கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,877 
 
 

உறக்கமில்லாத இரண்டாவது இரவு. ஆனாலும் நேற்றைய இரவுக்கும் இன்றைய இரவுக்கும் இடையிலே எவ்வளவு வித்தியாசம்? நேற்றோ, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மகனிடமிருந்து வரப்போகும் தொலைபேசி வாழ்த்துக்கான எதிர்பார்ப்பு பரபரப்பு. தூக்கத்தில் எழாமல் போனால் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லத் துடிக்கும் மகன் ஏங்கிப் போய்விடுவானே? எனப் பிடிவாதமாக நாற்காலியிலேயே விழித்திருந்தேன். பன்னிரண்டு மணிக்குப் பிறகோ, மகனிடமிருந்து வாழ்த்து வராமல் போன ஏமாற்றம் விசனம். அவனுக்கு பத்து வயசாகையிலா இல்லை அதற்கு முன்பேயா எப்போது ஆரம்பித்த பழக்கம் என நிச்சயமாக நினைவில்லை. ஆனால் கடந்த நான்கைந்து வருடங்களாகவே ஜனவரி 20-ம் தேதியானால் இரவு 11.59 வரை தூங்காமல் விழித்திருந்து சரியாக 00:00 ஆனதும் விளக்கைப் போட்டு, “”என்னை தட்டி எழுப்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா” என வாழ்த்தி நெகிழச் செய்வான். கூடவே ஏதேனும் இனிப்பை என் வாயில் திணித்து விட்டுத்தான் படுக்கையின் மையப்பகுதியில் படுத்துக் கொண்டு பொய்யாகக் கண் மூடுவான். நடந்தது எதையுமே அறியாதவளாக என் மனைவி கட்டிலின் மறுஓரத்தில் உணர்வற்று உறங்கி கொண்டிருப்பாள். பெருமிதம் பொங்க ஓரிரு நிமிடங்கள் மகனையே பார்த்திருந்து விட்டு எழுந்து போய் விளக்கை அணைத்து வருவேன். நான் படுத்த மறுகணம் தனது காலை எனது இடுப்பில் போட்டவாறே என் கழுத்தையும் கட்டிக்கொண்டுதான் நிஜமான உறக்கத்துக்குள் பிரவேசிப்பான்.

துலாபாரம்நேற்று இவை எதுவுமே நிகழவில்லை. பிள்ளைதான் ஊரில் இல்லையே, அதற்காக தொலைபேசி வாழ்த்துமா இல்லாமல் போகும்? இதுவே இரண்டு வருடங்கள் முன்பு அவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் என்.எஸ்.எஸ். முகாமிற்கு தலைநகர் போயிருந்த போது ஜனவரி மாத தில்லி குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவிலே தொலைபேசி தேடிப்பிடித்து வாழ்த்த தவறவில்லையே… இப்போது வெறுமனே அறுநூறு கிலோமீட்டர் தொலைதூர நாமக்கல் உறைவிடப் பள்ளிதானே; விடுதிஅறையை ஒட்டினாற்போலத்தானே தொலைபேசியும் உள்ளது நள்ளிரவில் முடியவில்லை என்றால் மறுநாள் பகலிலுமா வாய்ப்பு கிட்டவில்லை? மனசு குரங்காய் முரண்டு பிடித்து மகனது வாழ்த்துக்காக ஏங்கி தவித்தது. அவனுக்கு என் மேல் அப்படி என்ன கோபம்? படிப்புக்காக குடும்பத்திலிருந்து பிரித்து அனுப்பிய கோபமா?

அவனாகவே விரும்பித்தான் போய் இருந்தான்… என்றாலும் நதிமூலம் நான்தான் என்பதை மறுக்க முடியாதுதான். அதுவரை சக தோழனாகவே பழகியிருந்த நான், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான அந்த காலையில் ஒரு சராசரி அப்பாவாகத்தான் நடந்து கொண்டேனோ! இருக்கலாம். அதென்ன இருக்கலாம். உண்மையில் நான் அப்படித்தான் நடந்துகொண்டேன். சி.பி.எஸ்.இ. புதிய கிரேட் முறையில் பத்துக்கு பத்து எடுத்திருந்தான் என் மகன். அது நான் கொஞ்சமும் எதிர்பாராதது.

“”டேய் கண்ணா எப்படிடா எல்லா பாடங்கள்லேயும் முழுமதிப்பெண்கள் எடுத்தே ஒருபக்கம் பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டின்னு நான் துரத்தினேன்.. இன்னொரு பக்கம் ஆட்டம் விளையாட்டுன்னு நீயா ஓடிக்கிட்டிருந்தே. அப்புறமும் பத்துக்கு பத்துன்னா ஆச்சர்யம்தான்””.

“”நான் உங்க பையன்ப்பா” சர்வ சுதந்திரமாக என் தோள் தட்டி குறும்பாக கண் சிமிட்டினான். இந்த வேதியியல் வேதியியல் என்பார்களே அது எங்க ரெண்டு பேருக்கும் இடையில் அந்த அளவு இழைந்திருந்தது.

“”கண்ணா இனிமேதான் அசல் பந்தயமே ஆரம்பமாகப் போகுது. இப்ப எடுத்திருக்கிற இந்த பத்துக்கு பத்து வெறும் தகுதித் தேர்வைத்தான் காட்டுது. இன்னும் ரெண்டு வருஷத்துலே ப்ளஸ் டூ முடிவு வர்றப்போதான் பந்தயத்தோட நிஜமான வெற்றி தெரியும். ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீ அதுலேயும் தூள் கிளப்புவேன்னு”

“”அப்பா.. உங்க பேச்சோட போக்கு எனக்கு பயம்மா இருக்கு. என்ன சொல்ல வர்றீங்க?”

“”நீ இதுவரை படிச்ச மாதிரி படிக்காம மொத்த பாணியையும் மாத்தணும்.. உன் ஓட்டம் ஆட்டம் எல்லாத்தையும் ரெண்டு வருஷத்துக்கு மூட்டை கட்டி வச்சிரணும்”

“”அ..ப்..பா” அவன் அலறியே விட்டான்.

“”என் ஆட்டமும் விளையாட்டும் உங்களை என்ன பண்ணிச்சு? நான் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள்லதானே பயிற்சிக்குப் போறேன். அப்படிப் பார்த்தா பேச்சுப் போட்டியும் கட்டுரைப்போட்டியும் கூடத்தான் என் படிப்பை ரொம்ப தொந்திரவு பண்ணிச்சு..

“”சரி உனக்கும் வேணாம். எனக்கும் வேணாம்.. எல்லாத்தையுமே நாம மறந்திரலாம்.”

“”நிஜமாவா சொல்றீங்க.. கொஞ்சம் விட்டா நீ வீட்டுக்கே வர வேணாம் பள்ளியிலேயே தங்கிப் படின்னு சொல்லிருவீங்க போல..”

கேலியாகத்தான் சொன்னான். என்னுள்ளோ பொறி தட்டியது. உணர்ச்சி மேலிட கட்டிக்கொண்டேன்.

“”ஆமாம் கண்ணா.. இந்த ரெண்டு வருஷமும் நீ விடுதியிலே தங்கிப் படி.. அப்பதான் இறுதி தேர்வுலே அட்டகாசமா மதிப்பெண் அள்ள முடியும்”

“”நிஜமாத்தான் சொல்றீங்களாப்பா.. நான் விடுதிக்கு போறதுலே என்னை விட நீங்கதான் ரொம்ப கஷ்டப்படுவீங்க. நல்லா யோசிச்சுக்குங்க”

யோசிக்கவே பயமாக இருந்தது. அவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அவன் வளர் இளம்பருவத்தை அடைந்ததிலிருந்து மகன்தான் என்னுடைய ஒரே ஆத்மதோழன். எங்கள் ரசனைகளும் எண்ண அலைகளும் அந்த அளவு ஒத்துப்போயிருந்தன. அவனில்லாத நான் நினைக்கவே வலித்தது. ஆனால் நான் என்பது வெறும் நான் மட்டுமல்லவே.. ஒரு தகப்பனும்தானே?

“”பெரிய இலட்சியங்களை அடையணும்னா சின்ன சின்ன சந்தோஷங்களை இழந்துதான் தீரணும்.. இனிமே உன் கண் முன்னால, அர்ஜுனன் கண்ணுக்கு தெரிஞ்ச கிளி மாதிரி எல்லா பாடத்திலேயும் இருநூறுக்கு இருநூறு மட்டும்தான் தெரியணும்”

“”அ…ப்ப்ப்…பா..”

“”எல்லாம்னா எல்லாமே இல்லை.. கணக்கு, பெüதிகம், வேதியியல், உயிரியல்னு நாலே நாலுதான் கண்ணா”

“”உயிரியலா? பொறியாளன் ஆகறதுக்கு கணினி அறிவியல் பாடம் எடுக்கத்தானே முந்தி சொல்லியிருந்தீங்க”

“”அது நேத்துவரை. இப்போதான் பத்துக்கு பத்து எடுத்துட்டியே.. உயிரியல்ல முழுமதிப்பெண் வந்து மருத்துவ படிப்பு இடம் கிடைச்சுதுன்னா வேண்டாம்னா சொல்லப் போறோம்”

“”எனக்கு தலை சுத்துது.. மாத்தி மாத்தி சொல்லாதீங்கப்பா.. நான் பொறியாளனாகணுமா மருத்துவர் ஆகணுமா? குழப்பாம சொல்லுங்க”

“”இதுல குழப்பம் எங்கே வருது? மருத்துவபடிப்புக்கு இடம் கிடைச்சா மருத்துவர் ஆகலாம்.. இல்லேன்னா பொறியாளர். ஆனா அதுகூட நேரடி அண்ணா பல்கலைக்கழக கல்லூரி இடமா இருக்கணும்” கூடுதலாகவே குழப்பினேன்.

“”அய்யோ இன்னும் குழப்பறீங்களே..”

“”நாலு பாடத்துலேயும் இருநூறுக்கு இருநூறு எடு.. அப்போ ஒரு குழப்பமும் வராது.”

“”அப்பா பயம்மா இருக்குப்பா”

நிஜமான பயத்துடன் பிள்ளை சொன்னதை உள் வாங்காமல் அல்லது.. உள்வாங்க விரும்பாமலே நழுவினேன். விதைத்து விட்ட திருப்தி எனக்கு. அறுவடை குறித்த அச்சம் அவனுக்கு.

அன்று விழுந்த விதை.. அதோடு நின்றபாடில்லை. அடுத்தடுத்து வேர்விட்டது.

“”கண்ணா பலர்ட்டேயும் விசாரிச்சுப் பார்த்ததுலே அடுத்த இரண்டு வருஷமும் மாநிலக் கல்வி முறையிலே படிக்கிறதுதான் நல்லதுங்கிறாங்க”.

“”அய்யய்யோ என்னப்பா புதுசா ஒரு குண்டு போடுறீங்க.. அதுலே வரிக்கு வரி மனப்பாடம் பண்ணி எழுதணும். அது எனக்கு சரியாவே வராது. எங்க முறையிலே பாடத்தை புரிஞ்சு படிச்சுகிட்டு விடையை சொந்தமாவே எழுதலாம். எனக்கு அப்படி எழுதித்தான் பழக்கம்..”

“”ஆனா சி.பி.எஸ்.இ. முறையில நிறைய மதிப்பெண் வாங்க முடியாதாமே.. அதனால வேற வழியில்லைடா கண்ணா. நீதான் விடுதியிலே தங்கிப்படிக்கப் போறியே.. நிறைய நேரம் கிடைக்கும். கொஞ்சம் சிரமப்பட்டு மனப்பாடம் பண்ணிப் பழகு”

மறுத்துப் பேசி பழக்கமில்லாத பிள்ளை.. மவுனமாக நின்றது வலி தரத்தான் செய்தது. நானோ உலகொடு ஒட்டி வாழ முடிவு செய்தேன். அதன் உச்சகட்டமாகத்தான் அடுத்த முடிவையும் எடுத்தேன். பிள்ளை அலறியே விட்டான்.

“”என்னப்பா சொல்றீங்க.. மொழிப்பாடமா தமிழை எடுக்க வேணாமா?”

“”கத்தாதே.. தமிழ் எடுத்தா நிறைய படிக்கணுமாம். அதுக்கு பதிலா பிரஞ்சு அல்லது சமஸ்கிருதம் எடுத்தா சுமை பாதிக்கு பாதி குறையுமாம்”

“”ஆனா மொத்தமா ரெண்டு வருஷம் தமிழை ஒதுக்கினா இலக்கணம் மொழிநடைல்லாம் மறந்துபோகும். பின்னால உங்க படைப்புகளைக் கூட படிக்க முடியாம போகும்”

“”தாய் மொழி எப்படி மறக்கும்? விடுமுறையிலே அப்பா சொல்லித் தந்தா போச்சு. ரெண்டு வருஷம் படிக்கலேன்னா உன் தமிழ் திறமை காணாம போகுமா என்ன?”

மனமறிய பிள்ளையிடம் சொன்ன முதல் பொய்.

ஒருவாரத்திற்குப் பிறகு மகனே அந்த புதிய யோசனையுடன் வந்தான்.

“”அப்பா உங்களுக்கு மதிப்பெண்கள்தான் முக்கியமா?”

“”என்னடா இது அப்பா என்ன எனக்காகவா கேட்குறேன் ஊர் உலகத்தோடு நாம…” நான் முடிக்கும் முன்னே குறுக்கிட்டான்.

“”புரியுதுப்பா.. அதுக்குத்தான் ஒரு தீர்வு சொல்றேன். எங்க பள்ளி மாணவர்கள் கொஞ்சபேர் சேலம் நாமக்கல் பக்கத்து பள்ளிக்கூடங்களுக்குப் போறாங்க. அந்த பள்ளிகளோட நோக்கமே நூத்துக்கு நூறுதானாம். உங்க பாஷையிலே அர்ஜுனரோட இருநூறுக்கு இருநூறு கிளி”.

என் காதுகளை என்னாலேயே நம்ப முடியாத தருணம் அது.

“”நானும் கேள்விப்பட்டேன். வெளியூர் போக நீ சம்மதிப்பியான்னுதான் சொல்லலை.”

“”விடுதின்னு ஆனப்பிறகு உள்ளூர் என்ன.. வெளியூர் என்ன?”

அப்பா மீது கோபமே இல்லாமல் விருப்போடே போனதாகத்தான் நேற்றுவரை நம்பிக்கொண்டிருந்தேன். இன்று அது ஆட்டம் காண்கிறது. பகல் முழுக்க பொறுமை காத்த நான் அலுவலகம் முடிந்த கையோடு விடுதிகாப்பாளரை தொடர்பு கொண்டேன். அக்கறையுடன் விசாரித்தார், “”என்ன விஷயம்?”

பதினைந்து வயது மகன் பிறந்த நாள் வாழ்த்து சொல்லாததால் உண்டான நாற்பத்தைந்து வயது அப்பாவின் தவிப்பை அவரிடம் எப்படி சொல்ல?

“”ஒரு சின்ன அவசரம்..”

“”வகுப்பு முடிஞ்சு இன்னும் விடுதிக்கு வரலை. வந்ததும் கூப்பிடச் சொல்றேன்..”

மகன் கூப்பிடவே இல்லை. மறுபடி பல் கடித்து பொறுமை காத்து.. இரவு ஒன்பதரைக்கு மீண்டும் அழைத்தேன்.

“”என்ன சொல்றீங்க.. பையன் உங்கள்ட்ட பேசலையா? என் கைப்பேசியை குடுத்து வீட்டுக்கு பேசச்சொன்னதுக்கு சாயந்திரமே பேசிட்டதா சொன்னானே..”

வயிற்றுக்குள் கலவரம் திரண்டது. பிள்ளை முதன்முதலாக பொய் சொல்லி இருக்கிறான். இதயம் தாறுமாறாகத் தடதடத்தது. இருந்தாலும் மகனை விட்டுக்கொடுக்க மனமில்லை. “”ஒருவேளை அம்மாகிட்டே பேசிட்டான்போல. ரொம்ப நன்றி ”

எப்போதும் போலவே ஏதும் அறியாமல் மனைவி உறங்கிக் கொண்டிருக்க, விடிய விடிய விழித்திருந்தேன். அதிகாலை கோவை விரைவு வண்டியை பிடிக்க வேண்டுமே.

மூன்று மணிக்கெல்லாம் பள்ளிக்கு போய்சேர்ந்து விட்டேன். மாலையில் விடுதிக்குப் போய் மகனைப் பார்க்க சொன்னார்கள். முன்னதாக வகுப்பாசிரியரோடு சந்திப்பு.

“”தங்கமான பையன்ங்க. எங்களுக்கு மட்டுமில்ல மாணவர்களுக்கும் ரொம்ப பிரியமானவன். நல்லா பழகுறதோடு உதவிகளும் செய்யுற சுபாவம். படிப்பிலேயும் கெட்டிக்காரன் தான். “”ஆனா..”

மறுபடி வயிற்றுள் கலவரம் உருண்டது.

“”ஆனா சமீபமா கொஞ்சம் மாற்றங்கள். ரெண்டு மூணு வாரமாவே யார் கிட்டேயும் சரியா பேசறதில்லை.. பழகுறதில்லை. சாப்பாடு தூக்கம் கூட சரியா இல்லையோன்னு தோணுது. சிலசமயம் பசங்களுக்கு திடீர்னு வீட்டு நினைப்பு வந்து இப்படி தளர்ச்சி அடையறது உண்டு. அதனால கொஞ்சம் விட்டுப் பிடிக்க நினைச்சிருந்தேன். இப்போ நீங்களே வந்துட்டீங்க ..போய் பேசிப்பாருங்க”

பார்த்தபோது பேச முடியவில்லை. புன்னகைக்க திராணியின்றி தலைகுனிந்து நின்றிருந்தான். அதுவும் நல்லதுதான். இல்லையெனில் கண்கலங்கி உதடுதுடிக்க நான் நின்றதை அவன் காண நேர்ந்திருக்குமே நான் இலேசாக கனைக்க.. மவுனம் கலைத்தான்.

“”பிறந்த நாள் வாழ்த்துப்பா”

“”உன் வாழ்த்துக்காகத்தான் இவ்வளவு தூரம் ஓடிவந்தேன். ஆனா இப்போ அது முக்கியமா படலை. எனக்கு என் புள்ள வேணும்.. அச்சு அசலா பழையபடி வேணும். அதுக்கு நான் என்ன செய்யணும் நீயே சொல்லு. உனக்கு இந்த பள்ளிக்கூடம் பிடிக்கலையா, இல்லை விடுதி வாசம் ஒத்துக்கலையா சாப்பாடு பிரச்சனையா இல்லை அறையிலே இருக்கிற பசங்களோட தகராறா? எதுவானாலும் வெளிப்படையா சொல்லு.”

“”எனக்கு நான்தாம்பா பிரச்சனை. என்னால உங்க ஆசையை நிறைவேத்த முடியும்னு தோணலைப்பா.. அக்கறையாதான் படிக்கிறேன்.. ஆனாலும் நீங்க சொன்ன அந்த இருநூறுக்கு இருநூறு முடியுமான்னு சந்தேகமா இருக்கு. ஆரம்பத்துல இருந்த நம்பிக்கை இப்ப இல்லை. அரையாண்டு தேர்வு எழுதறப்போதான் தெரிஞ்சுது, ஓடவேண்டிய தூரம் ரொம்ப ரொம்ப இருக்குன்னு. போனவாரம் மதிப்பெண் பட்டியல் வந்துது. கணக்குல நல்ல மதிப்பெண்ணுங்கறதால வகுப்பாசிரியர் பாராட்டினாலும் மத்த மதிப்பெண்களை என்னாலேயே ஏத்துக்க முடியலைப்பா. நான் எழுதுறது சரியான விடைகள்தான்னாலும் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை புத்தகத்துல உள்ளது மாதிரியே என்னால எழுத முடியலைப்பா.. அதனால என்னால எந்த சாதனையும் பண்ண முடியலைப்பா”

“”கண்ணா என்னடா சொல்றே?”

“”கடைசிவருஷ இறுதி தேர்வு மதிப்பெண்கள்தான் முக்கியம்னு முதல் வருஷ பாடங்களைப் புறக்கணிக்கிற உத்தியிலே உடன்பாடில்லப்பா. அஸ்திவாரத்தை பத்தி கவலைப்படாம வெறுமனே மனப்பாடம் பண்ணி செங்கல் செங்கலா தேர்வு எழுதுற வித்தை எனக்குக் கை வரலைப்பா. சக்கையா எழுதாம சாராம்சமா எழுதத்தான் என் விரலுங்க துடிக்குது. அப்படியே மனப்பாடம் பண்ணினாலும் மொத்தத்தையும் எழுதி தள்ளுற வேகம் எனக்கு வாய்க்கலை. அப்பா… எனக்கு ரொம்ப பயம் வந்திருச்சு.. நீங்க ஆசைப்பட்ட மாதிரி நூத்துக்கு நூறு எடுக்காட்டாலும் நூத்துக்கு எண்பதை எட்டுவேனான்னே சந்தேகம் வந்திருச்சு. அதுக்காக நான் எங்க பள்ளிக்கூடத்தை குறை சொல்லலைப்பா. இங்கே படிச்சு முதலிடங்களை பிடிக்கறதாலேயே நூத்துக்கணக்கான பொறியாளர்களும் மருத்துவர்களும் வருஷாவருஷம் உருவாகுறாங்க. நான் அந்த பட்டியல்ல இடம் பிடிப்பேனான்னு சந்தேகம் இருக்கு. இத்தனைக்கும் விளையாடப்போறதில்லை.. டிவி பார்க்கறதில்லை கதைப்புத்தகம் படிக்கறதில்லை அறை நண்பர்கள்ட்ட கூட சரியா பேசறதில்லை.”

“”அப்பாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்றதில்லை”

முகம் பார்த்து பேசியவன், மறுபடி தலைகுனிந்தான்.

“”முந்தாநாள் ராத்திரி பன்னண்டு மணிக்கு அதோ அந்த தொலைபேசி முன்னால அழுதுகிட்டே நின்னேன்பா.. கடைசிவரை தைர்யமே வரலை.. உங்க ஆசையிலே மண் அள்ளிப்போடுற மதிப்பெண் பட்டியலை மறைச்சுகிட்டு எப்படிப்பா உங்களுக்கு பொய்யா வாழ்த்து சொல்றது?” – குரல் தழுதழுத்து உடைந்து வழிய காத்திருந்தது எனக்குப் பிடிபட்டது. நெருங்கி அணைத்துக் கொண்டேன். அணை உடைந்தது. நீர் வழிய ஆரம்பித்தது.

“”கண்ணா நான் சொல்றதை கவனமா கேட்டுக்க. உன்னை எண்ணிக்கை வடிவத்துல அப்பா பார்க்க நினைச்சது பெரிய தப்பு. என் தப்பை ஒத்துக்கறேன். எண்ணிக்கைகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவன் என் புள்ளைனு நல்லா தெரிஞ்சிருந்தும் குறுக்கு வழியிலே பணம் சம்பாதிக்க ஆசைப்படற முட்டாள் ஏழையாட்டம் அவசரப்பட்டுட்டேன். ஆனா இப்போ முழிச்சுக்கிட்டேன். எனக்காகன்னு இல்லை யாருக்காகவும் நீ மாறக்கூடாது.. கடவுள் உன்னை படைச்சது இந்த இருநூறுக்கு இருநூறை எல்லாம் விட பெரிய விஷயத்துக்காகன்னு நான் சத்தியமா, மனப்பூர்வமா நம்புறேன். அதனால உன் சுயம் இழக்காம உன்னால என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தா போதும். நீ எடுக்கப்போற மதிப்பெண்களை விட, பன்னிரண்டு மணிக்கு நீ சொல்ற வாழ்த்துதாண்டா இந்த அப்பாவுக்கு முக்கியம். அடுத்த வருடமாவது தவறாம வாழ்த்துவியாப்பா?”

“”அப்பா நிஜமாத்தான் சொல்றீங்களா? அப்போ இந்த அரையாண்டு மதிப்பெண் பட்டியல் உங்களுக்கு முக்கியமில்லையா?” கால்சட்டை பையிலிருந்து அதை எடுத்து நீட்டினான். இரண்டாக மடிக்கப்பட்ட அரைப்பக்க காகிதத்தை மடிக்கப்பட்ட வாக்கிலேயே வாங்கினேன்.

“”இதுல நான் கையெழுத்து போட்டு திருப்பி தரணுமா?”

“”இல்லை.. இது பெற்றோருக்கானதுதான்”

“”அப்போ கவலையை விடு” எனச் சொல்லியவாறு அதை குறுக்கு வாக்கில் இரண்டாக கிழிக்கலானேன்.

“”அப்பா.. ஒருதடவை கூட பார்க்காம..”

“”இதை மட்டுமல்ல உன் இறுதித்தேர்வு மதிப்பெண்ணைக் கூட நான் இனிப் பார்க்கப் போறதில்லை. எனக்கு உன் மேலே நம்பிக்கை இருக்கு”

“”அப்போ உங்க இருநூறுக்கு இருநூறு கனவு..”

“”இருநூறுக்கு இருநூறு எண்ணிக்கை யாருக்கு வேணும்னாலும் கிடைக்கலாம். ஆனா உன்னைப் போல ஓர் உணர்வுபூர்வ புள்ளை எல்லோருக்கும் கிடைக்குமா?”

“”அ..ப்..பா”

வியப்பால் விரிந்த அந்த விழிகளில் மறுபடி அசலான மகன் தெரிந்தான்.

– மார்ச் 2012

தினமணி – காரைக்குடி புத்தகத் திருவிழா-2012 இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில்
இரண்டாவது பரிசு ரூ.3,000 பெற்ற கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *