சம்பா நாட்டு இளவரசி

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 115,784 
 
 

இந்த கதை நடந்து கொண்டிருக்கும் 7-ம் நூற்றாண்டில்; இந்த கோவில் கொஞ்சம் பழமையான கோவிலாகத்தான் இருக்கின்றது. இன்றைக்கு சுமார் 1400 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் பல போர்களினாலும் தலைநகரம் மாற்றப்பட்டதாலும் பொலிவு இழந்து காணப்படுகிறது. பழைய சென்லாவில் தொடங்கி சம்பா நாட்டின் கீழை பகுதியில் வந்து சேரும் அன்னம் நதியின் மேற்கு பகுதியில் அமைந்திருந்தது இந்த பழைய சிவன் கோவில். காஞ்சியை தலைநகராக கொண்ட பல்லவர்களின் கட்டட கலையோடு ஒத்திருந்தது இந்த கோவிலின் கட்டடம். பல வருடங்கள் ஆள் நடமாட்டம் வெகுவாக குறைந்து, கோவிலும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளும் நகர பொலிவு இழந்திருந்தது. கையெழுத்து மறையும் நேரம். மெல்ல இருள் பரவிக் கொண்டிருந்தது. கோவிலின் வெளியே பல்லக்கும்; பல்லக்கு சுமப்பவர்களும் இருந்தார்கள். அவர்களோடு காவல் வீரர்கள் சிலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். கோவிலின் மண்டபத்தில் சம்பா நாட்டு இளவரசி ரங்கபாதையும் பல்லவ இளவரசன் ராஜசிம்மனும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பேச்சு வெளியில் இருக்கும் ஆட்களுக்கு கேட்டுவிடாதப்படி கவனமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘பிரபு தாங்கள் போய் தான் ஆக வேண்டுமா?

‘ஆமாம் தேவி! விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது. நான் பல்லவ நாட்டை விட்டு வந்து எட்டு வருடங்கள் ஆகி விட்டது. மிக முக்கிய காரியங்கள் இல்லாமல் ஒற்றர்கள் என்னை தேடி கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டார்கள். சாளுக்கியர்களும் பாண்டியர்களும் எப்போதும் பல்லவ நாட்டின் மீது கருமுறு வென இருப்பவர்கள். விக்கிரமாதித்தன் பெரும் படையுடன் பல்லவ நாட்டின் மீது போர் தொடுக்க வந்து கொண்டிருக்கிறானாம்.’

‘அரசே! தாங்கள் முதன் முதலில் சூதபவழ வியாபாரியாக வேசம் போட்டு அரணமனைக்கு வந்தீர்கள். அப்போதே நீங்கள் மன்னர் குலத்தை சேர்ந்தவராகத்தான் இருப்பீர்கள் என என் மனதுக்கு தோன்றியது. உங்களது வீர தீர சாகசத்தால் கூடிய சீக்கிரமே எங்கள் நாட்டின் யானை படைக்கு பயிற்சி அளிக்கும் தளபதியாக உயர்ந்தீர்கள். நீங்கள் பல்லவ நாட்டின் இளவரசர் என்று என் தந்தையிடம் உணமையை சொல்லிவிடலாமே? ஏன் மறைக்க வேண்டும்? உண்மை தெரிந்தால் என் தந்தை மிகவும் சந்தோசப்படுவார்.’

‘தேவி! இப்போது சொல்ல வேண்டாம் சரியான சந்தர்ப்பம் வாய்க்கும் போது சொல்லிக் கொள்ளலாம். எனக்கு சாவகம், கடாலிபுரம், கடாரம், சீனா, போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்ய வேண்டும். பல்லவர்களின் புகழ் ஓங்க வேண்டும் என்பது கனவு. அதற்காகவே கடல் கடந்து பிரயாணம் செய்து கொண்டிருக்கிறேன்.’

’பிரபு உங்களுக்கே நன்றாக தெரியும். இங்கு நிலமை மிகவும் மோசமாக உள்ளது. ஒரு இருண்ட காலத்தில் வாழ்வது போல் உள்ளது. சுற்றி இருக்கும் குடி படைகள் அனைத்தும் முறுக்கி கொண்டு நிற்கிறது. போர் மேகங்கள் சூழ்ந்திருக்கிறது. பழைய சென்லா படைகள் வேறு புதிதாக முளைத்திருக்கின்றன. போதாத குறைக்கு தெற்கே பூணான்களும் பலம் பெற்றிருக்கிறார்கள். என் தந்தை சைலஅதிராஜா தனித்து நிற்கிறார். இந்த நேரத்தில் நீங்களும் கிளம்பி போகிறீர்கள். எனக்கு திடிரென பயம் வந்து தொத்திக் கொண்டது.’

‘ரங்கபாதை! கவலை கொள்ளாதே. வீர தந்தைக்கு மகளாகவும்; வீர புருசனுக்கு மனைவியும் ஆக போகிறவள் நீ. இப்படி பயப்படலாமா? தமிழ் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற போகும் அரசி நீ.’

’ஆனாலும் என் மனம் நிலை கொள்ளவில்லை அரசே. இந்த புருசர்களே இப்படித்தான், ஆசை வார்த்தைகள் பேசி பெண்கள் மனதை நோகடிப்பவர்கள். உங்களை பிரிந்து நான் எப்படி இருப்பேன்? நீங்கள் திரும்பி வராவிட்டால் இதோ இந்த பாழும் குளத்தில் விழுந்து செத்து போவேன். இது முக்கண்ணன் சிவனின் மீது ஆணை’

ரங்கபாதை கோவிலின் பின்புறம் இருக்கும் கிணற்றைக் காட்டி சத்தியம் செய்தாள். அவள் பேச்சை தடுத்து நிறுத்திய ராஜசிம்மன்,

’எங்கள் பாட்டன் முப்பட்டன் எல்லாம் வீரத்திற்கு புகழ் போனவர்கள். கொடுத்த வாக்கை ஒரு போதும் மீற மாட்டார்கள். என் பாட்டனின் தந்தை நரசிம்ம பல்லவனின் பெயரைத்தான் எனக்கும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் வழி வந்த நான் ஒரு போதும் உன்னை ஏமாற்ற மாட்டேன். மீண்டும் வந்து உன்னை அழைத்துச் செல்வேன்.’

‘அரசே! நீங்களோ உலகம் போற்றும் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் இளவரசர் நானோ குறுநில மன்னனின் மகள். என்னை ஏமாற்றி விட மாட்டீர்களே?’

‘தேவி! இதுவும் என் மூதாதையர் வழி வந்த அரச பரம்பரை தானே. என் மூதாதையர் பல்லவ பேரரசின் ஈடு இணையில்லாத சிம்ம விஷ்ணுவின் இளவல் பீம வர்மன் வழி வந்தவர்கள் தானே நீங்களும். உங்கள் உடம்பிலும் ஓடுவது பல்லவ ரத்தம் தானே. உங்களது அரசு நெடுங்காலம் வாழ்ந்து புதிய சரித்திரம் படைக்க போகிறது. உலகமே வியக்க போகும் பல சிவன் கோவில்களை எழுப்பி; சம்பா நாட்டின் புகழ் என்றும் அழியாத வண்ணம் பல மன்னர்கள் உருவாக போகிறார்கள். தைரியமாக எனக்காக காத்திரு.’

‘எத்துனை யுகங்கள் ஆனாலும் உங்களுக்காக காத்திருப்பேன் அரசே!’

‘நடு சாமத்திற்குள் இருபது காத தூரம் கடந்தாக வேண்டும். இப்போதே நேரம் அதிகம் ஆகிவிட்டது. என் கண்ணே! விடை கொடு. போய் வரட்டுமா?’

‘உங்களுக்காக இங்கு ஒருத்தி காத்திருக்கிறாள் என்பது எப்போதும் உங்கள் நினைவில் இருக்கட்டும் பிரபு’

ரங்கபாதை பல்லக்கில் ஏறிக் கொண்டதும், பல்லக்கு நகர தொடங்கியது. கவலாளிகளும் அரணமனை சேவகர்களும் பல்லக்கின் மூன்னும் பின்னும் போனார்கள். அவர்கள் கிளம்பியதும் கோவில் பின்புறம் யாருக்கும் தெரியாமல் மறைந்து நின்று கொண்டிருந்த சடையவர்மன் இரண்டு குதிரைகளோடு வெளிப்பட்டான். பல்லவ இளவரசன் தாவி ஒரு குதிரையில் ஏறி கொண்டான். இரண்டு குதிரைகளும் காற்றை கிழித்து கொண்டு வேகமாக முன்னேறியது.

காட்டை கடந்து கவுதாரா துறைமுக நகருக்கு அருகில் வந்தார்கள். அந்த காலத்தில் துறைமுகத்தில் இருந்து பிற நகர்களுக்கு போக பெரிய பெரிய சாலைகள் அமைந்திருந்தார்கள். மாட்டு வண்டிகளும் குதிரை பூட்டிய வண்டிகளும் யானைகளும் கூட போகும் அளவுக்கு மிகவும் விஸ்தாரமான சாலைகள். குதிரை வீரர்கள் இருவரும் பிராதான சாலையில் நுழையாமல், சாலையை ஒட்டி காட்டு பாதையில் குதிரையை செலுத்திக் கொண்டிருந்தார்கள். தீப்பந்தங்களின் வெளிச்சம் தெரியவே சடையவர்மன் தன் குதிரை இழுத்து பிடித்து நிறுத்தினான். ராஜசிம்மனும் தன் குதிரையை நிறுத்தினான்.

’அரசே! இதற்கு மேல் நாம் குதிரையில் போவது அவ்வளவு உசிதமானது அல்ல. குதிரையை இங்கேயே விட்டு விட்டு, துறை முகத்துக்கு போகும் மாட்டு வண்டி எதையாவது பிடித்து போய்விடலாம். குதிரையோடு வீரர்களின் கண்ணில் பட்டால் தொந்தரவுதான்’ என்றான் சடையவர்மன்

‘கவலை வேண்டாம் சடையா! என்னிடம் சைல அதிராஜாவின் யானைப்படை முத்திரை இருக்கு. அதை பயன் படுத்தி கப்பல் வரை போய்விடலாம்.’ மறுமொழி கூறினான் ராஜசிம்மன்.

‘அதுவும் நல்ல யோசனைத்தான். நமக்கு கால அவகாசம் போதுமானதாக இல்லை. இன்று இரவு சாவகத்துக்கு புறப்படும் சோழ நாட்டு வணிகர் குழுவோடு இணைந்து கொள்ள வேண்டும்’ என்று கூறிக் கொண்டே குதிரையை துறைமுகத்துக்கு போகும் பிரதான சாலையில் விட்டார்கள்.

துறைமுகத்தை அடைந்த போது அங்கே ஒரே கூட்டம். கப்பலில் பொருட்களை ஏற்றுபவர்கள் பொருட்களை ஏற்றி கொண்டிருந்தார்கள். கப்பலை செலுத்துபவர்கள், வணிக குழுக்கள், சுங்க அதிகாரிகள் என பெருங்கூட்டமாய் அந்த துறைமுகம் இயங்கிக் கொண்டிருந்தது. சம்பா நாட்டின் அதிகாரிகளிடமும் வீரர்களிடமும் ராஜசிம்மன் தன்னிடம் இருந்த யானைப் படை லச்சினையை காட்டி கப்பலில் ஏறும் வணிகர் குழுவோடு போய் இணைந்து கொண்டார்கள்.

எந்த தடங்களும் இன்றி வணிக குழுவோடு ராஜசிம்மனும் சடையவர்மனும் கப்பலில் ஏறி விட்டார்கள். ராஜசிம்மனிடம் இருந்த அரச லச்சினை மிகவும் முக்கியமானவர்களிடம் மட்டுமே இருக்ககூடிய லச்சினை. அந்த லச்சினை வைத்திருப்பவர்கள் ராஜ்ஜியத்தில் மிக உயர்ந்த பதவில் இருப்பவர்கள் என்று பொருள். ஆகவே பெரிய கேள்விகள் ஏதும் இல்லாமல் அவர்களால் கப்பலில் ஏற முடிந்தது

கப்பல் புறப்பட்டது. துறைமுகம் மெல்ல மெல்ல மறைந்து எங்கும் நீல நிற கடல் மட்டுமே தெரிந்தது. கடல் பயணங்கள் மிகவும் ஆபத்தானவை. அச்சமூட்டும் கடற்கொள்ளையர்கள் ஒரு பக்கம். கடலின் அலை, சூறாவளி காற்று, கடுமையான மழை என மறுபக்கம். இந்த ஆபத்துகளை தாண்டித்தான் குறிப்பிட்ட இடத்துக்கு போய் சேர முடியும். ராஜசிம்மனும் சடையவர்மனும் கப்பலின் மேல் தளத்திற்கு வந்தார்கள். அடிக்கும் காற்றையும் எழும் அலைகளையும் கடந்து கப்பல் போய் கொண்டிருந்தது.

‘இப்போது சொல். உன் திட்டம் என்ன? எப்படி நாம் பல்லவ நாட்டிற்கு போவது?’ சடையவர்மனை நோக்கி கேட்டான்.

‘இங்கிருந்து நாம் சாவகம் பொய் சேர்வதற்கு இரண்டு வாரங்கள் ஆகி விடும். பிறகு அங்கிருந்து மாமல்லபுரம் அல்லது அமாரவதி துறைமுகத்துக்கு கப்பலில் போய்விடலாம். அப்படி எதுவும் முடியவில்லை என்றால் கலிங்கம் போகும் கப்பலில் ஏறிவிட வேண்டியதுதான். அங்கிருந்து தரை வழியாக பல்லவ நாட்டிற்கு போய்விடலாம். இங்கிருந்து கலிங்கம் போவதை விட, கலிங்கத்தில் இருந்து பல்லவநாடு போவது தான் ஆபத்தானது. எங்கு என்ன போர் நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியாது.’ என்றான் சடைய வர்மன்.

‘சரி நீ எப்போது பல்லவ நாட்டில் இருந்து கிள்ம்பினாய்? எப்படி சம்பா வந்து சேர்ந்தாய்? உன் கதையை சொல்லு’ ராஜசிம்மன் கேட்க சடையவர்மன் சொன்னான்

‘தாங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றே யாருக்கும் தெரியாது. தங்களைத் தேடி மொத்தம் ஒன்பது ஒற்றர்கள் கிளம்பினோம். சீனா, சாவகம், கடாரம், மணிபல்லவம், பூணான் என்று ஆளுக்கு ஒரு திசையில்; தங்கள் தந்தை பல்லவ வேந்தர் பரமேஸ்வர பல்லவரின் ஓலையை எடுத்து கொண்டு புறப்பட்டோம். நான் கடாரம் போய் அங்கிருந்து தரை வழியாக சம்பா வந்து சேர்ந்தேன். சிவ பெருமானின் கருணையால் தங்களை கண்டு பிடித்தேன்.’

‘நான் தான் பல்லவ இளவரசன் என்று எப்படி கண்டு பிடித்தாய்?’

‘தாங்கள் தங்கள் தந்தையின் முக சாயலில் இருப்பது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதோடு இல்லாமல், அன்று கோவில் கல்வெட்டில் நீங்கள் வட்டெழுத்தில் தமிழில் எழுதிக் கொண்டிருந்தீர்கள். எல்லோரும் சமஸ்கிருதத்தில் எழுதிக் கொண்டிருக்கும் போது நீங்கள் ஒருவர் தான் தமிழில் வட்டெழுத்தில் எழுதிக் கொண்டிருந்தீர்கள். தங்கள் தாயார் சொன்னது போல் தங்கள் மார்ப்பில் போர் தழும்பு இருந்தது.’

‘அடே அப்பா. நல்ல கெட்டிகாரன்யா நீ. ஒற்றர்கள் என்றால் உன்னை போல் தான் இருக்க வேண்டும். நீ எப்போதும் என் கூடவே இருந்து விடு.’

‘அதைவிட வேறு பாக்கியம் எனக்கு என்ன வேண்டும் அரசே.’

கடலை பார்த்தவாறே தன் மனதில் உள்ள எண்ணங்களை சடையவர்மனிடம் சொல்கிறான் ராஜசிம்மன்.

‘சடையா! எனக்கு பெரிய பெரிய கனவுகள் உண்டு. தெய்வ தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கடல் கடந்து பல்லவர்களின் பெருமையை நிலை நாட்ட வேண்டும். இந்த தீவுகள் அனைத்திலும் பல்லவர்களின் சிம்ம கொடி பறக்க வேண்டும். என் முப்பாட்டன்கள் போலவே நானும் சரித்திரத்தில் நீங்க இடம் பெற வேண்டும். இந்த பிரதேசம் முழுவதும் பரவி இருக்கும் சமஸ்கிருத எழுத்துகளை அழித்து விட்டு, புதிய தமிழ் எழுத்துகளை கொண்டு வர வேண்டும். தமிழ் மொழியை பரப்ப வேண்டும். கடற்கொள்ளையர்களை எல்லாம் அழித்து பல்லவர்கள் வணிபத்தை விஸ்தரிக்க வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத பெரிய பெரிய சிவன் கோவில்களை கட்ட வேண்டும். என் மன எண்ணங்கள் நிறைவேற வேண்டும். போரில் காலத்தை கழிக்காமல் தெய்வ காரியத்திலும் மொழி வளர்ச்சிக்கும் முக்கியத்தும் கொடுக்க போகிறேன்.’

‘அரசே! கண்டிப்பாக நடக்கும். ஆனால் முதலில் இந்த சாளுக்கியர்களை அடக்கி வைக்க வேண்டும். பாண்டியர்களுக்கும் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். நாம் போர் வேண்டாம் என்றாலும் இவர்கள் நம் மீது போரை திணித்து விடுவார்கள் போலிருக்கு. நான் புறப்படும் போது, நம்முடைய மாபெரும் பல்லவ படை, விக்கிரமாதித்தனை தடுத்து நிறுத்த பெருவள நல்லூர் நோக்கி போய் கொண்டிருந்தது. அதன் பின் எந்த செய்தியும் எனக்கு தெரியாது.’

கனவு உலகில் இருந்து விடு பட்டவனாய்,

‘மிக சரியாக சொன்னாய் சடையா! முதலில் பக்கத்தில் இருக்கும் எதிரிகளையும் துரோகிகளையும் அழிக்க வேண்டும். அப்போதுதான் சரித்திரத்தில் இடம் பெற கூடிய பெரிய பெரிய காரியங்கள் செய்ய முடியும்.’ என்று பேசி முடித்தான் ராஜசிம்மன். இந்த ராஜசிம்மன் தான் பிற்காலத்தில் சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்த இரண்டாம் நரசிம்ம பல்லவன். இவனே சம்பா நாட்டின் இளவரசி ரங்கபாதையை மணம் முடித்தான். பிற்காலத்தில் சாவகம் தீவில் சைலந்திராவின் மகா ராஜ்ஜியம் அமைய காரணமாக இருந்தான். பிற படைகளை எல்லாம் அடக்கி, ஒரே குடையின் கீழ் கம்போஜ நாட்டை கொண்டு வந்தான். சம்பா நாடு பலம் பொருந்திய நாடாக உருவாக காரணமாக இருந்தான்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “சம்பா நாட்டு இளவரசி

  1. கதையை வாசித்து கருத்து கூறியதற்கு மிக்க நன்றி.

 1. இதை படிக்கும்போது நம் தமிழத்தின் பெருமை வாழ்ந்த திரு .ரா. கிரிஷ்ணமுர்த்தி (கல்கி) அவர்களைத்தான் நினைவுக்கு வருகின்றது. கூட திரு. சாண்டில்யனையும் கூட. பழங்கால சரித்திரங்களை படிக்க ஆர்வம் இல்லாதவர்களும் போட்டி போட்டுக்கொண்டு அந்தக்காலத்தில் வார இதழ்களை ஆர்வமாக படித்தனர். இது போன்ற சரித்திரம் சம்பந்தம் உடைய நாவல்கள் நிறைய படித்தால் தான் நாம் அந்தக் காலத்து நிகழ்வுகளை நன்றாக அறிய முடிந்தது. அப்படிப்பட்ட நாவல்கள் அழியா வரங்கள் பெற்றுவிட்டன.

  வாழ்க thamizhagam.

  “மண்டகொளத்தூர் சுப்ரமணியன்”
  சப்பல் ஹில், வடக்கு கரோலினா,
  27516, யு.எஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *