காக்கையைப் பாடின பெண்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 31, 2023
பார்வையிட்டோர்: 4,007 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நல்லதங்கை என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? பழைய காலத்தில் அப்படி ஒரு நாடகம் நடக்கும். நல்லதம்பி, நல்லண்ணன் என்ற பெயர்களேப்போல நல்ல என்ற சிறப்போடு கூடிய பெயர் நல்லதங்கை. மிகவும் பழங்காலத்திலும் நல்ல தங்கை என்ற பெயர் இருcதுவந்தது. அதே பெயர் இல்லா விட்டாலும் அந்த அர்த்தத்தை உடைய பெயர் இருந்தது. செள்ளை என்பது தங்கைக்குப் பெயர். இப்போது அது தமிழில் மறைந்து போய்விட்டது. செல்லலு என்று தங்கையைக் குறிக்கத் தெலுங்கில் ஒரு சொல் வழங்குகிறது. நச்செள்ளை என்பது ஒரு பெயர். நல்லதங்கை என்பதுபோன்ற பெயர்தான் அது. ந என்பது பெருமையைக் காட்டுவது.

நச்செள்ளை என்ற பெயரோடு ஒரு பெண் புலவர் இருந்தார். சின்ன வயசிலேயே அவருக்குக் கவி பாடும் திறமை உண்டாகிவிட்டது. ஒரு பெண்ணினுடைய கணவர் வெளியூருக்குப் போனார். போய்க் கொஞ்சகாலம் ஆயிற்று. வியாபாரமோ தொழிலோ செய்து பணம் சம்பாதித்து வரத்தான் போனர். கொஞ்ச நாளாகவே அவருடைய மனைவிக்குச் சிறிது வருத்தம் உண்டாயிற்று. போனவர், இன்னும் வரவில்லையே! எப்போது வருவாரோ’ என்று மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தாள்.

அப்போது நச்செள்ளையார் அங்கே வந்தார். அவர் சின்னப் பெண்ணாக இருந்த காலம் அது. கணவனை எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்து, ஆறுதல் சொன்னர். அப்போது ஒரு காக்கை விடாமல், ‘கா, கா!’ என்று கரைந்துகொண்டே இருந்தது, காக்கை கரைந்தால் யாராவது உறவினர் வீட்டுக்கு வருவார்கள் என்று சொல்வார்கள். அது நச்செள்ளேயாருக்குத் தெரியும். அதனால், வருந்தின பெண்மணியைப் பார்த்து, “இதோ பார்: காக்கை கரைகிறது. உன் கணவர் இன்றாவது நாளேயாவது நிச்சயமாக வந்துவிடுவார். வருத்தப்படாதே. அவரை வரவேற்கச் சித்தமாக இரு” என்று சொன்னார்.

அவர் சொன்ன வாக்குப் பலித்தது. அன்று மாலேயே ஊருக்குப் போயிருந்தவர் வந்துவிட்டார். அவருடைய மனைவியும் வருத்தம் நீங்கினாள்,காக்கை பாடினியார் வாக்குப் பலித்ததைப் பாராட்டிப் புகந்தாள்.

அவளுடைய கணவர், “நீ நான் வரவில்லையே என்று மிகவும் வருத்தம் அடைந்தாயோ? என்று கேட்டார். அப்போது அருகில் இருந்த நச்செள்ளேயார், “அதை ஏன் கேட்கிறீர்கள்? எப்போதும் முகத்தில் ஒளியில்லாமல் வாட்ட முற்று இருந்தாள். நல்ல வேளை காக்கை கரைந்தது. அதைக் காட்டி ன் ஆறுதல் சொன்னேன்’ என்றார்.

“அப்படியா? அப்படியானல் அவளுக்கு ஆறுதல் கூறிய உங்களுக்கு நான் மிக்க நன்றி கூறவேண்டும்’ என்றார் அந்த ஆடவர்.

“எனக்கா? சகுனம் சொல்லிய காக்கைக்குத்தான் நன்றி கூறவேண்டும். அது கரைந்ததைக் காட்டியல்லவா நான் ஆறுதல் சொன்னேன்” என்று சொன்ன நச்செள்ளையார் உடனே அந்தக் காக்கையைப் பாராட்டி ஒரு கவியைப் பாடினார்.

அக்காலத்தில் நள்ளி என்ற பெரிய மனிதர் ஒருவர் இருந்தார். அவர் பெரிய உபகாரி. அவருக்கு ஒரு நாடே சொந்தமாக இருந்தது. அந்த நாட்டில் நிறையக் காடுகள் இருந்தன. பல பசுக்கள் காடுகளில் வளர்ந்தன. அந்தக் காட்டில் உள்ள பசுவின் நெய்க்கு உள்ள மணமே தனி.

சோழ நாட்டில் தொண்டி என்று ஒர் ஊர் இருக்கிறது. அங்கே வயல்கள் மிகுதியாக இருக்கின்றன.

நச்செள்ளையார் காக்கையைப்பற்றிப் பாடின கவியில் நள்ளிக்குச் சொந்தமான காட்டுப் பசுவின் நெய்யையும் தொண்டியில் விளையும் நெல்லையும் சொல்லியிருக்கிறார். அதனால்தான் அவற்றைப்பற்றி இங்கே சொன்னேன்.

‘நல்ல சகுனமாகக் கரைந்த காக்கைக்கு நல்ல சோற்றைப் போடவேண்டும். நம்முடைய நன்றியறிவைக் காட்டவேண்டும் அல்லவா?” என்று அந்தப் பெண் புலவர் சொல்கிறார். எப்படிப் போடவேண்டும் என்பதை அழகாகச் சொல்கிறார்.

‘பலமான தேரிலே போகிற நள்ளி இருக்கிறானே, அவனுடைய காட்டில் ஆயர்கள் பலர் வாழ்கிறார்கள். அவர்கள் பசு மாடுகளே கன்றாக வளர்க்கிறார்கள். பால் கறந்து, பிறகு வெண்ணெய் எடுத்து, நெய் காய்ச்சுகிறார்கள். அங்கே போய்ச் சுத்தமான நெய்யை வாங்கிவர வேண்டும். எதற்குத் தெரியுமா?. நல்ல நெய்ப்பொங்கல் பண்ணுவதற்குத்தான். பிறகு, கொண்டியில் நன்றாக விளைந்த நெல்லை வாங்கிவர வேண்டும். அங்கேதான் மட்டையாக இராமல் அரிசி வெளுப்பாகக் கிடைக்கும். அந்த அரிசியைச் சமைத்து, நிறைய நெய்விட்டுச் செய்த பொங்கலை, இந்தக் காக்கைக்குக் கொடுக்கவேண்டும். சமைத்தவுடனே, கா, கா என்று காக்கைக்குச் சோற்றை இரைக்கிறோமே, அப்படிப் போடக்கூடாது. பாத்திரத்தில் கிளிக்கு ஏந்துவதுபோல ஏந்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் அல்ல, ஏழு பாத்திரங்களில் ஏந்தினாலும், அது செய்த உபகாரத்துக்கு ஈடாகாது. சிறிதென்றே சொல்லவேண்டும். அது செய்த நன்றி சிறிதா? என் தோழி உங்கள் பிரிவினால் மிகவும் வாடிப்போனாள். இவளுடைய பெரிய தோள் மெலிந்து போயிற்று. அப்படி மெலிந்த வருத்தம் நீங்கும்படியாக, விருந்தாளி வருவார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்தக் காக்கை கரைந்தது. அதற்குப் பலியாக ஏழு பாத்திரத்தில் நெய்ப் பொங்கலை ஏந்தினாலும் சிறிதுதான்.”

இப்படி ஒரு பாட்டை நச்செள்ளையார் பாடினார். அதைக் கேட்ட அந்த மனிதரும் அவருடைய மனைவியும் வியப்பில் ஆழ்ந்தனர். மற்றவர்களுக்கும் இந்தச் சிறிய பெண் இவ்வளவு அழகான பாட்டைப் பாடியதைக் கண்டு ஆச்சரியம் உண்டாயிற்று. ஊரே புகழ்ந்தது. புலவர்களும் பாராட்டினர்கள். முதல் முதலாகக் காக்கையைப் பாடிய நச்செள்ளையாருக்குக் காக்கை பாடினியார் என்ற பட்டப் பெயர் உண்டாயிற்று. காக்கை பாடினியார் என்று தனியாகவோ, காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்று சொந்தப் பெயருடன் சேர்த்தோ மக்கள் அவரைக் குறிக்கத் தொடங்கினார்கள்.

பிறகு அவர் பல பாடல்களைப் பாடினார். சேரன் அரசாண்டிருந்த சேர நாட்டுக்குச் சென்றார். அப்போது ஆடு கோட் பாட்டுச் சேரலாதன் என்ற அரசன், சேர நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். அவனிடம் சென்று, அவனைப் பாராட்டி, பத்துப் பாடல்களைப் பாடினார். அவற்றைக் கேட்ட மன்னன் மிகவும் மகிழ்ந்து, ஒன்பது துலாம் பொன்னும் லட்சம் பொற் காசும் வழங்கினான். ‘நல்ல ஆபரணம் செய்து போட்டுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி அந்தப் பொன்னை அளித்தான்.

அதுமுதல் காக்கை பாடினியாருடைய புகழ் அதிகமாயிற்று. அவர் மதுரைக்கும் சென்று, அங்கே உள்ள சங்கப் புலவர்களைப் பார்த்துப் பழகினார். பாண்டிய மன்னனக் கண்டு, தம் புலமையை வெளிப்படுத்திப் பரிசு பெற்றார்.

கவி பாடுவதிலே சிறந்த காக்கை பாடினியார், கவியின் இலக்கணம் நன்றாகத் தெரிந்தவர். கவியின் இலக்கணத்தை யாப் பிலக்கணம் என்று சொல்வார்கள். மிகவும் படித்த பெரிய புலவர்களே இலக்கணத்தை இயற்றும் அறிவைப் பெறுவார்கள்.

காக்கை பாடினியார் ஒரு யாப்பிலக்கணத்தை இயற்றினர். அது அவர் பெயராலேயே, காக்கை பாடினியம் என்று பெயர் பெற்றது. தொல்காப்பியர் இயற்றியது தொல்காப்பியம். அகத்தியர் இயற்றியது அகத்தியம். அதைப்போலக் காக்கை பாடினியார் இயற்றியது காக்கை பாடினியம்.

முதல் முதலில் காக்கையைப் பாடத் தொடங்கிய நச்செள்ளை, இலக்கணம் இயற்றும் நிலைக்கு உயர்ந்து, சிறந்து நின்றார் என்றால் பழையகாலத்தில் பெண்களுக்கும் எவ்வளவு பெருமை இருந்தது என்பது தெரியவரும்.

– கவிஞர் கதை, கலைமகள் வெளியீடு

Print Friendly, PDF & Email

1 thought on “காக்கையைப் பாடின பெண்

  1. மரியாதைக்குரிய பெரியவர் கி வா ஜாவின் வளமான செல்லாடல் மூலம் காட்டைப் பாடினியார் என்ற பெண் பால் புலவரின் சிறப்பை அறிந்து மகிழ்ந்தேன்.

    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *