இதெல்லாம் சகஜம்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 20, 2013
பார்வையிட்டோர்: 10,547 
 

பத்து மணிக்கு உயிரோடு இருந்த அந்த மூன்று பேரும் பத்து இரண்டுக்கு உயிரோடு இல்லை. அந்த சாரம் பத்தாவது மாடியில் இருந்து சரிந்து விழுந்த போது அதில் வேலை செய்து கொண்டிருந்த அந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அந்த பில்டர் கட்டிக்கொண்டிருந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் ஆறு மாதத்தில் நடந்த மூன்றாவது விபத்து அது. கடந்த இரண்டு முறை நடந்தது போலவே இந்த முறையும் நடந்திருந்ததால் அங்கே வேலை செய்து கொண்டிருந்த பெரும்பான்மையான வட இந்தியத் தொழிலாளர்கள் கொதித்துப் போய் எல்லா வேலைகளையும் அப்படி அப்படியே போட்டு விட்டு வாசலில் உட்கார்ந்து பில்டர் நிரஞ்சன் ஷாவிக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இதெல்லாம் சகஜம்தான்சென்ற முறை விபத்தின் காரணமே தரம் குறைவான, துருப்பிடித்த சாரக் குழாய்கள்தான் என்று தெரிந்திருந்தும் அதில் எதையுமே நிரஞ்சன் ஷா மாற்றவில்லை. சிமெண்ட், கம்பி, மணல் இவற்றின் விலையெல்லாம் தாறுமாறாக ஏறி விட்டதால், புது சாரக் குழாய்களும் புது சாரப் பலகைகளும் வாங்குவதை இப்போதைக்கு தள்ளிப் போட்டிருந்தார். நிரஞ்சன் ஷாவின் அசட்டையும், லாப நோக்கமும் தான் இன்று அந்த மூன்று உயிர்களை பறித்து விட்டது என்பதுதான் தொழிலாளர்களின் கோபத்திற்கு முக்கிய காரணமே.

நிரஞ்சன் ஷா கவலையுடன் இருந்தார். அவருடைய கவலைக்கு, விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்போ, வேலை நிறுத்தமோ காரணம் இல்லை. ஊர் விட்டு ஊர் வந்து, மொழி தெரியாத இடத்தில் அடைபட்டுக் கிடக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை வட்டம் மிகச் சிறியது. பத்து மணி நேர பகல் வேலை, வாரம் ஒரு சினிமா, மாதம் ஒரு மணியார்டர், வருடம் ஒரு ஊர்ப்பயணம் இதுதான் அவர்களின் உலகமே என்பதும் அவர்களின் கோபமும் கொதிப்பும் ஒரு நாள் கூட தாங்காது என்பதும் நிரஞ்சன் ஷாவிற்கு நன்றாகவே தெரியும். அவர்களின் நிர்கதியான வாழ்க்கைதான் நிரஞ்சன் ஷாவின் வசதியான வாழ்க்கையின் மூலதனமே. இங்கேயே வேலை செய்ய ஆட்கள் இருந்தும் கூட வட கிழக்கில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்ததே இதற்காகத்தானே !

அவருடைய கவலையெல்லாம் டி.எஸ்.பி சொன்னதுதான். டி.எஸ்.பி போன் செய்து சொல்லிவிட்டார். இந்த முறை கட்டாயம் பத்திரிக்கைக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று. மாலை நான்கு மணிக்கு பத்திரிக்கையாளர் கூட்டத்தை கூட்டியிருப்பதாகவும் சொன்னார். பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பாதகமான செய்தி வரும் பட்சத்தில் அவருடைய பிசினஸில் நிச்சயம் அடி விழும் என்பதுதான் நிரஞ்சன் ஷாவின் இப்போதைய கவலை எல்லாம்.

முதல் முறை விபத்து நடந்த போது பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் செய்தி வராமல் பார்த்துக் கொண்ட நிரஞ்சன் ஷாவால் இரண்டாம் முறை அப்படி சரிக்கட்ட முடியவில்லை. பத்திரிக்கை நிருபர்கள் கேள்விகளால் துளைத்து விட்டனர். நிரஞ்சன் ஷா திணறிப் போனார். கடைசியில் ஒரு வழியாக “நாங்கள் எல்லா பாதுகாப்பு அமைப்புகளையும் பலப்படுத்தி விட்டோம் இனிமேல் இப்படி ஒரு விபத்து நடக்காது என்பத‌ற்கு நான் உத்தரவாதம்” என்று சொல்லித்தான் வெளியில் வர வேண்டியதாயிற்று.

இந்த முறை எப்படி சமாளிப்பது ? சென்ற முறை எடுத்த அணுகுமுறை பலன் தரவில்லை. ஊடகங்கள் அவரை கேள்விகளால் மடக்கி கிட்டத்தட்ட சரணாகதி அடையச் செய்துவிட்டன. அவரும், தேவையில்லாமல் ….. பாதுகாப்பை பலப்படுத்தி விட்டோம்…. இனி நடக்காது என்பதற்கு நான் உத்தரவாதம் … போன்ற வார்த்தைகளை அள்ளி வீச வேண்டியதாயிற்று. வெகு நேரம் யோசித்த பின் முடிவு செய்தார். அதுதான் சரி ! இந்த முறை எதிராளி எதிர்பார்க்காத கோணத்தில் தாக்கலாம். இது சரியா ? தவறா ? என்றெல்லாம் அவர் பார்க்கவில்லை. அவரைப் பொறுத்தவரை அவருடைய பிசினஸுக்குப் பிறகுதான் நியாயங்களும் தர்மங்களும். வரப்போகும் கேள்விகளுக்கும் தரப்போகும் பதில்களுக்கும் ஒரு சிறு ஒத்திகையே நடத்திப் பார்த்துக் கொண்டார்.

அந்தக் கறுப்பு சட்டைக்காரன் டீயை மெதுவாக சுவைத்துக் கொண்டே எதிரில் இருக்கும் பதினைந்து மாடிக் கட்டிடத்தை பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த டீக்கடை அவன் தங்கியிருந்த விடுதியில் இருந்து சற்று தள்ளி இருந்தாலும் மெனக்கெட்டு இங்கு வந்துதான் டீ குடிப்பான். டீக்கடை ஓனரிடம் அடிக்கடி சொல்லுவது இந்தக் கடையின் டேஸ்ட் வேறு எங்கும் கிடைக்காது என்பது. எப்போதுமே சொல்லாதது வேறு எந்த டீக்கடையிலும் இரண்டு தமிழ் பேப்பரும் ஒரு இங்கிலீஷ் பேப்பரும் போடுவதில்லை என்பது.

காலையில் நடந்த விபத்துக்குப் பின் அந்த இடமே கூச்சல், ஆம்புலன்ஸ், போலீஸ், பத்திரிக்கை, தொலக்காட்சி, என்று பரபரப்பாகி விட்டது. இந்த முறை போலீஸும், பத்திரிக்கை, தொலைக்காட்சியும் சற்று அதிகமாகவே தென்பட்டது. டீக்கடை ஓனர் சொன்னார் “அந்த சேட்டு, டி.வி யில‌ பேட்டி குடுக்கப் போறான் அதான் கூட்டம்”. அவனுக்கென்ன! பண‌ம் பத்தும் செய்யும். கொல்றதை கொன்னுப்புட்டு சொல்றதை சொல்லுவான். அவனவன் கேக்குறதை கேட்டுட்டு வாங்குறதை வாங்கிட்டு போயிடுவான்” என்றார் டீ ஆத்திக் கொண்டே.

அந்தக் கறுப்பு சட்டைக்காரனுக்கு ஒரு ஆர்வம். உள்ளே சென்றுதான் பார்க்கலாமே ! கெட்டிக்காரன் புளூகு எப்படித்தான் இருக்கும் என்று கேட்கலாமே ! அப்போதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி குழுவோடு ஒட்டினாற்போல உள்ளே சென்று விட்டான். அந்த கட்டிட வளாகத்திற்குள்ளேயே சற்று உயரமாக இருந்த, கான்கிரீட் போடப்பட்டிருந்த தளத்தை மேடை போல ஆக்கி, அதன் முன்னே கேமராக்களும் மைக்குகளும் வரிசையாக அணி வகுத்து நின்றன.

இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவித்து விட்டார் நிரஞ்சன் ஷா. மாலை நடக்கும் பத்திரிக்கை கூட்டதின் போது எந்த தொழிலாளியும் இருப்பதை அவர் விரும்பவில்லை. தொலைக்காட்சியோ, பத்திரிகையோ அவர்களை நேரில் பேட்டி எடுக்கலாம். அல்லது இவர் பேசும் போது அவர்கள் ஏதாவது மறுத்துப் பேசலாம், கூச்சல் குழப்பம் ஏற்படுத்தலாம். இதையெல்லாம் சமயோசிதமாக தடுப்பதற்குத்தான் அன்றைய லீவே என்பது அந்த தொழிலாளர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நிரஞ்சன் ஷா பேச எழுந்ததுமே சிறு சலசலப்பு எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் நிரஞ்சன் ஷா பேசினார் ” இந்த விபத்து மிகவும் துரதிருஷ்டமானது. நாங்கள் போலீசுடன் முழுமையாக ஒத்துழைத்துக் கொண்டிருக்கிறோம். சட்டப்படி “எல்லாம்” நடக்கும். அத்தோடு இறந்தவர்களின் குடும்பத்திற்கு இன்ஷ்யூரன்ஸ் மூலமாக தக்க இழப்பீடு வழங்கப்படும்” என்றார்.

கறுப்பு சட்டைக்காரன் அந்த‌ பில்டருடைய கிரிமினல் மூளையை உடனடியாக புரிந்து கொண்டான். சட்டப்படி “எல்லாம்” நடக்கும். மற்றவர்களுடைய இடையூறு தேவையில்லை என்பதையும் இழப்பீடு கூட இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிதான் தர வேண்டும் என்பதையும் நாசூக்காக கூட்டத்திற்கு சொல்லி விட்டான். இவனிடமிருந்து பைசா தேறாதோ ?

நிரஞ்சன் ஷா பேச்சைத் தொடரும் முன் ஒரு நிருபர் இட மறித்து ” சார் ! நீங்கள் கடந்த முறையே உத்தரவாதம் தந்தீர்கள் ! இப்படி இனிமேல் நடக்காது என்று ” இப்போ எப்படி நடந்தது இந்த விபத்து? என்றார்.

நிரஞ்சன் ஷாவுக்கு உள்ளூர பட்சி சொன்னது வலை விரிக்கப் படுகிறது சிக்கி விடக் கூடாது என்று. சற்று குரலை உயர்த்தி சொன்னார் ” நீங்களே இங்கே உங்களை சுற்றி பாருங்கள் ! இந்த வளாகத்தில் எத்தனை இடத்தில் சாரம் கட்டப் பட்டு இருக்கிறது. ஆயிரக் கணக்கான சாரங்கள் பயன் படுத்தப் பட்டுள்ள‌ன‌. அவை எல்லாமா விழுந்து விட்டது ?. மாதக் கணக்கில் இப்படி வேலைகள் நடக்கும்போது, எப்போதாவது நம்மையும் மீறி இப்படி நடப்பது சகஜம்தான்” என்றார் அதிரடியாக.

கேள்வி கேட்டவருக்கும் அங்கே இருந்தவர்களுக்கும் இந்த அதிரடி பதில் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதது. மற்றொரு தொலக்காட்சி நிருபர் சுதாரித்து ” சார் ! இந்த முறை மூன்று உயிர்கள் போய் இருக்கிற‌தே ! அதுக்கு என்ன பதில் ?

நிரஞ்சன் ஷா தொடர்ந்தார். “அவர்களுக்கு தக்க இழப்பீடு கிடைப்பதற்கு நாங்கள் ஏற்கனவே இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியுடன் பேச்சு வார்த்தை தொடங்கி விட்டோம்” எல்லாம் உரிய நேரத்தில் போய் சேர்ந்து விடும். நாங்கள் எல்லா விதமான பாதுகாப்பையும் பலப்படுத்தி இருந்தும் கூட சில சமயங்களில் இப்படி நடந்து விடுகிறது. உங்களையே எடுத்துக் கொள்ளுங்க‌ளேன். உங்கள் வேலைகளை எவ்வளவு சரியாகச் செய்தும், ப்ரூஃப் பார்த்தும், எடிட்டிங் செய்தும் கூட சில சமயம் உங்களை மீறி பத்திரிக்கையிலோ தொலைக்கட்சியிலோ தவறாக செய்தி வந்து விடுகிறதே . நான் சொல்ல வந்தது என்னவென்றால், நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சில சமயங்களில் நம்மையும் மீறி இப்படி நடந்து விடுவது சகஜம்தான் என்று உங்களுக்கே புரியும்“ இந்த முறை, சகஜம்தான் என்பதை கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னார். அதுதானே அவர் சொல்ல வந்ததே ?

அந்தக் கறுப்பு சட்டைக்காரன் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். இவன் என்ன சொல்கிறான் ? மூன்று உயிர்கள் போனதை சகஜம் என்கிறானே ? நிரஞ்சன் ஷாவின் சகஜம்தான் என்ற வார்த்தையில் இருந்த அழுத்தத்தை அந்த கறுப்பு சட்டைக்காரன் அழுத்தமாகப் புரிந்து கொண்டான். “சகஜம்தான்” என்ற அந்த வார்த்தைகளை வெறுமனே சொன்ன சொல்லாகப் பார்க்காமல் சொல்ல வந்த எண்ணமாகப் பார்த்தான்.

இவன் எப்படி ஒரு கருத்தை இந்தக் கூட்டத்தில் விதைத்துக் கொண்டிருக்கிறான் ?. இது போன்ற விபத்துக்களும் உயிர் இழப்புக்களும் அன்றாட வாழ்க்கையில் ஒரு சாதாரண ஒரு விஷயந்தான் அதை ஊடகங்களும் இந்த சமூகமும் ஒரு சமூகப் பிரச்சனையாக கருதத் தேவையில்லை என்றல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறான். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு விஷத்தை அல்லவா ஏற்றிக் கொண்டிருக்கிறான்.

ஒரு வேளை, ஊடகங்கள் இதை அப்படியே மக்களுக்கு எடுத்துச் செல்லும் பட்சத்தில் சமூகத்தில் இது என்ன ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ? ஏற்கனவே பொது நல எண்ணங்கள் குறைந்து கொண்டே வரும் இந்த சமுதாயத்தில் மேலும் ஒரு சுரணையற்ற மன நிலையை ஏற்படுத்தி விடாதா. இதை அப்படியே விட்டு விடக் கூடாது. அவன் சொல்ல வந்தது எதுவும் அவன் நினைத்தபடி முடியக் கூடாது? இப்போது கறுப்பு சட்டைக்காரன் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான்

சார் ! சென்ற முறை நடந்த விபத்துக்குப் பின் நீங்கள் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தீர்கள் ? என்று கேட்டார் ஒரு நிருபர்.

எல்லா பாதுகாப்பையும் பலப்படுத்தி இருந்தோம். அப்படியும் இது எங்களையும் மீறி நடந்து விட்டது. இது ஒரு தினசரி நிகழ்வு அல்ல. எப்போதாவது இப்படி நம்மையும் மீறி நடப்பது சகஜம்தான் என்று மூன்றாவது முறையாகச் சொன்ன போதுதான் அது நடந்தது.

அந்த கறுப்பு சட்டைக்காரன் மேடையின் ஓரமாக நின்றிருந்த இரண்டு பேரை விலக்கி மேடை மேல் ஏறினான். பேசிக் கொண்டிருந்த நிரஞ்சன் ஷாவைத் தன் பக்கம் திருப்பி பளார் ! பளார் ! என்று இரண்டு கன்னங்களிலும் நான்கு முறை அறைந்தான். அதிர்ந்து நின்ற அவர் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டு விட்டு தான் சொல்ல வந்ததை அங்கு பொருத்தப் பட்டிருந்த காமிரா, மைக்குகளுக்கு முன்பாக சொல்லிவிட்டு யாரும் சுதாரிப்பதற்குள், வேகமாக இறங்கி வெளியில் ஓடி சாலையில் போய்க் கொண்டிருந்த கூட்டத்தில் கலந்து மறைந்து விட்டான்.

ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்ட அந்த சம்பவம் அன்று மாலை எல்லா தொலைக்காட்சி சானல்களிலும் ஒளிபரப்பானது.

ரஞ்சன் ஷா பேட்டி கொடுக்கும்போது ஒரு கறுப்பு சட்டைக்காரனால் தாக்கப்பட்டதும் அதைத் தொடர்ந்து அந்தக் கறுப்பு சட்டைக்காரன் “இது மாதிரி சில சமயம் நம்மையும் மீறி நடப்பது சகஜந்தான்” என்று தெளிவாக சொன்னதும் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *