உனக்கு 34 வயதாகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 30,442 
 
 

“உனக்கு 34 வயசாச்சி, நினைவிருக்கில்லே“ என்று அப்பா அவளிடம் கேட்டபோது சுகந்தி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

சற்று ஆத்திரத்துடன் தலையைத் திருப்பி அப்பாவை பார்த்து முறைத்தபடியே அதுக்கு என்ன என்று கேட்டாள். அப்பா பேப்பர் படிப்பது போலத் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். அது ஒரு தந்திரம், சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயல்.

அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்பதால் அப்பாவோடு சண்டை போட அவளுக்கு விருப்பமில்லை,

ஒய்வு நாளாக இருந்தால் நிச்சயம் இது சண்டையில் தான் போய் முடிந்திருக்கும். அப்பா எப்போதுமே அவள் அலுவலகம் கிளம்புகிற நேரம் பார்த்து தான் பேச்சை ஆரம்பிப்பார்.

தன்னைக் குத்திக்காட்டுவதற்குத் தான் அப்படிச் சொல்கிறார் என ஆரம்ப நாட்களில் தோன்றியது. ஆனால் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போய், லைட் லேம்ப் எரிந்து கொண்டிருக்கிறது, கேஸ் அணைக்கபடவில்லை என்பது போல நினைவூட்டும் குரலாக அது மாறிவிட்டிருக்கிறது.

அவள் தனக்குள் முப்பத்திநான்கு வயதானதை உணரவேயில்லை. பள்ளி வயது வரை தான் வளர்ச்சியை அவளால் துல்லியமாக உணர முடிந்த்து, கல்லூரி நுழையும் போது சட்டெனத் தான் நிறைய வயது கடந்துவந்துவிட்டதைப் போல உணர்ந்தாள். நான்கு ஆண்டுகள் இன்ஜினியரிங் படித்து முடிக்கும் வரை அவளுக்கு வயது தெரியவேயில்லை, வருஷம் தான் ஒடியிருந்த்து,

வேலைக்குப் பெங்களுர் போய் அங்கிருந்து மும்பை மாறி பின்பு அங்கிருந்து ஒன்றரை வருஷம் அமெரிக்கா சென்ற போது தான் வயது கூடியிருப்பதை அவளால் உணரமுடிந்த்து,

அப்போதும் கண்ணாடி வயதை காட்டிக் கொடுக்கவில்லை, திடீரென அப்படியொரு உணர்ச்சி அவளுக்குள் உருவானது, இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால் ஒருநாள் சாப்பிடப் போகிற நேரத்தில் தான் அது அவளுக்குள் எழுந்தது.

மணி இரண்டை கடந்த போது திடீரென உடனே கேண்டியனுக்கு ஒடிப்போய்ச் சாப்பிட வேண்டும் போலப் பதற்றமாகியது,. வேலையை முடித்துவிட்டு எழுந்து கொள்வோம் என நினைத்தால் முடியவில்லை

சே, எதற்கு இவ்வளவு அவசரம், பசித்தால் பசித்துவிட்டுப் போகட்டுமே என விட்டுவிடலாம் தானே என்றால் உடல் கேட்க மறுத்துக் கைகள் நடுங்க துவங்கின. அப்போது தான் தனக்கு 32 வயது என்பதைச் சுகந்தி உணர்ந்தாள்

பசி வந்தவுடன் திடீரென வயதாகி விட்ட உணர்வு வருவது அவளுக்கு மட்டும் தானா, இல்லை பலரும் அதை அனுபவித்திருப்பார்களா

சுகந்தி யாருடனும் இதைப்பற்றிப் பேசிக் கொள்ளவில்லை.தனியாகப் போய்ச் சாப்பிட்டாள், தனியாகச் சாப்பிடப்போவது தான் வயதாவதன் முதல் அறிகுறியா

அவளுக்கு அப்படித்தான் தோன்றியது. கேண்டியனில் நிறையக் கூட்டம், எது உடனே கிடைக்குமோ அதுவே போதும் எனத் தோன்றியது, தயிர்வடை வாங்கிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள். எப்படி அதைச் சாப்பிட்டாள் என அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் சாப்பிட்டு முடிந்திருந்தாள்.

படியேறி அலுவலகத்தினுள் போய்த் தனது நாற்காலியில் உட்கார்ந்த போது அலுப்பாக இருந்தது. திடீரெனத் தனது கால்கள் மறத்துப்போய் உடல் ஒரு கற்பாறையாக மாறிவிட்டது போலத் தோன்றியது. கைகால்களை உதறிக் கொண்டாள். சுற்றிலும் திரும்பி பார்த்த போது எல்லாமும் பழசாகத் தோன்றியது, எதிரே உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்த கேசவ் உட்பட அத்தனை பேருக்கும் வயதாகியிருப்பது துல்லியமாகத் தெரிந்த்து.

பலரும் வயதை மறைக்கப் பார்க்கிறார்கள். சிலர் வயதை ஒரு ஆயுதம் போலக் கையாளுகிறார்கள். சிலர் வயதை காட்டி யாசிக்கிறார்கள். அன்று வீடு திரும்பிய போது தனக்கு அறுபது எழுபது வயது ஆகிவிட்டது போலச் சுகந்திக்கு தோன்றியது.

அவள் படுக்கையில் விழுந்து அழுதாள், எதற்காக அழுகிறோம் எனத் தோன்றவேயில்லை, ஆனால் நிறைய நேரம் அழுதாள். பின்பு எழுந்து முகம் கழுவி கொண்டு வெளியே போய்ச் சாப்பிட்டு வரலாம் என ஆட்டோ எடுத்துப் பெசன்ட் நகர் வரை கிளம்பினாள்.

ஆட்டோவில் போகும் போது சாலையில் கடந்து செல்லும் ஒவ்வொருவர் வயதையும் மனதிற்குள்ளாகவே எண்ணிக் கொண்டு வந்தாள். உணவக வாசல் வரை போன பிறகு திடீரெனச் சாப்பிட வேண்டாம் என்று தோன்றியது.கடற்கரைக்கு நடந்து போய் உட்கார்ந்து யோசித்தாள், திடீரென ஊருக்குப் போய் ஒருவாரம் இருந்துவிட்டு வரலாம் என்று தோன்றியது.

முன்பெல்லாம் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ஊருக்குப் போய் வருவாள்.அண்ணன் வீட்டில் தான் ஒய்வு பெற்ற அப்பா இருந்தார். வீட்டிற்குப் போய் இறங்கியதும் அண்ணன் அறிவுரை சொல்ல ஆரம்பிப்பான், அவனுக்குத் தான் இன்னமும் ஒரு பள்ளிமாணவி என்ற எண்ணம்.

அப்பா அதிகம் அறிவுரை சொல்ல மாட்டார்.ஆனால் தான் ஏதோ தவறு செய்துவிட்டவரைப் போலவே அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். பேச்சை விடவும் மௌனம் மோசமானது.

அண்ணி சாப்பாடு போடும் போது அவளிடம் வேண்டும் என்றே குத்தலாகச் சொல்வாள். சிலவேளைகளில் சுகந்தியும் பதிலுக்குச் சூடு போட்டது போல ஏதாவது சொல்லிவிடுவதுண்டு,

ஒருமுறை அவள் சொன்ன பதிலை கேட்டு அண்ணி சப்தமாக அழுது கொண்டே சமையல் அறைக்குள் ஒடினாள்.அவளுக்குத் தன்னை விட இரண்டுவயது குறைவாகத் தான் இருக்கும். திருமணமாகி குழந்தைகள் பெற்றுவிட்டால் அது பெரிய தகுதியா என்ன.

சுகந்தி அதன்பிறகு அண்ணன் வீட்டிற்குப் போகவேயில்லை. அவளது தம்பி லண்டனில் வசிக்கிறான், அவனுக்கும் திருமணமாகிவிட்டது. அவன் மனைவியின் உறவினர்கள் திருவான்மியூரில் இருந்தார்கள். ஆகவே அவனும் அங்கேயே ஒரு புதுவீடு வாங்கிக் கொண்டிருந்தான், ஒருமுறை கூடச் சுகந்தியை அந்த வீட்டிற்கு அழைக்கவேயில்லை. எப்போதாவது அவனாகப் போனில் நலம் விசாரிப்பதுடன் உறவு முடிந்துவிடுவதாக இருந்தது

வயது வளர வளர உறவுகள் விலகிக் கொண்டேதான் போகுமா.

ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போக எத்தனிக்கும் போது தான், தனது வயது பற்றி உணர்வது அதிகமாகிறது எனச் சுகந்தி நன்றாக அறிந்திருந்தாள்.

ஊருக்கு ஊர் வயது என்பதன் வரையறை வேறுபடுகிறது. பெருநகரங்களில் நாற்பது வயது வரை இளைஞர்கள் தான், ஆனால் கிராமங்களிலே நாற்பது வயது என்பது முதுமையின் நுழைவாயில். பெருசு என அழைக்க ஆரம்பித்து விடுவார்கள்

ஆண்களின் நாற்பது வயதும் பெண்களின் நாற்பது வயதும் ஒன்று போலக் கருதப்படுவதில்லை, ஆண்களுக்கு நாற்பது வயதாகும் போது தான் ஆசைகளும் சுகம் தேடுதலும் அதிகமாகின்றன. பெண்களுக்கு நாற்பது வயதில் ஆசைகள் வடிந்து போகத் துவங்கி தனித்து இயங்குவதிலும், துணை தேவையில்லாமல் பயணம் செய்வது, சுதந்திரமாகச் செயல்படுவது என ஆர்வம் உருவாக ஆரம்பிக்கிறது.

வயது என்பது பாம்பு ஊர்ந்து போவது போலச் சப்தம் இல்லாமல் கடந்து போகிறது. ஐந்து வயதில் பீரோவில் இருந்த கண்ணாடி அவளுக்கு எட்டாது, எக்கி நின்று பார்க்கும்போது தனக்கு ஒரே நாளில் வயது வளர்ந்துவிடாதா என ஏங்கியிருக்கிறாள். ஆனால் வயது எவர் ஆசைக்கும் செவிசாய்ப்பதில்லை தானே.

பள்ளி வயதில் அந்தக் கண்ணாடி முன்பாக மணிக்கணக்கில் நின்றபடி தாவணியைத் திருத்திக் கொண்டு புருவங்களை அழகுபடுத்திக் கொண்டு காதோரம் சுருள்முடியை சுருட்டிவிட்டபடியே நின்றிருக்கிறாள். அந்த நாட்களில் வயது என்பது வாசனை தைலம் போலத் தேய்க்க தேய்க்க நறுமணம் தருவதாகயிருந்தது.

எந்த ஆடையை அணிந்தாலும் அழகாக இருப்பது போலத் தோன்றியது. கண்ணாடியை பார்க்கும் போது அவள் தனக்குத் தானே சிரித்துக் கொள்வாள், அந்தச் சிரிப்பு எதற்காக என அவளுக்கு மட்டுமே தெரியும்,

ஆனால் கல்லூரி நாட்களில் வயதை பெரிதாகக் கண்டுகொள்ளவேயில்லை, கூடவே திரியும் நிழலை போல அவள் பொருட்படுத்தாமல் வயது உடன் வளர்ந்து கொண்டிருந்தது

அவள் வயதை அவளை விடவும் அப்பா தான் அதிகம் எண்ணிக் கொண்டிருந்தார். அது அவளது அப்பா மட்டுமில்லை, எல்லா அப்பாக்களும் பெண் பிறந்தவுடனே திருமணத்தைப் பற்றிக் கனவு காண துவங்கிவிடுகிறார்கள், நல்ல கணவன் கிடைக்க வேண்டுமே என்ற பதைபதைப்பு அவர்களுக்குள் சொட்டு சொட்டாக நிரம்பத்து. அம்மாவிற்குத் திருமணமில்லை பிரச்சனை, திருமணத்திற்குப் பிறகு மகள் எப்படி வாழப்போகிறாள் என்பது தான் சிக்கல்.

அதைத் தான் சொல்லி சொல்லி காட்டுவாள். யாராவது ஒருவன் அவளைக் கட்டிக் கொள்ள நிச்சயம் வந்து சேருவான் என்பது அம்மாவின் எண்ணம்.

அப்பா அப்படி நினைக்கவில்லை. தான் விரும்புகிற, சுகந்திக்கும் பிடித்த, வசதியான, படித்த, ஒழுக்கமான மாப்பிள்ளை வேண்டும் என அவராக ஒரு பிம்பத்தை மனதிற்குள் உருவாக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அப்படி எல்லாம் ஒருவன் கிடைக்க மாட்டான் என்ற உண்மையை அவர் அறிந்திருந்தாலும் நம்பிக்கையை அவரால் விட முடியவில்லை

கல்யாணத்தைப் பற்றிக் கல்லூரியின் முதல் ஆண்டில் சுகந்தி நிறையக் கனவு கண்டாள். கல்யாணம் செய்து கொண்டுவிட்டு படிக்கலாமே என்று கூடத் தோன்றியது. ஆனால் இறுதி ஆண்டுப் படிக்கும் போது கல்யாணம் பற்றிய கனவுகள் மறைந்து போயிருந்தன.

வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு எதற்குக் கல்யாணம் என நினைக்க ஆரம்பித்தாள். அமெரிக்கா போய்வந்தபிறகு தனியாக வாழ்வது என முடிவே செய்து கொண்டாள்.

அப்பா அதைப் புரிந்து கொள்ளவேயில்லை. சில வேளைகளில் அவளுடன் சண்டையிட்டார், சில வேளைகளில் அழுதிருக்கிறார், அவள் அப்பாவின் அழுகையைப் பொருட்படுத்தியதேயில்லை, ஆண்களுக்கு அழுகையும் ஒரு தந்திரம்.

அப்பா அவளுடன் மாத கணக்கில் பேசாமல் இருந்திருக்கிறார், அதனால் ஒரு நஷ்டமும் தனக்கில்லை என்பது போல வைரக்கியமாக இருந்தாள். பின்பு ஒருநாள் அவராக அலுவலகம் தேடி வந்து இனி தான் அவளிடம் திருமணம் பற்றிப் பேசப்போவதில்லை என்று சொன்னார்.

எதற்காக எனச் சுகந்தி கேட்டுக் கொள்ளவில்லை.

அப்பாவை அழைத்துக் கொண்டு போய் அடையாரில் கண்பரிசோதனை செய்து புதுக்கண்ணாடி வாங்கித் தந்தாள்.

அன்றிரவு சாப்பிடும் போது புதுக்கண்ணாடி அணிந்தபடியே அப்பா சொன்னார்

“தலையில நிறைய நரைமுடி வந்துருச்சி, அதுக்கு மை அடிச்சிக்கோ“

“எதுக்கு“

“இல்லேண்ணா நரை தெரியுது“

“தெரியட்டும், அதனாலே ஒண்ணுமில்லை“

“உன் நல்லதுக்குத் தான்மா சொல்றேன்“

“என் நல்லது எனக்குத் தெரியும்பா“

“அப்பா எது சொன்னாலும் நீ கேட்க மாட்டயா“

“கேட்கிற மாதிரி நீங்க எப்போ சொல்லியிருக்கீங்க“

“உன்னை படிக்க வச்சது தான் நான் செஞ்ச ஒரே தப்பு“

“உங்களை நான் மதிக்கிறதுக்கு அது ஒண்ணு தான்பா காரணம்“

“இப்பவே உனக்கு 33 வயதாகிருச்சி“

“அதுக்கு என்ன“

“உனக்குனு ஒரு வாழ்க்கை வேணாமா“

“வாழ்க்கைன்னா“

“கல்யாணம்மா“

“உங்களைக் கல்யாணம் பண்ணிகிட்டதாலே அம்மா ஒண்ணும் நிறைவா வாழ்ந்திறலையே“

“அவ தான் அல்ப ஆயுசில போயிட்டாளே“

“இது தான்பா என் வாழ்க்கை, இது போதும், நான் இப்படியே தான் இருப்பேன்“

“இப்படி இருந்திட முடியாதும்மா“

“ஏன்“

“நான் எத்தனையோ பேரை பாத்துருக்கேன். கெட்டு சீரழிஞ்சி போயிருக்காங்க“

“அப்படி நானும கெட்டு சீரழிஞ்சி போகணும்னு ஆசைப்படுறீங்களா“

“அதுக்கில்லைம்மா, வயசு போனா வராது“

“அதை பற்றிக் கவலையில்லை“

“ஐம்பது வயசுல உன்னை யாரு கட்டிகிடுவா சொல்லு“

“எதுக்குக் கல்யாணம் பண்ணனும், போதும் லைப்னு செத்து போயிடுவேன்“

“இதெல்லாம் விதாண்டவாதம்“

“கல்யாணம் புருஷன் பிள்ளைகுட்டிக, இதைத் தவிரப் பேசுறதுக்கு வேற விஷயமே கிடையாதா விடுங்கப்பா“,

“இனிமேல் இதைபற்றிப் பேசினா என்னைச் செருப்பாலே அடி“

என அப்பா பாத்ரூமிற்குள் போய்க் கதவை மூடிக் கொண்டார், மணிக்கணக்கான கழிப்பறையில் உட்கார்ந்து இருப்பதால் அவரது கோபம் புரிந்து கொள்ளப்படும் என நினைப்பது முட்டாள்தனம்.

நேரடியாக அவளிடம் அறிவுரை சொல்லி கேட்காமல் போய்விட்டால் உறவினர்கள் மூலமாகவும் அலுவலக நண்பர்கள் மூலமாகவும் அப்பா இதைச் சொல்ல துவங்கினார்

சுகந்திக்கு கேட்டு கேட்டு அலுத்துப் போயிருந்தது. அப்பாவை தன்னோடு வந்து இருக்கும்படியாக அவள் தான் அழைத்திருந்தாள். காரணம் தனியாக ஒரு அபார்ட்மெண்டில் வாழும் போது ஏற்படும் சகிக்க முடியாத நெருக்கடிகள்

அதற்கு முன்புவரை அவள் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தான் தங்கியிருந்தாள், ஹாஸ்டலில் உள்ள எவரோடும் அவளுக்கு நெருக்கம் உருவாகவில்லை.அது ஒரு சிறைக்கூடம் போலவே இருந்தது, அத்தனை கட்டுபாடுகள், அதை விடவும் அறைத்தோழிகள் பொறாமையிலும் வெறுப்பிலும் படுமோசமாக நடந்து கொண்டார்கள். மூன்று முறை அவளது சம்பள பணம் திருடு போனது

அவதூறுகள், வீண்வம்பு, திருட்டு என எல்லாமும் அந்த ஹாஸ்டலில் இயல்பாகயிருந்தது. அவள் அறையில் இருந்த பெண்களில் ஒருத்தி சுகந்தி காது கேட்கவே எக்ஸ்பரி டேட் முடிஞ்ச கேஸ் எனச் சொன்னாள். சுகந்தியால் அதைக் கேட்டுக் கொண்டிருக்கமுடியவில்லை.

அந்தப் பெண்ணை மிக மோசமான வசைகளால் திட்டினாள். அப்பெண் அழுதபடியே வார்டனிடம் போய்ப் புகார் சொன்ன போது வார்டனும் சுகந்தியை முத்துன கேஸ் அப்படித் தான் இருக்கும் எனக் கேலி செய்து அறையைக் காலி செய்து கொண்டு போகும்படியாகச் சொன்னாள்,.

அதன்பிறகு இதற்காக அவள் தனியே ஒரு அபார்ட்மெண்ட் எடுத்து வாழ ஆரம்பித்தாள். குடி வந்த சில நாட்களில் தனித்து வாழும பெண் என்றால் யார் வேண்டுமானாலும் கதவை தட்டலாம் என நினைத்துக் கொண்ட ஆண்களை அறிய துவங்கினாள். வயது வேறுபாடின்றி ஆண்கள் அவளிடம் மோசமாக நடந்து கொண்டார்கள். அதன்பிறகு தான் அவள் ஊரிலிருந்த அப்பாவை உடன் வந்து தங்கும்படியாக அழைத்தாள்

வந்து தங்கிய சில நாட்களுக்குப் பிறகு அப்பா கேட்டார்

“நீ யாரையாவது லவ் பண்ணுறயா“

அப்பா இப்படி என்றாவது கேட்பார் எனப் பலவருஷங்களாக அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆகவே அதைக் கேட்டபோது முறைத்தபடியே இல்லை என்று சொன்னாள்

“யாரா இருந்தாலும் பரவாயில்லை, அவனைப் பேசி முடிச்சிவைக்குறேன்“

“ஏன் எனக்கே கல்யாணம் பண்ணிகிட தெரியாதா“

“அப்போ ஏன் வேண்டாம்கிறே“

“வேண்டாம்னு நான் சொல்லவேயில்லை“

“அப்போ பண்ணிகிட வேண்டியது தானே“

“பண்ணிகிடணும்னு தோணலை“

“அப்போ வேண்டாம்னு தானே அர்த்தம்“

“அது நீங்களா கற்பனை பண்ணிகிடுறது“

“கல்யாணம் பண்ணியிருந்தா இந்நேரம் உன் மகள் ஸ்கூலுக்குப் போயிருப்பா, அதைப் பாக்க எனக்குக் கொடுத்து வைக்கலை“

“அதான் உன் மகன் ரெணடு பேரும் கல்யாணம் பண்ணி பேரன் பேத்தியை ஸ்கூலுக்கு அனுப்புறாங்களே அதைக் கண்குளிர பார்த்தது போதாதா“

“ஒற்றைக் குரங்கா திரி, யாரு உன்னைக் கேட்குறது“ என ஆத்திரப்பட்டார் அப்பா

சுகந்தி அன்றைக்கு அழுதாள். அப்பா அதை எதிர்ப்பார்க்கவில்லை, அவளைச் சமாதானப்படுத்தியபடியே ஆறுதல் சொல்வதைப் போலச் சொன்னார்

“வேணும்னா ஒரு சைக்கியாட்ரிக் டாக்டர் கிட்ட காட்டி கவுன்சிலிங் பண்ணிக்கிடுறியாம்மா“

“எதுக்குப்பா, எனக்குப் பைத்தியம் இருக்கா இல்லையான்னா“

“அதுக்கில்லே, மனசு சம்பந்தபட்ட விஷயமில்லையா அதான்“

“அதான் நீங்களே சொல்வீங்களே வயசு 34 ஆச்சுனு, முற்றின கேஸ், அதான் அழுதுகிட்டு இருக்கேன்“

அப்பா பதில் சொல்லவில்லை, நியூஸ் பேப்பரை பிரித்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தார், அன்றிரவு அவர்கள் இருவரும் சாப்பிடவில்லை. காலையில் எழுந்த போது அப்பா வீட்டில் இல்லை, ஒரு துண்டுசீட்டில் தான் ஊருக்குப் போவதாக எழுதி வைத்திருந்தார், அதைக் கிழித்துப் போட்டுவிட்டு தனக்கு இந்த உலகில் யாருமில்லை என முடிவு செய்து கொண்டவளாகச் சுகந்தி அலுவலகம் போய்வந்தாள்

ஒரு நாள் பேருந்தில் திரும்பி வரும் போது ஔவையாரின் நினைவு வந்தது, திடீரென ஔவையார் ஒரேநாளில் கிழவியாக உருமாறிவிட்டார் என்கிறார். ஏன் ஔவை கிழவியாக மாறினாள், எட்டு வயது சிறுமியாக மாறியிருக்கலாமே. கூடுதலாகச் சில வருஷங்கள் சந்தோஷமாக இருந்திருக்கலாமே.

அதன் சிலவாரங்களுக்குப் பிறகு அவள் ஒருநாளிரவு அவள் திடீரென ஒரு விளையாட்டினை கண்டுபிடித்தாள், அந்த வீட்டில் அவளுக்குப் பிடித்தமான ஒரு ஆண், இரண்டு குழந்தைகள், விருப்பமான ஒரு கிளி எல்லாமும் இருக்கின்றன எனக் கற்பனையாக நினைத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு அவர்களுடன் தனியே பேச ஆரம்பித்தாள், தனது பிள்ளைகளுக்குக் கதை சொன்னாள். வீட்டில் எப்போதும் அவளுக்கான மனிதர்கள் இருக்கிறார்கள் என நம்ப ஆரம்பித்தாள், ஆரம்பத்தில் அது ஒரு விளையாட்டு போலவே இருந்தது. பின்பு மெல்ல அது ஒருவிளையாட்டில்லை, உண்மை என உணர துவங்கினாள்.

இதை நிரூபணம் செய்வது போலவே அவள் ஒரு டீசர்ட், ஜீன்ஸ், குழந்தைகளின் உடைகள் போன்றவற்றை வீட்டுக் கொடியில் துவைத்துப் போட்டு காயவிட்டாள். அரூபமான மனிதர்கள் அவளை மிகவும் ஆறுதல்படுத்துகிறவர்களாக இருந்தார்கள்.

இவ்வளவு தானே வாழ்க்கை, கற்பனை செய்து கொள்வது தான் வாழ்க்கையைச் சந்தோஷமாக்குகிறது. நிஜம் சந்தோஷமானதில்லை.

அதன்பிறகு அவள் அலுவலகத்தில் இருந்து வேகமாக வீடு திரும்ப ஆரம்பித்தாள், அத்துடன் தனக்கு வயது இனிமேல் வளரவே வளராது என்பது போல உணரத்துவங்கினாள்.

அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கூடத் தனது வீட்டில் உள்ள கற்பனை மனிதர்கள் பற்றி நினைத்துக் கொண்டு சிரித்துக் கொள்வாள். பிறகு ஒரு நாள் அவள் திருமணமான பெண்கள் அணிந்து கொள்வது போன்று மெட்டி அணிந்து கொண்டாள், அவளது மாற்றத்தை அலுவலகமே விசித்திரமாகப் பார்த்தார்கள், ஆனால் யாரும் அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை

பின்பு ஒருநாள் அதிகாலை அவளது வீட்டு காலிங்பெல் அடிக்கும் சப்தம் கேட்டது, கதவை திறந்து வெளியே வந்த போது அப்பா நின்றிருந்தார்

உள்ளே அழைத்தாள், அப்பா கொடியில் காய்ந்து கொண்டிருந்த உடைகளைப் பார்த்தபடியே யாரோடது எனக்கேட்டார்

அவள் பதில் சொல்லவில்லை

அப்பா வந்து தங்கிய சிலநாட்களில் அந்த வீட்டில் அதுவரை அவளுக்குத் துணையாக இருந்தவர்கள் வெளியூர் போய்விட்டார்கள் என நம்பத் துவங்கினாள். அந்த வெறுமை அவளுக்கு வேதனையூட்டியது, அதை மறைத்துக் கொண்டு அலுவலகம் போய் வந்து கொண்டிருந்தாள்

ஒருநாள் அவள் காலில் அணிந்த மெட்டியை பார்த்துவிட்டு, இதை ஏன் போட்டு இருக்கே எனக்கேட்டார் அப்பா

“பிடிச்சிருக்கு, போட்டுகிட்டேன் “என்றாள்

“எவனையாவது திருட்டுதனமா கட்டிகிட்டயா“ எனக்கேட்டார்

இல்லை எனத் தலையாட்டினாள்

“அப்போ உனக்குக் கிறுக்கு பிடிச்சிருக்கா“ என அப்பா மறுபடியும் திட்ட ஆரம்பித்தார்,

அவள் அதைக் கேட்டுக் கொள்ளாமல் அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தாள். அப்போது தான் அப்பா சொன்னார்

“உனக்கு 34 வயசாச்சி, நினைவிருக்கில்லே. நான் சொல்றதை நீ கேட்காமல் இருக்கலாம், ஆனா வயசு ஆக ஆக உன் உடம்பு நீ சொல்றதை கேக்காது, அதையாவது புரிஞ்சிக்கோ“

சுகந்திக்குக் கோபம் கொப்பளித்தது. நேரமாகிறதே என ஆத்திரத்தை அடக்கி கொண்டு வெளியே வந்தாள், லிப்டில் இறங்கும் போது தோன்றியது

வயது ஏறிக் கொண்டே முன்னால் போவதற்குப் பதில் இறங்கிக் கொண்டே பின்னாலும் போகலாம் தானே

உலகிற்கு எப்படியும் இருந்துவிட்டு போகட்டும், தனக்கு வயது பின்னால் போக ஆரம்பிக்கிறது என நினைத்துக் கொள்ள வேண்டியது தான், இன்று அலுவலகத்திற்குப் போய்த் தனக்கு 33 வது பிறந்தநாள் எனப் பொய் சொல்லி அனைவருக்கும் கே கொடுக்க வேண்டும் என்று தோன்றியது,

இதைப்பற்றி நினைத்தவுடன் தனது வயது கிடுகிடுவெனக் கிழே இறங்கி பள்ளிசிறுமி ஆகிவிட்டதைப் போல உணர்ந்தாள், என்ன கேக் வாங்குவது என நினைத்தபடியே அவள் பேருந்தில் போகத் துவங்கினாள், சாலைகள், மனிதர்கள், வாகனங்கள், மரங்கள், ஆகாயம், பறவைகள் என எல்லாமும் புதிதாகத் தெரிந்தன, தனக்குத் தானே சுகந்தி சிரித்துக் கொண்டாள்,

சட்டென அது ஒரு அபத்தமாகத் தோன்றியது.தன்னை மீறிக் கொண்டு அழத்துவங்கினாள். பேருந்தில் அத்தனை பேர் முன்னாலும் தான் அழுவதைப் பற்றி அவள் கண்டுகொள்ளவேயில்லை.

வயதானால் எல்லாவற்றையும் மறைத்துக் கொள்ள வேண்டுமா என்ன ?

– தீராநதி /மார்ச் 2015ல் வெளியானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *