‘வெள்ளைச் சிட்டை’ வியாபாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 5,409 
 
 

(இதற்கு முந்தைய ‘ஜவஹர் எனும் நேரு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது).

சிவராமன் சிவராமன் என்ற பெயரில் திம்மராஜபுரத்தின் பட்டுத் தெருவில் கடலை எண்ணெய் வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருத்தர் இருந்தார்.

அவருக்கு ‘ரோட்ரி’யில் கடலை எண்ணெய் ஆட்டி விற்பதுதான் தொழில். எண்ணெய் ஆட்டுகிற ரோட்ரி கூட அவருக்குச் சொந்தமானதில்லை. தாயாதிக்காரர் ஒருத்தருக்குச் சொந்தமான ரோட்ரியில்தான் சிவராமன் வாடகை கொடுத்து ஆட்டிக் கொண்டிருந்தார்.

இத்தனைக்கும் ஒரு பேபி எக்ஸ்பெல்லர் சொந்தமாக வாங்கி மாட்டியே எண்ணெய் ஆட்டி வியாபாரம் செய்ய முடிகிற அளவுக்கு சிவராமனிடம் பண வசதி இருந்தது. ஆனாலும் துட்டு வசதியே இல்லாத மனுஷர் என்கிற மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, தாயாதிக்காரரின் பக்க பலத்தில் அவரின் ரோட்ரியில் வாடகை கொடுத்து எண்ணெய் ஆட்டிக் கொண்டிருக்கிற ரொம்பச் சின்ன வியாபாரி மாதிரி சிவராமன் வேஷம் போட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் நிஜத்தில் சிவராமன் குறிப்பிடும் படியான பெரிய வியாபாரிதான். அது வெளியில் தெரியாதபடி அவர் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்ததற்குக் காரணம் என்னவென்றால், அவர் பண்ணிக் கொண்டிருந்த அந்தக் கடலை எண்ணெய் வியாபாரம் பூராவும் பில் இல்லாத ‘வெள்ளைச் சிட்டை’ வியாபாரம். அதாவது விற்பனை வரியாக ஒரு பைசாகூடக் கட்டாத, அல்லது கட்டப் பிடிக்காத வியாபாரம்.

விற்பனை வரி கட்டப் பிடிக்காத சிவராமனுக்கு வருமானவரி கட்ட மட்டும் பிடிக்குமா என்ன? வருமான வரிக்கும் அவரின் வியாபார வாழ்க்கையில் இடம் கிடையாது. ‘கொள்முதல் – வித்துமுதல்’ இந்த இரண்டுக்கும் சிவராமனிடம் எந்தக் கணக்குப் புத்தகமும் கிடையாது.

கட்டியிருக்கும் வேட்டிக்குள் முழங்கால் வரைக்கும் அணிந்திருக்கும் பட்டை படையாகக் கோடுபோட்ட உள் கால்சட்டையின் இரண்டு பக்கமும் இருக்கிற பெரிய பாக்கெட்டுகளில்தான் சிவராமனின் மொத்த வியாபார ‘டிரான்ஸாக்ஷனும்’ என்றால் அது மிகையல்ல. கத்தை கத்தையான துண்டுப் பேப்பர்களில் கோழி கிண்டிய மாதிரியான மோசமான எழுத்துக்களில் குறிக்கப் பட்டிருக்கும் அவரது மொத்த வியாபாரமும். அதெயெல்லாம் படித்துப் புரிந்துகொள்வதற்கு சிவ்ராமனைத் தவிர வேறு யாராலும் தலைகீழாக நின்று பார்த்தால்கூட முடியாது.

அப்படி இருக்கும் கோழிக் கிறுக்கல் விவரம் பூராவையும் முறையாகப் பிரித்து நேர்த்தியாகப் பதிவு செய்து பார்த்தால், ‘சேல்ஸ் டாக்ஸ்’ வண்டி வண்டியாக கட்ட வேண்டியது வரும். ‘இன்கம் டாக்ஸ்’ கூடை கூடையாக செலுத்தியதாக வேண்டியது வரும். இதெல்லாம் சிவராமனுக்கு சரிப்படவே சரிப்படாத சமாச்சாரம்.

இன்கம்டேக்ஸ்காரனைக் கூட சில நேரங்களில் சமாளித்து விடலாம். அனால் இந்த சேல்ஸ்டாக்ஸ்காரனைத்தான் கட்டி மாரடிக்க முடியாது! வரிக்கு வரி ரொம்ப சத்தியமாக கணக்கை எழுதிக்கொண்டு போய்க் காட்டினால் கூட சந்தேகத்தோடு மேலேயும் கீழேயும் காக்கா பார்வை பார்க்கிற காமாலைக் கண் யாருக்கென்றால் – அது சேல்ஸ்டாக்ஸ் காரனுக்குத்தான்!

பில் போட்டு கணக்கை எழுதிக் கொண்டுபோய்க் காட்டினால்தானே மேலேயும் கீழேயும் பார்க்கப் போகிறான்… கணக்கு எதையும் காட்டாமலே இருந்து விட்டால்? இந்தக் கேள்விக்கான பதில்தான் சிவராமனின் வியாபார வாழ்க்கை. அதனால் வியாபாரத்திற்காக சின்னதாகக்கூட ‘கடை’ என்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை அவர்.

திம்மராஜபுரத்தின் பெருமாள் கோயிலைச் சுற்றி நான்கு பக்கமும் இருக்கும் நான்கு பெரிய வீதிகளில் வரிசையாக சின்னச் சின்ன மரங்கள் இருக்கும். குறிப்பிட்ட ஒரு உதியமரத்தடிதான் சிவராமனின் கடை. அங்கேதான் எப்போதும் நின்று கொண்டிருப்பார், மப்டியில் இருக்கிற ட்ராபிக் போலீஸ்காரன் மாதிரி.

அவரை மாதிரி வெவ்வேறு மரத்தடியில் வெவ்வேறு ‘சிவராமன்’கள் மப்டியில் நின்று கொண்டிருப்பார்கள். எண்ணெய் டின் வாங்க வருகிறவர்கள், தங்களுக்குப் பிரியப்பட்ட சிவராமன்களிடம் போய் நிற்பார்கள். அன்றைய மார்க்கெட் நிலவரம் பற்றிய பேச்சு நடக்கும். பின்பு பணம் கைமாறும். வியாபாரம் முடிந்துவிடும்.

உடனே சிவராமன் ஒரு சின்ன துண்டுச் சீட்டில் டாக்டர்கள் எழுதித் தருகிற புரியவே புரியாத மருந்து ‘ப்ரிஸ்கிருப்ஷன்’ மாதிரியே கிறுக்கல் கிறுக்கலாக எதையோ எழுதித் தருவார். அதைக் கொண்டுபோய் அவர் எண்ணெய் ஆட்டுகிற ஆயில் மில்லில் காட்டினால் எண்ணெய் டின்கள் ‘டெலிவரி’ கொடுப்பார்கள்.

எண்ணெய் டின் வாங்கிய ஆசாமி திரும்பவும் சிவராமனிடம் வந்து, அவர் எழுதிக் கொடுத்த அந்தத் துண்டுச்சீட்டைக் கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்! சிவராமன் எண்ணெய் பிஸ்னஸ், அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த மாதிரிதான் நிழலாக நடந்து கொண்டிருந்தது. இதில்தான் அவர் நோகாமல் சம்பாரித்தும் கொண்டிருந்தார். இங்கேதான் ஆபத்து வந்தது…

திம்மராஜபுரத்தில் பில் இல்லாமல் வியாபாரம் செய்ய ஆசாமிகள் இருந்த மாதிரியே, கையெழுத்தையும், அட்ரஸ்சையும் போடாமல் சேல்ஸ்டாக்ஸ் காரர்களுக்கு மொட்டைக் கடுதாசி எழுதிப் போடுகிற ஆசாமிகளும் இருந்தார்கள். ஒருநாள் அந்த மாதிரியான ஒரு ஆசாமியிடமிருந்து சேல்ஸ்டேக்ஸ் ஆபீஸுக்கு ஒரு நீண்ட கடிதம் சிவராமனின் மரத்தடி வியாபாரம் பற்றிய அத்தனை கோல்மால்களையும் புட்டுப் புட்டு வைக்கிற மாதிரி ஒரு கடிதம் விவரமாக எழுதப்பட்டு விட்டது.

மொட்டைத் தலை கிடைத்தாலே இறுகிப் பிடித்துக்கொள்ளக் கூடியவர்கள் சேல்ஸ்டாக்ஸ்காரர்கள்; குடுமியே கிடைத்தால் விட்டு விடுவார்களா? அதிகாரி சத்தியமூர்த்திக்கு வேலை ரோம்பச் சுலபமாகப் போய்விட்டது. நான்கு சக அதிகாரிகளுடன் போய் சிவராமனை அப்படியே அலாக்காக சேல்ஸ்டாக்ஸ் ஆபீசுக்கு தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள்.

மொட்டைக் கடுதாசி ஆசாமி தெரிவித்திருந்த மாதிரி சிவராமனின் வேட்டிக்குள் இருந்த கால் சட்டைப் பாக்கெட்டுகளில் அவரின் வியாபாரச் சரித்திரமே துண்டுச் சீட்டுகளில் மறைந்து கிடந்தது. போட்டிருந்த உள் கால்சட்டையோடு சிவராமன் சத்தியமூர்த்தியின் கால்களில் விழுந்து பார்த்தும் விட்டார். அந்த ஆள் மசியவில்லை. அந்தச் சமயத்தில்தான் எதிர்பாராத ஒரு திருப்பம் நடந்தது.

சேல்ஸ்டேக்ஸ் அலுவலகத்தில் சிறு அதிகாரியாக இருந்த சந்திரன் என்பவர் சிவராமனுக்கு உதவிக்கரம் நீட்டினார். சந்திரன் ஆறு மாதத்திற்கு முன்பு சிவராமனின் வீட்டுக்கு அடுத்த வீட்டிற்கு மதுரையில் இருந்து மாற்றலாகி குடித்தனம் வந்திருந்தார். அதிகமாகப் போனால் அவருக்கு வயது நாற்பது இருக்கலாம். அவரின் மனைவி ரேவதி. கமலா என்ற பெயரில் ஒரேமகள் அவர்களுக்கு. சிவராமன் வயசு வித்தியாசம் இல்லாமல்; ஏழை பணக்காரன் வேற்றுமை பார்க்காமல் அனைவரிடமும் ரொம்ப சகஜமாக பேசிப் பழகிவிடக் கூடியவர்தான்.

ஆனால் அடுத்த வீட்டிற்கு புதிதாகக் குடி வந்திருப்பவர் சேல்ஸ்டேக்ஸ் ஆபீஸில் வேலை பார்க்கிறவர் என்கிற விஷயம் தெரிந்ததும், சிவராமன் அடுத்தவீடு இருக்கும் திசையைக்கூட பார்த்துவிடக் கூடாது என்கிற மாதிரி முகத்தை ரொம்ப ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டார்.

அது மட்டுமில்லை; சந்திரனின் குடும்பத்தைச் சேர்ந்த யாரோடும் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எந்தவிதமான பேச்சும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கை செய்தும் வைத்திருந்தார். அதுசரி, வந்திருப்பவன் சேல்ஸ்டேக்ஸ் ஆசாமி; எதற்கு அவனிடம் போய் பேச்சு வார்த்தை வைத்துக்கொண்டு?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *