கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 13,300 
 
 

ஏழாவது முறையாக புங்கமரத்தில் ஏறிய துரைமுருகன் கிளைகளில் கால்வைத்து, புங்கை சுளிர்கள் கண்களை குத்தி விடாதபடி தலையை இப்படியும், அப்படியுமாய் வளைத்து ஏறி மரத்தின் உச்சிக்குப் போனான்.

அந்த உயரமானக் கிளையின் முனையில் பல கைகளைப் போல நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருந்த மண்டைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஆற்றங்கரையை நோக்கி பார்வையைக் கூராக்கினான்.

அவனுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. காய்ந்து, கரம்பான வயல் வெளிகளும், அதைத் தொடர்ந்த எட்டிக்கால்வாயும், அதன் முடிவில் நீண்ட வேட்டியைக் காயவைத்தது போன்ற ஆற்றங்கரையும் வெறுமையாய் தெரிந்தன.

நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். சூரியன் இன்னும் சிறிது நேரத்தில் உச்சிக்கு வந்து விடுவான். ஆனால் இன்னமும் அவனது அப்பாவைக் காணவில்லை.

அவனது அப்பா சிப்பாய் கணேசன் பட்டாளத்திலிருந்து விடுமுறையில் ஊருக்கு வருகிற ஒவ்வொரு முறையும் இதே புங்கமரத்தின் உச்சியில் ஏறி நின்று ஆற்றங்கரை இறக்கத்தில் அவர் உருவம் தெரியத் தொடங்கியதுமே சரசரவென்று இறங்கி, அவரை நோக்கி கண்மண் தெரியாமல் ஓடுவான்.

ஆயிற்று, சூரியன் உச்சிக்கும் வந்து விட்டான். இந்நேரத்துக்கு அவர் வந்திருக்க வேண்டும். சூரியன், உச்சியைக் கடப்பதற்குள் அவரது தலை ஆற்றங்கரையில் முளைக்கத் தொடங்கி விடும். அதுவே அவனுக்கு வாழ்க்கையின் அற்புதத் தருணமாக அமைந்துவிடும் ஒவ்வொரு முறையும்.

ஊரின் கிழக்கு பக்கமிருக்கும் காட்டுக்கு அந்தப்புறம் காலை நேரங்களில் செக்கச் செவேலென்றும், அதில் மஞ்சளைக் கரைத்து மேலாக்க தெளித்ததைப் போலவும் வட்டமாக முறைக்கிற சூரியனைப் பார்த்து இவனது தாத்தா தலைக்குமேல் கைகளைத் தூக்கிக் கும்பிடுவார். வெதுவெதுப்பாக கருக்கலில் முளைக்கத் தொடங்குகிற சூரியனைப் பார்க்கப் பார்க்க தாத்தாவுக்கு மனசு குதிபோடும். அவர் முகத்தில் சூரியனுக்கு இணையாய் ஒளி பிரகாசிக்கும்.

நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு , சூரியனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, ஏர் கலப்பையை தோளில் வைத்துக் கொண்டு காளை மாடுகளை ஓட்டிக்கொண்டு காட்டுக் கொள்ளைக்கோ, வடவாண்டை மேட்டுக் கழனிக்கோ, கிணற்று நிலத்துக்கோ போவார்.

இது அடிக்கடி நடக்கும். சூரிய உதயம் அவருக்கு பார்க்கப் பார்க்க அலுக்காது.

ஆனால் இவனுக்கோ மேற்குப்புறமுள்ள ஆற்றங்கரையில் ஆண்டுக்கொரு முறை நண்பகல் வேளையில் இவனது அப்பாவின் தலை முளைக்கத் தொடங்கும் காட்சிதான் அற்புதமானது. அந்த காட்சிக்காகத்தான் அந்த நாளில் காலையி லிருந்து மரத்தின் உச்சியில் ஓணானைப் போல் ஒட்டிக் கொண்டிருப்பான்.

ஆறாவது வகுப்பிலிருந்து இப்போது ஏழாவது வகுப்புபோயிருக்கிறான் துரைமுருகன். ஏழாவது பாடங்கள் எல்லாமே அவனுக்கு ரொம்பவும் சுலபமாக இருந்தன. ஒன்றாவது வகுப்பிலிருந்தே இவன்தான் வகுப்பில் முதல் இடம். இது அவனது அப்பாவுக்கு மிகப் பெரிய பெருமை.

அவர் வந்ததும் ஏழாவது வகுப்பு தமிழ்ப்பா டத்தில் உள்ள மனப்பாடப் பகுதிகள் எல்லாவற்றை யும் மூச்சுவிடாமல் சொல்லிக்காட்ட துடித்துக் கொண்டிருந்தான் அவன்.

ஆனால் ஏன் இன்னும் வரவில்லை. அப்பா ஜூலை 21 ஆம் தேதி சனிக்கிழமை வருவதாக பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே கடிதம் எழுதி இருந்தார்.

இந்த பதினைந்து நாட்களை கழிக்க அவன் பட்ட அவஸ்தைகள் அவனுக்குத்தான் தெரியும். அப்பாவின் நீலநிறக் கடிதத்தைப் படித்ததிலிருந்து தரையில் கால் பதியாமல் நடந்து கொண்டிருக் கிறான். பள்ளி திறந்து ஒரு மாதமே ஆகியிருந்ததால் குறைவான பாடங்களே நடத்தி இருந்தார்கள். ஆனால் துரைமுருகனோ நடத்தாத மனப்பாடப் பகுதிகளை எல்லாம் இந்த பதினைந்து நாளில் மனப்பாடம் செய்துவிட்டு தயாராகி விட்டான்.

ஒப்படைக்க ஆரம்பித்தால் மூச்சுவிடக்கூட நேரம் எடுக்காமல், வைகாசி மாத மழை மாதிரி சடசட வென்று கொட்டித் தீர்த்து விட வேண்டும். அப்பா திகைத்து, வாயடைத்துப் போய் இவனையே பார்க்க வேண்டும்.

மீண்டும் பார்வையைக் கூர்மையாக்கி ஆற்றங்கரையைப் பார்த்தான். இடையில் மேய்ந்து கொண்டிருந்த சில மாடுகளையும் தலையில் டவல் சுற்றிய சில மாட்டுக்காரர்களையும் தவிர புதிதாய் எதுவும் பார்வையில் படவில்லை.

ஆடி மாதக்காற்று சுற்றிச் சுற்றி அடித்துக் கொண்டிருந்தது. இவன் நின்று கொண்டிருந்த கிளை இவனோடு சேர்ந்து சுழன்று சுழன்று ஆடியது. கைகளைச் சுற்றி கெட்டியாகக் கிளையை அணைத்துக் கொண்டு நின்றான். இப்போது அம்மாவோ, ஏன் அப்பாவோ பார்த்தால் கூட இவனைக் கட்டாயம் திட்டுவார்கள். கீழே விழுந்தால் கை, கால் முறிந்து போவது தப்பாது.

போன முறையும் இதே மாதிரிதான் ஏறி நின்று கொண்டிருந்தான். அது சித்திரை மாதம், மரங்கள் அசையாமல் தவம் கிடந்தன. உச்சியில் சூரியன் நெருப்பாய் தகித்துக் கொண்டிருக்க, வியர்த்து வழியும் முகத்தைக்கூட துடைக்காமல், சுவற்றில் படபடக்கும் பூச்சியைப் பிடிக்க, அசையாமல் கிடக்கும் பல்லியைப் போல வைத்த கண் வாங்காமல் ஆற்றங்கரையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சூரியன் சரியாய் நடு மண்டையில் உறைத்துக் கொண்டிருந்த போது, தோளில் பச்சை நிற மிலிட்டரிப் பையோடு ஆற்றங்கரை மேட்டில் இவனது அப்பாவின் தலை தொடங்கியதும், குபீரென்று பற்றிக் கொண்ட சந்தோஷத்தோடு சரசரவென கீழே இறங்கினான். புங்க விளார்கள் சுரீர் சுரீர் என முகம், கை, கால், உடல் என விளாசியது. எதுவும் உரைக்காமல் கீழே இறங்கிக் குதித்து வீட்டைப் பார்த்து ஓடினான்.

ஏரிக்கோடியைக் கடந்து, ஆலமர நிழலில் டவலால் விசிறிக் கொண்டு உட்கார்ந்திருந்த கோனேரிக் கிழவனைத் தாண்டி வீட்டு வாசக்காலில் முட்டிக்கொண்டு நின்றான். “மாவ்.. .அப்பா வர்றாங்க.. அப்பா வர்றாங்க…” என்று மூச்சிரைக்கக் கத்திவிட்டு மீண்டும் அதைவிட வேகமாய் ஆற்றங்கரையை நோக்கி ஓடினான்.

அரை மைல் தூரத்திலேயே இவனைப் பார்த்து கையசைத்த இவனது அப்பா, கையை உயர்த்தி என்னவோ சொல்லிக் கொண்டே வந்தார்.

ஒரே மூச்சில் ஓடிப்போய் அப்பாவின் எதிரில் நின்றவனுக்கு பெருமூச்சு வாங்கியது. “டக்கு ‘டக்கு” என்று இதயம் அடித்துக் கொண்டது.

இன்னாத்துக்குடா இப்டி கண்ணு மண்ணு தெரியாம ஓடியார்ற, “மெதுவா வர்றது” என்று மிலிட்டரிப் பையைக் கீழே வைத்துவிட்டு இவனை இழுத்துத் தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டார் அப்பா.

“தொர.. நல்ல கிறீயா.. அம்மா நல்லா கீதா… ரமேசு. குட்டிப்பையன் பாலா, குட்டிப் பொண்ணு ரேவதி, பாட்டி எல்லாம் நல்லா கீறாங்களா… நல்லா படிக்கிறியா …” என்றார்.

“நல்லா கீறாங்கப்பா.. நானும் நல்ல படிக்கிறேன்… நான்தான் பர்ஸ்ட் ரேங்குப்பா.. இங்கிலீசுலகூட நான்தான் பர்ஸ்ட்ப்பா..”. என்றான் மூச்சு வாங்க.

நிறை மாத எருமை மாட்டின் வயிற்றைப் போல உப்பிக் கொண்டிருந்த அந்த பச்சை நிறப் பையின் ஜிப்பைத் திறந்து ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து இவனிடம் நீட்டினார்.

அதை வாங்கி முகர்ந்துப் பார்த்தான். அந்த பையின் வாசனை, பழத்தின் வாசனை, அதனோடு ஒட்டிக் கொண்டு பயணம் வந்த ரம் பாட்டிலின் வாசனை எல்லாம் சேர்ந்து அடித்த அந்த ‘மிலிட்டரி வாசனை’ அவனுக்கு கிரக்கத்தைத் தந்தது.

மூட்டையைத் தூக்கி தோள் மீது வைத்துக் கொண்டு இவனது கையைப் பிடித்துக் கொண்டு அவர் நடக்க, இவன் ஆப்பிளைக் கடித்து மென்றபடி வளவளவென்று பேசிக் கொண்டே நடந்தான்.

“இன்னா மச்சாங்… பட்டாளத்தல இருந்து இப்பதான் வர்றதா…” என்றார் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தனகோட்டி தாத்தா.

“ஆமா மாமா … எப்டி சேம லாபம்.. நல்ல கீறிங்களா… அப்பறமா ஊட்டுக்கு வாய்யா மாமா” என்றார்.

போன மாதம் ஏரியில் மீன் பிடித்தது. வயல் வரப்பில் இருந்த எலி வளையில் தண்ணீர் ஊற்றிய போது புதுக்கென்று பாம்பு வந்தது, நடுத்தெரு கோமதி அத்தைக்கு மூன்றாவது பெண் பாப்பா பிறந்தது. வீட்டிற்கு பின்னால் உள்ள மாட்டுத் தொழுவத்தில் ‘இந்தா பெரிய்ய’, கட்டுவிரியன் பாம்பு அடித்தது என்று சலசலவென சொல்லிக் கொண்டே வந்தான் துரை.

ஆலமரத்தின் நிழலில் அப்போதும் விசிறிக் கொண்டிருந்த கோனேரித்தாத்தா… “இன்னாடா மச்சான்… பட்டாளத்துல இருந்து பலமா வர்ற போலக்கீது.. இதுக்குத்தான் உம்புள்ள காலு வெரலு கூட மண்ணுல படாம ஓடியாந் தானா?” என்று கேட்டார்.

“பலந்தான்” மாமாவ்… அப்புறமா ஊட்டுக்கு வா” என்றார்.

‘அப்புறமா என்னா தே… பின்னாலயே வர்றேன்…” என்றார்.

வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தனர். இவனது அம்மா சுகுணாவும், பாட்டியும், பக்கத்து வீட்டு பெரியம்மாவும். இவர்களைக் கண்டதும் தம்பிகள் இருவரும் ஓடி வந்து அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டனர்.

இவனது அம்மாவின் முகத்தில் வெட்கம் படர்ந்தது. ஒரு வயது தங்கச்சி பாப்பா அவள் இடுப்பிலிருந்து நழுவிக் கொண்டிருந்தது.

அதை அப்பாவின் கையில் கொடுத்துவிட்டு, சொம்பில் தண்ணீர் மொண்டு வந்து கொடுத்தாள். இடது கையில் மார்போடு குழந்தையை அணைத்துக் கொண்டு, சொம்பை வாங்கி கட கட வென்று தண்ணீரைக் குடித்தார். பாப்பாவுக்கு முத்தங்களைக் கொடுத்தார்.

“அடடே … என் எலிக்குட்டி, பட்டுக்குட்டி உங்கம்மா மாதிரியே கண்ணும் வாயும், மூக்குமா கீறியே..” என்று கொஞ்சினார்.

குழந்தையைக் கொடுத்துவிட்டு லுங்கியும் டவலும் எடுத்துக் கொண்டு குளிக்க புறக்கடைப் பக்கம் போனார். அடுப்பில் தக தகவென காய்ந்து கொண்டிருந்த வெண்ணீர் குண்டானைத் தூக்கிக் கொண்டு பின்னாலேயே போனாள் சுகுணா.

“இந்தாமே சுடுதண்ணீ” என்றாள்.

“ஏய்.. இந்த வெய்யில்ல சுடுதண்ணியா.. பச்ச தண்ணியே ஊத்திக்கிறேண்டி” என்றார்.

“ம்கூம்.. .சுடுதண்ணீயே ஊத்திக்கமே … ரயில்ல வந்தது ஒடம்பு நோவுல்லாம் போவும்..” என்றாள் சுகுணா..

அவர் குளித்துவிட்டு வருவதற்குள் அக்கம் பக்கத்தினர் ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினர்.

“இன்னா மாமா நல்லா கீறியா? சித்தப்பா.. அந்தப் பக்கம் ரொம்ப குளிராமே? இன்னானா… எத்தினி நாளு லீவு. 60 நாளா… 45 நாளா? மச்சானோ பலமா கொண்டாந்து கீறியா… சாயந்தரம் மஜாதானா?” வித விதமான விசாரிப்புகள், எதிர்பார்ப்புகள். எல்லோருக்கும் ஓயாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

பச்சைப்பையின் ஜிப்பை இழுத்துத் திறந்து அதனுள் இருந்த ஆப்பிள், ஆரஞ்சு, மிக்சர், இனிப்பு வகைகள் என ஒவ்வொன்றாக எடுத்து சுகுணாவிடம் கொடுத்தார். உள்ளே கிளிங் கிளிங் என பாட்டில்கள் இடித்துக் கொள்ளும் ஓசை.

அம்மாவுக்கு கம்பளி சால்வை. குழந்தைகளுக்கு புதிய சட்டைகள், டவுசர்கள், புடவைகள், கம்பளிகள் எல்லாம் கொண்டு வந்த கட்டைப்பெட்டி பேருந்து நிறுத்தத்தில் உள்ள மேஸ்திரி வீட்டில். அதைக்கொண்டு வர இவனது மாமா சண்முகமும் மணியும் சைக்கிளை வேகமாக மிதித்துக் கொண்டு போனார்கள்.

ஒரு பாட்டிலைத் தட்டித் திருகி திறந்தார் கணேசன். கண்ணாடி கிளாசில் கால் பகுதி வரை ஊற்றினார். தங்க நிறத்தில் தகதகவென இருந்த அதனோடு தண்ணீரை ஊற்றிக் கலந்து ஒரே மூச்சில் குடித்தார். அதற்குள் நாட்டுக்கோழி முட்டையை உடைத்து ஊற்றி, முருங்கைக் கீரையும் வெங்காயமும் போட்டு வறுத்து தட்டில் போட்டுக் கொடுத்தாள் சுகுணா.

சப்புக்கொட்டிக்கொண்டு தின்றவர், துரைக்கும் தம்பிகளுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத் தார்.

“தொர.. ஒரு மீங்கி குடிக்கிறியா?” என்று இவனைப் பார்த்துக் கண்ணடித்தார். இவன் வெட்கப்பட்டுக்கொண்டு கீழே பார்த்தான்.

“அய்யே… கொய்ந்தகிட்ட இன்னா.. கேள்வி இது..” என்றாள் சுகுணா.

“அப்போ நீ கொஞ்சம் குடிக்கிறியா” என்று மனைவியைப் பார்த்து கண்ணடித்தார். இவள் இவனைவிட அதிகமாக வெட்கப்பட்டாள். அவனது பாட்டி பார்வதியம்மாள் இதனைக் கண்டும் காணாமலும் வெளியே குழந்தையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

களியும், முருங்கைக்காய் குழம்பும் சுடச்சுட ருசித்து சாப்பிட்டுவிட்டு திண்ணையில் போய் உட்கார்ந்தார்.

அவர் லீவில் வந்து விட்டால் போதும். தினமும் ஊர்க்காரர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் வந்துவிடுவார்கள். யார் வந்தாலும் உள்ளே அழைத்துப் போய், பாட்டிலைத் திறந்து கிளாசில் ஊற்றி தண்ணீர் கலந்து கொடுப்பார். கூடவே அவரும் ஊற்றிக் கொள்வார். பின்னர் திண்ணையில் உட்கார்ந்து பட்டாளத்தில் நடந்த கதைகளை சொல்லிக் கொண்டிருப்பார். துரை வெளியே எங்கும் நகரமாட்டான். அவர்களையே சுற்றிச் சுற்றி வருவான்.

இரவில் பாட்டி திண்ணையில் படுத்துக் கொள்ள, அப்பா, அம்மா, துரை, தம்பிகள் , பாப்பா எல்லோரும் வீட்டில் வரிசையாய் படுத்துக்கொள்வார்கள். விளக்கை நிறுத்திவிட்ட பின்பும் இவன் ‘தொண தொண’ என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான்.

நிறைய கதைகள் சொல்வார். அவை எல்லாமே நிஜமாக நடந்தவை என்று சொல்வார். அவற்றைக் கேட்கக் கேட்க இவனுக்கு அப்பா மீது பெருமையாக இருக்கும். அதையெல்லாம் மறுநாள் அப்படியே பள்ளியில் சொல்வான். இவனை அவர்கள் பெருமையாகப் பார்ப்பார்கள்.

ஒரு முறை பாக்கிஸ்தானுக்கு பக்கத்தில் ஒரு காட்டில் இவன் அப்பாவும், இன்னும் நான்கு பேரும் மாட்டிக் கொண்டார்களாம். அப்போது பாகிஸ்தான் காரனின் குண்டுகள் அங்கங்கே விழுந்து வெடித்துக் கொண்டு இருந்ததாம் .ஒரே இருட்டு. பசி. வழியும் தெரியாமல் மேடு பள்ளமும் தெரியாமல் நடந்து, தவழ்ந்து படுத்து ஒரு வழியாய் அங்கிருந்த ஒரு கிராமத்திற்குப் போனார்களாம். மூன்று நாட்களாக பட்டினி. பசி, தாகம்.

இருட்டில் அந்த ஊருக்குள் நுழைந்தவர் களுக்கு, அது பாக்கிஸ்தான் கிராமமா, இந்திய கிராமமா என்று தெரியவில்லையாம். அது பாகிஸ்தான் கிராமமாக இருந்துவிட்டால், ஜனங்களே இவர்களை அடித்துக் கொன்றுவிடு வார்களோ என்று பயம் வேறு.

ஐந்து பேரும் யூனிபார்மோடு அந்த கிராமத்துக்குள் இருட்டோடு இருட்டாக நுழைந்து மறைந்து மறைந்து ஒரு வீட்டிற்குள் போனர்களாம். பசிக்கு ஏதாவது வேண்டுமே.

அந்த வீட்டினுள் நுழைந்ததும், திருடர்கள் வந்துவிட்டதாக நினைத்து அந்த வீட்டுக்காரன் கத்தி, கூச்சல் போட, ஊரே சேர்ந்துவிட்டதாம்.

தொலைந்தோம் என இவர்கள் நினைத்துக் கொண்டு, துப்பாக்கி தூக்கிக் கொண்டு நிற்க, நல்ல வேளையாக அது இந்திய கிராமம். இவர்களை அடையாளம் தெரிந்து கொண்ட கிராம மக்கள் சப்பாத்தியும், சப்ஜியும், வயிறு முட்ட போட்டு, தூங்க வைத்து, மறுநாள் வழி சொல்லி அனுப்பி வைத்தார்களாம்.

இந்தக்கதையை விளக்கை அணைத்த பிறகு அவர் சொல்லச் சொல்ல . ‘அந்த இருட்டில்’ அந்த கிராமத்தின் இருட்டுக்குள் இவனே தட்டுத்தடு மாறி நுழைவதைப் போல இருந்தது.

அந்தக் கதையைச் சொன்ன போது இருட்டில் இவன் அம்மாவின் வளையல் ஓசை மட்டும் லேசாக ஒலித்துக் கொண்டே இருந்தது. பின்னர் எப்படியோ இவன் தூங்கிப்போனான்.

பல இரவுகளில் இவன் தூங்கி எழும்போது தலையணைக்கு அருகில் அம்மாவின் வளையல்கள் இருக்கும். எழுந்ததும் அவசர அவசரமாக வளையல்களை அம்மா மாட்டிக்கொண்டிருப் பாள். அப்பா வராத நாட்களில் அப்படி அவள் வளையல்களை கழற்றி வைப்பதில்லை. அது ஏன் என்றுதான் இவனுக்குப் புரிவதில்லை.

அதே போல, இவன் அப்பா ஊருக்கு வருகிற போது, டெய்லர் கடைக்கு இவன் போனால், “உங்கூட்ல இப்ப ராத்திரியில எலியும், பூனயும் சண்ட போடுதாடா” என்று டெய்லர் இவனிடம் கேட்டுவிட்டு சிரிப்பதற்கும் இவனுக்கு அர்த்தம் புரிவதில்லை. ஆனால் ஒருமுறை இவர்கள் வீட்டிற்கு வந்த இவனது கூலூர் பெரியப்பாவை மட்டும் அம்மா அடிக்கடி திட்டிக்கொண்டி ருந்தாள்.

“சுகுணா….. கரிக்டா ரெண்டு வருச கேப்புல ஒண்ணு ஒண்ணுன்னு நாலு பெத்துகினு கீறீயே. .உங்கூட்டுக்காரங் மிலிட்டரில டூட்டிய பாக்க றானோ இல்லியோ. இங்க கரிக்டா டூட்டி பாத்துக் கிறாங்போல கீதுன்னு கேக்கறாங் பெரிய மனுசங்…. அவன் கண்ணுல கொள்ளி வைக் கணுங்… என்ன எப்டி பாக்கறாந் தெரிமா… பலாப் பயத்த மொறச்சிப்பாக்ற தெரு நாயி மாதிரி… என்று திட்டிக்கொண்டிருந்தாள்.

“போனமுறை லீவு முடிந்து போகும் போது, ஆறாவது பாஸ் பண்ணிவிட்டால் கை கடிகாரம் வாங்கி வருவதாக சொல்லிவிட்டு போயிருந்தார் இவனது அப்பா. அந்த கடிகாரம் இவனது சிறிய கைக்கு சரியாக இருக்க வேண்டுமே என்ற கவலை வந்ததும், தன் கையையும் ஆற்றங் கரையையும் பார்த்தான் துரை. அப்பாவை இன்னும் காணோம்.

சூரியன் உச்சியிலிருந்து மெதுவாக விலகி மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். ஏன் இன்னும் வரவில்லை. கடந்த மூன்று முறையும் மீரட்டிலிருந்து வந்தார். இந்த முறை காஷ்மீர் பார்டரில் மாற்றி இருப்பதாக ஆறு மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதம் இப்போதும் அவன் கண்களுக்குள்ளேயே இருந்தது.

அதிகம் படிக்காவிட்டாலும் சிப்பாய் கணேசன் என்றால் ஊரில் ஒரு மரியாதை. அவர் விடுப்பில் வந்துவிட்டால் அவரிடம் இருக்கும் பாட்டில்கள் காலியாகும்வரை, தரையில் சிந்திய சோற்றுப் பருக்கைகளை மொய்த்துக் கிடக்கும் ஈக்களைப்போல மொய்த்துக் கொண்டே இருப்பார்கள் எல்லோரும்.

வருவோர் போவோருக்கெல்லாம் ஊற்றிக் கொடுப்பார். ஊற்றிக் கொள்வார். கறிக்குழம்பு காய்ச்சுகிற போது, சில நேரங்களில் இவனது பாட்டிக்கும் ஊற்றிக் கொடுப்பார். அப்போ தெல்லாம் பாட்டியை பார்க்கவே சிரிப்பாக இருக்கும். தட்டில் சாப்பாட்டை போட்டு வைத்துக் கொண்டு, தலையை கவிழ்ந்துகொண்டு, தட்டையும், தரையையும் கிளறிக்கொண்டு இருக்கும். வாய்கோணையாக அடிக்கடி சிரிக்கும். இவனை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு கறித்துண்டுகளைப் பொறுக்கி இவனது வாய்க்குள் திணிக்கும்.

எப்போதேனும் இவனது அம்மாவுக்கும் கூட கொஞ்சூண்டு ஊற்றிக் கொடுத்துவிடுவார். ‘வாணா… வாணா…’ என்று சொல்லிக்கொண்டே குடித்துவிட்டு, இவனுக்கு முத்தம் கொடுப்பாள்.

அவர் லீவில் இருக்கிறவரை அடுப்புக்கும் ஓய்வு இருக்காது. மீன்குழம்பு, கறிக்குழம்பு, கருவாடு, முட்டை, இட்லி, தோசை என பாதித் தெருவிற்கு மணக்கும். உளுந்தவடை, மசால் வடை, காராமணி வடை என வகை வகையாய் வடைகளும், போண்டாவும், முறுக்குகளும் கொதிக்கிற வாணலியில் மிதந்துகொண்டே இருக்கும்.

தினமும் குளித்து, மஞ்சள் பூசி, வெட்கமும், சிலுங்கல்களுமாய் தகதகப்பாள் இவனது அம்மா. பாட்டில்கள் காலியாகிவிட்டால் வீட்டில் பட்டை சாராயம் மணக்கும். மூன்று மாத சம்பளத்தை வாங்கி வந்து தாம் தூம் என்று செலவு செய்து விட்டு, லீவு முடிந்து, இரண்டு பொட்ட லங்கள் புளிசோறும், முட்டை ஆம்லேட்டும் கட்டிக் கொண்டு வழிச்செலவுக்கு அம்மா ஊதுவத்தி உருட்டி, மறைத்து வைத்திருக்கிற பைசாவிலிருந்து கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டு, பச்சை பையைத் தூக்கியபடி அவர் கிளம்பும்போது, இவனுக்கு துக்கம் துக்கமாக வரும். இரண்டு மூன்று நாட்கள் சோறு இறங்காது. படிப்பு ஓடாது. விளையாட்டில் கவனம் போகாது. அதற்குப்பிறகு அடுத்த விடுமுறைக்கு அவர் வரும் நாட்களை கணக்குப்போட்டு கழித்துக் கொண்டிருப்பான்.

இவன் அம்மாவுக்கு கண்கள் கலங்கிவிடும். அவர் போனபிறகு நாள் முழுவதும் குழந்தைகளை இழுத்து அணைத்துக் கொண்டு பாயில் படுத்திருப்பாள். எல்லா திசைகளும் சூன்யமாய் இருக்கும். அதற்குப்பிறகு இரண்டு மாத ஓய்விலிருந்த வத்தி மனையை எடுத்து வத்தி உருட்டத் தொடங்குவாள். அப்படியே நாட்களை யும் உருட்டிக்கொண்டு காத்திருப்பாள்.

“சீக்கிரமா ரிட்டயராயி பின்சின்ல வந்துட்டா… அப்றம் அப்பா தினிக்கும் குட்டிப் பசங்கக்கூடவே இருப்பேன்டா” என்று போனமுறை சொன்னார். அதற்கு இன்னும் எவ்வளவு வருஷமாகும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அது சீக்கிரம் வரவேண்டும் என்று ஆசைப்பட்டான்.

அப்பா இல்லாதபோது, இவன் அம்மா எப்போதும் ஊதுவத்தி உருட்டிக் கொண்டிருப் பாள். எப்போதும் களியும், கீரையும், பருப்பும் கடைந்துகொண்டிருப்பாள். நடவு நட, களை பறிக்க, அறுக்க என்று பயிர் வேலைக்கும் போகிறாள். அவ்வப்போது அப்பா அனுப்பும் மணியார்டர் நாலு பிள்ளைகளை வளர்க்க போதவில்லை என்று பாட்டியும், அம்மாவும் பேசிக்கொள்வார்கள். வாங்கும் சம்பளத்தில் குடிக்கவே பாதிக்குமேல் போய்விடுகிறதாம். மிலிட்டரியில் தினமும் கொடுக்கும் ரம் இவருக்கு போதாமல் காசு கொடுத்தும் வாங்கிக் குடிப் பாராம்.

அவர் ஊருக்கு வரும் நாட்களில் ‘கிழிஞ்ச டவுசரு, சொக்காயப் போட்டுகினு இருங்கடா… அப்பதாங் உங்கொப்பனுக்கு நம்ம கஸ்டம் தெரியும்’ என்பாள் இவனது பாட்டி. ஆனால் இவன் கிழியாத நல்ல துணியைத் தேடி எடுத்துப் போட்டுக் கொண்டு காத்திருப்பான். இவன் அம்மாவும் வத்தி மனையைத் தூக்கி வேலியில் வைத்துவிட்டு, தலைக்குக் குளித்து, மல்லிகைப்பூ வைத்து, பவுடர் போட்டுக் கொண்டு, தலையை தூக்கி தூக்கி வழியைப் பார்த்துக் கொண்டி ருப்பாள்.

இந்த முறை அப்பா வந்ததும் வீட்டுக்கு நிறைய மணியார்டர் அனுப்பச் சொல்ல வேண்டும். இவன் ஐந்தாவது படித்தபோது மகாபலிபுரம் சுற்றுலா போவதைப் பற்றி இவன் கடிதம் எழுத, பள்ளிக்கே ஐம்பது ரூபாய் மணியார்டர் அனுப்பினார். அது இவனுக்கு பெருமையாக இருந்தது. எல்லோரும் இவனை கலெக்டரைப் போலப் பார்த்தார்கள். அதைப் போல பள்ளிக்கும் அடிக்கடி மணியார்டர் அனுப்பச் சொல்ல வேண்டும்.

மீண்டும் ஆற்றங்கரையைப் பார்த்தான். பொழுது சாயத் தொடங்கியது. ஏன் இன்னும் வர வில்லை? ஒருமுறை கூட இவ்வளவு நேரம் ஆனதில்லையே.

போனமுறை வாங்கி வந்த செருப்பு தேய்ந்து விட்டது. இந்தமுறை புதிய கருப்புக் கலர் தோல் செருப்பு வாங்கி வருமாறு எழுதியிருந்தான். அளவு நூலை கடிதத்துக்குள்ளேயே வைத்து அனுப்பி யிருந்தான். அது கிடைத்திருக்குமா? செருப்பு காலுக்கு சரியாக இருக்க வேண்டும்.

அவர் போட்டு வரும் பூட்ஸ் ரொம்ப கனம். எப்படித்தான் அதைத் தூக்கிக்கொண்டு நடக்கி றாரோ? ‘கால்ல பூட்ஸ், முதுகுல பேக், அதுல ரொட்டி, ஜாம், தண்ணீ, கம்பளினு பத்து பதினஞ்சி கிலோ வெய்ட்டு, கூட துப்பாக்கி தூக்கிகினு நாலஞ்சி நாலு கூட விடாம நடக்கணும்’ என்பார். பாவம் அப்பா.

போனமுறை வந்து, ஊருக்கு போவதற்கு முதல் நாள் விளக்கு அணைத்த பிறகு அம்மாவிடம் ஒரு கதை சொன்னார்.

“எங்க பட்டாலியன்லகீற ஒரு தெலுங்கு சிப்பாய்க்கு ரொம்ப அழகான பொண்டாட்டி யாம். இந்த ஆளு அவமேல அவ்ளோ பாசம் வச்சிருந்தான். ஆனா அவளுக்கு ஊர்ல ஒருத்தங்கூட கனெக்சனு இருந்துகீது. இது இவனுக்கும் தெர்ஞ்சி போச்சி, மரியாதையா அவன மறந்திட்டு, ஒய்ங்கா இருன்னு இவஞ்சொல்லிக்கீறான். அவளும் சரீன்னு சொல்லிட்டு, இவன் வந்துட்டதும் அந்த வெச்சக்காரங்கூட கூத்தடிச்சிகினு இருந்துகீறா.

இவன் எங்க அதிகாரிங்க கிட்ட சொல்லி அய்தான். ரெண்டு நாலு லீவு குட்து திடீர்னு அவன ஊருக்கு அனுப்பனாங்க. இவன் வர்ரது தெரியாததால, இவம் போன போது ஊட்லயே அந்த கம்னாட்டிகூட பட்துகினு இருந்தாளாம். அத பாத்த ஆத்திரத்துல கத்திய எட்து ஒரே வெட்டு, அவ தல துண்டா விய்ந்துட்ச்சாம். இதப் பாத்துட்டு அலறிகினு எய்ந்து ஓட்னானாம் அந்த பேமானி. அவனையும் தொரத்திகினு போயி ஒரே போடு. அவனும் காலி. அப்டியே ரயிலேறி மிலிட்டரிக்கு வந்துட்டான்.

அந்த ஊரு போலீசு இவம்மேல கொலக்கேசு போட்டு இவனத் தேடிகினு மிலிட்டரிக்கே வந்தாங்க. கொல நடந்த அன்னிக்கி இவன் மிலிட்டரில டூட்டில இருந்ததா அதிகாரிங்க சொல் லிட்டாங்க. கேசு தள்ளுபடி ஆயிட்ச்சி” என்றார்.

‘அந்தமாரி கேப்மாறிங்கள அப்டிதான் வெட்டணும்’ என்றாள் அம்மா.

‘பொண்டாட்டி புல்லிங்கள ஊருல உட்டுட்டு பனியிலயும், குளிர்லயும், காட்லயும், மலைலயும் உயிரக்குடுக்கிறவங்களுக்கு துரோகம் பண்ணா அவங்கள கொல பாண்ணாக்கூட மிலிட்டரியும், சர்க்காரும் சப்போர்ட்டுதான் பண்ணும். தெரியுமா’ என்றார் ஆவேசமாக.

“பின்ன… பண்ணாதா…. அப்டி இன்னா ஒடம்பு திமிரு எட்த்து அலையறது பொட்டச்சி?” என்றாள் அம்மா.

அவர் சொல்லும் பல கதைகளில் இதைப் போன்ற ஏதேனும் ஒரு கதையும் ஊருக்கு வருகிற ஒவ்வொரு முறையும் அப்பா சொல்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால் இதுபோன்ற கதைகள் அவனுக்கு சரியாகப் புரிவதில்லை. ஒருவேளை அம்மாவுக்கு புரியுமோ என்னவோ? ரெண்டு தல துண்டாகிறமாதிரி வெட்னத சரின்னு இவன் அம்மாகூட சொல்கிறாள். அப்டி அம்மா சொன்னால் அப்பாவும் சந்தோசப்படுகிறார். இந்தமுறை வரும்போது அதைப்போல என்ன புதுக்கதையைச் சொல்வாரோ? இந்த முறை யாவது அது இவனுக்குப் புரியும்படி சொல்ல வேண்டும்.

நிறைய நேரங்களில் அப்பா பேசுவதும், அம்மா பேசுவதும் இவனுக்கு சரியாகப் புரிவ தில்லை. இவனது பெரிய தாத்தா வீட்டு மணி சித்தப்பா முன்பெல்லாம் இவர்கள் வீட்டையே சுற்றிக்கொண்டிருப்பார். இவனையும் இவனது தம்பிகளையும் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கதை சொல்வார். எப்போதேனும் பட்டாணி, போண்டா, மிக்சர் வாங்கி வந்து இவர்களுக்குக் கொடுப்பார்.

“ச்சூன்னா மூஞ்சிய நக்க வருது நாயி…. ஆம்பள இல்லாத ஊடுன்னா அவனவனுங் அவுத்து கினு வருவானுங்க… நமச்சிலு அடக்க முடியல் லன்னா, அவுசாரிங்கக்கிட்ட போறது? இல்லீன்னா சுட ஆத்து மணல்ல போயி செருவுறது” என்று ஒரு நாள் அம்மா கத்திக் கொண்டிருந்தது.

ஆனால் இப்போதெல்லாம் அந்த சித்தப்பா இவர்கள் வீட்டிற்கு வருவதில்லை. இவனைப் பார்த்தால் கூட பார்க்காதமாதிரி போகிறார். இதுவும் ஏன் என்று இவனுக்குப் புரியவில்லை. அப்பா வந்தால் ஏன் என்று கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

வயிற்றில் பசி கிள்ளத் தொடங்கியது. மேற்கில் சூரியன் சரிந்துகொண்டிருந்தான். மீண்டும் ஆற்றுப் பக்கம் பார்த்தான். அப்பா வரவில்லை. அப்போது வீட்டுப்பக்கம் இருந்து ஏதேதோ சத்தங்கள் கேட்டன. யார் யாரோ கத்தி அழுவதுபோல இருந்தது.

என்னவாக இருக்கும்? ஏன் அழுகிறார்கள்? ஊரில் யாராவது திடீரென்று செத்துவிட்டார்களா? குமரேசனின் பாட்டிதான் நீண்டநாட்களாக படுக்கையில் இருக்கிறது. அப்பா சீக்கிரம் வந்து விட்டால் போய்ப்பார்க்கலாம். மரத்தின் மேல் நின்றுகொண்டிருந்தது கால்கள் வேறு வலிக்கத் தொடங்கிவிட்டது.

“டேய் தொர… நீ இங்கியாடா கீற…. உன்ன ஊரெல்லாம் தேடிகினு கீறாங்க… சீக்கிரமா எறங்கி வாடா…. உன்ன கூப்டறாங்க… உங்கூட்டுக்கு யார் யாரோ வந்து கீறாங்க…. கலெக்டரு கூட வந்துக் கீறாருடா” என்றான் பக்கத்துவீட்டு பெருமாள்.

“எங்கூட்டுக்கு என்னாத்துக்குடா கலெக்டரு வந்து கீறாரு… எங்கப்பா வர்றாரானு பாத்துகினு கீறன்டா… இரு அவரு வந்திட்டதும் போலாம்” என்றான்.

“நீ மொதல்ல எறங்கி வாடா” என்று கத்தினான் பெருமாள். வேகமாக அவன் கீழே இறங்கியபின் இருவரும் வீட்டை நோக்கி ஓடினர்.

வீட்டின் முன்பு கூட்டமாக இருந்தது. ஒரு ஜீப்பும் நின்று கொண்டிருந்தது. இவனைக் கண்ட தும் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறினாள் இவனது அம்மா. பாட்டியும் மார்பில் அடித்து அழுது கொண்டிருந்தாள்.

அப்போது ஜீப்பிலிருந்த ஒரு பெட்டியை இறக்கி, இரண்டு பேர் அதைத் தூக்கிக் கொண்டு வந்தனர்.

“அவருடைய டிரஸ், மத்த பொருளுங் கெல்லாம் இதுல இருக்கு…. கன்னி வெடில சிக்கி ரொம்ப செதஞ்சி போய்ட்டதால பாடிய இராணுவ மரியாதையோட அங்கேயே தகனம் பண்ணிட் டோம். ரெண்டு நாள்ல ஊருக்குக் கௌம்பறதுக்கு தயாரா இருந்தாரு. அதுக்குள்ள இப்டி” என்று குரல் கம்ம சொன்னார் அந்த பெட்டியை ரயிலில் கொண்டு வந்த அந்த மிலிட்டரிக்காரர்.

அந்தப் பெட்டியை கீழே வைத்தார்கள். அதன் மீது ‘சிப்பாய் கணேசன்’ என்று வெள்ளை நிறத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதோடு அவரது எண்ணும் எழுதியிருந்தது.

இவர்கள் கடிதம் எழுதும்போதெல்லாம் முகவரியில் அப்பா பேரையும், அந்த எண்ணையும் சேர்த்துத்தான் எழுதுவார்கள்.

அந்தப் பெட்டியைப் பார்த்ததும் அம்மாவும், பாட்டியும் வெடித்து அழுதபடி அதன்படி விழுந்து புரளத் தொடங்கினார்கள்.

எல்லாம் முடிந்து, கண்களில் தானாய் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, பேய் பிடித்ததைப் போல மாதக்கணக்கில் உட்கார்ந்திருந்த சுகுணா, மீண்டும் மனையில் உட்கார்ந்து வத்தி உருட்டத் தொடங்கியபோது, மெல்லிய குச்சிகளில் பிசைந்த வத்தி மாவை கைகள் உருட்டிக்கொண்டிருக்க, அவ்வப்போது கன்னங்களில் ஊர்ந்து கீழிறங்கும் கண்ணீர் மடிமீது கிடக்கும் ஈரவத்திகளை மேலும் ஈரமாக்கும்.

ஆறேழு மாதங்களுக்குப் பின்னர் துரையினு டைய மணி சித்தப்பா பழையபடி பட்டாணி வாங்கிக்கொண்டு வந்து இவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கதைகள் சொல்லத் தொடங்கினார். அவரது வாய் மட்டும் கதை சொல்லிக் கொண்டிருக்க, கண்கள் வேட்டை நாயைப்போல அலையத் தொடங்கின.

திடீரென ஒரு நாள் கத்தத் தொடங்கினாள் சுகுணா. “ச்சூன்னா மூஞ்சிய நக்க வர்து நாயி… நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஆம்பளயில்லாத ஊடுன்னா அவனவனுங் அவுத்துகினு வர்ரா னுங்க… நமுச்சுலு தாங்க முடியலன்னா சுட ஆத்து மணல்ல போயி செருவுறது…”

ஆங்காரமாய் அவள் கத்த, வெளிறிய முகத்தோடு தெருவில் இறங்கினான் மணி.

(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய 2010 கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுப் பெற்ற கதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *