2015.பிப்ரவரி.04
நியூயார்க் நகரம்
தனது மாலைநேரத்தைக் கடந்து,மெதுவாக மயங்கிக் கொண்டிருந்த இரவு எட்டு மணி. நகரின் மத்தியில், செயின்ட் ஜேம்ஸ் தேவாலயத்தின் பராமரிப்பிலிருந்த பூங்காவின் இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்த சாரா,தனது காதலன் இராபர்ட்டை கடுமையாகக் கோபித்துக் கொண்டு,கடந்த பத்து நிமிடங்களாக வார்த்தைகளால் வெடித்துக் கொண்டிருக்கிறாள்.
“சாரா..ப்ளீஸ் நம்பு..வரும் வழியில் எனது காருக்கு ஏதோ கோளாறு.மெக்கானிக்கை அழைத்துச் சென்று சரி செய்து எடுத்துவர ஒருமணிநேரம் தாமதமாகிவிட்டது என்பதுதான் உண்மை.மற்றபடி உன்னிடம் சொன்ன நேரத்திற்கு வரக்கூடாது என்றெல்லாம் இல்லை..இதனால்தான் இங்கு வர நேரமாகிவிட்டது என்று செல்போனில் உனக்கு தகவல் சொன்னேனே.! இதைவிட நான் வேறென்ன செய்ய முடியும் சாரா..?”
இராபர்ட் சொல்வதில் அவளுக்கு இப்போதும் நம்பிக்கையில்லை. தன்னை சில நாட்களாக அவன் தவிர்த்துக் கொண்டே வருவதாக அவளுக்குப் பட்டது.காரணம்,வழக்கமான தங்கள் மாலைநேர சந்திப்புகளில் கூட,அடிக்கடி ஒரு பெண்குரல் அவனை அழைப்பதும்,தனது அணைப்பில் அவன் இருந்தால்கூட வேகமாய் விடுவித்துக் கொண்டு தனியே சென்று அவன் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டு,அவளாய் போனை துண்டித்த பின்தான் வருவதும், வாடிக்கையாகி வருகிறது. “நான் இருக்கும்போது கூட,என்னைப் பொருட்படுத்தாமல் இவ்வளவு நேரம் அந்தப் பெண்ணுடன் நீ பேசிக் கொண்டிருப்பது எனக்கு சரியாகப் படவில்லை.ஒரு வகையில் நீ என்னை அவமானப்படுத்துவது போலிருக்கிறது இராபர்ட்..” சாரா தனது மனக்குமுறலை கடந்த சில தினங்களாக வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறாள்.
“சேச் சே..என்னை நீ மிகவும் மட்டமாக நினைத்துக் கொண்டுவிட்டாய் சாரா..! நான் அப்படியல்ல,அந்தப் பெண் எனக்கு ஒருவகையில் உறவு.மேலும் எனது நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் மிஸ்டர்.ஸ்டீவன்சனின் சகோதரியும்கூட.என்னுடன் பேசுவதற்கு அவள் விரும்பும்போது,நான் அதனைத் தவிர்ப்பது மரியாதையாக இருக்காது.அதனால்தான் பேசுகிறேன்” என்று அவனும் தொடர்ந்து சமாதானம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான்.
ஆனால்,இன்று கடந்த ஒருமணி நேரமாக தன்னைக் காக்க வைத்ததுமில்லாமல்,பொய்யும் சொல்கிறான்.அவனை அழைத்தபோதெல்லாம் அவன் சாலையில் நின்று கொண்டிருப்பதற்கான எந்தவொரு வாகன சப்தமும் கேட்கவேயில்லை.மாறாக தொலைக்காட்சியின் பாடல்களும் அதனைத் தொடர்ந்து சில விளம்பரங்களின் ஒலியும் துல்லியமாகக் கேட்டது.அந்த ஒலியின் துல்லியம் ஒரு அறைக்குள் இருந்தால்தான் அவ்வாறு கேட்க முடியும்.இதுதான் அவளது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் ஆதாரமாக இருந்தது.
இன்று இதற்கொரு முடிவு கட்டிவிடவேண்டும்.பேசிக் கொண்டே தன்னை அணைத்துக் கொள்ளும் உத்தேசத்துடன் நெருங்கி அமர்ந்தவனை,வேதனை மின்னப் பார்த்த சாரா,
“இதோ பாரு இராபர்ட்.உனது விருப்பத்திலும்,ஆசையிலும் தலையிட்டு,உனது உரிமையை எவ்விதத்திலும் கெடுத்துவிட எனக்கு எந்த உரிமையுமில்லை.அதேபோல்,எனது சுதந்திரமான முடிவுகளிலும் நீ தலையிட மாட்டாய் என்று நம்புகிறேன்.
“அது அப்படித்தான் சாரா..இப்போது அதற்கென்ன வந்தது.?” என்றபடியே தனது தோளைச் சுற்றி,மார்பில் படும்படியாக வைத்த அவனது கையை மெதுவாய் தள்ளிவிட்ட சாரா, “திருமணத்தில் முடிய வேண்டும் என்று நாம் துவங்கிய நமது நட்பை இத்தோடு துண்டித்துக் கொள்வோம் இராபர்ட்..” அதற்குப்பின் அவள் எதுவும் பேசவில்லை. அங்கு நிலவிய கனத்த மௌனத்தைப் போலவே,அவர்களைச் சுற்றி இருளும் கனத்துக் கொண்டே வந்தது.
இறுக்கமாகக் கழிந்த சில நிமிடங்களையடுத்து,இருக்கையிலிருந்து எழுந்த சாரா, இராபர்ட்டை துளியும் பொருட்படுத்தாமல், சர்ச் வாசலின் முன்பாகச் சென்று,மண்டியிட்டபடி பிரார்த்தனை செய்யத் துவங்கினாள்.
இலங்கை
யாழ்ப்பாணம் ஜந்துசந்தி பகுதியில் இருதினங்களுக்கு முன்பாக, சில மர்ம மனிதர்களால் முஸ்லீம் இளைஞர்கள் சிலர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும்,முறையான விசாரணை கோரியும் அரசை வலியுறுத்தி,அப்பகுதியில் அன்று கடையடைப்பு நடைபெற்றுக் கொண்டிருந்ததால்,நகரமே மயான அமைதியில் உறைந்து கொண்டிருந்தது.
பஷீர் செய்கு தாவூத்தும்,தனது சிற்றுண்டிக் கடையை அன்று திறக்கவில்லை.இன்றைக்கான தேவையென்று தயார் செய்து வைத்திருந்த மாவு,கிரிபத்துக்காக ஊற வைத்திருந்த அரிசி,பால் தேங்காய்ப்பூ சம்பல்,தேங்காய்ப்பூ ரொட்டி எல்லாம் நாளைக்கு பயன்படுத்த முடியாமல் கெட்டுவிடும்.இதனால் ஏற்படும் நட்டத்தை மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தபோது, வாரக் கடைசியில் கடன்தான் வாங்கவேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரிந்தது. “உறுதியாக கடையடைப்பு நடக்கும் என்றும்,நடக்காதென்றும் சிலர் சொன்ன தகவல்களால் வந்த கேடு இது..? நம்ம விதிக்கு நாம யாரை நோக..எல்லாம் உறுதியாத் தெரிஞ்சுக்க நாம என்ன அரசியலிலா இருக்கறோம்..?”
கவலையுடனே நேரம் கழிந்திருந்தது.மாலை நேரத்திற்கான அஸர் தொழுகையை முடித்துக் கொண்டு அறையை விட்டுவெளியே வந்த பஷீர் செய்கு தாவூத்,சமையலறையை நோக்கிக் கனைத்தார். உள்ளிருந்து எட்டிப்பார்த்த மனைவி பாத்திமாவிடம்,ரிசானாகிட்டே இருந்து ஏதாவது போன் வந்ததா..? என்றார்.
இல்லையென்று தலையாட்டினாள் பாத்திமா.
ரிசானா அவரின் இரண்டாவது மகள்.அதிகமாகப் படிக்கவைக்க முடியவில்லை.ஒரு நம்பகமான இடைத்தரகர் மூலமாக,சவுதியிலுள்ள ஒரு அரபி வீட்டிற்கு,வீட்டுவேலைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்.அவள் போய் மூன்று மாதங்கள் கழிந்துவிட்டது.அவ்வப்போது தனது நலத்தை ஓரிரு வார்த்தைகளில் பஷீரிடம் தெரிவிக்கும் ரிசானா,பாத்திமாவிடம் மட்டும் சற்று அதிகநேரம் பேசிக் கொண்டிருப்பாள்.இவ்வாறு அவர்கள் பேசும் நேரம் அவ்வப்போது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
அந்த சமயங்களில் எல்லாம்,பாத்திமா அவரை நச்சரிக்கத் தொடங்கிவிடுவாள்.“பதினெட்டு வயசுள்ள பெண்பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டாமுன்னு எவ்வளவோ சொல்லியும் கேக்காம நீங்க அனுப்பி வெச்சீங்க..அங்க அவ படுற பாட்டைக் கேட்டா எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்குங்க. சீக்கிரமா அவளை திருப்பியழைச்சுக்கணும்.!”
“சரி சரி ஒரு வருஷமாவது முடியட்டும்.”என்பதோடு பஷீரும் அந்தப் பேச்சை முடித்துக் கொள்வார்.அவளது சம்பாத்தியம் அவளுடைய திருமணச் செலவுகளுக்காவது பயன்படட்டும் என்று திட்டமிட்டது தவறோ..? என்று பஷீரின் உள்ளமும் கடந்த சிலதினங்களாக சஞ்சலமடைந்து கொண்டுதானிருந்தது.
இந்தியா
தமிழகத்தின் வடமேற்கு மூலையில் இருக்கின்ற ஒரு கிராமம்.
“சனியன் புடிச்சவ..இஸ்கோல்ல அத்தனைநேரம் இருந்துட்டுத்தானே வர்றா..அப்படியே போயிட்டு வர்றதுக்கு இவளுக்கு என்ன கேடு..? சாயங்காலம் தாண்டி இருட்டுக் கவியுற வரைக்கும் காத்திருந்துட்டு,இங்க வந்து செட்டு சேந்துகிட்டு,போறாளுக ஊர்கோலம்.. தூத்தேறி.இன்னைக்கு வரட்டும்.ரெண்டு அடிபோட்டுத்தான் சொல்லணும்..ஒரு நாளைப்போல தெனமும் இதே ரோதனையாப் போச்சே..!” இசக்கியம்மா மனசுக்குள்ளும்,வாய்விட்டும் கருவிக் கொண்டிருந்தாள்.
பத்தாவது படிக்கும் மகள் செல்வியைத்தான் அவள் வைது கொண்டிருந்தாள்.அவள்தான் என்ன செய்வாள் பாவம்.காலையில் எழுந்து அவளால் போகவே முடிவதில்லை.மாலையில் பள்ளிவிட்ட பின் விட்டிற்கு வந்து,இருட்டாகும் வரை படிப்பது,எழுதுவது என்று நேரத்தைக் கடத்திவிட்டு,இருள் சற்றுக் கவிவதற்கு முன்பாக,கருமாரியம்மன் கோவிலுக்கு அவள் புறப்படுவாள்.கூடவே சிலபோது அவள் வயது தோழிகள் சிலரும் சேர்ந்து கொள்வார்கள்.
பின் அவர்கள் திரும்பி வருவதற்கு குறைந்தது அரை மணிநேரமாவது ஆகும்.
செல்வி மட்டும் விரும்பியா தினமும் செல்கிறாள்.? வீட்டிலிருந்து விடுவிடென்று கோவிலுக்கு செல்பவர்கள் சாமியைக் கும்பிட்டுவிட்டு,வெளியே வர குறைந்தது பத்துநிமிடங்களாவது வேண்டாமா..? அதுவே பரீட்சை நேரமாக இருந்தால்,இன்னும் கொஞ்சம் நேரம் கூடும்தான்.
அதற்குப்பிறகு கோவிலைத் தாண்டி டவுனை நோக்கிப் போகிற புதர்கள் அடர்ந்த சாலைக்கு வருவார்கள்.சாலையிலிருந்து ஒரு இரண்டடி தூரம் புதருக்குள் நுழைவார்கள்.ஆமாம்,அந்த இடம்தான் அவர்களுக்கான கழிப்பிடம்.இதில் திடீர் திடீரென்று சாலையில் வரும் வாகனங்களின் ஒளி,தங்கள் மீது படும்போதெல்லாம் அவசரமாய் எழுந்து நிற்க,அனிச்சையாய் உடல் பழகியிருந்தது.
இதுவொரு வகையில் அவஸ்தைதான் எனினும்,வேறு வழியில்லை.இப்படி புதருக்குள் நுழைந்த கஸ்தூரி,கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நல்லபாம்பு தீண்டி இறந்துபோயிருக்கிறாள்.அதற்கும் சில நாட்கள் முன்பாக தாமரை அக்கா நிறைமாத கர்ப்பிணி.அவளும் அப்படித்தான் இறந்தாள்.அந்த சம்பவங்களுக்குப் பின்,பிணத்தை நடுரோட்டில் வைத்துக்கொண்டு ஊருக்கு பொதுவாக ஆண்களுக்கு,பெண்களுக்கு எனத் தனித்தனியா கழிப்பிடங்கள் கட்டித்தரவேண்டும் என்று மறியல் போராட்டம்கூட நடந்தது.அதிகாரிகள் அப்போது விரைவில் கட்டித்தருகிறோம் என்று,அப்போதைக்கு சொல்லிப் போனவர்கள்தான்,இதுவரை தங்கள் ஊருக்கு வந்ததாகவே தெரியவில்லை.
அவளுடைய அம்மா சொல்வது போல,தனது பள்ளியிலுள்ள கழிப்பிடத்திற்கு போய் வரலாமென்றால்,அங்கு தண்ணீர் வசதியே இல்லை.அமைச்சர் வந்து திறந்து வைத்தபோது, அங்கிருந்த குழாய்களில் வந்த தண்ணீர்,ஒரே வாரத்திற்குப் பிறகு நின்று போனது.அப்புறம் அங்கே போவது எப்படி..? அம்மாவிடம் பலமுறை சொல்லியும்,தினசரியும் திட்டுவதே அவளுக்கு வாடிக்கையாகிப் போய்விட்டது.
அவளுக்கென்ன,பெண்பிள்ளைகள் எல்லாம் வெட்டி அரட்டை அடிப்பதற்காக,போய்க் கொண்டு இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
இன்றைக்கு ஏனோ மேகம் அதிகமாக மூட்;டம் போட்டுக் கொண்டிருந்தது.வழக்கத்தைவிட இருட்டும் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது.அதனால்தானோ என்னவோ அவளது தோழிகள் யாரும் வரவில்லை.கோவிலில் சிறிது நேரம் காத்துக் கொண்டிருந்தாள் செல்வி.‘ஒருவேளை நமக்கும் முன்னதாகவே வந்துபோய் விட்டார்களோ..?’ மேலும் சில நிமிடங்கள் காத்துக் கொண்டிருந்த செல்வியை,புதரை நோக்கி விரட்டியது அவளது வயிற்றின் அவஸ்தை.
2015.பிப்ரவரி .05
நியூயார்க் சர்ச் வளாகத்திலும்,சவுதியில் ஒரு அரபியின் வீட்டிலும்,தமிழக கிராமம் ஒன்றின் சாலையோரக் கோவில் அருகிலும்,சித்திரவதை செய்யப்பட்டு,கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாக அன்றைக்கு வெளியாகியிருந்த அந்தந்த நாட்டு தினசரி செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் பெண்களின் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகியிருந்தன. “கடவுளே.. உனக்கு இரக்கம் என்பதே இல்லையா..?” என்று.எங்கேயும் எப்போதும் நிறைந்திருக்கும் அவரவர்களின் கடவுளை எண்ணி மனதுக்குள் அங்கலாய்த்துக் கொண்டே,அந்தந்த நாட்டு மக்கள் படித்துக்கொண்டும்,பார்த்துக் கொண்டுமிருந்தனர்.