பாரிஸ் கார்னரில், நிறுத்தத்தில் நிற்பதற்கு முன்பே, ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸிருந்து கீழே குதித்தேன். பாதுகாப்பு உணர்வு இல்லாது, கீழே தவ்வுவதை, தற்கொலை செய்வதற்குக் கீழே பாய்கிறேன் என்று அவர் தவறுதலாக எடுத்துக் கொண்டார். அவரது புருவங்கள் உயர்ந்து, நெற்றி சுருங்கியது. அவர் என் மேல் கோபப் பட்டார் என்று சொல்ல முடியாது; ஆனால் வருத்தப் பட்டிருந்திருப்பார். கண்டிப்பாக பதைத்துப் போயிருந்தார்.
பஸ்ஸிருந்து இறங்கியதும், சபர்பன் ரயிலைப் பிடிக்க, ஸ்டேசனை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். நான் வேளச்சேரி ரூட்டில், தரமணியில் இறங்கணும். என்னோடு இணையாக கூடவே ஓடி வந்த அவர், “நான் சொல்றேனு தப்பா நெனைச்சுக்காதீங்க!” என ஆரம்பித்தார். அறிவுரை பண்றவங்க, இப்படிதான் ஆரம்பிப்பாங்க. முகத்திலடித்தார் போல, பதில் சொல்வதென முடிவுவெடுத்தேன். “தயவு செய்து, அட்வைஸ் மட்டும் பண்ணாதீங்க! இந்த உலகத்தில் சீப்பா கிடைப்பது, அட்வைஸ் மட்டுந்தான்.” எனச் சொல்லி, ஓடிக் கொண்டிருந்தேன். சில விஷயங்களை முளையிலேயே கிள்ளிடணும். இல்லைன்னா, ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணி, நம்மை அறுத்துத் தொங்க விட்டு விடுவார்கள்.
ஆனால் நான் எதிர்பார்த்தது போலில்லாமல், அவர் விடாமல், இரைக்க இரைக்க கூடவே ஓடி வந்து கொண்டிருந்தார். விடாகண்டன் போலிருக்குது.. “பஸ்ஸிலே இருந்து இறங்கச்சிலே, நீங்க உங்களுக்குப் பிடிச்ச மாதிரி அக்ரோபேட் பண்ணலாம்; சோமர்சால்ட் அடிக்கலாம். அது உங்க உரிமை, இஷ்டம், நான் மறுக்கலை. ஆனா அதை நீங்க என் கண் முன்னாடி பண்ணக் கூடாது, பண்ணவிட மாட்டேன்..” இதைச் சொன்னவர், சொல்லிட்டு, அப்படியே போயிடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் என் காலரைப் பிடித்திழுத்து நிறுத்துவார் என, சற்றும் எதிர்பார்க்கவில்லை. சிலுப்பினால், கன்னத்தில் அறை விழும் என்பது தெளிவாகப் புரிந்தது.
ரெண்டு பேரும் அப்படியே நின்றோம். “நீங்க கீழே விழுந்தா, மத்தவங்க மாதிரி என்னாலே சும்மா தேமேனு எங்காரியத்தைப் பாத்துட்டுப் போக முடியாது. உங்களை ஆஸ்பத்திரிக்குக் எடுததுட்டுப் போணும். அங்கே டாக்டரை வைத்தியம் பார்க்க வைக்கணும். இதெல்லாம் எனக்குத் தேவையா? இதனால் என் காரியம் பாதிக்கப் படாதா? நீங்க தவ்வும் போது என் நெஞ்சு, நீங்க கீழே விழாம தப்பிக்கணும்னு, எப்படிப் பதைச்சுது தெரியுமா? மனசுக்குள் ரத்தம் கசிஞ்சுது.”
பைத்தியம் கிட்டே எதுவும் மாட்டிக் கொண்டோனா? என்ற சந்தேகத்துடன் சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்தேன். அவருக்கு என் அவசரத்துக்கான காரணத்தைச் சொல்ல முடிவு செய்தேன். “சார்.. நான் மெள்ள எறங்கி, சாகவாசமாய் ஸ்டேசனுக்குள் போனா, நின்னுட்டு இருக்கிற வேளச்சேரி டிரெயின் ஒருவேளை போயிடலாம். அடுத்த ரயில் வந்து ஏற, கொறைஞ்சது அரைமணி நேரமாவது நா காத்துட்டு இருக்கணும். அது தேவையா?”
“அரைமணி நேரம் லேட்டா போய், பொண்டாட்டியைப் புணர்ந்தால், ஒண்ணும் குடி முழுகிப் போகாது.. தவ்வும் போது, நீ பரலோகம் போய் சேந்துட்டா, அவளை…” என்று எதையோ சொல்ல வந்தவர், பாதியில் நிறுத்திக் கொண்டார். அவருக்கே தான் ஏதோ அசிங்கமாய் பேச போறது புரிஞ்சிருக்கணும், அதுதான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் பாதியில் நிறுத்திக் கொண்டார்.
அவரது இடி வார்த்தைகளால் துவண்டு போயிருந்த என்னை, கன்னத்தில் தட்டிக் கொடுத்து, சியர்ஸ் செய்தார். “ஐயாம் வெரி சாரி! இன்னைக்கு நான் அப்செட்.. அப்பப் பாத்து, நீ பஸ்ஸிலே இருந்து குதிச்சியா? தற்கொலைப் பண்றதுக்காகதான் குதிக்கிறீயோனு பயந்துட்டேன். அதான் தாங்க முடியலை.. கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்.. சாரி, ஐயாம் வெரி சாரி!” கசங்கியிருந்த என் மேற்சட்டையை, நீவிச் சரி செய்தார்.
ரெண்டு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பாராமல், ஸ்டேசனை நோக்கி வேகமாக நடந்தோம். “மொதல்ல அட்வைஸ் பண்றது பிடிக்காதுனு, அடிக்கிற மாதிரி சொல்லி, என்னை ஓவர்பவர் பண்ணப் பார்த்தே. ஆனா அடாவடித்தனமா, நாச் சட்டையைப் பிடிச்சதும், அப்படியே அடங்கிட்டே? இன்னிக்கு இருக்கிற மிடில் கிளாஸிக்கு, நீ ஒரு ஒரு கிளாசிக் உதாரணம்..” ஹக்ஹோ எனச் சிரித்தார்.
“இப்பவாவது நான் போலாமா? என்னைப் பாலோ பண்ணி வருவதை நீங்க விடலாமே?” என்று இறுக்கமாய் எரிச்சலுடன் சொன்னேன். அவரிடம் தொடர்ந்து பேச விரும்பவில்லை என்பதை, உடல்மொழியால் உணர்த்தினேன். ஆனால் அவர் எதையும் சட்டைச் செய்யவில்லை; என்னை விடுவதாயும் இல்லை.
“உன் மூட் அவுட்டாகி விட்டது. இப்படியே உன்னை வீட்டுக்கு அனுப்பினா, என் மேல உள்ள கோபத்தை, வீட்ல போய் புள்ளைகள் கிட்டே, பொண்டாட்டி கிட்டே காண்பிப்பே! அது வேண்டாமே! நான் உன்னைச் சியர் பண்ணிதான் அனுப்புவேன். என்னோட காபி குடிக்க வா..” எனக்குப் பொண்டாட்டி உண்டு, ஆனால் பிள்ளைகள் இல்லை என்பதைச் சொல்லலாம் என நினைத்த நான், அதைச் சொன்னால், இன்னும் எதையாவது சொல்லி கெக்கலிப்பார் என அமைதி காத்தேன்.
“ஏன் உம்முனு வரே? காபி வேண்டாம் என்றால், டாஸ்மார்கிகல் போய் பியர் குடிப்போம். பியர், லைட் டிரிங்தான்..”
“சும்மா தவ்வுனதுக்கே, இப்படிப் பிலுத்து எடுத்துட்டீங்க. பியர் குடிச்சுட்டு தவ்வுனா, பொலி போட்டுட மாட்டீங்க?” பெரிய நகைச்சுவையைக் கேட்ட மாதிரி, வயிற்றைப் பிடித்துக் கொண்டுச் சிரித்தார்.
திடீரென சிரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, “காபியே குடிப்போம்,” என்றார்.
ஜெனரல் சொல்லி விட்டார், இனி பிரஜையால் மீற முடியாது.
முதல் மிடக்குக் காபியைக் குடிக்கும் போதுதான், தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். “ராயப்பேட்டை மருத்துமனை அல்லது பக்கத்திலுள்ள ஏதாவது ஒரு பெரிய மருத்துவ மனையில் நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவன் என்று என்னை எண்ணிக் கொள். என் பெயரை எக்ஸ்னு வச்சுக்கோ. ஏனா என் பெயர், இப்ப நான் சொல்லப் போற விசயத்துக்கு, அவ்வளவு முக்கியமில்லை.” ஏதோ பெரிய விசயம் சொல்லப் போறார் என்பது, என்னை அசுவாரசியப் படுத்தியது.
தன்னைப் பொருட்டாக மதிக்காமல், எக்ஸென அறிமுகப் படுத்திக் கொள்ளும் நபருக்கு, நான்தான் இன்னாரென அறிமுகப்படுத்திக் கொள்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது? ஆகவே என்னை “நான்தான் ஒய்,” என அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவரும் என்னை அறிமுகப்படுத்திக் கேட்கவில்லை.
இருந்தாலும், அவர் எனக்குப் பெயர் வைத்தார்! “எனக்கு எப்படி எக்ஸ் என்பது பேரோ, அப்படி உனக்குப் பேர் ஒய். சரியா? நாம்ப ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஏதாவது பேர் சொல்லிக் கூப்பிடணும் இல்லையா, மிஸ்டர் ஒய்?” என்று சொன்னதும், அவருக்கு எதுவும் டெலிபதி தெரியுமா என, நான் மிரண்டு போய் பார்த்தேன். ஆனால் அவரை மிஸ்டர் எக்ஸ் என்று மறந்தும் கூட, அழைக்கக் கூடாதென, மனதுக்குள் சங்கல்பம் செய்து கொண்டேன். அவர் விதிக்கும் ரூலுக்குள் கட்டுப்பட்டு, நான் விளையாட தயாராக இல்லை.
”மிஸ்டர் ஒய்.. நான் பல ஆஸ்பத்திரிகளில் முப்பது வருசத்துக்கு மேலே வேலைப் பார்த்தவன். அதனாலே என் உடம்பு சம்பந்தமா சில முடிவுகளை என்னால் சரியான எடுக்க முடிஞ்சுது.” இப்படிச் சொன்னவர், தொடர்ந்து என்னிடம் உண்மையாக பேசலாமா அல்லது கூடாதா என்று சந்தேகம் எழ, தனக்குள் தர்க்கம் நடத்தியதால், மேற் கொண்டு பேச முடியாமல், அமைதியாக இருந்தார். பின்னர் என்னவானாலும், பேசி விடுவது என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.
“இப்ப வயசாயிடுச்சு. பழைய மாதிரி நோயை எதிர்க்கிற சக்தி, ஒடம்புக்கு இல்லை. அது இயல்புதானே? அதனாலே டிசிஸ் அதிகம் வரும், வருது. இந்த மாதிரி வயசான ஆட்களுக்குதான், நோய் எதிர்ப்புச் சக்தியை ஒடம்புக்குள்ளே வலுவா வளர்க்குணும். அதைததான் இந்தச் சுகாதார துறையில் பணிபுரிபவர்கள் செய்யணும். இதை எனக்கு வைத்தியம் பாக்ற எந்த டாக்டர்களும், ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. இதுல்லாம் தேவையில்லை, ஒங்களுககு எதிர்ப்பு சக்தியே இல்லாட்டாலும், எங்கிட்டே வைத்தியத்துக்கு வந்தா, நாங்க சரியாக்கிடுவோம்னு சொல்றாங்க..”
நான் அவரைச் சந்தேகத்துடன் பார்த்தேன். “உங்க பீடிகையைப் பார்த்தா, உங்களுக்கு ஏதோ நோய் வந்து, அதுக்கு நீங்க வைத்தியம் பார்க்க வேண்டாம்னு முடிவெடுத்த மாதிரி தெரியுது..”
அவருக்கு என் வார்த்தைகளைக் கேட்டதும் குதுகலம் வந்து விட்டது. “மிஸ்டர் ஒய்! நான் நினைச்சதை விட, நீ புத்திசாலியா இருக்கே? என் மனசுலே உள்ளதை, அப்படியே கண்டுப் பிடிச்சு சொல்றே? நீ டாக்டரா இல்லை மந்திரவாதியா?”
“நல்ல டாக்டர்களே, மந்திரவாதிகள்தான். இப்படிச் சொல்வதால், என்னை நீங்க ஒரு டாக்டரென நினைச்சிட வேண்டாம். நல்ல டாக்டர்கள் மந்திரவாதிங்கதான் நான் சொன்னதை நம்பி, நல்ல மந்திரவாதிகள் எல்லாம், நல்ல டாக்டர் என நம்பிட வேணாம்,” எனச் சற்று குழப்புவது போல சொன்னேன்.
குழப்புவது போல பேசும் போதுதான், அவர் கற்பூரம் போல பிடித்துக் கொண்டார். சொல்லப் போனால், நானே குழம்பிப் போய் சொன்னதை, அவர் எப்படி எந்தக் குழப்பமும் இல்லாது புரிந்து கொள்கிறார் என்ற கேள்வி, என்னைப் பயமுறுத்தியது.
குழப்பக் கேள்விகளை முதன் முதலாய் அவருக்கு எழுப்புவது போல, எனக்கே எழுப்பி, நான் முதல் முதலாய் பயணிக்கும் இப்பிரதேசங்களில், அவர் ஏற்கனவே பலமுறை பயணித்திருப்பார் போலிருக்கிறது! அதான் இத்தனைத் தெளிவு! ஆழமான மனுசன், ஜாக்கிரத்தையாய் இருக்கணும் என முடிவெடுத்தேன்.
எங்கள் சந்திப்புத் துவங்கிய பின்பு, முதன்முறையாக என்னை மரியாதையாகப் பார்த்தார் அவர்: “உன்னோட உரையாட முடியுங்கிற நம்பிக்கைக்கீற்று, இப்பதான் துளிர் விட ஆரம்பிச்சுருக்குது. கடைசி வரையும், ஒருத்தனோடவும் உரையாடமல், அப்படியே போயிடுவேனோ எனப் பயந்து போயிருந்தேன்,” என்றவர் கண்களில், ஜலம் துளிர்த்தது.
இப்படி அவர் சொன்னதுதான் தாமதம், மூடிக்கொண்ட என் மனசு திறந்து கொண்டது. “நீங்க ரொம்ப இமோசனலா இருக்கீங்க! இமோசன்ஸ், நம்மை ஸ்டுபிடாய் காரியம் செய்ய இழுத்துட்டுச் செல்லும். இப்பச் சொல்லுங்க, உங்களுக்கு என்ன வியாதி?” என்று சொல்லி விட்டு, நாங்க குடித்த காபிக்கு, நானே காசு கொடுத்துட்டு, அவருடன் ஸ்டேசனை நோக்கி நடையைப் போட்டேன். காபிக்குக் காசைக் கொடுத்தது மூலம், அவரை எனது கட்டுக்குள் கொண்டு வந்து, ஓவர்பவர் செய்திருந்தேன்.
“எனக்கு இஸட் வியாதி என்று வைத்துக் கொள். அந்த நோய் எப்படி வந்ததென, டாக்டர் விலாவாரியாய் சொன்னார். ஆனா ஏன் வந்ததென, அவரால் சொல்ல முடியலை.”
“நோய் ஏன் வந்தது, எப்படி வந்தது என்று எப்படிக் கேட்டாலும், அதற்குப் பதில் ஒன்றுதானே?” எனக் கேட்டு, நெற்றியைச் சுருக்கினேன்.
“மிஸ்டர் ஒய்! இப்பதான் உன்னைப் புத்திசாலினு நெனைச்சேன். அதுக்குள்ளே நான் அப்படி இல்லைனு ப்ரூவ் பண்ணிட்டே?” என்றவர், தனக்குள் தீவிரமாக யோசித்தார். பின்னர் “உனக்குப் புரியற மாதிரி சொல்லணும்னா, ரொம்ப சிம்பிளா சொல்லணும்னு நினைக்கிறேன்,” என்று பீடிகைப் போட்டார்.
ஸ்டேசனுக்குள் நுழைந்ததும், அவர் டிக்கெட் கவுண்டரில் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டார். எனக்கு மாத பாஸ். வேளச்சேரி வரைக்கும் ரிட்டர்ன் டிக்கெட் என்றவர், பின்னர் வேண்டாம் என சொல்லி என் பக்கம் திரும்பி “நீ எங்கே போறே?”னு கேட்டு, தரமணி என்று தெரிந்ததும், அவரும் தரமணிக்கே டிக்கெட் எடுத்தார். “ஏனா, நான் திரும்பி வர வேண்டிய அவசியம் இருக்காது, ரிட்டன் டிக்கெட் எடுத்தா வேஸ்ட்தானே?” என்று சொல்லிச் சிரித்தார். எனக்கு ஏனோ, அவர் பதிலின் விபரீதம் அப்போது புரியவில்லை.
ஒருவேளை என் வீட்டுக்கே வந்து, ராத்திரி முழுசும் இருந்து, துன்பம் கொடுப்பாரோ என்ற பயம் எழுந்தது. என் மனையாள், சில நேரம் என்னையே வீட்டுக்குள் அனுமதிப்பது கிடையாது, இந்த மாதிரி ஆள் என்ன திகிடுதனம் செய்தாலும் வீட்டுக்குள் நுழைந்து விட முடியாது என்ற மூடதைரியத்தில், நானும் அவரைப் பார்த்து, பதிலுக்குச் சிரித்தேன்.
அவர்தான் ஆரம்பித்தார்: ”இந்த இஸட் வியாதி எனக்கு எப்படி வந்தது என டாக்டரைக் கேட்டால், நீ புகையிலை உபயோகித்தாய் அல்லது மெட்ராஸ் வாகனப் புகையைச் சுவாசித்தாய் என்று ஏதோ சில்லறைக் காரணங்களைச் சொல்கிறார். என்னை விட அதிகம் புகையிலை போடுறவனுக்கும், என்னை விட புகையை அதிகம் நுகர்பவர்பவனுக்கும், ஏன் இஸட் வியாதி வரலைனு கேட்டா, டாக்டருக்குக் காரணம் தெரியலை. இவ்வளவுதுக்கும் நான் பெரிசா புகைபிடிப்பவன் இல்லை. எனக்கு இஸட் வரலாம் என்றால், எல்லா பாஸிவ் ஸ்மோக்கருக்கும் இஸட் இந்நேரத்துக்கு வந்திருக்கணும். அவங்களுக்கு எல்லாம் வராத இஸட் எனக்கு மட்டும் ஏன் வந்தது? அவரால் கடைசி வரையும் பதில் சொல்ல முடியலை. டாக்டர் ‘எப்படி’ இந்த நோய் வந்தது என்ற கேள்விக்குதான் பதில் சொன்னாரே ஒழிய, ‘ஏன்’ இந்த நோய் வந்தது என்ற கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லை.”
என் மூளை தீட்டி விட்ட குத்தூசி மாதிரி, ‘உர்உரென’ இரைந்தது. தண்டவாளத்தைத் தாண்டி, கடைசி நடைமேடையை அடைந்தோம். எந்த ரயிலும் அங்கில்லை. நடந்தே நடைமேடையின் முன்விளிம்பிற்குச் சென்றோம். ஒரு காதல் ஜோடி, யாருமில்லாத ரயில்வே பெஞ்சில் அமர்ந்து, சல்லாபம் செய்து கொண்டிருந்தது. ஏன் மூளை விடை தேடிக் கொண்டிருக்கிறது. அதனால் இதையல்லாம் கவனிக்காமல், அனிச்சையாக அலட்சியம் செய்தது.
நாங்கள் யாருக்கும் தொந்தரவு தராமல், அவர்களுக்கு முந்தைய பெஞ்சில் சென்று அமர்ந்தோம்.
” ‘எப்படி’க்குப் பதில் சொல்லி, வைத்தியம் பார்ப்பவன் ஏமாற்று டாக்டர், ‘ஏன்’க்குப் பதில் சொல்லி, வைத்தியம் பார்ப்பவன் மந்திரவாதி டாக்டர். சரியா?” என்று கேட்டேன்.
“எது சரி, எது சரியில்லை என்பது முக்கியமில்லை. இங்கே நம் நாட்டில் ஏன், மந்திரவாதி டாக்டர் உருவாக முடியலைங்கிறதுக்கான பதில்தான் முக்கியம். உனக்கு அதற்கான பதில் என்னவென்று தெரியுதா?” என்று அடுத்த கேள்வியைத் தூக்கி என் மேல் போட்டார். நான் கேள்வி என் மேல் விழாத மாதிரி நகர்ந்து கொண்டேன். அவரே பதில் சொல்லட்டும் என்று, பதிலைக் கூட சிந்திக்காமல், அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்குக் கவிந்திருந்த இருட்டில் கூட, அவர் முகம் பிரகாசமாய் மின்னியது.
“இங்குக் குழந்தைகள் பிறக்கும் போது, மந்திரவாதி போல்தான் பிறக்கின்றன. அனுகணமும் ஐம்புலன்களையும், கூர்மையாகத் தீட்டி வைத்துக் கொண்டு, ஏன் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே, அதற்குப் பதிலையும் கண்டுப்பிடித்து விடுகின்றன. ஆனால் பள்ளியில் சேரும் போதுதான், பிரசினையே ஆரம்பிக்கிறது. வாழ்க்கை என்ற பள்ளியில் பாடங் கற்றுக் கொண்டிருந்த குழந்தைகள், உண்மைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்ததும், கற்பதையே நிறுத்தி விடுகின்றன. பாடப் புத்தகம் படிப்பது, ஆசிரியர் சொல்வதைக் கேட்பது, மனனம் செய்வது, பரிட்சையில் படித்ததை வாந்தி எடுத்து, மதிப்பெண் பெறுவது, தேர்ச்சி பெறுவது என்பதுதான், இங்குக் கல்வி. இந்தக் கல்வியைக் கற்றவர்களுக்கு, ‘எப்படி’க்குதான் விடை தெரியுமே ஒழிய, ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடை தெரியாது.”
ரயில் வந்தது. ரெண்டு பேரும் எதிர் எதிர் திசையில் சன்னலை ஒட்டினார் போல் உட்கார்ந்து கொண்டோம். எங்கள் கோச்சில் கூட்டம் அதிகமில்லை. பூங்காவில்தான் கூட்டம் வரும். வண்டி புறப்படும் போதும், நான் எதுவும் பேசாமல் அவர் சொன்னதையே மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
“’ஏன்’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லி, வைத்தியம் பார்த்தால் என்ன, ‘எப்படி’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லி, வைத்தியம் பார்த்தால் என்ன, உங்களுக்கு நோயிலிருந்து விடுதலை வேண்டும் என்பதுதானே, முக்கியம்?” என்று கேட்டதும், அவரது முகம் கோபத்தில் துடித்தது.
“மிஸ்டர் ஒய்! நீ முட்டாளாய்தான், ரயிலிலிருந்து இறங்குவாய் போலிருக்கு. ‘ஏன்’னு கேட்டு வைத்தியம் பார்ப்பது, இஸட் வியாதியை வராமல் தடுப்பது. ‘எப்படி’னு கேட்டு வைத்தியம் பார்ப்பது, இஸடை வரவிட்டு, டாக்டர்கள் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது. இதில் உனக்கு எது வசதி? எது வேணும்?”
அவர் தனது முன்நெற்றியில் ஊறிய வியர்வையை, கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். நான் அவரைக் கூர்ந்து கவனித்தேன். அவரைப் பார்த்தால், எனக்கு வியாதியஸ்தராய் தோன்றவில்லை. அவருக்கு வயது அறுபதிலிருந்து, எழுபதுக்குள் இருக்கலாம். அவருக்குள் ஆட்கொல்லி வியாதி இருக்கும் என்பதை, என்னால் நம்பவே முடியலை.
“இப்பல்லாம் கோயிலில் கூட்டம் அதிகமா போகுது. அதுவும் சனிக்கிழமைனா, கூட்டமோ, கூட்டம். வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் இல்லாத கூட்டம், இந்தச் சனிக்கிழமையில், கோயிலுக்கு ஏன் வருது தெரியுமா?”
“சனிக்கிழமை விடுமுறை நாள், அதனால்தான்…”
“பள்ளிக்கூடத்துலே மனனம் பண்ணி, பண்ணி, வாழ்க்கையை நேரா பார்க்கக் கூட உனக்குத் தெரியாம போயிடுச்சு. உன்னைப் பார்த்தா, எனக்குக் பரிதாபமா இருக்குது, மிஸ்டர் ஒய்!” என்றவர் கொஞ்சம் நேரம் பேசாமல், அமைதியாக இருந்தார். பின்னர் அவரே ஆரம்பித்தார்.
“சனிக்குப் பரிகாரம் செய்ய இப்பப் பெரிய கூட்டம் கிளம்பி, சனிதோறும் கோயிலுக்குப் போகுது. அங்கே இருக்கிற பூசாரியும், டாக்டர் மாதிரிதான். சனி ‘ஏன்’ பிடித்தார், நீ நல்லவனா இருந்தா உன்னை ‘ஏன்’ சனி பிடிக்கப் போறார் என்ற கேள்வியை எழுப்பி பரிகாரம் சொல்ல மாட்டார், மாறாக சனி ‘எப்படி’ப் பிடித்தது என்பதைப் பார்த்து, பரிகாரம் சொல்வார்.”
“அப்ப உலகம் ஏமாற்றமாய் மாறி வருவதால், கோயிலுக்குக் கூட்டம் அதிகமா வருதுனு சொல்றீங்களா? இது அபாண்டம்..”
“அபாண்டம் இல்லை. உண்மை. ஏமாற்றும், பொய்யும், புரட்டும், இச்சமூகத்தில் அதிகரிக்க, அதிகரிக்க, கோயிலுக்கு கூட்டம் சனிக்கிழமை தோறும் அதிகம் வருது. இன்றைய சமூகமும், இன்றைய சனிக் கிழமைகளும், நான் சொல்லும் உண்மைக்கான நேரடிச் சாட்சிகள்..” நான் அப்படியே சம்மட்டிஅடி வாங்கியது போல, அமர்ந்து விட்டேன்.
ரயில் பூங்காவுக்குள் நுழையும் போது, கூட்டம் ஏறியது. இருப்பினும் நாங்கள் இருவரும் இருந்த நிலையைப் பார்த்து, எவரும் பக்கத்தில் வரலை. வேளச்சேரி ரூட்டில் எப்போதும் நெருக்கிப் பிடிக்கும் கூட்டமிராது. மேலும் பூங்காவில் இருந்து ரயில் 30 அடி அந்திரத்தில் போகத் துவங்கும். வேளச்சேரியில்தான் தரை இறங்கும்.
“இஸட் வியாதியிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள, சில லட்சங்கள் செலவு ஆகும். அவ்வளவு பணம், என்னிடம் இருக்கதான் செய்கிறது. இருந்தாலும், நான் இஸட்டுக்கு வைத்தியம் பாத்துக்காமல் செத்துட்டா, நல்லதுனு என் ஒரே மகள் நினைக்கிறாள். அவள் பாதுகாப்பா அத்தனைப் பணத்தையும் எடுக்கிறதுக்கு, அதுதான் சிறந்து வழினு நினைக்கிறாள்.”
“அது பாவம் இல்லையா?”
“பாவமானால் என்ன? சனிஸ்வரனுக்கு சனிக்கிழமைப் போய் தீபம் போட்டுட்டா, இப்பாவத்திற்குப் பரிகாரம் கிடைச்சுட போகுது. அதை அனுமதிக்காமல், எங்கிட்டே இருக்கிற லட்சக்கணக்கான பணத்தைக் கொடுத்து, நான் என்னைக் குணம்படுத்திக் கொள்ளலாம். அப்படி நடந்தா, என் மகளக்குப் பதிலா என்னைக் குணப்படுத்திய டாக்டர், என் பணத்தை அடிச்சுடுவான். அவன் சனிக்கிழமை தீபம் போட்டு, சனியின் கிருபையால் அவனும் பரிகாரம் பெற்று விடுவான்……”
என்னை விரக்தி வந்து, அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டது. இந்த எக்ஸ் எனது மூளையைத் தீட்டி, தீட்டி, மூளை வெடித்து சாகும் படி செய்து விடுவாரோ என்று பயந்து விட்டேன். இவரது மகளையும், இவரது டாக்டரையும் கொலை கூட செய்யலாம் என்ற கொலைவெறி, மனதுக்குள் தாண்டவம் ஆடியது.
திருமயிலை வந்ததும் கூட்டம் எல்லாம் இறங்கி விட்டது. வண்டியே வெறிச்சோடி கிடந்தது. அப்போதுதான் வாழ்க்கை வீசும் கேள்விகளுக்கு, பதில் தெரியாத பேதையாக, நானும் இந்த ரயில் பெட்டியைப் போல வெறுமையாக உணர்ந்தேன். இந்த ரயில் உடனே புறப்பட்டுப் போனாலும் என்ன, அல்லது யுகாந்திரமாய் திருமயிலையிலேயே நிரந்தரமாய் உறைந்து நின்றாலும் என்ன, எல்லாம் ஒன்றுதான் என்று தோன்றியது. பிறரின் கருத்துகளைக் கொண்டு, மூளையை நிறைத்து, அதையே அறிவு என்று நம்பி இறுமார்ந்திருந்த எனக்கு, நம் மூளைக்குள்ளும் கேள்வி உதித்து அதற்கு நாமே காணும் தீர்வுதான் உண்மையான ஞானம் என்பது முதன்முதலாக புரிந்தது.
“உண்மையில் எனது பிணி, எனது மகளின் மூளைக்குள் வியாதியை உருவாக்கி விட்டது. எங்கே தன் தந்தை தனக்குப் பிறகு, தனது சேமிப்பை அவளுக்குத் தராமல், தனக்கே முழுமையாகச் செலவழித்து விட்டு, கடைசியில் பூஜ்யம் பேலன்ஸை வைத்து விட்டு சென்று விடுவாரோ என அவள் பயப்படுகிறாள். இந்த எண்ணமே, அவளது மூளையைப் பாரமாக அமுக்க, அவள் தலை பைசா நகரத்துக் கோபுரம் போல சரிந்தே நிற்கிறது. அவளது அன்பான தந்தை என்ற வகையில், நானும் என்னை இந்தப் பிணியில் இருந்து விடுவித்துக் கொண்டு, அவளையும் அவளது மூளைப் பிணியில் இருந்து விடுவிக்க வேண்டாமா?” குரல் தளுதளுக்கக் கேட்டார். ரயில் கோட்டூர்புரத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது.
“தொழில்நுட்பம், மருத்துவத்தைச் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக, எட்ட முடியாத தூரத்தில் கொண்டு வைத்து விட்டது. செல்வந்தர்கள் மட்டுமே, இன்று வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியும். ஏழைகளும், பெண்களும், என்னைப் போன்ற வயசாளிகளும், ‘எப்படி’ நோய் வந்தது என்று விளக்கும், இச்செலவு பிடிக்கும் தொழிற்நுட்ப மருத்துவத்தை எடுத்துக் கொண்டால், தங்கள் சந்நதிகளைத் திவாலாக்கி விட்டு, தாங்களும் திவாலாக சாக வேண்டியதுதான். எங்களுக்கு வேறு வழியில்லை. இன்றைய மருத்துவம் மனிதாபிமானம் அற்றதாகி விட்டது,” அவர் குரல் விட்டு விட்டு ஒலித்தது.
“ஒன்று தெரியுமா மிஸ்டர் ஒய்? இன்றைய மருத்துவம் ஒவ்வொரு நோயாளிக்குள்ளும், குணமாக்கும் இயல்பு இயல்பாகவே உள்ளது என்பதைக் காண மறுக்கிறது. தானே அனைத்தையும் சரி செய்து விட வேண்டும் என்ற வேட்கையுடன், நோயாளியின் உடலுக்கு வாய்ப்பு அளிக்காமல், தனது முயற்சியைத் தொடர்கிறது. ஒரு கண்டிப்பான தாய் போல செயலாற்றி, ஈட்டிக்காரன் போல் மருத்துவச் செலவை ஏற்றி விடுகிறது.”
அப்போதுதான் எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. ஏதோ எதிர்பாராத குரூரம் நடக்கப்போகிறதென, என் உள்மனம் ஊளையிட்டது.
ரயில் கிரீன் பார்க்கை கடந்தது. அவர் எழுந்தார். “நீங்க எழுந்திருக்க கூடாது. உட்காருங்க.. அசையாம உட்காருங்க..” என்று கத்தினேன். எனது கூச்சலுக்குப் பயந்து போய், அவர் உட்கார்ந்து கொண்டார்.
“சார்! உங்க முன்னாடி இருக்கும் எல்லா பிரச்சினையையும், உங்க அளப்பரிய படைப்பு ஆற்றலைப் பயன்படுத்தி, நீங்க வெல்ல முடியும். இந்த நூற்றாண்டின் பெரிய கண்டுப்பிடிப்பே, நமது அறியாமையை நாமே கண்டுகொண்டதுதான். உங்களிடம் பேசியதில், இவ்வளவு நேரமும் எனக்குள் இருந்த அறியாமையை, நான் கண்டு கொண்டேன். நீங்க தற்கொலை செய்து கொள்வதற்காக, இந்த ரயிலில் வந்திருக்கிறீர்கள் என்பது, எனக்கு இப்போது தெளிவாகப் புரிகிறது. அதுதான் ரிட்டன் டிக்கெட் கூட நீங்க எடுக்கலை. உங்களைப் போலவே, நானும் பஸ்ஸில் இருந்து குதித்துச் சாக முற்பட்டவனோ என்று எண்ணிதான், நீங்கள் பதைத்துப் போய் விட்டீர்கள் என்பது, அப்போது விளங்கவில்லை, இப்போது விளங்குகிறது. நான் உங்களைத் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க மாட்டேன்…” என்று கதறி கொண்டே, அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன்.
அவர் ஆக்ரோஷமாய் என்னைத் தள்ளி விட்டார். “நான் கோழையல்ல. மரணம் என்பதை, எந்த வைத்தியத்தாலும் தவிர்க்க முடியாது. பதவி ஓய்வு பெற்றவன், சமுகத்திற்குப் பாசிடிவ் பங்களிப்பு செய்ய முடியாதவன், வாழத் தேவையில்லை. அதற்காக மரணத்தோடு எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல. மரணம் ஒரு நிலையிலிருந்து, மற்றொரு நிலைக்கான மாற்றம், அவ்வளவுதான். அந்த மாற்றம் எனக்குத் தேவை,” என்று சொன்னவர், திறந்திருந்த கதவை நோக்கி சென்றார்.
‘தட்’டென்ற சத்தமும், அதைத் தொடர்ந்து காற்றைக் கிழித்துச் செல்லும், ரயிலின் சீழ்கை ஒலியும் கேட்டது…
“மிஸ்டர் எக்ஸ்!!” என்று என் உயிரை எல்லாம் கூட்டிச் சத்தம் போட்டுக் கத்தினேன்.