பல்லவ மன்னன் நந்திவர்மன் சிவனடியார் போன்று வேடமிட்டுக் கொண்டான். அவனுடைய தலைமை அமைச்சர் இறையூர் உடையான் சிவனடியாரின் சீடன் போன்று வேடமிட்டுக் கொண்டான். அவர்கள் இருவரும் தெள்ளாற்றுக்கு அருகில் உள்ள ஒரு கல் மண்டபத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மன்னன் நந்திவர்மன் அமைச்சரை பார்த்து “சீடனே! இன்று நாம் நாட்டு நடப்பை நேரில் கண்டு வருவதற்கு எங்கு சென்று வரலாம் என்பதை பற்றி ஒரு யோசனையைக் கூறுங்கள்“ என்று வழக்கம்போல் மன்னன் நந்திவர்மன் அமைச்சரிடம் கேட்டான்.
“மன்னா! மன்னிக்க வேண்டும். சுவாமி! இன்று நாம் இருவரும் இதே வேடத்தில் தெள்ளாற்றுக்கு அருகில் இருக்கும் கடம்பவனம்பட்டி கிராமத்திற்கு சென்று மக்கள் நிலையை அறிந்து வரலாம் என்று நினைக்கிறேன் சுவாமி” என்றான் தலைமை அமைச்சர் இறையூர் உடையான்.
“எனது நம்பிக்கைக்கு உரிய சீடனே ஏன் கடம்பவனம்பட்டி கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறீர்”.
“தெள்ளாற்றுக்கு அருகில் இருக்கும் கடம்பவனம்பட்டி கிராம மன்றத்தின் தலைவி பெருங்கருணை என்பவரின் தலைமையில் நீதி விசாரணை நடைபெறுகிறது. கிராம மக்களின் முன்னிலையில் குற்றவாளியாகக் கருதப்படும் கள்ளபிரான் என்பவனிடம் நீதி விசாரணை நடைபெறுகிறது என்பதை கேள்விபட்டேன் மன்னா! மன்னிக்கவேண்டும் சுவாமிகளே”.
“கள்ளபிரான் என்பவன் யார்? திருடனா அல்லது கொள்ளைக்கூட்டதைச் சேர்ந்தவனா? எதற்காக அவன்மீது அந்தக் கிராம மன்றத்தில் விசாரணை என்பதை சீடனே நீங்கள் அறிவீரா” என்று கேட்டான்.
“இல்லை மன்னா! மறுபடியும் மன்னிக்க வேண்டும் மன்னரே தாங்கள் தற்போது சிவனடியார்போன்று மாறுவேடத்தில் இருப்பதையே எனக்கு மறந்து விடுகிறது. கள்ளபிரான் என்பவன் கடம்பவனம்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஒரு மொடாக் குடிகாரன். அவன் குடித்து விட்டு அந்தக் கிராம எல்லையில் உள்ள குளத்திலிருந்து, தண்ணீர் எடுத்து வரும் இளம் பெண்களிடம் வம்பு செய்வது, கேலிபேசி சிரிப்பது என்பதையே அவன் வழக்கமாக வைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் நான் விசாரித்து அறிந்து கொண்டேன் சுவாமி“ கள்ளபிரானைப் பற்றி தான் அறிந்தவற்றை இறையூர் உடையான் கூறினான்.
கள்ளபிரான் கடம்பவனம்பட்டி கிராமத்தில் குடியிருப்பவன். அவன் ஒரு மொடாக் குடிகாரன் என்றும் பெண்களிடம் வம்பு செய்பவன் என்றும் காற்றுவாக்கில் அமைச்சருக்குக் கிடைத்த செய்திகளாகும். மேலும் அக்கிராமத்து மக்களிடம் அமைச்சர் இறையூர் உடையான் தனக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமான வீரர்கள் மூலம் கள்ளபிரானைபற்றி விசாரித்திருந்தான். அக்கிராம மக்கள் கள்ளபிரானைப் பற்றி வேறு எந்தவிதமான தகவல்களும் தெரிவிப்பதற்கு மறுத்து விடுகிறார்கள் என்பதை மன்னன் நந்திவர்மனிடம் கூறினான். அவ்வாறு அவர்கள் மறுப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று மன்னன் நந்திவர்மனிடம் அமைச்சர் இறையூர் உடையான் தெரிவித்தான்.
“என்னுடைய ஆட்சியில் அதுவும் பெண்களிடம் வம்பு செய்யும் அந்தக் கள்ளபிரானை கடம்பவனம்பட்டி கிராம மக்களில் ஒருவர்கூட ‘ஏன்?’ என்று தட்டிக்கூடக் கேட்கவில்லையா?” என்று வருத்தத்துடன் மன்னன் கேட்டான்.
“சுவாமி நான் கள்ளபிரானைப் பற்றி விசாரித்ததில் அவனைப்பற்றி அக்கிராம மக்கள் வெளிப்படையாக எதுவும் கூறுவதற்கு தயங்குகிறார்கள் என்பது நன்கு தெரிய வருகிறது. காரணம் என்ன என்று எனக்கும் ஒன்றும் விளங்கவில்லை. கள்ளபிரானைப் பார்த்து அந்தக் கிராம மக்கள் என்ன காரணத்தினால் பயந்து நடுங்குகிறார்கள் என்பதும், எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. ஒருவேளை கள்ளபிரான் என்பவனுக்குப் பின்னால் பலம் பொருந்திய கூட்டம், எதுவும் அவனிடம் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. சுவாமி எது எப்படி இருந்தபோதிலும், நாம் இருவரும் இதே மாறுவேடத்தில் கடம்பவனம்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் சுவாமி“ என்று கூறினான்.
கள்ளபிரான் குடித்துவிட்டு குளக்கரையில் தண்ணீர் எடுத்து வரும் பெண்களின் சடையைப் பிடித்து இழுத்து அவர்களை கீழே விழும்படி செய்து, கீழே விழுந்து அவர்கள் அவதிப்படுவதைக் கண்டு சிரித்து மகிழ்வது அவனது பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. அவன் ஒரு மொடாக் குடிகாரன் என்பதைக்கூட கிராம மக்கள் ஒன்று கூடி அக்கிராம மன்றத்தலைவி பெருங்கருணையிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டார்கள். கள்ளபிரானை பற்றி தெரிந்திருந்தும் கிராம மக்கள் அவனை எதுவும் தட்டிக் கேட்பதில்லை. ஆனால் தண்ணீர் எடுத்து வரும் பெண்களிடம் கள்ளபிரான் குடிகாரன் எதுவும் வம்பு செய்யாமல் இருப்பதற்காக, கிராமப் பெண்களின் பாதுகாப்பு கருதி குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் பெண்களுக்கு கிராம மக்களில் சிலர் பாதுகாவலர்களாக இருந்து வந்துள்ளனர்.
“சுவாமி நாம் இருவரும் இதே வேடத்தில் கடம்பவனம்பட்டி கிராமத்திற்குச் சென்று கிராமமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து விட்டு வருவோம். பெருங்கருணை யார்? கள்ளபிரான் யார்.? அவன் இளம்பெண்களிடம் வம்பு செய்து கொண்டிருப்பது அக்கிராம மக்களுக்கு தெரிந்திருந்தும் என்ன காரணத்திற்காக அவனைத் தட்டிக் கேட்காமல் அமைதியுடன் இருக்கிறார்கள் என்பது குறித்து அனைத்து கேள்விகளுக்கும் நமக்கு விடை கிடைத்து விடும் என்று எனக்குத் தோன்றுகிறது சுவாமி“ என்று மன்னிடம் கூறினான் அமைச்சர் இறையூர் உடையார்.
சிவனடியார் வேடமிட்ட நந்திவர்மனும் சீடனாக வேடமிட்ட அமைச்சர் இறையூர் உடையாரும் கடம்பவனம்பட்டி கிராமத்தினை அடைந்தார்கள். அப்போது கடம்பவன கிராமமக்கள் ஆலமரத்தடியில் கூடி இருந்தார்கள். சிலர் கைகட்டி நின்றுகொண்டு இருந்தார்கள். சிலர் கீழே உட்கார்ந்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் மன்றத்தலைவி என்ன தீர்ப்பு சொல்லப்போகிறாளோ என்று பதட்டத்துடன் காணப்பட்டார்கள். அப்போது சீடன் வேடத்தில் இருந்த அமைச்சர் அக்கூட்டத்தில் புகுந்து கூடியுள்ள மக்களிடம் தந்திரமாக சிரித்துப்பேசி, தேவையான விவரங்களை சேகரித்துக்கொண்டு வந்து மன்னன் நந்திவர்மனிடம் தெரிவித்தான்.
கடம்பவனம்பட்டி கிராமத்தின் மக்கள் கள்ளபிரானைப்பற்றி கிராம மன்றத்தலைவி பெருங்கருணையிடம் கூறுவதற்குத் தயங்கினார்கள். பெருங்கருணையின் உயர்ந்த உள்ளத்திற்காகவும் செயல்களுக்காகவும், கள்ளபிரான் தவறான செயல்களைக் கண்டு கிராம மக்கள் பார்த்தும் பார்க்காதவாறு இருந்து கொண்டார்கள். கிராம மன்றத் தலைவியாக இருக்கும் பெருங்கருணைக்கு கள்ளபிரான் செயல்களைப் பற்றி தெரிந்து விட்டால், தங்கள் கிராம மன்றத் தலைவிக்கு அவமானம் எதுவும் வந்து விடக்கூடாது என்று மனதில் நினைத்துகொண்டுதான் அமைதியாக கிராம மக்கள் இருந்திருக்கிறார்கள். அவளின் தன்னலமற்ற உதவியால், அக்கிராமத்தில் பல குடும்பங்கள் நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவள் இரவு பகல் பார்க்காமல் அந்தக் கிராம மக்களின் நலனுக்காக பாடுபட்டுக்கொண்டு இருந்திருக்கிறாள்.
அதனால் கள்ளபிரான் குடிப்பது பற்றியோ அவன் பெண்களிடம் வம்பு செய்யும் செயல்களைப்பற்றி பெருங்கருணையிடம் கூறி அவளையும் துன்பத்தில் ஆளாக்குவதற்கு அந்தக் கிராம மக்கள் யாரும் விரும்பவில்லை. கிராம மன்றத் தலைவி பெருங்கருணையிடம் கள்ளபிரான் செயல்களை பற்றி தாங்கள் கூறுவதால் , தங்கள் தலைவி மனம் துன்பப்பட்டு விடக்கூடாது என்பதில் அக்கிராம மக்கள் உறுதியாகவும் இருந்தார்கள். அந்தக் கிராமத்தைப் பற்றியும், கிராமத் தலைவி பெருங்கருணை பற்றியும் சுற்றியுள்ள கிராம மக்களிடம் நன்மதிப்பு பெற்று இருந்ததாலும். இவற்றையெல்லாம் கெடுப்பதற்கு கள்ளபிரான் பற்றி உண்மை நிலை பற்றி கூறுவதற்கு அந்த கிராம மக்கள் தயாராக இல்லை. கள்ளபிரான் கடம்பவனம்பட்டி கிராமமன்றத் தலைவி பெருங்கருணையின் கணவனாக இருந்தான் என்பது முக்கிய காரணம் ஆகும். அக்கிராம மக்கள் அவள் கணவன் கள்ளபிரானைப் பற்றி கூறுவதில் தயக்கம் காட்டியதற்கு பெருங்கருணையின் மீது அக்கிராம மக்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம் ஆகும்.
ஆலமரத்தடியில் கிராம மன்றத் தலைவி பெருங்கருணையின் தலைமையில் கிராம மக்கள் கூட்டம் கூடியிருந்தார்கள். கூட்டத்தில் சிலபேர் அமர்ந்தும் சிலபேர் கைகட்டி நின்றுகொண்டு இருந்தார்கள். சிவனடியார் வேடத்தில் இருந்த நந்திவர்மன் பல்லவமன்னனும் சீடன் வேடத்தில் இருந்த அமைச்சர் இறையூர் உடையார் இருவரும் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, கூட்டத்தில் என்ன நடக்கிறது? என்ன பேசுகிறார்கள்? என்பதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். கள்ளபிரான் கிராம மன்றத்தலைவி பெருங்கருணையின் முன்பாக கைகட்டி நின்று கொண்டிருந்தான்.
பெருங்கருணை கிராம மக்களைப் பார்த்து “இங்கு என் முன்னால் நிற்கும் கள்ளபிரான் பற்றி உங்கள் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்திருந்தும் என்னிடம் தெரிவிக்காமல் அவனது அடாவடித்தனங்கள் அனைத்து செயல்களையும் மறைத்து விட்டீர்கள். அதனால் இந்தக் கிராமத்தில் ஒரு குற்றவாளியை உங்களையும் அறியாமல் இந்தக் கிராமத்தில் வளர்த்து விட்டு இருக்கிறீர்கள். யாராக இருந்தாலும் அவர் எப்படிப்பட்ட தவறு செய்தாலும் அதனை முளையிலே கிள்ளி எறிய வேண்டும் என்பது உங்களுக்கெல்லாம் தெரியவில்லையா? தெள்ளாற்றில் இருந்து இங்கு வந்திருந்த சித்திரப்பாவை என்ற இளம்பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து கள்ளபிரான் வம்பு செய்திருக்கிறான். அந்தப்பெண் சித்திரப்பாவை வந்து என்னிடம் முறையிட்டபோதுதான் எனக்கு கள்ளபிரானைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
இங்கு இப்போது என் முன்னால் நிற்கும் சித்திரப்பாவை என்ற இந்தப்பெண் மட்டும் என்னிடம் வராமல் இருந்து உங்களைப்போன்று பயந்து கொண்டு கள்ளபிரானைப் பற்றி, பெண்களிடம் வம்பு செய்த செயல்களைப் பற்றி அவள் தெரிவிக்காமல் இருந்திருந்தால், அவன் இந்தக் கிராமத்தில் செய்து கொண்டிருந்த அடாவடித்தனம் எதுவும் எனக்குத் தெரியாமலே போய் இருக்கும். இங்கே உங்கள் முன்னால் தலைகுனிந்து நிற்கும் இந்தக் கள்ளபிரான், இதுவரை தான் செய்த குற்றங்களையெல்லாம் மறுக்காமல், என்னிடம் உங்கள் முன்பாக ஒப்புக் கொண்டு விட்டான். எனவே அவனுக்கு தண்டனை கொடுப்பதற்கு நான் முடிவு செய்து விட்டேன். இவனைத் தண்டித்தால்தான் பெண்களிடம் வம்பு செய்யும் இவனைப்போன்ற குற்றவாளிகள் இந்தக் கிராமத்தில் உருவாகாமல் இருப்பார்கள். இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பது பற்றி பயப்படாமல் தயங்காமல் என்னிடம் உங்களது யோசனையைக் கூறுங்கள்“ என்றாள். இதனைக் கேட்ட கிராம மக்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் எழுந்து நின்று “தாயே இந்த ஒருமுறை மட்டும் கள்ளபிரான் என்பவர் உங்கள் கணவராக இருப்பதால் கடுமையாக எச்சரித்து மன்னித்து விடலாம் தாயே” ஏன் என்றால் …
“பெரியவரே! கூறுங்கள் தயங்காமல்…”
“இவர் உங்களுடைய கணவராக இருப்பதால், அவரை மன்னித்து விடலாம். தாயே. இந்தக் கிராம மக்கள் அனைவரும் உங்களை குலதெய்வம்போல் நினைத்து கொண்டு இருக்கிறோம். நாங்கள் பயமும் கவலையும் இல்லாமல் இந்தக் கிராமத்தில் வசிக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நீங்கள்தானே தாயே“ என்று கூறி வணங்கி நின்றார்.
கூடியிருந்த கிராம மக்கள் அனைவரும் அந்தப் பெரியவர் கூறியதைக் கேட்டு ‘சரியென்று’ அனைவரும் ஆமோதித்தார்கள்.
“சரி நீங்கள் யாரும் கள்ளபிரானைத் தண்டிக்க விரும்ப மாட்டீர்கள் என்பது இப்போது எனக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. குற்றவாளியாக நிற்கும் கள்ளபிரான் என்னுடைய கணவர் என்ற காரணம்தான் எனக்கு நன்றாக புரிகிறது. எனவே நானே கள்ளபிரானுக்கு இந்தக் கிராம மக்களின் சார்பாக என்னுடைய தீர்ப்புக் கூறுகிறேன்“ என்று எவ்விதத் தயக்கமின்றி பெருங்கருணை அனைவரும் கேட்கும்படி தன்னுடைய தீர்ப்பை உரக்கக் கூறத் தொடங்கினாள்..
“தெள்ளாற்றிலிருந்து வந்திருந்த சித்திரப்பாவை என்ற இளம்பெண்ணிடம், இக்கிராமத்தில் வசிக்கும் குற்றவாளியாக நிற்கும் கள்ளபிரான் என்பவன் குடித்துவிட்டு, குடிபோதையில் அந்தப்பெண்ணின் கையைப்பிடித்து, வம்பு செய்திருக்கிறான். இந்தக் குற்றத்திற்காகவும், இதேபோல் இக்கிராமத்தில் உள்ள இளம் பெண்கள் குளத்திலிருந்து நீர் கொண்டு வரும்போதெல்லாம் கள் அருந்தி விட்டு பெண்களிடம் தகாத வார்த்தைகளைப் பேசியும் வம்பு செய்திருக்கிறான். மன்னிக்க முடியாத குற்றங்களை இவன் செய்திருக்கிறான். இவன் செய்த இந்த குற்றங்களுக்காக , உங்கள் முன்னால் குற்றவாளியாக நிற்கும் இந்தக் கள்ளபிரான், தெள்ளாற்றில் கோவில் கொண்டிருக்கும் மூலாட்டானேச்வரர் கோவிலை நாள்தோறும் காலையிலும் மாலையிலும் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.
கோவிலில் உள்ள அனைத்து அகல் விளக்குகளிலும் தவறாமல் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் மிதியடிகளையெல்லாம் பாதுகாப்பதோடு அதனை சுத்தம் செய்து தரவேண்டும். கோவில் நந்தவனத்தில் உள்ள பூக்களை நாள்தோறும் பறித்து, கோவிலில் மாலை தொடுப்பதற்கு உரிய பணியாளரிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கிராம மக்கள் சார்பாக நான் கூறியதையெல்லாம் குற்றவாளியாக நிற்கும் கள்ளபிரான் ஒரு மண்டலம் தவறாமல் செய்துகொண்டு வர வேண்டும்.
குற்றவாளியாக நிற்கும் இந்தக் கள்ளபிரான் இவற்றையெல்லாம் கோவிலில் நாள்தோறும் ஒழுங்கானமுறையில் தவறாமல் செய்து வருகிறானா என்பதைக் கண்காணிப்பதற்கு இந்தக் கிராமத்தில் வசிக்கும் வந்தியத்தேவன் என்ற பெரியவரையும் நியமிக்கிறேன்.“ என்று பெருங்கருணை தீர்ப்பு வழங்கினாள். அதனைக் கேட்ட மக்கள் கூட்டம் சலசலப்புடன் அமைதியாகக் கலைந்து சென்றது. அதே சமயத்தில் கடம்பவனம்பட்டி கிராம மன்றத்தலைவியின் தீர்ப்பையும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டது.
கடம்பவனம்பட்டி கிராம மன்றத் தலைவி கூறிய தீர்ப்பின்படி கள்ளபிரான் கோவிலில் செய்கிறானா என்பதை காண்பதற்கு மன்னன் விரும்பினான். எனவே அதிகாலையில் மூலாட்டானேஸ்வரர் கோவிலில் மன்னன் நந்திவர்மனும் அமைச்சர் இறையூர் உடையாரும் பரிவாரங்களுடன், எவ்விதமான அறிவிப்பும் இல்லாமல் வந்து இறங்கினார்கள். அப்போது கள்ளபிரான் கோவிலில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து கொண்டிருந்தான். கடம்பவனம்பட்டி கிராம மன்றத் தலைவி பெருங்கருணை கோவிலை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அதனைக் கண்டு மன்னன் அதிர்ச்சி அடைந்தான். கோவில் முன்னால் வந்திறங்கிய மன்னன் நந்திவர்மன் அமைச்சர் இறையூர் உடையாரைக் கண்டவுடன் கள்ளபிரானும் பெருங்கருணையும் அவன் முன் வணங்கி நின்றார்கள்.
மன்னன் நந்திவர்மன் கிராம மன்றத் தலைவி பெருங்கருணையைப் பார்த்து “நேற்று கடம்பவனம்பட்டி கிராமத்திற்கு நானும் அமைச்சரும் வந்திருந்தோம். கிராம மக்கள் கூட்டத்தில் நடந்தவற்றையெல்லாம் இருவரும் மாறுவேடங்களிலிருந்து பார்த்து நின்றோம். உனது கணவன் கள்ளபிரானுக்கு நீ துணிச்சலாக வழங்கிய தீர்ப்பையும் கேட்டு வியப்புற்றோம். அதேசமயத்தில் உன்னைப்பற்றி உனது நீதி வழங்கிய விதத்தைக் கண்டு பெருமையும் கொண்டோம். தவறு செய்தவன் உன் கணவர் என்று நீ தெரிந்திருந்தும், அவனை மன்னிக்காமல் குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவது அவசியம் என்று தீர்ப்பு வழங்கியதை நாங்கள் இருவரும் பார்த்தும் கேட்டுக் கொண்டிருந்தோம்.
நீ கிராம மக்கள் சார்பாக கூறிய தீர்ப்பைக் கேட்டும் உனது துணிவைக் கண்டும் நாங்கள் வியந்து நின்றோம். கிராம மன்றத்தலைவியாகிய உன்னுடைய தீர்ப்பில் கள்ளபிரானுக்குத்தானே கோவிலை சுத்தம் செய்வதற்கு நீ தண்டனை கொடுத்து தீர்ப்பு வழங்கினாய். ஆனால் நீயும் அவனுடன் சேர்ந்துகொண்டு இப்போது இந்தக் கோவிலை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாயே. இதன் காரணம் என்ன என்பது குறித்து எனக்கு விளங்கவில்லையே.“ என்று மன்னன் சந்தேகம் தெளிவடைவதற்கு கேட்டான்.
“மன்னா! நான் கடம்பவனம்பட்டி கிராமத் மன்றத்தலைவி என்ற நிலையிலிருந்து என்னோட கணவர் கள்ளபிரான் என்பவருக்கு தீர்ப்பு வழங்கி தண்டனை வழங்கினேன். இப்போது அவருடைய துணைவியார் என்ற நிலையில் இருந்து கோவிலை சுத்தம் செய்து கொண்டு அவருக்கு உதவி செய்து கொண்டு, இருக்கிறேன். இதில் என்ன வியப்பு இருக்கிறது மன்னா! ஏதும் நான் தவறாக தங்களிடம் பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் மன்னா “ என்று வணங்கி நின்றாள்.
மன்னன் நந்திவர்மன் அமைச்சரைப் பார்த்து “அமைச்சரே! மக்களில் சிலபேர் உணர்ச்சியில் இருக்க வேண்டிய இடத்தில், அறிவாக இருந்து செயல்படுகிறார்கள். சிலபேர் அறிவுடன் செயல்படவேண்டிய இடத்தில் உணர்ச்சி வயப்பட்டு வாழ்க்கையில் சிக்கலில் மாட்டிகொண்டு விழிக்கிறார்கள். ஆனால் இந்தப்பெண் பெருங்கருணை கிராமமன்றத் தலைவி என்ற நிலையில் இருந்து கொண்டு, கள்ளபிரான் தன்னோட கணவர் என்ற உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல், அறிவுடன் இருந்து சிந்தித்து நீதிக்கு முதலிடம் கொடுத்து கள்ளபிரானுக்கு தீர்ப்பு வழங்கினாள்.
இப்போது இந்தப்பெண் பெருங்கருணை குடும்பப்பெண்ணாக இருந்து இந்த இடத்தில் அறிவுக்கு இடம் கொடுக்காமல், உணர்ச்சிக்கு இடம் கொடுத்து, அவள் கணவர் கள்ளபிரானுக்கு கொடுத்த தண்டனையில், கணவருக்கு உதவியாக இருந்து வருகிறாள். அவன் பெற்ற தண்டனையில் பங்கு பெற்று பெருங்கருணை கோவிலையும் இப்போது சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்“ என்று பெருங்கருணையைப் பாராட்டி மன்னன் பேசினான்.
மன்னன் நந்திவர்மன் “கடம்பவனம்பட்டி கிராம மன்றத்தலைவி பெருங்கருணைத் தாயே! இன்று முதல் நீ குடிக்குறை துடைத்த நாச்சியார் என்று அழைக்கப்படுகிறாய், அதற்குரிய பொன்னாலான பட்டயத்தையும், உனக்கு மனம் மகிழ்ந்து வழங்குகிறேன். வாழ்க உனது தொண்டு உள்ளம்“ என்று கூறிகொண்டே அமைச்சர் இறையூர் உடையார் தயாராக வைத்திருந்த பொன்னால் பதிக்கப்பட்ட பட்டயத்தை வாங்கி, கிராம மன்றத் தலைவி பெருங்கருணையிடம் மன்னன் நந்திவர்மன் வழங்கி மகிழ்ந்தான்.
– வானமே எல்லை என்ற மாத இதழில் ஜூன் 2020 மாத இதழில் பிரசுரமானது