கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 15, 2023
பார்வையிட்டோர்: 2,526 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோழ மன்னன் செங்கணானுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் நிகழ்ந்த போரில் சோழன் செங்கணான் வெற்றி பெற்றுவிட்டான். தோற்றுப்போன கணைக்கால் இரும்பொறையைச் சிறை செய்து சோழ நாட்டின் தலைநகரில் இருக்கும் குடவாயில் கோட்டத்துச் சிறைச்சாலையில் அடைத்தும் விட்டான்; பெரு வீரனான சேரமானைக் கைதியாக்கித் தன் சிறையில் கொணர்ந்து அடைத்ததனால் இணையற்ற பெருமிதம் கொண்டிருந்தான் செங்கணான். 

செங்கணான் கொண்ட பெருமிதத்திற்குக் காரணம் இருந்தது. பிறர் எவருக்கும் அடிபணிய விரும்பாமல் சுதந்திரப் பேரரசனாகத் தன்மானப் பண்பிற்கே இருப்பிடமாய் வாழ்ந்த சேரனைத் தான் ஒருவனே அடக்கிச் சிறை செய்த திறமை சோழன் பெருமிதம் கொள்வதற்கு உரியதுதானே? 

சேரமான் கணைக்கால் இரும்பொறையே ‘மானத்திற்காக வாழ்வது, அதற்கு அழிவு வந்தால் வீழ்வது’ என்ற உறுதியான கொள்கையுடையவன். குடவாயிற் கோட்டத்துச் சிறைச் சாலையில் அடைபட்டபின் ஒருநாள் தன்னுடைய அந்த உயரிய கொள்கையை நிரூபித்தும் காட்டிவிட்டான், அவன். 

‘மானத்தைக் காப்பாற்றுவதற்காக மனிதன் வாழ வேண்டும். மானத்தைப் பறிகொடுத்துவிட்டு வாழ்வதைக் காட்டிலும் சாவதே நல்லது!’ இவ்வுண்மையைத் தன் உயிரைக் கொடுத்துத் தமிழ்நாட்டிற்கு அறிவுறுத்திவிட்டுச் சென்றான் இரும்பொறை. அந்த நிகழ்ச்சிதான் கீழே வருகின்ற சிறுகதை. 

அன்று ஒருநாள் மாலை! குடவாயிற் கோட்டத்துச் சிறைச் சாலையில் ஒளி மங்கி இருள் சூழத் தொடங்கியிருந்த நேரம். சேரன் இருந்த சிறையின் வாயிலில் சிறைக் காவலர்கள் கையில் வேலுடன் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தனர். சிறைக்குள்ளே இருந்த சேரமானுக்குத் தண்ணீர் வேட்கை பொறுக்க முடியவில்லை. நாக்கு வறண்டு ஈரப்பசை இழந்தது. விக்கல் எடுத்தது. தாகம் கோரமாக உருவெடுத்து அவனைக் கொல்லாமல் கொல்லத் தொடங்கியிருந்தது. சிறைக்குள்ளே தண்ணீர் இல்லை. காவலாளிகளிடம் வாய் திறந்து கேட்கக்கூடாது என்று நினைத்திருந்தான் அவன். ‘அவர்களிடம் கேட்பது இழிவு; கேட்டபின் அவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டாலோ, இழிவினும் இழிவு’ என்றெண்ணிப் பொறுத்துக் கொள்ள முயன்றான் அவன். ஆனால் தாகத்தின் கொடுமை அவனைப் பொறுக்கவிட்டால்தானே? 

சிறைக் கதவின் ஓரமாகப் போய் நின்றுகொண்டு, “காவலர்களே! தண்ணீர் வேட்கை என்னை வதைக்கிறது. வேதனை தாங்க முடியவில்லை. பருகுவதற்குக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்” என்று வறண்ட குரலில் வேண்டிக் கொண்டான் அவன். 

இவ்வாறு அவன் வலுவில் வந்து தங்களிடம் தண்ணீர் கேட்டதனால் காவலர்களுக்குக் கொஞ்சம் இறுமாப்புப் பெருகிவிட்டது. 

“நேற்றுவரை நீ சேரமன்னனாக இருந்தாய்! பிறரை ஏவல் செய்து, ‘அது கொண்டு வா, இது கொண்டு வா,’ என்று சொல்வதற்கு உனக்குத் தகுதி இருந்தது. ஆனால் இன்றோ, நீ எங்களுக்கு அடங்கிய ஒரு சாதாரண கைதி. நீ ஏவினால் அந்த ஏவலுக்குக் கீழ்ப்படிந்து நாங்கள் உடனே தண்ணீர் கொண்டு வர வேண்டுமா? முடியாது! தோற்றுப்போன உனக்குத் தண்ணீர் ஒரு கேடா?” என்று கூரிய ஈட்டியைச் சொருகுவது போன்ற சொற்களை அவனுக்கு மறுமொழியாகக் கூறினர் அவர்கள். 

இந்தப் பதிலைக் கேட்டு இரும்பொறையின் நெஞ்சம் கொதித்தது. கைகள் அவர்களை அப்படியே கழுத்தை நெரித்துக் கொன்றுவிடலாம் போலத் துறுதுறுத்தன. ஆனால், அவர்களுக்கும் அவனுக்குமிடையில் ஒரு நீண்ட இரும்புக் கதவு இருந்தது. அவன் ஆத்திரத்திற்கு அந்தக் கதவு தடையாக நின்றது. இல்லையென்றால் அவர்கள் எலும்புகளை நொறுக்கியிருப்பான் அவனுக்கிருந்த கோபத்தில். 

‘ஆகா! இதைவிடக் கேவலமான நிகழ்ச்சி, என் வாழ்வில் இன்னும் வேறு என்ன நடக்க வேண்டும்? வாய் திறந்து ‘தண்ணீர்’ என்று கேட்டேன். ‘தண்ணீர் இல்லை’ என்று மட்டும் அவர்கள் சொல்லியிருந்தால் பரவாயில்லை. எவ்வளவு அவமானமாகப் பேசிவிட்டார்கள்! கேவலம், சிறைக் காவலர்கள் வாயிலிருந்து இத்தகைய சொற்களைக் கேட்கும்படி ஆகிவிட்டதே நம் கதி. இப்படி நாம் வாழ்வதைக் காட்டிலும் சாவது எவ்வளவோ உயர்ந்ததாயிற்றே?” 

“இழிந்த நாயைச் சங்கிலியாற்கட்டி இழுத்துக்கொண்டு வருவதுபோல என்னையும் விலங்கிட்டு இந்தச் சிறைச்சாலைக்கு இழுத்து வந்தார்கள். அப்போதே மானஸ்தனான என் உயிர் போயிருக்க வேண்டும்! ஆனால், போகவில்லை, பிச்சை கேட்பது போல இவர்களிடம் தாகம் தீர்த்துக் கொள்ளத் தண்ணீர் கேட்டேன். நம்மைவிட எவ்வளவோ தாழ்ந்தவர்களாகிய இந்தச் சிறைக் காவலர்கள் வாயிலிருந்து, “உனக்குத் தண்ணீர் ஒரு கேடா?” என்ற வார்த்தையை வாங்கிக் கட்டிக் கொண்டாயிற்று! இன்னும் நாம் உயிர் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?” இரும்பொறையின் மனத்தைக் கசக்கிப் பிழிந்தது ‘வாழ்வதா, இறப்பதா’ என்ற இந்தக் கேள்வி. 

இதற்குள் வெளியே இருந்த சிறைக் காவலர்களில் இளகிய உள்ளம் படைத்த ஒருவன் மற்றொருவனிடம் கூறினான்; “ஐயோ பாவம்! மனிதர் தவித்த வாய்க்குத் தண்ணீரின்றித் திண்டாடுகிறார். நீங்களெல்லாம் நெருப்பை வாரி வீசுவதுபோலக் கொடுஞ் சொற்களைக் கூறுகிறீர்களே! இதுவா, மனிதப் பண்பு? நீ கொஞ்சம் பார்த்துக் கொள் அப்பா. நான் போய்த் தண்ணீர் கொண்டு வருகிறேன்.” இரண்டாவது காவலன், “சரி! உன் விருப்பத்தை நான் ஏன் கெடுக்கிறேன்? போய் அவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துப் புண்ணியத்தைச் சம்பாதித்துக் கொள்” என்றான். முதற் காவலன் புறப்பட்டான். 

இரக்க குணமுள்ள அந்தக் காவலன் ஒரு குவளை நிறையக் குளிர்ந்த நீரைக் கொணர்ந்தான். சிறைக் கதவைத் திறந்து இரும்பொறையினருகில் சென்று குவளையை நீட்டினான். இரும்பொறை உயிர் வேதனையோடு மகாபயங்கரமாக விக்கிக் கொண்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்திற்குள் அவன் தண்ணீரைக் குடிக்காமலிருப்பானாயின் உயிரே போனாலும் போய்விடும். அவ்வளவு கோரமான நீர் வேட்கை. 

ஆனால், அந்த நிலையிலும்கூடக் காவலன் நீட்டிய தண்ணீர்க் குவளையை அவன் வாங்கிக்கொள்ள மறுத்து விட்டான். 

“காவலனே! உன் அன்புக்கு நன்றி. உயிரைவிட மானத்தையே பெரிதாக எண்ணுகிறேன் நான்.நீ கொடுக்கும் இந்த நீரை வாங்கிப் பருகிவிட்டால் இப்போது இந்த மரணவஸ்தையிலிருந்து என் உயிர் பிழைத்துவிடும். ஆனால், என்றைக்காவது ஒருநாள் எப்படியும் போகப் போகிற இந்த உயிர் மானத்தைக் காப்பதற்காக இன்றைக்கே போய்விடுவதினால் என்ன குறைந்துவிடப் போகிறது? கேவலம், பிச்சைக்காரன் பிச்சை கேட்பதுபோல், மானமில்லாமல் உங்களிடம் தண்ணீர் கேட்டுவிட்டு நான் பட்ட அவமானம் போதும்…” 

“அரசே! தாங்கள் மிகவும் ஆபத்தான நிலையிலிருக்கிறீர்கள்.. இப்போது நீர் பருகாவிட்டால்..” 

“உயிர் போய்விடும் என்றுதானே சொல்லப் போகிறாய்? பரவாயில்லை! பிறரிடம் தோற்று அடிமையாகி மானம் இழந்து வாழும் இந்த வாழ்வும் ஒரு வாழ்வா என்றெண்ணி மானத்திற்காக உயிர் நீத்தான் கணைக்கால் இரும்பொறை என்று எதிர்காலம் அறியட்டும்” இரும்பொறை கண்டிப்பாகக் காவலன் கொண்டு வந்து கொடுத்த தண்ணீரைப் பருகுவதற்கு மறுத்துவிட்டான். ‘இனி வற்புறுத்துவதில் பலனில்லை’ என்று காவலன் வெளியே சென்றான். சிறைக்கதவு மூடப்பட்டது. கதவு மூடப்பட்ட ஒலியோடு உள்ளிருந்து ஈனஸ்வரத்தில் விக்கல் ஒலியும் கேட்டது. 

அரை நாழிகைக்குப் பிறகு சிறைக்குள்ளிருந்து விக்கல் ஒலி வருவதும் நின்றுவிட்டது. உள்ளே விளக்கேற்றுவதற்கு வந்த காவலன் ஒருவன் இருளில் கணைக்கால் இரும்பொறையின் சடலத்தை எற்றித் தடுக்கி விழுந்தான். 

குழவி இறப்பினும் ஊன்தடி பிற்பினும் 
ஆளன்று என்று வாளில் தப்பார் 
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய 
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் 
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் 
தாம் இரந்து உண்ணும் அளவை 
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே! 
(புறநானூறு 74) 

குழவி = குழந்தை, ஊன்தடி = தசைப் பிண்டம், ஞமலி = நாய், கேளல் கேளிர் = பகைவரின் சுற்றத்தார், வேளாண் = உதவி, சிறுபதம் = சிறிதளவு நீர், மதுகை = மனவலிமை, இரந்து = யாசித்து.

– புறநானூற்றுச் சிறுகதைகள், இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2001, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *