கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 5,982 
 
 

குறள்:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

பாலாவைச் சிலவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் 70-80களில் இலங்கை வானொலியைக் கேட்பவராக நீங்கள் இருந்திருந் தால் பாலாவின் குரலையாவது நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள். தொலைக் காட்சிகள் பரவலாக புழக்கத்துக்கு வருவதற்கு முன்னால், இலங்கை வானொலியும் அதில் ஒலிபரப்பான திரைப்படப் பாடல் களும் நாடகங்களும் தான் பாமர ரசிகர்களின் பிரதான பொழுது போக்குகளாக இருந்தன.

அக்கால கட்டத்தில் வானொலியில் கோலோச்சிய ஒருசில நாடக நடிகர்களுள் பாலா பிரபல்யமானவன். பிரபல்யம் என்ற சொல்லுக்குப் பின்னால் அவனது வீழ்ச்சிக்கான ஆபத்தும் பின்னிப் பிணைந்திருந் ததை அவன் உணர்ந்திருக்கவில்லை.

ஆபத்து அந்தரம் என்று இப்படியாக நான் பீடிகை போட்டால் உங்க ளுக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. கொஞ்சம் பின்னோக்கிப் போய் பாலாவின் சரித்திரத்தையும் கூடவே இலங்கை அரசியல் வரலாற்றையும் தெரிந்து கொண்டால் இலகுவாக இருக்கும்.

இலங்கையைப் பொறுத்த மட்டில் விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்விலும் அரசியல் ஊடுருவி விட்டது. தமிழர்களைப் பொறுத்த மட்டில் அது கொஞ்சம் ஆழமாகவே ஊடுருவி ஆறாத வடுக்களைப் பரிசாகவும் தந்து விட்டது.

யாழ்ப்பாணத்தவரை இலங்கையில் படித்த சமூகத்தவர் என ஏனையோர் மதித்த காலம் ஒன்றிருந்தது. தடுக்கி விழுந்தாலும் ஒரு தமிழ்ச் சட்டம்பியார் வீட்டுக்கு முன்னால்தான் விழ வேண்டியிருக் கும், எனச் சிலாகித்துச் சொல்லுமளவுக்கு படித்தவர்களாக யாழ்ப் பாணத்தவர் இருந்தனர்.

அதனாலேயே யாழ்ப்பாணத்தவர் கொஞ்சம் இறுமாப்புடனும் மிதப்பு டனும் உலவி வந்த காலகட்டத்தில் தான் யாழ்ப்பாணத்து வடம ராட்சியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஒரு வெள்ளாளக் குடும்பத்தில் பாலா பிறந்தான்.

இலங்கை வரைபடத்தில் இடம்பெறா விட்டாலும் பெயர்பெற்ற பல தமிழ் அறிஞர்கள் பிறந்ததால் சிறப்புற்ற கிராமமது. ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என வாயளவில் கூறிக் கொண்டு வாழ்ந்தாலும் கூட ஈழத் தமிழரின் வாழ்விலும் அரசியலிலும் சாதி இரண்டறக் கலந்துதான் இருந்தது.

வெள்ளாளர்களின் மேலாதிக்கம் 70களின் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர, சாதியரக்கனின் கோரப்பற்கள் வேறு ரூபத்தில் தலைநீட்ட ஆரம்பித்தன

ஆனைக்கொரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வரத் தானே செய்யும். வெள்ளாளர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட பஞ்சமர்களின் பழியுணர்விற்கு இயக்கங்களின் தோற்றம் வாகாக அமைய வெள்ளா ளர்கள் பலிக் கடாவாக்கப்பட்டனர். ஆயுதங்களின் முன் அறிவுலகம் கூர்மழுங்கி மௌனித்துப் போனது. தமிழுணர்வு என்ற திரையின் பின் உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டன.

வெள்ளாளனாகப் பிறந்தது ஒன்றும் பாலாவின் குற்றமல்லத் தான். ஊரில் அவனது தந்தைக்கு நல்ல மதிப்பிருந்தது. ஆசிரியராக இருந்து பின் அதிபராக ஆனவர் அவர். ஆசிரியர்களின் இலக்கணமான கண்டிப்பும் அவருடன் கூடவே பிறந்தது. சாதித் தடிப்பும் பரம்பரைச் சொத்தாகச் சேர்ந்தே வந்திருந்தது. பள்ளிக்கூடத்திலும் சரி வீட்டிலும் சரி அவர் வைத்ததே சட்டம். அவர் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத அம்மா. அந்நாளைய லலிதா பத்மினி போல அழகான இரு அக்காமார். வீட்டின் கடைக் குட்டியாகப் பிறந்தவன் தான் பாலா.

அளவான அழகான குடும்பம் அவர்களுடையது. அவ்வப்போது சில ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் அவர்களது இயல்பு வாழ்க்கை இனிமையாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது.

இயல்பாகவே பாலா துறுத்றுப்பானவன். தமிழில் அவனுக்கிருந்த விருப்பும் கலைகளில் அவனுக்கிருந்த நாட்டமும் அவனை ஒரு கலைப் பித்தனாக உருமாற்றிக் கொண்டிருந்தன. ‘ மனோகரா’ படம் வெலிங்டனில் வெற்றிகரமாக ஓடியபோது அவனுக்குப் பத்து வயதும் ஆகவில்லை. அரண்மனை தர்பாரில் ‘புருஷோத்தமரே, புரட்டுக்காரி யின் உருட்டு விழியிலே உலகத்தைக் காண்பவரே….’ என ஆரம்பித்து அடுக்கு மொழியிலே ஐந்து பக்க வசனத்தை ஒரே மூச்சிலே சிவாஜி கணேசன் ஒப்புவிப்பதைப் போல சக நண்பர்கள் மத்தியில் பேசிக் காட்டிக் கைதட்டல் வாங்கி பாலாவும் ஒரு குட்டி சிவாஜியாக வலம்வந்து கொண்டிருந்தான்.

பாடசாலை மாணவர் மன்றப் பேச்சுப் போட்டியின் போது வகுப் பாசிரியையின் அனுசரணையுடன், ஒட்டு மீசையும் தலைப்பாவுமாக பாரதி போல வேடமணிந்து வந்து நின்று, ‘அச்சமில்லை அச்ச மில்லை அச்சமென்பதில்லையே.. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் …’என அவன் முழங்கிய போது அப் பழங் காலப் பள்ளிக்கூடக் கூரையே இடிந்து விழுந்து விடுமோ என அதிபரே கவலைப் படுமளவுக்கு கரகோஷாத்தால் அச்சிறு பள்ளிக்கூடமே அதிர்ந்தது.

எவ்வித எதிர்ப்புமின்றி இலகுவாகவே முதற்பரிசைத் தட்டிச் சென்று விட்ட அவனைத் தேடிப் பாராட்டுகள் வந்து குவிந்த போதிலும் ஒரே ஒரு சோடிக் கண்கள் மட்டும் வெறுப்பை உமிழ்ந்தபடி குரோதத் துடனும் பொறாமையுடனும் பார்த்துக்கொண்டிருந்தன.

முக்கித்தக்கி மூன்றாவது இடத்தைப் பெற்றுவிட்ட போதிலும் அதற்கான பாராட்டோ பின்னூட்டமோ கிடைக்காத காரணத்தால் நொந்து போயிருந்த அவனை இப்போதைக்குச் சீண்டாமல் விட்டு விடுவோம்.

பேச்சு நடிப்பில் மட்டுமல்லாமல் ஏனைய பாடங்களிலும் ஏன் விளையாட்டிலும் கூட பாலாவின் கொடிதான் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது.

சர்வதேச வர்த்தக மொழியான ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்ந்து என்ன விலை கொடுத்தும் அதைக் கற்றுக் கொள்ளத் துடித்த யாழ்ப்பாணிகளுள் பாலாவின் தந்தையும் அடக்கம்.

அந்நாளில் வேதக்காரப் பள்ளிக்கூடங்களில் தான் ஆங்கிலம் முறையாகப் போதிக்கப்பட்டது. அதற்காகவே சைவத்தில் இருந்து வேதத்திற்கு மாறியவர்கள் பலர். ஆனாலும் பாலாவுக்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்படவில்லை. விளையாட்டு உட்பட அனைத்துப் பாடங்களிலும் அவன் காட்டிய ஆர்வமும் ஆற்றலும் சேர்ந்து தாமாகவே அவனை உள்ளீர்க்க வைத்துவிட்டன.

அவனது சாதகக் குறிப்பைப் பார்த்த சோதிடர்கள், பின்னாளில் அவனடையப் போகும் உயர்வுகளைப்பற்றி ஆரூடம் கூறினார் களேயன்றி நாற்பது வயதில் அவனுக்கு நேரப் போகும் எதிர்பாராத கண்டம் பற்றிக் கடுகளவும் கண்டு கொண்டதாக இல்லை.

சாதாரணமாக ஓ.எல்.லை எட்டிப் பார்த்தாலே காணும். வேலை வீடுதேடி வரும் காலமது. நாலைந்து திறமைச் சித்திகளுடன் தேறிய பாலாவுக்குச் சொல்லவேண்டுமா! ‘வாத்தியார் பிள்ளை வாத்தி’ என ஆவதில் பாலாவுக்கு உடன்பாடிருக்கவில்லை.’ மூச்சுப்பிடித்து இத்தனை நாளும் ஓடியது காணும். இனியாவது கொஞ்சம் ஆறியிருந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கலாமே’ என அவன் மனம் அங்கலாய்த்தது.

அதற்குத் தோதாக எழுதுவினைஞர் பரீட்சையில் அவன் சித்தி பெற்ற செய்தியும் வந்து, அதைத் தொடர்ந்து கொழும்பில் அரசாங்க இறைவரித் திணைக்களத்தில் வேலையும் கிடைத்து விட்டது ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ எனும் முது மொழியை மெய்ப்பிக் கும் முனைப்புடன் மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்ட பாலாவைச் சுமந்து சென்ற ‘யாழ்தேவி’ கொழும்புக் கோட்டையில் அவனைப் பத்திரமாக இறக்கிவிட்டு ஆஸ்வாசப் பெருமூச்சு விட்டது.

“மாத்தையா கோ இந்தலா? யாப்பனத?” (அய்யா எங்கிருந்து வாறியள்? யாழ்ப்பாணமோ?”) என்ற இளனி வியாபாரியின் சிங்களம் முதலில் அவனை மிரள வைத்தது. அவன் கையில் அனாயாசமாக விளை யாடிக் கொண்டிருந்த கொடுவாட் கத்தி அச்சத்திற்கு அத்திவாரம் போட்டது.

கொழும்பில் காலடி வைத்த ஒருசில நாட்களிலேயே சிங்களம் தெரியாமல் அங்கு காலம் கடத்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பது புரிந்தது. ‘சிங்களம் படிக்காதே! சிறுமைப் பட்டுப் போகாதே!’ எனத் தமிழரசுக் கட்சியினர் பன்னிப்பன்னிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களது அரசியல் ஏடான ‘சுதந்திரன்’ சிங்கள வர்களுக்கெதிரான காழ்ப்புணர்வைத் தாராளமாகக் கக்கிக் கொண் டிருந்தது.

திணக்களத்தில் அரை வாசிக்கும் குறையாமல் தமிழர்களாக இருந்தது ஆறுதலளித்தது. அதனால் சிங்களம் தெரியாதது பெரிதாகத் தோற்றவில்லை. போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவானதால் சிங்களவர்களை விடத் தமிழர்கள்-அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள் அரச அலுவலகங்களில் செல்வாக்குடன் சுதந்திரமாக வலம்வந்து கொண்டிருந்தார்கள்.

இந்நிலைமை சில சிங்களத் தலைவர்களின் பொறாமை உணர்வைத் தூண்டுவதாக அமைந்தது. போதாக் குறைக்கு தமது அரசியல் ஆசான்களாக அவர்கள் வரித்துக் கொண்ட தமிழக தி.முக.வினரின் ‘வடக்கு வாழ்கிறது; தெற்குத் தேய்கிறது’ என்ற கோஷத்தை மாற்றிப் போட்டு, ‘தெற்கு வாழ்கிறது; வடக்குத் தேய்கிறது’ என்றோலமிட்ட தமிழரசுக் கட்சியினரின் கிளிப் பிள்ளை வாய்ப்பாடு, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல சிங்களவரின் எதிர்ப்பு ணர்விற்குத் தூபம் காட்டுவதாக ஆனது.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியைப்போல வாயிருந்ததால் வினையை விலைக்கு வாங்கிய வீணாகிப் போனவர்களைப் பற்றிப் பேசி என்ன புண்ணியத்தை? ஒரு தமிழன் சிங்களத்தைப் படிக்க விரும்பினாலும் கூட இரகசியமாகவே படித்துத் தொலைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை. அயலவனாக இருந்த சிங்களவனை அந்நியனாகப் பார்க்க வைத்தவர்கள் பழியை மட்டும் சிங்களவனில் போட்டு விட்டுத் தப்பித்து விடப் பார்த்தார்கள். ஆனால் காலம் அவர்களுக்கான பாடத்தைக் கற்றுக் கொடுத்தபோது அதைக் கண்டுணர அவர்கள் இல்லை .’ பாவத்தின் சம்பளம் மரணம்’ எனும் ஆன்றோரின் வாக்குப் பொய்க்கவில்லை.

பாலாவுக்குச் சிங்களவனை வெறுக்கக் காரணம் இருக்கவில்லை. அலுவலகத்தில் அருகருகே பணிபுரிந்த சிங்களவர்கள் நல்ல மாதிரித்தான் பழகினார்கள். மொழி புரியாத பேதமை பரஸ்பரம் நெருங்கத் தடையாக இருந்தது. ஆங்கிலத்தில் பேச இருபகுதி யினருமே சங்கோஜப்பட்டனர் அருகருகே இருந்த போதிலும் கூட பாலம் போடப் படாத தனித் தனித் தீவுகளாகவே அவர்கள் இருந்தனர்.

கொழும்பில் காலடி வைத்த புதிதில் வெள்ளவத்தையில் இருந்த – ஊரை விட்டு ஓடிப்போய் உழைப்பாலோ அதிர்ஷ்டத்தாலோ உயர்ந்துவிட்ட- ஒரு ஒன்றுவிட்ட மாமன் வீட்டில் அழையா விருந்தாளியாக பாலா அடைக்கலம் ஆனான்.

மாமனிடத்தில் பணமிருந்தது. தன்னை உதாசீனம் செய்த உறவினரை எள்ளி நகையாடும் குணமும் இருந்தது. நல்ல,வேளையாக அவருக்கு ஒரு மகள் இருக்கவில்லை. மகன் என்று ஒருவன் இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியவில்லை. ஆங்கிலம் அவன் நாவில் அரசோச்சியது. மாமனோ சிங்களத்தில் சதிராட்டம் போட்டார்.

இந்த இடம் தனக்குச் சரிப்படாது என்று ஓரிரு நாட்களிலேயே பாலாவுக்கு விளங்கிவிட்டது. முண்டாமல் முனகாமல் மெல்லமாக அங்கிருந்து விலகித் தனக்கென ஒரு தனியறையை பாலா தேடிக் கொண்டான்.கொட்டாஞ்சேனை வீதிகளைச் சல்லடை போட்டுத் தேடித் தனது ‘வசந்த மாளிகை’யைக் கண்டடைய அவன் நடாத்திய நடைபயணங்களைப் பற்றி எழுதப் போனால் அது தனிக் கதையாகி விடும்.

சிங்களக் குடும்பம் ஒன்றின் முன்வீட்டுப் ‘போர்ஷனி’ல் அவன் குடிவந்த போது அதிர்ஷ்டமும் அவனுடன் கூடவே குடிவந்தது. காதல் தேவனின் கடைக் கண் பார்வையும் அவன்மீது படர்ந்தது. பருவத்தின் விளிம்பில் பட்டாம் பூச்சியாகச் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த அனுலாவின் அழகும் இளமையும் அவனைச் சிறைப் பிடித்துச் சிப்பிலியாட்டின. அனுலா- வீட்டுக்காரச் சிங்களவரின் ஒரே மகள்.

அவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை. அவனுக்குச் சிங்களம் புரியவில்லை. பரத நாட்டியத்தின் பால பாடத்தில் இருவரும் பயணித்துப் புரியாதனவற்றைப் புரிந்து கொண்ட காலத்தில் கொஞ் சம் கொஞ்சமாகச் சிங்களமும் வேகவேகமாகக் காதல் பாடமும் பாலாவின் மனதிலும் இதயத்திலும் இடம் பிடித்துக்கொண்டன. அனுலாவின் நாவில் மழலையாகத் தவழ்ந்த தமிழ்ச் சொற்கள் அவர்களின் நெருக்கத்தின் அளவுகோலாகத் திகழ்ந்தன. சிரமமில்லா மல் செலவில்லாமல் சிங்களம் கற்கும் எளிய பொறிமுறையை அறிய விரும்புவோர் பாலாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்!

ஊரிலிருந்த போது இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங் களைக் கேட்டு ரஸிக்கும் போதெல்லாம், தானும் ஒருநாள் எப்படி யாவது வானொலி நடிகனாகி விட வேண்டும் என்ற தணியாத தாகம் பாலாவைப் பிடர் பிடித்து உந்திக் கொண்டிருந்தது. கொழும்பு வாழ்க்கை நிரந்தரமான ஒரு வருடத்தின் பின் அவன் கனவு பலிதமானது.

வானொலி நடிகர்களாக விரும்புபவர்களை விண்ணப்பிக்கக் கோரி வானொலியில் ஒரு விளம்பரம் ஒலிபரப்பானது. அதைக்கூட ஊரிலிருந்து அவனது அக்கா எழுதிய ஒரு கடிதம் மூலம்தான் அவன் தெரிந்து கொண்டான். (அனுலா வீட்டு வானொலிக்கும் தமிழ் தெரியாது; அதுவும் சிங்களத்திலேயேதான் பாடும்; பேசும் என்பது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கொசுறுத் தகவல்!)

கொழும்பில் நிரந்தரமாக வதிபவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய வாய்ப்பு அது. நேர்முகக் குரல் தேர்வுக்கு அவன் சமுகமளித்த போது அவனோடு திணைக்களத்தில் கடமையாற்றும் வேறு சிலரை யும் கூட அங்கு காண முடிந்தது. இத்தகைய விடயங்களை வெளியில் விட்டு விடாமல் கமுக்கமாகத் தமக்குள் வைத்திருந்து காரியம் பார்ப்பதிலும் யாழ்ப்பாணிகள் கெட்டிக்காரர். அது அவர்களுக்கேயுரிய தனிப் பண்புகளில் ஒன்று என்றும் சொல்லலாம்.

குரல் தேர்வில் தேறி ஒரு வானொலி நடிகனாக எடுபட்டபோது வானமே வசப்பட்டு விட்டதுபோல மகிழ்ச்சிக் கடலில் மிதந்தான் பாலா. அவ்வப்போது நாடகங்களில் குரல் கொடுக்கவென வந்து போய்க் கொண்டு இருந்தவனுக்கு ராகுலனின் அறிமுகம் கிடைத்த தும் அங்குதான். கிடைத்த மட்டில் போதும் எனத் திருப்திப் பட்டு விடும் இயல்பினன் அல்ல பாலா. ராகுலன் நீட்டிய நட்புக்கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு அவனது வெற்றிப் பயணம் தொடர்ந்தது.

பாராளுமன்றத்தில் பிரதம உரை பெயர்ப்பாளராக இருந்த எஸ்.வி. ஆரை ராகுலனுக்குத் தெரிந்திருந்தது. ஆங்கில மொழியில் பாலா வுக்கு நல்ல அறிவும் தேர்ச்சியும் இருந்தது. பாராளுமன்ற உரை பெயர்ப்பாளனாக பாலா உயர்வு பெற அவை அடிப்படையாயின.

வானொலி நிலையத்தில் வரவேற்பாளினியாக இருந்த ராதாவும் அவனுடைய ஊர்க்காரிதான். சின்ன வயதில் பாலா படித்த அதே பாடசாலையில் படித்தவள்தான். ஆனால் பாலாவுக்கு அவளை நினைவில் இல்லை. ராதாவுக்கோ பாலாவையன்றி வேறு நினை வேயில்லை. ஊரில் படித்த காலத்திலேயே பாலாவின் அழகும் ஆண்மையும் ஆற்றலும் அவளை வசீகரித்திருந்தன. ஆனால் சாதி பேதம் பேசும் சமுகத்தில் அதெல்லாம் சரிவராதென்று தனது ஒரு தலைக் காதலை மனதுக்குள்ளேயே புதைத்துக் கொண்டு விட்டவள் அவள்.

ராதாவுக்குப் படிப்பு சுத்தமாக ஏறவில்லை. கலைகளில் நாட்டமிருந் தது. அழகுக்கலையிலும் தேறியிருந்தாள் வீட்டில் சும்மா இருப்பதற்கு கௌரவமான ஏதாவது தொழில் பார்த்தால் பரவாயில்லை என்று அலங்காரத் தேராக வானொலி நிலையத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள்.

தேடிப்போன மூலிகை காலிற் பட்டது போல மீண்டும் பாலாவை வானொலி நிலையத்தில் கண்டபோது புதைக்கப்பட்ட அவள் காதலும் மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது. வலியச் சென்று அவள் ஒட்டி உறவாடிய போதிலும் பட்டும் படாமல் பாலா எட்டியே நின்றது அவள் இதயத்தைக் காயப்படுத்த, தனது அழகு பற்றிய அவளது கர்வமும் பங்கப்பட்டது.

அவள் அழகில் அடிமைப்பட்டுப் போன கிருஷ்ணாவும் அதே வானொலி நிலையத்தில் தான் கடமையாற்றினான். சொந்த முயற்சியாலோ அல்லது அறிந்தவர்கள் எவரதும் செல்வாக்காலோ தெரியாது அவனும் ஓர் அறிவிப்பாளனாக அங்கு எடுபட்டிருந்தான். இந்தக் கிருஷ்ணா வேறு யாருமல்ல. பாலாவால் பேச்சுப் போட்டியில் தோற்கடிக்கப்பட்டு மனம் நொந்து குமுறிக் கொண்டிருந்தானே ஒருவன். அவனேதான். இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவனால் அத்தோல்வியை மறக்க முடியவில்லை.

பாலாவின் தந்தையையும் கிருஷ்ணாவால் மன்னிக்க முடியவில்லை. தனது சொந்தக்கார வெள்ளாம் பெடியன் ஒருவனின் முறைப்பாட் டைக் கேட்டு எவ்வித விசாரணையும் இல்லாமல் புளிய மிளாறால் அவர் தன்னை அடித்துத் துவைத்த அந்த வன்கொடுமை- சாதிக்கு முன் நீதி சரணாகதியாகி விட்ட அந்த நீசத்தனம்- அவனால் மறக்கவோ மன்னிக்கவோ பட முடியாத ஒன்று. செய்யாத குற்றத்திற்காக அவன் அனுபவித்த தண்டனை மனதில் ஏற்படுத்திய வலி இன்னும் ஆறவில்லை .உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆறிய போதிலும் அது ஏற்படுத்திய வடு இன்னும் மாறவில்லை.

‘மணந்தால் ராதாதேவி; இல்லையேல் மரணதேவி’ என வீர(ப்பா) வசனம் பேசிப் பிதற்றிக் கொண்டு திரிந்தவனுக்குத் தனது காதலியுடன் இனிக்க இனிக்கப் பேசிக் கொண்டிருந்தவனை இனங் கண்டபோது புண்ணில் புளிப் பத்தியது போல ஆயிற்று. ஒரே ஊரான் என்ற உரிமையுடன் பாலாவை கிருஷ்ணாவுக்கு ராதா அறிமுகம் செய்து வைத்த போதும் பாலாவால் அவனை ஞாபகம் கொள்ள முடிய வில்லை. ஒப்புக்குச் சிரித்து, கைலாகு கொடுத்த கிருஷ்ணா உள் ளுக்குள் கறுவிக் கொண்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக வானலைகளை வசப்படுத்திக் கொண்டு விட்ட பாலா ஓரிரு ஆண்டுகளிலேயே மிகப் பிரபலமான வானொலி நடிகனாகி விட்டான். கோபுரத்தில் ஏறியவனைக் குப்புறத் தள்ளி வேடிக்கை பார்க்கும் விதியின் விளையாட்டை யார் தான் அறிவார்? இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழர் வாழ்வைத் தறி கெட்டு ஓட வைத்தன . 83 இல் ஏற்படுத்தப்பட்ட ஆடிக் கலவரம் எத்தனை பேர் வாழ்க்கையைப் பந்தாடிவிட்டது.! இயக்கங்கள் பல தோன்றி இயல்பு வாழ்வைச் சீர் குலைத்துக் குளிர் காயலாயின. நாடுகாண் படலம் ஈழத்தமிழர் வாழ்வின் தொடர்கதையானது. திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழன் புகலிடம் தேடி எழுகடலோடும் இரவலனானான்.

ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் போது இலவம் பஞ்சின் கதி எப்படியோ அது போலானது பாலாவின் நிலைமை. வாடகை வீட்டில் இருந்தும், அனுலாவின் மனமாளிகையில் இருந்தும் ஒரேயடியாகத் துரத்தியடிக்கப்பட்டான் பாலா. பைத்தியக்காரனைப் போல சித்தம் தடுமாறித் திரிந்தவனுக்கு அவசர அவசரமாகச் சொந்தத்தில் மணம் பேசிச் செய்து வைத்து விட்டனர் வீட்டுக்காரர்.

நாட்டு நிலைமை சீர்படு மட்டும், ஆறேழு மாதங்கள் ஊரோடு போய் முடங்கிக் கிடந்த போதிலும் நல்ல வேளையாக வேலைக்குப் பழுது வரவில்லை. கிராமத்து வாசனையுடன் அவனைக் கரம்பற்றிய பாமா நல்லவள்; நேசமுள்ளவள். நகரத்தின் சூதுவாதுகளை அறியாதவள்

அவளது அண்மையும் அரவணைப்பும் ஆறுதலளித்த போதிலும் பாலாவால் முன்னைப் போல் இயங்க முடியவில்லை. இழப்புகளின் வேதனையை விழுங்கிக் கொண்டு ஒட்டியும் ஒட்டாமல் ஏனோ தானோவென அவனது கொழும்பு வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

மாற்று இயக்கமொன்றின் கை கொழும்பில் ஓங்கியிருந்த அந் நாட்களில் தான் புலிகளுக்கெதிரான பிரசாரத்துக்காக அரச வானொலியில் ஒரு தொடர் நாடக நிகழ்ச்சியை அவர்கள் நடாத்த ஆரம்பித்தனர். அந் நிகழ்ச்சித் தயாரிப்பாளன் கிருஷ்ணாவும் அவ் வியக்க ஆதரவாளனே.

கிருஷ்ணாவின் காட்டில் அடை மழை கொட்டிக் கொண்டிருந்த காலமது. எண்ணியதெல்லாம் நிறைவேறி மனதுக்கிசைந்தவளை மணவாட்டியாக்கிக் கொண்டு, அந்த இறுமாப்புடன், மாமனாரின் செல்வாக்கால் மேல்தட்டை நோக்கி அவன் முன்னேறிக் கொண்டிந்த வேளை. புலிகளுக்கு எதிரான அம்மாற்று இயக்கத்தில் ஒரு முக்கிய புள்ளியான ராதாவின் தந்தைக்கு தனது சாதிக்காரனான கிருஷ்ணாவை மருமகனாக்கிக் கொண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சியே.

கிருஷ்ணாவின் நீடித்த வன்மத்துக்கு கடைசியில் ஒரு வடிகால் கிடைத்தது. அது நாடகவடிவில் அவனைத் தேடி வந்தது. நையாண்டி யாக எழுதப்பட்ட அந்நாடகத் தொடரில் புலிகளின் தலைவனாக நடிக்க வைத்து பாலாவைப் பலிக்கடாவாக்கத் திட்டமிட்டான் கிருஷ்ணா.

அரசியலில் எந்த வித அக்கறையோ ஈடுபாடோ சார்போ இல்லாத பாலாவுக்கு அது ஒரு தர்மசங்கடமான நிலைமை. மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது. பிரபலமான நடிகன் எனப் பெயரெடுத்ததால் வந்த வினை. அதன் பின்னால் இருந்த ஆபத்து அச்சமூட்டியது.

யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் எட்டக் கூடிய ஒரே வானொலி அது தான். தறுதலைத் தலைவனாக நடித்து விட்டுப் பின் ஊரில் தலை காட்ட முடியாது. தலைகாட்டினால் தலை தப்பாது! நினைக்கவே ஈரக் குலை நடுங்கியது. கொழும்பிலும் ஓடி ஒளிக்க முடியாது. வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவானேன்?

ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி, நாலு நாட்கள் ஆஸ்பத்திரியில் போய்க் கிடந்து தொண்டைக் கட்டு நெஞ்சு நோ என்று நாடகமுமாடி நாட்களைக் கடத்திப் பார்த்தான். நான்காம் நாள் ஆஸ்பத்திரியால் அவன் வீடு திரும்ப, வாசலில் வெள்ளைவான் வந்து நின்றது.

என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் பாமா பரிதவித்துப் போனாள். அறியாத ஊர்; தெரியாத மொழி. எவரையோ எல்லாம் பிடித்து எத்தனை கெஞ்சியும் எதுவும் நடக்கவில்லை. கொழும்பில் பாராளுமன்றத்தில் பெரிய வேலை என இறுமாந்ததெல்லாம் அர்த்தமற்றுப் போனது. காணாமல் போனவனைக் கண்டுபிடிக்க எவராலும் கூடவில்லை சொந்தமும் சுற்றமும் வந்து எட்டிப் பார்க்கவே அஞ்சியது.

இன்னார் யார் இனியார் யார் என்ற பேதமின்றி யார் யாருடைய காலில் எல்லாமோ போய் விழுந்தெழும்பினாள். ஊர்க்காரன் கிருஷ்ணாவுக்கு அரசில் நல்ல செல்வாக்காம் என்று யாரோ கூறக் கேட்டு, இக் கபட நாடக சூத்திரதாரி அவன்தான் என்பதை உணராது, அவன் வீடு தேடியும் வீணாக அலைந்து சலித்தாள்.

“இப்பதான் எங்களைத் தெரியுதோ…? ஊரில பெரிய சாதி பாப்பியள். உங்கிட ஆக்கள் தானே புலியில பெரிய கையளா இருக்கினம். அவயளிட்டப் போக வேண்டியது தானே?” என்ற, வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சிய கிருஷ்ணாவின் எகத்தாளமான பேச்சையும் ஏச்சையும் கேட்டது தான் மிச்சம்.

‘யாருக்கு நாம் தீங்கு செய்தோம்? எவர்குடியை எப்போது கெடுத் தோம்? எமக்கேன் இந்தப்பாடு?’ என எதுவும் புரியாது அங்கலாய்த் தாள் பாமா. பாவப் பட்ட தமிழர்களாக இந்த நாட்டில் வந்து பிறந்ததால் ஏதிலிகளாகி விட்ட – இளம் விதவைகளாகிவிட்ட- அபலைப் பெண்களது அவலக் குரல் எட்டாத தொலைவில் இறைவனும் போய் ஒளிந்து கொண்டுவிட்டானா?

‘வெள்ளைவானும் வரவில்லை; பாலா என்ற பெயரில் யாரும் கைது செய்யப்படவுமில்லை. கள்ளத்தனமாகப் புருஷனை வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டு நிவாரணப் பணம் பறிக்க நீலிக் கண்ணீர் வடிக்கிறாள்’ என வாய் கூசாமல் பொய்யுரைத்து அபாண்டமாகப் பழி சுமத்து பவர்களை யார் தான் என்ன செய்வது?

யாரை நொந்து என்ன பயன்? நான் வாங்கி வந்த வரம் இப்படித் தான் என ஓய்ந்து இருந்துவிட முடியுமா? ஓடிக்களைத்து ஓடாகித் துரும்பாகி வாடி வதங்கிப் போனாள் பாமா. சொல்லாமல் கொள்ளா மல் திடீரென- ஏழரை ஆண்டுகள் கழிந்தபின்- அவனைப் பிடித்தாட்டிய சனி விட்டு விலக, எவருடைய புண்ணியத்தாலோ விடுதலையாகி வெளியில் வந்து சேர்ந்தான் பாலா.

‘நான்தான் பாலா’ என்று அவனாகச் சொல்லித்தான் பாலாவை மற்ற வர்கள் அடையாளம் காண வேண்டியதாயிருந்தது. அவ்வளவுக்கு உருக்குலைந்து போயிருந்தான். உடலளவில் நொந்து போயிருந் தாலும் மனதளவில் பாலா மாய்ந்து போய்விடவில்லை. வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியம் அவனுக்குள்ளிருந்தது. சின்னா பின்னமாகி விட்ட வாழ்வைச் செப்பனிட்டுச் சீராக்கிவிடலாம் என்ற நம்பிக்கை அவனுள் வேர் கொண்டிருந்தது.

இழப்பதற்கு இனி ஏதுமில்லை என்ற நிலைமையே அவன் நம்பிக் கைக்கு உரமூட்டியது. சிறை வாழ்க்கை அவன் சிந்தனையைக் கூர்மைப் படுத்தியிருந்தது. இலக்கு இதுதான் என்ற தீர்மானத்துடன், நிதானமாகவும் மிகுந்த அவதானத்துடனும் காய்நகர்த்திக் காரியம் பார்க்கலானான் பாலா.

‘ அடாது மழை பெய்தாலும் விடாது தொடருவோம்’ என நாடகம் போட்டுக் கொண்டிருந்த நண்பனின் நாடகக் குழுவில் மீண்டும் போய் இணைந்து கொண்டான். அதிர்ஷ்டவசமாக அந்தக் குழுவினருக்கு லண்டனில் இருந்து அழைப்பு வந்தது. சந்தர்ப்பத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் பாலா.

லண்டனில் கால்பதித்ததும் தேம்ஸ் நதியில் கரைத்த புளி போல அந்த லண்டன் மா நகரச் சனத் திரளில் கரைந்து போய் விட்டான் பாலா.பாலாவைத் தொலைத்து விட்டு, நாடகக் குழுவினர் தோல்விக்கு இலக்கணம் வகுத்த ஈழத்தமிழ் வேந்தன் இராவணனைப் போல வெறுங்கையோடு இலங்கை புக்கார்.(=புகுந்தார்)

பாலா இலங்கைச் சிறையில் கழிக்க நேர்ந்த காலமும் அதனால் ஏற் பட்ட வடுக்களும் சாட்சிகளாகத் துணை செய்ய, சிறையில் கற்ற பாடங்களும் படித்த சட்ட நுணுக்கங்களும் சாதுர்யமாகப் பதில் சொல்ல உதவ நிரந்தர வதிவுரிமை நேராகவே கிடைத்துவிட்டது. ஒருவாறாக மனைவி பிள்ளைகளையும் கூடவே அழைப்பித்துக் கொண்டுவிட, அவன் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச ஆரம்பித்தது.

ஏற்றமுண்டானால் இறக்கமும் வரத் தானே செய்யும். கிருஷ்ணாவின் வாழ்விலும் சரிவு ஏற்படத்தான் செய்தது. புலி புலியென மற்றவர் களைக் கிலிப்படுத்தியவன் கதையில் நிஜப்புலியே வந்த மாதிரி, காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களைக் கருவறுக்கும் இயக்கத்தின் உளவுப்பிரிவு கிருஷ்ணாவைக் குறிவைத்து மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.

தலை தப்பினால் போதும் என்ற நிலை கிருஷ்ணாவுக்கு. உடுத்த துணியோடு எடுத்த ஓட்டம் பாலா காலடி பதித்த அதே ‘ஹீதுறூ’ விமான நிலையத்தில் போய்த் தான் ஓய்ந்தது. பாவம் ராதாவும் அவன் கூடவே இழுபட்டு வந்திருந்தாள்.

தடுப்பு முகாமில் சிறைப்பட்டிருந்த போது என்ன என்ன பொய்களை எப்படி எப்படிச் சொல்லி வெள்ளையனை ஏமாற்றலாம் என ஒத்திகை பார்த்ததுடன் ராதாவையும் உருப்போட வைத்தான். தான றிந்த அரை குறை ஆங்கிலம் உதவப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியும். அதனால் மொழி பெயர்ப்பாளனின் உதவி தேவை என அவன் கோரியிருந்தான்.

ஆனால் விசாரணையின் போது மொழி பெயர்ப்பாளனாக பாலா வரக்கூடும் என அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. பாலாவைக் கண்டதும் அவனுக்கிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையும் தகர்ந்து தரை மட்டமானது. ‘மீண்டும் இலங்கை திரும்புவதா? அதை விட இங்கேயே உயிரை மாய்த்துக் கொண்டு விடலாமே’, என்று மனம் குமைந்தான். கை விலங்குடன் காராகிரகத்தில் கூனிப் போயிருந்த பாலாவின் தோற்றம் மனக் கண்ணில் நிழலாடியது. தான் அவனுக் கிழைத்த அநியாயத்தின் பரிமாணம் பூதாகாரமாகி அவன் நெஞ்சைப் பிளந்தது ‘ நிச்சயமாக அவன் இதையெல்லாம் மறந்திருக்கமாட்டான். எப்படி முடியும்? தேடிவந்து பழி வாங்கத்தான் போகிறான். எண்ணெய்ச் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் தவறி விழுந்த குழு நண்டைப் போல் எனது நிலைமை ஆகிவிட்டதே’ எனக் கிருஷ்ணா அங்கலாய்க் கலானான்.

கிருஷ்ணாவைத் தெரிந்ததாக பாலா காட்டிக் கொள்ளவேயில்லை. யாரோ ஒரு அந்நியனுடன் உரையாடுவது போலவே அவனது முக பாவம் இருந்தது. கேள்விகள் திக்குமுக்காட வைத்தன. தலை சுற்றி யது; நாக்குழறியது. பதிலே வெளியே வரமாட்டேன் என்றது. ஏதோ உளறிக் கொட்டிக் கிளறி மூடினான். கண்ணீர் தான் முட்டிக் கொண்டு வந்தது. பிரயத்தனப் பட்டு அடக்கிக் கொண்டான்.

“ச்சா..பிழை விட்டிட்டன். உவனை அங்கயே சரிக்கட்டி இருக்க வேணும். உள்ளுக்க போனவன் அங்கயே மண்டையப் போட்டிடுவான் எண்டு நினைச்சன்.. வீணாப் போனவன் இப்ப இஞ்ச வந்து எங்கிட கழுத்த அறுக்கிறான். ஆரை எவரைப் புடிச்சு இப்பிடி எழும்பினானோ தெரியேல்ல” என்று தன் பாட்டில் புலம்பிக் கொண்டிருப்பவனைப் பார்க்க ராதாவுக்குப் பரிதாபம் ஏற்படவில்லை. பற்றிக்கொண்டுதான் வந்தது.

கிருஷ்ணாவுக்கு வாழ்க்கையே நரகமாகிப் போனது. பாலா பற்றிய நினைப்பே நாளும் அவனைச் சுட்டுப் பொசுக்கியது. தன்னைக் குத்திக் கொல்ல அவன் கத்தியோடு வருவதாகக் கனவு கண்டு அலறியடித் துக் கொண்டு இரவில் எழுந்திருந்து அரற்றுவது வழமையாகிப் போனது.

Home Office கடிதம் வந்தபோது அதை ராதா தான் முதலில் பிரித்துப் பார்த்தாள். ராதாவின் கண்களிலிருந்து கண்ணீர் கரகரவெனப் பெருக்கெடுக்க என்ன காரணம்? நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை தான் வந்தது. அவமானத்தால் கூசிக் குறுகிப் போனாள். இப்படிக் கூட ஒருவனால் பழி வாங்க முடியுமா? கத்தியை எடுத்து வந்து செருகியிருந்தால்கூட நியாயம் தான் எனச் சமாதானப் பட்டிருப்பாள். இப்படிச் செய்துவிட்டானே?

கத்தியைச் செருக வேண்டிய இடத்தில் கருணையைச் சொரிய அந்தப் புத்தனால் தான் முடியும். ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தைக் காட்ட அந்த யேசுவால்தான் இயலும். புத்தனும் யேசுவும் மறு அவதாரம் எடுத்து விட்டார்களா பாலாவின் வடிவத் தில்?

தனது காதலை நிர்தாட்சண்யமாக நிராகரித்தவனை எப்படிப்பழி வாங்கலாம் எனப் புழுங்கித் துடித்தவள்தான் ராதா. தனது தந்தையின தும் கணவனாகப் பின்னாளில் ஆனவனதும் சூழ்ச்சியால் பாலா சிறைசெல்ல நேர்ந்த போது உள்ளூர மகிழ்ந்தவள் தான் அவளும். அன்று அவள் நினைத்திருந்தால் பாலாவை எப்படியாவது காப்பாற்றி யிருக்கலாம். அந்த மனப்பக்குவம் அப்போது அவளுக்கு இருக்க வில்லை.

அவள் வளர்ந்த விஷச் சூழல் அவளை அப்படி மாற்றியிருந்தது. சுயநலத்துக்காகச் சொந்தச் சகோதரரையும் காட்டிக் கொடுக்கும் கல்மனம் கொண்டவர்களின் .சேர்க்கை, அவளையும் மலம் உண்ணும் பவ்வி போல உருமாற்றியிருந்தது.

இப்போது நினைத்தால் வெட்கமாகவும் வேதனையாகவும் அவமான மாகவும் இருக்கிறது. ஒரு சிறு புழுவைப் போல சிறுமைப்பட்டுப் போய் விட்டதான கழிவிரக்கத்தில் மனம் குன்றிப்போகிறது.

‘ஒரு நாசகாரத் தந்தைக்கு மகளாக ஏன் வந்து பிறந்தேன்? நச்சரவம் எனத் தெரிந்தும் நயவஞ்சகன் ஒருவனுக்கு ஏன் வாழ்க்கைப் பட்டேன்? பிறர்க்கு நல்லது செய்யாது விட்டாலும் தீமையாவது செய்யாமல் விட்டேனா?’ மனச் சாட்சியின் உறுத்தலை ராதாவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

‘பாலாவைத் தேடிக் கண்டு பிடித்து அவன் காலில் விழுந்து கதறி அழ வேண்டும். செய்த பாவங்களைச் சொல்லி, மனம் கசிந்துருகிப் பிராயச்சித்தம் தேடவேண்டும்’. தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தாள் ராதா.

‘விறுக்’கெனப் புறப்பட்டுச் செல்லும் ராதாவை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவின் கையில் Home Office இல் இருந்து வந்த கடிதம் படபடத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்ப்பதும் படிப்பதும் மடிப்பதும் விரிப்பதுமாக இருந்த கிருஷ்ணாவால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதில் எழுதப்பட்டிருந்ததன் சாராம்சம் இவ்வளவுதான் –

‘உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நீங்கள் இந்நாட்டில் தொழில்புரிய உரித்துடையவர் ஆகக் கருதப்படுகிறீர்கள்…’

[பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்திய ‘திருவள்ளுவர் விழா 2016 சிறுகதைப் போட்டியில் ஆறுதற் பரிசு பெற்ற சிறுகதை.]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *