அழிந்து போன அத்தியாயம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 8,728 
 
 

காதர் ஒரு பத்து ஆண்டுகள் தொலைந்துபோய் திரும்பி வந்திருந்தான். காதர். இலங்கை சென்று தகவல் இல்லாமல்போன வாப்பாவை பற்றி விசாரிப்பதற்காக குடும்பத்தினர் சம்மதத்துடன் கள்ளத்தோணியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு,போனவன். அப்போது அவனுக்கும் 18வயது தான். வாப்பா காசிம் மரிக்கா இலங்கை போனவர் விபரம் ஒன்றும் இல்லாமல் இருந்தார். இரண்டு மூன்று மாதங்களுக்கொருமுறை வீட்டு செலவுக்கு உண்டியல் (ஹவாலா ) மூலம் பணம் அனுப்பிக்கொண்டிருந்தவர், அது ஓரளவிற்கு குடும்ப செலவுகளுக்கு சரி வந்தாலும், அவர் எங்கிருக்கிறார்,எப்படி இருக்கிறார் என்ற விபரங்கள் எதுவும் யாருக்கும் தெரியவில்லை. அது குடும்பத்தினரை கவலை அடையச்செய்திருந்தது.

காசிம் மரிக்கா கொழும்புக்கு போன காலத்தில்,. சாதாரணமாக 15 வயதில் திருமணம் செய்துவைக்கும் பழக்கமுள்ள காலத்தில், மகள் மதீனாவிற்கு 16 வயதில் குமராக(கன்னியாக) இருந்தது, அந்த குடும்பத்தின் தலையான சுமையாக இருந்தது. காசிம் மரிக்கா கொழும்புக்கு போனதற்கு முக்கியமான காரணம் அதுதான். ஆனால் அவரால் பெரிதாக சம்பாதிக்க முடியவில்லை. கொழும்பில் அவரின் தூரத்து உறவுக்காரர் இத்ரீஸ் மரிக்காவின் கடையில், சேல்ஸ்மேன் என்ற பெயரில் எடுபிடி வேலைதான் கிடைத்தது, இதை தெரிவிக்கவே வெட்கப்பட்டு வீட்டிற்கு கடிதம் எழுதுவதை நிருத்திவிட்டார். தன்னுடைய கஷ்டங்கள் வீட்டாருக்கு தெரியவேண்டாம் என்று இருந்துவிட்டார். சம்பளமாக கிடைத்த சில நூறு ரூபாயில், தன்னுடைய செலவுகளை குறைத்துக்கொண்டு வீட்டுக்கு கொஞ்சம் பணம் உண்டியலில் அனுப்பிக்கொண்டிருந்தார்.. ஐந்து ஆண்டுகளாக அவரை பற்றிய விபரமில்லாததால் வீட்டார் சம்மதத்தோடு தேடிப்போனவன்தான் காதர். அவனும் காணாமல் போனதில் கவலைப்பட்ட குடும்பத்திற்கு, சில மாதங்களில் திரும்பிவந்துவிட்டார் காசிம் மரிக்கா.

காசிம் மரிக்கா கள்ளத்தோணியில்தான் போனார். அந்தகாலத்தில் ஊரிலிருந்து இலங்கை போவதென்பது மிக சுலபமான விசயம். பாஸ்போர்ட்,விசா என்பதெல்லாம் அந்த சாமானியர்களுக்கு தெரியாது. பெரும் பணக்காரர்களுக்குத்தான் பாஸ்போர்ட்,விசா எல்லாம். அந்தமாதிரி செல்வந்தர்களுக்கு கூட விமானப்பயணம் வெகு அபூர்வம். அவர்கள்கூட ராமநாதபுரம்போய் தனுஸ்கோடி போட் மெயில் பிடித்து தனுஸ்கோடி போய்,அங்கிருந்து சிறிய கப்பலில் இலங்கை தலைமன்னாருக்கு போவார்கள். தலைமன்னாரிலிருந்து திரும்ப ரயிலில் கொழும்பு போகவேண்டும். மெட்ராசுக்கும் தனுஸ்கோடிக்கும் உள்ள தூரம்,தலைமன்னாருக்கும் கொழும்புக்கும். ஆகவே ஓர் இரவு ரயில் பயணம். இரவு தலைமன்னாரில் ஏறினால், அடுத்தநாள் நன்பகலில் கொழும்பு போய் சேரமுடியும். தென்னிந்திய ரயில்வே போல் அத்தனை பாதுகாப்பானதல்ல இலங்கை ரயில்வே. அதனால் இரவுத்தூக்கத்தை தியாகம் செய்யவேண்டியதிருக்கும். இப்படி கஷ்டப்பட்டு இலங்கை போவார்கள்..

அந்த காலகட்டம் அந்த கடற்கரை கிராமத்தின் வாழ்க்கை மிக வித்தியாசமானது. இப்போது சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.. அது இந்தியாவோடு இருந்ததை விட இலங்கையோடு அதிக நெருக்கத்தில் இருந்தது..அது 1950 களில்.. அது விடுதலைபுலிகளுக்கு பல ஆண்டுகள் முந்தைய காலகட்டம். இந்தனை கட்டுப்பாடுகளும், கடற்படை கண்காணிப்பும் இல்லாத காலம். ஒருவர் இலங்கை செல்வது சுலபம். எழுபது ரூபாய் கொடுத்தால் அந்தக்கரையில் இறக்கிவிடுவார்கள்.இங்கு சேதுக்கரையில் வல்லத்தில்(பாய்மரப்படகு) ஏறினால்,சிலமணி நேரத்தில்,அந்தக்கரையில் சிலாவகத்துரையில் இறக்கிவிட்டு விடுவார்கள்.காற்று சாதகமாக இருந்தால் வெகு சீக்கிரம் போய் சேர்ந்துவிடலாம். அங்கிருந்து உள்ளூர் போலீசில் பிடிபடாமல்,மன்னார் போய், அங்கிருந்து கொழும்புக்கோ, மற்ற ஊர்களுக்கோ போய்சேர்வது அவரவரின் சாமர்த்தியம். ஊர் மக்களுக்கு இலங்கையுடனான தொடர்பு பலநூற்றாண்டுகள்.. இவர்களின் சந்ததியினர் இல்லாத இலங்கை பிரதேசங்கள் இல்லை. அநேகமாக அங்கு ஒரு திருமணம் செய்துகொண்டிடுப்பார்கள். பலர் வாழ்க்கையின் பெரும்பகுதியை அங்குள்ள குடும்பத்துடன் வாழ்ந்துவிட்டு கடைசிகாலத்தில் ஊருக்கு வந்து முதுமையில் குடும்பத்துடன் வாழ்ந்தவர்கள் அநேகம். அது தினத்தந்தியில் சிந்துபாத் ஆரம்பிக்காதகாலம். ஊருக்கு தமிழ் பத்திரிக்கைகள் தினமணி,சுதேசமித்திரன்,தினத்தந்தி போன்றவை ஒருசில பிரதிகளே வரும். ஆனால் இலங்கையின் வீரகேசரியும்,தினகரனும் பலநூறு காப்பிகள் தபால்மூலம் அந்த ஊருக்கு வரும். அவற்றை தபால்காரர்கள் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வருவார்கள். அவர்களின் சிரமத்தை குறைக்க, முடிந்தவர்கள் தபால் நிலைய வாசலிலேயே காத்திருந்து கடிதங்களையும், பத்திரிக்கைகளையும் வாங்கிச்செல்வார்கள். அக்கம்பக்கத்தினர்,உறவுக்காரர்கள் வீட்டு தபால்களையும் வாங்கிச்செல்வார்கள். இது தபால்காரரின் சுமையை வெகுவாக குறைக்கும். அத்தனை நெருக்கம் இலங்கையோடும்,அத்தனை தூரம் இந்தியாவோடும். சுதந்திரத்திற்கு முன்பு சிலோன் ஏதோ உள்நாடுபோன்றே இருந்திருக்கிறது. சிலோனுக்கும், மலபாருக்கும் போறது அத்தன சுலபம்.ராம்நாட்டுக்கு, தோணிபாலம் கட்டி,. பஸ் வந்ததுக்கு பிறகுதான் ராம்நாடும், மதுரையும் பக்கமா போச்சு. காலம் எப்புடில்லாம் மாறிடிச்சி ” என்பார்கள் அன்றைய பெருசுகள்.

இப்படி இருந்த காலத்தில்தான் காதர் திரும்பிவந்தான். வந்தவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அடர்த்தியான தலைமுடி. மீசை இல்லாத நீண்ட முகம். நல்ல உயரம். பார்க்க கம்பீரமாக இருந்தார். பச்சை கலர் சாரம்(லுங்கி) சந்தனக்கலரில் வெள்ளை முழுக்கை சட்டை.அதில் தங்க பித்தான்கள்.காலில் கருப்பு சப்பாத்து. பார்க்கும்போது யாரோ சிலோன்காரன் போன்று இருந்தார். பள்ளிவாசல் சதுக்கையை தாண்டித்தான், யாரும் தெருவுக்கு போகமுடியும். சதுக்கையில் இருப்பவர்களிடமிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அதிகாலையிலோ,நடு இரவிலோதான் வரவேண்டும்.

அவன் வரும்போது காலை பத்துமணி இருக்கும். அந்த நேரத்தில் காலை உணவுக்குப்பின் பெருசுகள் கூடி பனா(ஊர்வம்பு) பேசும் நேரம். “யாரோ புது ஆளுபார்க்க கொழும்புக்காரன் போல தெரியுது,கூப்பிட்டு விசாரிப்போமா? என்றார் ஆனாமூனாகனா.

“போகட்டும் விடுங்க,யாராவது உண்டியல் ஆசாமியா இருக்கும்,ஊர்வம்பு நமக்கெதுக்கு என்றார் வானாமூனா ஹாஜி.

“யார்வீட்டுக்கு போறான் என்று கேட்டு வழிசொல்லுவோம்” என்றார் ஆனாமூனாகனா.

“அட விடுங்க, ரகசியமான விசயமாக இருக்கும், நம்ம மூக்கை நுழைக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு,வீட்டுக்கு கிளம்பினார் வானாமூனா ஹாஜி.

தெருவில் நடந்துகொண்டிருந்த வானாமூனா ஹாஜியாருக்கு, தன் முன்னால் நடந்துகொண்டிருந்த அந்த கொழும்புக்காரர், தன்னை எதிர்பார்த்து நிற்பதுபோல் தெரிந்தது. பக்கத்தில் போனதும், அந்த நபர் “என்ன மாமா சுகமா இரிக்ரியலா”என்றான். உயரமான அந்த நபரை நிமிர்த்து பார்த்து ஏதோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று, “அமாம், தம்பி யார்? “ என்றார். “நான் காசிம் மரிக்கா மகன்,காதர்” என்றான்.

“அட நம்ம காதரா சின்ன வயசுல பாத்தது.உன்ன ஆளகாணோம்னு சொன்னாகளே ? நான் கொழும்புல இருக்ககொள்ள, வாப்பா எனக்கு உன்ன தேடும்படி கடிதம் போட்டாக. நானும் தேடிபார்த்தேன். நீ அனுராதபுரம் பக்கம் இருப்பதாக சொன்னாக. பிறகு கண்டிப்பக்கம் பார்த்ததா சொன்னார்கள். அங்கெல்லாம் நான் நம்ம ஆட்களிடம் விசாரிச்சு பாத்தேன். யாருக்கும் உன்ன பத்தி தெரியல.வாப்பா மவுத்துக்கு கூட உனக்கு தெரிவிக்கமுடியாம போச்சு என்றார். காதர் கண்கள் கலங்கின. வாப்பா மவுத்துக்கு பொறவு, உன் கவலைதான், உம்மாக்குன்னு கேள்விப்பட்டேன்.. நீ எப்போ வந்த ? “ என்றார் ஹாஜியார்.

“இப்போதான் வந்துக்கிட்டிருக்றன். ஊரே மாறிரிச்சி. இங்கேருந்து பாத்தா எங்க ஊடு தெரியும். இப்போ ஊடு தெரியல, இடையில நெறைய ஊடு இரிக்கிது. அதுதான் தயங்கிக்கிட்டு நிக்கிறன்” என்றான் காதர்.

எதிரே இருந்த சிறிய சந்தை காண்பித்து,

”இதுதான் உங்கவீட்டுக்கு போற முடுக்கு (சந்து)” என்றார் ஹாஜியார்.

சரி, வாறன் மாமா என்று சந்துக்குள் நுழைந்தான் காதர். ஹாஜியாரும் வீட்டை நோக்கி நடந்தார். நாயனே எங்களுக்கு நிம்மதியை தா என்று அவர் மனது வேண்டிக்கொண்டிருந்தது.

வீட்டை அடைந்ததும், அதே பெரிய பழையகாலத்து சுற்றுச்சுவரும்,மரக்கதவும், மாறாதிருந்தது. பெரிய சுற்றுச்சுவரின் உட்புறத்தில் மாட்டு கொட்டகை இருந்தது.அதற்கு பின்னால்தான், கொளிக்கி ஓடு போட்ட அந்தகாலத்து நடுவில் திறந்த முத்தமுள்ள வீடு.. வெளியிலிருந்து பார்த்தபோது,அதில் எந்த மாற்றமும் தெரியவில்லை. உள்ளே மாடுகளின் சத்தமும், சாணத்தின் வாடையும் அதை உறுதிப்படுத்தியது. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே பெரிய நாறங்கி கதவில் இருந்தது. மரத்தில் வட்ட வடிவில் தாமரை மலர் போன்ற வடிவங்கள் கதவில் ஆறு வில்லைகள் கதவில் பொருத்தப்பட்டிருக்கும். சிறுவயதில் அந்த மரமலர்களை சுற்றிவிட்டு விளையாடியது ஞாபகத்திற்கு வந்தது. அந்த ஆறு பூக்களில் ஒன்று காணமல் போயிருந்தது.

நாரங்கியை பலமுறை ஓங்கி தட்டியும் யாருக்கும் விளங்கவில்லை. பின்னர் உம்மா என்று சத்தம் போட்டார். சில அழைப்புகளுக்கு பிறகு அந்த சப்தம் சல்லா பாயில்(தொழுகை (விரிப்பு ) அமர்ந்திரிந்த அரைகுறையாக காதுகேட்கும் பாலுமா என்ற பாலாமினாம்மா காதில் விழுந்தது. உடனே மகளை அழைத்து, மதீனா யாரோ கொல்லகதவுல சத்தம்போடுறாங்க,யாருனு பாருமா, என்றார். முன்பு தலைவாயிலாக இருந்த அந்த கதவு இப்போது கொல்லை கதவாக மாறி இருந்தது. பழைய கொழிக்கி ஓட்டு வீடு இப்போது மாடிவீடாக மாறி இருந்தது, தலைவாசல் கிழக்குப்பக்கத்து பெரிய கதவிற்கு பதில் மேற்கு பக்கம் நவீனமான மெத்தைவீட்டின் தலைவாதில் ஆகிவிட்டது. கால ஓட்டத்தில்,மதீனாவின் திருமணத்திற்கு பிறகு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துவிட்டிரிந்தது.

மதீனாவுக்கு தாயின் வேண்டுகோள் வந்தபோது அடுப்பங்கறையில் வேலையாய் இருந்தாள். முருகா போய்ப்பார் என்றாள் வேலைக்கார பையனிடம். இதோ பார்க்கிறேன் என்று கொல்லைகதவை திறக்க ஓடினான் மாட்டுக்கு புண்ணாக்கு கலந்து கொண்டிருந்த முருகன்.

அங்கு உயரமான அந்த மனிதரைப்பார்ததும் யார் வேண்டுமென்றான். அவனுக்கு பதில் சொல்லாமல் அவனைத்தாண்டி சிறிய ட்ரன்க் பெட்டியோடு உள்ளே நுழைந்தான். மாடுகள் மிகவும் குறைந்து போயிருந்தது. பழைய தொழுவம் பாதியாக குறைந்திருந்தது. முன்பு மாடுகள் முப்பதுக்கு மேல்இருக்கும். இப்போது பத்து, மாடுகளே இருக்கும்போல் தெரிகிறது மாட்டுக்கொட்டகையில் பாதிக்குமேல் வீடாகி இருந்தது.

பாலுமா அவருக்கான அந்த கடைசி அறையில் படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்து ஜன்னல் வழியாக யார் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தார். அரைகுறை கண்பார்வையிலும்,வந்திருப்பது தனது அருமை மகன்தான் என்று தெரிந்துகொண்டு,” வாப்பா வந்துட்டியா? அல்ஹம்துல்லில்லாஹ்,நாயனே என் துவாவை கபூலாக்கிட்டியே. எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்த கட்டிலில் உட்கார்ந்திருந்தபடி,”மதீனாம்மா உங் காக்கா வந்துட்டான் பாரு” என்று மகளை அழைத்தாள் அந்த வயோதிக தாய். மதீனா கொள்ளையை நோக்கி ஓடினாள்.

காதர் காணாமல் போவதற்கு முன், வீட்டில் பாலும்மாவின் திட்டும்,ஆவலாதியும்,,அவன் வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கும். பலுமாவின் பால் வியாபாரத்தில் ஒத்தாசையாக இருக்க அவனுக்கு பிடிக்கவில்லை. மாடுகளை கவனித்துக்கொள்ளவோ அவற்றிற்கு புண்ணாக்கு,தீவனம் வாங்கிவருவதர்கோ போகமாட்டான். தன்னுடைய தகுதிக்கு குறைவான விடயம் என்று நினைத்தான். மரிக்கா குடும்பத்தில் பிறந்தவன்,இதுபோன்ற வேலைகளை செய்யவேண்டியதில்லை என்றான்.

பாலும்மா “எந்தவேளையும் கேவலமில்லை. ஒம் மாமா இந்த வேலைலாம் செய்யலயா ?” என்பாள்,

“அமாம் அவரை மாடுக்காரனாக மாத்திட்டிய ? அதமாதிரி என்னையும் மாட்டுக்காரனா மாத்தப்போரியலா ? என்பான். என்னயும் கொழும்புக்கு அனுப்புங்க, நான் நல்லா சம்பாதிப்பேன். வீணா மாட்டு சாணியள்ளப்போற ஆளு நா இல்ல “.என்று பதிலுக்கு சத்தம்போட்டுவிட்டு,சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பிவிடுவான்.

பொழுதுபோக்கத்தான் இடமில்லை. கடைத்தெருவில் இருந்த லெப்பை டீக்கடை பெஞ்சுதான் ஒரே புகலிடம். அதுவும் லெப்பைகாக்கா இல்லாத நேரம்தான். அப்போது அவர்மகன் சுலைமான் இருப்பான். சுலைமான் வகுப்பு தோழன் மட்டுமில்லை,நெருங்கிய நண்பன். அடிக்கடி காசுகொடுத்து உதவுபவன். பாலுமாவிடம் செலவுக்கு காசு கிடைப்பது குதிரை கொம்பு.எதாவது வேலை செய்தால் மட்டும் காசு கொடுப்பார். தங்கை மதினாவிடம் சமயத்தில் அவள் சிறு சேமிப்பிலிருந்து ஓரணா,இரண்டனா சினிமா பார்க்க உம்மாவுக்கு தெரியாமல் நச்சரித்து வாங்குவான்.

பாலும்மாவுக்கு, “கொழும்புக்கு போன மனுஷண்ட இருந்து கடுதாசு வரலையே என்ற கவலை. அவரு நல்ல நிலையில இருந்தா, இந்த பயலையும் அவர்ட்ட அனுப்பலாம். அவர்போய் இந்த ரஜப் பிறையோட அஞ்சு வருஷம் ஆவப்போவுது. போன பொறவு ரெண்டு,மூணு தடவதே அப்பப்ப பணம்,கடுதாசு வந்துச்சு. அதுவும் இப்போ கடேசியா கடுதாசு வந்து ஆரு மாசமாச்சி. ரப்பே அவர எங்கட்ட கொண்டுவந்து சீக்கிரம் சேத்துரு” என்று வேண்டாத நாளில்லை. “அவர் வந்ததும் இந்த பயலையும் அவரோட கொழும்புக்கு அனுப்பிரனும். இல்லாபோன இவன் கண்ட பயல்வளோட சேந்துகுட்டு குட்டிசுவரா போயிருவான்” என்று புலம்பிக்கொண்டிருந்தார்.

சுலைமான் அவன் வப்பா வரும் நேரம் ஆனதும்,”காதர் நீ கெளம்பு வாப்பா வர்ற நேரம் என்று அவனை கிளப்பிவிடுவான். அடுத்த புகலிடம் கடற்கரைதான். அங்கு ஜெட்டியில் சிலர் மீன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அவன் அங்கு போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். நல்ல வெயில் காலத்தில் ஜெட்டியில் உட்கார முடியாது. கரையில் தோப்புகளின் நிழலில் உட்கார்ந்துகொண்டு கடலை பார்த்துக்கொண்டு இலங்கை போகவேண்டும் என்ற கனவுகளில் கிடப்பான்.

பகல் சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வருவான், பாலுமாவின் புலம்பலும் வசவுகளும் கேட்டவண்ணம் சாப்பிட்டு முடித்ததும், மொட்டை மாடிபடிக்கூட்டு அறையில் போட்டிருக்கும் கயிற்றுக்கட்டிலில் மாலைவரை ஒரு நல்ல தூக்கம். குளங்கரை பள்ளியில் அசர் பாங்கு ஒலிக்கும்போது தூக்கம் களையும்

காதருக்கு மாலைப்பொழுதுகள் கழிவது சினிமா கொட்டகையில்தான். ஊரில் இருந்த அந்த ரீகல் டூரிங் டாக்கீஸ், ஆவுலியா குளம் என்ற அந்த பெரிய குளத்தங்கரையின் மேட்டில் அடர்ந்த வெண் மணல் பரப்பில் இருந்தது. மாலை 6 மணியானதும் ரீகல் டாக்கீசில் வேலைகள் தொடங்கும். முதலில் “கணபதியே வருவாய் பாடலுடன் சினிமா பாட்டுகளும் போடுவார்கள். பெரிய ஒலி பெருக்கி குழாய்கள் மூலம் தெருவரை ஒலிக்கும். உடனே காதர் கொட்டகைக்கு கிளம்பிவிடுவான்..முன்பு அவனது பள்ளி தோழர்கள் பலர் வந்து அங்கு கூடுமிடமாக இருந்தது. பள்ளிப்பருவம் முடிந்ததும் ஒவ்வொருவராக வேலைவெட்டிக்கு போய்விட்டார்கள். கடல்தொழில் செய்து கொண்டிருந்த குடும்பத்திலிருந்தவர்கள்,சங்கு குளிக்கவோ,மீன் பிடிக்கவோ,கடல் பாசி,அட்டை,பீலி,தொழிலுக்கோ போய்விட்டார்கள். காதரைப்போல் வியாபரக்குடும்பத்திளிருந்து வந்தவர்கள் கொழும்பு,மதராஸ்,சிங்கப்பூர், பினாங்கு,ரங்கூன் என்று தங்கள் குடும்ப வியாபாரத்திற்கு போய்விட்டார்கள். நண்பர்கள் கூட்டத்தில் காதர் மட்டும் தனித்துவிடப்பட்டிருந்தான்.

எம்ஜியார் சினிமா என்றால் உயிர். பயங்கர எம்ஜியார் பிரியன். தினத்தந்தியில் வரும் முழுப்பக்க எம்ஜியார் பட விளம்பரங்களை மொட்டை மாடி படிக்கூட்டு அறை சுவற்றில் ஒட்டி வைத்து ரசித்துக்கொண்டிருப்பான். மலைக்கல்லன்,அலிபாபாவும் 40 திருடர்கள் போன்றவை அங்கு திரை இடப்பட்ட அத்தனை நாட்களும் பார்த்துவிட்டான். சிவாஜி,ஜெமினி மற்றவர்கள் படங்கள் எத்தனை நல்ல படமாக இருந்தாலும் ஒருதடவைக்குமேல் பார்க்கமாட்டான். படம் பார்க்காத நாட்களில் கொட்டைகைக்கு வெளியே மணல் பரப்பில் படுத்துக்கொண்டு வசனங்களையும் பாட்டுகளையும் கேட்டுக்கொண்டிருப்பான். மாலை காட்சி முடிந்த பின்புதான் வீட்டிற்கு வருவான். வீட்டில் எல்லோரும் தூங்கி இருப்பார்கள்.

அவனுக்கு அடுப்பங்கரையில் இடியப்பமும்,மீன் ஆனமும் மூடி வைக்கப்பட்டிருக்கும். சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடி படிக்கூட்டு அறையில் கயிற்றுக்கட்டிலில் தூங்கப்போய்விடுவான். இப்படி சினிமாதான் வாழ்க்கை என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது

அன்று சினிமா கொட்டகையில் எம்ஜியார் நடித்த “தாயிக்குப்பின் தாரம்” படம் கடைசி நாள். நல்ல சட்டை ஒன்றை மாட்டிக்கொண்டு கிளம்பியபோது,பாலுமாவின் “மைனரு கெளம்பிட்டாரு என்ற அர்ச்சனை தொடர்ந்து நீளமாக வந்துகொண்டிருந்தது..

அதை காதில் ஏற்றிக்கொள்ளாமல் கடந்து தங்கையிடம் போனான். ”இன்னக்கி எம்ஜியார் படம் கடசி நாள். நல்ல படம் இன்னொரு தடவ பாக்கப்போறேன். காசு தா “ என்றான்.

“என்ட்ட இல்ல. உம்மாட்ட கேளு “ என்றாள் மதீனா.

பால் காசுலாம் உன்னட்டதான் இருக்கும்.குடு. உம்மாட்ட பொறவு சொல்லிக்கிறலாம் என்றான் காதர்.

அப்போது வசவுடன்,அவனுக்கு காசு கீசு கொடுக்காத. அவன கெடுக்குறது நீதேன். என்று பாலுமாவின் சத்தம் வந்தது. ஆனால் ஏற்கனவே கால்ரூபாய் காசு அவன் கைக்கு வந்துவிட்டது. காக்கா மீது மதீனாவுக்கு பிரியம். .வீட்டில் அவனுக்காக பேசுபவள் அவள் மட்டுமே.

பாலுமாவின் ஆராதனை,அவன் கொல்லைகதவை மூடிக்கொண்டு போகும்போது வரும் நாரங்கியின் சப்தம் அடங்கும் வரை தொடரும்.

தாயிக்கு பின் தாரம் படத்தின் பெரிய போஸ்டரின் மேல் “இன்றே இப்படம் கடைசி” என்ற பிட் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. கடைசி நாளானாலும் கூட்டமாகத்தான் இருந்தது.

தரை டிக்கட் வாங்கிக்கொண்டு திரைக்கு மிக அருகில் மண்ணை கூட்டி மண் மேடை ஒன்று எழுப்பி அதில் அமர்ந்து கொண்டான். அப்போதுதான் மக்கள் வர ஆரம்பித்திருந்தார்கள். படம் ஆரம்பிக்கும்வரை என்ன செய்வதென்று தெரியாமல்,பீடி ஒன்றை பற்றவைத்தான்.

பேச்சுதுணைக்கு யாராவது தெரிந்த முகம் இருக்கிறார்களா ? என்று சுற்றுமுற்று பார்த்தான். யாராவது கிடைத்தால் அவர்களோடு படம் ஆரம்பிக்கும் வரை பேசிக்கொண்டிருக்கலாம். பழகிய முகம் எதுவும் அருகில் இல்லை.

மளிகைக்கடை கீச்சு மூச்சு செட்டியார் பெஞ்சி டிக்கட்டில் உட்கார்ந்திருந்தார். ஒண்ணா படிச்ச யாகூபு தரை டிக்கட்டில் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தான். அவனை

“டே யாகூபு இங்கே வாடா’ என்று சத்தம் போட்டு அழைத்தான் காதர்.

“தெரக்கி பக்கத்துல உக்காந்து பாத்தா கண்ணு கேட்டுபோகும்டா,இங்குட்டுவாடா “ என்றான் யாகூப்.

காதருக்கு திரைக்கு பக்கத்துல இருந்து பாத்தாதான் படம் பார்த்த மாதிரி இருக்கும். அகவே வேறு வழி இல்லாமல்,படம் போடும் நேரத்திற்காக காத்திருந்தான். ஆறுதலாக ஸ்லைடு போட ஆரம்பித்திருந்தார்கள்,வணக்கம்,புகை பிடிக்ககூடாது போன்ற ஸ்லைடுகளுக்கு பிறகு விளம்பர ஸ்லைடுகள் போட்டார்கள். ஸ்லைடுகளில் எம்ஜியார் படங்கள் வந்தால் விசில்கள் பறந்து வந்தன.

அப்போது பிளாஸ்டிக் வாளி,பெரிய துணிப்பை சகிதம் அவற்றை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு,அவன் வயதொத்தவன் அவன் அருகில் வந்தான். கொண்டுவந்த சாமான்களை அவனருகில் வைத்துவிட்டு,அவனைப்போல் மேடை அமைக்க மணலை குவிக்க ஆரம்பித்தான். நல்ல கலையான சிவந்த முகம். காதரை பார்த்து ஒரு புன்முறுவல் செய்தான். அவன் உடுத்தியிருந்த சாரமும் (கைலி) சட்டையை கைலிக்குள் விட்டு அகண்ட,பர்ஸ் வைத்த பெல்ட் போட்திருந்தும் அவன் சிலோன்காரன் என்று காட்டியது. அவன் மணல் மேடை அமைக்க காதரும் மண் கூட்டிஉதவிசெய்தான்.

பிறகு “சிலோனா ?” என்று காதர்தான் ஆரம்பித்தான்.

“ஓம் “ என்று பதிலளித்தான் மண் மேடையில் அமர்ந்துகொண்டு.

“இங்க என்ன பண்ணுறீங்க?” என்றான் காதர்.

“எங்கட ஊரு மன்னாருக்கு அடுப்பம். தோணில கிராம்பு,பட்ட,டீத்தூளு எல்லாம் ஏடுத்துக்குட்டு வருவம்.இங்க ராம்னாட்டுல தெரிஞ்சவங்கட்ட வித்துபுட்டு, அந்த காசுல இங்கிருந்து அங்க கிடைக்காத சாமன்கள வாங்கிட்டு போவம். மாசத்துக்கு ரெண்டு தடவ வருவம். எங்கட வாப்பா காலத்துல ஈந்து செய்றம் “. என்றான்.

“உங்கட பேரு?” என்றான் காதர்.

“கமால்” என்றான் சிலோன்காரன். நீங்க இந்த ஊரா ? உங்கட பேரு என்ன ? என்று விசாரிப்பில் தொடங்கியது அவர்கள் நட்பு.

“ஆமா,எம்பேரு காதர். உங்கள கஷ்டம்சு புடிக்காதா?” என்றான்.

“அவங்களுக்கு அபின்,கஞ்சா,போதைபொருள் கொண்டுவரப்படாது,கொண்டுபோகப்படாது. நாங்க அத எப்பவும் செய்ய மாட்டம். அதுபோவ அப்பப்ப அவுங்களுக்கு சல்லி கொடுப்பம். ஆட்கள் கொண்டுபோகப்படாதும்பாங்க. எங்கட தோணில இதுவரைக்கும் ரெம்ப வேண்டியவங்களுக்காக ஒன்னு,ரெண்டு பேரை கூட்டிக்கிட்டு போயிருக்கம். மத்தபடி பிரச்சினை எதுவுமில்ல “ என்றான் கமால்.

“எங்க வாப்பா கொழும்புக்கு போனவோ,கொஞ்சநாளா கடுதாசுபோடலே. அவ்வள பத்தி செய்தி ஒன்னும் தெரியல. ஊட்டுல அவ்வள பத்திதான் ஒரே கவல. நீங்க எங்க வாப்பவ பத்தி விசாரிக்க முடியுமா?” என்றான் காதர்.

“உங்கட வாப்பா கொழும்புல இரிக்கிறதா சொல்லுறியல். மன்னாருக்கும்,கொழும்புக்கும் மிச்சம் தூரம். நான் மன்னார விட்டு மிச்சம் தூரம் போக இல்லே. சிறு பிள்ளையிலே வாப்பாவோட அனுராதபுரம்வரைக்கும் போய் இருக்கிரன். கொழும்புக்கு போவ ஆசதான். போனதில்லே” என்றான் கமால்.

“கொழும்புல ஒங்களுக்கு தெரிஞ்சவுங்க யாருமிருந்தா, விசாரிக்க சொல்ல முடியுமா?” என்றான் காதர்.

கொழும்புல எனக்கு யாரையும் அவ்வளவா தெரியாது. ஆ. எங்கட மாமா ஒத்தர் கொழும்பு,வெள்ளவெத்தயிலே, கிருலபண பேக்டரில வேல செய்யிறாரு. அவருட்ட ஊருக்கு வரும்போது சொல்லி வக்கிரன். பாப்பம்,உங்கட வப்பாட விபரம் சொல்லுங்க. “ என்றான் கமால்.

“எங்க வாப்பா பேரு காசிம் மரிக்கா.கொழும்பு பெட்டாவுலே, ஏதோ குறுக்குத்தெருன்னு சொன்ன ஞாவுகம். சொந்தக்காரவுக கடையில இருக்குராக. மேக்கொண்டு வெவரம் தெரியல. கடுதாசுளையும் விலாசம் எழுத மாட்டாக.” என்றான் காதர்.

திரையில் படம் ஆரம்பமானதும் அவர்களின் சம்பாசனை நின்றுபோனது. இருவரும் ஆர்வமாக படம்பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிங்கிள் ப்ரொஜெக்டர் என்பதால், மூன்று இடைவேளைகள் வந்தன. ஒவ்வொரு இடைவேளையிலும் அவர்கள் உரையாடல் தொடர்ந்தது. கோட்டைகளுக்குள் விற்றுவரும் முறுக்கு,கடலை மிட்டாய் போன்றவற்றை காதர்,கமாலுக்கு அவன் மறுப்பையும் மீறி வாங்கிக்கொடுத்தான். இருவரும் வெகுநாள் பழகிய நண்பர்கள்போல் சகஜமாகி விட்டார்கள்.

மூன்றாவது இடைவேளை முடிந்த சிறிதுநேரத்தில் தன் கைகடிகாரத்தை பார்த்த கமால், “நீங்க படத்த பாருங்க நான் 1௦,மணிக்குள்ளே கடக்கரையிலே,அஞ்சுவாச கிட்டங்கி பக்கத்துல இரிக்கணும்,தோணி வந்துரும் “ என்று சொல்லிவிட்டு கமால் எழுந்தான்.

அவனுடன் காதரும் எழுந்து கொண்டு “பரவாஇல்லே,நா ஏர்கனவே பாத்தா படந்தே. நானும் உங்களோட சாமான தூக்கிட்டு வர்றேன். இத்தன சாமானையும் தூக்கிகிட்டு நீங்க ஒரு ஆளா கஷ்டமில்லயா ? “என்றான் காதர்.

“பரவால்லேங்க. எனக்கு பழக்கந்தேன்” என்ற கமால்,காதர் சில சாமான்களை கையில் எடுத்துக்கொண்டபின் மறுப்பு சொல்லவில்லை.

இருவரும் மெயின் ரோட்டுக்கு வந்து,கடற்கரை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள்.

”நீங்க திரும்ப எப்ப வருவிய ? உங்கள திரும்ப எங்க பாக்கலாம் ? என்றான் காதர்.

“எப்புடியும் பதினஞ்சி நாளக்கி மேலாவும். எனக்கே தெரியாது. உங்கட விலாசம் சொல்லுங்க,கடிதம் போடுறன். ” என்றான் கமால்.

“காதர் மரிக்கா,பால்கார வீடு,கிழக்குதெரு ன்னு போடுங்க போதும் “ என்றான் காதர்.

அவர்கள் கடற்கரையை அடைந்து,அஞ்சுவாசல் கிட்டங்கியை நோக்கி நடந்தார்கள். சரியான மை இருட்டு. அஞ்சு வாசல் கிட்டங்கியை ஓட்டிய தோப்பில் வெளிக்கு பின்புறம் சாமான்களை மணலில் வைத்துக்கொண்டு அமர்ந்தார்கள். கமால் கடலை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தான்.

கரையில் சற்று தொலைவில் கற்களாலான மேட்டில்,ஒரு காலத்தில் சீதக்காதியின் மாளிகையாக இருந்த கட்டிடத்தில் கஸ்டம்ஸ் ஆபீஸ் இருந்தது. அதிலிருந்து வந்த சிறிய வெளிச்சம் இந்த நேரத்திலும் அங்கு யாரோ இருக்கிறார்கள் என்று காட்டியது.

“கஷ்டம்சுகாரங்க பாத்துட்டா பிரச்சினை வராதா ? “என்றான் காதர்.

“ஒன்னும் இல்ல. நாங்க அப்பப்ப சல்லி கொடுப்பம். கண்டுக்க மாட்டாங்க.அப்படி வந்தாலும் போதைபொருள் இருக்குதான்னு பாப்பாங்க. அந்த ஆபீசர் சண்முகம் நல்ல மனுஷன். சல்லி நம்மலா கொடுத்தாதான் வாங்குவார். அவர் இதுவர அவரா கேட்டதில்ல,” என்றான் கமால்.

சிறிது நேரத்திற்கு பிறகு கடலில் சிறிய வெளிச்சம் விட்டுவிட்டு தெரிந்தது. டார்ச் வெளிச்சமாக இருக்கலாம். உடன் கமால் பையிலிருந்த டார்ச்சை எடுத்து ஒளி வந்த திசையை நோக்கி டார்ச் விளக்கை அடித்தும்,அனைத்தும் பதில் தந்தான்.

சிறிது நேரத்தில் சிறிய ஓடம் ஒன்று வந்து அவர்களுக்கு எதிரே கரையில் நின்றது. அவர்கள் இருவரும் சாமான்களை சுமந்துகொண்டு அந்த படகை நோக்கி போனார்கள். இருட்டு கடல் முழ்தும் அப்பி இருந்தது. ஆனாலும் அரை இருட்டு என்றுதான் சொல்லவேண்டும். வானம் முழுதும் விரவிக்கிடந்த சிதறிய வைரக்கற்கள் போன்ற நட்சத்திரங்களின் ஒளி அதற்கு காரணமாக இருக்கலாம். காதர் மேகமில்லா அந்த வானில் இத்தனை நட்சத்திரங்களை அவன் இதுவரை கண்டதில்லை.

படகில் வந்தவர்,”கமால் சீக்கிரம் ஏறு. கத்து நல்ல இரிக்கிது.அதுக்குள்ள ஊர் போவனும்”என்று அவசரப்படுத்தினார்.

“இந்த சிறிய தொணியிலயா போகப்போரிங்க” என்றான் காதர். “இல்லே,பெரிய பாய்மர வல்லம் தூரத்துல ‘போயா’ க்கு அந்தப்பக்கம் பக்கத்துல நிக்கிது. இங்கே ஆலமில்லாததாலே இங்கிட்டு வரமுடியாது. அதுலதான் போறோம். காத்து நல்லா இருந்தா சீக்கிரம் போய்ச்சேந்துருவோம். துவா செய்.தைரியமா இரு. நான் கடிதம் போடுவன். ”என்றான் கமால்.

“ஒங்கட செய்திக்குதே காத்துக்குட்டிருப்பேன்” என்றான் காதர்.

கமாலும், படகிலிருந்த முகம்தெரியாத நபரும் அஸ்ஸலாம் அழைக்கும் என்று காதருக்கு சலாம் சொல்லி விடைபெற்றார்கள். அவர்கள் இருவருக்கும் வா அலைக்குமுஸ்ஸலாம் என்று பதில் சொன்னான் காதர்.

அவன் வாழ்க்கையின் ஓடம் வேறு நீரோட்டத்தில் கலந்ததின் ஆரம்பம் அது.

கமால் போய் ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. தினம் தபாலாபிஸிர்க்கு போய் தபால்காரர் காசியிடம் கடிதம் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

தினம் பாலுமா,காதரிடம் “தபலாபீசுக்கு போயி வாப்பாட்டருந்து தபால் வந்திரிக்கிதாணு பாத்துக்குட்டு வா வாப்பா” என்று சொல்லுவார்.

அப்போதெல்லாம் “இருந்தா காசி வீட்டுக்கு கொண்டுவந்து தருவார்” என்பான் காதர்.

ஆனால் இப்போது தாய் சொல்லாமலே,தபாலபிசிர்க்கு போய் காசி வெளிவர காத்திருக்க ஆரம்பித்தான். ஆனால் ஒரு மாதமாகியும் கமாலிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லை. வாப்பாவின் கடிதமும் வரவில்லை.

காதருக்கு இனி அவனிடமிருந்து அடிதம் வரும் என்ற நம்பிக்கை இழந்திருந்த நேரத்தில், கமாலிடமிருந்து ஒரு கார்ட். வந்தது. ஆவலுடன் படித்தபோது

“வரும் 8 ம் தேதி என்னை சினிமா கொட்டகையில் சந்திக்கவும்-கமால். ” என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது.

என்ன செய்தி கொண்டுவருவான் என்று தெரியவில்லை தாயாரிடம் அவன் வருவது பற்றி சொன்னான்.

ஏதோ நம்பிக்கையில் “வந்ததும் நம்ம ஊட்டுக்கு கூட்டிக்கிட்டு வா வாப்பா “ என்றார் பாலுமா.

அந்த 8 ம் தேதி எழுதி இருந்ததுபோல் காதர்,5 மணியிலிருந்து சினிமா கொட்டகை வெளியே குளத்தங்கரை மணலில் மெயின் ரோடிலிருந்து வரும் பாதையை பார்த்தபடி காத்திருந்தான். 6 மணியளவில்,இருட்டத்தொடங்கிய நேரத்தில்,சினிமா கொட்டகையில் கணபதியே வருவாய் பாடலுடன் பாட்டுப்போட ஆரம்பித்துவிட்டார்கள். சினிமா பார்க்கவரும் கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கி இருந்தது. கமால் இன்னும் வரவில்லை. வருவானா? மாட்டானா? என்ற சந்தேகம் ஏற்பட்டு வீட்டிற்கு போய்விடுவோமா? அல்லது எஸ்.எஸ். ராஜேந்திரன் நடித்த இந்த படத்தை பார்கப்போவோமா ? என்று மனது தீர்மானத்துக்கு வரமுடியாத நிலையில். தூரத்தில் அந்த நம்பிக்கை முதலில் நிலலாகத்தேரிந்தது.

ஒரு பெரிய தோல் பேக்கை சுமக்கமுடியாமல் சுமந்தபடி கமால் வந்துகொண்டிருந்தான். உடன் காதர் ஓடிப்போய் அவன் பேக்கை வாங்கிக்கொண்டு குளத்தங்கரை மணலுக்கு வந்து அமர்ந்து கொண்டார்கள்.

“ராம்நாடு போயித்து,எங்கடஆல்ட சாமான்கள குடுத்துட்டு இப்பதான் வாறன். மீதி சாமான் நாளக்கிதான் தாரன்னு சொல்றார். இந்த ராத்திரிக்கி பள்ளில தங்கிட்டு நாளக்கி திரும்ப ராம்நாடு போகவேணும். இந்த கனத்த ராம்னாட்டுக்கு திரும்ப சுமக்க ஏலா.உங்கட வீட்டுல வக்க முடியுமா? இதுல வெறும் சீணியும், பீடிக்கட்டும்தான் இரிக்கிது. நாளக்கி பொடவையும்,சாரமும் வாங்கணும். அதுதேன் முக்கியம்”. என்றான் கமால்.

“எங்கவீட்டுக்கு போவம்.அங்கேயே ராத்திரிக்கி தங்குங்க. பள்ளிலே தூங்குறது கஷ்டம்.வெளித்தின்னயிலதான் தூங்கனும்.சாமானுக்கு பாதுகாப்பு இருக்காது. அதோட சுபுஹுக்கு முந்தி எளுப்பிவிட்டுருவாக”. உம்மாவும் உங்கள பாக்கணும்னு சொன்னாக “ என்றான் காதர்.

கமாலுக்கு இந்த யோசனை சரியாகப்பட்டது.இருவரும் ஆவுளிய குளத்து மணலில் இறங்கி நடந்து தெருவுக்குள் வந்தார்கள். அந்த கனத்த பேக்கை காதர் சுமந்து வந்தான். கதரின் உடல் வாகுக்கு அது பெரும் சுமையாக தோன்றவில்லை. காதர் வயதுதான் கமாலுக்கும் இருக்கும். ஆனால் காதர் நல்ல உயரம்,சிவந்த கட்டுமஸ்தான உடல். அதற்கு நேரெதிரான உடல்வாகு கமாலுடையது.கருத்த நிறம் குள்ளமான,மெலிந்த தேகம்.இருந்தும் விரிந்த கண்களில் ஒரு இனிமையான சினேக உணர்வு இருந்தது. அது யாருக்கும் பிடிக்கும். அவனுடைய இந்த துணிச்சலும்,வியாபார ஆர்வமும் காதருக்கு ஆச்சரியமூட்டியது.

வீட்டில் பாலுமா அவனை வரவேற்று முற்றத்தில் பாயை விரித்து அமரச்சொன்னார். கமால் அதில் அமர்ந்ததும்,அருகில் காதரும் வந்து அமர்ந்துகொண்டான். உள்ளே இருந்த மகள் மதீனாவிடம், “ரெண்டுபேருக்கும் சாயா போடுமா “ என்றார்.

மலர்ந்த முகத்துடன் நட்போடு நோக்கிய கமாலை, பாலுமாவிர்க்கு பிடித்துவிட்டது. “தம்பிக்கு எந்த ஊரு?” என்று பேச்சை ஆரம்பித்தார் பாலுமா.

“மன்னார்தான் எங்கட ஊரு.வாப்பா இந்தியாகாரர்னு சொல்லுவாங்க.உம்மாட வாப்பாவும் இந்தியாவுல இருந்து வந்ததா சொல்லுவாங்க.

வாப்பாடகாலத்துல, வாப்பா தேங்காபட்டுனத்துல சொந்தக்காரங்க இரிக்கிறதா சொல்லுவாங்க. நா அங்க போனதில்ல,அங்க யாரையும் பாத்ததில்ல. இன்னும் சொந்தக்காரங்க மாமா,மாமி,சாச்சா எல்லா, இருக்கிறதா சொல்லுவாங்க. வாப்பாக்கு பொறவு அந்த சொந்தம்லாம் விட்டுபோச்சு என்றான்.

பாலுமா விசயத்துக்கு வந்தார். “காதர்ட வாப்பா கொழும்புக்கு போயி,ரெண்டு வருசமாச்சி. அவ்வொட்டருந்து கடுதாசு வந்து வருசம் ஒண்ணுக்கு மேலாவுது. அவ்வொல பத்தி ஒரு செய்தியும் தெரியல. சொந்தக்காரங்க மூலமா கொழும்புல விசாரிச்சம். யாருக்கும் தெரியல. நாங்க நிம்மதியா தூங்கி ரொம்ப நாளாச்சி.நீ விசாரிச்சியா தம்பி” என்று ஆவலோடு கேட்டார். “நீதான் தம்பி அவ்வொள கண்டுபிடிக்க ஒதவி செய்யனும்” என்று கேஞ்சியவண்ணம் கேட்டார்.

“உம்மா மன்னாருக்கும்,கொழும்புக்கும் மிச்சம் தூரம். நான் சின்னவயசாககொள்ள போனது. எங்கட மாமா ஒருத்தர் கொளும்பு, வெள்ளவெத்தயிலே கிருலபன பேக்டரில வேல பாக்குறாரு.அவர பாக்க சின்ன வயசுல வாப்பாவோட ஒரு தடவ போனதுதான்.அவரோட கடிதப்போக்குவரத்தோட சரி.அவரு எப்போதாவது வருவாரு. மத்தபடி மிச்ச காண்டக்ட் இல்ல. அவர்டதா காதர் வாப்பவ பத்தி விசாரிக்க சொல்லி இருக்குறன்.” ஏன்றான் கமால்

மதீனா எல்லோருக்கும் சாயா கொண்டுவந்திருந்தாள். கமாலுக்கு அறிமுகம் செய்தார் பாலுமா.. என்னதான் சிறிய பையனாக பட்டபோதிலும்,மதீனா முகத்தை பாதி தாவணி தலைப்பால் மறைத்தபடி சிநேகத்தோடு நோக்கிவிட்டு உள்ளேபோனாள்.

“இவ கல்யாணத்துக்குதே அவ்வொள எதிர்பாத்துக்கிட்டீக்கிரம். மாப்புள அவ்வோட லாத்தா மவந்தேன்.சிங்கப்பூர்ல இருக்கிறாக. நோம்பு பெருநாளக்கி வரதா கடுதாசு போட்டீகிராகலாம். இவ்வோ அதுக்குள்ள வந்துட்டாகன்னா, ஆறு நோம்பு கழிச்சி கல்யாணத்த முடிச்சிரலாம். அதுக்குதேன் அதுக்குள்ள அவ்வோ வந்துரனுமேனு கெடந்து துடிக்கிறோம். இப்போ முடியலன்ன மாப்புள திரும்ப சிங்கபூருக்கு போயிட்டு திரும்பிவர எத்தன வருசமாவுமோ தெரியலே”. என்றார் பாலுமா கண் கலங்கியபடி. “நீதாம்பா எப்படியாவது அவ்வொள கண்டுபிடிக்க ஓதவனும். என் வயத்துல பொறந்த புள்ளயா நெனச்சி கேக்குறேன்” என்றார் பாலுமா.

“உம்மா நீங்க சொல்லுறது புறியுது. நான் கொழும்புக்கு போயி கொள்ளவருசமாச்சி, நான் இந்த யாவாரத்துக்கு வந்துபோறதே சரியா இரிக்கிது.ஒன்னு செய்யலாம்.காதர என்னோட எங்க ஊருக்கு வரச்சொல்லுங்க. நா காதர எங்கட மாமாட்ட கொழும்புக்கு அனுப்புறன் அங்க வாப்பாவ,மாமாட ஓதவியில தேடலாம். அது சுலுவா இரிக்கும். ” என்றான் கமால்.

பாலுமாவிர்க்கு மகனையும் பிரிய மனமில்லை. அவனும் அங்கு தொலைந்துபோய்விடுவானோ என்று பயம் வந்துவிட்டது. ஆனால் பாலுமா பதில் சொல்லுவதற்குள்,காதர் முந்திக்கொண்டு “நான் வாறேன்”என்றான்.

பாலுமாவும்,மறைவில் அறையில் கேட்டுக்கொண்டிருந்த மதீனாவும் அவன் பதிலில் அதிர்ச்சி அடைந்தனர்.

“என்னை கொழும்புக்கு அனுப்பீருங்க. வாப்பவ எப்புடியும் கண்டுபிடிச்சிருவேன். நீங்க ஒன்னும் கவலப்படாதியம்மா” என்று தாயாருக்கு தைரியம் சொன்னான்.

உள்ளிருந்து மதீனா “நீ சின்ன பையன்,புது ஊருல என்னடா தெரியும் உனக்கு ” என்றாள்.

“எனக்கு இப்போ பதினெட்டு வயசாவுது. என்னவிட சின்னபசங்கல்லாம் சம்பாதிக்க கொழும்பு,சிங்கப்பூர்னு போய்டாணுவ. இப்போ என்ன கமால்ட மாமா கொளும்புல இருக்குராருல்ல.அவர் தொனையில வாப்பாவ கண்டுபுடிச்சிறுவேன்.கவலப்படாத லாத்தா” என்றான்.

பாலுமாவிர்க்கு அரை மனது. கணவரை கண்டுபிடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும்,மகனும் தொலைந்துபோய்விடுவானோ ? என்ற பயமும் இருந்தது. எல்லாம் அவன் விட்ட வழி,என்று அல்லாவின் மேல் பாரத்தை போட்டுவிட்டு கமாலின், காதரை கூட்டிப்போகும் யோசனைக்கு “சரி” என்றார்.

“எப்போ தம்பி பொறப்படனும் ? எவ்வளவு செலவாவும் ? என்றார் பாலுமா.

“செலவு என்ன ? எனக்கு மானாம். வல்லத்துக்காரனுக்கு 5௦ ரூபா கொடுக்கச்சொல்லுங்க. அவரு சாதரணமா வெளியாட்கள் யாரையும் ஏத்தமாட்டார். நான் சொன்னா கேப்பார். பொறவு கொழும்புக்கு போற செலவு இரிக்கும்.கொழும்பு போய்டா,மாமா பாத்துக்குவாரு. மாமா நல்ல மாதிரி”. என்றான் கமால். கொழும்புக்கு ரயில் ஏத்தி விட்டுடுவேன். அதுக்கு முந்தி மாமாக்கு கடிதம் போடுறன். அவரு ஸ்டேசனுக்கு வந்து கூட்டிகிட்டு போயிருவாரு. எதுக்கும் அவரு அட்ரசும் காதர்ட கொடுக்குறன்.நானும் நாளக்கிதான் போரப்படுரன் காலைல ராம்னாட்டுல வேல இரிக்கிது. முடிச்சுட்டு வர ராத்திரி ஆவும் 10 மணிபோல கிளம்புவோம். காதருக்கு அஞ்சுவாச கிட்டங்கி பக்கத்தில் இடம் தெரியும்.அங்கு வந்துரட்டும் “என்றான் கமால்.

பாலுமாவுக்கு திருப்தியாகப்பட்டது. மதீனாவுக்கு திருப்தி அவ்வளவாக இல்லை என்றபோதிலும், மறுப்பு சொல்லவில்லை. வாப்பாவை எப்படியாவது கண்டுபிடித்தால் போதும் என்றிருந்தது.

அடுத்த நாள் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது காதர் தேடிப்போன சில மாதங்களிலேயே வாப்பா காசிம் மரிக்கா ஊர் வந்துவிட்டார். காதர் காணாமல் போய்விட்டான்.

இலங்கையில் அவன் ஒரு இருண்ட காலத்தில் வாழ்ந்தது யாருக்கும் தெரியாது. அவன் யாரிடமும் சொன்னதுமில்லை. சொல்லப்போவதுமில்லை. பத்து ஆண்டுகளும் அவன் வாழ்வில் அழிந்துபோன அத்தியாயமாக இப்போது வீட்டிற்கு திரும்பி இருக்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *