வாத்தியங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 846 
 
 

விடுதியின் எதிரே புல் வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வார்டன் சாவித்திரி. பூமி சிரிப்பது போல் எத்தனை அழகான புல்வெளி. எழிலார்ந்த மலைச் சரிவிலே அந்தக் கல்லூரி அமைந்திருந்தது. பெண்களுக்கான அந்தக் கல்லூரியின் விடுதிகளும் மலைச் சரிவிலேயே அமைந்திருந்தன. சாவித்திரிதான் அந்தக் கல்லூரி விடுதிகளில் பெரியதும் சுமார் முந்நூறுக்கு மேற்பட்ட வயது வந்த மாணவிகள் தங்கிப் படிப்பதுமான கஸ்தூரிபா விடுதி – என்ற பெரிய ‘பிளாக்’கிற்கு வார்டனாக நியமிக்கப்பட்டிருந்தாள். இதற்கு முன்னால் அந்த விடுதிக்கு வார்டனாக இருந்தவர்கள் எல்லாருமே நாற்பது வயதுக்கு மேற்பட்ட பேராசிரியைகள்தாம். முதன்முதலாக இந்த ஆண்டுதான் திருமணமாகாதவளும் – இளம் வயதினளும், அநுபவம் குறைந்தவளுமான சாவித்திரியைப் போன்ற ஒரு இளம் விரிவுரையாளருக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் கல்லூரி முதல்வி இந்தப் பொறுப்பை ஒப்படைத்து ஆர்டர் போடு முன் சாவித்திரிக்கு ஒரு பெரிய உபதேச விரிவுரையே ஆற்றியிருந்தாள்.

“இதோ பார்! மிஸ் சாவித்திரி உன்னிடம் மிகவும் நம்பிக்கையோடு இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறேன். ரிஸர்வ்ட் ஆகவும் கடுமையாகவும் இருக்க வேண்டும். படிக்கிற பெண்களுக்கும், உனக்கும் வயதிலோ தோற்றத்திலோ அதிக வித்தியாசமில்லை. கலகலவென்று நெருங்கிப் பழகினியோ உன்னையும் ஸ்டுடண்ட் மாதிரி ஆக்கி மட்னி ஷோவுக்கு இழுத்துக் கொண்டு போய் விடுவார்கள். ஜாக்கிரதை” – என்று பிரின்சிபால் அம்மாள் கடுமையாக வற்புறுத்தி இருந்தாள்.

புல் வெளியில் சாயங்கால வேளையில் தனியாக உட்கார்ந்திருந்த போது அந்தத் தனிமையே மனத்தில் ஒரு வேதனையாக உறுத்த, அதற்குக் காரணமான பிரின்சிபால் அம்மாளின் உபதேசமும் நினைவிற்கு வந்தது. வர வரத் தான் செயற்கையாக நாட்களைக் கடத்துவது போல் சாவித்திரிக்கு ஓருணர்வு வந்து கொண்டிருந்தது. கலீர்கலீரென்று வாத்தியங்கள் போல் சிரிக்கும் இளம் மாணவிகளோடு நெருங்கிப் பழகத் தவித்தாள் அவள்.

விடுதியின் பிரதான நுழைவாசலை ஒட்டி வார்டனின் அறை. பிரின்ஸ்பால் அம்மாளின் உத்தரவுப்படி, தான் வார்டனாகப் பதவி பெற்ற முதல் தினம் சாவித்திரி செய்த முதல் காரியம் “உத்தரவின்றி யாரும் உள்ளே நுழையக்கூடாது” – என்ற போர்டுதான். அதையும் மீறி யாராவது மாணவி அநுமதி பெற்று உள்ளே நுழைந்து விட்டாலோ வார்டன் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு மேலே, “குறையப் பேசி நிறைய உணர்த்து” “அநாவசியமாகச் சிரிக்காதே’ “சிரிப்பு என்பது பெண்மையின் விலை மதிப்பற்ற மூலதனம்” – என்பது போன்ற போர்டுகள் தென்பட்டுப் பயமுறுத்தும். இவை எல்லாம் பிரின்ஸிபால் அம்மாள் அளித்த போர்டுகள்.

இந்த போர்டுகளையோ, சாவித்திரியையோ, யாராவது மாணவி கேலி செய்தால் கூட உடனே அந்த மாணவியைப் பற்றி தனக்கு ரிப்போர்ட் செய்யுமாறு கூறியிருந்தாள் பிரின்ஸிபால் அம்மாள்.

‘சாவித்திரிக்’குப் பயந்து பாதிப் பேர் – பிரின்ஸிபால் அம்மாளுக்குப் பயந்து பாதிப்பேர் – என்று மாணவிகள் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அடங்கியிருந்தார்கள்.

ஆனால், உண்மையில் சாவித்திரிக்குத்தான் மனப்பூர்வமாக இந்தக் கடுமையில் விருப்பமில்லை. சமீப காலம் வரை ஒரு கல்லூரியில் கலகலப்பான மாணவியாக இருந்து விட்டு வந்து, இப்போது கலகலப்பான மாணவிகளை இப்படி அடக்குவதைச் சிரமமான வேலையாகவே உணர்ந்தாள் அவள். தன் தலைக்கு மேலும் அறைக்கு மேலும் தொங்கிய போர்டுகள் எல்லாம் அவளுக்கே காட்டுமிராண்டித் தனமாகத் தோன்றின. எப்படியோ என்றாலும் இந்த வார்டன் பொறுப்பை ஏற்று ஓர் ஆறு மாதம் ஓட்டியாயிற்று.

எத்தனையோ இளம் பெண்களிடம் புதிய டிசைன் புடவையிலிருந்து அந்த ஊரில் நல்ல வாசனையான மல்லிகைப்பூ எங்கே கிடைக்கும் என்பது வரை விசாரிக்க வேண்டும், சிரித்துப் பேச வேண்டும், அரட்டையடிக்க வேண்டும் என்றெல்லாம் அவளுக்கும் உள்ளூற ஆசை உண்டு.

ஒரு நாள் மின்சாரக் கோளாறினால் விடுதியில் இரவு ஏழு மணிக்கு எல்லா விளக்குகளும் போய் விட்டன. எலக்ட்ரிசிடி அலுவலகத்துக்கு ஃபோன் செய்து விட்டு மிஸ் சாவித்திரி எம்.ஏ. வராண்டாவில் நின்று கொண்டிருந்தாள். அவள் அங்கு நிற்பது இருளில் தெரியாததால், எதிர்த்த அறை வாயிலில் கூடியிருந்த பெண்கள் கூட்டம் ஒன்று சிரிப்பும் கேலியுமாகத் தங்களுக்குள் உரையாடலாயிற்று.

“ஏண்டி! நம் வார்டன் மிஸ். சாவித்திரி இப்பவே இப்பிடியிருக்காளே..? ஒரு வேளை இங்கே இப்பிடிக் கடுமையாயிருந்து பழகிப் பழகி நாளைக்குக் கலியாணமானால் புருஷன் கிட்டக் கூடக் கடுமையாகவே எல்லாம் வந்துவிடும். ‘குறையப் பேசி நிறைய உணர்த்து’ ‘அநாவசியமாகச் சிரிக்காதே’ என்றெல்லாம் கணவனுக்கே உத்தரவு போடுவாள் இல்லையா?” “அதனால்தான் ஒரு காலேஜ் வாத்தியாரம்மாவுக்கும் கணவனே கிடைப்பதில்லை.”

இந்த உரையாடலின் போதே திடீரென்று விளக்கு வந்தால் தான் அங்கு நிற்பதை அவர்கள் பார்த்துக் கூச்சமும், பயமும் அடையப் போகிறார்களே என்று உள்ளூற வருந்திய சாவித்திரி உடனே இருளில் தன் அறைக்கு விரைந்தாள். ஆனால் என்ன துரதிர்ஷ்டம்? அவள் இரண்டடி எடுத்து வைத்ததுமே, எல்லா விளக்குகளும் பளிச் சென்று எரியத் தொடங்கிவிட்டன.

மாணவிகள் குரல் ஒலிகள் மந்திரம் போட்டது போல் அடங்கின. மிஸ், சாவித்திரியும் அங்கேயே நிற்பது தெரிந்தவுடன், ஒருத்திக்காவது முகத்தில் ஈயாடவில்லை. சாவித்திரியோ ஒன்றுமே அறியாதவள் போல், “அதுதான் லைட் வந்துவிட்டதே…? ஏன் நிற்கிறீர்கள்? அவரவர் அறைக்குப் போய்ப் படியுங்களேன்? நேரத்தை வீணாக்கக் கூடாது” என்று சுபாவமாகச் சிரித்துக் கொண்டே கூறி விட்டு வந்தாள்.

ஆனால் அறைக்கு வந்ததும், அந்தக் கேலிக்குரல்களே காதில் மறுபடி மறுபடி ஒலித்தன.

‘ஏண்டிமிஸ் சாவித்திரிக்குத் திருமணமானால்..?’

அந்தக் குரல்களுக்குரியவர்களை அவளுக்கு நன்றாகத் தெரியும்!

‘ஒரு காரியம் செய்தால் என்ன?’ – என்று தோன்றியது சாவித்திரிக்கு. அப்படிப் பேசியவர்களையே வரவழைத்து, “பெண்களே! நீங்கள் நினைப்பது போல் நான் ஒன்றும் அவ்வளவு கடுமைக்காரி இல்லை. ஏதோ கடமைக்காக பிரின்ஸிபால் அம்மாள் சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கிறேன். என்னுடைய கல்லூரி நாட்களில் உங்களை விடக் கலகலப்பாக இருந்தவள் நான்.” என்று சொல்லி விட்டால் என்ன? இந்தக் கடுமைத் திரையை இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் கிழித்தெறிந்தால் ன் என்ன? என்று தோன்றியது அவளுக்கு முதல் வேலையாகக் காலையில் அந்த மாணவிகளைக் கூப்பிட்டனுப்பிப் பேசுவது என்று முடிவு செய்து கொண்டாள் சாவித்திரி.

அந்தக் கல்லூரியில், மட்டும் ஒரு வழக்கம் உண்டு. எவ்வளவுக்கு எவ்வளவு கடுமையோ, அவ்வளவுக்கவ்வளவு குற்றத்தை ஒப்புக் கொள்ளுகிற மாணவிகளை பிரின்ஸிபால் மன்னித்து விடுவாள். இருந்தும் கூட, இந்தப் போர்டுகளும் இந்த இளம் வயதிலேயே ஒரு சட்டாம்பிள்ளைக் கடுமையும் – சாவித்திரிக்குச் சலிப்பாயிருந்தன.

காலையில் விடிந்ததும், காபி டயம் முடிந்தவுடன் ஒரு துண்டுத் தாளில் முதல் நாளிரவு – மின் விளக்கு அணைந்த இருளில் – தன்னைப் பற்றிக் கேலி பேசிய மாணவிகளின் பெயர் – அறை எண் எல்லாம் குறித்து ஹாஸ்டல் ப்யூனை கூப்பிட்டு அவர்களை அழைத்து வரச் சொன்னாள்.

– சிறிது நேரத்தில் ப்யூன் திரும்பி வந்து அவர்கள் அறையில் இல்லை என்று தெரிவித்தான்.

‘இத்தனை அதிகாலையில் எங்கே போயிருப்பார்கள்?’ – என்று முதலில் வார்டன் என்ற முறையில் கோபம் தலை எடுத்தாலும், சாவித்திரி அதை அடக்கிக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து வார்டன் அறையிலிருந்த டெலிபோன் மணி கிணுகிணுத்தது. சாவித்திரி ஓடிப் போய் ரிஸீவரை எடுத்தாள். –

“ஹலோ! யாரு? மிஸ், சாவித்திரியா? நான்தான் பிரின்ஸிபால் பேசறேன். ஸ்டூடன்ஸ் வனஜா, அம்மு, குமுதா-மூணு பேரும் இங்கே வந்திருக்காங்க…நேத்தி ராத்திரி கரண்ட் பெயிலானப்ப – நீ வராண்டாவிலே நின்னுக்கிட்டிருக்கிறது தெரியாமே உன்னைப் பத்தி ஏதோ கிண்டலாப் பேசினாங்களாமே. அதைத் தாங்களே வந்து எங்கிட்டச் சொல்லி, “இனிமே அப்பிடிப் பேசலே! வார்டனே இதைப்பத்தி உங்களுக்கு ரிப்போர்ட் பண்ணுவாங்க. நீங்க இந்தத் தடவை எங்களை மன்னிச்சிடனும்”கிறாங்க.. ஆனா நான் அதை ஒத்துக்கலை. தலைக்கு அஞ்சு ரூபாய் ஃபைன் போட்டிருக்கேன், உங்கிட்ட வந்து மன்னிப்பும் கேட்கச் சொல்லியிருக்கேன்…”

சாவித்திரி உடனே அவசரமாகக் குறுக்கிட்டாள்.

“சே! சே! அவ்வளவு சீரியஸ்ஸா பனிஷ் பண்ணியிருக்க வேண்டாமே! நானே இதை ஒண்ணும் தப்பா எடுத்துக்கலே… தயவு செய்து ஃபைனை மட்டுமாவது கான்ஸல். பண்ணிடுங்களேன்…”

“நோ நோ! உனக்குத் தெரியாது. இதெல்லாம் ஸ்டிரிக்ட்டா இருக்கணும். ஐ ஷல் ஸெண்ட் தி கேர்ல்ஸ்… டு யுவர் ரூம்…” என்று கண்டிப்பாகச் சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் பிரின்ஸிபால் அம்மாள்.

– மிஸ், சாவித்திரிக்கு மிக மிக வேதனையாக இருந்தது. ஓர் உறவை மிக மிகச் சுமுகமாக்க அவள் முனைந்த வேளை பார்த்து இப்படி அது மிக மிகக் கடுமையானதில் அவள் நொந்து போனாள். ஒன்றும் ஓடவில்லை.

மாணவிகள் வந்தார்கள். “வாருங்கள்! நீங்கள் இதை ஏன் பெரிது படுத்திக் கொண்டு பிரின்ஸிபாலிடம் போனீர்கள்…? நானே இதை ஒண்ணும் தப்பா நினைக்கலியே! நான் படிக்கறப்ப எங்க லெக்சரர்ஸைப் பற்றி எத்தனையோ தடவை இப்படிப் பேசியிருக்கேன். இதெல்லாம் சகஜம்…”

– என்று சாவித்திரி கூறியதற்கு விளைவே இல்லாமல், மூன்று பேருமே இயந்திரங்கள் பேசுவது போல் இயங்கி,

“எங்களை மன்னிக்கணும்” – என்று மட்டும் கூறி விட்டு நகர்ந்தார்கள். சாவித்திரிக்கு என்னவோ போலிருந்தது அவர்கள் தன் சுமுக பாவத்தை நம்பவில்லை என்றே தோன்றியது. அவள் சித்த பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்து விட்டாள்.

அன்று மாலையிலேயே மறுபடியும் இரண்டு போர்டுகள் பிரின்ஸிபால் அம்மாளின் உத்தரவுப்படி அவள் அறையிலே கொண்டு வந்து மாட்டப்பட்டன.

“வார்டனைப் பற்றிப் புறம் பேசுவது தவறு”

“நீங்கள் புறம் பேசும் ஒவ்வொரு சொல்லும் யாரைப் பற்றியோ அவர்களுக்கும் செவி உண்டு” – மிஸ். சாவித்திரி எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் பிரின்ஸிபால் அம்மாள் அந்த போர்டுகளை வார்டனின் அறையில் மாட்டியே தீர வேண்டுமென்று உத்தரவு போட்டு விட்டாள்.

போர்டுகள் நிரந்தரமாயின. அவற்றால் கடுமையும் அதிகமாயிற்று. இளம் மாணவிகள் என்ற நளின வாத்தியங்களின் நரம்புகளை வருடி, இனிய பண்களை வாசிக்கலாமென்று கனவு கண்ட மிஸ், சாவித்திரியின் எண்ணம் மீண்டும் வறண்டது.

போர்டுகள் மாட்டப்பட்ட நாலாம் நாள் இரவு மீண்டும் ஒரு மின்சாரத் கோளாறு காரணமாக விளக்குகள் போயின.

வார்டன் மிஸ், சாவித்திரி ஃபோன் செய்து விட்டு வராந்தாவுக்கு வந்தாள். வராந்தாவில் ஒரே மாணவிகள் கூட்டம். ஒருவரை ஒருவர் காண முடியாத இருள்.

“அத்தனை கருணை உள்ளவள் என்றால் ஏன் புதிதாக ரெண்டு போர்டை வேறு எழுதி வாங்கி மாட்டணுமாம்”

“பேச்செல்லாம் சுத்த வேஷம்…”

“நாமாக முந்திக் கொண்டோமோ தலைக்கு ஐந்து ரூபாய் ஃபைனோடு போயிற்றே? வார்டனே ரிப்போர்ட் செய்திருந்தால் டிஸ்மிஸ்ஸே ஆகியிருக்கும். நல்லவேளை. பளிச்சென்று விளக்கு வந்தது. மிஸ். சாவித்திரி எம்.ஏ நிற்பதை அவர்கள் பார்த்தார்கள். ஆனால்…? இப்போது ஒரு வித்யாசம்.

இன்று வார்டனைப் பார்த்த பின்னும் பேச்சு – சிரிப்பு – கேலி எதுவுமே நிற்கவில்லை. அதிலிருந்து தப்ப சாவித்திரிதான் தன் அறைக்கு விரைய வேண்டி யிருந்தது.அந்தக் கல்லூரி வேலையை இராஜிநாமா செய்து எழுதுவதற்கு முன் அவள் நொந்த மனதோடு தனக்குத்தானே இப்படிச் சொல்லிக் கொண்டாள்.

“இந்த இனிய வாத்தியங்களை நான் இனி என்றும் வாசிக்கவே முடியாதபடி இறுக்கிக் கட்டி விட்டார்கள் பாவம்.”

– தாமரை – 1967க்கு முன், நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *