டு வந்தேன். தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள். மூன்று நாட்களாக நாங்கள் எத்தனை பேரை விசாரித்தோமோ அதுபோல் நான்கு மடங்கு பேர் அழைத்து விசாரித்தார்கள். நியாயம்தானே.” சோர்வுடன் சிரித்தான்.
என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண்ணால் இரக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டே கோப்பையை வாங்கிக் கொண்டேன்.
“இப்பொழுதுதான் எழுந்து பாத்ரூம் பக்கம் போனாள். காபி குடித்தால் கொஞ்சம் தேறிக் கொள்வாள்” என்றான்.
அதற்குள் ஆஸ்பத்திரியிலிருந்து தொலைபேசி அழைப்புகள். சுஜாதாவுக்காக சற்று நேரம் பார்த்து விட்டு, அப்புறமாய் சந்திப்பதாகச் சொல்லி வந்து விட்டேன்.
மாலை முழுவதும் நோயாளிகளுடன் கழிந்து விட்டது. மதிய உணவின் போது சிறுவயது நினைவுகள் சூழ்ந்து கொண்டன. கோடை விடுமுறையில் ராதா சித்தியின் வீட்டுக்கு போனது, குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகள் நினைவுக்கு வந்தன. ஐம்பது வயது நிரம்புவதற்கு முன்பே சித்தப்பா இறந்து போனது! அக்காக்கள் இருவருக்கும் திருமணம் ஆக வேண்டிய நிலைமை! மூவரிலும் சிறியவன் ஆன சலபதி பட்டபடிப்பு முடிந்ததுமே வேலையில் சேர்ந்து விட்டான். ரமா, ராஜேஸ்வரிக்கு நல்ல இடத்திலிருந்து வரன் வந்ததால் திருமணம் முடிந்து நல்லபடியாக வாழ்க்கை அமைந்து விட்டது. சலபதி மட்டும் போதும் போதாதுமான சம்பளத்தில் எஞ்சி நின்றுவிட்டான்.
ஒரு குழந்தை போதுமென்று, அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்று கணவன் மனைவி இருவரும் முடிவு செய்த போது மட்டும் ராதா சித்தி, “அவர் இப்படி நடுவாந்தரமாக எங்களை விட்டுவிட்டு போனதால்தானே என் மகன் இப்படி முடிவு செய்து, குழந்தைக்கு உடன் பிறப்பு இல்லாமல் செய்து விட்டான்” என்று அம்மாவிடம் சொல்லி வருத்தப் பட்டுக்கொண்டாள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ராதா சித்திக்கு உடல்நலம் குன்றி விட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தார்கள். அப்பொழுது அம்மா போய் சித்தியிடம் இரண்டு வாரம் இருந்துவிட்டு வந்தாள். அப்பொழுதுதான் நான் பிரகாஷை கவனித்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அம்மா அங்கே இருந்ததால் ஐந்தாறு முறை அவர்கள் வீட்டுக்கு போனதில், அப்பொழுதுதான் பத்தாம் வகுப்பு முடித்திருந்த அவனுடன் கொஞ்சம் பழக்கம் ஏற்பட்டது.
கொஞ்ச நாட்கள் கழித்து “பெஸ்ட் பிரெயின்” பள்ளியில் அவனை ப்ளஸ் டூ வுக்காக சேர்த்து இருக்கிறார்கள் என்று தெரிந்த போது கொஞ்சம் எரிச்சல் ஏற்பட்டது. அங்கே கல்விக் கட்டணம் மிக அதிகம். பிரகாஷ் புத்திசாலிதான் என்றாலும் உழைக்கும் சுபாவம் கொஞ்சம்கூட இல்லாதவன். அப்படிப்பட்ட பையனை கொண்டு போய் ஐ.ஐ.டி. கோச்சிங் பள்ளியில் நிறைய பணம் கொட்டி சேர்த்து, அவனால் சாதிக்க முடியாத ரேங்குகளுக்காக சித்திரவதை செய்தால் என்ன ஆகுமோ எனக்குத் தெரிந்தது தான். அப்படியும் என் கருத்தை மறைமுகமாக சலபதியிடம் சொன்னேன். வேறு என்ன காரணம் இருந்ததோ தெரியாது. ஆனால் ஒரு முறை கட்டிய பீசை திரும்பித் தர மாட்டார்கள் என்று சொன்னதும் மௌனமாக இருந்துவிட்டேன். சில நாட்கள் கழித்து ராதா சித்தி இறந்து விட்டாள்.
ஒரே ஊரில் இருந்தாலும் வேலை பளு, குழந்தைகளின் படிப்பு என்று அவரவர்களின் வாழ்க்கை என்று இருந்து விட்டோம். அதன் பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கோடையில் என் மகளின் திருமணத்திற்கு சலபதி மட்டும் வந்திருந்தான். பிரகாஷ் இன்ஜினியர் என்ட்ரன்ஸ் தேர்வுகளில் பிசியாக இருக்கிறான் என்றும், சுஜாதா அவனுக்குத் துணையாக இருக்க வேண்டிய கட்டாயம் என்றும் சொன்னான். அதற்குப் பிறகு அவர்களை சந்திப்பது இப்பொழுதுதான்!
காலையில் வேலை மும்மரத்தில் சுஜாதாவிடம் பேசாமலேயே வந்து விட்டேன். இப்பொழுது சீக்கிரமாக வேலைகளை முடித்துக்கொண்டு, சலபதியின் வீட்டுக்குச் சென்று, பிரகாஷ் வருவதாகச் சொன்னால் என்னுடன் அழைத்து வரலாம் என்று நினைத்தேன். அவன் வராவிட்டாலும் காலையில் போனது போல் கடமைக்கு விசாரிக்காமல் கொஞ்சம் சாவகாசமாக உட்கார்ந்து அன்பாக நாலு வார்த்தைகள் பேச வேண்டும் என்று தோன்றியது.
அம்மா போன் செய்த போது கொஞ்சம் சலித்துக் கொண்டாலும். அவர்கள் வீட்டிற்குப் போன பிறகு அந்த சிறிது நேரத்திலேயே சிறுவயது நெருக்கம் துளிர்த்து விட்டது போலிருந்தது.
அவர்களாக எதுவும் கேட்கவில்லை என்றாலும் அந்த வீட்டில் படர்ந்து இருந்த விரக்தியான சூழ்நிலைக்குக் காரணம் தெரிந்து கொண்டு என்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். பிரகாஷ்க்கு உறுதுணையாய் நின்று அவன் மனதில் இருந்த வேதனையை சலபதிக்கும், சுஜாதாவுக்கும் புரியும் விதமாக மென்மையாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
“ஒரு தேவை ஏற்பட்ட போது உதவி செய்யாத உறவுகள் இருந்து என்ன பிரயோஜனம்?” என்று அம்மா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. கல்யாணம், கார்த்திகை போன்ற விழாக்களில் கலந்து கொண்டு விருந்துச் சாப்பாடு சாப்பிட்டு, ஏதோ ஒரு பரிசை கொடுத்து விட்டு வருவதற்கு உறவினர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லையே? இன்று மாலையில் முடிந்தால் நான்கு பேரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
நான் போய்ச் சேரும்போது சலபதி ஏற்கனவே வீட்டுக்கு வந்து விட்டிருந்தான். சுஜாதா விடுமுறையில் இருந்தாள். மூவரையும் ஹாலில் ஒன்றாக கூட்டம் சேர்க்கும் முயற்சி பலித்தது.
“பிரகாஷ்! I am sure you have your own reasons. அவற்றை நாங்களும் தெரிந்து கொண்டால் நல்லது இல்லையா. உன் மனதில் உள்ளது உள்ளபடி சொன்னால் வீட்டில் இதைவிட நல்ல சூழ்நிலை உருவாகும். அது எல்லோருக்கும் நல்லது கண்ணா.” முதலில் பிரகாஷைக் கேட்டேன்.
அவன் வாயைத் திறக்கவில்லை. எவ்வளவு முயற்சி செய்தாலும், “உனக்கு தெரியாது அத்தை!” “இது போன்ற பேச்சு வார்த்தைகள் வேஸ்ட்” என்று பேச்சை மாற்ற முயன்றான்.
கொஞ்ச நேரம் கழித்து சலபதி சொன்னான். “விடு அக்கா! எது எப்படி நடந்தது என்று எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம். இனிமேல் என்ன செய்வதாக இருக்கிறானோ அதை மட்டும் சொன்னால் போதும். பிளஸ் டூவில் இவனுக்கு வந்த மதிப்பெண்களுக்கும், EMCET, AIEEEயில் வந்த ரேங்குகளுக்கும் சொல்லிக் கொள்ளும்படியான கல்லூரிகளில் இடம் கிடைக்காது. மேனேஜ்மெண்ட் கோடாவில் சீட் வாங்குவதற்கான ஐவேஜு எனக்கு இல்லை. மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதையும் யோசிக்கணும் இல்லையா?”
திரும்பவும் பிரகாஷ் பக்கம் பார்த்தேன். அவன் முகத்தில் பரவியிருந்த எதிர்ப்பு ஜுவாலைகள் என்ன செய்தால் தணியும்? எந்த சூழ்நிலை அவனை வீட்டை விட்டு போகும்படியாகச் செய்தது? அதே சூழ்நிலை இன்னுமும் இருந்தால் அதை எப்படி சரி செய்வது? இதையெல்லாம் சீர்படுத்த வேண்டும் என்றால் அவன் ஓடிப் போகும் முன் என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். அங்கே ஏற்பட்ட சிடுக்கை அவிழ்க்க வேண்டும்.
பிரகாஷ் வாயிலிருந்து வார்த்தைகளை வரவழைக்க மிகவும் பிரயாசப் பட வேண்டியிருந்தது. ஒரு முறை தொடங்கி விட்டால் ஒன்றையடுத்து ஒன்றாக சொல்லிக்கொண்டே போனான். அவன் அத்தை மகன் ரமேஷுடன், வகுப்புத்தோழன் சந்திர சேகருடன், அடுத்த வீட்டு ஸ்ரீதருடன், சுகுணாவுடன் ஒப்பீடு செய்து கொண்டே அவன் தாய் தந்தை என்ன சொன்னார்களோ, அவன் படிக்கும் கல்லூரியில் சேர்ப்பதற்கு எத்தனை லட்சங்கள் கொட்டினார்கள் என்று அடிக்கடி சொல்லி வந்தார்களோ சொன்னான். அந்த டென்ஷனில் அவனால் தேர்வுகளை சரியாக எழுத முடியாமல் போனதோடு, பாஸ் ஆவதே பெரிய விஷயம் என்ற நிலைக்கு தான் வந்து விட்டதாகவும் சொன்னான். சொல்லும் போது அவன் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது. மதிப்பெண்கள் வந்த பிறகு தாய் எப்படி எல்லாம் ஏசிக் காண்பித்தாளோ, எவ்வளவு இழிவாக பார்த்தாளோ அவன் சொல்லும் போது என் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போலிருந்தது.
“வாயைத் திறந்தால் எவ்வளவு பணம் கொட்டி அழுதோம் தெரியுமா? எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எனக்காக இனி கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லு.” சட்டையால் கண்ணையும், மூக்கையும் துடைத்துக்கொண்டே ரோஷத்துடன் சொன்னான்.
யோசித்துக் கொண்டே சுஜாதாவின் பக்கம் பார்த்தேன். உணர்ச்சியற்று இருந்த அந்த முகத்தைப் பார்க்கும் போது வியப்பாக இருந்தது.
“சலபதி! நீ என்ன சொல்கிறாய்?” மெதுவாக கேட்டேன்.
“என்ன சொல்ல முடியும் அக்கா? தவறு செய்து விட்டோம். உண்மைதான். மேற்கொண்டு அவன் என்ன செய்வதாக இருக்கிறானோ அது போலவே செய்யட்டும்.” பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவது போல், தலைவர் பதவிக்கு ராஜினாமா கொடுப்பவன் போல் சொன்னான்.
திரும்பவும் சுஜாதாவின் பக்கம் திரும்பினேன். “சுஜாதா! நீ ஒரு விஷயம் சொல்லணும். இப்படி உங்கள் விஷயத்தில் அனாவசியமாக தலையிடுவதாக நினைக்கவில்லையே? காலையில் வந்து விட்டு போன பிறகு கொஞ்சம் சாவகாசமாக பேசுவோம் என்றுதான் திரும்பவும் வந்தேன்” என்றேன்.
இந்த கூட்டம் அந்த மூவருக்கும் விருப்பம் இல்லை என்று வெளிப்படையாக தெரிந்துகொண்டுதான் இருந்தது. விருப்பம் இல்லை என்பதைவிட இதனால் பிரயோஜனம் இருக்காது என்று நினைக்கிறார்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
புடவையின் விளிம்பை விரகளால் நீவி விட்டுக்கொண்டே, “இல்லை அக்கா! அப்படிச் சொல்லாதீங்க. இந்தக் காலத்தில் அடுத்தவரின் விஷயங்கள் யாருக்கு வேண்டும்? எத்தனையோ பேர் உங்கள் அறிவுரைகாக எதிர்பார்த்து காத்திருப்பார்கள். எங்கள் மீது இருக்கும் பாசத்தினால் எங்களைத் தேடி வீட்டுக்கு வந்திருக்கீங்க” என்றாள்.
“அடடா! அவ்வளவு பார்மாலிட்டி கடைபிடிக்க வேண்டியதில்லை சுஜாதா. குடும்ப நபர்கள் மூவரும் ஒரு இடத்தில் அமர்ந்து மனதிற்கு கஷ்டமாக இருந்த விஷயங்களை பேசி முடிவு செய்யலாமே என்றுதான். அவன் பேசியதை எல்லாம் கேட்டாய் இல்லையா. இப்போ உன் மனதில் என்ன இருக்கிறதோ அதைச் சொல்லு.” கூடுமான வரையில் மென்மையாகச் சொன்னேன்.
தலையை உயர்த்தி ஏதோ சொல்ல வந்த சுஜாதா, வெறுப்புடன் இருந்த மகனின் முகத்தைப் பார்த்து நிறுத்திக்கொண்டாள். “நான் சொல்லுவதற்கு எதுவும் இல்லை அக்கா. அவன் சொன்னது எல்லாம் உண்மைதான்” என்று மௌனமாகிவிட்டாள்.
“அப்படி சொன்னால் எப்படி சுஜாதா! கொஞ்சம் அனுகூலமாக யோசி. அவன் வயதுதான் எவ்வளவு? ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு அளவுகோல் இருக்கும் இல்லையா? அதையும் மிஞ்சி சாதிக்க வேண்டும் என்றால் சாத்தியம்தானா? அவன் பெரிய இன்ஜினியர் ஆக வேண்டும் என்றும், ஐ.ஐ.டி.யிலோ பிட்ஸ் லேயோ படிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்கலாம். அதை சாதிக்க வேண்டும் என்ற தவிப்பு அவனுக்கு இல்லை என்றாலும், அதற்கான புத்திசாலித்தனம், நினைவாற்றல் குறைந்தாலும் அவனுக்கு அது சாத்தியம் ஆகாது. நம்மால் சாதிக்க முடியாதவற்றை எல்லாம், நம் மனம் விரும்புவதால் மட்டுமே அவன் தலையில் சுமத்துவது சரியில்லையே. நீயும், சலபதியும் ஒன்று சேர்ந்து மனதளவில் அவனை தனியனாக்கி விட்டீர்களோ என்னவோ. யோசித்துப் பாருங்க. இந்த வீடும், இந்த குடும்பமும் தன்னுடையது என்ற எண்ணம் இல்லாமல் போவதற்குக் காரணம் என்ன? இப்போது பார்…”
என் வார்த்தைகள் முடியும் முன்பே, “ஆமாம் அக்கா! சிறு குழந்தைகள், வயோதிகர்கள் எல்லோரும் பலவீனமானவர்கள் என்றும், நடு வயதினர்கள் எல்லோரும் பலசாலிகள், கொடூரமானவர்கள் என்று இந்த உலகமே நினைக்கிறது.” சிரித்தாள் சுஜாதா.
அந்த வார்த்தைகளுக்கு திகைத்துப் போனாலும் தேறிக்கொண்டு., “என்ன பேச்சு இது சுஜாதா? அப்படி யார் சொன்னார்கள்? மற்றவர்களுடன் அடிக்கடி ஒப்பீடு செய்தால் கஷ்டமாக இருக்கிறது என்கிறான். அவனுடைய சுயமரியாதை காயப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நம்முடையது இல்லை என்கிறாயா?” என்றேன்.
“ஆமாம் அக்கா! அவனுடைய சுயமரியாதைக்கு இழுக்கு வரும் விதமாக நடந்துகொண்டு ரொம்ப தவறு செய்து விட்டோம். அவன் வகுப்பில் அவனைப் போலவே வளர்ந்த பசங்கள் சிரத்தையாக, ஒழுங்கு முறையுடன் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்தால், அவர்களுடன் இவனை ஒப்பீடு செய்தது தவறுதான். மதிப்பெண்கள் மிகவும் குறைந்து போனால் ஏன் என்று கேட்டதும் தவறுதான். வகுப்பில் பாடங்களை சரியாகச் சொல்லித் தருவதில்லை என்று சொன்னபோது பின்னே மீதி மாணவர்களால் மட்டும் எப்படி படிக்க முடிகிறது என்று கேட்டதும் தவறுதான். ஆசிரியர்களை அவன் இவன் என்றும் இடியட் ஸ்டுபிட் என்று திட்டினால் அப்படிச் சொல்லக் கூடாது என்று தடுத்ததும் தவறுதான். சிரத்தையாக படிக்க வேண்டிய மாணவப் பருவத்தில் மணிக்கணக்காய் டி.வி. பார்க்க வேண்டாம் என்றும், வேலையற்ற வீடியோ கேம்ஸ் விளையாட வேண்டாம் என்று சொல்வதும் தவறுதான்.” சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்த சுஜாதாவின் வார்த்தைகளில் மறைந்திருந்த ஆவேசம், அதிரும் இதழ்கள், சிவந்து விட்ட நுனி மூக்கு, லேசாய் கண்ணீர் தளும்பும் பெரிய விழிகள், கஞ்சி போடாததால் உடலுடன் ஒட்டிக்கொண்டு விட்ட நூல் சேலை.
“சுஜாதா! நான் அப்படி சொன்னேனா? இது சரி இது தவறு என்று நான் எதையும் வரையறுத்துச சொல்லவில்லை. அப்படிச் சொல்வதற்கு நான் யார்? அவன் வேறு யாரோ வேற்று மனிதன் இல்லை. உங்கள் ஒரே மகன். அவனிடம் உயிரையே வைத்திருக்கும் உங்கள் இருவருக்கும், இன்று இது போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருப்பது எவ்வளவு வேதனையைத் தருகிறதோ என்னால் ஊகிக்க முடியும். அதனால்தான் சொல்கிறேன். நிலைமை எப்படி இருந்தாலும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே கம்யூனிகேஷன் அறுந்து போகக் கூடாது. அதனால்தான் கூடி பேசுவோம் என்கிறேன். இரண்டு கட்சிகளாக பிரிந்து போகாமல், அவரவர்கள் எதிராளியின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்கிறேன்.” நயமான குரலில் சொல்லிக்கொண்டே சலபதியின் பக்கம் பார்த்தேன். சுஜாதாவுக்கு சற்று தொலைவில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து பால்கனி வழியாக வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். இதழ்களில் வெறுமையான முறுவல்.
“எங்களுடைய உயிரை அவன் மீது வைத்திருக்கிறோம். ஆனால் அவனுக்கு எங்களிடம் எந்த மாதிரியான எண்ணம் இருக்கிறதோ எங்களுக்குத் தெரியாது அக்கா! என்றைக்காக இருந்தாலும் மரத்திலிருந்து தான் காய்க்கு ஊட்டம் கிடைக்குமே தவிர காய்லிருந்து மரத்திற்குக் கிடைக்காது இல்லையா. நீங்க இவ்வளவு பிரியத்துடன் உதவி செய்ய முன் வந்திருக்கீங்க என்பதால் சம்மதிக்கிறேன். கட்டாயம் பேச்சு வார்த்தை நடத்துவோம். பத்தாம் வகுப்பு முடிந்த பிறகு பெஸ்ட் பிரெயின்ஸ் பள்ளியில் எதற்காக சேர்ந்தானோ, யாருடைய விருப்பத்தின் பெயரில் சேர்ந்தானோ அவனையே கேளுங்கள்” என்றாள் என்னை நேராக பார்த்துக்கொண்டே.
பிரகாஷ் பக்கம் கேள்விக் குறியுடன் பார்த்தேன். அவன் பதில் சொல்லாமல் சுவற்றுப் பக்கம் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தான்.
“போட்டி பரீட்சைகள் வேண்டாம் என்று நினைக்கிறவன் ஐ.ஐ.டி. கோச்சிங் கொடுக்கும் கல்லூரியில் சேர்க்கச் சொல்லி ஏன் பிடிவாதம் பிடித்தான் என்று கேளுங்கள். ஒன்றரை லட்சம் பீஸ்! புத்தகங்களுக்கும், வேனுக்கும் ஐம்பதாயிரம்! எங்களைப் போன்றவர்களால் தாங்கக் கூடிய படிப்புதானா அது? ‘நம் வீட்டுக்கு அருகிலேயே கல்லூரி ரிசல்ட்ஸ் நன்றாக இருக்கிறதே கண்ணா” என்று சொன்னால் காதில் வாங்கிக் கொண்டால்தானே? அவன் பள்ளி நண்பர்கள் சுரேஷ், சந்தீப், பாப்ஜி, வெங்கி, டிங்கு எல்லோரும் அங்கேதான் சேருகிறார்களாம். அவனும் அங்கேதான் சேர வேண்டுமாம். அவர்களுக்கு அளவுக்கு மிஞ்சிய பணவசதி இருக்கிறது. நம்மிடம் என்ன இருக்கிறது? சின்ன சம்பளத்தில் இந்த பிளாட் கடனை அடைத்துக்கொண்டு எப்படியோ சமாளித்து வருகிறோம். எங்களைப் போன்றவர்களின் குழந்தைகள் எவ்வளவு பொறுப்பாக இருக்க வேண்டும்?
ஐ.ஐ.டி. யில் அல்லது பிட்ஸில் படிக்க வேண்டுமென்ற ஆழமான விருப்பம் இருந்து, அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைப்பதற்கு அவன் தயாராக இருந்திருந்தால் இவ்வளவு பீசு கட்டியதற்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் வருத்தப் பட்டிருக்க மாட்டோம். அசல் அந்த விருப்பமே இல்லாதவனுக்கு இவ்வளவு ஹைபை கல்லூரி எதற்கு? வெயில் தெரியாமல் இருப்பதற்கு ஏசி அறைகள், காலை ஆறு மணி முதல் இரவு பதினோரு மணி வரையிலும் திறந்திருக்கும் சூப்பர் லைப்ரரி, சந்தேகம் வந்தால் உடனுக்குடனே தீர்த்து வைக்கும் ஆசிரியர்கள் என்று சொன்னதையே சொல்லி, இரண்டு நாட்கள் அடம் பிடித்து, பட்டினி கிடந்து எங்களை சம்மதிக்க வைத்து இந்த கல்லூரியில் சேர்ந்தவன் தன்னுடைய லட்சியத்தை அடைவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டுமா இல்லையா? நான் பள்ளியிலிருந்து வருவதற்கு நாலரை மணி ஆகி விடும். அவனுடைய வகுப்புகள் ஒரு மணிக்கே முடிந்து விடும். கல்லூரி நூலகத்திலேயோ, ஸ்டடி ஏரியாவிலேயோ அமர்ந்து வீட்டுப் பாடங்களை முடித்திருக்கலாம். சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருக்கலாம். அந்த வசதிகளுக்காகதானே அவ்வளவு பணத்தைக் கட்டியது. எதுவுமே செய்யவில்லை. கல்லூரி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு வந்து என்ன செய்வானோ அவனுக்குத்தான் வெளிச்சம். நான் காலையில் நான்கு மணிக்கு எழுந்துகொண்டு வீட்டு வேலைகளை, சமையலை முடித்து விட்டு அவசர அவசரமாக தயாராகி, அவனுக்கு டப்பா கட்டிக் கொடுத்து, எட்டு மணிக்கு பள்ளி பஸ்ஸில் ஏறுவேன். மதிய உணவு நேரத்தில் அவனுக்கு விருப்பம் இருந்தால் சாப்பிடுவது, இல்லாவிட்டால் நண்பர்களுடன் பக்கத்தில் இருக்கும் புட் ஜாயிண்டில் பொழுது போக்குவது. என்னடா இது என்று கேட்டால் உச் கொட்டுவான். ‘என்னம்மா மூளைக் கொஞ்சம் சூடாகிப் போனால் காண்டீன் பக்கம் போவது கூட தவறுதானா?’ என்று சலித்துக் கொள்வான்.” மந்திர ஸ்தாயில் எல்லாவற்றுக்கும் பழக்கப்பட்டு விட்டவள் போல் சொல்லிக் கொண்டே போனாள் சுஜாதா.
அதுவரையில் அசையாமல் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த பிரகாஷ் சட்டென்று எழுந்து போகப் போனான். அவன் கையைப் பிடித்துத் தடுத்துவிட்டு, “இருடா கண்ணா! நம் பக்கத்தை எடுத்துச் சொல்லும்போது அம்மா, அப்பா பொறுமையாக கேட்டுக்கொண்டார்கள் இல்லையா? அவர்கள் சொல்வதையும் நாம் கேட்டுக் கொள்ளணும்” என்றேன்.
ஒரு நிமிஷம் கழித்து விரக்தி நிரம்பிய புன்னகையை உதிர்த்துவிட்டு, திரும்பவும் மெதுவாகச் சொல்லத் தொடங்கினாள் சுஜாதா.
“அந்த கல்லூரியில் முக்கால்வாசி குழந்தைகள் பணத்திற்குத் குறைவில்லாத வீட்டிலிருந்து வந்தவர்கள்தான். மீதி இருக்கும் சிலர் புத்திசாலித்தனம் மட்டுமே இல்லாமல் இரவு பகலும் உழைத்து, எதிர்காலத்திற்கு நல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இருப்பவர்கள். நாம் இந்த இரண்டு பிரிவுகளிலும் சேராதவர்கள். இந்த விஷயத்தை எவ்வளவு முறை எடுத்துச் சொன்னாலும் உணவைத் துறந்துவிட்டு, பிடிவாதம் பிடித்து, அவனிடம் எங்களுக்கு இருக்கும் அன்பை எங்களை பிளாக்மெயில் செய்வதற்கு ஆயுதமாக பயன்படுத்தி, தான் விரும்பிய கல்லூரியில் சேர்ந்துவிட்டான். படிப்பைப் பற்றி எத்தனை உறுதிமொழிகள் கொடுத்தானோ கணக்கே இல்லை. கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற மனத் தெளிவு அந்த வார்த்தையைக் கொடுக்கும் போது கூட இல்லாவிட்டால் எப்படி?
அவனுடைய பாடங்கள் என்னைப் போன்ற பிரைமரி டீச்சர் லெவலுக்குப் புரியாது. பெற்றோர் கூட்டத்திற்கு போகும் போதெல்லாம் நிறைவு செய்யப்படாத வர்க் ஷீட்ஸ், அரைகுறை தேர்வு பேப்பர்களைக் காண்பித்து ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் நாங்கள் திக்பிரமை அடைந்து விட்டோம் என்றால் மிகையில்லை. என்னடா இது என்று கேட்டால், தன்னுடைய சி.பி.எஸ்.இ. சிலபஸ் க்கும் இவர்களுடைய இன்டர் மீடியட் சிலபஸ்க்கும் ரொம்ப மாறுபாடு இருக்கிறது என்றும், மெதுவாக பிக்கப் செய்து விடுவேன் என்றும் வாக்குக் கொடுத்தான். எங்களுக்கும் அனுபவம் இல்லையே இது போன்றவற்றில். அவன் சொன்னதை எல்லாம் நம்பி வந்தோம். என்றும் இல்லாத விதமாக ஸ்பெஷல் வகுப்புகள் என்றும், கம்பைன்ட் ஸ்டடீஸ் என்றும் சொல்லி சில சமயம் சினிமாக்கும், ஊர் சுற்றவும் போயிருக்கிறான். எவ்வளவு பாசத்துடன் வளர்த்தோம்? அவன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்? எங்களிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன?”
மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தாலும் கூர்மையாக, வேதனை நிரம்பி வழிந்த அந்த வார்த்தைகளை கண்கள் அகலமாய் விரிய கேட்டுக் கொண்டிருந்தேன்.
பிரகாஷ் நாற்காலியில் சங்கடத்துடன், பொறுமையின்றி அமர்ந்து இருந்தான். சற்று நேர மௌனத்தற்குப் பிறகு….
“குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவது, அவர்கள் நன்றாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். என் சிறு வயதில் சொல்லுவார்கள், “ஸ்பர்தயா வர்ஜதே வித்யா” என்று. யாரிடம் நல்ல விஷயம் தென்பட்டாலும் கற்றுக் கொள்ளலாம். ஊக்கம் பெறலாம். ஆனால் இப்பொழுது கல்வியின் பெயரில் சித்திரவதை செய்வதற்கும், மென்மையாக, குறிப்பாக உணர்த்துவது போல் சொல்லுவதற்கும் இடையே வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறார்கள் குழந்தைகள். மாணவ பருவத்தில் ஒழுக்கம் எவ்வளவு முக்கியமோ, குரங்கு போல் குதியாட்டம் போடும் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது எவ்வளவு அவசியமோ தெரிந்திருந்தாலும், அவர்களுடைய விருப்பம் போலவே படிக்கச் சொல்லியும், அவர்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுக்கச் சொல்லியும் அறிவுரை வழங்குபவர்கள், தம்முடைய எக்ஸ்பெரிமென்ட்களை மற்றவர் குழந்தைகள் மீது செய்பவர்கள் பெருகி விட்டார்கள். குழந்தைகள் எல்லை மீறினால் அதட்டும் அதிகாரம் பெற்றோருக்கு இல்லாமல் போய் விட்ட நிலை. இன்னும் கொஞ்சம் காலம் போனால் நம் நாட்டிலும் பெற்றோர்கள் கோபித்துக் கொண்டார்கள் என்று குழந்தைகள் புகார் செய்தால், பெற்றோர்களை பிடித்துக்கொண்டு ஜெயிலில் போட்டு விடுவார்களோ என்னவோ. அந்த சட்டங்கள் மூலமாக அமெரிக்காவில் எத்தனை பேர் பயன் அடைந்தார்களோ எனக்கு தெரியாது.
என் அக்காவின் மகன் வீட்டில் தாய்க்கு எல்லா விதத்திலேயும் ஒத்தாசையாக இருந்துகொண்டு படிப்பிலும் சிறந்து விளங்குகிறான். பின்னே எங்கள் வீட்டில்? எழுந்தது முதல் படுத்துக்கொள்ளும் வரையில் தொடரும் வேலைகளுடன் திண்டாடிக் கொண்டிருந்தாலும், “ஐயோ அம்மா களைத்துப் போகிறாளே?’ என்ற எண்ணம் இல்லை அவனுக்கு. ஏதாவது சிறிய வேலை சொல்ல முயன்றால், கல்லூரியில் தான் எவ்வளவு களைத்துப் போய் விட்டானோ, இன்னும் எவ்வளவு வேலை பாக்கி இருக்கிறதோ பட்டியல் போடுவான்.
“நாங்கள் யாருடனும் அவனை ஒப்பிடக் கூடாது. ஆனால் அவன் மட்டும் சந்தீப் ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கிக் கொண்டான் என்றும், பப்லூ தன் பிறந்தநாளை பிஜ்ஜா ஹட்டில் கொண்டாடினான் என்றும், சுதீர் தினமும் பெஞ்சி காரில்தான் வருவான் என்றும் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.”
சுஜாதா ஒரு நிமிஷம் நிறுத்தியதும், சலபதி சொன்னான். “எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இது நீண்டுகொண்டே இருக்கும் அக்கா. ஒருநாள் இரண்டு நாள் கதை இலையே. இரண்டு வருடங்களின் Action, Reaction, inaction story. இன்று இத்துடன் நிறுத்திக் கொள்வோம். கொஞ்சம் காபி குடித்துவிட்டு வேறு பேச்சு பேசுவோம்” என்று எழுந்துகொண்டான்.
எனக்கு சலிப்பு வரக்கூடும் என்ற பயம், இத்தனை நாட்களாக மகன் தெரிந்துகொள்ள முயற்சி செய்யாத தம் வேதனையை, இன்றைக்காவது அவனுக்கு புரியும் விதமாக சொல்ல வேண்டும் என்ற தவிப்பு சலபதியின் வெளிப்படையாக தெரிந்தது.
சலபதி சமையல் அறையின் பக்கம் போகும்போது சுஜாதா அவன் பக்கம் பார்த்துக்கொண்டே, “உங்கள் தம்பின் பக்கம் ஒருமுறை பாருங்கள் அக்கா! முடியெல்லாம் கொட்டிப் போய் வழுக்கைதத் தலையாகி விட்டது. தூக்கம் போதாமல் கண்களைச் சுற்றிலும் கருவளையங்கள். ஆள் எவ்வளவு தளர்ந்து விட்டாரோ பார்த்தீங்களா? ஆபீசில் ஏகப்பட்ட டென்ஷன். இந்த ஆட்குறைப்பு புண்ணியத்தில் நிலைக்குமோ நிலைக்காதோ எனது தெரியாத உத்தியோகங்கள். பெருகிவிட்ட செலவுகளை சமாளிப்பதற்காக மாலை நேரத்தில் பார்ட் டைம் வேலையில் சேர்ந்து இருக்கிறார். வீட்டுக்கு வந்து விட்டுப் போவதற்கு நேரம் போதாமல், அங்கேயே ஏதோ ஹோட்டலில் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு, இரவு பத்து மணிவரையில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வருவார். தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் எனக்கு எவ்வளவு சம்பளம் வருமோ உங்களுக்கு தெரியாதது இல்லை. அவனுக்கு இப்பொழுது பதினெட்டு வயது. வாக்கு அளிக்கும் உரிமை வந்து விட்டது. ஆள வேண்டியவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய திறமைப் படைத்தவன். உன்னைப் போன்ற மேதாவிகளின் கண்ணோட்டத்தில் ஆதரவற்றவன். பெற்றோரின் கொடுமைக்கு நலிந்து போகும் பாலகன். உன் வரைக்கு எதற்கு? அவன் பார்வையிலும் அப்படித்தான்.”
அந்த வார்த்தையைக் கேட்டுவிட்டு சலபதி பதற்றத்துடன் திரும்பி வந்தான். “சுஜா! என்ன இது? என்ன பேச்சு பேசுகிறாய்?” என்றான்.
“நீ இரு சலபதி! அவளைச் சொல்லவிடு” என்று தடுத்தேன்.
“ஐம்பது வயது நிரம்பிய அப்பாவும், நாற்பத்தேழு வயது நிரம்பிய அம்மாவும் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் செய்து தர வேண்டும் என்று விரும்புகிறவனுக்கு, அந்த குடும்பத்திற்கு தன்னுடைய பங்களிப்பு என்ன என்று யோசிக்க வேண்டிய அவசியம் இல்லையா? பொருளாதார ரீதியில் கேட்கவில்லை. பத்து மணிக்கு வீடு திரும்பும் தந்தையின் மனம் குளிர்ந்து போகும் விதமாக ஒரு அன்பான வார்த்தை! எவ்வளவுதான் படிப்பில் மூழ்கி இருந்தாலும் சின்ன மாறுதலுக்காக குடிக்க தண்ணீர் கொண்டு வந்து தருவது, கையில் இருக்கும் பையை வாங்கிக் கொள்வது.. எதுவும் இல்லை. ஏதானும் சொல்ல வந்தால் கேட்பதற்கு பொறுமை இல்லை. அமெரிக்காவில் இருப்பது போல் சுதந்திரம் வேண்டும். அவர்களை போல் பதினாறு வயதிலேயே சொந்த கால்களில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் இருக்காது. அவர்களுடைய டிக்னிடி ஆப் லேபர் நமக்கு எப்படி பிடிக்கும்? மற்ற குழந்தைகளிடம் எங்களுக்கு ஏதாவது நல்ல விஷயம் தென்பட்டால் அதைச் சொல்லக் கூடாது. அவனுக்கு வேண்டாத அர்த்தங்கள் தோன்றும். அவன் மட்டும் தன்னுடைய நண்பர்களின் பெற்றோர்களுடன் எங்களை ஒப்பிட்டு நாங்கள் எவ்வளவு உதவாக்கரை தாய்தந்தையராக இருக்கிறோமோ வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் எங்களுக்குப் புரியவைக்கலாம். பப்லூவின் அம்மா கார் டிரைவ் செய்துகொண்டு வந்து அவனை பிக்கப் செய்து கொள்வாள்! பிரியங்காவின் அம்மா ஒரு பிசினெஸ் எக்சிகியூட்டிவ். ரொம்ப மாடர்ன் ஆக ஸ்டைலிஷ் ஆக இருப்பாள். ஷாண்டியின் அப்பா வெளிநாட்டிலிருந்து நல்ல நல்ல பரிசுகள் கொண்டு தருவார்.
ஒரு முறை கல்லூரியில் பெற்றோர்களின் கூட்டத்திற்கு போயிருந்த போது, எங்களுக்கு பக்கத்தில் உட்காருவதற்குக் கூட அவனுக்கு தலை குனிவாக இருந்திருக்கிறது. எங்களை அழைக்கும் வரையில் அவன் வராண்டாவிலேயே நின்றிருந்தான். விஷயம் என்னவென்று கேட்டால், “நீ இன்னும் கொஞ்சம் ரிச் ஆக டிரெஸ் செய்து கொண்டு வந்திருக்கலாம் இல்லையா. இப்படி பத்தாம்பசலியாக ஏன் இருக்கிறாய்?’ என்று சலித்துக் கொண்டான். நான் திகைத்துப் போய் விட்டேன்.”
சுஜாதாவின் வார்த்தைகளின் வெள்ளத்தில் அடித்துச் சென்றுக் கொண்டிருந்த நான் முதல் முறையாக அவ்விருவரையும் கூர்ந்து கவனித்தேன். உண்மைதான்! இரண்டு வருடங்களில் அவர்களிடம் எவ்வளவு மாறுதல் வந்து இட்டது! பத்து வயது கூடி விட்டாற்போல் இருந்தார்கள். கண்களில் ஒரு விதமான விரக்தி!.
“என் சின்ன வயதில் அப்பா, அம்மா, பாட்டி எல்லோரும் சொல்லித் தருவார்கள். அடுத்த வீட்டுப் பெண்ணைப் பார்! எவ்வளவு சமர்த்து! எதிர் வீட்டுப் பெண்ணைப் பார் எவ்வளவு கெட்டிக்காரியாக இருக்கிறாள்! அவனைப் பார். எவ்வளவு சிக்கனமாக இருக்கிறான். இவனுக்கு எவ்வளவு உலக ஞானம்! பண்பு, பொறுமை, பேச்சுத் திறன், ஒன்று இல்லை.. யாரிடம் எந்த நல்ல விஷயம் தென்பட்டாலும் சொல்லிக் கொடுக்கும் போது, கேட்டுக் கேட்டு, வாழ்க்கைக்கு வேண்டியவற்றை எல்லாம் கற்றுக்கொண்டு வளர்ந்து வந்தோம்.
இந்த காலத்தில் குழந்தைகள் முன்னிலையில் யாரையும் பாராட்டக் கூடாது. யாருடனும் ஒப்பிடக் கூடாது. நீ தான் உசத்தி, உன்னைப் போல் உண்டா என்று அவர்களையே புகழ்ந்து, சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பாராட்டு மழையைப் பொழிந்து கொண்டிருக்கணும். அவர்கள்தான் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்கள் என்று முடிவு செய்துவிட்டால், பின்னே அவர்கள் யாரை பார்த்து கற்றுக் கொள்வார்கள்? தப்பித் தவறி, சலிப்படைந்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டோம் என்றால் வீட்டை விட்டு ஓடிப் போய் விடுவார்கள். இன்னும் ஏதாவது கூட செய்யக் கூடும்.” தலையை ஆட்டிக்கொண்டே, “ஆமாம். இன்னும் ஏதாவது கூட செய்யக் கூடும். அப்பொழுது மகனையும் இழந்து, சமுதாயத்தின் இரக்கத்தையும் இழந்து, நடைபிணமாய் வாழ்க்கையைக் கழிக்க வேண்டியிருக்கும்.
குழந்தைப் பருவம் முதல் அவர்களுடைய தேவைகளை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் கொண்டு, ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொடுத்து, நல்லது கெட்டதை விவரித்து, வளர்த்து ஆளாக்கி, இன்று அவசியம் என்று தோன்றிய போது ஒரு வார்த்தைச் சொல்வதற்கு இல்லை. சகஜமாக, சாதாரணமாக பேசுவதற்கு வழியில்லை. ஜாக்கிரதையாக நடந்து கொள்ளணும். எனக்குத் தெரியாமல் தான் கேட்கிறேன். இன்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் சுதந்திரத்தால் நல்லதுதான் நடக்கிறது என்கிறீங்களா? பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? பல வீடுகளில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள உறவு தும்மினால் கழண்டு போகும் மூக்கு போல் இருக்கிறது என்று சொன்னால் மறுக்க முடியுமா? எங்களை விட அவன் நன்றாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவன் விரும்பும் பள்ளியில் தலையை அடகு வைத்து சேர்த்தோம். நாளைக்கு அவன் குறிப்பிட்ட கல்லூரியில் இஞ்ஜினியரிங் படிக்கிறான் என்று பெருமைப் பட்டுக் கொள்வதற்காகவோ, நிறைவேறாத எங்கள் ஆசைகளை அவன் மீது திணிப்பதற்காகவோ அல்ல. அலுவலகத்திலும், வீட்டிலும் எத்தனையோ கமிட்மெண்ட்ஸ். மன அழுத்தத்தை சாமாளித்துக்கொண்டு, அபூர்வமாக வளர்த்து வந்த குழந்தைகள் திருணமாய் மதித்தால், அவமானத்திற்கு உள்ளாக்கினால், வாழ்க்கை எவ்வளவு வெறுப்பாகத் தோன்றினாலும் எங்களைப் போன்றவர்கள் எங்கேயும் ஓடிப் போக முடியாது இல்லையா? உயிருடன் இருந்தாக வேண்டியதுதான். அவன் நடத்தைக்கு குன்றிப்போய் நாங்கள் எங்கேயாவது போய் விட்டால் அவன் எங்களைத் தேடி அழைத்து வருவான் என்கிறீங்களா?” இதழ்களில் வலிந்த சிரிப்புடன் கேட்டாள்.
அந்த வெற்றுப் புன்னகை என் இதயத்தை தாக்கியது. அதற்குள் சலபதி காபி கோப்பைகளுடன் ட்ரேயை எடுத்து வந்தான். முதலில் பிராகாஷிடம் சென்று, “போர்னவீடா எடுத்துக்கொள் கண்ணா” என்று தனியாக வைத்திருந்த கோப்பையை எடுத்து அவனிடம் கொடுத்தான்.
நிமிர்ந்து அவன் தன் தந்தையை பார்த்த பார்வையில் ஈரமாக இருந்த அவன் விழிகள் கண்ணாடியைப் போல் பளபளத்தன. கோப்பையை பெற்றுக்கொண்டே, “ஐ யாம் சாரி அப்பா” என்று சொல்லப் போனான். தொண்டைக்குழியில் ஏதோ அடைத்துக்கொண்டது போல் இருந்தது. கண்களிலிருந்து இரண்டு முத்துக்கள் உதிர்ந்தன. சொல்ல முடியாததை கண்களால் உணர்த்திக்கொண்டே அவன் அம்மாவின் பக்கம் பார்த்தான்.
காபியைக் குடித்துவிட்டு சற்றுநேரம் உட்கார்ந்த பிறகு வீட்டிற்கு கிளம்பினேன். கார் வரையிலும் வந்து தாங்க்ஸ் சொல்லி, விடைகொடுத்தார்கள் சலபதியும் சுஜாதாவும்.
அவர்களிடமிருந்து இன்று நான் கற்றுக் கொண்ட பாடத்திற்கு நன்றி தெரிவிக்கத் தோன்றாமல் அப்படியே வந்துவிட்டேன்.
– தெலுங்கில்: வாரணாசி நாகலட்சுமி (2013 யுகாதி போட்டியில் முதல் பரிசு பெற்று, 25-4-13 ‘ஆந்திரபூமி‘ வார இதழில் பிரசுரமான கதை)