கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 28, 2023
பார்வையிட்டோர்: 3,885 
 
 

(1983ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜலதரங்கம் | புது உத்தியோகம் | கள்வன்

மல்லிநாதரிடம் சீடப்பிள்ளையாகச் சேர்ந்த அந்த முதல் இரவில் பக்கத்து அறையில் சந்திரமதி ஜலதரங்கம் இசைப்பது போல் வெளியிட்ட சிரிப்பொலி சத்ருஞ்சயனின் உணர்ச்சிகளை யெல்லாம் தொட்டதால் பற்பல எண்ணங்களில் அவன் ஈடுபட்டான். அவள் மாலையிலிருந்து தன்னிடம் நடந்து கொண்ட முறையிலிருந்து உலகம் வர்ணித்ததுபோல், அவள் தந்தை மல்லிநாதர் நினைத்தது போல், சந்திரமதி அத்தனை ராட்சஸியாயிருக்க முடியாதென்று திட்டமாகத் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

காட்டுப் பகுதியில் தான் கைதட்ட முயன்ற சமயத்தில் தன்னைத் தடுத்த மல்லிநாதர், “அவளை மணப்பது மரணத்தை மணப்பதற்குச் சமானம்” என்று கூறியது தன்னை அச்சமுறுத்துவதற்கே இருக்க வேண்டுமென்று அவன் நம்பினான். அவன் தன் தலைக்கு நீரூற்றியபோது அவள் முழங்காலுக்கு மேற் பகுதிகளை எத்தனை லாவகமாகத் தனது சீலையால் மறைத்துக் கொண்டாள்? எத்தனை லாவகமாக தனது சீலையைச் சுருட்டி இரண்டு கால்களுக்கு நடுவில் இடுக்கிக் கொண்டாள் என்பதை எண்ணி. பார்த்த சத்ருஞ்சயன் பண்பெல்லாம் உருவான ஒரு பெண்ணைத் தான் சந்தித்ததை உணர்ந்து கொண்டான்.

பிறகு தனக்கு அவள் ஆடை கொணர்ந்தது பூஜைக்கு உதவியது அனைத்தையும் ஒவ்வொன்றா நிகழ்ச்சிகளை மனத்தில் ஓடவிட்ட சத்ருஞ்சய தான் அவளிடம் மனத்தைப் பறிகொடுத்துவிட்டதை புரிந்து கொண்டான். அது ராஜத் துரோகமென்பது அவனுக்குத் தெரிந்தே இருந்தது. மன்னனுக்கு தூக்கிச் செல்ல வேண்டிய பெண்ணை அடைய முயல்வது தவறு என்பதை உணர்ந்த அவன் ‘சிழ தவறுகளிலிருந்து மனிதர்கள் தப்ப முடிவதில்லை’ என்றும் உள்ளூரப் பேசிக் கொண்டான். இருப்பினும் தந்தையின் ஆணையை முன்னிட்டு, “நாளை முத அவளை நான் சந்திப்பதில்லை” என்று உள்ளூர பிரமாணமும் செய்து கொண்டான்.

ஆனால் அந்த முதல் இரவிலேயே அவன் அபிமாணத்தை அவனது புத்தி சுக்கு நூறாக உடைத்து கொண்டிருந்தது. திரும்பத் திரும்ப அவளையும் முக்காட்டிற்குள்ளும் தெரிந்த அவள் கருவண்டு விழ களையும் விற்களைப் போன்ற புருவங்களையும் என் ணிக் கொண்டே இருந்தான். கடைசியில் ஒரு முடிவுக்கும் வந்தான். எப்படியும் மறுநாள் காலையில் மல்லநாதரிடம் உண்மையைக் கூறிவிட்டுத் திரும்ப உதயபுரிக்கு ஓடிவிடுவதென்ற தீர்மானத்துக்கும் வந்தானா னாலும் விதி வேறு விதமாக விளையாடிவிட்டது.

காலையிலே எழுந்திருந்த அவன் தனக்கு முன்பே சந்திரமதியும் குருநாதரும் எழுந்து விட்டதையும், பூஜைக்கு சகலமும் தயாராயிருந்ததையும், போர் வித்தை பயில ஐந்தாறு மாணவர்களும்,கூடத்தில் நின்றிருந்ததையும் கவனித்து வெட்கத்துடன் தோட்டத்துக்கு ஓடித் துரிதமாக நீராடித் தனது உலர்ந்த ஆடைகளை அணிந்து நெற்றியில் திலகம் தீட்டி வேகமாகக் கூடத்துக்கு வந்தான் பூஜையில் பங்கு கொள்ள.

அன்று காலை மல்லிநாதரே பூஜை நடத்தினார். பிரசாதங்களை அவரே கொடுத்தார். வித்தியாப்பியா சத்தை ஆரம்பிக்கும் முன்பு சத்ருஞ்சயனை நோக்கி, “மகனே!” என்றழைத்தார்.

“குருநாதரே! கட்டளையிடுங்கள்,” என்றான் சத்ருஞ்சயன்.

“கொல்லைப் புறத்திலிருக்கும் காளையை அவிழ்த்துக் கொள். அங்குள்ள பெரும் அலகை எடுத்துக் கொள். சந்திரமதியுடன் ஆடு மேய்க்கத் துணையாகப் போய் வா” என்று கூறிவிட்டு அவனைத் திரும்பிப் பார்க்காமல் மற்றொரு சீடனுக்கு வாள் பயிற்சியை ஆரம்பித்தார்.

குருநாதர் தனக்கு வித்தை ஏதும் கற்பிக்காமல் ஆடு மேய்க்க அனுப்புவதைப் பற்றி ஒரு விநாடி சினந் தான்; ஒரு விநாடி வியந்தான். ஆனால் சந்திரமதிக்குத் துணையாகப் போவது வாள் பயிற்சியைவிடச் சிறந்தது என்ற எண்ணத்தால் குருவுக்குத் தலை வணங்கிச் சென்றான் கொல்லைப் புறம். அங்கிருந்த காளையை அவிழ்த்ததும் சந்திரமதி அங்கு தோன்றி, “அலகுக் கொம்பை எடுத்துக்கொண்டு தெருக் கோடிக்கு வாருங்கள்,” என்று உத்தரவிட்டாள்.

“அங்கு எதற்கு?” என்று சத்ருஞ்சயன் கேட்டான்.

“ஆட்டுக்கிடையை அங்குள்ள திடலில் தங்க வைத்திருக்கிறேன்,” என்று கூறிவிட்டு வாசல் புறமாக நடந்தாள் சந்திரமதி. அலகுக் கோலை எடுத்துக் கொண்டு சத்ருஞ்சயனும் அவளைப் பின்பற்றி நடந் தான். தெருக்கோடியிலிருந்த ஆடுகளிடம் சென்று சந்திரமதி குரல் கொடுத்ததும் ஆடுகள் தலைகளைத் தூக்கி ஆவலுடன் பார்த்தன. அவள் தன் மடியிலிருந்து குழலை எடுத்துச் சின்னஞ் சிறு கீதத்தை வாசித்ததும் ஆடுகள் கும்பலாகவும், நான்கு நான்காக ஒரே சீராகவும் கோட்டை வாயிலை நோக்கி நடந்தன.

சந்திரமதி அடுத்து முதல் நாள் போல் காளையில் ஏறிக் கொண்டாள். “நீங்கள் பின்னால், வாருங்கள் கோலுடன்” என்று கூறிவிட்டு, காளை வயிற்றை அவளது அழகிய கால்களால் தட்ட காளையும் ஒய் யார நடை போட்டது.

கோட்டை வாயிலுக்கு வந்ததும் காளையிலிருந்து திரும்பி சத்ருஞ்சயனைப் பார்த்த சந்திரமதி, “டேய்! கோலைப் பிடித்துக் கொண்டு தீவட்டி பிடிப்பவன் போல் நிற்காதே. முன்னால் நட. ஆடுகளைச் சரியாக வளைத்து ஓட்டு,” என்று உத்தரவிட்டாள்.

சத்ருஞ்சயன் அவள் மரியாதையற்ற வார்த்தைகளுக்கு, வார்த்தைகளில் பிறந்த கட்டளைக்கு, படியலாமா, வேண்டாமா என்று ஒரு விநாடி சிந்தித்தான். அடுத்து “கட்டளை அம்மணி” என்று சொல்லிக் கொண்டு ஆடுகளுக்கு முன்னால் ஓடி, “ஏய்! ஏய்!” என்று ஆடுகளை விரட்டினான்.

அன்று காலையும் முதல் நாள் காவலரே காவல் செய்தமையால் சத்ருஞ்சயனைக் கண்டு புன்முறுவல் பூத்தனர். “இவன் வேலையாள்தான், மல்லிநாதர் சொன்னது பொய்யல்ல,” என்றான் ஒரு காவலன்.

“தெரியாமலா நமது தலைவர் நம்மைக் கடிந்து கொண்டார்?” என்றான் இன்னொரு காவலன்.

அடுத்து கோட்டை வாயில் கதவு திறக்கப்பட்டு ஆட்டு மந்தை பாய்ந்து வெளியில் சென்றது. சத்ருஞ் சயன் அவற்றுக்கு முன்னால் ஓடினான். ஆடுகள் வழக்கமாக மேயும் இடத்தை நாடிச் சென்றன. பின் னால் சந்திரமதி காளைமீது கம்பீரமாக உட்கார்ந்து குழலை ஊதிக்கொண்டு வந்தாள்.

அடுத்த ஒரு நாழிகைக்குள் ஒண்டாலா கோட்டை தூரத்தில் தெரிந்தது. முதல்நாள் தான்வந்த பாதையையும் பார்த்தான் சத்ருஞ்சயன். அதைத் தாண்டி சிறிது தூரத்தில் பெரும் புல்வெளியிருந்தது. அதில் ஆடுகள் நின்று மேயத் தொடங்கின. சந்திரமதியும் காளையிலிருந்து இறங்கிப் புல்வெளியை அடுத்திருந்த தோப்புக்குள் நுழைந்தாள். சத்ருஞ்சயனையும் வரு மாறு சைகை செய்துவிட்டு சற்று வேகமாகவே நடந்து தோப்பின் நடுவிலிருந்த ஒரு மரத்தடியில் சாய்ந்து நின்று தலையைக் குனிந்த வண்ணம், “நீங்கள் மன்னிக்க வேண்டும்,” என்று கூறினாள் சத்ருஞ் சயனை நோக்கி.

சத்ருஞ்சயன் முகத்தில் வியப்பைக் காட்டினான். “எதற்கு மன்னிப்பு?” என்று கேட்கவும் செய்தான்.

“தங்களை மரியாதைக் குறைவாக ‘டேய்’ என்று வேலைக்காரனைப் போல சற்று முன்பு அழைத்தேன்,” என்ற சொற்களைத் தடுமாற்றத்துடன் சொன்னாள்.

‘ஆம்’ என்றான் அவன் பதில் சொல்ல வேண்டு மென்பதற்காக.

“கோட்டை வாயில் காவலனை ஏமாற்றுவதற்காக அப்படி அழைக்க வேண்டியதாயிற்று,” என்றாள் சந்திரமதி மீண்டும்.

“புரிந்து கொண்டேன்,” என்றான் சத்ருஞ்சயன். “மன்னித்ததாகச் சொல்லவில்லையே?” என்று அவள் கேட்டாள்.

“காவலனை ஏமாற்ற அந்த வேஷம் போட்டீர்கள். அதற்கு மன்னிப்பு எதற்கு?” என்ற சத்ருஞ்சயன், “அம்மணி! உங்களைப் பெயர் கொண்டு அழைக்கலாமா?’ என்று வினவினான்.

அவள் ஒரு விநாடிகூட சிந்திக்கவில்லை. “அழையுங்களேன்” என்று கூறினாள்.

“சந்திரமதி!” என்று அழைத்தான் சத்ருஞ்சயன். அப்படி அழைப்பதிலேயே தனது மனம் உணர்ச்சியில் மூழ்குவதைக் கண்டான்.

“என்ன?” என்றாள் அவள் மெதுவாக.

“இந்த உலகம் ஒரு நாடக மேடை. நாம் எல்லாருமே வேஷம் போடுகிறவர்கள். நான் வேஷம் போடவில்லையா?” என்று வினவினான் அந்த வாலிபன்.

“என்ன வேஷம் போட்டீர்கள்?” என்று அவள் கேட்டாள்.

“ஆட்டுக்காரன் வேஷம்” என்று பொய்யைச் சொல்லிச் சமாளித்துக் கொண்ட சத்ருஞ்சயன் நகைத் தான். அவளும் நகைத்தாள் இன்பமாக.

பிறகு சொன்னாள், “வீரரே! இல்லை இல்லை சீடரே! நான் ஆடுகளுக்கு இந்த மரத்திலேறிப் பெரிய கிளை உடைக்கிறேன். நீங்கள் அலகால் தழைகளை மாத்திரம் சிறு கிளைகளாக முறியுங்கள்” என்று கூறி விட்டு அடுத்து என்ன செய்யப்போகிறாள் என்பதை சத்ருஞ்சயன் ஊகிக்கு முன்பாக தான் தங்கியிருந்த மரத்தில் தாவி மேற்கிளையில் ஏறிவிட்டாள்.

கிளைகள்மீது சர்வ லகுவாகத் தாண்டிச் சென்ற சந்திரமதியைக் கீழிருந்தே வியப்புடன் பார்த்தான் சத்ருஞ்சயன். ஆடையை வரிந்து தார்ப்பாச்சாகக் கட்டி கிளைகளில் தாவித் தாவிக் கிளைகளை உடைத்துப் போட்டவிதத்தையும், அவள் கால்களின் அழகையும் கவனித்துக் கொண்டே வாயைப் பிளந்து கொண்டிருந்த சத்ருஞ்சயன் திடீரென்று கூவினான், “சந்திரமதி! பின்னால் வந்துவிடு,” என்று.

அடுத்து கையிலிருந்த அலகுக் கத்தியால் அந்த மரக்கிளையிலிருந்த கண்குத்தி பாம்பு ஒன்றையும் குத்தி எடுத்தான். அவள் தப்பினாள் அந்த ஆபத் திலிருந்து. ஆனால் இன்னோர் ஆபத்து அடுத்த விநாடி உதயமாயிற்று. அவன் கூவலால் அவள் பட்டுப் போன கிளைமீது காலை வைத்திடவே கிளை சரெலென முறிந்தது. தலை கீழாகப் பூமியில் விழ இருந்தவளைக் கோலை எறிந்துவிட்டுத் தனது இரு கைகளாலும் ஏந்திக் கொண்டான் சத்ருஞ்சயன். அப்படி அவன் தாங்கியதால் அவள் உணர்ச்சிகளும் குலைந்திருக்க வேண்டும். அவள் இரு கைகளும் அவன் கழுத்தை வளைத்தன.

– தொடரும்

– சந்திரமதி (குறுநாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *