விபத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 6,036 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அப்படி ஒரு விபத்து நடந்தபோது அந்த ஊர் மக்கள் நடந்து கொண்ட விதம் பற்றி என் நண்பர் வியப்பும் வேதனையும் அடைந்தார். எனக்கு அவர்கள் அப்படி நடந்து கொண்டதில் ஆச்சரியம் எதுவும் ஏற்படா விட்டாலும் கேட்பதற்கு வருத்தமாகத்தான் இருந்தது.

அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தை எனக்கு ஓரளவு தெரியும். அங்குள்ளவர்கள் கட் முன்பு இருந்தது போல் இப்போது இல்லை. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒரு திருமணத்துக்குப் போயிருந்தேன். என் உறவினர் வீட்டுத் திருமணந்தான் அது.

சாலையை ஒட்டிப் பேருந்து நிறுத்தும் இடத்துக்கு எதிராகத்தான் திருமண வீடு இருந்தது. பேருந்து அந்த ஊரில் நின்றவுடன் என் கண்ணில் பட்டவர் எனக்கு மிகவும் நெருக்கமான உறவினர். நெடுநாளைக்குப் பிறகு அவரைச் சந்திக்கும் மகிழ்ச்சியில் கைகளை நீட்டியபடி ஆவலோடு சென்றேன்.

அவர் என்னைப் பார்த்தபோது அவருடைய முகத்தில் எந்த விதமான சுரத்தும் இல்லை. ஒரு புன்முறுவலையும் வாங்க”என்ற சொல்லையும் உதட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். தலையை மட்டும் மேலும் கீழும் அசைத்தார்.

நான் அதிர்ந்து போய் நின்றேன். நான்தான் இன்னாரென்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளலாமா என்று நினைத்தேன். அது என்னை இன்னும் இழிவுபடுத்திக் கொள்வதாகும் என்ற கணநேரத் தன்மான உணர்வின் உறுத்தலினால் அப்படி ஒன்றும் சொல்லாமல் நின்றேன்.

நல்ல வேளை! அந்த நேரத்தில் என்னைத் திருமணத்துக்கு அழைத்தவர் எதிர்ப்பட்டு விட்டார். அவருடைய அன்பான பார்வையும் வாங்க என்ற உண்மையான வரவேற்பும் தொங்கிப்போன என் முகத்தை நிமிர்த்தியது. அவர் வராது போயிருந்தால் நான் மறு வண்டியிலேயே ஊருக்குத் திரும்பி இருப்பேன்.

ஆயினும் அங்குச் சந்தித்த பலர் புன்சிரிப்பிலும் பேச்சிலும் ரொம்பச் சிக்கனம் காட்டினார்கள். பார்த்தால் பலர் தலையை மேலும் கீழும் அசைத்தார்கள். இதற்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரியவில்லை.

என்னுடன் அந்த ஊருக்கு ஒன்றாகப் பயணம் செய்த என் உறவினர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டேன்.

“வாங்க என்று வாய்திறந்து கூப்பிடக்கூட முடியாம தலையை இப்படி அசைக்கிறாங்களே, இவங்களுக்கு என்ன வந்தது?” என்று கேட்டேன்.

“நீ ஒண்ணு. அவர்களிடம் இப்போ காசு வந்திடுச்சு…அதனாலே பாசம் எல்லாம் போயிடுச்சு”என்றார்.

பிறகு அந்தக் கிராமத்து மக்கள் மனம் மாறிப்போன கதையைச் சொன்னார்.

“ஊருலே இந்த மண்ணைக் கிண்டிக்கொண்டிருந்தால் ஒரு புண்ணாக்கும் விளையாதென்று அவங்களுக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு. அந்தச் சமயத்துலே அவங்களுக்கு கடலுக்கு அப்பால் இருந்து பொழைப்பு கை காட்டிச்சு. சவுதியும் துபாயும் வா வான்னு கூப்பிட்டிச்சு. இங்கே புதுசா கடையிலே வாங்குன விளக்குமாத்தை வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு வரக் கூச்சப்பட்டவன் அங்கே போய்த் தெருப்பெருக்கினான். கக்கூஸ் கழுவினான். எல்லாத்துக்கும் டாலர்லே கூலி வாங்கினான். ஓட்டு வீடெல்லாம் காங்கிரீட் கட்டடமா எழுந்திருச்சு. சீயக்காய் தேய்ச்சுக் குளித்த பொண்டுகள் துபாய்ச் சோப்புக்குப் பதிலா வேற சோப்புப் போட்டுக் குளிச்சா அழுக்குப் போகாதுன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க…”

“எல்லா வீட்டிலே இருந்துமா துபாய்க்குப் போயிருக்காங்க” என்றேன்.

“இல்லே…. இல்லே ஓரளவு வசதி உள்ளவங்க வீடுகள்லே இருந்துதான் ரொம்பப் பேர் போனாங்க. ஆனால் இல்லாதவங்க பாடு ரொம்ப மோசமாயிடுச்சு. அவங்க இங்கே மண்ணைக் கிண்டிக்கொண்டிருக்கும் போது அவங்க கண்ணு முன்னாலேயே துபாய்க் காசுலே கட்டிடம் கட்டிடமா எழும்புறதைப் பார்த்தாங்க. அவங்களுக்கு மாத்திக் கட்டிக்கிற ஒரு சீலை இல்லாம வீட்டுக்குள்ளே மொடங்கும்போது துபாய்க்காரங்க வீடுகள்லே வண்ணத்திலே ஒண்ணு வகைக்கு ஒண்ணாக் கட்டிக்கிட்டு மினுக்குறதைப் பார்த்தாங்க.”

“எத்தனை காலம் வானத்தையே பார்த்துக்கொண்டிருக்க முடியும்? அந்தச் சமயத்துலேதான் எப்படியும் பணம் சம்பாதிச்சாப் போதுங்குற முடிவுக்கு வந்துட்டாங்க.”

“இப்போ எப்படிச் சம்பாதிக்கிறாங்க?”

“எல்லா வழிகள்லேயும். பக்கத்து ஊர்ப் பணக்காரங்களுக்குத் தங்கம் கடத்துறதுலே இருந்து கஞ்சா கடத்துறது வரை. பெண்கள் என்ன செய்யுறாங்க தெரியுமா… ’’உண்டியல்”பணத்தை மடியிலே கட்டிக்கிட்டுப் போயி ஊருஊராக் கொடுத்திட்டு வாராங்க. முன்னே இருந்த கஷ்டம் இன்னும் பலரிடம் இருக்கத்தான் செய்யுது. ஆனால் முன்னே இருந்த மனுசத்தனம் இப்போ பெரும்பாலானவங்க கிட்ட இல்லை ’என்றார்.

அந்த ஊரில் முன்பு இருந்த மனுசத்தனத்தால் நானும் உருகிப் போயிருக்கிறேன். சிறுவயதில் அந்த ஊருக்குப் போக வேண்டும் என்று என் பெற்றோர் சொல்லும்போதே எனக்குத் தலைகால் புரியாது. அங்குப் போய் இறங்கிய உடன் ’தம்பி’என்றும் அண்ணன்’என்றும் ’மச்சான்’ என்றும் ’மாமா’என்றும் வாய் நிறைந்த சொல்லுடன் எதிர் கொண்டுஅழைத்தவர்கள் தாம் எல்லாரும்.

இப்பொழுது தலையசைப்போடு நின்று கொண்ட இந்த உறவினர், அந்த நாட்களில் என் முதன்மையான கூட்டாளி. ஒன்றாகச் சேர்ந்து கண்மாயைக் கலக்குவோம். ஊர்ச்சாலையில் ஒண்டியாய்நின்ற ’எவரெஸ்ட்’டீ ஸ்டாலில் ஒன்றாகச் சாயாக் குடிப்போம். ஒரே சைக்கிளில் பக்கத்து ஊரில் இருந்த டூரிங் டாக்கீஸில் ’அந்து அந்து’போகும் பழைய படங்களைப் பார்த்து விட்டு வருவோம்.

உறவுக்காரர்கள் மட்டுமல்ல – ஊர்க்காரர்களும் வஞ்சனை இல்லாமல் அன்பு காட்டுவார்கள், ஓட்டு வீடாக இருந்தாலும் ஓலை வீடாக இருந்தாலும் வீட்டுக்கு முன்பு திண்ணை இருக்கும். அந்தத் திண்ணைகள் பெரும்பாலானவற்றில் நான் உட்கார்ந்து இருக்கிறேன்.

உட்காரும் போதெல்லாம் கொறிப்பதற்கு வேர்க்கடலையோ கொண்டைக் கடலையோ தட்டுகளில் நீளும். கடிப்பதற்கு முறுக்கோ சேவோ இருக்கும். குடிப்பதற்குச் சாயாவோ சர்பத்தோ தயாராகும். எல்லாவற்றுக்கும் மேலாக ’வா’ என்ற சொல்லிருக்கும்.

இப்பொழுதும் எல்லா வீடுகளிலும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் முன்பிருந்த முகங்களும் இல்லை; சொற்களும் இல்லை. புதிதாய் வருபவர்களுடன் பேச யோசிக்கிறார்கள்; அளந்து பேசுகிறார்கள். பேசும் பொழுது பூமியைப் பார்க்கிறார்கள். ஏறிட்டுப் பார்க்கும்பொழுதே “அப்போ நான் வர்ரேன்” என்றபடிப் பிரிவதற்கு அவசரப்படுகிறார்கள்.

அந்தத் திருமணத்திற்குப் போய் வந்த பிறகு அந்த ஊரின் பேரில் ஏற்பட்டிருந்த பிரியம் போய்விட்டது. இப்பொழுது அந்த ஊர்ச் சாலையில் ஏற்பட்ட விபத்தைப்பற்றி நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார்.

“நடுராத்திரிலே அந்த எண்ணெய் லாரி பொரண்ட சத்தத்துலே ஊரே முழுச்சிக்கிடுச்சி. டின் டின்னா எண்ணயச் சுமந்துக்கிட்டு வந்த லாரி அது. பொரண்டா சத்தத்துக்குக் கேக்கவா வேணும்? ஊருலே உள்ளவங்க எல்லாம் ஓடி வந்து பாக்குறாங்க. லாரி பொரண்டு கிடக்குது. டிரைவரும் கிளீனரும் முன்பக்கத்துச் சக்கரத்துலே மாட்டி துடிச்சிக்கிட்டிருக்காங்க. வந்த சனங்கள் வண்டியை நிமித்தி ரெண்டு பேரையும் காப்பாத்தணும்னு நெனைக்காமலே நிக்குறாங்க.”

“நீங்க என்ன பண்ணுனீங்க?” என்று குறுக்கிட்டேன்.

“நான் அங்கே போகவே இல்லே, கேள்விப் பட்டதைத்தான் சொல்றேன்” என்றவர் தொடர்ந்தார்.

“அந்த ரெண்டுபேரு காலும் துடிச்சு நின்னுடுச்சு, அப்பொறந்தான் லாரி கிட்டே போனாங்க. கயித்துலே கட்டிவைச்சுக் கொண்டு வந்த எண்ணெய் டின்னெல்லாம் அவுந்து போயிச் சிதறிக் கிடக்குது. சில டின்னு நஞ்சி போயி எண்ண வேற கசியுது. சனங்க இப்படிப் பார்த்துக்கிட்டிருந்த போது அந்த ஊர்க்காரன் துணிஞ்சு போயி அந்த டின்னுகள்லே ஒண்ணை எடுத்துகிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டான். சனங்களும் என்ன செஞ்சாங்க தெரியுமா? இதுக்குத்தான் காத்துக்கிட்டிருந்த மாதிரி ஆளுக்கொரு டின்னை எடுத்துக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்”.

‘ஆம்புளைகள் மட்டுமில்லே…. பொம்புளைகளும் ஆளுக்கொரு டின்னைத் தூக்கி இருக்காங்க. அங்கே நின்னுக்கிட்டிருந்த கிழவியும் ஒரு டின்னை எடுத்துக்கிட்டு யாரு பெத்த மக்களோன்னு புலம்பிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சுட்டாளாம்’… இப்படிச் சொல்லிவந்தவர் என்னைப் பார்த்துக் கேட்டார்

“ஆம்புளைகளுக்குத்தான் ஈவு இரக்கமில்லாமப் போயிருச்சு. பொம்புளைகளுக்கும் அப்படியா?” என்றார்.

“இல்லை இது ஒரு சமூக நோய். வாழ்க்கைக்காகப் போராட்ட வழியத் தேர்ந்தெடுக்காம, குறுக்கு வழியிலே போக நினைக்கிற எல்லாச் சமூகத்துக்கும் இந்த நோய் வரும். ஆண் பெண் என்கிற பேதமெல்லாம் இந்த நோய்க்கு இல்லே. அந்த லாரி புரண்டது இப்போ ஏற்பட்ட விபத்து, அவங்க மனுசத்தனத்துக்கு எப்பவோ விபத்து ஏற்பட்டிருச்சு. அந்த விபத்து இந்த மனுசருங்களை அடையாளம் காட்டி இருந்தது. மற்ற ஊர்லேயும் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டுச்சுனா. எனக்குச் சொல்ல வருத்தமாகத்தான் இருக்குது. ஆனாலும் அந்த ஊர்ச்சனங்களும் இவங்க மாதிரித்தான் நடந்துக்கிருவாங்கன்னு தோணுது…” என்றேன்.

– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *