கூடு அல்லது மீன்குழம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 10,259 
 

நேற்றைக்கு பெரிய அண்ணனிடமிருந்து அதிசயமாய் ஒரு கடிதம் வந்திருந்தது.. பார்த்ததும் பற்றிக்கொண்டு வருகிறது. எட்டு வருஷப் பகை. அப்பாவின் முதல் வருஷ திவசத்தோட எங்கள் உறவுகள் அற்றுப் போய்விட்டன. அன்றைக்கு மதியத்துக்கு மேலே ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் எங்களுடைய சொத்துக்களை பாகப்பிரிவினை செய்தார்கள்.. இப்ப நெனைச்சாலும் வயிறு எரிகிறது. மொத்தத்தில் என் பங்கு கால் பாகம் என்றார்கள். மிச்சத்தை அண்ணன்கள் ரெண்டு பேரும் சமமாகப் பிரிச்சிக்குவாங்களாம். இத்தனைக்கும் எட்டு ஏக்கரா தென்னந்தோப்புக் கொல்லை நான் தலையெடுத்தப் பிறகு வாங்கியது. ஏன் இந்த ஓரவஞ்சனை?. கேட்டதற்கு நான் கைநிறைய சம்பாதிக்கிறேனாம்.ஹும்! அப்பா எங்க மூணு பேரையும் ஒரேமாதிரிதான் எஸ்.எஸ்.எல்.ஸி. வரைக்கும் படிக்கவெச்சார். என் உழைப்பு,திறமை,சமயோசிதம்,–இன்றைக்கு தாசில் பண்றேன். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பேன்?.டி ..ட்டி. கமலனாதன் சார் வீட்டில செருப்பாய் தேய்ஞ்சேனே. அவருடைய. பிள்ளைகளை ஸ்கூலுக்கு கொண்டுபோய் விடணும்,மார்க்கெட்டுக்கு போய்காய்கறிவாங்கிவரணும்,கரெண்ட்பில் கட்ட., மாவு அரைக்க, வேளைக்கு இருபது குடம் தண்ணீர், ஒரு கிலோ மீட்டர் சைக்கிளில் போய் அடிச்சாரணும்.. எப்படியோ வ்ழுந்து எழுந்து அவர் தயவிலே ஓ.ஏ.வாய் நுழைந்து, படிப்படியாய் போராடி வளர்ந்தேன். அன்றைக்கெல்லாம் கவலையில்லாமல் தடிமாடு மாதிரி ஊரை சுத்திட்டு, ஊர் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு, இன்றைக்கு வந்து பஞ்சப் பாட்டு பாடினால்?. அதுக்கு நான் நஷ்டப்படணுமாக்கும்.

“அய்யா! சோம்பேரிகளுக்கு எவ்வளவு கொடுத்தாலும் நிலைக்காது. ஏன்? நானும் இவங்க புள்ளைதானே? எனக்கு சமபாகம் வந்தாகணும் ஆமாம்.”

நான் இப்படி சொன்னதற்கு அண்ண்ன்கள் இரண்டு பேரும் சேர்ந்துக் கொண்டு என்னை வெளியே பிடிச்சித் தள்ளினார்கள். ஒரு தாசில்தாராய் சமூகத்தில் எனக்கு இருக்கும் மரியாதையைக் கூட யோசிக்காமல் அவமானப் படுத்தினார்கள். வெளியே ஊரே திரண்டு நிற்க,அவமானம் பிடுங்கித் தின்றது. என் அம்மாவும் அவர்கள் பக்கம் நிற்கிறாள்.

“பாஸ்கரா! நீ கொஞ்சம் விட்டுக் குடுத்துப் போடான்னாளே நானும் அவள் வயிற்றில்தானே பிறந்தேன்?. நான் கோர்ட்டுக்குப் போயிட்டேன். இது பூர்வீக சொத்து, எனக்கு இல்லைன்னு சொல்ல பெத்தவளுக்குக் கூட ரைட்ஸ் இல்லை. ஒரு கை பார்த்திட்றதே சரி புள்ளையில்லாத சொத்துதானே சுருட்டிடலாம்னு ப்ளானாட்டம் இருக்கு

“ஐயய்யோ! அடப் பாவீ !கொல்றானே. ஐயோ!…ஆஆ!.”

சனியன்கள் இந்த கூச்சல் எதிர் குடிசையிலிருந்துதான். தினசரி ரகளை.. கிழவியின் பிள்ளை சதா குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்ணுவான். வெல்ல மண்டியில் மூட்டைத் தூக்கி வரும் சம்பாத்தியத்தில் மூக்குமுட்டக் குடிப்பான். அன்றாடம் யுத்தம். இங்கே என் ரீடிங் ரூமிலிருந்தே பார்த்தால் சகலமும் தெரியும். கிழவியின் மருமகள் சதா வயிற்றை சாய்த்துக் கொ0ண்டு,வருஷம் தப்பாமல் பிள்ளை பெற்றுக் கொண்டு,காப்பாற்ற திராணியின்றி, நான் பார்த்தே நாலுக்கு இரண்டு அல்பாயுசில் போனதுகள் எலும்பும் தோலுமாய் கூன் போட்டு நடக்கும் கிழவி மேல் ஈஸ்வரிக்கு ரொம்ப கரிசனம். கூப்பிட்டு மிச்சம் மீதியைப் போட்டு அனுப்புவாள். விசேஷ நாட்களில் பலகாரங்கள் மடி நிறைய போகும்..ரொம்ப நாட்களாய் நடக்கிற விஷயம்

இன்று ஞாயிற்றுக் கிழமை. தாசில்தாரின் எல்லா டென்ஷன்களுக்கும் விடுமுறை. ஆஃப்டர் த ப்ரேக் மீண்டும் நாளை வந்து ஒட்டிக்கொண்டு இம்சை தரப்போகிறதுகள். என் ரீடிங் ரூமில் உட்கார்ந்திருந்தேன்.

“ஐயய்யோ! என்னைக் கொல்றானே. டேய்!..டேய்! படுபாவி நீ வெளங்கமாட்டடா!. ஆ.ஆ.ஆ.ஐயோ! .காப்பாத்துங்களேன் அய்யய்யோ!.”

கிழவி ஓவென்று கதறியபடி ஓடி வந்து எங்கள் வீட்டிற்குள் நுழைந்து விட்டாள். வந்தவள் என் முதுகுப் பக்கம் ஓடிவந்து ஒடுங்கிக் கொண்டாள். கை,கால்கள் வெடவெடவென்று ஆடுகிறது.. வாசலில் அவளுடைய பிள்ளை தடியுடன் நிற்கிறான்.

“வேலு! வாணாம். போயிடு. பெத்தவளை இப்படி அடிக்கிறது மாபாவம்.. போயிடு.”

நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் வேகமாய் கிட்டக்க வந்து, நான் தடுக்க தடுக்க சட்டை பண்ணாமல்ஒரு அடி போட்டான். கிழவி மூச்சுப் பேச்சின்றி சுருண்டு விழுந்தாள்.. எனக்கு நெகுநெகுவென்று கோபம் பற்றிக் கொள்ள, உறுதியாய் அவன் கையைப் பற்றினேன். வாசலை அடைத்தபடி தெருவே நின்று வேடிக்கைப் பார்க்கிறது.

“டேய்! டேய்!..பொறுக்கி! வெளியே போடா!.”

அவன் முறைத்துக் கொண்டு நின்றான்.

“என்னடா மொறைக்கிற?.தாசில்தார் வீட்டிலேயே வந்து கலாட்டா பண்ற அளவுக்கு திமிர்வந்துடுச்சா?.ஜாக்கிரதை போலீஸ் வரும். தொலைச்சிடுவேன்…”

என் கோபம் அவனை சலனப்படுத்தியிருக்கும் போல. அது பயம் என்று தோன்றவில்லை. அப்பப்ப மிச்சம் மீதியை எல்லாம் போட்டு,பழைய துணிமணிகளைக் கொடுத்துவிட்டதில் ஏற்பட்ட மரியாதை வெளியே போய் நின்றுக் கொண்டு திட்ட ஆரம்பிச்சான். என் சாதியையெல்லாம் முச்சந்திக்கு இழுத்தான்.

“என் ஜோபியிலயிருந்து நூறு ரூவாய தூக்கிக்கினாளே, அத்த கேட்டியா நீ? பெர்சா ஞாயம் சொல்ல வந்துட்டான்.காக்கா ஓட்டல்ல பிரியாணி, தேவி கொட்டாயில மேட்னி சோ ,கேக்குதா கெயிவிக்கு, இந்த வயசில?.”

அவளைப் பார்த்தேன்.குனிந்துக் கொண்டாள்.

‘இல்லாக்காட்டி துட்ட அப்பிடியே சேத்து வெச்சிருப்பானாங்காட்டியும்?. டல்லவாரிக் கயித. இப்ப இன்னா? டாஸ்மாக் கடைக்குப் போவ துட்டு இல்ல அதான்,கயிதக்கு..”
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் போக ,அவங்க குடிசை பொறம்போக்குல சட்டவிரோதமாய் கட்டியிருக்குன்னு அப்புறப்படுத்திட வேண்டி, எவிக்ஷன் ஆர்டர் போட்டேன்., ஈஸ்வரிதான் அந்த பாவம் நமக்கு வேண்டாம்னு நச்சரித்து நிறுத்திவிட்டாள். என்ன பண்றது?. இன்றைக்கு மதியம் சாப்பிட வந்தப்ப ஈஸ்வரிதான் இதைச் சொன்னாள்., கிழவி கூரைமேல காய்ச்சித் தொங்கற சுரைக்காயை அறுக்கப் போயி, கீழே விழுந்து காலை ஒடிச்சிக்கிட்டாளாம்.

“த்சு!..த்சு!..அப்புறம்?.”

‘ அப்புறமென்ன?, அப்படியேதான் கிடக்கிறா. யார் கவனிப்பாங்களாம்?.மருமவ கிழவியை இழுத்து திண்ணையில் போட்டுட்டு வேலைக்குப் போயிட்டாள். பிள்ளையாண்டான் ராத்திரிக்குத்தானே சாராயத்த ஃபுல்லா ஏத்திக்கிட்டு வருவான்?.. எனக்குத்தான் மனசு கேக்கல இலையில நாலு இட்லி சட்னி வெச்சி குடுத்துட்டு வந்தேன்..”

இருட்டிய பிறகு கிழவி வீட்டண்டையில் ரகளை ஆரம்பித்தது.. கிழவியின் பிள்ளை சாராயத்தை ஏற்றிக் கொண்டு வந்துவிட்டான். வந்தவுடன் பொண்டாட்டியை ஒரு அறை விட்டான். அவள்போட்ட கூச்சலில் கும்பல் கூடிவிட்டது.

“அந்த பீடைய ஏன்டீ ஏணி மேல ஏறவுட்ட?. இப்ப எவன்டீ முடிச்சி அவுக்கிறது?. சனியன்…சனியன்..இதுக்கு கம்மந்தாங்கல்ல தான கட்டு கட்றான்?. அந்த ஊருக்கு பஸ்ஸா எழவா?.”——தலைதலையென்று அடித்துக் கொண்டு கிழவியை எட்டி உதைத்தான். அவள் வலியில் வீறிட்டு அலறினாள்.சே! ராட்சஸன், படுபாவி,. இதுக்கெல்லாம் பகவான் கூலி குடுக்காமல் விடமாட்டான். நரகத்தில்தான் வேகணும். அவனை நெருங்கினேன்.

“இன்னாபா! கிட்ட வர்ற?.நீ ல்லாம் பெரீ மன்சன்பா.. கேட்டா போலீஸு வரும்னு கமால் காட்டுவே.. நீ போ சாரு இது என் வூட்டு..வெவகாரம் தெர்தா?.”

“சரிப்பா! உன் அம்மாவை ஒண்ணுஞ் சொல்லாதே, பாவம். இந்தா இதில முந்நூறு ரூபா இருக்கு, வைத்திய செலவுக்கு வெச்சிக்கோ.”—–அடுத்த நொடி பணிவுடன் வந்து வாங்கிக் கொண்டு சலாம் அடித்தான். .

ஒரு மாசம் போல் ஆகியிருக்கும். நான் காலையில் ஆபீஸ் கிளம்பறச்சே கிழவி ஒருதடியை ஊன்றிக் கொண்டே நொண்டிநொண்டி வந்தாள்.. ஒரு வாரமாகத்தான் நடக்க ஆரம்பித்திருக்கிறாள். வைத்திய செலவு ரொம்ப ஆயிடுச்சின்னு திட்றானாம்.ராத்திரி கூட குடிச்சிட்டு வந்து அடிச்சானாம். துணியை விலக்கிக் காட்டி பிழியப் பிழிய அழுதாள்.. முதுகில் சில இடங்களில் கன்னிப் போயிருந்தது. பார்த்தவுடன் ஈஸ்வரிக்கு கண்கள் கலங்கி விட்டன. சே! அந்த நிமிஷமே தீர்மானிச்சிட்டேன்,இதற்கொரு முடிவு கட்டியாகணும். இந்த கிழவிக்கொரு போக்கிடமில்லை என்று தானே இத்தனை அக்கிரமங்களும் நடக்கின்றன?. அப்படியே உட்கார்ந்து கிழவியிடம் கொஞ்ச நேரம் பேசி, அவளை சம்மதிக்க வைத்தேன் மறு நாள் விடி நேரம் கிழவியை ஓசைப் படாமல் என் வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பிவிட்டேன்.. நாற்பது கிலோ மீட்டர்களுக்கப்பால் ரங்கநாதபுரத்தில் என்னோட மச்சினருடைய வீட்டுக்குக் கொண்டு போய்சேர்த்து விட்டேன்.

“பாட்டீ! உனக்கு இங்க எந்தக் கஷ்ட்டமும் இல்லை. எல்லா வேலைகளையும் அவங்களே பார்த்துப்பாங்க. குழந்தைகள் சத்தீஷ், ஷாலினி, இதுங்களைப் பார்த்துக் கொண்டால் போதும். காலையில் மூணாவது தெருவில் கான்வெண்ட்டுக்கு கொண்டு போய் விடணும், மதியம் சாப்பாடு கொண்டு போய் ஊட்டி விடணும்,சாயங்காலம் ஜாக்கிரதையாய் திரும்ப அழைச்சிக்கிட்டு வரணும், அவ்வளவுதான். மூணு வேளையும் வயிறார சாப்பாடு போட்டு, மாசம் அறுநூறு ரூபாய் சம்பளம். வருஷத்துக்கு ஒரு தடவை துணிமணி சரிதானே?.அதோ கிணத்தடியில அந்த ரூம்ல தங்கிக்கலாம். என்ன?.”

அவள் என் கையை பிடித்துக் கொண்டு அழுதுவிட்டாள்.,கையெடுத்து கும்பிட்டாள்.. கிளம்பும் போது மனசு நிறைந்திருந்தது. ஒரு பாவப்பட்ட ஜீவனுக்கு வழி காட்டிய நிறைவு. போய் சொன்னவுடன் ஈஸ்வரி என்னை ஆசையுடன் கட்டிப் பிடித்துக் கொள்வாள். ஒரு நிமிஷம் இது எங்கே போய் முடியுமோ? என்றிருந்தது,அவனோ முரடன். கடவுளே!.

கிழவி போன ஐந்தாம் நாள் காலையிலேயே வேலு மோப்பம் பிடித்துக் கொண்டு வந்துவிட்டான்.

“ஏய்! ஏன் உள்ளே வர்ற?.”

“நான் மானஸ்தன் உள்ள நுழையமாட்டேன் சாரு!. தோ பூட்றன். எங்காத்தா எங்க?. சொல்லு!. கண்டீசனா உனுக்கு தெரியும்., சொல்லு!.”

“ஏன் தேடிப் போயி ஒதைக்கப் போறியாடா?.”—-தலை குனிந்தான்.

“படுபாவி! அவளை பெத்தவ மாதிரியா வெச்சிருந்தே? என்னா அடி ஒதை?. இனிமே உங்க மொகத்திலியே முழிக்க மாட்டேன், எங்கியாவது கிணறு,குளத்தில விழுந்து என் ஜென்மத்த மடிச்சிக்கப் போறேன்னு என் கிட்டசொல்லிட்டுத்தான் போனாள். போ! எங்க போய் விழுந்து செத்தாளோ? அவளுக்குக் கொள்ளி போட்ற குடுப்பினை கூட உனக்கு இல்ல பாரு. இதுதான் . விதி..”
அவன் அப்படியே சரிந்து கீழே விழுந்தான். சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான்.. என்ன ஒரு பாசாங்கு?. லோ கிளாஸ் பீப்பிள் இப்படியெல்லாம்தான் நடிப்பார்கள். தண்ணியடிச்சிட்டா இன்னும் சூப்பராய் வரும்.. எனக்கு எரிச்சல் கொப்பளித்தது.

“ ஏய்1 கெடவுட்! அடிச்சி துரத்திட்டு, இப்ப வந்து ஆக்ட்பண்றியா?. போடா! வெளியே போய் நின்னு அழு, தெருவே மெச்சிக்கும். அஞ்சு,பத்துன்னு பணம் கூட சாராயத்துக்கு வசூலாகும். போ..போ!.”.
விலுக்கென்று எழுந்து நின்று என்னை முறைத்தான்.

“என்னடா மொறைக்கிற?.”

“:சர்தான் நிறுத்துய்யா. பெரீ மன்சனா கீறியேன்னு வுட்டா ரேங்கறீயே. இன்னா உன் வண்டவாளத்த நான் எடுத்து வுடட்டா?. வாணா நாறிப்பூடும்.ஹக்காங்.”

என் கோபம் எல்லை மீறிவிட்டது.. என்ன பேச்சு பேசறான்?

“ என்னடா…என்னடா..என் வண்டவாளத்து நாத்தம்? நீ எடுத்து விடப் போற?. ராஸ்கல் யார் கிட்ட பேசற?.—-ஆத்திரத்தில் என்ன செய்கிறோம்னு இல்லாம எட்டி அவன் ஷர்ட்டைப் பிடித்தேன்.

” ஐயோ! ஏங்க..ஏங்க!..என்னது இது?இந்த ஆளோட சரிசமமாய். சண்டை போட்டுக்கிட்டு .”—–ஈஸ்வரி ஓடி வந்து என்னை விலக்க முயற்சித்தாள். நான் பிடித்த பிடியை விடவில்லை.

“டியேய்! வுட்றீ, அடீங்!..”—-அவன் அநாயாசமாய் என்னை உதறிக் கீழே தள்ளினான்.. நிலைகுலைந்து விழுந்துவிட்ட என்னை அவனே ஓடி வந்து தூக்கிவிட்டான்.

“இந்தப் புண்ணியவதி மூஞ்சிக்கோசரம் பாக்கிறேன், ஹக்காங். நானு துன்னத மறக்கற ஜாதி இல்ல தெரிஞ்சிக்கோ. ஆமா எனுக்கு புத்தி சொல்ல வந்துட்டியே, பெத்த ஆத்தாளுக்கு நீ கஞ்சி ஊத்தறியாய்யா?, .எங்க வெரல நீட்டு பார்ப்போம். நானு ஊத்தறேன்யா எங்காத்தாளுக்குக் கஞ்சி.கேட்டுப் பாரு அன்னாடிக்கும் மீனு கொயம்பு சோறு. இந்த அஞ்சி நாளா ஒரு பருக்கை என் தொண்டையில எறங்கிச்சா தெரியுமா?.”—சொல்லும்போதே குரல் உடைந்து அழ ஆரம்பித்தான்.

“ சொன்னியே என்னப் பத்தி இன்னாத் தெரியும் உனக்கு?ஆங்!. காலுக்கு கட்டு கட்ட எங்காத்தாள ரெண்டும்ரெண்டும் நாலு கிலோமீட்டர் தூரம் எம் முதுவுல மூட்ட தூக்கிம்போயி கட்டியாந்தன்யா. அதுவும் வாராவாரம் செய்வியா நீ?. அதான்யா என் மனசு.’——லுங்கியை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

“ முண்ட டியேய்! என் மன்சு தெரியாது உனுக்கு?. வுட்டுட்டு பூட்டியேம்மே!போ..போ!. சர்தான் போம்மே தெரியும்..”
இல்லாத கிழவியை எதிரே வைத்துத் திட்டினான்.. சிறிது நேரத்தில் அவன் பொண்டாட்டி வந்து

“நாலஞ்சி நாளா இது செரியாவே சோறு துன்னல சாரு! அதான் கத்துது.”—-சொல்லிவிட்டு அவனை இழுத்துச் சென்றாள்.. அப்படியே அசையாமல் கிடந்தேன்.உள்ளே வலித்தது.

“ ஏங்க! த்சு!..த்சு!..அழாதீங்க. எதுக்கு அழறீங்க?.”

“ இப்ப ஒண்ணுங் கேக்காதே. உடம்பெல்லாம் சுரீர் சுரீர்னு எரியுது.”
“ஐயய்யோ! என்னென்னவோ பினாத்தறீங்களே!.”

“ இல்லம்மா உனக்குப் புரியாது நாளைக்கு இன்னொண்ணும் நடக்கணும்., அதையும் பார்த்துட்டு சொல்றேன்.”

மறு நாள் அந்த இன்னொன்றும் நடந்துவிட்டது. ரீடிங் ரூமில் நானும் ஈஸ்வரியும் பேசிக்கிட்டிருக்கும் போது நான்தான் பார்த்துவிட்டு ஈஸ்வரிக்குக் காட்டினேன். தெருக்கோடியிலிருந்து கிழவி ஓட்டமும் நடையுமாக குடிசையை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள். பேத்திகள் இரண்டும் அவளைப் பார்த்துவிட்டு பாட்டீ!..பட்டீ!..ன்னு ஓடிப்போய் எகிற, கிழவி அதுகளை வாரியணைத்துக் கொண்டு உச்சு..உச்சுன்னு ஆவேசத்துடன் முத்தமாய் பொழிந்தாள்.. அப்போது தற்செயலாய் வெளியே வந்த மருமகள் பார்த்துவிட்டு அத்தே! என்று கூக்குரலிட்டபடி ஓடிப் போய் கட்டிக் கொள்ள, இரண்டு பேரும் கொஞ்ச நேரம் அழுதார்கள். வேலுவும் வெளியே வந்து கிழவியைப் பார்த்துவிட்டு எதிர்பக்கமாய் முறுக்கிக் கொண்டு நின்றான்.

”. ஐயோ! புள்ள பொறாத கொட்டாட்டம் எங்கொயந்தைங்கள வுட்டுட்டுப் பூட்டேனே. டேய் வேலு! எனுக்கு புத்தி கெட்டுப் பூட்ச்சிடா. ஒண்ணுந்திட்டாதடா!.”

“ஆங்! கொஞ்சறேன்.இரு. ஏய்! ஏம்மே மசமசன்னு நிக்கிற? அய்யே! இது .எப்ப துன்னுச்சோ.?. ஜல்தியா சோத்த ஆக்கும்மே கெயங்கான் மீனு வாங்கியாந்துக் கீறேன் பாரு..”

அவர்கள் உள்ளே போக யத்தனிக்க , கிழவியைப் பிடித்துக் கொண்டான்.

. .” தோ பார்மே!இனிமேங்காட்டி அதுஇதுன்னு எதிருவூட்டுப் பக்கம் போனேன்னு வெய்யி, மவளே பீஸ் பீஸாப் பூடுவே.”

“அடச்சீ! நானு ஏண்டா அந்தக் கஸ்மாலம் வூட்டுக்குப் போறன்?. டேய் வேலு! அந்தாளு இன்னாமாரி சொக்குப் பொடி போட்டு என்ன கூப்டும்போனாண்டா,பொல்லாதவன்டா எப்பா!.”

ஈஸ்வரிக்கு குபுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது.

“ஏங்க எவ்வளவு செஞ்சோம்? நன்றியில்லாம அதுங்க…”

“உஷ்.ஷ்.ஷ்!’—அவள் வாயைப் பொத்தினேன்.என் கண்ணிலும் நீர்.

“அவங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருக்கிற., உன் வாயாலே ஒண்ணுஞ் சொல்லிடாதே., அதொண்ணும் இல்லம்மா, நல்லாயிருந்த அவங்க கூட்டை நாம கலைச்சிட்டோம்னு ஆத்திரம்.. அது ஞாயம் தானே? வாழ்க்கை என்பதற்கு சரியான பரிமாணத்தை வேலுவும்,கிழவியும் நமக்கு காட்டிட்டாங்களே., எந்தக் குரோதமும் நிரந்தரம் இல்லை,. பாசத்துக்கு முன்னாலே எதுவும் பெருசில்லேன்னு கிழவி என்ன அழகா காட்டிட்டா?. நல்ல வசதியையே வாணாம்னு தள்ளிட்டு, இதுதான் சொர்க்கம்னு ஓடி வந்துட்டாளே.வேலுவும் பெத்தவ காணாம போயிட்டான்னதும் அப்படி அழுதானே..இதுதாம்மா வாழ்க்கை. இந்த தாத்பர்யம் புரியாம அம்மாவை,அண்ணன்களை , வருஷக் கணக்காய் விரோதிச்சிக்கிட்டு. சே! நான் ஒரு தற்குறி..மத்த குழந்தைகளை விட .நோஞ்சான் குழந்தைக்கு கொஞ்சம் மிச்சமா ஊட்டிவிட்றது ஒரு பெத்தவளுடைய குணம் தானே? அதைத்தானே அன்னிக்கு எங்கம்மா செஞ்சாள்?.. அது இப்பத்தான் எனக்கு உறைக்குது. .அம்மா…அம்மா! ஈஸ்வரி! ஒரு விஷயம் கவனிச்சியா?.நானும் வேலு மாதிரியில்ல, எங்கம்மாவும் அந்த கிழவி போல இல்லை இல்லையா ?. இதுவரைக்கும் அவளும் எட்டிப் பார்க்கலியே.”—

-எனக்கு வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது. ஈஸ்வரி என்னைப் புரிந்தவளாய் அணைத்துக் கொண்டு, நாளைக்கு உங்க அண்ணன் வீடுகளுக்கு ஒரு நடை போய்,தங்கிட்டு அப்படியே அத்தையை பார்த்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம். நல்லதுக்கு நாமதான் முதல்ல ஒரு படி இறங்குவோமே என்றாள்.

இப்போது எதிரே வேலுவின் குடிசை பக்கம் கூச்சலாயிருந்தது. எல்லோரும் வெளி வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேத்திகள் கிழவியிடம் ஒரு வாய் சோறு வாங்கிக் கொள்ளுவதும், காரம் தாங்காமல் ஓடிப் போய் ஒரு மிடறு தண்ணீர் குடிப்பதுவுமாய் இருந்ததுகள்.. வேலு என்னவோ சொல்ல, கிழவியும்,மருமகளும் குபீரென்று சிரித்தார்கள். சந்தோஷம் என்னமாய் பொங்கி வழிகிறது?. ஈஸ்வரி என்னைப் பார்த்து மீன் குழம்பாயிருக்கும் என்று சிரித்தாள். உப்போ,உறைப்போ, எல்லாமே அவங்களுக்குக் கொஞ்சம் தூக்கல்தான் என்றேன் நான்..

– டி.வி.ஆர்..நினைவுச் சிறுகதைப் போட்டி 2011ல் பரிசு பெற்ற கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *