கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,018 
 
 

புதன்கிழமை காலை 9 மணி.
அன்று, ப்ளஸ் 2 ரிசல்ட்.
காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என, செய்தித்தாள் தலைப்பு செய்தி.
வீட்டின் பால்கனியில் அமர்ந்து, செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தார் மணவாளன்.
நடுத்தர வர்க்கத்தினர் குடியிருக்கும் பகுதி அது.
கையில் கரண்டியுடன், சமையலறையில் ஒரு கண்ணும், தன் கணவனை ஒரு கண்ணும் பார்ப்பதுமாக இருந்தாள் லட்சுமி.
தன் கணவனின் கண் பேப்பரில் இருந்தாலும், மனது அங்கில்லை என்று அவளுக்கு தெரியும்.
அப்பாவும் ப்ளஸ் டூவும்பதினொரு மணிக்கு வரப்போகும் தன் மகனின் ரிசல்ட் பற்றிய கவலை.
வாழ்க்கையின் அடுத்த மைல் கல்லான ப்ளஸ் 2 ரிசல்ட். மணிகண்டனும், காலையிலிருந்தே அமைதியாக இருந்தான். அருமை மகன். அறையை விட்டே வெளிவரவில்லை. குளித்துவிட்டு, திரும்ப அறைக்குள் சென்று விட்டான்.
அவன் மனநிலையும் லட்சுமிக்கு புரிந்தது. அவனுக்கும், நிச்சயம் ரிசல்ட் பற்றிய பயம் வந்திருக்கும்.
பின்னே, தேர்வு எழுத போகும் கடைசி நாள் வரை, கிரிக்கெட், சினிமா என சுற்றிக் கொண்டிருந்தால்…
தன் மகனைவிட, கணவனை நினைத்தே அதிகம் கவலைப்பட்டாள் லட்சுமி.
மணவாளனுக்கு இ.பி.,யில் வேலை; உதவி பொறியாளர். இதைத் தவிர, வேறு வருமானம் கிடையாது. பணி நிமித்தமாக யாரிடமும் கை நீட்டாதவர்; தன்மானம் அதிகம்.
வரும் சம்பளத்தில், பழைய கடன் ஒன்றை அடைக்க, தேவையான அளவு குடும்ப செலவு, வீட்டு வாடகை, ஒரே மகனின் படிப்பு செலவு என, அனைத்து தேவைகளையும் சீராக நகர்த்தி கொண்டிருப்பவர். விழாக் காலங்களில், தன் தேவையை குறைத்து கொள்பவர்.
மணிகண்டன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே, அவனின் படிப்பில் அதிகம் கவனம் செலுத்த தவறியதில்லை. பத்தாம் வகுப்பு வரை நன்றாகத்தான் படித்தான்; அதன்பின் தான் தடுமாறத் தொடங்கினான். மணவாளனும், ஏதோ பருவ கால மாற்றம்… சரியாகிவிடும் என நினைத்தார்; ஆனால், நடக்கவில்லை.
மணிகண்டனை உற்று நோக்கினால், பெண்கள் கவனமோ அல்லது வேறு கெட்ட தோழமையோ கிடையாது. முழுக்க முழுக்க, கிரிக்கெட், சினிமா அல்லது ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஏதோ ஒரு இசை. மணவாளன் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டார். அந்த சமயம் தலையாட்டுவானே தவிர, திரும்ப பழைய கதை தான்.
மணவாளன் திட்டினால் கூட, அதில் தரம் குறைந்த வார்த்தைகளோ, சுடும் சொற்களோ இருக்காது. தன் மகனின் படிப்பு மீது, கணவனுக்கு எத்தனை அக்கறை என்பதை லட்சுமி நன்கறிவாள்.
“”என்னங்க…”
“”…”
“”என்னங்க…” இரண்டாம் முறை அழுத்தமாய் கூப்பிடவே, “”ம்!”
“”டிபன் ரெடியாயிருக்கு. சூடா சாப்டுட்டு, அப்புறம் படிக்கலாம்.”
“”ம்…” – மெல்ல பேப்பரை மூடி வைக்க, “”ஒண்ணும் கவலைப்படாதீங்க… தம்பி நல்ல மார்க் எடுப்பான் பாருங்க…”
“”முதல்ல பாசாகணும்ன்னு வேண்டிக்க.”
“”சரி… பாசாவான் பாருங்க!”
“”மணி சாப்பிட்டாச்சா?”
“”சாப்டுட்டிருக்கான்.”
மணி காலை பத்தரை.
நேரம் நெருங்க நெருங்க, உள்ளுக்குள் பதட்டம் கூட, வெளியே இயல்பாய் இருப்பது போல், “டிவி’யில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார் மணவாளன்.
மணிகண்டனும், அவ்வாறே தரையில் அமர்ந்து, பேப்பரை புரட்டிக் கொண்டிருந்தான்.
அந்த அமைதியை, தொலைபேசி ஒலி கெடுத்தது.
மணியடிக்கவே, லட்சுமி எடுத்து பேசிவிட்டு, “”என்னங்க… உங்க பிரண்ட் சங்கர், விழுப்புரத்திலிருந்து பேசறார்…”
ரிசீவரை வாங்கி, “”சங்கர்… எப்படியிருக்க?”
“”பைன். ஓ.கே… மணி நம்பரை சொல்லு. மார்க் பார்த்திடலாம்.”
“”பதினொரு மணிக்கு தானே ரிசல்ட்?”
“”அது அதிகாரபூர்வமா, “டிவி’யில, பேப்பர்ல போடறது. நெட்ல வெளியிட்டு அரை மணி நேரமாச்சு. சீக்கிரம் நம்பரைச் சொல்லு.”
லட்சுமியும், மணிகண்டனும் அமைதியாய் பார்த்து கொண்டிருக்க, மணவாளன் ரிஜிஸ்டர் நம்பரைச் சொல்ல, சங்கர், “”மணா… அப்படியே லைன்ல இரு. என் டேபிள்லயே நெட் ஓப்பன்ல இருக்கு. பார்த்து சொல்றேன்.”
முப்பது வினாடிகளில்-
“”மணா… நோட் பண்ணிக்கோ…”
பாடவாரியாக மதிப்பெண்ணை சொல்லி கொண்டு வந்த சங்கர், தமிழ் பாடம் மதிப்பெண் மட்டும் சொல்ல தடுமாற, “”என்ன சங்கர்… தமிழுக்கு மார்க்கே போடலியா?”
“”இல்ல மணா…. மார்க் கொஞ்சம் குறைச்சலா இருக்கு. சமயத்துல நெட்லேயும் தவறு வர்றது உண்டு. எதுக்கும், எஜுகேஷன் டிபார்ட்மென்ட்ல விசாரிச்சு கண்பார்ம்…”
“”சங்கர்… மார்க் சொல்லு…”
“”அறுபத்தைந்து.”
ஒரு சில வினாடிகள் மவுனம்…
மணிகண்டனும், லட்சுமியும், மணவாளன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
“”இன்னும் அஞ்சு மார்க் கூட எடுத்திருந்தா பாஸ் பண்ணியிருக்கலாம்ல…”
“”மணா… டோன்ட் ஒர்ரி. நான் டி.இ.ஓ., ஆபிசுல விசாரிக்கிறேன்.”
“”வேணாம் சங்கர்… நான் அப்புறமா பேசறேன்.”
ரிசீவரை வைத்துவிட்டு, வேதனை புன்னகையுடன், “”என்னைவிட சங்கர்தான் அதிகம் கவலை படுறாப்பல…”
லட்சுமி… தன் கணவனை பார்க்கவே அச்சப்பட்டாள்.
மணிகண்டன், தலை குனிந்தவன் குனிந்தவன் தான்.
மணவாளன் எதுவும் பேசாமல், சோபாவில் வந்து அமர்ந்தார். கண்களை மூடி, தலையை பின் சாய்த்தார். நிமிடங்கள் மணித்துளியாய் மாறத் தொடங்கின.
“”சார் உள்ளே வரலாமா?”
குரல் கேட்ட மணவாளன் கண் விழிக்க, உரிமையாய் உள்ளே வந்து கொண்டிருந்தார் தட்சிணாமூர்த்தி. மணவாளன் அலுவலகத்தில், அலுவலக உதவியாளர்.
முகமெல்லாம் மகிழ்ச்சியுடன், “”சார்… என் பையன் ப்ளஸ் 2ல பாஸ் பண்ணிட்டான் சார். ஸ்வீட் எடுத்துக்குங்க.”
ஸ்வீட்டை நீட்ட, மணவாளன் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு, இனிப்பை எடுத்துக் கொண்டே, “”வாழ்த்துக்கள் சார். உங்கள் பையனுக்கும், என்னோட வாழ்த்துகளை சொல்லுங்க…” என்றவாறே, தன் மனைவி, மகனை பார்க்க, அவர்களும், இயந்திர கதியில் இனிப்பை எடுத்துக் கொண்டனர்.
தட்சிணா மட்டும், சற்றும் சூழ்நிலையை அறியாதவராக, “”டோட்டல் தொள்ளாயிரத்து நாற்பத்திரண்டு எடுத்திருக்கான் சார்…” சொல்லிவிட்டு மணியை பார்த்தவாறு, “”தம்பி எவ்ளோ மார்க் சார்?”
சற்றும் யோசிக்காமல் மணவாளன், “”தொள்ளாயிரத்து அறுபத்தைந்து,” என்றார்.
“”வெரிகுட் சார்… அப்புறம் ஏன் தம்பி டல்லா இருக்காப்பல?”
“”ஆயிரத்துக்கு மேல எதிர்பார்த்தான். அதான் கொஞ்சம் டல்லா இருக்கான்.”
மணியைப் பார்த்து, “”தம்பி… சில பேர் பாசானாலே போதும்ன்னு நினைக்கிறாங்க. நீங்க நல்ல மார்க் தான் எடுத்திருக்கீங்க… கவலைப்படாதீங்க,”ன்னு சொல்லிவிட்டு விடை பெற்றார் தட்சிணா.
“”என்னங்க…”
“”ம்…”
“”உங்க ஓ.ஏ., கேட்டதுக்கு நீங்க பாட்டுக்கு தொள்ளாயிரத்து அறுபத்தைந்து மார்க்குன்னு சொல்லிட்டீங்க?”
விரக்தியும், கோபமும் கலந்த குரலில், “”சொல்லு லட்சுமி… நீயே சொல்லு. எனக்கு கீழ வேலை பார்க்குற ஓ.ஏ., பெருமையா வந்து தன் மகன் மார்க்கை சொல்லிட்டு, மணி மார்க்கை கேட்கிறார். பாசான்னு கூட கேட்கல. மார்க் எவ்வளவுன்னு நம்பிக்கையோட கேட்கிறார். எந்த முகத்தோட, என் பையன் பெயில்ன்னு சொல்றது?”
“”…”
“”நம்ம பிள்ளையை நாமேவா கேவலப்படுத்த முடியும்? நம்மோட போட்டோ காபி தானே அவன்?”
“”அதுக்கில்லைங்க… நாளைக்கு உண்மை தெரிஞ்சா?”
“”தெரியாது!” அழுத்தமாய் சொன்னார்.
குழம்பினாள், பயந்தாள் லட்சுமி.
மகன் பாசுன்னு பொய் சொன்னவர், அதற்காகவே ஏதேனும் குறுக்கு வழியில் பயணித்திடுவாரோ?
“”ரெண்டு பேரும் இப்படி உட்காருங்க…”
தயக்கமாய் லட்சுமியும், தலை குனிந்தவாறு மணிகண்டனும் எதிரில் அமர, “”சொல்லு மணி… என்ன பண்ணலாம்? உன்ன திட்ட கூட முடியல. மனசு அழுத்தமா இருக்கு.”
“”…”
“”உனக்கு வேற எதுலயாச்சும் குறை வச்சிருக்கமா மணி?”
லட்சுமி பக்கம் திரும்பி, “”லட்சுமி… தம்பி ஏதாவது கேட்டு, என்கிட்ட எதுவும் சொல்லாம விட்டிருக்கியா?”
“”இல்லைங்க!”
“”நீ பைக் கேட்டப்ப கூட, பதினெட்டு வயசு கம்ப்ளீட் ஆனதும், முறையா லைசன்சோட வாங்கி தர்றேன்னுதானே சொன்னேன்?”
“”…”
“”பதினெட்டு தொடங்கியிருக்கு. புரியும்ன்னு நினைக்கறேன். நீ நல்லா படிச்சு, வேலைக்கு போய் சம்பாதிக்கணும்ன்னு நினைக்கறது எங்களுக்காகவா? எங்க லைப்பை நாங்க பார்த்துக்கறோம். நாளைக்கு கவுரவமா, நீ உன் கால்ல நிக்க வேணாமா?”
அமைதியாகவே இருந்தான் மணி.
“”உனக்கு சினிமா பிடிக்கும், கிரிக்கெட் பிடிக்கும், மியூசிக் பிடிக்கும்ன்னு எங்களுக்கு தெரியும். அதுக்காக, அடிப்படை கல்வியை விட்டுடலாமா? இன்னைக்கு எம்.பி.பி.எஸ்., படிச்சுட்டு சினிமாவுக்கு வர்றாங்க. இன்ஜினியரிங் முடிச்சவங்க சிங்கராயிடுறாங்க. சினிமாவுல ஊறிப் போனவங்க கூட, தங்கள் பிள்ளைகளை நல்ல இன்ஸ்டிடியூட்டில் படிக்க வைக்கிறாங்க.”
அனைத்தையும் கேட்டுக் கொண்டி
ருந்தான் மணி.
“”இங்க பாரு மணி… ஒவ்வொரு தகப்பனும், தம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான வழியை காட்டத்தான் முடியும்; கூடவே வர முடியாது. உனக்கு படிக்க பிடிக்கலேன்னா, ஓப்பனா சொல்லிடு. தினமும் செலவுக்கு பணம் தர்றேன். ஜாலியா ரவுண்ட்ஸ் போயிட்டு வா… அம்மாவும் உன்னை எதுவும் கேட்க மாட்டா. அப்படியில்ல, என்னையும் நாலு பேர் மதிக்கணும், படிக்கிறேம்பான்னு சொன்னாலும் சரி தான். முடிவை உன் கையில கொடுத்திட்டேன். எதுவாயிருந்தாலும் எங்களுக்கு சம்மதம். உன் வாழ்க்கை உன் கையில்.”
“”அப்பா…” என்றவனை இடைமறித்து —
“”ப்ளீஸ்… இப்ப எதுவும் வேணாம். கொஞ்ச நேரம் தனியா இருக்கேன். நிறைய யோசி. தேவைப்பட்டா, அம்மாகிட்ட பேசு. சாயந்திரமா உன் முடிவை சொன்னா போதும்.”
சாயந்திரம் —
“”அப்பா…”
“”…”
“”நிறைய யோசிச்சேன்பா. அம்மாகிட்டேயும் பேசினேன். மேல படிக்கிறேன்பா… பி.இ., படிக்க ஆசையா இருக்கு.”
லட்சுமியும் ஆதரவாய், “”ஆமாங்க… மேக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரியில நல்ல மார்க் எடுத்திருக்கான்; தமிழ்லதான் விட்டுட்டான். இன்ஜினியரிங் தாங்க அவனுக்கு செட்டாகும். நீங்களே சொல்வீங்கள்ல, அவனுக்கு நிறைய டெக்னிக்கல் மைண்டுன்னு…”
உண்மைதான். தெருவில் யார் வீட்டிலாவது, “டிவி’ சரியாக தெரியவில்லை அல்லது மோட்டார் ரிப்பேர் என்றாலும், முதலில் மணிகண்டனை தான் கூப்பிடுவர். தனியாக ஓர் ஆயுத பெட்டி வைத்துள்ளான். கையோடு கொண்டு சென்று சரி செய்வான். தேவைப்பட்டால், ஒரு பேப்பரில் சில பெயர்களை எழுதி, வாங்கி வரச் சொல்லி சரி செய்வான்.
“எப்படி இதெல்லாம் தெரியும்…’ என்றால், மிக இயல்பாக சொல்வான், “இதெல்லாம் பார்த்தாலே புரியுது…’ன்னு!
“”திறமை இருந்து என்னங்க பண்றது. தமிழ்ல விட்டுட்டான். திரும்ப எழுதி பாஸ் பண்ண ஒரு வருஷம் ஆயிடுமே,” லட்சுமி.
“”இல்ல லட்சுமி. வர்ற ஜூன்லயே எழுதி, இந்த வருஷமே பி.இ., சேர முடியும்.”
முகம் மலர்ந்தவள், “”நல்லதுங்க. ஆனா, தம்பி பாசாயிட்டான்னு சொல்லி வச்சிருக்கோம். பரீட்சை எழுதினா தெரியாதா?”
“”தெரியாது.”
“”தெரியாதா!”
“”திருச்சி – காசிநாதன்,” என்றார்.
லட்சுமிக்கு பாதி புரிந்தது. மணவாளனின் நெருங்கிய நண்பர். எது வேண்டுமானாலும் செய்வார்.
“”லட்சுமி… காசிகிட்ட மதியமே எல்லா விவரமும் பேசிட்டேன். மணிகண்டன் நாளைக்கே திருச்சி கிளம்புகிறான். ரீ-எக்சாம் எழுத, காசி எல்லா ஏற்பாட்டையும் பார்த்துக்குவாரு. அங்கிருந்தபடியே பாஸ் பண்றான். கவுன்சிலிங் அட்டண்ட் பண்றான்… பி.இ., ஜாயின்ட் பண்றான், ஓ.கே., வா?”
லட்சுமி… ஆச்சரியப்பட்டாள்.
“”எப்படீங்க? மணி இதைத்தான் பேசுவான்னு யூகிச்சு, முன்கூட்டியே உங்க பிரண்ட்கிட்டே பேசுனீங்க?”
“”லட்சுமி… ஏற்கனவே சொன்னேன், நம்மோட ஜெராக்ஸ் காப்பி தானே அவன். உள்ளே என்ன பிரதி, எண்ணம் ஓடுதுன்னு நமக்கு புரியாதா?”
மறுநாள் —
மணிகண்டன் கிளம்ப தயாராக நின்றான்.
“”மணி… இந்த எக்சாம்ல நீ பாஸ் பண்ணிடுவே. எனக்குத் தெரியும். நீ,பி.இ., படிக்க போறது உன் விருப்பப்படிதான். அதுமட்டுமல்ல… உனக்கு மியூசிக் பிடிக்கும். பி.இ., ஜாயின்ட் பண்ணிட்டு, ஈவ்னிங் டைம்ல மியூசிக் கிளாஸ்ல ஜாயின்ட் பண்ணு. நான் பணம் தர்றேன். தேவைப்பட்டா, சினிமா பத்தியும் தெரிஞ்சுகிட்டே வா. ஆனா, படிப்புதான் மெயின். நல்ல பர்சன்டேஜ் ஸ்கோர் பண்ணனும். சூழ்நிலையும், நேரமும் அமைஞ்சு, அந்த நேரத்துல உன் விருப்பத்தை பொறுத்து, தேவைப்பட்டா லைன் மாறிக்கலாம். ஆனா, படிப்புதான் ஆணிவேர்.”
நேற்றைய சோகம் மறைந்து, தெளிந்து காணப்பட்டான். “”வாழ்க்கை நல்லாவே புரியுதுப்பா. தெளிவா இருக்கேன்பா.”
லட்சுமி ஆனந்தப் பட்டாள். இதைப் போன்ற தகப்பன்கள் கிடைத்தால், தேர்வில் தவறும் குழந்தைகள், ஏன் தற்கொலை முடிவுக்கு போகின்றனர்?
சில நாட்களுக்கு பிறகு, திருச்சியிலிருந்து தொலைபேசி வழியே —
“”மணா நண்பா… என்ன ஆச்சுப்பா மணிக்கு? தமிழ் பாடத்தை போய் இந்த படி படிக்கிறான். எனக்கே பயமாயிருக்குப்பா. நைட்டு மூணு மணிக்கு எதேச்சையா எழுந்தா, அவன் ரூம்ல லைட் போட்டுக்கிட்டு செய்யுள் படிச்சிட்டிருக்கான். பகல்ல கொஞ்ச நேரம் ரிலாக்சா, “டிவி’ பாருன்னாலும், ஏதோ எனக்காக ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு, படிக்க கிளம்பிடறான். ஏன்… ரொம்ப திட்டிட்டீயா?” என்றார் காசி.
“”இல்ல…”
“”பின்னே? வேறென்ன தான் சொன்னே?”
“”உண்மையைச் சொன்னேன்!”

– நவம்பர் 2010

டி.வி.ஆர்.,  நினைவு  சிறுகதை  போட்டியில்  ஆறுதல் பரிசு  பெற்ற சிறுகதை-2

டி.ஜார்ஜ் வில்லியம்
வயது : 33
கல்வித் தகுதி : பி.எஸ்சி., கணிதம்.
பணி : ஆசிரியர்.
கதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது இவரது பொழுதுபோக்கு. ஆனந்த விகடன் இதழில், இவரது முதல் சிறுகதை வெளியானது. அதே இதழின், 70ம் ஆண்டு நிறைவு விழாவிற்காக நடத்தப்பட்ட படத்தொடர் போட்டியில், முதல் பரிசு பெற்றுள்ளார். கல்லூரி நாட்களிலும் பல கதை, கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு, பரிசு பெற்றுள்ளார்.                                ***

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *