வழி மாறிய சிந்தனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 8,122 
 
 

“வாட் யூ வாண்ட்? வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணின் கேள்வியை கவனிக்கமல் அவள் போட்டிருந்த, உடை அலங்காரத்தைக்கண்டே மிரண்டு விட்டான் கார்த்திகேயன், பதிலை ஆங்கிலத்தில் சொல்லவே மனதுக்குள் வார்த்தைகளை கோர்த்து சொல்ல யோசித்தான். மறூபடி அவள் அந்த கேள்வியை கேட்கவும், திடுக்கிட்டு, “இண்டர்வியூ”வுக்கு கூபிட்டிருக்காங்க, என்று தமிழிலிலேயே சொன்னான்.நீங்கள் இடது பக்கமாய் போய் வலது புறம் உள்ள அறையில் உட்காருங்கள். இதை ஆங்கிலத்தில்தான் சொன்னாள். அந்த மொழியை உச்சரித்த அழகை இரசித்தவன், “தேங்க்யூ” இதை ஆங்கிலத்தில் தைரியமாக சொல்லிவிட்டு அவள் சொன்ன இடத்துக்கு சென்றான்.

அங்கு இவனைப்போல பத்திருபது பேர் உட்கார்ந்திருந்தனர். ஆண்களானாலும், பெண்களானாலும் அவர்கள் அணிந்திருந்த உடைகளும். அமர்ந்திருந்த தோரணைகளும் இவன் மனதுக்குள் தாழ்வு உணர்ச்சியை கொண்டு வந்தன. அவர்களும் இவன் வந்த்தை கண்டு அவ்வளவு சந்தோசப்பட்டதாக தெரியவில்லை. நட்புக்கு கூட புன்னகையை சிந்த விட வில்லை.இவன் மெல்ல பக்கத்திலிருந்த குஷன் நாற்காலியில் உட்கார்ந்தான். தன்னுடைய உடைகளை பார்த்துக்கொண்டான். ஊரிலிருந்து அவன் கொண்டு வந்த அந்த ஒற்றை செட்

உடைகளை முதல் நாள் தங்கையிடம் கெஞ்சி கூத்தாடி தேய்த்து வைக்க சொன்னான்.

அவள் சிணுங்கிக்கொண்டே அந்த வேலையை செய்து விட்டு அவசர அவசரமாய் பள்ளிக்கு கிளம்பினாள். பதினோரு மணிக்கு பேருந்து நிலையத்திற்கு போகும் வழியில் டீக்கடை நடத்தி கொண்டிருக்கும் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று வந்தான்.

வெளியே “டீ” கேட்டவர்களுக்கு கொடுப்பதற்காக இரண்டு பக்க குவளைகளை உயர தூக்கி பிடித்தி விளாவிக்கொண்டிருந்த அப்பா இவன் வருவதை பார்த்து “வாடா என்றதோடு சரி, தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.கொஞ்சம் தள்ளி அம்மா கண்ணில் நீர் வழிய வேகமாக வெங்காயத்தை நறுக்கிக்கொண்டிருந்தாள். இவனை பார்த்தவள் நிமிர்ந்து தன் முந்தனையால் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு அப்படியே பையனுக்கு “டீ”யை போடுய்யா ! சொலிவிட்டு கார்த்தி அஞ்சு நிமிசம் இருடா வெங்காய பஞ்சி ரெடியாயிடும் சாப்பிட்டு போவியாம்.

வேணாம்மா எனக்கு நேரமாகுது, அதற்குள் அப்பா கொண்டு வந்து கொடுத்த டீயை ஊதி குடிக்க ஆரம்பித்தான். இவன் குடித்து முடிக்கும் வரை மெளனமாக பார்த்துக கொண்டிருந்த அம்மா இவன் டம்ளரை வைத்தவுடன் தன் சுருக்கு பையை அவிழ்த்து சுருட்டி வைத்திருந்த பணத்தை கையில் கொடுத்தாள். இவன் அவள் கையில் இருந்து வாங்கிக கொண்டாலும் மனசு முழுக்க வருத்ததுடன்தான் வாங்கினான்.

“சே” எத்தனை முறை அம்மாவிடம் பணம் வாங்கி விட்டோம். ஒரு பட்டப்படிப்பாவது படிக்கவைக்கணும் என்ற இவர்களின் வைராக்கியத்திற்காகவேதான் படித்தான். எப்படியோ பி.ஏ என்னும் பட்டத்தை வாங்கி விட்டான். வெளி வந்த பின்னால்தான் தெரிந்தது, இந்த படிப்பு எல்லாம் வெளி உலகத்துக்கு ஒரு பத்து பைசாவிற்கு மதிப்பு இல்லை என்று. விடாமல் எழுதி போட்டான்.ஆசையுடன்தான் கிளம்புவான், எப்படியும் ஒரு இடத்தில் உட்கார்ந்து விடலாம் என்று, அங்கு போன பின் தான் தெரியும், நேர்முகத்திற்கு வந்திருப்பவர்களில் தன்னுடைய தகுதி மிக மிக சாதாரணம் என்று, அது மட்டுமல்ல என்னதான் படித்தவர்களால் நடத்தி கொண்டிருப்பதாக தெரிந்தாலும் “இனம்””ஜாதி” இவைகள் தான் தகுதியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது.

ஒவ்வொரு முறையும் இவன் ஊரிலிருந்து நகரங்களுக்கு செல்ல ஐம்பது ரூபாயாவது தேவைப்படுகிறது. பக்கத்திலிருக்கும் நகரம் என்றால் கொஞ்சம் செலவுகள் குறையும்.

தூரம் என்றால், தங்கும் செலவும் வந்து சேர்ந்து கொள்கிறது.இருக்கும் உடைகளையே மாற்றி மாற்றி ஒப்பேற்றிக்கொள்கிறான்.இப்பொழுது கோயமுத்தூருக்கு வர இவன் ஊரிலிருந்து பொள்ளாச்சி வந்து அங்கிருந்து கோவைக்கு வர்வேண்டியிருந்தது. “இண்டர்வியூ” ஒன்பது மணி என்று போட்டிருந்ததால், காலை நேரமாகி விடும் என்று நேற்று இரவே வந்து ஒரு வசதி குறைவான லாட்ஜில்” தங்கிக்கொண்டு, காலையில் அந்த ஒரு செட் உடையை போட்டு வந்திருந்தான். அதை போட்டுக்கொள்ளும்போதே அவன் உணர்ச்சிகள் அவனை ஒரு நவ நாகரித்தவனாக எண்ணிக்கொள்ள வைத்தது. ஆனால் இங்கு வந்த பின்னால் மற்றவர்கள் போட்டிருந்த உடைகளை பார்த்தபோது தான் போட்டிருந்தது அந்த கம்பெனி கீழ் மட்ட ஊழியர்களுதை விட தாழ்வாக இருப்பதாக மனதுக்கு பட்டது.

“க்ளக்” மென்மையாய் கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் அங்கு உட்கார்ந்திருந்த அனைவரும் பரபரப்பானார்கள். பெண்கள் தன்னுடைய ஒப்பனைகளை சரி செய்து கொண்டனர்.

ஆண்கள் தன்னுடைய உடைகளை ஒரு தரம் பார்த்துக்கொண்டனர். எங்காவது மடிப்பு கலைந்து போயுள்ளதா என்று?

இவர்களின் பரபரப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல் வெளியே வந்த உள்ளிருக்கும் மேலாளருக்கு அலுவலக உதவியாளனாய் இருக்க வேண்டும் தனக்குள் முணங்கிக்கொண்டே சென்றான் “கம்பெனிதான் பெரிசு” “டீ வாங்கறதுனாலும்,வெளியே போய்தான் வாங்க வேண்டி இருக்கு” அப்படி புலம்பிக்கொண்டே சென்றவனை ஒரு வித அசூயையுடன் அங்கு உட்கார்ந்திருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கார்த்திகேயன் மட்டும் இதை உன்னிப்பாக கவனித்தான். ஏன் அப்படி கவனித்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. இருந்தாலும் அந்த வாக்கியம் அவன் மனதை இலேசாக அசைத்தது போல் இருந்தது. இப்பொழுது தன் மனம் இலேசாக இருப்பதாக உணர்ந்தான். அவனது பார்வை அங்குள்ளவர்கள் மீது படிந்தது. சற்று முன் இருந்த தாழ்வு மனப்பான்பை குறைந்தது போல் இருந்தது. கொஞ்சம் காலை நீட்டி உட்கார்ந்தை அங்குள்ளவர்கள் கொஞ்சம் வியப்புடன் பார்த்தனர்.

“இண்டர்வியூ” விறு விறுப்பாய் நடந்து கொண்டிருந்தது. வரிசையாக ஒவ்வொருவரும் உள்ளே சென்று வெளியே வர வெளியிலிருப்பவர்கள் அவர்கள் முகத்தை பார்த்து பரபரப்பானார்கள்.கடைசி ஆளாக கார்த்திகேயன் அழைக்கப்பட்டான்.

உள்ளே வந்தவன் தன்னுடைய சான்றிதழ்களை வாங்கி பார்த்த மேலாளரையும், அங்கு உட்கார்ந்து கோண்டிருந்த மூவரையும் உன்னிப்பாக கவனித்தான். வேறு எதுவும் குறிப்பிட்டு சொல்லமுடியாத இவன் சான்றிதழ்களை ஒரு சம்பிரதாயமாக பார்த்த மேலாளர் அதை அவனிடமே திருப்பிக்கொடுத்தார்.சரி நாங்க பதில் போடறோம் என்று வழக்கமான பதிலை சொன்னார்.

இவன் சட்டென்று நான் வேலைக்காக இப்ப உங்க முன்னாடி நிக்கலை” சொன்னவனை சட்டென அங்கிருந்த நால்வரும் ஏறிட்டு பார்த்தனர். சார் முதல்ல நான் இங்க வேலைக்குத்தான் வந்து வெளியில உட்கார்ந்திருந்தேன், அப்ப உங்க ஆபிஸ் அஸிஸ்டெண்ட் சொல்லிட்டு போறதை கேட்டேன், ஒரு டீ வாங்கணும்னா கூட வெளியில போய் வாங்க வேண்டியிருக்குன்னு. நான் நாளையில இருந்து காலைக்கும், மதியத்துக்கும் மாலைக்கும் உங்க ஆபிசுக்கு டீ கொண்டு வந்து கொடுக்கறேன். இதுக்கு மட்டும் அனுமதி கொடுங்க” சார் இவர்களுக்கு ஆச்சர்யமாகி விட்டது. இதுவரை இப்படி ஒரு கோரிக்கை வைத்து எந்த இளைஞனும் அணுகியதில்லை. சரிப்பா எப்படி கொண்டு வருவே? பண வசதி, கொண்டு வர்றதுக்கு சாமான்கள் இது எல்லாம் வேண்டாமா? சார் முதல்ல உங்க அனுமதி கிடைக்கட்டும் சார், அடுத்த வேலைகளை உற்சாகமா தொடங்க ஆரம்பிச்சுடுவேன்.

தங்களுக்குள் பேசிக்கொண்ட அவர்கள் சரிப்பா நீ எப்படி இதை செய்யறேன்னு பார்த்துட்டுத்தான் சொல்லுவோம்.

வெளியே வந்த கார்த்திகேயன் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்த்தான்.

அருகில் எங்கு பேக்கரி இருக்கிறது என தேடினான்.அரை பர்லாங்கு தள்ளி ஒரு பேக்கரி இருப்பது கண்ணுக்கு தெரிந்தது. அங்கு நடக்க ஆரம்பித்தான்.

பேக்கரி முதலாளியிடம் தன்னை ஒரு “டீ” கடைக்காரரின் மகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். அவரிடம் தன்னை அந்த கம்பெனி தினமும் டீ கொண்டு வந்து.

கொடுக்கும் வேலையை கொடுத்திருப்பதாகவும், உங்கள் கடையிலேயே நான் கொண்டு போக விரும்புகிறேன், சொன்னவன் அங்கேயே தன்னிடம் இருந்த பணத்தில் டீ சாப்பிட்டான். மதியம் வரை காத்திருந்தான். மதியம் சாப்பிட கிளம்பியவனை பேக்கரிக்காரர் விட வில்லை. சாப்பாடு இங்கேயே ரெடியாகும் சாப்பிடு என்று சொன்னார்.

அன்று மாலையில் அந்த அலுவலகத்தில் பணி புரிந்துகொண்டிருந்த பதினைந்து பேருக்கும் டீ அவர்கள் மேசைக்கே வந்தது. அந்த ரிசப்சனில் இருந்த பெண்ணுக்கும் இவனே கொண்டு போய் கொடுத்தான்.

அன்று மாலையே அந்த மேலாளர் அவனுடைய எண்ணங்களை பாராட்டி தன்னுடைய சொந்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை கையில் கொடுத்து உன் தொழிலை தொடங்கு என்றார்.அவன் அதை கையில் வாங்கி மிக்க நன்றி என்றான்.

நான்கைந்து மாதங்கள் ஓடியிருந்தன.இப்பொழுது உடைகள் இவனை உறுத்தவில்லை. அது மட்டுமல்ல, அவர்களின் ஆங்கிலம் கூட பயமுறுத்தவில்லை, இன்னும் நான்கைந்து அலுவலகங்களுக்கும் இவன்தான் “டீ” சப்ளை செய்கிறான். .இன்னும் ஒரு வருடத்தில் அருகில் எங்காவது சொந்தமாய் ஒரு கடை போட்டு விடவேண்டும் என்று வைராக்கியமாய் இருக்கிறான்.

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *