கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 2,137 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

3 – 4 | 5 – 6 | 7 – 8


5. மர்மங்கள் பல!

புகாரின் இணையிலா மன்னனும் மூதாதையுமான கரிகால் பெருவளத்தானின் பெயரில் கடைப்பகுதியான “பெருவளத்தான் என்ற சொல்லை, “மாவளத்தான்” என்று சற்று மாற்றிவைத்த காரணத்தாலோ என்னவோ, மகாவீரனாக விளங்கிய தம்பிக்கு சிறிது முன்கோபமும் அவசர புத்தியும் உண்டு என்பது நலங்கிள்ளிக்குத் தெரிந்தேயிருந்தது. தவிர, அவன் சதா பகடையாடு வதும், அப்படிப் பகடையாடிய ஒரு சமயத்தில் ஒரு புலவர் மீது சினம் கொண்டு பகடைக்காய்களை அவர் முகத்தில் வீசியெறிந்து விட்டதையுங்கூட மக்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள். எனவே, அவன் சொல்லுவது எதையும் சற்று நிதானமாகவே கேட்க எண்ணங்கொண்ட நலங்கிள்ளி, “நிதானமாகவே சொல் தம்பி! என்னதான் நடந்துவிட்டது?” என்று வினவினான். 

மாவளத்தான் நலங்கிள்ளியளவு உயரம் இல்லாவிட்டாலும், அவன் கண்களும் முகமும் நலங்கிள்ளியின் கண்களையும் முகத்தை யும் போலவே அழகாகவும் துடிப்பாகவும் இருந்தன. அவன் நீண்ட கைகளில் நிறையக் காணப்பட்ட தழும்புகள் அவன் யாருடனாவது சதா வாள்பயிற்சி செய்து கொண்டு இருப்பவன் என்பதையும், அதனால் ஏற்படும் காயங்களை அறவே இலட்சியம் செய்யாதவன் என்பதையும் நிரூபித்தன. முகத்தில் வளைந்துகிடந்த முரட்டுக் குழல்களைத் தள்ள அவன் தலையை சிறிது ஆட்டிக் கொண்டதிலும் சும்பீரமும், துடுக்குத்தனமும் இருந்தன. அந்தத் துடுக்குத்தனத்துடன் அவன் பேசினான்: “உங்களைத் தீர்த்துக் கட்ட அரண்மனையில் சதி நடக்கிறது” என்று. 

“அப்படியா?” நலங்கிள்ளியின் கேள்வியில் அப்பொழுதும் நிதானம் இருந்தது. 

“ஆம்” என்றான் மாவளத்தான். 

“யார் செய்கிறார்கள், சதி?” 

“யாருக்குத் தங்களைக் கொல்வதால் பயன் இருக்கிறதோ அவர்கள்தான்.” 

“யார் அவர்கள்?” 

“நெடுங்கிள்ளியும் அந்தப் பெண்ணொருத்தி வந்திருக்கிறாளே அவளும்” என்று கூறிய மாவளத்தான் உடல், சிறிது கோபத்தால் துடித்தது. 

இதைக் கேட்ட பின்புதான் நலங்கிள்ளி சிறிது சுரணையைக் காட்டினான். மிகுந்த பிரமிப்புடன், “உண்மையாகவா?” என்றும் வினவினான். 

“ஆம் அண்ணா! முற்றிலும் உண்மை” என்றான் மாவளத்தான்.  

நலங்கிள்ளி சில விநாடி மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு கேட்டான் தம்பியை நோக்கி, “தம்பி! இதில் இந்த இருவருக்கும் என்ன பயன் இருக்க முடியும்? என்னைக் கொன்றால் புகாரை ஆள நீ இருக்கிறாய். ஆகையால் அடுத்த தாயாதியும் பகைவனுமான நெடுங்கிள்ளிக்குப் பயன் ஏதும் இல்லை. அந்த கன்னர நாட்டுப் பெண்ணுக்கும் என்னைக் கொல்வதால் எந்தவித லாபமும் இல்லை. அவளுக்கு சோழ நாட்டு மக்கள் முடிசூட்டப் போகிறார்களா என்ன?” என்று. 

மாவளத்தான் அண்ணனைக் கூர்ந்து நோக்கினாள். பிறகு கேட்டான் “என்னையும் தீர்த்துவிட்டால்?” என்று. 

இதைக் கேட்ட நலங்கிள்ளி சற்று இரைந்தே நகைத்தான். “மாவளத்தான்! இதென்ன கொலைக்களமா? ஒவ்வொருவராக நெடுங்கிள்ளி பிடித்துக் கொல்ல, இல்லை, இது அவள் இருப்பிடமா, நம் இருவரையும் வெட்டுப்பாறைக்கு அனுப்ப? அது கிடக்கட்டும், அந்தப் பெண்தான் என்ன செய்யமுடியும்? நம் இருவரையும் ஒன்று சேர்த்து மருந்து வைத்துக் கொன்றுவிட முடியுமா?” என்று வினவினான், நகைப்பின் ஊடே. 

மாவளத்தான் நகைக்கவில்லை. “அத்தனை நேரான திட்டம் அல்ல அண்ணா, திட்டம் மறைமுகமாகவும் சுடுமையாகவும் இருக்கிறது” என்று கூறி, மேலே விளக்கவும் முற்பட்டான், “நேற்று இரவு நான் தற்செயலாக நமது நந்தவனத்துக்குப் போனேன். அண்ணன் இறந்துவிட்ட நிலை குறித்து குழம்பிய மனதுடன் சென்றேன். ஆகையால் முதலில் எதையும் கவனிக்கவில்லை. பிறகு திடீர் என நான் இருந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் காலரவம் கேட்டது. சட்டென்று ஒரு மரத்தின் இருளில் ஒதுங்கினேன். சற்று நேரத்தில் அங்கு அந்தப் பாதகன் நெடுங்கிள்ளி வந்தான். எட்ட இருந்த செடிகளுக்கு அருகில் நின்று ஓரிரண்டு பூக்களைக் கொய்து முகர்ந்தான். அப்பொழுது ஒரு சிரிப்பொலி கேட்டது. “மன்னர் பூவின் நறுமணத்தை ரசிக்கிறார் போலிருக்கிறது” என்ற சொற்களும், அதைத் தொடர்ந்தன. அந்தச் சொற்களைத் தொடர்ந்து, அவனி சுந்தரி, அந்தப் பூச்செடியின் மறைவில் இருந்து வெளியே வந்தாள்.” 

இங்கு சற்றுப் பேச்சை நிறுத்தினான் மாவளத்தான், உணர்ச்சிப் பெருக்கால். “மேலே சொல்” என்ற நலங்கிள்ளியின் சொற்கள் அவனைத் தூண்டவே, அவன், மேலும் சொன்னாள்: “அவனி சுந்தரியைக் கண்டதும் நெடுங்கிள்ளி அவள் தோள் மீது கையை வைக்கப் போனான். “தொடாதே” என்று மிகக் கடுமையுடன் எச்சரித்தாள் அவள். அந்தச் சொற்களில் இருந்த உஷ்ணத்தால், எந்தப் பாதகச் செயலுக்கும் அஞ்சாத நெடுங்கிள்ளியே அசைந்து, உயரத் தூக்கிய வலக் கையைக் கீழே போட்டான். பிறகு அவள் மிகக் கம்பீரமாகவே கேட்டாள்: “இங்கு எதற்கு என்னை வரச் சொன்னீர்கள்?” என்று. பிறகு அவர்களுக்குள் உரையாடல் இப்படி நிகழ்ந்தது. 

“காரணமாகத்தான் வரச் சொன்னேன்” என்றான் நெடுங்கிள்ளி 

“என்ன காரணம்?” அந்தப் பெண் சர்வசாதாரணமாகக் கேட்டாள். 

“புகாரில் மூவரில் ஒருவன் இறந்தான்” என்றான் நெடுங்கிள்ளி. 

“ஆம், கொல்லப்பட்டான்” என்றாள் அவனி சுந்தரி. 

“என்ன! கொல்லப்பட்டானா?” என்று கேட்டான் நெடுங்கிள்ளி. அவன் வார்த்தையில் போலி நடுக்கம் இருந்தது. 

“அப்படித்தான் கோவூர் கிழார் கருதுகிறார்” என்றாள் அந்தப் பெண். 

“அந்தப் புலவன், பெரிய அதிகப் பிரசங்கி.” 

“ஆம், ஆம். உண்மையை எப்படியோ கண்டுபிடித்து விடுகிறார்”.  

“அவராகக் கண்டுபிடித்து விடுகிறாரா? கண்டுபிடிக்க நீ உதவினாயா?” 

“நான் எப்படி உதவ முடியும்?” 

“ஏன் முடியாது? குளமுற்றத்தில் நடந்ததுதான் உனக்குத் தெரியுமே.”

“இருக்கலாம். ஆனால் மன்னன் சடலத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நான் கொண்டு வந்திருக்கும் போது, என்னைத்தான் புலவர் கொலைகாரியென்று நினைக்கிறார்.” 

“என்னை நீ காட்டிக் கொடுக்கவில்லையே” 

“காட்டிக் கொடுத்திருந்தால், உங்கள் கொலைகாரர்கள் என்னை சும்மா விடுவார்களா?” 

“கொலைகாரர்களா?” 

“உங்களுடன் வந்திருக்கும் நூறு பேர்”

“அதுவும் தெரியுமா உனக்கு?” 

“நன்றாகத் தெரியும்” என்றாள் அவனி சுந்தரி. 

“இங்கு சிறிது தயங்கிய நம் அருமை உறையூர் அண்ணன், மேலும் அந்தப் பெண்ணை விசாரிக்க முற்பட்டு, எப்படி அறிந்தாய்?” என்று வினவினான்” என்று, மேலும் சொன்னான் மாவளத்தான். 

“கன்னர நாட்டில் இருந்து நான் தனியாக வரவில்லை. என்னுடன் பூதலன் வந்திருக்கிறான். அவனுக்குக் கண்கள் ஆயிரம் உண்டு” என்று உணர்த்தினாள், அவனி சுந்தரி. 

“என்னை நீ காட்டிக் கொடுத்து விடுவாயா?” என்று நடுக்கத்துடன் கேட்டான், நெடுங்கிள்ளி. 

“ஒருக்காலும் மாட்டேன். நீங்கள் இல்லாவிட்டால் கன்னரர் லட்சியம் எப்படி நிறைவேறும்? உங்களைப் போன்ற ஒரு நல்ல பிள்ளை சோழர் குடும்பத்தில் பிறக்காவிட்டால், எங்கள் திட்டம் எப்படிக் கைகூடும்” என்று வினவினாள் அவள். 

அவள் தன்னைப் பார்த்து நகைக்கிறாள் என்பதை அறிந்தும், நெடுங்கிள்ளி அதற்காக சினம் கொள்ளவில்லை. “அவனி சுந்தரி! என் திட்டங்களுக்கு மட்டும் நீ உதவி செய்; அப்புறம் நெடுங்கிள்ளி யார் என்பதை உணருவாய்” என்றான். 

“இப்பொழுதே உணர்ந்துதான் இருக்கிறேன்” என்றாள் அவனி சுந்தரி. 

“உன்னை என் பட்டத்தரசி ஆக்குகிறேன்”. 

“ஏற்கனவே இருப்பவள்?”

“அவள் உறையூரை ஆள்வாள்; நீ புகாரை ஆள்வாய்.”

“இருவரையும் சேர்த்து நீங்கள் ஆள்வீர்கள்” இதைச் சொன்ன அவள், நகைத்தாள். 

நெடுங்கிள்ளியின் சீற்றம் அதிகமாயிற்று. தன் உடையில் இருந்த குறுவாளைத் தட்டிக் காட்டினான். அதைப் பார்த்த அவள் மீண்டும் நகைத்து “குறுவாளாலோ நேர் போரிலே கொல்வது உங்கள் வழக்கம் அல்லவே வீரரே! அதை ஏன் தட்டிக் காட்டுகிறீர்கள்?” என்று வினவினாள். 

நெடுங்கிள்ளி பதில் சொல்லவில்லை உடனே. சிறிது தாமதித்துவிட்டு, அவள் காதில் குசுகுசு வென்று ஏதோ சொன்னான். அவளும் தலையாட்டினாள். “இதை மாத்திரம் செய்துவிடு;உனக்கு எது வேண்டுமானாலும் தருகிறேன்” என்றான். 

சரியென்பதற்கு அடையாளமாக அவள் தலையை ஆட்டி னாள், அதற்குப் பிறகு நெடுங்கிள்ளி அவ்விடத்தை விட்டு வெகு வேகமாகச் சென்றுவிட்டான். பிறகு ஓர் அதிசயம் நடந்தது. அந்தப் பெண் கையை மெல்லத் தட்டினாள். சற்று தூரத்தில் இருந்து அந்தப் பூதம் வெளிவந்தது… இந்த இடத்தில், சற்று பேச்சை அரைகுறையாக விட்ட மாவளத்தான், அண்ணனை நோக்கினான். 

தம்பி அதுவரை சொன்ன கதையை பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த நலங்கிள்ளி, “பூதலனா…!” என்று வினவினாள். 

“ஆம்” என்றான் மாவளத்தான். 

“அவனி சுந்தரி அவனிடம் என்ன சொன்னாள்?” 

“ஏதும் சொல்லவில்லை. நெடுங்கிள்ளி சென்ற திசையைக் கையால் சுட்டிக் காட்டினாள்”. 

“பிறகு?” 

“அந்த ராட்சதன் நெடுங்கிள்ளி சென்ற வழியை நோக்கி நடந்தான்”. 

“பிறகு?” 

“அந்தப் பெண் நமது நந்தவனத்தின் பளிங்கு மண்டபத்துக்கு வந்தாள். அதில் உட்கார்ந்து இருந்தாள் நீண்ட நேரம். பிறகு எழுந்திருந்து, அரண்மனையை நோக்கி நடந்தாள்.” 

“இவ்ளவுதானே?” 

“ஆம்” 

நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான் நலங்கிள்ளி. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து, “தம்பி! மர்மம் பலமாயிருக்கிறது. எதற்கும் புலவரை அழைத்து வா, யோசனை கேட்போம்” என்றான். 

ஆனால் அவர்கள் இருவருக்கும் இருந்த குழப்பத்தால், அந்தச் சுரங்க அறையின் இன்னொரு சாளரத்தின் அருகில் ஒட்டி நின்று, அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் உருவத்தை இருவருமே கவனிக்கவில்லை. 

மாவளத்தான் அறையை விட்டு வெளிவந்ததும் அந்த உருவம் மறுபுறம் இருந்த சுவரில் பதுங்கிக் கொண்டது. அவன் சென்றதும், அரசனின் அந்தரங்க அறைக்குள் ஓசைப்படாமல் நுழைந்தது. நுழைந்து கதவையும் சாத்திக் கொண்டது. 


6.விபரீத வேண்டுகோள் 

தம்பி மாவளத்தான் சொன்ன செய்தியால், மிகவும் குழமி பய மனதுடன் நலங்கிள்ளி நின்றிருந்தான். ஆனாலும், தம்பி சென்ற பின்பு ஓசைப்படாமல் தனது அறைக் கதவு திறந்ததையும், அதன்மூலம் அவனி சுந்தரி நுழைந்து கதவைச் சாத்திவிட்டதையும் கண்ட புகாரின் புதுமன்னன், வியப்பு நிரம்பிய விழிகளை அவள் மீது நிலைக்கவிட்டான். 

அவளை அறைக்கு வெளியே இருந்த காவலர்கள் எப்படி உள்ளே புகவிட்டார்கள், அவள் எதற்காக அத்தனை பத்திரமாக அரவம் செய்யாமல் திருடியைப் போல் உள்ளே நுழைய வேண்டும் என்பது போன்ற பல கேள்விகள் அவன் மனதில் எழுந்தன. அவற்றையெல்லாம் அவன் கேட்காமல், அவளை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான். 

அவள் சுந்தர வடிவம் அன்றைய காலை அலங்காரத்தில் கண்களைப் பறித்துக் கொண்டிருந்தது. அவள் அன்று ஒரு பச்சைச் சேலையை அணிந்து கொண்டிருந்ததால், அந்தப் பச்சை நிறம் அவள் கன்னக் கண்ணாடியில் பிரதிபலிப்பதாகத் தோன்றியது, நலங்கிள்ளியின் கூரிய கண்களுக்கு, அவள் அன்று புதிதாக அணிந்திருந்த மேகலாபரணத்தில் கற்கள் ஓரிரண்டே பதிக்கப் பெற்று இருந்தாலும், அவைகூட அவள் இயற்கை அழகைப் பன்மடங்கு அதிகப்படுத்தியிருந்தது. அவள் அழகிய கண்களே அவளுக்கு ஆபரணமாயிருக்க, எமற்ற ஆபரணங்கள் அவளுக்கு தற்காக என்று தனக்குள் வினவிக் கொண்டான், நலங்கிள்ளி. 

புகார் அரசன் தன்னை அப்படி உற்றுப் பார்ப்பதைக் கண்டும், புன்சிரிப்பினால் பூக்கவில்லை, அவள் பூவிதழ்கள். கண்களிலுங்கூட, அகு வழக்கமான விஷமத்தைக் காணோம். தாமரை முகங்கூட, அந்த வழக்கமான மென்மையைக் கைவிட்டு மிகவும் கல்லாயிருந்தது. அன்று அவள் கதவில் சாய்ந்த வண்ணம் துவண்டு நின்ற நிலை, காமத்தை விளைவிக்கிறதா கடினத்தை விளைவிக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ளச் சக்தியிழந்து நின்றன, மன்னனின் ஆராய்ச்சிக் கண்கள். 

நலங்கிள்ளியின் கண்கள் தன்மீது ஓடுவதைக் கண்டாலும், காணாதது போலவே அவள் பேச்சைத் துரிதமாகத் தொடங்கினாள்: “மன்னவா! உங்கள் மகுடாபிஷேகத்துக்குப் புலவர் நாளை கழித்து மறுநாள், நாள் வைத்திருக்கிறார்” என்று குறிப்பிட்டாள். 

அந்தச் செய்தியை முதல் நாள் அன்றே புலவர் அத்தாணி மண்டபத்தில் அறிவித்து இருந்ததால், அதை எதற்காக மீண்டும் சொல்கிறாள் அவனி சுந்தரி என்பதை அறியாமல், நலங்கிள்ளி, சர்வசாதாரணமாகவே பதில் கூறினான், “ஆம்” என்று. 

அவனி சுந்தரியின் அழகிய கண்கள் அவன் கண்களுடன் கலந்தன, ஒரு விநாடி, பிறகு அவள் உதடுகள் மலர்ந்து கேள்விகளை வீசின: “நீங்கள் பல கேள்விகளை என்னைக் கேட்க வேண்டும். ஆனால் கேட்கவில்லையே” என்று எழுந்தது, அவள் முதல் கேள்வி. 

நலங்கிள்ளி அவள் கண்களை ஆராய்ந்து, அதில் சிக்கியிருந்த தனது கண்களை விடுவித்துக் கொண்டான், விநாடி நேரத்தில். “ஆம் கேட்சுவில்லை” என்று கூறிப் புன்முறுவலும் கொண்டான். 

“ஏன்?” அவனி சுந்தரியின் கேள்வியில், மன்னனின் நிதானத்தைப் பற்றிப் பெரும் வியப்பு ஒலித்தது. 

“விஷயங்களைச் சொல்வதற்காகக் கன்னரத்து இளவரசி வந்திருக்கிறீர்கள்” என்ற நலங்கிள்ளி, “ஏன் அங்கேயே நிற்க வேண்டும்? இப்படி அமருங்கள்” என்று, சற்று எட்ட இருந்த ஓர் இருக்கையை சுட்டிக் காட்டினான். 

மயிலென நடந்து, அந்த ஆசனத்தில் சென்று உட்கார்ந்தாள் அவனி சுந்தரி. “நீங்களும் உட்காருங்களேன்” என்றும் கூறினாள். நலங்கிள்ளியை நோக்கி. 

“வேண்டாம். நிற்பதில் வசதியிருக்கிறது” என்று கூறிய நலங்கிள்ளி. சாரளத்தில் நன்றாகச் சாய்ந்து, தனது இரு கைகளையும் மார்பில் கட்டிக் கொண்டான். அவன் வாய் கேள்வி எதையும் கேட்காவிட்டாலும், கண்கள் கேள்விகளைக் கக்கின. 

அவற்றைக் கவனிக்கவே செய்த அவனி சுந்தரி, “நான் உங்கள் காவலரை யெல்லாம் மீறி, எப்படி. இங்கு வந்தேன் என்பது உங்களுக்கு வியப்பாயிருக்கிறது?” என்று முதல் கேள்வியை அவளே வீசினாள். 

நலங்கிள்ளியின் இதழ்களில் புன்முறுவல் தவழ்ந்தது. “இல்லை. அதில் வியப்பு எனக்கு ஏதும் இல்லை” என்று அவன் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களிலும், வியப்பொலி ஏதும் இல்லை. 

“உண்மையாகவா?” 

“ஆம்” 

“விந்தையாயிருக்கிறதே!” 

“விந்தை ஏதும் இல்லை. ஆனால் கண்கள் இருக்கின்றன”. 

“கண்களா?” 

“ஆம், என் கண்கள்!” என்ற நலங்கிள்ளி நகைத்தான். 

அவனி சுந்தரியின் முகத்தில் வியப்பு அதிகமாக விரிந்தது. அதில் சந்தேகங்கூடக் கலந்து நின்றது. “புரியும்படி சொல்லுங்கள்” என்று வினாவினாள். 

“சொல்லவா? காட்டவா?” என்று கேட்டான் மன்னன். 

“எப்படிச் செய்தாலும் சரி” என்ற அவனி சுந்தரி அவனை ஏறிட்டு நோக்கினாள். 

மன்னன் சாளரத்தைவிட்டு, அவளை நோக்கி மிகவும் நிதானமாகப் புலிநடை நடந்து வந்தான். அவள் அருகில் வந்ததும் ஒரு விநாடி யோசித்துக் கொண்டு நின்றான். பிறகு, அவள் இடத் தோளில் சரிந்து கிடந்த சேலையைச் சற்று மேலே சரேலெனத் தூக்கிவிட்டு, அவள் இடக்கையைத் தன் வலக்கையால் பற்றி எடுத்தான். அந்தக் கையைத் தனது இடக்கையில் வைத்து; விரல்களைப் பிரித்துச் சுட்டிக் காட்டினான். 

நலங்கிள்ளி தன்னைத் தொட்டதையோ, சரிந்த மேலாடையைத் தூக்கியதையோ அவனி சுந்தரி லட்சியம் செய்யவில்லை. அவன் கூரிய அறிவை நினைத்து மேலும் வியப்பே அடைந்தாள். அவள் வியப்பைக் கண்டு அவன் விரலில் இருந்த பெரிய மோதிரம் கூட நகைத்தது. அது நகைத்ததா, அல்லது அதன் புலிமுகக் கண்கள் உக்கிரத்தால் உறுமினவா என்பதை விவரிக்க இயலாத ஒரு நிலை, அவள் மனதை ஆட்கொண்டது. அதனால் ஏற்பட்ட குழப்பம் அவள் மூகத்தைக் குங்குமச் சிவப்பாக அடித்தது. 

அப்பொழுதுதான் ஓர் ஆண் மகன் தன் கையைப் பற்றி நிற்பதையும், அந்தப் பிடியும் இரும்புப் பிடியா இருப்பதையும் உணர்ந்தாள், அவள். அதனால் ஏற்பட்ட புதுவிதமான நெகிழ்ச்சியில், ஓர் ஆனந்தமும் கலந்து கொண்டதால், அவள் விவரிக்க இயலாத பல உணர்ச்சிகளால் பீடிக்கப்பட்டுத் தத்தளித்தாள். அதனால், சிறிது ஆசனத்தில் அசங்கவும் செய்தாள். 

அந்த நிலை நலங்கிள்ளியையும் ஓரளவு பற்றிக் கொண்டிருக்க வேண்டும். நடுங்காத அவன் கைகள் கூடச் சிறிது நடுங்கின. “என் கண்களைப் பற்றி இப்பொழுது என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான், புகார் மன்னன் மெல்ல நகைத்து. 

“எதையும் பார்க்கத் தவறாத கண்கள்” என்று குழைந்து பேசினாள் கன்னரத்து இளவரசி, “எப்பொழுது கண்டு பிடித்தீர்கள்” என்றும் வினவினாள், மெல்ல மெய்யெல்லாம் புல்லரித்ததால். 

நலங்கிள்ளி அவன் கைகளை விடுவித்து, சற்று எட்டச்சென்று அவளைப் பார்த்து, “அவனி சுந்தரி! அன்று புலவரின் மாளிகையில் மன்னன் சடலத்தில் இரண்டு மர்மங்களை எங்களுக்கு காட்டினாய்” என்று துவங்கினாள் உரையாடலை. 

“ஆம்; ஒன்று கச்சைக் குழல்…” 

“இரண்டாவது மன்னர் மார்பில் இருந்த பெரிய சிவப்பு மச்சம்”. 

“அந்தக் குழல் சிறு மூங்கில் குழல்…” என்று இழுத்தான். நலங்கிள்ளி. 

“ஆம்” 

“யவன நாட்டு வாசனைத் திரவியங்களை வைக்கும் குழல்”.

“ஆம்! ஆம்” 

“மன்னர் வாசனைத் திரவியம் விரும்பாதவர்…” இதைச் சொன்ன நலங்கிள்ளி, அவளை உற்று நோக்கினான். 

அவனி சுந்தரி பதில் ஏதும் சொல்லவில்லை. மவுனம் சாதித்தாள், நலங்கிள்ளியே மேற்கொண்டு சொன்னான். “ஆகையால், அதை மன்னரிடம் வேறு யாரோ கொடுத்திருக்கிறார்கள். கொடுத்தது மட்டுமல்ல, எழுத்தாணி கொண்டு “நெடுங்கிள்ளி, நெடுங்கிள்ளி” என்று இரண்டு இடங்களில் உறையூர் மன்னன் பெயரைப் பொறிக்கவும் செய்திருக்கிறார்கள். அந்தக் கையெழுத்து மன்னர் கையெழுத்துதான். ஆனால், ஒலைபொறிக்கும் எழுத்தாணியுடன் உறங்கும் பழக்கம் மன்னருக்குக் கிடையாது. ஆகையால் அதை வேறு யாரோ அவரிடம் கொடுத்திருக்கிறார்கள்”. 

இந்த இடத்தில் பேச்சை நிறுத்திய நலங்கிள்ளி, அவனி சுந்தரியை உற்று நோக்கினான். “ஆம்! நான்தான் கொடுத்தேன். அந்தக் குழலும் என்னுடையதுதான். வாசனைத் திரவியங்களை அறையில் தெளித்துவிட்டேன்” என்று விளக்கினாள் அவனி சுந்தரி 

“அதுவும் எனக்குத் தெரியும். மன்னரின் தளபதி நீங்கள் வந்த மறுநாள் இங்கு வந்ததும் சொன்னார். ஆனால், விவரங்கள் அவருக்குத் தெரியாது. மன்னர் இறந்து கிடந்த அறை முழுதும் வாசனை அடித்துக் கொண்டிருந்தது என்று கூறினார்” என்ற நலங்கிள்ளி, “அது மட்டுமல்ல; அன்று முதல் ஜாமத்தில் நெடுங்கிள்ளி நீண்ட நேரம் மன்னனிடம் தனியாகப் பேசிக்கொண்டு இருந்ததாகவும், அவன் போகும்போது மன்னர் அறைக்கு வெளியே வேந்து அவனை வழியனுப்பியதாகவும் சொன்னார்” என்றும் கூறினார். 

“வேறு என்ன சொன்னார்?” வறண்ட குரலில் வெளிவந்தது அவனி சுந்தரியின் கேள்வி. 

“மறுநாள் காலையில் மன்னர் இறந்து கிடந்ததாகக் கூறினார்” 

“வேறு எதுவும் அவருக்குத் தெரியாது?” 

“தெரியாது” 

அவனி சுந்தரி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு “மீதிக் கதை தங்களுக்குத் தெரிய வேண்டாமா?”
என்று கேட்டாள். 

“சொன்னால் தெரிந்து கொள்ளுகிறேன்” நலங்கிள்ளியின் குரலில் வெறுப்பு ஒலித்தது பலமாக. 

“சொல்லுகிறேன் கேளுங்கள், மன்னர் இறந்த நாள் மாலை தான் நான் குளமுற்றம் வந்து சேர்ந்தேன். நான் போக உத்தேசித்தது உறையூர். ஆதலால், குளமுற்றத்து ஊருக்குள் செல்லாமல், வெளியே ஒரு தோப்பில் தங்கினேன். இரவு மூண்டது. அதே தோப்புக்கு இருவர் வந்தார்கள். நானும் பூதலனும் இருந்த இடம் அடர்த்தியான பகுதியில் இருந்ததால், அவர்கள் இருவரும் எங்களைப் பார்க்க முடியவில்லை. நாங்கள் மட்டும் அவர்களைப் பார்க்க முடிந்தது, அவர்கள் பேச்சைக் கேட்கவும் முடிந்தது. வந்திருந்தவன் இன்னொருவனை, “மன்னா! மன்னா!” என்று அழைத்ததால், அவன் ஏதோ ஊர் அரசன் என்று தீர்மானித்தேன். அங்குதான் புகார் மன்னரைக் கொல்லப்போகும் முறையை விளக்கிக் கொண்டிருந்தான் நெடுங்கிள்ளி. “இந்த ஊசி முனையால் சிறிது குத்தினால் போதும், மரணம் நிச்சயம், ஆனால் நிதானமான மரணம்தான்.. யாரும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது” என்றான். கூட வந்தவன் அதை ஆமோதித்து, “காரியம் முடிந்ததும் திரும்பிவிட வேண்டும் அரசே! இல்லையேல் பேராபத்து” என்றான் பிறகு மன்னன் சென்றான் புரவி ஏறி. நான் பூதலனை விட்டு இன்னொருவனைக் கட்டிப் போட்டேன். அவனைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்திவிட்டு,நானும் பூதலனும் அரண்மனைக்கு விரைந்தோம். அங்கு இருந்த உங்கள் படைத் தலைவரை அணுகி, நான் மன்னரை உடன் பார்க்க வேண்டும் என்று மன்றாடினேன். உறையூர்த் தப்பி பேசிக் கொண்டு இருப்பதால் முடியாது என்று மறுத்து விட்டார் படைத்தலைவர்.”மன்னர் உயிருக்கு ஆபத்து” என்று கெஞ்சினேன். பதிலுக்குப் படைத் தலைவர் நகைத்தார். அப்படி அவர் நகைத்துக் கொண்டிருந்த போது, நெடுங்கிள்ளி அவசர வெளிவந்து, புரவி ஏறிப் பறந்து சென்றான். நான் படைத் தலைவரையும் மீறி அரசர் அறைக்குள் ஓடினேன்…” இங்கு அவனி சுந்தரியின் குரல் தழுதழுத்தது. 

“சொல்லுங்கள் மேலே…” என்றான் நலங்கிள்ளி. 

“மன்னர் சயனத்தில் படுத்துக் கிடந்தார். நான் அவரை அணுகி, நான் யார் என்பதை அறிவித்து, எனது முத்திரை மோதிரத்தையும் காட்டினேன். பிறகு கேட்டேன், “சற்று முன்பு வந்தவர் ஊசியால் ஏதாவது செய்தாரா?” என்று. மன்னர் மார்பைத் திறந்து காட்டினார். “எனக்கு சில நாளாகக் காச நோய் இருக்கிறது. அதற்குத் தம்பி வைத்தியம் செய்தான். அந்த ஊசிமுனை மருந்து என் நோயைத் தீர்க்கும் என்றான்” எனக் கூறினார். நான் கண்களில் இருந்து பொல பொல வென நீரை உதிர்த்தேன். விஷயத்தைக் கூறினேன். கிள்ளிவளவர் ஒரு விநாடி மலைத்தார். தனது மருத்துவரை வரவழைக்கும்படி கூறினார். மருத்துவர் வந்து பார்த்து, “ஊசிமுனை விஷம் கடும் விஷம் என்றும், மாற்று மருந்து இல்லை” என்றும் கூறினார். பிறகு மன்னர் எல்லோரையும் வெளியோ போகச் சொல்லிவிட்டு, என்னிடம் ஓர் ஓலை கேட்டார். நான் மடியில் இருந்த வாசனைக் குழலை எடுத்து வாசனைத் திரவியத்தை கீழே ஊற்றிவிட்டுக் கொடுத்தேன். என் மடியில் சதா இருக்கும் தங்க எழுத்தாணியையும் கொடுத்தேன். மன்னர் பஞ்சணையில் உட்கார்ந்து சாவதானமாக எழுதினார். பிறகு தன் கையில் இருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து, என் மோதிர விரல் சிறியதாயிருந்ததால் கட்டை விரலில் போட்டார். “மகளே! சோழ நாட்டைக் காப்பாற்றிவிடு” என்று உத்தரவிட்டார். பிறகு படைத் தலைவரை வரவழைத்து, நான் சொல்கிறபடி நடந்து கொள்ள உத்தரவும் இட்டார்”. இத்துடன் கதையை முடித்த அவனி சுந்தரி. முகத்தை மூடிக்கொண்டு, தேம்பித் தேம்பி அழுதாள். 

மீதிக் கதை நலங்கிள்ளிக்குத் தெரிந்தே இருந்ததால் அவன் ஏதும் பேசவில்லை. அவள் முதுகை ஆறுதலாகத் தடவிக் கொடுத்தான். அவள் அழுகை நின்றதும், “அவனி சுந்தரி, அடுத்து என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினான் 

அவள் அவனை நீர்தோய்ந்த கண்களுடன் ஏறெடுத்து நோக்கினாள். பிறகு விடுத்தாள் ஒரு வேண்டுகோள். அந்த வேண்டுகோள் பெரும் விபரீதமாயிருந்தது.

– தொடரும்

– அவனி சுந்தரி, ராணி முத்து, ராணி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *