தோழி செய்த புரட்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 4,862 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த சிற்றூர் இருப்பதை, இருகல் தொலைவிலேயே எடுத்துக் காட்டும்படி விளங்கிய ‘இரு நிலை’ மாடங்களைக் கொண்ட வீடுகளில் மிகப் பெரியதோர் வீடு அது. ‘வீடு’ என்று சொல்வதைவிட, மன்னன் அலுவல் பொருட்டு வருங் காலை, விறலியருடன் தங்குவதற்குத் தகுதியாகக் கட்டப் பட்ட மாளிகை போல் தோன்றியது அது. அதற்கு மேற்கு பகுதியில் பல்வகை கனி மரங்களைக் கொண்ட சோலையும், அங்கே பூத்துக் குலுங்கிய பல்வேறு மலர்களும் வீட்டின் எழிலுக்கு எழில் கூட்டின. இதரப் பகுதிகளில் இருந்த சிற்றில்களும், ஓலையால் வேயப்பட்ட கூரைகளைக் கொண்ட குடில்களும், அந்த வீட்டை , ‘பெருவில்கோ எனக் காட்டியது.

அத்தகைய வீட்டின் மேல் நிலை மாடத்தில், ஓர் ஓரத் தில் கட்டப்பட்டிருந்த அறைக்குள் கணைய மரக்கட்டிலில் படர்ந்திருந்த பிரப்பம் பாய் மேலே விரிந்த பட்டு மெத்தையில், ஒருக்களித்தவாறு படுத்திருந்த மருதி, மயிற்பீலியால் முகத்தை தடவிக் கொண்டிருந்தாள். பாதங்களில் கிண்கிணி மணியொலிக்கும் பரிபுரம் என்னும் பொன்னாபரணம், அவள் அ குமிங்கும் புரண்டு படுத்ததால், தாளத்திற்குக் கட்டுப் படாதது போன்ற ஒலியைக் கிளப்பியது. இதே போல் மார்பை மறைத்திருத்த கச்சையின் பின்புறம், முதுகிற்கு மேற்பகுதியில் கட்டப்பட்டிருந்த ‘சார்வாரம்’ என்னும் கச்சின் கடைக் கயிறு அவிழ்ந்து போயிருந்தது. கச்சையை மறைத்த வெண் துகில் துவண்டு போய் கிடந்தது. துகிலுக் கும், கச்சைக்கும் இடையே கழுத்தில் இருந்து தெருங்கிக் கொண்டிருந்த ஆரமும், தொங்கலும், தோளணியான அங்கதமும், காதணியான வல்லிகையும், அவற்றில் படிந்தி ருந்த வைரக் கற்களில் எண்ணெய் இறக்கியிருந்ததால், ஒளி குன்றி விளங்கின. அவள் நெற்றியில் இடப்பட்டிருந்த கலவைச் சாந்தில் பாதி கலைந்து தலை முடியையும் தடவிக் கொண்டிருப்பது போல் காட்டியது.

மருதி இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை . வெறி பிடித்தவள் போல் கட்டிலில் இருந்து எழுந் தாள். அறையில் இருந்து, அவள் வெளியே வந்தா . மாட முனைப்பின் தடுப்புச் சுவரில், தலையைக் குவித்துக் கொண்டு, சாய்ந்தவாறு கீழே வழிமேல் விழி விட்டாள்.

அங்கே –

கழுதைகளில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு உவணர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். நொய்ச்சிப் பெண்டுகள், தலையில் சுமந்து வந்த உப்பை, நெல்லுக்கு விலை பேசிக் கொண்டிருந்தார்கள் , சிறு சிறார்கள் , சிறு தேர்களை உருட்டிக் கொண்டிருந்தார்கள். சில செவிலித் தாய்கள், அச்சிறார்களின் கைகளுக்கு மேல் தம் கைகளை வைத்து, தேரைத் தள்ளினார்கள். இந்த முயற்சியில் முதுகு வலித்த சிலர், முதுகை வானத்தைப் பார்த்து வளைத்துக் கொண்டே, நெட்டுயிர்த்தார்கள் குறத்தி ஒருத்தி, கையில் ஒரு கோலுடன் வீதி வழியாகப் பாடிக் கொண்டிருந்தாள். இன்னொரு பெண் போரில் வீழ்ந்த துணைவனுக்கு, சாணத் தால் மெழுகிய தரையில், அருகம் புல்லைக் குத்திப் பிண்டம் வைத்துக் கொண்டிருந்தாள் சில மங்கையர் , சிற்றில்களில் நெற்குத்திக் கொண்டே பாடிக் கொண்டிருந்தார்கள்.

மருதி, இத்தனை கூட்டத்திலும் தனிமைப்பட்டாள். அவள், எதிர் நோக்கி ஏக்கத்துடன் இருந்த, அவளை ஆட் கொண்ட சேந்தன் அங்கே வரவில்லை. அவளுக்கு அழ வேண்டும் போலிருந்தது. மாடச் சுவால், அவன் பிரிவு நாட்களைக் காட்டும் அவளே வரைந்திருந்த கோடுகளைப் பார்த்தார். இருபது கோடுகள் இருந்தன. அந்தக் கோடு களை நோக்கிய வண்ணம் இருந்தாள். பிறகு, இருவரும் சந்தித்த சோலையைப் பார்த்தாள். அங்கே தெரிந்த கொன்றை மலர்களும், குரவம் பூக்களும், கோங்கு மலர்க் கொத்தும், வேரில் பழுத்த பலாவும் , விழுந்து விடுவது போல் குலை தள்ளிக் கொண்டிருந்த வாழைகளும், அவளுக்கு ஏக் கத்தை இன்னும் அதிகமாக ஏற்றின. அவைகளுக்கு மறை வில், அவனைச் சந்தித்த நாட்களை , தாகத்தை தணித்துக் கொண்ட மாலைகளை நினைக்க நினைக்க, அவளுக்கு ஆத்திரமும், அழுகையும், மின்னலிடி மழைபோல் வந்தன.

எப்படி எல்லாம் பேசியவன், இப்படி மறந்து விட்டான்! கண்களைக் குவளை மலர் என்று சொன்னவன, இப்போது அதை நீர்வார் கண்களாக்கி விட்டான். வளைகளைப் பிடித்து அங்குமிங்கும், உருட்டியவன், இப்போது அவை கையை விட்டுக் கழலும்படிச் செய்து விட்டான. அவள் மேனியை மாந்தளிருக்கு ஒப்பிட்டவன், இப்போது அதில் பசலை நிறம் பாயும்படி செய்துவிட்டான். கண்களை வேலென்று சொன்னவனே, அந்த வேலை, கூர்மையற்ற தாகும்படி செய்துவிட்டான்.

பின்னாளில் தோன்றிய கலிங்கத்துப் பரணியில் சொல் வதுபோல், ‘வருவான்’ என்று மாடச் சுவருக்கு அருகிலும், பிறகு ‘வரமாட்டான்’ என்று ஒதுக்குப் புறமாக இருந்த அறைக்குள்ளும் போய் வந்து கொண்டிருந்த மருதி, முடிவில் மாடச் சுவரில் போட்டிருந்த இருபது கோடுகளுடன் இன் னொரு கோட்டையும் போட்டுவிட்டு, துயரம் சோர்வாக, அறைக்குள் போய்க் கட்டிலில் விழுந்தாள்.

அவளுக்கு நினைக்க நினைக்க அச்சமாக இருந்தது. அவள் அன்னை , அவளுக்குத் திருமணம் செய்விக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறாள். குளிர்ந்த பந்தலின் கீழ், வெண் மணல் பரப்பில், மனைவிளக்கு ஒளிர, நற்பொழுதில், மங்கல மகளிர் நால்வர் அவளுக்கும் குடநீராட்டி, குலவை யிட்டு, வாழ்த்துக் கூறி, துந்துபி சங்குகள் முழங்க, காளை யின் கரத்தைப் பற்றுவதில் அவளுக்கும் ஆசைதான். ஆனால் அந்தக் காளை, சேந்தனாகத்தான் இருக்க. வேண்டும்.

அவனுடன் களவொழுக்கம் கொண்டதை , இன்னும் மருதி, தன் அன்னையிடம் சொல்லவில்லை. அவள், இவ ளுக்குச் சூட்டுக் கோலால் சூடு போட்டாலும் போடுவாள் என்று அஞ்சினாள். அதற்குக் காரணமும் உண்டு. அவள் தந்தை பூப்பெய்திய மகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் பரத்தை ஒருத்தியின் வீட்டில் சரணடைந்திருக்கிறான். இதனால் முதலில், அழுது, சுற்றத்தின் ஏச்சிற்கு அஞ்சி , அவன் தானாக வருவான் என்று நினைத்து, மணமுடிப்பில் மும்முரமாக இருக்கிறாள். மகளுக்கு ஒரு மகவு பிறந்து விட் டால், அவனும் சொந்த பந்த மரியாதை நிமித்தம் பரத்தை பால் செல்வதை விட்டு விடுவான் என்று நினைக்கிறாள். ஆக , அன்னைக்கு மகளின் மணமுடிப்பு, அவளுக்கு மட்டும் மணாளனைக் கொடுப்பது மட்டுமல்ல, தனக்கும் போனவனைத் திரும்பவழைக்கும் வியூகம் என்பது மருதிக்குச் செவ் வனே தெரிந்தது. இந்த நிலையில் பெற்ற தாயிடம் சொல்ல லாம் என்றால், அவள் சரியான செவிடு . தோழி பாவையோ செருக்கானவள்.

ஆனால் யாரிடமாவது நடந்ததைச் சொல்லவில்லையா னால், நடக்கப் போவது பயங்கரமாக இருக்கும் என நினைத் துத் தோழியை வரவழைத்து, அவளை சேந்தனிடம் தூது விடுவது என்று தீர்மானித்தாள். தோழி வீட்டின் அடுக் களைக்குப் போய்த் தன் அன்னையிடம் உரக்கப் பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு நன்றாகக் கேட்டது.

“அம்மா! பாவையிடம் பால் கொடுத்து விடு” என்று மாடத்தின் பின்புறச் சுவரில் சாய்ந்து கொண்டு கத்தினாள். அங்கேயிருந்து, அடுக்களை விவரங்களின் அணுக்களைக் கூடக் காணலாம்!

மருதி எதிர்பார்த்த நேரத்திற்குள் பாவை வரவில்லை. நிதானமாக , ஒரு கையில் பால் கொண்ட பொற் கிண்ணத் ணத்துடனும், மறு கையில் ஓலைச் சுவடியுடனும் வந்தாள். கிண்ணத்தை மருதியிடம் நீட்டிவிட்டி , கட்டில் தூணிற்கு அருகில் போடப்பட்டிருந்த ஓலைத் தட்டியில் அமர்ந்து கொண்டாள். கட்டில் தூணில் சாய்ந்து கொண்டே ஓலைச் சுவடியைப் புரட்டினாள்.

“பாவை பால் பருகுகிறாயா?”

“வேண்டாம்.”

“கையில் என்னது ஓலைச் சுவடியா”

“பார்த்தாலே தொயுமே?”

“ஓலைச் சுவடியென்று தெரியும்…. ஆனால்”

“சொல்லு”

“காதல் சுவடியா? காதலன் ஓலையில் கடிதம் வரைந்திருக்கிறானா?”

மருதி, தன் அறிவைத் தானே மெச்சிக் கொண்டாள். கடைசியில், காதல் பேச்சைத் துவக்கியாகிவிட்டது. சேந்தனைத் தொட்டு விடலாம்!

ஆனால் பாவை கொடுத்த பதில், சேந்தனை வெகு தூரத்திற்குத் தள்ளிக் கொண்டிருந்தது.

“இது காதற் சுவடியல்ல அம்மா! சோழ மன்னன் பேரவைக்கோ பெருநற்கிள்ளி, முக்காவனாட்டு ஆமூர் மல்லனை மற்போரில் வென்றதைப் போற்றியும் விளக்கியும் சரத் தந்தையார் எழுதிய பாடல்.”

மருதிக்கு வெறுப்பேற்பட்டது. எனினும் காரியத்தைக் கருதி, மேலும் மிகுதியாகப் புன்னகைத்தாள்.

“ஆமாம்….இது எப்படி உனக்குக் கிடைத்தது? புலவர் என்ன கூறுகிறார்?”

“என் இல்லில் இருக்கும் பல சுவடிகளில் இதுவும் ஒன்று. மல்லனின் மார்பு மீது கிள்ளி ஒரு காலை ஊன்றியதையும் அப்போது மல்லன் அவன் பிடியிலிருந்து மீள முயற்சித்த போது, மன்னன் இன்னொரு காலால் அவன் முதுகை வளைத்துக் கொண்டதையும், பின்னர் அவன் கால்களை யும், தலையையும் முறித்ததையும் இந்தப் பாடல் விளக்குகிறது.”

மருதிக்கும் இலக்கியத்திற்கும் வெகு தூரம். இருப்பினும், பாவையை மகிழ வைக்க வேண்டும் என்ற நோக்கில் பதிலளித்தாள்.

“படி , பார்க்கலாம்!”

பாவை. படித்தாள் மருதி தான் வியந்து போயிருப்பதாகப் பாவனை செய்து கொண்டே , “கவி நயமும், சொல் நயமும், ஓசை நயமும் கொண்ட அற்புத வரிகள். சரத்தாதை புகழ் மிக்க புலவர்” என்றாள்.

“சரத்தாதை இல்லை. சரத்தந்தையார்… நம் புலவர்களுக்கு, காதலையும், போரையும் தவிர வேறு விவரங்களே தெரியாது போலும்…”

“பாவை! பெரியோரைப் பழித்தல் தவறு.”

“இப்படிச் சொல்லியே , சுயமாய் சிந்திக்கும் திறனை இழந்து விட்டோம். மன்னரைப் பாடுவதும் காதலை மேன்மைப்படுத்துவதும் தேவைதான். ஆனால் அதற்கும் ஓர் அளவு வேண்டாமா? நம் போர்களில் புற முதுகிடுபவன் யார்? ஒன்றில் பாண்டியனாக இருப்பான். இன்னொன்றில் சோழனாக இருப்பான். வீரர்களும் நம்மவர்தான்; கோழை களும் நம்மவர் தான். இவற்றைப் புகழ்வதிலோ , இகழ் வதிலோ என்ன இருக்கிறது? களவொழுக்கத்தைப் பற்றிய பாடல்கள் இலக்கியச் சுவையில் ஈடற்றவைதான்; ஆனால் இவற்றைப் படித்து எத்தனை பெண்கள் கெட்டுப் போயிருக் கிறார்கள்? இலக்கிய இயல்படியும், மரபியல் படியும், களவொ ழுக்கத்தை வியந்து பாடலாம். ஆனால் உலகியலில் முடியுமா? பாடல்களில் வருகிறதென்று எவனையாவது காதலித்து, கடைசியில் பத்து மாத்துடன் பாவியாவது நாம் தான்; புலவர்களா?”

“பாவை! காதல் புனிதமானது. உனக்குத் தெரியாது. அது கடலைவிடப் பெரியது. வானைவிட உயர்ந்தது.”

“இதுவும் ஒரு புலவர் பாட்டில் வருவது தான். எவனோ சொன்னதைக் கேட்டு நீ ஒப்புவிக்கிறாய் …. அவ்வளவு தான்.”

“நீ என் அறிவைப் புண்படுத்துகிறாய்.”

“புண்படுத்தவில்லை அம்மா…. புரிந்ததைச் சொல்கிறேன். என் சுற்றுப்புறத்தை நான் சிந்திக்கத் துவங்கியதும், எனக்கே வியக்குமளவிற்குப் பல புதிய புதிய உண்மை புலப் படுகின்றன. எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பவன் அறிஞன்; அவன் விவரங்கள் கொண்ட யந்திரப் பொறி இவனால் யாரும் உருப்படப் போதில்லை. ஆனால் சிந்தனை யாளன், ஒரு தனிச் செம்மல் கருவிலே அறிவுடையார் என்று யாருமில்லை. அடி நிலை மனிதனுக்கும், மேம்பட்ட மனித னுக்கும் உள்ள வேறுபாடு , அவர்கள் தம் சிந்தனைத் திறனை எந்த அளவிற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது; அறிவில் அல்ல.”

மருதி உண்மையிலேயே குழம்பிப் போனாள். அவள் களவொழுக்கத்தைப் பற்றிச் சொன்னபோது குறுக்கிட்டு , சேந்தனைப் பற்றிச் சொல்ல வாயெடுத்தாள். ஆனால், பாவை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், களவொழுக்கத்தையே விட்டு விட்டாள். இதனால் ஆதங்கப் பட்ட மருதி, “உனக்கு வாய் அதிகம்” என்றாள்.

“வாய் அதிகம் இல்லை அம்மா; சிந்தனை அதிகம்…நம் புலவர்களின் பாடல்கள், தனிப்பட்ட அகந்தையைத் தீர்க்கத் துடிக்கும் இயல் வேந்தர்களுக்கு வெறியூட்டுகின்றன. ஒரு புலவன் ஒரு மன்னனைப் புலியென, இன்னொரு புலவன் பிறிதொரு மன்னனைச் சிங்கமென, இரு மன்னர்களும் தாங்கள் புலவர்கள் கூற்றுப்படி விலங்குகள் தான் என்று மெய்ப்பிப்பது போல் போரில் ஈடுபடுகிறார்கள். இதனால் ஏதுமறியா மக்கள் உயிரிழக்கிறார்கள். பிறகும் நம் புலவர்கள் ஒப்பாரி வைக்கிறார்கள்.”

“நம் புலவர்கள் வேறு பொருட்களைப் பாட வில்லையா?”

“பாடியிருக்கிறார்கள். கல்வியைப் பற்றியும், ஆட்சி முறை பற்றியும், பலர் குறிப்பாக பிசிராந்தையார் போன் றோர் பாடியிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலோர் காதலை யும், போரையும் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடுகிறார்கள். இது அவர்கள் தவறு அன்று. நம் புலவர், அறிஞர்கள் சிந்தனையை அறிவுக்கு உட்படுத்தியதால் விபரீ தக்கற்பனை களும், பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத பாடல் களும், ஓர் அனிச்சைச் செயலாக ஆகிவிட்டன. ஆனால் பிசிராந்தையார் போன்று, அறிவை சிந்தனைக்குப் பயன் படுத்தியவர் மிகச் சிலர். தலைவன் அழகனாய் , வீரனாய் இருக்க வேண்டும் என்றும், தலைவி பேரெழில் கொண்ட வளாய் இருக்க வேண்டுமென்றும் இலக்கியங்களுக்கு வரம் பிட்டுக் கொண்டார்கள். ஊமையைத் தலைவியாக்கிய புலவன் உண்டா? நொண்டியின் ஏக்கத்தைத் தெரிவிக்கும் பாவலன் உண்டா ?”

“பாவை…. பிஞ்சில் பழுப்பது நன்றன்று!”

“பிஞ்சாய் இருப்பதும் நன்றன்று. மக்கட் தொகுதி என்பது, நிலைத்த ஒன்று. மனிதர் வருவர், போவர். ஆனால் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்று. அது குட்டையில் தேங்கிய நீரல்ல. மாறாக அது ஊழிக்கடலையும் ஊடுருவி ஓடிக் கொண்டிருக்கும் ஆறு. ஆறு வற்றினாலும், கூடினாலும் அது தேங்கக் கூடாது. அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். நம் இலக்கியங்கள், இந்த ஆறுக்கு அணை போடுவது போல், மன்னர்களை தகுதிக்கு மீறிப் புகழ்வதும், காதலை இயல்புக்கு மீறி விளக்குவதுமாக உள்ளன.”

“இலக்கியச் சுவையை மட்டும் ரசித்தால் போதாதா?”

“இனிப்பு சுவைக்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி உண் டால், குடலில் தான் நம்மை அறியாமல் பூச்சிகள் உண்டா கும். இன்று புலவர்கள், போர்களையும், காதலையும் அளவுக்கு மீறிப் பாடிவிட்டார்கள் . ஈராயிர ஆண்டுகளுக்குப் பின்னர் நம் சந்ததியினர் இந்த இரண்டையும் மட்டும் பிடித்துக் கொண்டு பழைமை மீட்பு வாதத்தில் இறங்கலாம்! இதனால் இதர மக்கட் தொகுதிகள் வரும்போது, நம்மவர்கள் மனத்தாலும், செயலாலும் பின் தங்கிப் போவார்களோ என்று அஞ்சு கிறேன். இக்காலத்தில் தமிழர்களாகிய நாம், சீனரைவிட , யவனரைவிடச் சிலவற்றில் மேலோங்கியும், சிலவற்றில் இணையாரவும் திகழ்கிறோம். எனினும், இன்றை நாளில் தோன்றும் அரச வழிபாடும், போர் நிலைப் பாடல்களும், பின்னால் தோன்றும் இலக்கியங்களுக்கு வெறுமனே ஆரவாரத்தைக் கொத்து விடலாம். இதனால் பல்லாண்டு காலத்திற்குப் பின்னர் வரும் நம் சந்ததியினர் நுனிப்புல் மேய்பவராகி, பின் தங்கிப் போவதுடன், இந்த உணர்வு மயமான, அறிவு வாய்ப்படாத இலக்கியங்களைச் சுட்டிக் காட்டி, சில சுயநலமிகள் மக்களைக் கள்ளுண்ட நிலையில் வைக்கலாம். இதுவே எனது அச்சம்.”

“பாவை! நீயும் நானும் பேதைகள்…. பெரியவர்களைப் பற்றிப் பேசப் பக்குவம் இல்லாதவர்கள்.”

“நானே சில சமயம் இவ்வாறே நினைக்கிறேன். ஆனால் முருகன், தந்தைக்கே பிரணவத்தை உபதேசித் தான் என்று புலவர்கள் புளகாங்கிதமாய்ச் சொல்லும்போது, நமக்கும் உபதேசிக்கும் தகுதி ஏன் இருக்கக் கூடாது என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.”

“யவன நாட்டுடனும் , இதர நாடுகளுடனும் ஒப்பிடுகை யில் நம் நானிலம் சாலச் சிறந்த நாடு.”

“தமிழ் இலக்கியத்தையே முழுக்க அறியாத உங்களைப் போன்றவரின் கேணித் தவளைத்தனமான வாதமிது. நம்மைப் போல் யவனரும் முன்னேறியுள்ளனர். நாம் சோதி வட்டக் கணக்கீடு செய்வது போல், அவர்களும் பல பொறி களைக் கண்டு பிடித்துள்ளனர். நாம் இந்த நாட்டில் பிறந்து விட்ட ஒரு காரணத்தால், நாட்டைப் போற்றி, நம்மை அறி யாமலே நம்மைப் போற்றுவது, நம் குறைபாடுகளை மிகுதி யாக்கி, தகுதிகளைக் குறைத்துவிடும். சொல்லப் போனால் நாட்டுப்பற்று சுயநலமிகளின் தமிழ் – வணிகத்திற்கும் நாம் முன்னேறாமல் முடங்கிக் கிடக்கவும் காலப் போக்கில் ஒரு வெறியாகி நம்மவர்களைக் குட்டை நீராய் ஆக்கி விடலாம்.”

மருதியால் பொறுக்க முடியவில்லை. இப்படியே பேச்சுத் தொடர்ந்தால், சேந்தன் நிகழ்ச்சி என்னாவது! ஆகையால் அவளே வாய் விட்டாள்:

“பாவை! நான் வளை கழன்று, பசப்புப் பட்டுக் களைத்து இளைத்துப் போயிருக்கிறேனே! ஒரு சொல், ஏன் என்று கேட்டாயா?”

“ஏன்?”

“உனக்குத் தெரியாத ஒன்றை நான் சொல்லப் போகிறேன். ஒரு சமயம், காட்டினின்று வேடனிடமிருந்து தப்பித்த புலி ஒன்று, நம் வயல் வெளிகளில் உலவியதாக வந்த செய்தி உனக்குத் தெரியுமா?”

“தெரியுமாவது? ஆடவரின் வீரத்தை..இல்லை – வீரவுணர்வைச் சோதிப்பதற்காக நான் தானே அந்தப் புரளியைக் கிளப்பி விட்டவள்?”

“அடி கள்ளி நீதானா?….அப்படியானால் நீதான் என் காதல் நோய்க்கும் காரணம் சொல்வதைக் கேள். அந்த ஓலைச் சுவடியைக் கீழே எறி. ஒரு நாள் வயற் கேணியில் நீராடச் சென்றிருந்தேன். அப்போது ஒரு கட்டிளங்காளை என்னையே உற்று நோக்கினான். நான் அவனைச் சினங் கக்க பார்க்க நினைத்து நோக்கினால், என் அதரங்கள் என்னை மீறி புன்னகைத்தன. கண்கள் அறிவை மீறி நிலம் நோக்கின. இதனை அறிந்த அக்கள்வன் மகன் என்னருகே வந்து, இங்கே வேங்கை ஒன்று வெறியில் அலைகிறதாம். அதை நீ பார்த்துவிட்டால், உடனே கூவவும். நான் அண்மை யில் தான் இருக்கிறேன். உடனே வந்து புலியுடன் பொருதுகி றேன்’ என்று சொல்லிவிட்டு போய் விட்டான். நானோ தனி மையில் தவித்தேன். அவன் தோள்களை நோக்கி கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது. அவனை என்பால் இழுக்கும் பொருட்டு ‘புலி புலி’ என்று பொய்யாகக் கத்தினேன்.

“அவன் என் குரல் ஓயுமுன்னே வந்துவிட்டான் பொல்லா மகன் , மிக அண்மையிலேயே இருந்திருக்கிறான்! வந்தவன் என் அன்பால் எழுந்த பொய்மையைப் புரிந்து கொண்டாலும், உண்மையிலேயே அதிர்ந்தவன் போல் அரி வாளை ஒரு கையில் ஓங்கிக் கொண்டே , என் அருகில் வா , இல்லையெனில் அதோ நிற்கிற புலி உன் மீது பாய்ந்துவிடும்’ என்று சொல்லிக்கொண்டே என்னை இழுத்துத் தன் மார் போடு அணைத்துக் கொண்டான். என் பயத்தைத் தெளி விப்பது போல் பாவனை செய்துகொண்டே என் கன்னங் களை வருடினான். முதுகைச் செல்லமாகத் தட்டினான்.”

“அப்புறம்?”

“போடி…. அப்புறம் இந்தச் சோலையில் சந்தித்த இரவு கள் ஏராளம்… இருபத்தோரு நாட்களுக்கு முன்பு பிரிந்தவன் திரும்பவில்லை . நானும் என்னிடம் இல்லை . என்னடி?… பிள்ளையார் மாதிரி பேசாமல் இருக்கிறாய்?”

“எனக்குத் தெரியும்?”

“சேந்தனைத் தெரியுமா? எப்படி?”

உன்னை விட…. அவனைப் பற்றி அதிகமாகத் தெரியும்.”

“ஏண்டி …. உண்ட வீட்டுக்கே நீ?….”

“வாயை மூடும்மா – உன்னவனை விட என்னவன் வசதியில் வறியவனானாலும், வாழும் நெறியில் குறைந்தவனில்லை”

“நீ என்ன சொல்கிறாய்?”

“என்னவனான வானவரம்பனிடம் சேந்தனின் தோழன் சொன்னானாம். நான், நேரில் அறிய சோலைக்கு வந்து உங்கள் திருவிளையாடலைப் பார்த்தேன்.”

“நீ பார்க்கலாமா? தப்பில்லையா?”

“தப்போ தவறோ? அந்தக் காதற் காட்சியைப் பார்த்ததும் ஒரு பலன் கிடைத்தது ”

“என்னது?”

“உங்கள் விளையாட்டைப் பார்க்கப் பார்க்க, எனக்கு பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது. ஏன் என்று சிந்தித்தேன். பிறரின் மென்மையான நிகழ்ச்சி களை அறிய, எல்லோரும் ரகசியமாக விரும்புகின்றனர். இந்த ரகசியத்தைப் பகிரங்கமாக ரசிக்கத்தான் ‘கூத்து’ என்ற ஒன்றைக் கண்டு பிடித்திருக்க வேண்டும். முதலில் கூத்தைக் கண்டு பிடித்தவன், என்னை மாதிரி , பிறர் ஈடு பாட்டை மறைந்திருந்து பார்த்து ரசித்தவனாகத்தான் இருக்க வேண்டும்!”

“ஆராய்ச்சி போதுமடி…. சேந்தனை அண்மை நாளில் பார்த்தாயா?”

“பார்த்தேன். பரத்தை ஒருத்தியுடன் புனலாடியதை!”

“அம்மா…அய்யோ..என் மனம் என்ன பாடுபடுகிறது? ஏமாந்து விட்டேனோ?…அவனை நல்லவனென்று நம்பி வீட்டேனே பாவை! அவனை எப்படியாவது நீ சந்தித்து என் நிலைமையை விளக்க வேண்டும். செய்வாயா?”

“உன் நிலைமை என்ன?”

“நீயும் பெண் தான் புரிந்து கொள்ள வில்லையா? ஒருவனைத் தொட்டுவிட்டு, இன்னொருவனைத் தொடலாமா?”

“கவலைப்படாதே…சேந்தன் பரத்தையுடன் காவிரிப் பூம்பட்டினம் ஏகியிருக்கிறான். இதை, அவன் தோழன் கழாத்தலையன் , என்னவர் வானவரம்பனிடம் சொல்லியிருக்கிறான். கழாத்தலையன், நாளை மறுநாள் சேந்தனைத் திருப்பிக் கொணர, அவன் பெற்றோர் பொருட்டுச் செல்கிறான்.”

“பாவை! நீ எப்படியாவது கழாத்தலையனைப் பார்த்து விளக்க வேண்டும். சிந்தித்துப் பார்….உன் வானவரம்பன் உன்னைவிட்டுப் பிரிந்தால் உனக்கு எப்படி இருக்கும்? எப்படித் துயரப்படுவாய்?”

“துயரப்பட மாட்டேன். ஏனெனில் எங்கள் காதல் அறிவின் பால் பட்டது. உன்னதைப்போல் உணர்வின் பால் பட்டது இல்லை. நானும் அவனும் சந்திக்கும் வேளையில், நான் நமது மக்கட் சக்தியை வலுப்படுத்தி, மன்னன் சார் பைக் குறைக்க வேண்டும்’ என்பேன். அவனோ, ‘யவன நாடு மாதிரி நம் நாடும் சீரழிந்து போகு மென்பான். பின்னர், மன்னனுக்குத் தனி ஒளி இருக்கிறது; அவன் புறத்தே சென் றாலும் அந்தப்புரம் சென்றாலும், அந்த ஒளி நாட்டை ஆள் கிறது’ என்பான். நான் இது பயனில் கொள்கை. மக்கள் சக்தி முன் மன்னர் சக்தி தூளாகும்’ என்பேன். உடனே அவன் கோபப்பட்டு வாளாதிருப்பான். நான் உங்கள் ஒளியை விடவா மன்னனுக்கு ஒளி?’ என்பேன். உடனே என் கன்னத்தைக் கிள்ளுவான். நானும் அதில் தோற்றவன்; இதில் வெல்லட்டும்?’ என்று சிறிது நேரம் உடன்படு வேன். சிறிது நேரம் மட்டும் தான்!”

“உன் பிலாக்கணம் இருக்கட்டும்…கழாத்தலையனை எப்பொழுது சந்திப்பாய்?”

“பிரிந்து போனது உன்னவன். நீதான் கழாத்தலையனைப் பார்க்க வேண்டும்.”

“நான் குலமகள். கற்புக் கடன் பூண்டவள் நான். அந்நியன் ஒருவனைப் பார்ப்பது அழகா?”

“அப்படியானால்…..கழாத்தலையன் எனக்கும் அந்நியன். நான் மட்டும் சந்திக்கலாமா? நான் மனித குல மகளில்லையா?”

“அது வந்து உன் நிலையில் இருப்பவர்கள் சந்திக்கிறார்கள். நீயும் சந்திக்கலாம்.”

“இதனால் தான் நான் புலவர்களைச் சாடினேன். தலைவி, தலைவனின் தோழனைச் சந்தித்து, நினைத்த தை எடுத்தியம்பியதாகக் காட்டாத கவிஞர்கள், தோழியை மட்டும் தலைவனையோ, அவன் தோழனையோ சந்திப்ப தாக வர்ணிக்கிறார்கள். இது முழுமையான இரட்டை வேடம். தோழிக்கு ஒரு கற்பு, தலைவிக்கு ஒரு கற்பா? கற்பென்பது சமுதாய ஏற்றத் தாழ்வுகளுக்குத் தக்கபடி இருக்கக் கூடியதா? என்னம்மா இது?”

மருதி பொறுமை இழந்தாள். கணைய மரக்கட்டிலைப் பார்த்தாள். மயிற் பீலியைப் பார்த்தாள். மாடச் சுவரையும், தன் இரு நிலை மாட வீட்டையும் பார்த்தாள். அணிந்திருந்த பொன்னாபரணங்களைப் பார்த்தாள். பிறகு இவை எதுவுமே இல்லாத, கருகுமணி மாலையும், முரட்டுச் சேலையும் அணிந்திருந்த பாவையைப் பார்த்தாள்.

“பாவை வெங்கர்களுக்கு வீறாப்பு அதிகம் என்பது உண்மை போலும்! நீ எங்களை அண்டிப் பிழைப்பவள். என் நிலை வேறு. உன் நிலை வேறு. நீ கழாத்தலையனைப் பார்ப்பதில் தவறில்லை.”

“மருதி! நீ இவ்வளவு தொலைவுக்கு வந்ததால், நான் உனக்கு இனிமேல் தோழியாக இருக்கப் போவதில்லை. இருந்தாலும் பழகிய பாசத்திற்காக உன் பொருட்டு ஒன்று சொல்ல விரும்புகிறேன்:

“சமூகத்தில் மேல் நிலையில் இருப்பதால் அது பெருமைப் படத் தக்கது மன்று. கீழ் நிலை வெறுக்கத் தக்கதுமன்று. உறையூரில் இருந்து சோழ நாட்டை ஆண்ட தீத்தனைப் பற்றி அறிந்திருப்பாய் என்று நினைக்கிறேன். அவன் மகன் பெருநற்கிள்ளிக்கு செவிலித்தாயாக இருந்த காயற்பெண்டு என் அய்யாமை (பாட்டி) . தித்தனுக்கும் கிள்ளிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னவன் பட்டத்துக்குரிமை இழந்து அலைந்தபோது அவனுக்காக உதவி செய்ய முயன்றவள் காவற் பெண்டு. இதனால், தித்தனின் சினத்திற்கு ஆளாகி, இங்கே வந்து குடில் போட்டுத் தங்கியவள் அவள். அவள் நினைத்திருந்தால் கிள்ளி பட்டமெய்தியதும், அவனை அணுகி உதவி பெற்றிருக்கலாம். ஆனால் அவள் தான் இருக்குமிடத்தைத் தெரியப்படுத்தவே இல்லை. என் மகனை இங்கே தேடினால் எப்படி! அவன் ஏதாவது ஓர் போர்க்களத்தில் இருப்பான் போய்ப் பார்’ என்று மரத்தோடு சாடிய அவள் பாட்டைப் பலர் மெச்சினாலும், நான் வெறுக்கிறேன். என்றாலும், அவள் கொள்கையின் நிமித்தம் சுய மதிப்பிற்காகவும் வளர்ப்பு மகனிடமே உதவி நாடாதவள். இதனால் பெருமிதப்படுகிறேன்.

“ஆனால் உன் தாய்வழி அன்னையான நக்கண்ணை யார், பெருநற்கிள்ளிமீது பெருங்காமம் கொண்டு கைக்கிளைப் பாடல்களைப் பாடியவள் . கிள்ளி எதிரியான மல்லனின் தலையை முறிக்கும் போதே, அவனைக் கட்டித் தழுவ நினைத்ததாய் காம மயக்கத்தில் பாடியவள். கிள்ளி அவ ளைக் கழித்து காட்ட வேண்டும் என்பதற்காக, இவ்வூரில் அவளை குன்றேறி நிற்க வைத்து, கண்பட்ட தொலைவு வரை இருந்த காணியையும் பொற்றாமரையையும் கொடுத் தான். இப்படி வந்த சொத்து தான் உன் குடும்பத்தினது.

“காம உணர்வுகளை வெளியே காட்டிப் பலன் பெற்ற ஒருத்தியின் பேத்தி நீ பாச உணவுகளையே அடக்கிப் பலனை எதிர்பாராமல் வாழ்ந்த ஒருத்தியின் பேத்தி நான்.

“இதனால் நீ வழுவணங்காய்த் துவையலுடன், நெய் கலந்த நல்லரிசிச் சோறையும், நான் புல்லரிசிக் கூழையும் உண்கிறோம். ஆனால், இதன் பின்னணியைப் பார்த்தால், நான் பெருமிதப்பட வேண்டும். நீ வெட்கப்பட வேண்டும். இப்போது சொல் – பொருளியல் அடிப்படையில் கற்பு நிலை வரையறுக்கப்பட வேண்டுமா?”

மருதியால் பதிலளிக்க முடியவில்லை . ஆகையால் கோபம் கொப்பளிக்க, பாவையைச் சினந்து பார்த்தாள். பாவை மேலும் பேசினாள்.

“மருதி உனக்காக, நான் துயரப்படுகிறேன். முறத்தில் நெல் வைத்து, கட்டுவிச்சியை வரவழைத்து, நிமித்தம் பார்க்கவே நீ அஞ்சுகிறாய் என்பது தெரியும். ஒரு படி நெல்லும், தலைக்கு எண்ணெயும், கந்தலாடை ஒன்றும் கொடுத்தால் போதும். கட்டுவிச்சி வருவாள். ஒரு வேளை , “சேந்தன்கிட்ட மாட்டான்’ என்று காடுவிச்சி எதிர் மறை யில் இயம்பி விட்டால் அதைத் தாங்க முடியாதே என்று தவிப்பவள் நீ. உன் வேதனை எனக்குப் புரியும்.”

“ஆடு நனைவதற்கு ஓநாய் கவலைப்பட்டது போல…… இல்லையா பாவை?”

“வார்த்தைகளை மிதமிஞ்சி விடாதே. தோழிக்கு ஒன்று, தலைவிக்கு ஒன்றென இரு வேறு கற்பு நிலைகளை அறியாமலே பாடும் புலவர்களையும், மக்கட் தொகுதியை யும் வெறுக்கும் நான், உன் நிகழ்வை ஒரு சமூக நோயாகக் கருதுபவள். என் இப்போதைய எதிர்ப்பை எவராவது ஒரு புலவர் , இலக்கியப் பாவாக்கினால், நம் பிற்கால சந்ததியர் சிந்திக்க வாய்ப்பேற்படும். எவராவது பாடுவரா? அப்படிப் பாடினால் அது சங்கமேறுமா என்பது ஐயமே! போகட்டும்

“இறுதியாய் ஒன்று, இது உன் நிகழ்வு; ஆகையால் நீதான் கழாத்தலையனைப் பார்க்க வேண்டும். உன் பொருட்டு, பழகியதற்காக ஒன்று வேண்டுமானால் செய் கிறேன். உன்னோடு நானும் வருகிறேன். உனக்கு நாண மாக இருந்தால், நானே வாதாடுகிறேன். அப்படியும் சேந்தன் மனம் மாறவில்லையானால், வானவரம்பனை விட்டு , உன்னவன் எலும்பை முறிக்கச் சொல்கிறேன். ஆனால் எதற்கும் நீ உடனிருக்க வேண்டும். இன்னும் மூன்று நாழிகை நேரம் கொடுக்கிறேன். சிந்தித்துச் சொல்…”

பாவை உணர்ச்சிப் பிழம்பாகப் பேசி , பின்னர் சந்தனம் போல் குளிர்ந்து படியிறங்கிப் போய்விட்டாள். அவள் நிமிர்ந்த தலையையும், நேரான நடையையும் மருதி பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அவள் சொன்னது மருதிக்கு சினத்தைக் கொடுத்தாலும். சிந்திக்கவும் வைத்தது. கழாத்தலையனைப் பார்க்க, பாவையுடன் போகலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

என்றாலும், அவள் என்ன முடிவெடுத்தாள் என்று தெரியவில்லை. காரணம், எந்தப் புலவரும், அதைப் பற்றிப் பாடியதாகத் தெரியவில்லை.

– பூநாகம் (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1993, கங்கை புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *