வெள்ளிக் கிழமை மாலை, மாஸ்டா வின் வேகம் மணிக்கு 80 மைல் என்று பறந்து கொண்டிருந்தது காரை செலுத்திக்கொண்டிருந்த விவேக்கின் மனவேகம் அதனினும் மேலாய் குதித்தோடிக் கொண்டிருந்தது காரணம் தான் அந்த மூன்றாவது குறுஞ்செய்தியை அனுப்பிவிட வேண்டுமென்பதே. இரண்டு குறுஞ்செய்திகள் வந்துவிட்டது இனி அந்த மூன்றாவது தான்தான்… மாறிப்போனால்… போனால்… ஆ… அதை அவனது மனம் ஏற்க வில்லை. அப்படி என்ன அந்த மூன்றாவது குறுஞ்செய்தியில் மகிமை? சற்றே இரண்டு நாட்கள் முன் செல்வோம்…
புதன் கிழமை மாலை வழக்கம் போல் கிரண் அவனது அபார்ட்மெண்ட் ஜிம் மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அருகில் சைக்ளிங் செய்துகொண்டிருந்தான் கௌஷிக். இருவரும் உடற்பயிற்சி முடித்துவிட்டு வியர்வை பூத்து அரும்பி பெருகி அருவியாய் ஓடிக்கொண்டிருந்த தங்களின் முகம் மற்றும் கைகளை துடைத்துக்கொண்டிருந்தனர். கௌஷிக்கின் கைப்பேசி ஒளிர்ந்தது…
“கௌஷிக் உன் மொபைல் ரிங் ஆகுற மாதிரி தெரியுது… சைலன்ட் ல வச்சிருக்கியா…” கிரண் கேட்க.
“ஆமாடா ஆபீஸ் ல இருக்கும்போது சைலன்ட் ல வச்சது… அப்படியே இருக்கு…” என்று பதிலளித்துவிட்டு தொலைபேசித் தொடர்பை இயக்கினான்.
மறுமுனையில் அகிலன், “கௌஷிக், இந்த வாரம் புதுப்படம் வருதாம் டிக்கட் போட்டுறவா…”
“படம் வேணாம்டா… ஏதாவது ரெஸ்டாரண்ட் போயிட்டு மனம்விட்டு பேசலாம், நான் கிரணையும், விவேக்கையும் வரச்சொல்லுறேன்… சினிமா டைம் வேஸ்ட்…” பதிலளித்தான் கௌஷிக்.
பேசி முடித்துக் கைப்பேசியை நிறுத்தினான்.
கிரண் தொடர்ந்தான், “யாருடா அகிலனா…”
“ஆமா, சினிமா போறதுல என்ன பொழுதுபோக்கு இருக்கு… நாலு பேரா சேர்ந்து போவோம் அப்பறம் மூணு மணிநேரம் அவன் காட்டுறது பாத்துட்டு படம் முடிஞ்சதும் ஒருத்தருக்கொருத்தர் பை சொல்லிட்டு கிளம்பிடுவோம்… அதான் ரெஸ்டாரண்ட் போலாம்னு சொல்லி இருக்கேன்”
“குட் ஐடியா” ஆமோதித்தான் கிரண்.
வியாழன் மதியம் அலுவலக முகப்பில் வழக்கம் போல் நால்வரும் சந்திக்கும் நேரம்.
“விவேக்… சும்மா பார்வேர்ட் மெசேஜ் அனுப்பாதேன்னு எத்தனை தடவை சொல்லுறது… அர்த்தமில்லாமால் டைம் வேஸ்ட் ஆகுது” அலுத்துக்கொண்டான் கிரண்.
“அப்படி இல்லடா நமக்கு உதவாட்டியும் யாருக்காவது உதவுமே அப்படிங்கற நல்ல எண்ணம் வேற ஒண்ணும் இல்ல” என்றான் விவேக்.
அதற்கு கௌஷிக், “கைக்காசை செலவு பண்ணி உதவி பண்ண யாராவது வராங்களா… எல்லாம் கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்க தயாரா இருக்காங்க…”
அகிலன் ஆமோத்தித்து, ” ஆமா யாருக்கோ A+ ரத்தம் வேணும், யாரையோ பள்ளிக்கூடத்துல சேர்க்க பணம்வேணும்னு வர்ற மெசேஜ் எல்லாம் அப்படியே பார்வேர்ட் பண்ண முடியுறவுங்களால தானே இறங்கி ரத்தம் கொடுக்கவோ பள்ளிக்கூடத்துக்கு பணம் கட்டவோ செய்யுங்கன்னா செய்வாங்களா?”,
கௌஷிக் தொடர்ந்தான், “இப்பல்லாம் ஆக்கபூர்வமா சிந்திக்கிறதைவிட அர்த்தமில்லாம WhatsApp FaceBook ன்னு பொழுதை வீணாக்குறதுதான் அதிகமாகி இருக்கு.
“ஏன் மத்தவுங்கள பேசிக்கிட்டு.. நாமளே எவ்வளவு நேரம் வீணடிக்கிறோம் WhatsApp ல…” என்றான் கிரண்.
“சரிடா இவ்வளவு பேசுறீங்க… இன்னைல இருந்து நாம நாலு பேரும் WhatsApp FaceBook உபயோகப் படுத்துறதில்லன்னு முடிவெடுத்தா… எத்தனை பேர் கடை பிடிப்பீங்க?” என்று கேள்வி எழுப்பினான் விவேக்.
“கேள்வி நல்லா இருக்கு. அனுபவத்துல கொஞ்சம் சிரமம்னு தோணுது” என்றான் அகிலன்.
கௌஷிக்: “முடியாதுன்னு நினச்சா வள்ளுவர் இவ்வளவு குறள் எழுதியிருப்பாரா? ரைட் சகோதரர்கள் பறந்திருப்பாங்களா?”
கிரண்: “கரெக்ட், இது சாதாரணம்… நம்மால WhatsApp FaceBook உபயோகப் படுத்தாம இருக்க முடியும். நான் தயார்”
அகிலன்: “நானும் ஓகே… ஸ்டாப் பண்ணுறோம்”
கௌஷிக்: “அப்படி சாதாரணமா எப்படி நிறுத்தறது… சோ… நமக்குள்ள WhatsApp போ FaceBook கையோ வச்சு ஒரு விளையாட்டு வச்சுக்குவோம். அதுதான் பைனல் அதுக்கப்புறம் நாம அந்தப்பக்கமே எட்டிப்பாக்குறதில்ல”
விவேக்: “ஓகே என்ன விளையாட்டு”
ஒவ்வொருவரும் தங்களின் அதீத மூளையைக்கொண்டு சிந்திக்கத் துவங்கினர்.
விவேக்: “ஆக்க பூர்வமா சிந்திக்கிறோம்னு சொன்னோம்… சிம்பிளா ஒரு கேம் நம்மால சிந்திக்க முடியல…”
அகிலன்: “டேய்… இப்படி செஞ்சா எப்படி?’
கிரண்: “எப்புடி?”
அகிலன்: “அதாவது நாம நாளைக்கு ரெஸ்டாரண்ட் போறதா இருக்கோம்”
கௌஷிக்: “ஆமா”
அகிலன்: “நாலுபேரும் அசெம்பிள் ஆகுறதுதான் கேம்”
கிரண்: “புரியும்படியா சொல்லேண்டா”
அகிலன்: “அதாவது நாலு பேர்ல யாரெல்லாம் முன்னாடி ரெஸ்டாரண்ட் வாரங்களோ அவங்க வின்னர், கடைசியா வர்றவர் லூசர்”
விவேக்: “இதுக்கும் WhatsApp கும் என்னடா சம்பந்தம்?”
அகிலன்: “இருக்கே… WhatsApp தான் இங்க ஜட்ஜ், ரெஸ்டாரண்ட் ரீச் ஆகுறவுங்க தன்னை செலஃபீ எடுத்து வராத மத்தவங்களுக்கு அனுப்பனும். மூணு மெசேஜ் வரைக்கும் வின்னர்ஸ் கடைசியா வர்றவர் யாருக்கும் மெசேஜ் அனுப்ப முடியாதே… சோ லூசர்”
கௌஷிக்: “நல்லாருக்கே… அக்ரீட்”
விவேக்: “எஸ் அக்ரீட்”
கிரண்: “எனக்கும் ஓகே”
இப்போ புரிஞ்சிருக்குமே விவேக் ஏன் தான் அந்த மூணாவது மெசேஜ் அனுப்ப அவசரப் பட்டு காரைப் பறக்க விடுறான்னு. ஆமா கிரணும் கௌஷிக்கும் மெசேஜ் அனுப்பிட்டாங்க இப்போ அகிலனை முந்துவதுதான் விவேக்கின் முயற்சி.
சிக்னல் பச்சை காட்டியது பிரேக்கில் இருந்து காலை எடுத்த நம்ம விவேக் சட்டென மீண்டும் பிரேக்கில் பலமாக அழுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. காரணம் சாலையைக் கடந்து ஓடிய நாயும் நாயைப் பிடித்துக்கொண்டு அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நிலை தடுமாறி சாலையின் நடுவே தனது காருக்கு எதிரே விழுந்த நாயின் உரிமையாளரும்தான். கடிகாரத்தைப் பார்த்தான் விவேக். என்ன செய்வது… புரியவில்லை. காரை நிப்பாட்டி கதவைத்திறந்து இறங்கினான். முன்னம் சென்று கீழே விழுந்தவர் எழுவதற்கு உதவினான். நன்றியுள்ள நாயும் தன் உரிமையாளரின் அருகில் நின்றுகொண்டு வாலைக் குழைத்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக நாயையும் உரிமையாளரையும் வழியனுப்பிவிட்டு காருக்குள் ஏறினான். சிக்னல் மீண்டும் சிவப்பு.
ரெஸ்டாரண்ட் வாசல். தனது மொபைல் போன் எடுத்துப் பார்த்தான் விவேக் மூன்றாவது குறுஞ்செய்தி இன்னும் வரவில்லை. அப்பாடா என்று ஒரு சிறு மன நிம்மதியோடு இருந்தாலும் போட்டி நிபந்தனை செலஃபீ எடுத்து அனுப்பும்வரை நீள்கிறதல்லவா. அவசரமாக கார் கதவைத் திறந்து இறங்கினான். காரை பார்த்தும் பார்க்காமல் ரிமோட் ல் லாக் செய்துவிட்டு லாக் ஆன சத்தத்தை மட்டும் காதில் வாங்கிக்கொண்டு ரெஸ்டாரண்ட் க்குள் விரைந்தான். அங்கே அவன் எதிர்பார்க்காத நிகழ்வு…. மீண்டும் தனது மொபைல் போன் எடுத்துப் பார்த்தான் நிச்சயமாக மூன்றாவது குறுஞ்செய்தி வரவில்லை… ஆனால் ரெஸ்டாரண்ட் ல் அவன் பார்த்த நிகழ்வு, கிரண் கௌஷிக்கோடு அகிலனும் அந்த மேசையில் அமர்ந்திருந்தான். ஏன் அகிலன் குறுஞ்செய்தி அனுப்பவில்லை…?!
கௌஷிக்: டேய் நம்ம ஸ்பான்ஸர் வந்துட்டார்
கிரண்: வாங்க ஸ்பான்ஸர் சார், ஆர்டர் பண்ணிடுவோமா
அகிலனும் கௌஷிக் மற்றும் கிரணோடு சேர்ந்துகொள்ள, மூவரும் ஆரவாரமாகச் சிரித்தார்கள்.
இவற்றைக் காதில் வாங்காமல் கண்டும் கொள்ளாமல் தன்னை செலஃபீ எடுத்து அதை மற்ற மூவருக்கும் அனுப்பி முடித்தான் விவேக்.
இங்க ஒரு சின்ன Flashback.
அகிலன் வீட்டிலிருந்து தனது காரை செலுத்திக்கொண்டு கிளம்புகையில் தனது கைப்பேசியைப் பார்த்தான் வெண்திரையாக வெறும்திரையாக இருப்பது கண்டு குழப்பம் கொண்டான். பின்னர் கைப்பேசி பேட்டரி ரீசார்ஜ் செய்யாதது நினைவில் வந்தது. இனி நேரம் இல்லை காரில் ரீசார்ஜ் செய்யலாம் என்றால் சார்ஜ்ர் அவசரத்திற்கு டாஷ்போர்டில் கிடைக்கவில்லை. பரவாயில்லை இதில் நேரம் செலவிடாமல் ரெஸ்டாரண்ட் க்கு செல்வோம் என்று புறப்பட்டு விட்டான். ரெஸ்டாரண்டை மூன்றாவது நபராக அகிலன் வந்தடைந்தாலும் தனது கைப்பேசியில் பேட்டரி பவர் இல்லாத காரணத்தால் செலஃபீ எடுத்து அனுப்ப முடியவில்லை.
இப்போது தங்களது கைப்பேசியைப் பார்த்த கௌஷிக்கும் கிரணும் குழப்பத்தில் விவேக்கைப் பார்த்தனர். காரணம் நான்காவதாக வந்துவிட்டு ஏன் செலஃபீ அனுப்புகிறான் விவேக் என்ற குழப்பம்.
ரெஸ்டாரண்ட் க்கு எதார்த்தமாக வந்திருந்த அவர்களில் மூத்த வயதுடைய நண்பர் நால்வரையும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டு பின்னர் நால்வரின் விளையாட்டையும் கேட்டறிந்தார்.
நண்பர்: பிரெண்ட்ஸ் நல்ல கேம். உண்மையிலே நல்ல விஷயம் சோ இன்னிலிருந்து நீங்க யாரும் WhatsApp FaceBook உபயோகிக்கப் போறதில்லை? Am I Right?
விவேக்: “எஸ் அங்கிள். அதோட எங்க விளையாட்டுக்கு ஒரு நல்ல தீர்ப்பும் சொல்லிடுங்க இவங்க எல்லாம் நான் தான் ஸ்பான்சர் பண்ணனும்னு சொல்லுறாங்க.”
நண்பர்: “நோ… உங்கள ரொம்ப நாள் கழிச்சு சந்திச்சிருக்கேன். நான்தான் உங்க ஸ்பான்சர் இன்னிக்கு”
கௌஷிக்: “அதெப்படி… அப்படின்னா எங்க கேம் கம்ப்ளீட் ஆகாதே”
நண்பர்: “விவேக் ஸ்பான்சர் செஞ்சாலும் உங்க கேம் கம்ப்ளீட் ஆகாது”
கிரண்: “அதெப்படி”
நண்பர்: “உங்க கேம் நிபந்தனை என்ன? மூன்றாவது மெசேஜ் கொடுக்குறவுங்க வரை வின்னர் தானே. விவேக் தான் மூன்றாவது மெசேஜ் கொடுத்துட்டாரே?!”
ஐவரின் ஆரவார மகிழ்ச்சி ரெஸ்டாரண்ட் முழுவதையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது.