கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 22, 2024
பார்வையிட்டோர்: 396 
 
 

(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம்-13

ஒவ்வொரு நாளும் நாகமநாயக்கரின் வேகம் வளர்ந்து கொண்டே போனது. விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தகர்த்து சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடையைச் சரித்து அவரது மணிப்பூண் மார்பை உடைத்து அவர் தலை யில் மின்னும் அருமணிப் பொன் முடியைத் தனது அருமைச் செல்வன் விசுவநாதன் தலையில் சூட்டி மகிழ வேண்டும் என்று ஒவ்வொரு வேளையிலும் நினைத்து நெஞ்சம் குளிர்ந்தார். 

பாண்டிய மண்டலம் பசுமை நிறைந்தது. வாளோடு வாள் சேர்த்து, வேலோடு வேல் பொருதி வளத்தைச் சேர்த்தது. தென்னம்பாளையில் தேன்கானும் செழுமைகொண்டது. ஆற்று மணலில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் அரும்புகளும் முத்துக்கள் போல் எழிற்காட்சி தரும். தென்னவன் நாடு தேன்பாயும் நாடு என்று புகழாத புலவர்கள் இல்லை – பாண்டியர் படையில் யானைப் படைக்குத் தனிச்சிறப்பு உண்டு. எதிரியின் கோட்டை வாசலை ஒரு கொம்பால் இடித்துத் தள்ளி,மறு கொம்பால் எதிரியின் மார்பைத் துளைத்து வீழ்த்தும் பேராற்றல் தென்பாண்டி நாட்டின் யானைப் படைக்குத்தான் உண்டு என்கிறார்கள் தமிழ்ப் புலவர்கள். இவ்வளவு வீரமும் வளமும் கீர்த்தியும் கொண்டு விளங்கும் பாண்டிய நாட்டை யும் வென்று விஜயநகரத்தோடு இணைத்துத் தனது செல்வக் குமாரனை மன்னர்க்கு மன்னனாக்கி மனநிறைவுபட யாருக்குத் தான் ஆசை இருக்காது! அதுவும் அவரது மகனோ எல்லா வகையிலும் தகுதியுடையவனாகத் திகழ்பவன். எதிர்காலத் தில் தன்னையும் மிஞ்சி விடுவான் என்று நாகமநாயக்கர் வடக்கே இருந்து முரசொலி கேட்கிறதா என்று செவியைத் திருப்பிய வண்ணமே இருந்தார். 


ஒரு நாள் காலை வேளையில் – சேவல் கூவிய பிறகு வடக்கே இருந்து முரசு முழங்கியது. போர்ச் சங்கு ஒலித் தது. ஆர்த்தெழுந்து வந்து கொண்டிருந்த விஜயநகரப் படையின் ஆர்ப்பாட்ட இரைச்சல் கூடல் மாநகரத்தைக் குழப்பியது. நாகமநாயக்கர் உற்சாகத்தோடு, எழுந்து பொதிகைமலை சந்தனம் பூசி, பூரிப்போடு ஆயுதம் தாங்க சித்தமானார். ஒரே நாளில் விஜயநகரப் படையை அடித்து நொறுக்கிவிட்டு வெற்றிக்கொடியை ஏற்றிவிட வேண்டு மென்று அவர் துடியாய் துடித்துக் கொண்டிருந்தவரல்லவா! அதனால்தான் அவரே முதல் நாள் போருக்கு தலைமை யேற்றுப் போவதாக முடிவு கட்டியிருந்தார். அவருடைய மனைவி மங்கம்மா கண் கலங்கியிருந்தாள். நாகமர் வீரத்தில் என்றுமே அந்த திருவாட்டிக்கு நம்பிக்கை உண்டு. தனது கணவன் இமயமே எதிர்த்தாலும் எதிர்த்து நிற்கும் தோள் வலிமை பெற்றவர் என்று அவள் பன்னெடுங்காலமாகவே உணர்ந்து வந்திருப்பவள். ஆனால் இந்த முறை எதிர் முகாமில் நிற்பது விஜயநகரப் படையல்லவா? யாருக்கு யார் பகை? யார் தோற்றாலும் நாயக்க வம்சத்திற்கல்லவா இழுக்கு?- என்று அந்த பெண் உள்ளம் தாக்குண்டு சற்று நிலைத்துப் போய் விட்டது. 

“மங்கா, நீயுமா கலங்குவது? நீதியையும் நியாயத் தையும் பார்த்துக் கொண்டிருக்க இப்போது நமக்கு நேர மில்லை! நாம் தொடுத்திருக்கும் போர் ஒரு புனிதமான மகா யுத்தம். விஜயநகரத்தை எதிர்த்து உன் கணவன் களத்தில் குதிப்பது நன்றிகெட்ட செயல் என்பார்கள், அடிமை விரும்பிகள். அடிமேல் அடியை வாங்கிக் கொண்டிருப்பது தான் நன்றியுணர்ச்சி என்றால் நாம் நன்றி கெட்டவர்களாக மாறிவிடுவது ஒன்றும் பாவகாரியமாகி விடாது. இன்று நாம் போர்தொடுக்காவிட்டால் என்றாவது ஒரு நாளைக்கு நமது செல்வனைப் பாதாளச் சிறையில் போட்டுக் கொன்று விடுவார்கள். உனக்கு, நன்றி மிக்கவர்கள் என்ற பட்டம் வேண்டுமா, நமது மகன் விசுவநாதன் வேண்டுமா? மங்கம்மா என்மனத்தைக் குழப்பாதே; என் வலிமையை அரிக்காதே! என் கோபத்தைக் குலைக்காதே! போய் விடு! நான் இனிப் பொறுக்க மாட்டேன்” என்று மாளிகைக் குள்ளே வீரக்கனலைக் கக்கினார் நாகமர். 

மங்கம்மாவின் கண்களும் நெருப்பாகி விட்டன. கணவனின் அக்னிக்கோபத்திற்கு தூண்டுகோலாகிவிட்டாள். உலகத்தில் மகனுக்கு மிஞ்சியது எதுவுமில்லை என்று கொக்கரிக்கக் கிளம்பிவிட்டாள். அந்தக் கொக்கரிப்பில் ஆவேசமும் ஆணவமும் போட்டியிட்டு வெளிக்கிளம்பின. முதுமையின் தளர்ச்சி பறந்துவிட்டது. புது ரத்தம் ஓடும் யுவதியைப் போல் இங்கும் அங்கும் ஓடினாள். வாளை எடுத்துப் புருஷனுக்குப் பூட்டினாள். கேடயத்தைத் துடைத்துக் கொடுத்தாள். வாளுக்கு உரை தேவை இல்லை என்று எடுத்துக் கொண்டாள். ஆரத்தி எடுத்து வர உள்ளே ஓடினாள். அப்போது சோழவந்தானிலிருந்து நாகமரின் ஒற்றன் தலைதெறிக்க ஓடிவந்தான். அவனால் பேச முடியவில்லை. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. வார்த்தைகளைக் கடித்துத் தின்றுகொண்டே பேசினான். 

“சொல்லவே நா கூசுகிறது அதிபரே! ஜெகத்திலே எங்கெணும் காணாத சதி நடந்துவிட்டது. விஜயநகரப் படையைத் தங்கள் மைந்தனே நடத்தி வந்திருக்கிறார் ஐயனே!” என்று ஒற்றன் ஒப்பாரி வைத்துக் கதறினான். 

ஒரே மின்னல் வீச்சில் உலகமே கருகிப் போய் விட்டதைப்போல் தெரிந்தது. கண்கள் ஒரு நிலையில் இல்லை. “மங்கம்மா! மங்கம்மா? பார்த்தாயா கொடுமையை! துடித்துக் கிளம்பிய என்னை உன் மகன் தூரோடு சாய்த்து விட்டான். என்ன செய்யப்போகிறேன் மங்கம்மா. நாகமன் சரித்திரத்தில் பழுது பட்டுவிட்டது. நாடும் ஏடும் புகழ்ந்த உனது வீரக்கணவன் கண்கலங்கும் காலமும் வந்துவிட்டது கண்மணி” – என்று மாவீரர் நாகமர் சிறுபிள்ளையைப் போல் கண்ணீர் வடித்தார். உள்ளே சென்ற மங்கம்மா வெளி வரவில்லை. நாகமர் போட்ட இரைச்சலில் மயக்கமுற்று உள்ளேயே சாய்ந்து கிடந்தாள். அவளால் சமாதானம் கூறமுடியுமா? அவள் யாருக்காக யாரிடம் சமாதானம் கூறுவாள்! ஒரு பக்கம் கணவன்; மறு பக்கம் சீராளன். கனிந்த அவள் உள்ளம் இறுகிப் போய் சாரத்தைக் கண்ணீர் வடிவத்தில் உதிர்த்தது. அந்தக் கண்ணீருக்குக்கூடத்தான் எந்தப் பக்கம் என்று தெரிவிக்கத் திடமில்லை. அது இருந் தால் அந்தக் கண்ணீருக்கு மதிப்புமில்லை. கோபத்தால் உதிரும் கண்ணீரைவிட வேதனையால் உதிரும் கண்ணீரைத் தான் உலகம் மதிக்கிறது. அதற்குச் சக்தியுண்டு என்று பெண்கள் கருதுகிறார்கள். 


துர் ஜதியாரின் பாவத்திற்கு அளவில்லை. அவரது உள்ளத்தில் குடியிருந்த கோடானு கோடி துயரங்களும் ஏக்கங்களும், கொடி கட்டிப் பறந்த ஆவேச உணர்ச்சிகளும் எங்கோ திசை காணா இடங்களில் ஓடி ஒளிந்து கொண்டன். தனது எண்ணத்திற்கு சக்ரவர்த்தியை இணங்க வைத்து விசுவநாதனுக்கும் அவன் தந்தை நாகமநாயக்கருக்கும் பகை மூட்டிவிட்ட குதூகலம்தான் இவ்வளவுக்கும் காரணம்! 

“இவ்வளவு நேரம் போர் நடந்துகொண்டிருக்கும்; களமெங்கும் காவி படிந்து கிடக்கும்; ஓலமும் ஒப்பாரியும் மேகமண்டலத்தைக் கலைத்திருக்கக்கூடும்; தலைவிதியை நினைத்து நிலைகுலைந்து கிடப்பான் விசுவநாதன்; வம்சதில கத்தை துவம்சம் செய்யும் காலமும் வந்ததே என்று நாகமர் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பார்; புஜபலத்தில் வாழ் வோர் அழியட்டும்: புத்திபலத்தில் வாழ்வோர் தழைக் கட்டும்” என்று துர்ஜதி மனத்துக்குள் எண்ணிப் பெருமித மடைந்து கொண்டிருந்தார். வெளியில் போயிருந்த முத்துக் கலிங்கன் அப்போது உள்ளே நுழைந்தான். 

“கலிங்கா தெரியுமா சேதி! தந்தைக்கும் மகனுக்கும் போர்! எனது எதிரிகளில் ஒருவன் இன்று மடிந்து விடு வான். தோழர் சிங்கராயருக்கும் இனி ராணுவத்தில் போட்டி மறைந்து விடும்……” என்று துர்ஜதி தொடர்ந்து பேசிக்கொண்டே போனார். 

“இன்னும் அந்தக் கட்டம் வரவில்லை. இருவரும் சேர்ந்து நம்மை எதிர்க்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்று ஒரு வெடியைப் போட்டான் முத்துக் கலிங்கன். “கலிங்கா சிறுபிள்ளைத்தனமாகப் பேசாதே! விசுவநாதனை நான் நன்கு அறிவேன். நாகமநாயக்கரும், நானும் சின்ன வயதிலிருந்து விஜயநகர சாம்ராஜ்ஜியத் திற்கு ஊழியம் புரிந்து வருபவர்கள். அவரைப்பற்றியும் எனக்கு நன்றாய்த் தெரியும். இருவருமே வீரமரணத்தையே தழுவ விரும்புகிறவர்கள். வாழ்க்கைக்காக, உயர்வுக்காக வளைந்து கொடுப்பவர்கள் அல்லர். அவர்களுக்கு, யார் வேண்டுமானாலும் சிறை வைக்கட்டும்; ஆனால் அவர்கள் மடிந்தால் போதும்” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே சொன்னார். 

“போர் இன்னும் தொடங்கவில்லை என்று அரண்மனை வட்டாரத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாகமர் படை இன்னும் களத்திற்கு வரவில்லையாம். நாளை வரை விசுவநாதன் தவணை கொடுத்திருக்கிறாராம்!” என்றான் முத்துக்கலிங்கன். 

துர்ஜதியின் மனத்தில் முள் தைத்தது. ஒருவேளை போர் நடைபெறாமல் போய்விடுமோ என்று பயந்தார். அப்படி ஒரு தவறு நடந்துவிடாமல் இருக்க அவர் முயற்சி எடுத்துக் கொள்ளத் துடித்தார். அரண்மனைக்குப்போய் அதற்கான நடவடிக்கைகளில் அவர் இறங்கும் செய்தி நாடு முழுவதும் பரவி விட்டது. சக்கரவர்த்தியாரே சற்றுத் திகைத்து விட்டார். புலியும் சிங்கமும் சேர்ந்தால் தன்னால் சமாளிக்க முடியாது என்று அவர் நினைத்தார். விஜயநகர சாம்ராஜ் யத்தின் ஜீவனை மறுநாள் பொழுது விடிந்த பிறகுதான் கணிக்க முடியும் என்ற முடிவுக்கு அரசாங்கமே வந்து விட்டது. மன்னரும் மற்றவர்களும் எப்போது கிழக்கு வெளுக்கும் என்று இரவு முழுவதும் துயில் கொள்ளாது இருந்தார்கள். 


சோழவந்தானுக்கு வடக்கே விஜயநகரப்படை முகா மடித்திருந்தது. ஆற்று மணலில் தூங்கும் பட்டுப்பூச்சிகளைப் போன்ற கவர்ச்சி மிக்க வண்ணக் கூடாரங்களில் விஜயநகர வீரர்கள் உலாவிக் கொண்டிருந்தார்கள். விஜயநகர வீரர் களின் உள்ளங்களில் அவர்களையும் அறியாமல் ஒருவித மான புதிர் குடிபுகுந்திருந்தது. ஆனால் விசுவநாதனுக்குக் குழப்பமில்லை. அதிர்ச்சி இல்லை. முடிவுக்கு வந்தவர்களுக்கு ஏது மூளைக்கிளர்ச்சி? போர்வீரர்களில் சிலரிடம் போரே நடக்காது என்ற எண்ணம் தலைதூக்கி நின்றது. மிகுதிப் பேர் அந்தக் கருத்தை முழு மூச்சாக எதிர்த்தார்கள். இந்த சர்ச்சையினால் அவர்களுக்குப் பொழுது போவதே தெரியவில்லை. விஜயநகர தளபதி விசுவநாதன், விடிவதற் குள் மதுரையை முற்றுகை இடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டான். தன்னைப் பெற்றுவளர்த்து பாராட்டி சீராட்டிக் கண்காணித்த தந்தையோடு போர்தொடுக்கப் போகிறோமே என்ற உணர்வே விசுவநாதனுக்கு இல்லை. விஜயநகரப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட நிலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றிய அந்நிய வேந்தனுடன் போர்த்தொடுக்க வந்த சக்கரவர்த்தியின் தளபதி என்ற எண்ணமே அவனுக்கு மேலோங்கி இருந்தது. விஜயநகரப்பெரு வேந்தனைக் காணும்போது அவர் தனக்கு நெற்றித் திலகமிட்டு வெற்றிச் செல்வனே என வரவேற்கும் வகையில் போர் புரியவேண்டும் என்ற வீர நினைவில் திளைத்திருந்தான். இந்தத் தருணத்தில் கூடாரத்திற்கு வெளியே ஆள் நடமாட்டத்தின் சிற்றொலி கேட்டது. விசுவநாதன் படுதாவை நீக்கிப் பார்த்தான். 

சற்றுத் தொலைவில் ஒரு பல்லக்கு வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பெண்மணி முக்காடிட்டுக் கொண்டு இறங்கி வந்தாள். அவளைத் தொடர்ந்து இரண்டு சேவகர்கள் வந்தார்கள். அவர்கள் மூவரும் விசுவநாதனின் கூடாரத்தை நோக்கியே வந்து கொண்டிருந்தார்கள்.விசுவநாதன் வாளை எடுத்து உறையில் போட்டுக்கொண்டு அவர்களை வர வேற்கத் தயாராக இருந்தான். 

முதலில் அந்தப் பெண்மணி உள்ளே நுழைந்தாள், சேவகர்கள் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.விசுவநாதன் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்காமலே வரவேற்புச் சொன்னான்.உடன் வந்த சேவகர்கள் “பாண்டியர் தலை நகரிலிருந்து நாகமர் துணைவி மங்கம்மாதேவி அவர்கள் தங்களைக் காண வந்திருக்கிறார்கள்” என்று கொற்றம் கூறினார்கள். 

விசுவநாதனுக்கு இதயத்தில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது. சித்திரை மின்னல் தோன்றி அவன் நேத்திரங்களைக் கொத்திக் கொண்டு போய்விட்ட தாகவே நினைத்துவிட்டான். அவன் துடித்துத் துவண்டு சோர்ந்து போகும்வரை மங்கம்மா தலையிலிட்டிருந்த முக்காட்டை அகற்றவில்லை. வந்ததும் வராததுமாக குய்யோ முறையோ என்று கதறினால் தன்னுடைய உண்மை யான துயரத்தைத் தன் மகன் புரிந்து கொள்ள முடியாமற் போகும் என்று தெரிந்துகொண்ட அந்தப் பெருமாட்டி தனது பாரங்களை எல்லாம் மௌனத்திலேயே புதைத்து வைத்துக் கொண்டாள். ஆரவாரம் செய்து தாகசாந்தி பெறுவதைக் காட்டிலும் அமைதியாக இருந்து நிலையான வெற்றியைப் பெற்றுவிட அவள் நிளைத்தாள். 

காலம் ஓடிக் கொண்டிருந்தது. மங்கம்மா எதுவும் பேசவில்லை; விசுவநாதன் பேசுவான் என்று அவள் எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள் போலும்! 

நெடு நேரத்திற்குப் பிறகு மங்கம்மா பேசத்தொடங் கினாள். அவளுடைய அடக்கமான பேச்சில் நாகமநாயக்கரின் வீரமும் ஆண்மையும் ஒளிந்து கிடந்தன. 

“விசுவம்! இது உனக்கு முறையாகத் தெரிகிறதா?”

“எதைச் சொல்கிறீர்கள்? விரிவாகச் சொல்லுங்கள். தவறு என்ன செய்தேன்? இவ்வளவு தூரம் நகர் கடந்து நள்ளிரவில் வரக்கூடிய அளவுக்கு நான் என்னம்மா செய்து விட்டேன்?” என்று பதில் கேள்வியைப் போட்டான் விசுவநாதன். 

“தந்தையை எதிர்த்து மகன் போரிடக் கேட்டிருக்கிறாயா?” – மங்கம்மா கேட்டாள். 

“இல்லைதான்! ஆனால் மகன் எதிர்க்குமளவிற்கு மாறான வழியில் ஈடுபடும் தந்தையைக் கண்டதுண்டா?” – விசுவநாதன் பதில் சொன்னான். 

“நீ ஆத்திரத்தில் பேசுகிறாய் விசுவம்! மண்ணாளும் ஆசையால் உன் தந்தை மதுரை மன்னனை விரட்டவில்லை. முடி சூட்டிக் கொண்டு குடிபடைகளுக்கு அதிபதியாக வேண்டும் என்ற சபலமே இல்லை.” 

“பின் எதற்கு என்னோடு போர் தொடுக்க வேண்டு மென்றா?’ 

“அவசரப்பட்டுப் பயனில்லை! சொல்லுவதைக் கவனி. உன்னை விஜயநகர சக்கரவர்த்தி சிறையில் வைத்திருப் பதைக் கண்டிக்கவே உன் தந்தை மதுரை மன்னன் மூலம் சக்கரவர்த்தியைக் கோபமூட்டினார். ரத்தக் கொதிப்பால் நீ நியாயத்தை மறந்து விட்டாய். சதிகாரர்கள் உன்னை வெறியூட்டி அனுப்பி வைத்திருக்கிறார்கள். நீயும் உன் தந்தையின் சரித்திரத்தை களங்கப் படுத்தத் துணிந்து விட்டாய்!” என்று தழுதழுத்த குரலில் கூறினாள் மங்கம்மா. 

விசுவநாதன் பதில் பேசுவதற்குப் பதிலாக முதலில் மெல்லச் சிரித்தான். 

“என்னம்மா கதைகட்டிப் பேசுகிறீர்கள். என் தந்தையின் காலம் இப்படி முடியப் போகிறதே என்று நான் வருத்தப்படுகிறேன். சரணாகதி அடைகிறானா அல்லது சாகத்துணிகிறானா என்று ஒரு காலத்தில் எதிரிகளுக்கு அறைகூவல் விடுத்த அவர் இன்று தாயை அனுப்பிச் சமாதானத்திற்கு வழிதேடுகிறார்!” என்று அலட்சியமாகச் சொன்னான் விசுவநாதன். 

மங்கம்மாவுக்கு மகன் பேச்சு வேலைப் பாய்ச்சியது.

“விசுவநாதா கோபத்தைக் கிளறாதே! நீயா அவருக்கு வீரத்தைப்பற்றி உபதேசிப்பது?” 

“நிலைமை அப்படித் தாயே! எனக்காகத்தானே தந்தை போர்த்தொடுக்கத் துணிந்தார் என்கிறீர்கள், நான் கேட்டுக்கொள்கிறேன். போரைக் கைவிட்டுப் பேரரசிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள்” என்றான் விசுவநாதன். 

“நாவை அடக்கிப்பேசு! உன்னிடம் பேசிக் கொண்டிருக்க எனக்கு கெளரவம் போதாது! இது இறுதிக் கேள்வி – போரைக் கைவிட முடியுமா முடியாதா?” என்றாள் மங்கம்மா. 

“என்னுடைய வேண்டுகோள், உங்களுடைய வாக்கு மூலப்படி போருக்கு காரணமான நானே வேண்டுகிறேன். தந்தை அவர் செய்த தவறுக்காக வருத்தம் தெரிவித்து விட்டு சமாதானத்திற்கு வரட்டும்” – இது விசுவநாதனின் பதில் கோரிக்கை. 

“விசுவநாதா நீ சின்ன வயதில் மடியப் போகிறாயா மகனே! எச்சரிக்கிறேன்!” 

“மகிழ்ச்சி! ஓடப்போகிறேன் என்று சொல்லாமல் மடியப் போகிறேன் என்றாவது சொன்னீர்களே! ஒரு தளபதிக்கு அவனது வெற்றி அல்ல பெருமை; அவனது சாவுதான். அவனை வீரனாக வடித்துக் காட்டும் நாகம் நாயக்கர் மகன் ராஜ விஸ்வாஸத்திற்காகப் போரிட்டுக் களத்திலேயே கண்களை மூடினான் என்ற பேர் கிடைத்தால் போதும். எந்தக் கோட்டையில் எந்தக் கொடியைப் பறக்க விடுவது என்ற ஆசை எனக்கில்லை… நேரமாகிறது அன்னையே! பொழுது விடியுமுன் போய் விடுங்கள்! நீங்கள் வந்திருப்பது அரசாங்க விஷயம்! யாராவது பார்த்தால் ஆயிரம் கதைகளைப்பேசி அங்கலாய்க்கத் தொடங்கி விடு வார்கள்’ என்று மங்கம்மாளை வழியனுப்பிவிட எத்தனித்தான் விசுவநாதன். 

மங்கம்மாவின் கண்களில் நீர் சுரந்தது. செத்த வீட்டுக்குத் துக்கம் கேட்க வந்தவளைப்போல் அவள் சொல்லிக் கொள்ளாமலே கூடாரத்தை விட்டு வெளியேறிவிட்டாள். விசுவநாதன் கூடாரத்தின் இடைவெளி வழியாக தனது பார்வையைச் செலுத்தினான். மங்கம்மாவின் பல்லக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உருவிழந்து வந்தது. விசுவநாதன் கண்களைச் சிமிட்டவில்லை; வைத்தக்கண் வாங்காது பல்லக்கையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களிலும் கண்ணீர் கூடுகட்டிவிட்டது. ஆனால் அது நீடிக்கவில்லை. விசுவநாதனின் கவனத்தை, படைவீரர் கூடாரங்களின் இடையிலிருந்து கிளம்பிய ஒரு மகிழ்ச்சி ஆரவாரம் வேறு பக்கம் திருப்பி வைத்துவிட்டது. 

விசுவநாதன் அதைக் கவனிப்பதற்காக போர்வையை எடுத்து உடம்பை மூடிக்கொண்டு அடையாளம் தெரியதா படி படைவீரர்களின் கூடாரங்களுக்கிடையே சென்றான். 

அங்கே- 

படை வீரர்களெல்லாம் ஒன்றுகூடி தெருக்கூதது நடத்திக் கொண்டிருந்தார்கள். நாடகத்தில் அங்கமேற்றவர்கள் நீங்கலாக மற்றவர்கள் பார்வையாளர்களாக உட்கார்ந்திருந்தார்கள். நடந்தது, வீரத்தைச் சித்திரிக்கும் ஒரு புராண நாடகம். பாண்டவர் பாசறையில் அபிமன்யு வுக்கும் யுதிஷ்டிரனுக்கும் வாதம் நடக்கும் கட்டம் நடந்து கொண்டிருந்தது. கௌரவர்களுக்கு ஆதரவாக துரோ ணாச்சாரியார் வகுக்கும் சக்ரவியூகத்தை உடைத்தெறிய அபிமன்யு துடிக்கிறான். 

அபிமன்யு : கவலை வேண்டாம் ஐயனே! நாளையப் போரில் ஆச்சாரியாரின் சக்ரவியூகத்தை நான் உடைக்கிறேன். யுதிஷ்டிரன்: உன்னால் இயலாது மகனே! நீ பச ை 

அபி: பாண்டு வம்சத்தின் பவித்திர ரத்தம் என் உடம் பில் ஓடுகிறது. பருவத்தைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும். ஐயனே! என்னைத் தடுக்காதீர்கள். 

யுதி: செல்வனே, துரோணாச்சாரியின் சக்ரவியூகத்தை உடைக்க அர்ஜூனன் ஒருவனால்தான் முடியும். அவன் இல்லை என்று தெரிந்தே கெளரவர்கள் இந்தச் சூழ்ச்சியை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். 

அபி : அவர் இல்லாவிட்டால் என்ன? அர்ஜூனன் மகன் இருக்கிறேன்.நான் என் தந்தையின் அம்சமில்லையா? 

யுதி: மகனே! சின்ன வயதில் உன்னை இழக்க நாங்கள் விரும்பவில்லை. என் சொல்லைத் தட்டாதே கண்ணே! 

அபி: மன்னியுங்கள் அண்ணலே! இது தவச்சாலை அல்ல – போர்க்களம். உபதேசமா இப்போது தேவை? உதிரத்தைப் பொங்கச் செய்யும் வீரமொழிகளைக் கேளுங்கள். 

யுதி : நீ என்ன சொன்னாலும் நான் உன்னைப் போர்க்களத் திற்கு அனுப்பமாட்டேன். நீ மட்டும் தனியாகப் போவதா? 

அபி: நான் மட்டும் ஏன் போகிறேன்? என் உள்ளத்தில் அர்ஜுனன் இருக்கிறார். கரத்திலே வில் இருக்கிறது. நான் ஏன் பயப்படவேண்டும்.நான் இன்று எப்படி யும் துரோணரின் மூலஸ்தானத்தில் என் வலிமையைக் காட்டியே தீருவேன்.” என்று கூறிவிட்டு அபிமன்யு திரைக்குப்பின் ஓடினான். 

அடுத்த கட்டத்தை அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்தனர். அடுத்த கணம் போர் முரசு ஒலித்தது. அபிமன்யுதான் போருக்குத் தலைமை தாங்கி வரப்போகி றான் என்று எல்லோரும் ஏமாந்து போனார்கள். சற்று முன்பு ஒலித்த போர் முரசு நாடகக் கொட்டகையில் ஒலித்ததல்ல. மதுரையிலிருந்து படையெடுத்துக் கிளம்பி வந்த நாகமநாயக்கரின் படை ஒலித்து அழைத்த பேரிகைச் சத்தம் அது. 

நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த விசுவநாதன் துடித்துக் கிளம்பினான்: படைவீரர்கள் அனைவரும் அலறித் துடித்து ஆயுதச் சாலைக்கு விரைந்தார்கள். 

பாண்டிய நாட்டிலிருந்து நாகமர் படை போர்க்களம் நோக்கி வந்துகொண்டிருந்தது. காலை இளங்கரத்தில் நாகமர் யானைமீது அமர்ந்து வந்தார். விசுவநாதன் கம்பீரமான வெண்குதிரையில் அமர்ந்து சென்றான். தந்தையும் மகனும் யுத்த களத்தில் சந்திக்கும் நேரம் – தென்னாட்டின் சரித்திர முக்கியத்துவம் பெறும் நேரம் வந்துகொண்டிருந் தது. மரம், செடி, கொடிகளெல்லாம் வரலாற்றின் கண்க ளாக மாறி துருவித் துருவி ஆராய்ந்துகொண்டிருந்தன. 

அத்தியாயம்-14

சக்கரவர்த்தி ராயருக்குச் சோகம் தீரவில்லை.உறங்கு வதிலிருந்து உணவருந்துவதுவரை அவருக்குக் குழப்ப மாகவே இருந்தது. உள்ளம்,காய்ச்சிய இரும்பாகி வளைத்த பக்கமெல்லாம் வளைந்து கொடுத்தது. யார் எதைச் சொன் னாலும் நம்பிக் கொண்டிருந்தார். அதனால் அவர் ஒரு நிலை யில் நிற்க முடியாமல் தவித்தார். காணாமற்போன மகளுடைய கவலையும், கர்ஜனை செய்யும் நாகமர் மிரட்டலும் சக்கரவர்த்தியை மாறி மாறித் தாக்கின. ஆறுதல் கூற ஆளில்லை. தானாக ஆறுதல் பெற நினைத்தால் அந்த நேரத் தில் துர்ஜதி நுழைந்து மீண்டும் அவர் உள்ளத்தைக் குழப்பி விடுவார். 

விஜய நகரத்திற்கு ஏற்பட்ட இந்தத் திடீர்ச் சோதனையை அரியநாதன் நிதானமாகக் கவனித்துக் கொண்டுவந்தான். கர்ஜனை, அறைகூவல், ரத்தக்களறி என்ற சொற்களைப் பயன்படுத்தும் போர்த்தளபதி பதவியி லிருந்து அரசனின் அந்தரங்கச் செயலாளன் பொறுப்புக்கு வந்தது முதல் அரியநாதன் உள்ளத்தில் அமைதியே வட்ட மிடத் தலைப்பட்டது. வேண்டுகோள், விண்ணப்பம், பிரார்த்தனை என்னும் மேலான வார்த்தைகளை அவன் அடிக்கடி பேசிப் பழகிவந்தான். அவனுடைய எதிர் காலத்தைப்பற்றி அவனுக்கு ஒரு நல்ல நம்பிக்கை – உறுதி யான நம்பிக்கை இருந்து வந்தது. ஆனால் நாகமர் போர் முரசு கொட்டியவுடன் அந்த நம்பிக்கை சற்றுத் தளர்ந்து நாடி இழுக்க ஆரம்பித்தது. ஏனெனில் இருசாராருமே அரியநாதனுக்கு வேண்டியவர்கள், இருசாராருக்குமே அரியநாதன் மீது பற்று இருந்தது. அதனால் இந்தப் போரில் இரண்டு கட்சிக்காரர்களுக்கும் உத்தமனாக நடந்து கொள்ள வழியில்லாமல் அரியநாதன் அல்லல்பட்டான். அவன் நீதி விளக்கு. நேர்மைக் குன்றம். அனாதையாக வந்த அவனை ஆதரித்து போர் வித்தைகள் கற்றுக் கொடுத்தவர் நாகமநாயக்கர். தளபதிக்குரிய தகுதி பெற்றபின் அரசியலுக்குப் பயன்படுவான் என்று அவனைத் தேர்ந் தெடுத்தார் கிருஷ்ணதேவராயர். தாயைப் பகைத்துத் தந்தையுடன் சேருவதா, தந்தையை இழந்து தாயுடன் இணைவதா என்று முடிவு தெரியாமல் அந்த வாலிபன் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு நாள் இரவு அவனு டைய மாளிகைக் காவலன் அவனிடத்தில் ஓர் ஓலையைக் கொடுத்தான். அது ஒரு நீட்டோலை. அரியநாதன் அந்த ஒலையை ஒருமுறைக்குப் பலமுறை பார்த்தான். அதிலடங்கி யிருந்த செய்திகளை அவனால் நம்பவே முடியவில்லை. ஏனெனில், இளவரசி துங்கபத்திரையை துர்ஜதிதான் ஒளித்துவைத்திருக்கிறார் என்று அந்த ஓலையில் குறிப்பிடப் பட்டிருந்தது. என்றாலும், ஒருகணம் அவன் திகைக்கத் தான் செய்தான். 

அடைமழைக் காலத்தில் நண்டுப் பொந்தில் நாகம் குடி யிருப்பதில்லையா? நெற்களஞ்சியத்திற்குள்ளிருந்து நெளிந் தோடும் பூரானும் தேளும் கிளம்புவதில்லையா? போர் மேகம் சூழ்ந்துள்ள காலத்தில் எங்கே என்ன நடக்கும்? யாருடைய உள்ளத்தை என்னென்ன முற்றுகையிட்டிருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்? 

முடிவில் அரியநாதன் அந்த ஓலையில் ஏதோ சிறிது உண்மை இருக்கக்கூடும் என்று தீர்மானித்தான். 


துர்ஜதி மாளிகையிள் வாசல் கதவு தாளிடப்பட்டிருந் தது. ஆனால் உள்ளே யாரோ இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அரியநாதன் கதவோடு கதவாக காதை வைத்துக்கேட்டான். முடிக் கிடந்த வீட்டில் ஆடிக்கொண்டிருக்கும் நூலாடைபோல் பிடிமானமில் லாமல் அரையும் குறையுமாக அவன் காதுக்குத் தகவல் கிடைத்தது. ஆனால் அரியநாதன் ஒன்றை மட்டும் முடிவு செய்துவிட்டான். துர்ஜதிக்குப் பிறந்த நாட்டின் மீது நல்லெண்ணம் இல்லை; விசுவாசம் இல்லை என்று அவன் கணக்குப் போட்டு வைத்துவிட்டான். இல்லாவிட்டால் மனச் சுத்தமுள்ளவன் மாளிகைக் கதவைத் தாளிட்டுக் கொண்டு மந்திரம் ஜபிப்பதைப் போல் ஏன் ரகசியம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அரியநாதனின் வாதம்! 

துர் ஜதி தடம் புரண்டது பற்றி அரியநாதனுக்குக் கவலை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. வரும்போது இருந்ததைக் காட்டிலும் போகும்போது அவன் முகம் அதிகக் கவர்ச்சி யுடன் காணப்பட்டது. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலைக் கரை சேர்க்கப் புதிய வழியைக் கண்டுபிடித்து விட்டவனைப் போல உற்சாகமாக அரண்மனைக்கு நடந்தான். தெருவில் எல்லோரும் அவனையே வெறிக்க வெறிக்கப் பார்த்தார்கள். அவன் சிகப்புத் துண்டால் தலைப்பாகை கட்டி இருந்ததால், யாராலும் அவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. 

அத்தியாயம்-15

மன்னர் அரண்மனையில் பரவசத்தில் ஆழ்ந்திருந்தார். அவருடைய அகமும்,முகமும் இன்பப் புதுவெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தன. அரியநாதன் உள்ளே நுழையும் போது அரண்மனை என்றுமில்லாது குதூகலத்தில் இருப்ப தைக் கண்டு வியப்படைந்தான். மன்னர் தன் நிலை மறந்து அந்தஸ்து மறந்து அரியநாதனுடன் தொட்டுத் தழுவிப் பேசி னார். அப்படி ஒரு நாள்கூட நடந்து கொண்டதில்லை; பேசிய தில்லை. எந்த மன்னனும் அவனது மனோரதத்தை முகத்தில் ஓட்டிக் காண்பிப்பதில்லை. துன்பத்தையும் இன்பத்தையும் பளிச்சென் று வெளிக் காட்டிக்கொள்ளாத ஆற்றலைத்தான் அரசகளை என்கிறார்கள். ஆனால், கிருஷ்ணதேவராயர் அன்று சிறு பிள்ளையைப் போல் நடந்துகொண்டார். ஓடுவதும் ஆடுவதும் அவரைக் குழந்தையாக்கிவிட்டது. காரணம் தெரியாமல், தர்பார் கல்யாண வீட்டைப் போல பரபரப் பாக இருந்தது. 

மன்னரை அணுகி விளக்கம் அறிய அரியநாதனுக்கு ஆசை. ஆனால் அவன் பின் தங்கினான். ராஜநோக்கம் என்பது சாரதியில்லாத சப்பரம் போன்றது. திடீரென்று ஓடும்; திடீரென்று நிற்கும். தான் எதையாவது கேட்டுவிட் டால் அதனால் மன்னரின் மகிழ்ச்சி குறைந்துவிடுமே என்று அரியநாதன் அஞ்சிக் கொண்டிருந்தான். அப்போது ராஜ கோட்டைப் பக்கமாக இருந்து சில படை வீரர்கள் அரண் மனைக்குள் நுழைந்தார்கள். அவர்களின் கைகளில் அரசாங் கத்தின் புதிய கொடிகள் இருந்தன. 

”கோட்டைக் கணு ஒவ்வொன்றிலும் நமது கொடியைக் கட்டிவிட்டோம், இரண்டாயிரம் கொடிகளுக்கு நூறு கொடிகள்தான் மிச்சம்” என்றான், அவர்களில் ஒருவன். 

அரியநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுடைய மதியூகத்தால் எல்லாவற்றிற்குமான விடையைப் புரிந்து கொண்டுவிட்டான். மதுரைப் போரில் விஜயநகரத்திற்குக் கிடைத்த வெற்றிதான் இவ்வளவு அமளிக்கும் ஆர்ப்பாட்டத் திற்கும் காரணம்! 

ஆயிரத்தி ஒன்று வேட்டுகள் முழங்கின. அந்த முழக்கம் பதிநாலாயிரமாகப் பெருகிக் கோட்டைச் சுவர்களில் மோதி எதிரொலித்தது. பேரலை கொண்ட மகா சமுத்திரத்தில் மூழ்கிக் குளித்துத் திரியும் வலிமை மிக்கத் திமிங்கலத்தை முறியடித்து விட்ட கப்பல் தலைவனைப் போல் சச்கரவர்த்தி ராயர் ஆனந்தக்கடலில் திளைத்துக் கிடந்தார். 

தன்னை ஏளனம் செய்தவனை மூக்கறுத்துக் காட்டிவிட்டதாக அவர் பெருமூச்சுவிட்டார். படைவீரர்களுக்கும் அவருடைய மனைவி மக்களுக்கும் பரிசுகள் வழங்கத் தீர்மானித்து முடித்தார். எதையோ ஒன்றை மனத்திற்குள் வைத்து காரியமாற்றுவதாகவே அரியநாதனுக்குப் பட்டது. சக்கரவர்த்தி ஆற்றலிலும் அனுபவத்திலும் உயர்ந்தவர் என்றாலும் வெற்றிக்களிப்பில் அவசரப்பட்டு எதையும் செய்துவிடக்கூடாது என்பதுதான் அரியநாதனின் பயம்! 

நகரத்து அரச வீதிகளை மாவிலைத் தோரணங்கள் அழகு செய்தன; மூலைக்கு மூலை ஆண்களும் பெண்களுமாக வீதிகளின் இருமருங்கிலும் ஆயிரக் கணக்காகத் திரண்டிருந் தார்கள். அரண்மனையின் ஊர்வல யானைகள் தங்கக் கவச மணிந்து விசுவநாதனுக்கு மரியாதை செலுத்துவதற்காக விஜயநகரத்தின் நுழைவு வாயிலில் துதிக்கையில் மலர் மாலைகளுடன் காத்திருந்தன. சாம்ராஜ்யத்தின் ராஜ கோட்டையிலுள்ள வெற்றிக்கலசத்தின் அருகே நின்று இரண்டு வீரர்கள் போர்ச்சங்கை இடைவிடாது ஊதிக் கொண்டே இருந்தார்கள். அந்தச் சங்கொலி ஒவ்வொருவர் உள்ளத்தையும் எழுச்சிக் கனலாக்கிக் கொண்டிருந்தது; முதியவர்களின் மனத்தில் ஒளிந்து கிடந்த பழைய வெற்றி விழாக்களை எண்ணிக் களிக்கத் தூண்டியது. ஆனால் இந்த வெற்றி விழாவில் இருந்த ஒரு புதுமையை எல்லோரும் உணர்ந்திருந்தார்கள். இதுவரை சாம்ராஜ்ஜியத்தின் வடக்கு வாசல் வழியாகத்தான் தோற்ற மன்னர்களும், அவர்களது பரிவாரங்களும் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். 

ஏனெனில் தோற்றவர்களெல்லாம் விஜயநகரத்திற்கு வடக்கே உள்ளவர்கள். இப்போதுதான் விஜயநகர வெற்றிப்படை தெற்கு வாசல் வழியாக முதன் முறையாக நுழைகிறது. கிருஷ்ணதேவராயரின் கருடப் பார்வை தென்திசைக்கு திரும்பியதே இல்லை. தென் புலமெங்குமுள்ள ராஜ்யங்கள் அவருக்கு நேச நாடுகள். சாம்ராஜ்ய மக்கள் அனைவருக்கும் ஒரு புதிய ஊர்வலமாகத்தான் தெரிந்தது. அதனால்தான் இந்த வெற்றி ஊர்வலத்தைப் பார்க்க அளவு கடந்த மக்கள் கூட்டம் இருந்ததா? அப்படி இருக்காது. போரில் தோல்வி கண்டிருப்பது நாகம நாயக்கர். அவரை வென்றிருப்பது அவரால் பயில்விக்கப் பட்ட சைன்யம். அந்தச் சைன்யத்தின் தளகர்த்தன், அவருடைய செல்வத் திருமகன்! புகழ் பெற்ற நாடக ஆசிரியரின் சுவைமிக்க சோகச் சித்திரத்தைப் போல மதுரைவெற்றி எல்லோருடைய உள்ளங்களையும் கவர்ந்து ஆவலைத் தூண்டிவிட்டிருந்தது. அவர்களில் நாகம் நாயக்கர் பால் தணியாத அன்புவெறி கொண்டவர்கள், அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதை எண்ணிக் கண்கலங்கி நின்றார்கள்! அடேயப்பா! இப்பொழுது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. நாகம நாயக்கர் எதிரி நாட்டின் மீது படை யெடுத்துப் போய் திரும்பும்போது அவரது வருகையில் தான் எவ்வளவு கம்பீரம்; எத்தகைய வீரக்களை; நாட்டையே அவருடையதாக அல்லவா ஈர்த்து வைத்திருந்தார்! மன்னரே எழுந்து வந்து மாலை போடுவார்; மந்திரிசபையே எழுந்து நின்று மரியாதை செலுத்தும். அவர் அத்தகைய வேங்கை மார்பன். இன்று, வளர்த்த கடாவிடம் தோற்றுப் போய்விட்டார். அந்நிய அரசனுக்கு அபயம் அளிக்கப் போனதால் அன்னை நாட்டிற்குள் அடிமையாக வருகிறார். இந்தக் கட்டத்தைக் காணத்தான் அன்று அவ்வளவு கூட்டம் வெள்ளம் போல் திரண்டிருந்தது. 

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் ராஜமரியாதையைச் செலுத்த தெற்கு வாசலில் அரியநாதன் ராஜ முத்திரையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். மன்னர், அரண்மனை வாசலில் எதிர்கொண்டழைப்பதாக ஏற் பாடாகி இருந்தது. நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டு வந்தது. எந்தப் பாதுகாப்புத் துறையினராலும் கட்டுப்படுத்த இயலவில்லை. மரங்கள், மதில் சுவர்கள் முதலியவைகளெல்லாம் மனிதர்களைக் காய்த்துத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தன. 

அந்தி மயங்கி பொழுது சாயப்போகும் நேரத்தில் கண் பட்ட தூரத்திற்கு அப்பால் புழுதிப் படலம் எழுந்தது. கோடிக்கணக்கான விழிகள் தெற்கு நோக்கியே முற்றுகை யிட்டுக்கொண்டே இருந்தன. சிறுகச் சிறுகக் கொடிகள் தெரிந்தன. பின் படை வரிசைகள் புலப்பட்டன. பொன் மயமான மாலை வெயிலில் சாயலோடு விஜயநகரத்தில் வெற்றிப்படை தெற்கு வாசலுக்கு அருகே வந்துவிட்டது. வேட்டுக்கள் மீண்டும் முழங்கின. முரசங்கள் அதிர்ந்தன. ராஜ கோட்டையின் காவலன் மூச்சு விடாமல் சங்கை ஊதினான். திருமண வீட்டில் தாலிகட்டும் நேரத்தைப் போல் ஆரவாரமும் வாழ்த்தொலிகளும் பீரிட்டுக் கிளம்பி விட்டன. அணை உடைத்து வரும் ஆற்றுப் பிரவாகமென வெற்றிப்படை நகருக்குள் நுழைந்தது. கூட்ட நெருக்கடி ஆள்வரிசைகளைப் பிதுக்கிப் பிதுக்கி அலங்கோலம் செய்து கொண்டிருந்தது. 

வெற்றிப் படையின் முகப்பில் அழகிய மல்லிகைப்பூ பல்லக்கு ஒன்று ரதத்தைப்போல் நகர்ந்து வந்துகொண் டிருந்தது. விசுவநாதன் ஆண்டில் இளைஞனென்றாலும் மதயானை போன்ற வலிய நாகமரை வென்ற தீரத்திற்காக வயோதிகர்கள்கூட அவனை வழிபடக் காத்துக்கொண்டிருந்தார்கள். பல்லக்கு அருகில் வந்துவிட்டது. கூட்டம் முண்டி அடித்துக்கொண்டு பாதையை ஒழுங்கீனப் படுத்தத் தலைப்பட்டது. எல்லோருடைய கண்களும் பல்லக்கையே துளைத்துக்கொண்டிருந்தன. ஆனால், அதில் விசுவநாதன் இல்லை. சஷ்டியப்த பூர்த்தி விழாவில் அமர்ந்திருக்கும் வயோதிகத் தம்பதிகளைப் போல் நாகமநாயக்கரும் அவர் மனைவி மங்கம்மா தேவியும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கரங்கள் இரும்புச் சங்கிலியால் இணைக்கப்பட் டிருந்தன. நாகமநாயக்கர் முகத்தில் சோகம் இல்லை. வீரம் குன்றிவிடவில்லை. வழக்கமான கம்பீரம் பருவத்தைக் கடந்த முகப்பொலிவு, பல வெற்றிகளைக்கண்டு சலித்து கொஞ்சம்கூடக் போன அலட்சிய சுபாவம்; எல்லாம் குறையாமல் அப்படியே அவர் முகத்தில் முடிசூட்டிக்கொண்டிருந்தன. நான் யாரிடம் தோற்றேன்? எதிரியிடமா தோற்றேன்? என்று இறுமாப்புடன் பதில் கூறுவதைப் போல் நாகமரின் புருவங்கள் நர்த்தனமாடின. ஆனால், அவரருகில் இருந்த மங்கம்மாதேவி சோகத்தால் கூனிக் குறுகி அடைகாக்கும் கோழியைப்போல் உட்கார்ந்திருந் தாள். 

அவள் கண்கள் கண்ணீரால் மாலை கட்டிக் கொண்டிருந்தன. அவளுக்கு மகனுடைய வெற்றியைக் காட்டிலும் மணவாளரின் தோல்விதான் பெரிதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்த அம்மையார் மட்டும் ஏன் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்க வேண்டும். கண்களை எல்லாம் காட்சிகளுக்கு ஈடு கொடுத்து நின்ற மக்கட் பெருங் கூட்டம் விசுவநாதனைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டன. வெற்றிப்படை வரிசையின் நடுநாயகமாக, நெடுந் தொலை வில் வந்துகொண்டிருந்த உயர்ந்த யானை ஒன்றின் மீது விசுவநாதன் அமர்ந்து வந்தான். அவன் தெற்கு வாசலுக்கு வருவதற்கு முன்பே அவனை வாழ்த்தி எழுந்த மங்கல ஒலிகள் விண்ணை முட்டி மேகத் திரையைப் பிளந்து விட்டன. 

விசுவநாத நாயக்கனின் யானை தெற்கு வாசலுக்கு வந்து விட்டது. அந்த யானையின் அழகிய தந்தங்கள் முறிந்து போயிருந்தன. அதன் நெற்றியில் கூரிய வேல் பாய்ந்து பிடுங்கப்பட்டிருந்தது. அங்கொன்றும், இங்கு கொன்றுமாக உடலெங்கும் அம்புகள் பாய்ந்திருந்தன. ஒரு களத்தில்கூட அந்தயானை காயம் பட்டதில்லை: திணறியதில்லை; ரத்த வாடை அதற்கு ஏற்பட்டதே கிடையாது. இந்தப் போர்க் களத்தில் அது தப்பியதே பெருஞ்செயலாகி விட்டது. கடைசிநாள் போரில் நாகமநாயக்கரும் விசுவநாதனும் எதிர் எதிரே நின்று போர்புரியும் கட்டம் வந்துவிட்டது. படை களெல்லாம் அதிர்ச்சியுற்று நின்றுவிட்டன. விசுவநாதன் அமர்ந்திருந்த ‘வீரகஜேந்திரன்’ என்ற யானை நாகம் நாயக்கரால் வளர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டது. அந்த யானையைக் கண்டதும் போரில் தனக்குத்தான் வெற்றி என்று நாகமர் நிச்சயித்துக் கொண்டார். போர் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும்போது, நாகமர் வழக்கமான அவருடைய தொனியில் அந்த வீரகஜேந்திரனுக்குப் போராடாதே என்று ஆணை பிறப்பித்துவிட்டார். யானையும் மிருகம்தானே! தந்தைக்கும் மகனுக்குமிடையே களம் அமையுமென்று அதற்குத் தெரியுமா? தன்னை வளர்த்த வனோடு சண்டைபோட நேரிடும் என்று அது அறியுமா? நாகமர் ஆணையிட்டதும் வீரகஜேந்திரன் அதனுடைய மூர்க்கத்தை எல்லாம் அடக்கிக்கொண்டு படுத்தபடி நாகமநாயகருக்கு மரியாதை காட்ட ஆரம்பித்துவிட்டது. விசுவநாதன் நம்பிக்கை இழந்துவிடும் கட்டம் நெருங்கி விட்டது. வீரகஜேந்திரன்தான் நாகமநாயக்கரின் போர் வாகனம். முதன் முறையாக அப்போதுதான் விசுவநாதன் அந்த யானை மீது ஏறி இருக்கிறான். தன் சொல்லை அந்த யானை கேட்குமா என்பது சந்தேகம்தான். இருந்தாலும் அவன் ஓயவில்லை. கையிலிருந்த வேல்கத்தியை எடுத்தான். “வீரகஜேந்திரா, நாகமர் இப்போது உன் எஜமானர் அல்ல; அவர் இப்போது நமக்கு எதிரி கஜேந்திரா! விடாதே” என்று அதற்குத் தெரிந்த முறையில் கதறிக்கொண்டு வேல் கத்தியால் அதன் நெற்றியில் ஒங்கிச் சொருகினான் விசுவ நாதன். அவ்வளவுதான். வீரகஜேந்திரன் இடிபோல் முழங்கி மின்னல் போல் நாகமரின் யானையைத் தாக்கி விட்டது. நாகமர் அமர்ந்திருந்த யானை மிரண்டு தத்தளித் தது. வீரகஜேந்திரன் அதனுடைய நீண்ட துதிக்கையால் நாகம நாயக்கரை யானையிலிருந்து கீழே தள்ளிவிட்டது. போரில் இந்த இறுதிச் சம்பவம் தென்னாட்டுச் சரித்திரத்தை மயிரிழையில் வைத்து வேடிக்கை பார்த்தது. 


படுகாயமுற்ற யானையின் தோற்றத்தைப் பார்த்து மறக்கும் முன்னர் மற்றொரு காட்சியை மக்கள் கூட்டம் கண்டு திகிலடைந்தது. வீரகஜேந்திரன் மீது அமர்ந்து வந்த விசுவநாத நாயக்கனின் கண்களிரண்டும் கட்டப்பட்டிருந்தன. திரண்டிருந்த அத்தனை லட்சம் பேரும் ஐயோ என்று வாய் விட்டுக் கதறிவிட்டார்கள். விசுவநாதனுக்கு கண்கள் போய் விட்டன. அவன் குருடனாகி விட்டான் என்று எல்லோருமே அலறினார்கள். விசுவநாதனுக்கு மக்கள் குரல் கேட்டது. யானையிலிருந்தபடியே எல்லோரையும் அமைதியாக இருக் கும்படி கேட்டுக்கொண்டான். யாரும் நிம்மதி பெறவில்லை – வெற்றிவிழா அமைதி இழந்து’, மகிழ்ச்சி ஆரவார மெல்லாம் அழுகுரலாக மாறிக் கலைந்தது. வெற்றிப்படை அரண்மனை நோக்கி நகர்ந்தது. 

விசுவநாதன் வந்த கோலத்தைப் பார்த்ததும், அரசருக்கு வரவேற்பில் கூட ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. கையிலிருந்த மலர் மாலையை உணர்ச்சியில்லாமல் விசுவ நாதன் கழுத்தில் போட்டுவிட்டு சபைக்கு விரைந்தார், சபை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே குழுமியிருந்தது. ஆண்களும் பெண்களுமாக அங்கு அணிதிரண்டிருந்தார்கள். அங்கே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னர் யார் என்றுகூட ஒருவருக்கும் தெரியவில்லை. எப்பொழுதும் பராக் சொல்லி பாதுகாவலர் புடைசூழ வரும் ராயர், விளக்கு அணைந்ததும் பார்வையாளருக்குத் தெரியாமல் ஜோடனை செய்யப் பட்டுள்ள கண்ணாடிச் சிம்மாசனத்தில் ஓடிவந்து அமரும் நாடக ராஜாவைப் போல எந்தவித ஜபர்தஸ்தும் இல்லாமல் கொலுமேடையில் அமர்ந்தபிறகுதான் அங்கு சூழ்ந்திருந்த மந்திரி பிரதானிகளுக்கே தாங்கள் இருப்பது ராஜசபை என்ற நினைவு வந்தது. உடனே அத்தனை பேரும் சட்டாம் பிள்ளையைக்கண்ட மாணவர்கள் போல் கைபொத்தி மெய்பொத்தி மரியாதை காட்டலானார்கள். 

மன்னர் துயரமே உருவாய் உட்கார்ந்திருந்தார். குற்றச்சதுக்கத்தில் நாகமநாயக்கர் கைவிலங்குடன் நிறுத் தப்பட்டிருந்தார். குற்றவாளிகளை ஏளனமாக நோக்கும் அந்தக் கொலுமண்டபம் அன்று அந்தக் குற்றமேடையைக் காணவே தயங்கியது. குற்றவாளிகளை மிரட்டுவதையே வாடிக்கையாகக் கொண்ட ஆணையாளர்கள் அன்று நாகமர் பக்கம் திரும்பவே மனமில்லாதவர்கள் போல் நடந்து கொண்டார்கள். சபையில் யாருக்கும் நாகமரை விசாரிக்கத் துணிவில்லை. திண்மையில்லை; மன்னருக்கு அருகே – சற்றுத் தாழ்ந்து நின்றுகொண்டிருந்த விசுவநாதன் மன்னரிடம்பேச ஆரம்பித்தான். 

“என்னை நம்பி என்னிடம் பெரும் படையை நம்பிக்கையுடன் ஒப்படைத்தமைக்கு தங்கள் கொற்றத்திற்கு என் நன்றி. நான் தங்களிடம் வாக்களித்தபடி மதுரையை வென்று எதிரியைக் கைப்பற்றி உங்கள் முன் நிறுத்தியிருக்கிறேன். இனி, தண்டனையை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு தங்களுடையது” என்று விசுவநாத நாயக்கன் மன்னர் முன் தெரிவித்தான். 

மன்னர் முகம் சிவந்தது. அந்தச் சிவப்பில் குழந்தை உள்ளத்தின் மென்மை இருந்தது. இரக்கத்தின் சாயல் காணப்பட்டது. 

“போரில் வெற்றி பெற்றதுகூட எனக்கு இன்பத்தைத் தரவில்லை, உன் நேத்திரங்கள் பழுதாகி நீ இப்படிக் கண்களைக் கட்டிக்கொண்டு வந்திருப்பதை நினைத்துத்தான் நான் மெத்த வருந்துகிறேன், விசுவநாதா!” என்று மன்னர் தடித்த குரலில் பேசினார். 

விசுவநாதனுக்கே நினைவில்லை, தன் கண்கள் கட்டப்பட்டிருப்பது. கண்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு நிலைமையை உணர்ந்து மீண்டும் பேசினான். 

“கண்களைத் திறந்து பார்க்க முடியவில்லை. வேந்தே!” என்றான் விசுவநாதன். 

சபை பெருமூச்சு விட்டது. விசுவநாதனுக்காக எதையும் புரியத்தயாராக இருக்கிறது இந்தச் சபை என்று மன்னர் எண்ணினார். அந்த எண்ணம் அவர் உள்ளத்தில் தேன் பாய்ச்சியது. மனத்துக்குள்ளேயே சிரித்துக்கொண்டார். 

விசுவநாதனின் மறுபதிப்பாக நின்ற அரியநாதன் மன்னர்தம் குறிப்பறிந்து அவர் முகத்தைப் பார்த்தான். மன்னர் விரலால் ஆக்னஞ பிறப்பித்தார். 

அரியநாதன், நடுக்கடலில் துடுப்பில்லாமல் தத்தளிக்கும் ஓடக்காரனைப் போல் குழம்பிக்கொண்டே விசாரிக்கத் தொடங்கினான். ஆனால் அவன் விசாரணையில் கம்பீரமில்லை. காரணம் அவனது உள்ளமும் வாக்கும் ஒன்றியிருக்கவில்லை. அரியநாதன் நாகமருக்கு மரியாதை காட்டி வளர்ந்தவன் அதனால் அவன் உள்ளம் அவனையுமறியாமல் நாகமருக்கு வளைந்து கொடுக்கத் துடித்தது. மன்னரோ விசாரிக்க ஆணையிட்டுவிட்டார். என்ன செய்வான் பாவம்! அவனால் அரட்ட முடியவில்லை. அரியநாதனின் பேச்சும் அபிநயமும் உணர்ச்சியில்லாமல் இருந்தன. மன்னர் இதைப் புரிந்து கொள்ளத் தவறியிருந்தாலும் விசுவநாதன் தவறவில்லை. தனது ஆருயிர் நண்பனை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்புவிக்க எண்ணி, தானே தன் தந்தையை விசாரிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டான். அரியநாதன் கையிலிருந்த குற்ற ஓலை விசுவநாதன் கைக்கு வந்தது. சபை நிமிர்ந்து உட்கார்ந்தது. மன்னர் கூட வேடிக்கை பார்க்கும் உணர்ச்சியில் புஜத்தைத் தூக்கி அமர்ந்தார். 

“விஜயநகர சாம்ராஜ்ஜியம் நாகமநாயக்கர் மீது சுமத்தும் ராஜதுரோகக் குற்றம் யாதெனில், மதுரைக்கு விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக அனுப்பப் பெற்ற நாகமநாயக்கர் திடீரென்று அங்கிருந்த பாண்டிய மன்னனை அரியணையிலிருந்து விரட்டிவிட்டு தானே அரசன் என்று பிரகடனப்படுத்தியது.’- இவ்வாறு குற்ற ஓலையை விசுவ நாதன் வாசித்துக் கொண்டிருக்கும்போது நாகமர் வெகு அலட்சியமாக ஒரு சிரிப்பைச் சிந்தினார். சபை திகிலடைந்து விட்டது. ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை. 

மன்னர் ராயர் கழுகைப்போல், கருநாகத்தைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தார். ஒருவர் கண்ணை இன்னொருவர் கண் சந்திக்கவில்லை. மூவிரண்டு விழிகளும் மூலைக்கு மூலை சிதறுண்டு கிடந்தன. 

விசுவநாதன் தொடர்ந்தான், ‘குற்றத்தை நாகம நாயக்கர் ஒப்புக்கொள்கிறாரா என்று சபை கேட்கிறது” 

நாகமர் பதில் பேசவில்லை. 

கட்டிய கண்களோடு மறுபடியும் கேட்டான். “விஜய நகரப் பேரரசுக்கு இந்த வழக்கின் குற்றவாளி அன்றொரு நாள் ஆற்றிய வீரப்பணிகளுக்கு மனமிரங்கிக் கேட்கிறது. இதோ இந்த மாமன்றத்திலே நிலை நிறுத்தப் பெற்றிருக்கும் குற்றவாளியின் வெற்றித் தூண்களை மனத்தில் கொண்டு கேட் கிறது. பாண்டிய மன்னனை அடித்து துரத்தியது, ராஜ துரோகமில்லையா? அது பெருங்குற்றமில்லையா?” 

நாகமநாயக்கர் சிறுத்தை போல் குற்றமேடையில் நடந்தார். இரும்புச் சங்கிலி கலகலத்தது. ஏதோ பேசப் போவதற்கு அறிகுறியாகப் பெருமூச்சு விட்டார். 

“மெளனமாக இருந்தால் குற்றத்தை ஒப்புக் கொண்ட தாக சபை முடிவு கட்டிவிடும் என்பதற்காகப் பேசுகிறேன். நான் தவறு செய்யவில்லை. அதனால் நான் எதையும் ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் எண்ணித்தான் துணிந்தேன். துணிந்த பின் துவளவில்லை” என்று வெட்டிப் பேசினார் நாகமர். 

மன்னருக்கு உதடுகள் துடித்தன. ஆனால் மற்றவர்களுக்கு  நாகமரின் பேச்சு வெண்கலமணி ஓசையென ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. சிலம்பாட்டம் பார்ப்பது போல் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். 

விசுவநாதன் வாலிபனென்றாலும் அடக்கத்தோடும் ஆழ்ந்த வீரத்தோடும் பேசினான். 

“இங்கே குற்றவாளியின் வீரத்தை எடைபோட்டுப் பார்ப்பதற்காகக் கூடியிருக்கவில்லை; அந்தச் சபதம்  நேற்றுடன் முடிந்தது. அது போர்க்களம்; இது நீதிமன்றம். இங்கே போர்ப்பணி தேவையில்லை” என்றான் விசுவநாதன். 

நாகமர் சிரித்தார். அந்தச் சிரிப்பொலியில் கொஞ்சம் கூட தாழ்வில்லை. அடிமைத் தன்மை இல்லை. யானைகளுக்கு மத்தியிலே இருக்கும் சிங்கத்தைப்போல் எழுச்சியுடன் அவர் சிரித்தார். 

“இந்த மன்றத்தில் பழைய நீதிமான்கள் இன்னும் கௌரவத்தோடு வாழ்வார்கள் என்று நினைத்தேன்; கேவலம் ஓர் அறியாப்பிள்ளையிடம் ஆட்சி மன்றம் அகப்பட்டு விழிக்கிறது. 

மன்னர் கழுகைப்போல் கழுத்தைச் சாய்த்துக் கொண்டு பார்த்தார். 

“விசுவநாதா, குற்றவாளியிடம் மன்னிப்பை எதிர் பார்ப்பது அவரிடம் நாம் கொஞ்சம் பற்று வைத்திருக்கிறோம் என்பதற்கு அர்த்தமாகும். நாகமநாயக்கர் குற்றவாளி தான்; மதுரைப்போரும் அதன் விளைவுகளும் அவர் குற்றவாளி என்பதற்குச் சான்றுகளாகும். சபை இனிமேல் அவரிடமிருந்து வார்த்தைகளை எதிர்பார்ப்பதை விரும்பவில்லை!” என்று சக்கரவர்த்தி ராயர் வார்த்தைகளைத் துண்டித்துப் பேசினார். 

விசுவநாதனுக்கு ராயரின் மனப்புதையல் புரிந்தது. அதனால் அவன் மேற்கொண்டு வார்த்தையாட விரும்ப வில்லை. மன்னரிடமிருந்து தீர்ப்பையே எதிர்பார்த்து நின்றான். 

”மன்றத்து நீதிமான்களே, நாகமநாயக்கர் நமக்கும் நம் நாட்டுக்கும் செய்த தொண்டினை அரசாங்கம் மறந்து விடவில்லை. ஆனால் அவர் இப்போது நமக்கு இழைத்திருக்கும் தீங்கு அவருடைய தியாகங்களையெல்லாம் மேவி அதன்மீது நெடிய துரோகக் கம்பம் ஒன்றை ஊன்றி விட்டது. இனி மேற்கொண்டு அவர் நமக்கும் இந்த நாட்டுக்கும் எத்துணை பெரிய தியாகத்தைச் செய்தாலும் அவருக்குப் பழைய பெயர் வந்துவிடாது. பழை கீர்த்தி உயிர் பெற்று விடாது. 

“மேலும் இந்த மதுரைப் போரில் நமக்கு ஏற்பட் டிருக்கும் இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல, வீரமிக்க நமது போர் மதயானை கஜேந்திரனின் தந்தங்கள் ஒடிந்துவிட்டன. விஜயநகர சாம்ராஜ்யத்தின் மானத்தையே காப்பாற்றி நம்மைப் புத்துயிர் பெறச்செய்த நமது விசுவநாதனின் கண்கள் கெட்டழிந்துவிட்டன. அவனுக்கு இனிப் புது வாழ்வில்லை. அவன் வீரம் காட்டுச் சந்திரிகையாகி விட்டது. இத்துணை தொல்லைகளுக்கும் காரணமாக இருந்த நாகமநாயக்கருக்கு தண்டனை விதிக்கத்தான் வேண்டும் என்பதில் இந்தச் சபையில் யாருக்கும் ஐயமிருக்க மார்க்கமில்லை” என்று மன்னர் ராயர் கருத்துத் தெரி வித்தார். அவர் உள்ளத்தில் நாகமரைத் தண்டித்தே ஆக வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது என்பதைச் சபைப் புலவர்கள் எல்லோருமே புரிந்துகொண்டார்கள். 

எல்லா வழக்குகளிலும் முந்திக்கொண்டு பேசும் துர் ஜதி இதிலும் பின்வாங்கவில்லை. மிகவும் கடிந்து நாகமரைத் தாக்கிப் பேசினார். அவர் கருத்தை சிங்கராயன் வலியுறுத் திக் கத்தினான். 

வழக்கம்போல் பெத்தன்னா துர்ஜதியின் கருத்தை எதிர்த்தார்.நாகமரின் தியாகங்களை எடுத்து விளக்கினார். நாகமரைத் தண்டித்து நீதியை நிலைநாட்டுவதைவிட அவரை மன்னித்து நமது பெருந்தன்மையை வெளிக்காட்டிக் கொள் வதையே அறிஞர் சபை விரும்புகிறது என்றார். 

இவையனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்த அரியநாதன் தன் கருத்தை வெளியிடத் துடித்தான். வாய்ப் புக் கிடைக்கவில்லை. அவைப் புலவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வெட்டியும் ஒட்டியும் பேசினார்கள். மன்னரின் முகபாவம் மாறி மாறி பிரதிபலித்தது. அவர் இதயம் குழம்பிவிட்டது. சிந்திக்க அவகாசம் கொடுத்தும் எண்ணம் ஈ ஈடேறாது என்று அவரது உள்ளொலி அவரைக் குத்திக் கொண்டே இருந்தது. திடீரென்று சபையைக் கலைத்து விட்டார். யாரும் எதிர்பாராவகையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. விசுவநாதனுக்கு திகில்! அரியநாதனுக்கு ஆச்சரியம். 

16 

கொற்றவன் கொலு குழுமிவிட்டது. துர்ஜதி குழுவினரைத் தவிர வேறு எவர் முகத்திலும் களை இல்லை; உணர்ச்சி இல்லை. ஒரு காலத்தில் கட்டியங்கூற மறுத்த சிற்றரசர் களின் மணிமுடிகளை எல்லாம் கைப்பற்றி வந்தவரல்லவா நாகமர். அந்தக் கிரீடங்களெல்லாம் கொலு மண்டபத்தில் எல்லோருடைய கண்களையும் உறுத்திக் கொண்டிருந்தன. கடினச் சித்தம் கொண்டவர்களே கண்கலங்கினார்களென்றால் இரக்கச் சித்தம் கொண்டவர்களைப் பற்றிக் கூறவேண்டுமா? சபை என்பதையும் மறந்து மயானத்தில் நின்று கதறுவதைப் போல் எத்தனையோ பேர் ஓலமிட்டார்கள்! நாகமரின் உழைப்பும் தியாகமும் அவ்வாறு ஒவ்வொருவர் இரத்தத் திலும் கலந்துவிட்டிருந்தது. 

மன்னர் வந்ததும், நாகமர் விடுதலை’ என்று தீர்ப்பைக் கூறினார். சபையில் ஒரே களியாட்டம்! தன்னுடைய ஆசை நிறைவேறியதை எண்ணி பெத்தன்னா தன் பருவத்தையும் மறந்து கூத்தாடினார். நாகமர் வாழ்க! அவர் புகழ் ஓங்குக!” என்று மக்கள் திரள் ஒலி கிளப்பியது. 

தந்தையின் கரங்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குகள் அகற்றப்பட்டதைக் கண்டுகளிக்க விசுவநாதனுக்கு விழிகள் இல்லையே என்று அனைவரும் விக்கித்திருந்தார்கள். அழகிய குமரிப்பெண் நெற்றியில் திலகம் இல்லாமல் இருப்பது போல், பெரிய மகிழ்ச்சி ஆராவாரத்திற்கிடையே அது ஒரு குறையாகப்பட்டது. 

மன்னர் எழுந்தார். சபையில் அமைதி நிலவியது. நாகமர் கம்பீரமாக நின்றார். மன்னர் எழுந்து விசுவநாதன் அருகில் வந்து அவன் கண்களை அவிழ்த்துவிட்டார். சபையி னர் அனைவரும் கனவுலகத்தில் இருப்பதாகவே எண்ணிவிட் டார்கள். விசுவநாதன் தன் தந்தை விடுதலை பெற்று நிற்ப தைக்கண்டு புளகாங்கிதமடைந்தான். அவன் ஒரு கவிஞனாக இருந்தால் பெரிய காவியமே தீட்டியிருப்பான்; நாகமருக்கு பெரும் திகில்! வாய் திறந்துபேச அவருக்குத் திறனில்லை. எதிர்த்துக் கொக்கரிப்பவர்களை மன்னித்து விட்டால் பணிந்து விடுவார்கள் என்பதை நாகமரின் அமைதி மெய்ப் பித்துக் காட்டியது. 

“என் தந்தையை அடிமையாகப் பார்க்க விரும்பாத என் கண்களை நானேதான் மூடிக் கொண்டேன்” என்று விசுவநாதன் சபையில் எடுத்துக் கூறும்போது சபையில் எழுந்த மகிழ்ச்சிப் பேரிரைச்சல் மேக மண்டலத்தையே அதி ரச் செய்துவிட்டது. இந்த அமளிக்கிடையே ஒரு குட்டை உருவம் ஆட்களை விலக்கிக்கொண்டு மிக வேகமாக சபை நோக்கிச் சென்றது. அது வேறு யாருமல்ல; துர்ஜதிதான். அவர் முகம் கொடூரமாக இருந்தது. எதையோ ஆராய்ந்து கண்டுகொண்டவரைப்போல் மன்னருக்கு அருகில் போய் நின்றார். சபை கப்சிப்’ என்றாயிற்று. துர்ஜதி அவர் கையி லிருந்த தடியை தரையில் ஓங்கித் தட்டிவிட்டுப் பேசினார். 

மன்னர் இப்படித் தீர்ப்பளிப்பார் என்று நான் எதிர் பார்க்கவில்லை. நாகமர் நேற்றுச் செய்த துரோகம் இன்று காய்ந்துவிட்டதாக மன்னர் முடிவு கட்டி இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் நல்ல தீர்ப்பு! நான் எதிர்க்கத் தயாராக இல்லை. அது நீதியுமல்ல. ஆனால் ஒன்று. இந்தச் சபையில் மன்னர் பிரானின் நினைவுக்கு இன்னொரு தகவலைக் கொண்டுவர முனைகின்றேன்.விசுவநாத நாயக்கன் போருக்குச் செல்லுமுன் சிறையில் அடைபட்டுக் கிடந்தான். அதுவும் என்ன குற்றத்திற்காக, மன்னர் மகள் துங்கபத்திரையை அபகரித்துச் சென்ற குற்றத்திற்காக! இந்தக் குற்றச்சாட்டு இன்னும் பரிசீலனை செய்யப்பட வில்லை. அதற்குள்ளாகப் போர் வந்துவிட்டது. விசுவநாதன் போருக்குப் போய்விட்டான். இப்போது அவன் திரும்பி வந்திருக்கிறான். அந்த வழக்கை இனி விசாரிக்க வேண்டும். மன்னன் மகளை அபகரித்துச் சென்றவனை மன்னர் விசாரிக்க வில்லை; மாறாக மதிப்புக் கொடுத்து கெளரவித்து வருகிறார் என்பதை அந்நிய அரசர்கள் அறிந்தால் சமுதாயத்தில் நமது மன்னருக்கு கீழ் மட்டத்தில்தான் இடம் கிடைக்கும். அதை நாம் சகிக்க மாட்டோம். இன்று அந்த வழக்கிற்குத் தீர்வு காணவேண்டும். ஒன்று, விசுவநாதன் துங்கபத்திரையை அரசர் முன் ஒப்படைக்க வேண்டும்; அல்லது விசுவநாதன் மீது இராஜதுரோகக் குற்றம் சுமத்தி அவனைத் தண்டிக்க வேண்டும்” என்று கடலைப்போல் ஓசையிட்டுப் பேசினார் துர்ஜதி. 

சபையில் ஒரு கணம் அமைதி நிலவியது. சற்று நேரத் திற்குப் பிறகு மேற்படியில் – மன்னருக்கருகில் நின்றுகொண் டிருந்த அரியநாதன் கீழே இறங்கி துர்ஜதிக்கு அருகில் வந்தான். வந்தவுடன் சட்டைப் பைக்குள்ளிருந்து ஓர் ஓலையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு பேசினான். 

“மன்னர் பிரானின் மேலான கவனத்திற்கு! நமது இள வரசி துங்கபத்திரையை ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு விசுவநாதனைச் சேர்ந்தது என்று நமது அவைப் புலவர் துர் ஜதியார் கூறுகிறார். ஆனால் எனக்குக் கிடைத்த ரகசிய ஓலையில், நமது துர்ஜதியார் தான் துங்கபத்திரையை ஒளித்து வைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்று சொன்னான். மன்னர் துணுக்குற்றார், மற்றவர்கள் பெரு மூச்சுவிட்டார்கள். 

“பொய்! பொய்! இது அவதூறு. மன்னர் முன் ஓலையைப் படித்துக்காட்டி என்மீது கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்காவிடில் நான் எளிதில் விடமாட்டேன். நல்வழி கூறுவது என் குணம். அவ்வழி முள்வழி என்றால் நானே அவர்களை முள் வழியில் தூக்கி எரிந்துவிடுவேன்” என்று கடிந்தார் துர்ஜதி. 

அரியநாதன் ஓலையைப் படித்தான். அதில், 

நான் சில நாட்களாக துர்ஜதியாரின் இல்லத்தில் தங்கி இருக்கிறேன். நேரம் வரும்போது அரசவைக்கு வருகிறேன். என்னுடைய நிலைக்கு விசுவநாதர் காரணமல்ல. 

இங்ஙனம்,
துங்கபத்திரை. 

  • என்று எழுதப்பட்டிருந்தது. துர்ஜதிக்கு நாசிகள் விடைத்தன. அடிபட்ட நாகம்போல் தாவித் தாவித் தாவிப் பேசினார். 

“இப்போது எங்கே அந்த துங்கபத்திரை? இதைக் காட்டிலும் வேறு நேரம் வேண்டுமா? இந்த நேரத்தில் சபையில் தோன்றி அருமைக் காதலனைக் காப்பாற்றட்டும். அரியநாதனுக்கு சவால் விடுகிறேன். இப்போது துங்க பத்திரை இங்கே தோன்றி வழக்கைத் தீர்க்காவிடில் நான் உன் மீது வழக்கைத் தொடுப்பேன். பழிக்குப் பழி வாங்குவேன். கவனமிருக்கட்டும்!” என்று நெருப்பைக் கக்கினார் துர்ஜதி. 

சபைக்குள் ஒரே சிரிப்பொலி எழுந்தது. எல்லோரும் அந்தப்பக்கமாகத் திரும்பினார்கள். வாலிபன் முத்துக் கலிங்கன் மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தான். துர்ஜதி கண்சளை அகல விரித்துப் பார்த்தார். அவன் துர்ஐதியைப் பார்த்து முறுவல் பூத்தான். 

“கலிங்கா” 

“நான் இப்போது கலிங்கனல்ல: துங்கபத்திரை” என்றான் அவன். 

“மடையா! உனக்கென்ன பைத்தியமா? என்று எரிந்து விழுந்தார் துர்ஜதி. 

‘இல்லை. நான் துங்கபத்திரை தான். என்று கூறி உடையைக் களைந்தான் கலிங்கன். எல்லோரும், ‘அதோ நம் துங்கபத்திரை நாச்சியார்!” என்று ஆரவாரம் செய் தார்கள். இளவரசி துங்கபத்திரை எல்லோரையும் வணங்கி னாள். துர் ஜதி நம்பவில்லை. இதில் ஏதோ சூது இருக்கிறது என்றார். 

“சூது இல்லை. பீஜப்பூரிலிருந்து தப்பித்து வந்து ளவறிவதற்காகவே துர் ஜதியின் இல்லத்தில் தங்கினேன். துர்ஜதியின் சதி உச்சக்கட்டம் எய்திய நேரத்தில் நான் தான் ‘விசுவநாதன் சிறைக்கூடத்தில் இருக்கிறார்’ என்று நாகமருக்குக் கடிதம் எழுதினேன். துர்ஜதியின் இல்லத்தில் நான் தங்கி இருக்கிறேன் என்று அரியநாதருக்கு ஓலை எழுதியதும் நான்தான். இதையெல்லாம் ஏன் மறைந்திருந்து செய்யவேண்டுமென்று கேட்பீர்கள். அப்படி நடந்து கொள்ளாவிட்டால் துர்ஜதியின் துரோகம் வெளிப் பட்டிருக்காது. அவர் சதி அம்பலமாகி இருக்காது. இந்தச் சாம்ராஜ்ஜியமே அவரை சத்தியகீர்த்தி என்றே மதித்து வந்திருக்கும் அவர் மட்டுமல்ல. நமது தளபதி சிங்கராயரும் அந்தப்பட்டியலில் இடம் பெற்றவர்தான். கங்காவின் மீதுள்ள காதலால் இந்த நாட்டையே பீஜப்பூர் சுல்தானுக்குக் காட்டிக்கொடுக்க எத்தனித்தவர். துரோகிகள் இவர்கள்” என்று முழக்கமிட்டாள் இளவரசி! மன்னர் எழுந்து மகளைத தழுவினார். இளவரசி யின் கண்கள் விசுவநாதனைத் தேடின. அவர்கள் காதல் உயிர்பெற்றது. துங்கபத்திரை அவனுக்குத் துணையிருந்து மதுரைச் சிம்மாசனத்தை வனப்பூட்டினாள். விசவநாதனின் உற்ற நண்பன் அரியநாதன் மதுரை ஆட்சியில் அவனுக்குத் தளபதியாக இருந்து உதவினார். 

முடிவுரை 

மதுரையில் நாயக்கவம்சம் தொடங்கியது. நாயக்கர், முதல் மதுரை நாயக்கர் என்றாலும், முறையாகப் பட்டத்திற்கு வந்தவர் விசுவநாத நாயக்கர்தான் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. 

விசுவநாத நாயக்கரின் காலத்தில்தான் மதுரை பல அரிய பெரிய நலன்களைப் பெற்றுக்கொண்டது. கி.பி.1559 முதல் 1563 வரை மதுரை பெற்ற சீர் அதிகம். வைகைப் பேரணை கட்டியது, புதிய கோட்டைகளை எழுப்பியது போன்ற செயல்களைச் செய்து கொடுத்தது விசுவநாத நாயக்கர்தான் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இவருடைய காலத்தில்தான் மதுரை மீனாட்சி ஆலயத்தின் ஆயிரக்கால் மண்டபம் கட்டப்பெற்றது. இத்தகைய பேராண்மையும் பெருநோக்கும் கொண்ட வீரர் திலகம் விசுவநாத நாயக்கனை பாண்டிய நாடு மறவாதிருப்பது விந்தைக் குரியதல்ல. 

முற்றும்

– துங்கபத்திரை (நாவல்), முதற் பதிப்பு: பெப்ரவரி 1970, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *