லக்னோ வந்தப்பறம் எனக்கு அறிமுகமான கிராமியப் பாடகர் பூவன்.
“பாருங்க பிரபாகர்! என்னைப் பற்றி என்னிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு, அதைத் தீசிஸாக ‘பூவனின் கிராமியப் பாடல்கள்’னு எழுதி, பல்கலைக்கழகத்தில் கொடுத்து, முனைவர் பட்டம் வாங்கி, தங்களுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் ஏராளம். ஆனால் அவங்களை விடவும் கிராமியப் பாடல்களைப் பற்றி நன்றாக தெரிந்த நான், இன்னும் நடுத் தெருவில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அல்லாடிகிட்டிருக்கேன்..” என்று ஆத்திரத்துடன் சொன்னார். வீட்டுமுற்றத்தில் உட்கார்ந்து, அவர் முறையிடுவதைக் கேட்பதே அலாதியாய் இருக்கும். உள்ளே அவர் மனைவி சமையல் செய்து கொண்டிருந்தாள்.
புகைமூட்டம் முழுவதுமாய் மண்டி, அமைதியைக் கெடுத்தது.
எதிர்த்தார் போலுள்ள தெருக்கம்பத்தில் சோடியம் விளக்கு மினுக் மினுக் என விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. கம்பத்தில் தெருநாய் ஒன்று, காலைத்தூக்கி மூத்திரம் பெய்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து, பூவன் களுக் என்று சிரித்தார்.
“பிரபா! நாய் இப்படி எதாவது கம்பத்தைப் பார்த்தா போதும், காலைத் தூக்கிடும்.. அதுபோலதான் மனுசனும்… ஏதாவது ஒதுக்குப்புறமான இடத்தில், பள்ளத்தைப் பார்த்தால் போதும், அவனும் இப்படிதான் வேஷ்டியைத் தூக்கிடுவான்..”
நான் முகத்தைச் சுளித்தேன். “பூவன்! நீங்க ரொம்ப கவிச்சு மொழியில் பேசுவதினால்தான், பல்கலைகழகங்கள் உங்கள் திறனை மதிக்க மாட்டேங்குது,” என்று சொல்வேன். பூவனோ நான் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவர் பெரும் களிப்பில் இருந்தார்.
பூவன் இப்படிப் பேச ஆரம்பித்தால், செம மூடில் இருக்கிறார் என்று அர்த்தம் என்பது அத்தெருவில் நேற்று பிறந்த குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்..
எதற்கு நாயையும் மனுசனையும் சமபந்தப்படுத்தி பேசுகிறார் என்பதன் ரகசியம் எனக்குத் தெரியவில்லை; ஒருவேளை ஆண்டவனுக்குத் தெரியலாம். அவர் எப்போதுமே ஒரு கதையை ஆரம்பிக்கும் போது, இப்படிதான் ஒரு இக்கன்னா வைத்து ஆரம்பிப்பார். கதையின் விடையை அவிழ்க்கும் போது, இந்த இக்கன்னாவும் அவிழ்ந்து விடும். சிலநேரங்களில் இக்கன்னாவிற்கு விடையே சொல்லாமலும் கதை முடிந்து விடும்.
நான் அவரையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, ஏளனமாய் சிரித்தார். ஏதோ கஞ்சா அடித்தவன் மனநிலையில் இருந்தார். பனாரஸ் வெற்றியலையை மடித்துப் போட்டுக் கொண்டார். வசதியாய் உட்கார்ந்து கொண்டார்.
உள்ளிருந்து வந்த புகையில் படிந்திருந்த சோற்றுப் பருக்கையின் மணம், பசியைத் தூண்டியது. அவரது வாய் செந்தூரமாய் சிவந்து இருந்தது.
பீடிகையுடன் அவர் கதைச் சொல்ல ஆரம்பித்து விட்டார். கதையின் முடிவில், சில நேரங்களில் தெருக் கம்பத்து நாய்க்கும், வேஷ்டியைத் தூக்கும் மனுசனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கக் கூடும்; பல நேரங்களில் சம்பந்தம் இல்லாமலும் போகக் கூடும். சில நேரங்களில், கதையில் எந்தபகுதியிலும் எந்த தெருநாயும், எந்த வேஷ்டி கட்டும் மனிதனும் வராமலே கூட போகக் கூடும்.
“லக்னோவில் அந்த வருசம் நல்ல மழை. கோமதி நதியின் இருமருங்கிலும் தண்ணீர். கோமதி கதையில் இருக்கும் லஷ்மண் மைதானம் வெள்ளத்தில் மூழ்கிப் போச்சு. கழிவுநீர் அகழிக்கதவுகளை இறுக்கி மூடிவிட்டார்கள். இல்லையென்றால் அது வழியாக கழிவு நீர் ஆற்றுக்குள் போவதற்குப் பதிலாக, ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிடும்.
“மெள்ள மழை வெறித்து, ஆற்றில் அபாய மட்டத்திற்குக் கீழே நீர் வடிவதற்குள், தசரா வந்து விட்டது. ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. ‘நிறைய பண்டிகைகள் கொண்டாடும் எந்த ஊரும் சமூகமும் உருப்படாது’னு நம்ப கிராமங்களில் சொல்வாங்க. ஒரு வகையில் இந்தப் பண்டிகைகள் உழைக்கிறவனை, ஒரே நாளிலே செலவழிக்க வச்சு, ஒட்டாண்டியாக்க பாரம்பரியமாய் உருவாக்கப்பட்ட வழிமுறையோனு கூட எனக்குச் சந்தேகமுண்டு. இருக்கிற தீபாவளி தசரா ஆயுதபூஜை போதாதுனு, கல்யாணம் காதுகுத்து மூக்குவலினு இன்னும் எக்கச்சக்கமான பண்டிகைகள். இந்த லக்னோவும் பண்டிகைக் கொண்டாடுவதில், மற்ற ஊருக்கு இளைச்சதில்லை. தசரா வந்துட்டால், பத்துத் தலை கும்பகர்ணனைப் பட்டம் கட்டி, எரித்துச் சாம்பலாக்கும் வரை, ஊரிலே ஒரு பய உட்கார மாட்டான்.
“எனக்கும் தசரா வந்தால் சந்தோசம்தான். வேசம் கட்டி, தர்மம் எடுப்பேன். கஞ்சிக்குத் தட்டழிஞ்சு அலையறவன் கூட, தசரா காலங்களில் தர்மம் பண்ணுவான். கொஞ்ச காலமாவது, தான் தர்மபிரபுவாக இருக்கணும்னு எல்லாருக்கும் ஆசை உள்ளூர இருக்கும். அந்த ஆசை, வேட்கைதான், தசரா போது தர்மம் எடுக்கும், எங்களது மூலதனம். ஊரிலே உள்ள எல்லாரும், எல்லார் கிட்டேயும் தர்மம் கேட்டு அலைவாங்க..
“அப்ப ஒண்ணும் இல்லைனு சொல்லாம, நமக்கும் தர்மம் பண்ண வைக்கணும்னா, சில ‘டரிக்’ எல்லாம் செய்யணும். சொருகுவாள் முதுகு வழியா பாய்ந்து, மார்பைப் பிளந்து நெஞ்சுக்கு முன்னே ஒரு அடிக்கு நீட்டிக் கொண்டிருக்க, ஒரு மனுஷன் குத்துயிரும் குலைஉயிருமாய் ரோட்டில் நடமாடினால், அது யாரையும் திகில் அடைய வைக்கும்தானே? நானும் அந்த மாதிரி குத்துப்பட்ட ஆள் மாதிரியே வேசம் கட்டுவேன். ரத்தம் ரெண்டு பக்கமும் சொட்டிக் கொண்டிருப்பது போல தத்ரூபமாய் தெரியும். இப்படி வேசம் கட்ட, நிறைய மேக்கப் டெக்னிக் தெரிஞ்சிருக்கணும். கூடவே தப்பட்டை அடிக்க, முன்னா வருவான். ஒரு பாட்டில் சாராயம் கொடுத்த ஏற்றி விட்டா போதும். தாள் முழுசும் தளராம தட்டிகிட்டே இருப்பான். பவனாவை ஆட்டத்துக்கு வச்சுக்குவேன். அவ உடம்பை ‘கிண்’ணுன்னு வச்சிருப்பா. வருசா வருசம் அவ மார்பு தொய்வதற்குப் பதிலா, விம்மிகிட்டே போகும். ஆண்டவன் அவளுக்குக் கொடுத்த அருட்கொடை அது. அவ ஆட்டம் போட்டால், அந்தப் பகுதி ஆண்கள் பெண்கள் எல்லாம், கண்ணை உருட்டிக் கொண்டு, அங்கே இங்கே அகலாமல் உட்கார்ந்து பார்ப்பாங்க.
“கோமதி கரைக்குப் பக்கத்தில் ஒரு தீயணைப்பு அலுவலகம் இருந்தது. அதனருகேதான் எங்க நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுமாரான கூட்டம்தான். வட்டமாய் ஜனங்க உட்கார்ந்திருந்தாங்க. என்னையும் விட, பவனா ரொம்ப அசிங்க அசிங்கமா பேசுவா. (பெண்களின் ஜாக்கெட்டுக்கு உள்ளே என்ன இருக்குது? தீக்ஷித் மேடம் இதயம் மட்டும்தான் இருக்குதுனு சொல்றாங்க. அப்படியா? அந்த இதயம் மட்டும் உங்களுக்குப் போதுமா?) தூண்டி விடுகிற மாதிரி உள்ள அவ பேச்சைதான், ஜனங்க ரசிப்பாங்க..
“நான் பணத்துலே கண்ணும் கருத்துமா இருப்பேன். ‘ஐயாமார்களே! அம்மாமார்களே! நிறையா போடுங்க! வேசம் கட்டவே முன்னூறு ரூபா செலவு செஞ்சிருக்கேன்.. அது கூட தேறலைனா, செலவுக்குக் கடன் கொடுத்த மார்வாடி உடுத்தியிருக்கிற வேஷ்டி வரை புடுங்கிட்டு விட்டுருவான்..’ என்று ஜோக் மாதிரி சொல்வேன். ‘அப்படிப் புடுங்கிகிட்டானா, நான் உங்க முன்னாடி வந்து, அம்மணமா ஆடறதைத் தவிர வேற வழியே இல்லை. மேன்மை தங்கிய மகாஜனங்க, அதை விரும்ப மாட்டீங்க என்பது எனக்கு நல்லா தெரியும். பணத்தைக் கொட்டுங்க!! நா வாரி வாரி எடுத்துட்டுப் போறேன்..’ என்பேன். ஜனங்க சிரிப்பாங்க. முடிஞ்ச அளவுக்கு ஏண்டதைத் தருவாங்க.
“அப்பதான் என்னால் இனியும் அடக்கி கொள்ள முடியாது என்பது புரிந்தது. தப்படிக்கிறவன் கூட திட்டினான். ‘கண்ட எடத்துலேயும் தண்ணீயை இப்படி அடைச்சா, இப்படிதான் புடைச்சுகிட்டுதான் வரும். சீக்கிரம் போயிட்டு, வா!’ பவனா ‘கர்மம்’ என்று தலையில் அடித்துக் கொண்டாள். ‘படுக்கும் போது, ஒரு சொட்டு வராது. இப்பப் புடைச்சுகிட்டு இருக்கு, வெளியே போகாட்டா முடியாது. என்னய்யா நீ? அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு! உன்னை நினைச்சாலே எனக்குக் குமட்டுதய்யா!’ என ஆபாசமாய் திட்டினாள். பவனா வெறும் ஆட்டக்காரியா மட்டும் இல்லாம, என் பொண்டாட்டியும் ஆகிப் போனதால், என்ன ஏசினாலும் கேட்டுதானே ஆகணும்? முன்னாவுக்குதான பொறுக்க முடியாத ஆத்திரம் வந்தது. ‘இதுதான் பூவன் கூட வரப்படாது என்பது.. பாதி நேரத்தை, மூத்திரம் அடிப்பதிலேயே கழிச்சிடுவான்..’ என்று சொல்லி பொருமினான்.
“மழையில் காட்டுச்செடிகள் கோமதியின் இருமருங்கிலும் செழித்து வளர்ந்திருந்தது. ரெண்டு நாட்களுக்கு முன்னாடி மூர்க்கமாய் முறுமுறுத்த கோமதி, இன்று ரொம்ப அடக்கமாய் ஓடிக் கொண்டிருந்தது. அடர்ந்து கிடந்தச் செடிகளை விலக்கி, கொஞ்சம் மறைவாய் நின்று கொண்டு, பேண்ட் பொத்தானைக் கழற்றினேன். மூத்திரம் பெய்ய அரம்பிக்கும் போது, ஒரு அடி முன்னால் தவ்வுவது எப்போதுமே எனது வழக்கம். அப்போதுதான் மூத்திரம் பெய்வதற்கான, ஒரு அழுத்தம் கிடைக்கும். அப்படி நகர்ந்தப்பதான்……
” ‘அய்யோ!’ என்ற என் பெரும் சத்தம் கேட்டு, முன்னாவும் பவனாவும் ஓடி வந்தாங்க. செடிகளை விலக்கிப் பார்த்தால், நாலுக்கு நாலு அடியில் ஒரு பெரும் பள்ளம். உள்ளே நான் விழுந்து கிடந்தேன். முன்னேயும் பின்னேயும் வேசம் கட்டியிருந்த சொருகு வாள் முதல் கொண்டு எல்லாம், குலைந்து போய் கிடந்தது. 15 அடி ஆழமாவது உள்ளே போய் இருந்திருப்பேன்.
“பக்கத்திலுள்ள தீயணைப்பு ஊழியர்கள் வந்துதான், கயிற்றைப் பயன்படுத்தி, என்னை மேலே தூக்கினார்கள். ‘நான் இந்தத் தீயணைப்பு அலுவலகத்தில் பதினைந்து வருசமா வேலைப் பாக்கிறேன். இவ்வளவு பெரிய பள்ளம் இங்கிருப்பது, எனக்கு இத்தனை நாளாய் தெரியாது!’ என்று நெற்றியைச் சுருக்கிக் கொண்டு சொன்னார் தீயணைப்பு அதிகாரி ஒருவர்.
“அப்பதான் ஞானோதயமாக எனக்கு அது உதித்தது.. நான் எனக்குக் கிடைத்த அந்த ஞானத்தை உபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டேன்.. ‘அய்யாமார்களே! அம்மாமார்களே! இது வெறும் பள்ளமல்ல.. பெரும் சுரங்கப்பாதை! இந்த வருசம் மழை பெஞ்ச போது, கழிவுநீர் அகழிகளை இறுக்கமா மூடிப்புட்டாங்க.. கோமதியில் தண்ணீ விளிம்புக்கு ஓடிச்சு.. அதனால் இவ்வளவு நாளும் தூசியும் மண்ணும் போட்டு மூடிக்கிடந்த இந்த சுரங்கப்பாதை தன்னாலேயே திறந்துகிட்டுது.’ என்று தங்கமலை ரகசியம் சொல்வது போல சொன்னேன். ஒரு ஞானத்தை உபதேசித்துத் தீர்த்ததும், அடுத்த ஞானோதயம் தன்னால் சுரக்க ஆரம்பித்து விட்டது. அதையும் எப்படி வெளியே சொல்லாமல் இருக்க முடியும்? ஆகவே அறிவித்து விட்டேன்.. ‘நம்ப படா இமாம்பராவில் இருந்து, பைசாபாத்துக்கு ஒரு சுரங்கப்பாதை போகுதுனு, பல நாளா சொல்லிட்டு இருப்பாங்களே, தெரியுமா! அந்தச் சுரங்கப்பாதை இதுதான். இந்த வழியாதான் கடைசி ஆவாத் சுல்தான், இங்கிருந்து தப்பித்துப் போனார். ஆனா இதுக்குள்ள போனா ஆசாத் சுல்தான், கடைசி வரைக்கும் பைசாபாத்துக்குப் போய் சேரலையாம். எதுவும் குறுக்குவழியில் நேரா சொர்க்கத்துக்குப் போயிட்டாரா என்பதும் விளங்கலை..’ எல்லாரும் அரண்டு போய் நின்றார்கள்…..
“ஒரே ஒருத்தர் மட்டும் என் கதையை ஒத்துக்கலை. என்றாலும், அவரால் மாற்றுக் கதைச் சொல்லி, நான் சொன்ன கதையை மறுக்க, முடியலை. அவர் சொன்னார்: ‘பூவன் சொன்ன மாதிரியெல்லாம் கண்டிப்பா இருக்காது. ஒருவேளை படா இமாம்பரா நீர்பொழிலுக்கு, கோமதியில் நதியில் இருந்து நேரடியா, இந்தச் சுரங்கம் வழியா தண்ணீ போய் இருந்திருக்கலாம்..’
“அதற்குள் அங்கே பெரிய கூட்டம் கூடிவிட்டது. ‘உள்ளே என்ன இருந்தது?’ என எல்லாரும் என்னை நச்சரித்தார்கள். பதில் சொல்லாமல் தப்பிக்க முடியாது போல ஆகிவிட்டது நிலைமை. நான் பாட்டுக்கு அளந்து விட்டேன்.. ‘வெளவால் பீ நாத்தம்.. உள்ளே ஒரே இருட்டு.. ஒரு பாதை வடக்கால போறாப்பலே இருந்துச்சு.. வேற ஒண்ணும் தெரியலை!’
“எல்லாம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. இனி மேல் தர்மம் எடுக்க முடியாது. இன்னைக்கு வேசம் கட்டிய வகையில் மூன்னூறு ரூபா நஷ்டம். முன்னாவுக்குச் சம்பளம் வேற கொடுக்கணும். பவனா வேற அசிங்க அசிங்கமா ஏசுவா.. ஏதாவது பணம் கொடுக்காட்டா, மானம் கப்பலேறிடும்..
“அப்பதான் அந்த திட்டம் மனதில் பூத்தது. உடனே வருற ஆட்களை மறித்தேன்.. ‘ஆளுக்கு ஒவ்வொரு ரூபா கொடுத்துட்டுதான் உள்ளே சுரங்கப்பாதையைப் பார்க்கணும்னா போணும். இது ஆவாதின் கடைசி நவாப் பைசாபாத்திற்கு தப்பிச் சென்ற வழி!’ என்று சொல்லி வசூலிக்க ஆரம்பித்தேன். இப்படி இன்னைக்காக செலவை வசூல் செய்தால்தான் உண்டு. விஷயம் தெரிஞ்சு, தொல்லியல் அதிகாரிகளும் ஒரு குழுவா வந்துட்டாங்க.. ஆனா அவங்க ரொம்ப நல்லவங்க.. பார்க்க வந்த எல்லாரும் போலவே, அவங்களும் ஆளாளுக்கு ஒவ்வொரு ரூபா கொடுத்துட்டுதான் உள்ளே போனாங்க. ரொம்ப நல்லவங்க!
“அப்ப பாஜப் (பாரதிய ஜனதா பார்ட்டியை பாஜப் என்றுதான் சொல்வோம்) ஆட்சி உ.பி.யில் நடந்தது. வந்த தொல்பொருள் அதிகாரி ஒருவர், ‘இது கண்டிப்பா மொகலாயர் காலத்தில் கட்டின சுரங்கப்பாதையா இருக்காது,’ என சுரங்கத்தைப் பார்ப்பதற்கு முன்னரே தெளிவாகச் சொன்னார். “ஏன்?” என்று கேட்டான் முன்னா. அந்தப் பள்ளத்தின் முன்னுள்ள விளிம்பில் உட்கார்ந்திருந்த பவனா, ‘பாருங்க ஐயா! இந்தச் சுரங்கப்பாதைக்குள் போறதுக்கு முன்னாடியுள்ள விதானத்திலுள்ள வளைவைப் பார்த்தால், நம்பவூர் மசூதிலுள்ள பிறை போலவே உள்ளது. அதனால் இது முசல்மான் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்,’ என்றாள். ஒரு ரூபா கலெக்ட் பண்ணின ஜோரில், கூட்டத்தை அதிகம் கவர்ந்திழுக்கும் வகையில் ரொம்ப விளக்கம் கொடுத்து கொடுத்து, அவ்வளவு நேரத்திற்குள் அவங்க ரெண்டு பேரும் பெரிய வரலாற்று அறிஞர்களாய் உருமாறி இருந்தார்கள்.
“இதைக் கேட்டதும், அந்த தொல்பொருள் அதிகாரிக்குக் கடுமையான கோபம் வந்தது. ‘நீங்களே இது மொகலாய கலைச்சின்னம் பதித்த சுரங்கம்னு அறிவிச்சிடுவீங்க போலிருக்குது. இப்படி ஒரு கருத்து, பொதுமக்களிடம் பரப்ப படுவது, நம்ப மாநில அரசுக்குத் தெரிந்தால், அது ரொம்ப வருத்தப் படும்..’
“அவர் சொல்வது விளங்காமல், ‘சரி, மாநில அரசு வருத்தப்படட்டும். இதன் மூலமா, நீங்க என்னதான் சொல்ல வரீங்க?’ என்று கேட்டேன். ‘இது சுதந்திரத்துக்குப் பிறகு கட்டின கட்டிடம்தான். கண்டிப்பாக மொகலாயர்கள் காலத்தில் கட்டி இருந்திருக்க முடியாது,’ என்றார். ‘சரி அப்படியே இருக்கட்டும். சுதந்திரத்துக்குப் பிறகு எதுக்காகக் கட்டீனாங்க?’ என்று நான் கேட்டேன். அதிகாரியின் விழி பிதுங்கி விட்டது. ‘அதை எப்படி உடனே என்னால் சொல்ல முடியும்? இது குறித்து ஆய்வு செய்ய வேண்டாமா?’
“சுரங்கத்தை காண வந்திருந்த ஒருத்தருக்கு ஆத்திரம் பற்றி கொண்டு வந்தது. ‘இந்தச் சுரங்கத்தைப் பார்ப்பதற்கு முன்னாடியே, இது மொகலாயர் கட்டினது இல்லை என்பதை மட்டும், இப்படி அடிச்சு ஆய்வு கூட ஏதும் இல்லாம சொல்றீங்க? மற்றதைச் சொல்றதுக்கு மட்டும் ஏன் இவ்வளவு தயக்கம்?’ என்று அவர் கேட்டார்.
“அதற்குள் ஒரு காவி அணிந்த சாமியார் வந்து விட்டார். எந்த நுழைவு கட்டணத்தையும் கொடுக்க மறுத்து விட்டார். கையில் ஒரு நாமக்கட்டியுடனும், நெற்றியில் சந்தனப் பொட்டுடனும் காட்சி அளித்தார். ‘இது பகவான் ராமர், காட்டுக்குப் போறதுக்குப் பயன்படுத்திய சுரங்கப்பாதை..’ என்று ஒரு புதுகுண்டைத் தூக்கிப் போட்டார். ‘பகவான் நேர்பாதையில் காட்டுக்குப் போயிருக்கலாமே? ஏன் சுரங்கப்பாதையைப் பயன்படுத்தினார்?’ என்று முன்னா தன் சந்தேகத்தைக் கேட்க, ‘அபச்சாரம்!’ என்று முன்னாவை ஓரம் தள்ளி முன்வந்த தொல்துறை அதிகாரி, சாமிஜியை வணங்கி நின்றார். ‘ராமர் பயன்படுத்தி பாதைதான் என எப்படிச் சொல்றீங்க, சுவாமிஜி! கொஞ்சம் விளக்கமாய் சொன்னால், நான் குறிப்பு எடுத்துக் கொள்வேன்.. ஏதாவது ஆதாரம் இருந்தாலும் சொல்லுங்க. நாளைக்குப் பத்திரிகைக்குச் செய்தி கொடுக்கவும் வசதியாக இருக்கும்..’ என்றார் அவர்.
“உடனே சாமியார் தொடர்ந்தார்: ‘தசரதன் கொடுத்த வரத்தைப் பயன்படுத்தி, அந்த ராட்சசி கைகேயி ராமர் பெருமானைக் காட்டுக்குப் போகச் சொல்லிட்டாள். அப்படிக் காட்டுக்குப் போனப்ப, ராமச்சந்திர மூர்த்தி இந்தச் சுரங்கப்பாதையைதான் உபயோகித்தார். இதை இந்துஸ்தானில் உள்ள 100 கோடி ஜனங்களும் நம்பறாங்க. இந்த நம்பிக்கைக்கு மேலும், உங்களுக்கு என்ன ஆதாரம் வேண்டும்?’ குத்திக் கிழிப்பது போல கேட்டார்.
“ எனக்கோ அவர் சொல்வது ஒன்றும் புரிபடவில்லை. ‘நூறுகோடி மக்களுக்கு ராமபெருமான் கைகேயினால் காட்டுக்குப் போனார் என்பது தெரியும். ஆனா இந்தச் சுரங்கப் பாதை வழியாதான் போனாரானு தெரியாது,’ என விபரம் புரியாமல் கேட்டு வைத்தேன். சாமியாருக்கு கோபம் விஷம் போல் தலையில் ஏறியது. ‘ராமர் காட்டுக்குப் போனார் என்றால், வேற எப்படிப் போயிருந்திருப்பார்? இந்தச் சுரங்கப்பாதை வழியாதான் போனார்,’ என்று அடித்துச் சொன்னார். அவரது உறுதியைப் பார்த்ததும், நானும் அவர் கூற்றை நம்பி விட்டேன். பக்கத்திலுள்ள பக்த ஜனங்கள், ‘ராம்… ராம்… சீதாராம்…’ எனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.
“எனக்குக் கண்ணில் ஜலம் கட்டிக் கொண்டது. ‘பகவான் ராமர் இந்த வழியாதான் காட்டுக்குப் போயிருந்திருக்கிறார். அது புரியாம, இந்தப் புனித மண்ணில் நான் மூத்திரம் பேஞ்சிட்டேன். எனக்கு ஏழு ஜென்மத்திலும், சுவர்க்கம் கிடைக்காது.’ பவனாதான் என்னை ஆறுதல் படுத்தினாள். ‘தூ! பூவன்! சும்மா கெட! நீ மூத்திரம் பேஞ்ச எடத்து வழியா வந்ததினாலேதான், ராமருக்கு ஏழேழு ஜென்மத்துக்கும், சுவர்க்கம் கிடைக்கலை. கடைசியில் சரயூ நதியில் தற்கொலை செய்து கொண்டு மாண்டான். மக்கள் ராமபிரான் ஜலசமாதி அடைந்து விட்டதாய் பிரதாபம் செய்து விட்டார்கள்..
“பார்வையாளர்களில் ஒருவர்,’அதோ உள்ளே பாருங்க… கல்லுக்குள் கீல் வைத்து அடித்து மாட்டிய ஒரு கதவு இருக்குதுல்ல.. அதிலுள்ள மரத்தைச் சிறிது சுரண்டி எடுத்து, கார்பன் டேட்டிங் செய்தால், எத்தனை வருசத்துக்கு முன்னாடி இந்தக் கதவைச் செய்தார்கள் என்று கண்டுப் பிடித்து விடலாம்..’ என்றார். அதை தொல்லியல் மறுத்து விட்டார். ‘மத்திய அமைச்சகத்தின் அனுமதியின்றி, நாங்களா எந்த ஆராய்ச்சியையும் இங்கே செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அரசியல்ரீதியில் ஏற்படும் பிரசினைகளை யார் சமாளிப்பது?’
“அதற்குள் சாமியார் நாமகட்டியால் சுரங்கத்தின் விதானத்தில் ‘ஓம்’ எழுதி நாமம் போட்டார். பிறகு என்னைப் பார்த்து, ‘மகனே! இதுவரைக்கும் நீ இதைக் காண வந்த பக்த கோடிகளிடம் சேகரித்த தொகையை என்னிடம் கொடுத்து விடு! நாம் இன்னும் பெரும் பணம் வசூலித்து, இங்கே பகவானுக்கு ஆலயம் ஒன்று கட்டுவோம்,’ என்றார். பணத்தை பவனாதான் வைத்திருந்தாள். சாமியார் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதுதான் தாமதம், மாயக் கண்ணன் போல் மறைந்து விட்டாள்.”
“பின்னே என்னாச்சு?” என்று அடக்க முடியாத ஆச்சரியத்துடன் நான் கேட்டேன்
“கட்டி வச்சுட்டாங்கப்பா.. ‘பகவான் பைசாவைக் கொடுக்காம, நீ எங்கேயும் போக முடியாது,’னு சாமியார் சொல்லிட்டார். ராத்திரி வரைக்கும் குடல் சுருங்கிப் போய் அப்படியே கிடந்தேன். ராத்திரி நெருங்க நெருங்க கூட்டம் சுத்தமா இல்லாம போச்சு. சாமியாருக்கும் பசித்திருக்கும் என நினைக்கிறேன். சாப்பிட எங்கேயோ போயிட்டார்.. அப்பதான் அங்கே மறைந்திருந்த பவனாவும் முன்னாவும் வந்தாங்க.. கட்டுகளை அவிழ்த்து, என்னைக் காப்பாற்றினாங்க..
“எனக்குத் திரும்பி போகும் போது, சாமியார் மேலே சரியான ஆத்திரம்.. ‘இந்தச் சாமியார் பய, நம்ப பைசாவை அடிக்கிறதுக்குதான் ராமர் இந்த வழியா போறதா புளுகுறான். உண்மையில் அவனுக்கு ராமபக்தி எல்லாம் கிடையாது,’ என்றேன்.
“அதுக்குப் பவனா, ‘நீ ஆவாத் சுல்தான் போனாருன்னு புளுகினே! சாமியார் ராமர் போனார்னு புளுகினார்.. எல்லாம் சரியாப் போச்சு!’ என்றாள்.
“ஆனால் நான் பவனாவிடமும், முன்னாவிடமும் திட்டவட்டமாகச் சொல்லி விட்டேன்: ‘அந்தச் சாமி இப்பத் திரும்பி வந்து விடுவார். நாம் கொஞ்ம் நேரம் இங்கே மறைவா நின்னு, அந்தச் சாமியார் என்னதான் செய்றாருனு பாப்போம்!’ நாங்க மூணு பேரும் போய், மறைவா நின்னுகிட்டோம். சாமி திரும்பி இருக்கவிலலை. கொஞ்சம் நேரம் கழித்துதான், சாப்பாட்டுக் கட்டுடன் வந்தார்.
“வந்ததும் காணாமல் போன என்னை முனைப்பாகத் தேடினார். நான் கிடைக்க மாட்டேன் என்று மனதில் பட்டதும், சீக்கிரமே தேடுவதைக் கைவிட்டார். நான் காணாமல் போனதற்காக, அவர் வருத்தப்பட்டது போல் எல்லாம் தெரியவில்லை.
“சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்தார்.. மட்டன் பிரியாணி. நான்-வெஜ் சாமியார் போலிருக்குது. எலும்புகளைப் பத்ரகாளி போல் உறிஞ்சி சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்ததும், சின்னதாய் ஏப்பம் விட்டார். ஆற்றில் போய், கையைக் கழுவி, தண்ணீரைக் குடித்தார். பிறகு வந்த அந்தத் தேவடியா சாமியார் என்னக் காரியம் பண்ணினார் தெரியுமா?” பூவன் அழுது கொண்டே கேட்டார்..
“என்னப் பண்ணினார்? உங்க மூணு பேரையும் கையும் களவுமா பிடிச்சுட்டாரா?” என்று கேட்டேன்..
“அப்படி எல்லாம் பண்ண முடியுமா? நாங்க மூணு பேரு! பழி பாவம்னா என்னனு தெரியாதவங்க.. அவனோ ஒற்றைக்கு ஒற்றை.. அவனை வெட்டி, எண்ணை வாணலியில் வச்சு பொறிச்சு, பொதைச்சுட மாட்டோம்..? அவன் நேரா வந்து,” விதானத்து மேலே நின்னு கொண்டு, அந்தக் கேடு கெட்ட காரியத்தைச் செய்தான். பவனா கூட, வெட்கத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.”
அவன் என்ன செய்தான் என்பதைத் தவிர வேறு அனைத்தையும் சொல்லி, பில்ட்-அப் கொடுத்தார். “சும்மா சஸ்பென்ஸ் வைக்காம, சட்டுபுட்டுனு சாமியார் என்ன செய்தார் என்பதைச் சொல்லி தொலயுங்களேன்!” என்று நான் கூட ஆத்திரத்தில் கத்தினேன்.
“விதானத்து மேலே நின்னு, சுரங்கத்துக்குள் வேட்டியைத் தூக்கி மூத்திரம் அடித்தார்,” என்று சொல்லும் போது, பூவன் அழுதே விட்டார். “ராமபிரான் இந்த வழியாதான் வந்தார் என்று சொல்லிவிட்டு, அந்த எடத்துலேயே எப்படிடா ஒரு சாமியாராலேயே முத்திரம் அடிக்க முடியுது?” என்று கேட்ட பூவன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
கதை புஸ்ஸென போய் விட்ட அதிருப்தியில் நான் உட்கார்ந்திருந்தேன்.
ஆனால் பூவன் கதையை இன்னும் முடிக்கவில்லை: “அதுக்காக நாம்ப சாமியாரையும் குறை சொல்ல முடியாது. ஏனா பள்ளத்தைப் பார்த்தா, ஆம்பளைகளுக்கு மூத்திரம் அடிக்கணும்னு தோன்றுவது யதார்த்தம்.. அதாவது நாய்க்கு, விளக்குக் கம்பத்தைப் பார்த்ததும், காலைத் தூக்கி மோளணும்னு தோணுது இல்லையா? அது மாதிரி!”
முகத்தைச் சுளித்துக் கொண்டு, நான் பேசாமல் உட்கார்ந்து இருந்தேன்..