கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 11,863 
 
 

கண்மூடித் திறப்பதற்குள் ஒவ்வொரு பருவகாலமும் ஒரு காலத்தை இன்னொரு பருவகாலம் முந்திக்கொள்ளும்போது அதிவிரைவாக வந்துபோகின்றன. கோடை விடுமுறை சட்டென்று முடிந்துவிட்டது. விடுதலைக்கு வெளிநாடு போனவர்கள் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.
வழக்கமான பாதை. வழமையான பிரயாணம். இரண்டு வார விடுமுறையில் லண்டனை விட்டுப்போனபின் நடந்த மாற்றங்கள் பிரமாண்டமாகத் தெரிந்தன.

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது திரும்பிப் பார்த்தாள். வானளாவ உயர்ந்து கொண்டிருக்கும் அந்தக் கட்டிடம் கண்ணில் பட்டது.

மைதிலி சட்டென்று அந்தக் கட்டிடத்தை உற்று நோக்கினாள். கட்டிடத்தின் முன்னால் நூற்றுக்கணக்கான “காங்கிறீட்” பாளங்கள் அடுக்கப்பட்டிருந்தன.

இந்தக் காங்கிறீட் துண்டுகள்தான் இந்தப் பிரமாண்டமான கட்டிடத்தை உருவாக்கப்போகின்றன. இந்தக் கட்டிடம் ஒரு பெரிய வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதி என்று விளம்பரப் பலகை தெரிந்தது.

இந்தக் கட்டிடத்தில் அமைக்கப்படவிருக்கும் பிளாட்களின் விலைகளின் பட்டியல் கண்ணைக் கவரும் விதத்தில் அழகான விளக்கு அலங்கார வெளிச்சத்தில் விளம்பரப்பட்டிருந்தது.

இது லண்டன். குபேர நாடுகளில் ஒன்று. எதையும் பொன்னாக்கிப் பொருளாக்கி இலாபம் தேடுவதை வாழ்க்கையின் நியதிகளில் மிக முக்கியமானது என்று நினைக்கும் நாடு.

இந்தக் காங்கிறீட் துண்டங்களை உண்டாக்கத் தேவையான மூலப் பொருட்கள் வேறு எந்த நாடுகளிலோ இருந்து வந்திருக்கலாம். திரைகடல் ஓடியும் திரவியம் படைப்பதில் முன்நின்றவர்கள் இந்த வெள்ளையர்.

இவர்கள் கைகளில் கிடைக்கும் காங்கிறீட் துண்டங்கள் நாளைக்கு ஒரு கலை நிலையத்தை உருவாக்கும். விஞ்ஞான ஆய்வுகூடத்தை உண்டாக்கும்….

“ஏய் காங்கிறீட் யார் கூப்பிடுவது?” மைதிலி திடுக்கிடுகின்றாள். யாரும் கூப்பிடவில்லையா?
“ஏய் காங்கிறீட் நீ எல்லாம் ஏன் பெயருக்கு ஒரு பெண் எண்ட திரியுறியள். வெறும்…வெறும் வெறும் மரப்பலகை…வெறும் காங்கிறீட் துண்டு…” அவன் சிரிக்கிறான்.

அவள் படித்த பாடசாலையின் பெயர்பெற்ற வம்பன் அவன். சரஸ்வதி பூஜைக்காகத் தைத்துப் போட்டுக்கொண்டு வந்த வெள்ளைச் சாட்டின் பாவாடை தன்னையறியமால் தரையில் நழுவிவிட்ட பிரமை.

சிதம்பரத்தின் பேச்சுக்களில் அர்த்தம் அவனுக்குப் புரியும். தன் சினேகிதக் கும்பல்களுடன் நின்று தெருவில் போகும் இளம் பெண்களைச் சீண்டும் அவன் வார்த்தைகளின் அர்த்தம் எந்த அகராதியிலும் இருக்காது.

பாடசாலைக்கு வரும்போது யாரும் மாணவிகள் தனியாக அகப்பட்டுக்கொண்டால், அவர்களின் இரட்டையர்த்தப் பேச்சுக்கள் எரிச்சலையுண்டாக்கும். இளமையின் துடிப்பு அவர்களின் வார்த்தைகளில் வெளிப்படும்.

சினிமாப் பாட்டுக்களில் தங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பொறுக்கி அதைத் தெருவில் போகும் – அதுவும் தனிமையில் போகும் – பெண்களின் மீது பாடிச் சேட்டைவிடும் அவர்களைத் தட்டிக்கேட்போர் யாருமில்லை.

பாடசாலை என்பது அறிவை வளர்க்கும் ஒரு அற்புதநிலையம் என்பதைப் பொய்பித்துக் காட்டுவேன் என்பதுபோல் சிதம்பரம் நடந்துகொள்வான். “என்ன செய்வது இளம் பையன்கள் என்றால் அப்படித்தான்” என்று ஆசிரியர் சிலர் முணுமுணுப்பர். சரஸ்வதி பூஜை கல்விக் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தும் நாள். பாடல்கள், பூஜைகள் என்று பாடசாலை அமளிப்பட்டபோது ஏதோ ஒரு மூலையில் சிதம்பரத்தின் இளக்காரச் சிரிப்புக் கேட்கும்.

“வீட்டில் அடுப்பூதாமல் ஏன் பாடசாலைக்கு ஆட்டம்போட வாறியள்” – அவன் கேலியாகக் கேட்டான். பெண்கள் என்றால் ஏதோ வீட்டில் பூட்டி வைக்கவேண்டிய பொருள் மாதிரிப் பேசுவான். பாரதி ஞாபகார்த்த விழாவை ஒட்டிப் பேச்சுப்போட்டி நடந்த போது “பாரதி கண்ட பெண்கள்” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி ஆரம்பமானது. சிதம்பரம் கலந்துகொள்ளவில்லை. ஆனால் கிண்டல் மட்டும் குறையவில்லை. மைதிலியின் பேச்சு சிந்திக்கப் பண்ணியது என்று போட்டிக்கு வந்திருந்த மத்தியஸ்தர் சொன்னார்.

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் படைக்க வந்தோம்’
.
என்று மைதிலி பேசிய போது கூட்டத்தின் நடுவிலிருந்த சிதம்பரம் கோஷ்டியினர் விசிலடித்துக் கூச்சலிட்டனர்.

பேச்சுப் போட்டி நடந்து கொஞ்ச நாட்களின்பின் மைதிலியைத் தனியாகத் தெருவில் கண்டதும், “என்ன சட்டங்கள் செய்து, பட்டங்கள் எடுத்து லண்டனுக்கா போகப் போறாய். தான் போக வழியில்லை. தும்புக்கடையையும் தூக்கிக்கொண்டு போனதாம் எலி” என்று அவன் எக்காளமாகச் சிரித்தான்.

மைதிலிக்கும் மைதிலிபோல் எத்தனையோ பெண்களுக்கும் தங்கள் ஊர் தவிர அடுத்த ஊர்கள் பற்றிச் சரியாகத் தெரியாது. சில மைல்களுக்கு அப்பால் உள்ள பட்டணத்திற்கு எப்போதாவது இருந்து போவார்கள். பொங்கல் வந்தால் பாவாடை தாவணி வாங்கப் போவார்கள்.

சுகமில்லை என்றால் பிரைவேட் ஹொஸ்பிட்டலுக்கு எப்போதாவது இருந்து போவார்கள். அதைத் தவிர பெரிய பட்டணங்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் உலகம் மிகவும் சிறியது. பவித்திரமானது.

சினேகிதிகள் சேர்ந்திருக்கும்போது கல்கி, கலைமகள், குமுதம் போன்ற பத்திரிகைகளில் வரும் சிறுகதை, தொடர்கதைகளைப் படிப்பார்கள். தென்னாட்டு இந்திய நகரங்களைக் கற்பனையில் ரசிப்பார்கள். நீண்ட, பரந்த தெருக்களையுடைய அடையாறு நகர் பற்றிப் படித்து விட்டுக் கற்பனை செய்வார்கள்.

கொழும்பு, காலி ரோட்டில் விபத்து நடந்தது என்று பத்திரிகையிற் படித்தால் அந்தக் காலி ரோட்டில் எத்தனை ஆயிரம் கார்கள் போகும் என்று தங்களுக்குள் விவாதித்துக் கொள்வார்கள். அவர்கள் தங்களுக்குத் தெரியாத உலகம் பற்றிக் கற்பனை செய்து மகிழ்வார்கள்.

சிதம்பரம் பெண்களைக் கேலி செய்வதில் பெயர் பெற்றவன் என்று எல்லோருக்கும் தெரியும். இந்தப் பெண்கள் கூட்டத்தையும் அவன் விட்டுவைக்கவில்லை. தன்னை அவன் காங்கிறீட் என்று கூப்பிட்டதாகச் சொன்னதும் சினேகிதிகள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டனர்.

சினேகிதிகளில் சரஸ்வதி கொஞ்சம் வளர்ந்தவள். உடம்பு கவர்ச்சியாக இருக்கும். பதிமூன்று வயதிலேயே பதினாறு வயதுப் பெண்போல் மார்பங்கள் வளர்ந்திருந்தன.

மைதிலிக்குப் பதின்மூன்று வயது. சரஸ்வதியும் கோமளாவும் மைதிலியைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். “ஏன் உன்னை அவன் காங்கிறீட் என்று சொல்கிறான் தெரியுமா?” கோமளா கேட்டாள். மைதிலிக்குப் பதில் சொல்ல விருப்பமில்லை. பாடசாலை என்றால் எத்தனை வித்தியாசமான உலகம்? சிதம்பரனின் பேச்சும் அதன் அர்த்தமும் தெரியும் என்பதுபோல் மைதிலி தலையாட்டினாள். சாமுத்திரிகா லட்சணம் தான் படித்ததாக கோமளா சொன்னாள்.

பெண்களின் மார்பகங்கள் பற்றி அதில் குறிப்பிட்டிருப்பதாகச் சொன்னாள். கால் விரல்கள். கண் அமைப்புக்கள், உடம்பு வாகுகள், பற்றிக் கோமளா விளங்கப்படுத்தினாள். அவளின் விளக்கத்தைச் சரஸ்வதியும் மைதிலியும் ஆர்வத்துடன் கேட்டார்கள். எத்தனை வகை மார்பகங்கள் என்று வியந்துபோனார்கள். “இதெல்லாம் ஆண்கள் எழுதிய புத்தகம்” மைதிலி முணுமுணுத்தாள்.
கோமாளா தன்னுடைய சகோதரியின் காமுத்திரிகா லட்சணம் புத்தகத்தைத் தங்கள் தமிழ் இலக்கியப் புத்தகத்துக்குள் மறைத்துக்கொண்டு வந்தாள்.

சிதம்பரத்தின் சேட்டைப் பேச்சுக்கள் இந்தப் பெண்களின் கர்வத்தை ஒரு விதத்தில் காட்டின.

“அடிபட்ட நாய் குலைக்கும்” கோமளா சொன்னாள்.

“என்ன அடிபட்ட நாய். யார் அடிபட்ட நாய்” மைதிலி குழப்பத்துடன் கேட்டாள். சிதம்பரனை எந்தப் பெண்ணும் அடிக்க வெளிக்கிட்டதாக அவளுக்குத் தெரியாது.

“அதாண்டி அவனுக்கு நாங்கள் வால் பிடிக்கல்ல. அவன் பேச்சுக்கு ஆமாம் சாமி போடல்ல. அதுதான் கோபம்.” கோமளா விளக்கினாள்.

சிதம்பரத்தை ஒரு கௌரவமான பிறவியாகப் பார்க்க வேண்டும்; நடத்தவேண்டும் என்பதை மைதிலியாற் கற்பனை செய்ய முடியாமலிருந்தது. சிதம்பரம் என்ற பிறவி அவளை யோசிக்கப்பண்ணியது. ஆண்களைப்பற்றி ஆராயப்பண்ணியது. அடுத்தடுத்த வருடங்களில்; அந்த ஊரில் எத்தனையோ மாற்றம். பாடசாலை மாற்றம். சிமத்பரத்தின் தகப்பன் பாம்பு கடித்து இறந்துவிட்டார். அவன் கொஞ்சம் கொஞ்சமாக பாடசாலை வருவதை நிறுத்திக்கொண்டான். தனது மைத்துனரின் கடையில் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். பணம் சேர்ந்தது, மறைந்தது. வாழ்க்கை மாற்றம். படிப்பு என்று அலையும் மைதிலியை அவன் தூரத்தில் இருந்து பார்த்தான். நெருங்க முடியவில்லை. இப்போதெல்லாம் பாடசாலைக்குப் போகும் மாணவ, மாணவியரைப் பெருமையுடன், ஏக்கத்துடன் பார்ப்பான். ஒரு காலத்தில் தன்னைப் பாடசாலைக்கே வரமுடியாமற் பண்ணியவன். இன்று தாழந்த உணர்ச்சியுடன் கவனிப்பதை மைதிலி அவதானித்தாள்.
பருவம் மாறியது.

பதினாறு வயது. பொங்கலுக்கு மாமி வாங்கிக் கொடுத்த “லேடி ஹமில்டன்”, சில்க் பாவாடை, தாவணியுடன் தெருவில் நடந்து வரும்போது சிதம்பரம் சைக்கிளில் வருவதைக் கவனித்தாள் மைதிலி. பழைய பயம் வந்தது. இன்னும் சேட்டை விடுவானா? மாமி வீட்டாருக்குக் கொடுக்கச்சொல்லி அம்மா தந்த பலகாரங்கள் ஒரு தட்டத்தில், மற்றக் கையில் பப்பாளிப்பழம். மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. அவள் தன் படபடப்பைக் காட்டிக் கொள்ளாமல் நடந்தாள். ஆனாலும் தனிமையில் சிதம்பரத்தைக் கண்ட பயம். பப்பாப்பழம் கைநழுவி மணலில் வழுந்தது. மைதிலி அதைக் குனிந்து எடுக்கப்போக அவள் தாவணி குலைந்தது. மழையில் நனைந்த பெண்மை அவன் கண்களைக் கூசியது.

சிதம்பரம் திடுக்கிட்டுவிட்டது அப்பட்டமாகத் தெரிந்தது. புதுமொட்டு கண்களைக் குத்தியிருக்கவேண்டும். அவன் சைக்கிள் வேகம் தடுமாறியது.

ஒரு சில நிமிடநேரம் மைதிலி பயந்து. அதிர்ச்சியில் நின்ற அந்த ஒரு சில நிமிடம் அவன் பெண்மையின் பூரிப்பை நேருக்கு நேர் பார்த்த அதிர்ச்சியில் நகர்ந்தான். சேட்டை விடவில்லை. கெட்ட பார்வையில்லை. ஆனால் அதிhச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. பதினமூன்று வயது காங்கிறீட் இப்போது பதினாறு வயதுக்கவர்ச்சிக் கன்னியான அவன் முன்னால் நின்றது அவன் எதிர்பார்க்காத விடயம். அவன் முகபாவம் மாறியது. ரசிகனுக்குப் பதில் ராட்சத குணம் வெளிப்பட்டது.

“இதெல்லாம் காட்டத்தான் பள்ளிக்கூடத்திற்குப் போறியளோ?” குரலில் குரூரம். பார்வையில் நஞ்சு. ஏதோ சொல்லி அவளுடன் பேசவேண்டுமென்ற ஆவல் குரலில்.

“உன் தரவளிக்குப் பாடசாலைப் படிப்பு, கௌரவம் பற்றி என்ன தகுதி?” மைதிலிக்கு எப்படித்தான் அந்தத் தைரியம் வந்தததோ தெரியாது. பொரிந்து தள்ளினாள். வயது வந்த துணிவா? அவளுக்குத் தெரியாது. இதுவரைக்கும் சிதம்பரழன எதிர்த்து எந்தப் பெண்ணும் வாய் திறந்திருக்க முடியாது.
பாடசாலை என்பதை அவன் ஒரு காமாந்தரக் கூடமாக நினைத்ததை அவளால் பொறுக்கமுடியவில்லை. பாடசாலையில் படிக்கவேண்டிய விடயங்களில் இதுவும் ஒன்று என்று தெரியாத பருவம்.

“உன்னுடைய ஆணவம்…உன் மாதிரி ஆண்களின் ஆணவம்…” அவள் மேற்கொண்டு எதுவும் சொல்ல முதல் தூரத்தில் மாமியார் ஒருத்தி வருவதை அவதானித்தாள். மாமியார் வந்து என்ன நடக்கிறது என்று கேட்க முதல் இவள் நடையைக் கட்டினாள்.

சிதம்பரம் வாழ்க்கையின் முதல் முறையாக வாய்களுக்குச் சொல் கிடைக்காமல் அவதிப்பட்டான். மைதிலி என்ற பெண் தன்னை எதிர்த்துப் பேச முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
இருபது வருடங்களின் பின்…….

அவள் லண்டனிலிருந்து ஊருக்கு விடுமுறையில் போயிருந்தாள்.

“உங்களை யாரோ பார்க்க வந்திருக்கினம்”

லண்டனில் பார்க்காத பெருமழையின் அழகை ரசித்தபடி தனது வீட்டின் படிகளில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து வீட்டுப்பெண்ணின் வார்த்தைகள் சுயநினைவைக் கொண்டுவந்தன. அவளைப் பார்க்க எத்தனையோ தெரிந்த மனிதர்கள் வந்துபோகிறார்கள்.

வந்தவனின் பார்வையில் உயிரில்லை. உடம்பில் நல்ல உடுப்பில்லை. காய்ந்த முகம். கலைந்த தலைமயிர். முகத்தைத் தாழ்த்திப் பேசினான்.

“எப்படி இருக்கிறியள்” அவனது குரலில் பழைய கம்பீரம் இல்லாவிட்டாலும் கௌரவமிருந்தது.
சிதம்பரனா?

அவள் தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். கடையில் சேர்நத சில வருடங்களில் கடைக்கே முதலாளியாகி இன்னும் சில கடைகளையும் வாங்கிப் பணக்காரனாகிவிட்டான் என்று தெரியும்.
அது மட்டுமல்லாமல் மைதிலியைக் கல்யாணம் செய்யவும் விருப்பம் என்று சொல்லியனுப்பியிருந்தான்.

“என்னை என்ன பழிவாங்கப் போகிறானா?” அவள் வாய் விட்டே கேட்டுவிட்டாள். அப்போது அவள் ஆசிரியையாக இருந்தாள். தன்னுடன் படிப்பிக்கும் ஆங்கில ஆசிரியரில் உள்ள விருப்பத்தைச் சாடைமாடையாகத் தன் குடும்பத்திற்கும் சொல்லியிருக்கிறாள். அந்த நேரம் பார்த்து அவன் இதைச் சொல்லியனுப்பியிருந்தான்.

“சும்மா விளையாட்டுக்கு உன்னோட பகிடிவிட்டுக் கதைச்சிருப்பான். அதையெல்லாம் பெரிசா எடுக்கிறதோ?” பாட்டியார் அன்புடன் சொன்னாள். ஏதோ விதத்தில் சிதம்பரம் அவர்களுக்கு உறவு என்றும் பாட்டி சொன்னாள்.

அதன்பின் மைதிலியின் வாழ்க்கையில்தான் எத்தனை மாறுதல்கள்? சிதம்பரனுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று மைதிலி நினைத்தாள். தன்னைப் படிப்பில் அக்கறையாக்கியது அவனது நையாண்டித்தனம் என்று புரிந்தது.

பாரதியார் பேச்சுப் போட்டியில் ஜெயித்தது அவனுக்கு விட்ட சவால் என்று அவளுக்குத் தெரியும். ஆங்கில மாஸ்டரின் கடைக்கண் பார்வைக்குக் கவிதை எழுதியது பருவம், நெருக்கம் மட்டுமல்ல. உலகத்தில் சிதம்பரம் போலல்லாது கௌரவமான ஆண்களும் இருக்கிறார்கள் என்பதால்தான் என்று சிதம்பரனுக்குக் காட்ட நினைத்தாள்.

சடங்குகள் என்று ஒன்றுமில்லாமல் அவசரமாக ஆங்கில மாஸ்டருடன் றெஜிஸ்டர் கல்யாணம் முடித்துக்கொண்டு ஊருக்கு வந்தபோது வசை பாடியவர்களில் சிதம்பரனும் ஒருவன் என்று கேள்வி. ஆங்கில மாஸ்டர் மேற்படிப்புக்காக லண்டன் வந்தபோது அவரின் மனைவியாகத் தன் பிரயாணத்தைத் தொடந்தாள். பணத்தால் சிதம்பரன் அவளை விலைக்கு வாங்க முடியவில்லை என்று நிரூபித்தாள்.

அதன்பின் ஊரிலிருந்து வரும் கடிதங்களில் சிதம்பரன் பற்றி யாரும் ஒன்றும் எழுதவில்லை. அவள் ஊருக்கு விடுதலையில் வந்திருந்தபோது வந்தான். பேசினான். குடும்ப வறுமையைச் சொன்னான்.

“நான் லண்டனில் பெரிய பணக்காரியாக இருக்கிறேன் என்று நினைத்தாயா?” அவள் பரிதாபத்துடன் கேட்டாள். ஒரு காலத்தில் எவ்வளவோ உயர்ந்த நிலையில் வாழ்ந்தவன் தன் முன் பிச்சைக்காரனாக நிற்பதை அவளாற் பொறுக்க முடியாதிருந்தது. அதுவும் தன்னிடம் உதவி கேட்பதை அவளால் நம்பமுடியவில்லை. அவன் அப்போது இவளைக் கொங்கிறீட்டாகப் பார்க்கவில்லை. உருவமற்ற வெறும் சீமேந்துப் பலகையாகப் பார்க்கவில்லை. அவன் பார்வையில் வித்தியாசம், நடத்தையில் பண்பு,

“மைதிலி நீ நேர்மையான பெண் என்று தெரியும். பெண் பாவம் பொல்லாதது” அவன் முணுமுணுத்தான். அநுபவத்தின் முத்துச்சொற்கள் அவை. “என்ன சொல்லுறியள்” அடை மழை நேரத்தில் ஓட்டைக் குடையுடன் வந்தவன் என்ன உளறுகிறான்.?

“உங்களை மாதிரிக் கன பெண்களை நான் வருத்திப்போட்டன்” பாவமன்னிப்புக் கேட்கிறானா? அல்லது கடன் வாங்க வரும்போது கௌரவமாக நடிக்கிறானா? சிதம்பரத்தின் சிந்தனையின் நேர்மை அவள் உள்ளத்தைத் தொட்டது. சிறுவயதிலிருந்து அவன் உண்மையுடன் நடந்திருக்கிறான். வாலிபக் கோளாறுகளை அடக்கதெரியாத, பழகாத பண்பிலிருந்து அவன் வளர்ச்சியின் ஒவ்வொரு பரிமாணத்தையும் அவள் முகம் கொடுத்திருக்கிறாள். கிராமத்தில் பண்பாட்டில் வளர்ந்தவன்;. அவளைக் கேலி செய்தது பருவக்கோளாறு. அவளைக் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டது ஒரு விதத்தில் அவள் சுதந்திரத்தைப் பறித்து அவளைத் தன் உடமையாக்கிக் கொள்ளவேண்டும் என்ற ஆவல். வாங்கிச் சேர்க்கும் கடைகளில் அவளும் ஒரு கடைச்சரக்காக நினைத்தானோ?

இருபது வருடஙகளில் எத்தனை மாற்றம்?

“ஆர்மிகளின்ர அட்டகாசத்தால கன கடைகள் எரிஞ்சு போச்சு.” அவன் கண்கள் கலங்கின. அவன் மேலதிகமாக எதுவும் கேட்கவில்லை. இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு நடந்த விடயம் அவனுக்கும் நடந்திருந்தது.

“லண்டனுக்குத் திரும்பிப்போய் என்னால் முடிஞ்சதை அனுப்புவன்” அவள் முதல் தடவையாக அவனில் பரிதாபப்பட்டாள். ஒருகாலத்தில் ஒன்றாய்ப் படித்த உறவு. அவன் தேம்பினான். அவள் அதை எதிர்பார்க்கவில்லை. இருவரும் இரு உலக கலாசாரத்தில் வாழ்பவர்கள்.

“உங்கட காலில் எழுதின புண்ணியத்த என்ர தலையிலை கடவுள் எழுதல்ல” அவன் கரகரத்த குரலில் சொன்னான். “உங்களுக்கெல்லாம் பெண்களுக்கெல்லாம் என்ன படிப்பு” என்று கிண்டல் செய்தவனா பேசுகிறான்?

லண்டன் வந்ததும் தன்னுடன் படித்த ஒருத்தன் கஷ்டப்படுவதாகவும் அவனுக்கு உதவி செய்ய யோசிப்பதாகக் கணவனுக்குச் சொன்னதும் கணவன் கிண்டலாகக் கேட்டாள். “என்ன பாடசாலைக் காதலனா?” கணவனின் குரலில் இருந்த நையாண்டி அவளுக்குப் பிடிக்கவில்லை. மைதிலி மறுமொழி சொல்லவில்லை.

அன்று குளிக்கும்போது தன் உடலைப் பார்த்தாள். தாய்மையால் தளர்ந்துபோன உடல்வாகு. “காங்கிறீட்” சிதம்பரனால் கேலிசெய்யப்பட்ட உடல்வாகு இன்று தாய்மையின் தளர்விலும் கவர்ச்சியாக இருக்கிறது.

“பட்டுப்போல உன் உடம்பு” என்று கணவர் தழுவும் போதும், “உன் கண்கள் காந்தங்கள்” என்று அவன் காதல் போதையில் உளறும் போதும் இன்றும் என்னென்னவோ இனிய காதல், காம, இச்சை வார்த்தைகளை ஒரு கணவன் என்ற முறையில் அவளிடம் கொஞ்சிக் கொட்டும் நேரங்களில் எப்போதாவது சிதம்பரனின் ஞாபகம் வரும்.

அவனுடன் சீறிய, திட்டிய பயந்தோடிய ஞாபகங்கள் வரும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, அப்படியுமில்லை. வாழ்க்கையில் முதல் தடவையாக சிதம்பரனிடமிருந்து மைதிலிக்குக் கடிதம் வந்தது. அவள் அனுப்பிய பணத்திற்கு நன்றி சொல்லி எழுதியிருந்தான். எழுத்து முத்து முத்தாக அழகாக இருந்தது. நிறையப் படிக்காவிட்டாலும் எழுத்தில் நிதானம் தெரிந்தது. “அன்புள்ள சகோதரி…..” என்று தொடங்கியிருந்தான். மைதிலிக்குச் சிரிப்பு வந்தது. சிதம்பரன் தாய்குலத்தை வணங்கத்தொடங்கிவிட்டானா?

சகோதரியா? அவள் தனக்குத் தானே சிரித்துக்கொண்டாள். மைதிலியின் கணவர் பார்த்தால் ஏதும் சந்தேகப்படலாம் என்று அவன் சகோதரி என்று ஆரம்பித்திருக்கலாம். அந்த நினைவு வந்ததும் நேர்மை பற்றிய கேள்வி அவள் மனதில் ஊசலாடியது. அவள் பணம் கிடைத்ததாகவும் பழையபடி ஏதும் தொழில் செய்ய முயற்சிப்பதாகவும் எழுதியிருந்தான்.

“நீங்கள் செய்த நன்மைக்கு கடவுள் எப்போதும் உங்களுக்கு உதவி புரிவார்” என்று எழுதியிருந்தான்.
நான் செய்த நன்மையா? சுயமை விமர்சனம் செய்ய வேண்டும்போல் இருந்தது மைதிலிக்கு.
மைதிலி தன் வீட்டுக்குப் பக்கத்தில் வளர்ந்து உயர்ந்து கொண்டு போகும் “காங்கிறீட்” கட்டிடத்தைப் பார்க்கிறாள். ஒரு பக்கத்தில் லிப்ட் போட்டுச் சாமான்களை மேலே கொண்டு போகிறார்கள். மறுபக்கத்தில் சிலர் ஜன்னல்கள், கதவுகள் என்று எத்தனையோ தளபாடங்களைக் குவிக்கிறார்கள்.

காங்கிறீட் கட்டிடம் எத்தனையோ பேரின் உழைப்பில், உணர்வில், திட்டத்தில் உருவாகும் கட்டிடம்.

“உனது மனதில் உள்ள பரந்த மனித நேயம் அற்புதமானது” சிதம்பரன் எழுதிய கடிதத்தின் ஒரு சில புகழாரங்களில் இதுவும் ஒன்று. உண்மையாகவே அவன் அவளபை; பற்றி அப்படி நினைத்திருக்கலாம். அவனுக்குத்தான் உண்மையாக ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நினைக்கிறாள்.

அவன் ஒரு காலத்தில் செய்த கிண்டல்கள்தான் தன்னைப் படிக்கப் பண்ணியது, ஆளாக்கியது. ஒரு காலத்தில் லண்டனில், எங்களையாண்ட ஆங்கிலேயருடன் சமமாக வேலை செய்யப் பண்ணியது என்று எழுதவேண்டும் என்று நினைக்கிறாள். அவளால் தான் அடைந்த நன்மைகளைச் சொல்லத் துடிக்கிறாள். வீட்டுக்கு வந்ததும் கணவர் அவள் வாசித்து வைத்த சிதம்பரத்தின் கடிதத்தைப் படிக்கிறார்.

“என்ன பெரிதாகப் புழுகி எழுதியிருக்கிறார்” கணவன் குரலில் கிண்டல். வித்தியாசமான கிண்டல். சிதம்பரத்தின் கிராமத்து கிண்டலல்ல. லண்டன் கிண்டல். சட்டென்று மைதிலி தன் கணவனைப் பார்க்கிறாள். அவன் அன்னியமாகத் தெரிகிறான். தன்னை தெரியாதவனாகத் தெரிகிறான்.

“இவனுக்கு என்னைப் புரியுமா?”

“புரிந்தது போதுமா?”

அந்தரங்கமான இரு உடல், ஒரு உயிர் என்று வாழந்த தாம்பத்தியத்துள் மைதிலி என்ற ஒரு பெண்ணின் உண்மையின் சொரூபத்தைத் தெரியுமா? அவளுக்குப் புரியவில்லை.
அடுத்தநாள் வேலைக்குப் போகிறாள். காங்கிறீட் கட்டிடம் உயர்ந்துகொண்டே போகிறது. தனது கிராமத்துப் பாடசாலையில் ஒரு மாடிக் கட்டிடமும் கிடையாது. மழை வந்தால் ஜன்னலால் சாரலடிக்கும். சோழக் காற்றில் தூசி வந்து கண்ணிற்படும். வாழ்க்கையின் ஆரம்பம் அது. அந்த ஆரம்பத்தில், வயதில், அநுபவத்தில் எல்லாம் புதுமை, பயம், கலந்த எதிர்பார்ப்புக்கள்.
சிதம்பரம் சொன்ன வார்த்தைகள், அவனுடன் பழகிய நாட்கள், பசுமையாயிருக்கும் நினைவுகள். ஏனென்றால் இளமை நினைவுகள் மிகவும் வலிமையானவை. மனித சிந்தனையை ஒழுங்குபடுத்துபவை அல்லது உருக்குலைப்பவை.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது கணவர் தனக்கு முன்னால் வேலை முடிந்து வந்திருப்பது தெரிகிறது. ஏதும் சுகமில்லையா அவனுக்கு?

“ஏன் சிதம்பரனுக்குப் பணம் கொடுத்தாய்?” கணவனின் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை.

“என்னுடன் ஒரு காலத்திற் படித்தவன், இப்போது ஏழையாயிருக்கிறான்.” மைதிலிக்கு இந்த உண்மைகளுக்கப்பால் வேறு எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை.

“அப்படியென்றால் உன்னுடன் படித்த எல்லா ஏழைகளுக்கும் பணம் கொடுப்பாயா?” என்ன இது? ஏன் இப்படி யதார்த்தம் அற்ற கேள்விகள் கேட்கிறான்?

மைதிலிக்கு மறுமொழி சொல்லத் தெரியவில்லை. சிதம்பரன் சொன்ன கிண்டல்கள், கேலிகள் என்பன மிகவும் அற்பத்தமானவை. கிராமத்துச் சூழ்நிலையில் பரந்த அறிவில்லாத உலகத்திலிருந்து வந்த அனுபவத்தின் பிரதிபலிப்புக்கள்.

இவள்…? தன் கணவனை ஏறிட்டுப் பார்க்கிறாள். வெறும் கற்பனையில் வாழ்பவனா? எவ்வளவுதான் படித்தாலும் இவன் மனம் என்ன “சிமென்டால்” செய்த “காங்கிறீட்டா”?
விடை தெரியாமல் தவிக்கிறாள் அவள்.

– தெல்லிப்பளை (யாழ்ப்பாணம்) மஹாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 2004ம் ஆண்டு வெளியீடு – பிரான்ஸ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *