கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 15,367 
 
 

அருந்ததிக்கு, அத்தனை நேரம் இருந்த குதூகலம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்தது. அம்மா சொன்னதைக் கேட்காமல் இந்த இரவில் தனியாகப் பயணிக்க நினைத்தது தவறோ? வீட்டில் தங்கிவிட்டு நாளை பகலில் கிளம்பியிருக்க வேண்டுமோ?

”சொன்னாக் கேளுடி, நாளைக்குப் போகலாம். காலம் ரொம்பக் கெட்டுக்கெடக்கு. உன் வீட்டுக்காரர்கிட்ட வேணும்னா நான் பேசறேன்.”

”ம்மா… நான் என்ன சின்னக் குழந்தையா? சின்ன வயசுலதான் ‘அங்க போகாத, இங்க போகாத, இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேரு’னு அதிகாரம் பண்ணிட்டே இருப்ப… இப்பவுமா? எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.”

”ம்ம்ம்… உனக்குக் கல்யாணமே ஆனாலும், நீ பேரன் பேத்தியே எடுத்தாலும் எங்களுக்கு நீ குழந்தைதான்” என்று கோபமாக அம்மா சொன்னாள்.

வழக்கமாக விழுப்புரம் வந்தால் திட்டமிட்டபடி சென்னை திரும்பியதே இல்லை. இரண்டு நாட்களாவது கூடுதலாகத் தங்குவது வழக்கம்தான். அம்மா மடி எத்தனை வயதானாலும் சுகம் இல்லையா?

”பிக்-அப் பண்ண நான் வரணுமா, இல்ல நீயே ஆட்டோ பிடிச்சு வந்துடுவியா?” என்று கதிர் கேட்டதற்கும்கூட…

”ஒண்ணும் வேணாம். நானே ஆட்டோல வந்துடுவேன்” என்று அமர்த்தலாகச் சொல்லிவிட்டேன்.

தனியாக இந்த இரவில் பயணிக்க ஏன் இத்தனை ஆர்வமாக இருந்தேன் என ஆச்சரியமாக இருந்தது. இரவு எப்போதும் என்னை வசீகரிக்கக்கூடியதாகவே இருந்திருக்கிறது. இரவில்தான் என் புலன்கள் அனைத்தும் விழித்துக்கொள்வதை நான் உணர்ந்திருக்கிறேன். இரவு எனக்கே எனக்கானது. அப்போது நான் யாராகவும் இல்லாமல் நானாக மட்டுமே இருப்பேன்.

கல்யாணத்துக்கு முன்பான இரவுகளை நான் எத்தனை கொண்டாடியிருக்கிறேன். இரவு என்பது எனக்கொரு விழா. அப்பா-அம்மா உறங்கச் சென்றதும் அறையைத் தாழிட்டுவிட்டு பாடல்கள் கேட்பேன்; புத்தகம் வாசிப்பேன்; படம் வரைவேன்; அலங்காரம் செய்துகொள்வேன். தனியாக எனக்கு மட்டும் கேட்குமாறு பொய்க் குரலில் பாடுவேன். அல்லது இது எதுவும் செய்யாமல் ஜன்னலின் வழியாக நெடுநேரம் அமர்ந்து இரவை உற்று வெறித்துக்கொண்டிருப்பேன். அந்த நேரத்தில்தான் எனக்குத் தோன்றியிருக்கிறது ‘என்னால் இரவை வேடிக்கை மட்டும்தானே பார்க்க முடிகிறது; அதற்குள் இறங்கிச் செல்ல முடிவதில்லையே’ என்று. பின் அது ஒரு ரகசிய ஏக்கமாகவே மாறிவிட்டிருந்தது.

கல்யாணம் ஆன சில வாரங்களில் ”கதிர்… என்னை வெளியில கூட்டிட்டுப் போறீங்களா?” என்று இரவு 11 மணிக்கு ஜோராக டிரெஸ் செய்துகொண்டு கேட்டதும் அவன் விநோதமாகப் பார்த்தான்.

”எங்கம்மா போறது?”

”பீச்…”

”போலீஸ் துரத்தி அடிக்கும்.”

”ஏன்?”

”நாம பலான பலான பார்ட்டினு நினைப்பாங்க.”

”என்னது? நாம புருஷன்-பொண்டாட்டிதான?!”

”அது உனக்கும் எனக்கும் தெரியும். ஆனா, நம்ம கல்யாணத்துக்கு அந்த போலீஸ்காரர் வரலியே” என்பான்.

ஆனாலும் பப், நண்பர்கள் வீடு என்று அழைத்துச் செல்வான்தான். அது எனக்கு அத்தனை உற்சாகத்தைத் தரவில்லை. இந்தச் சுவர்களுக்கு நடுவில் இருந்து வேறொரு சுவருக்கு நடுவே செல்வது போலவே இருந்தது. இந்தக் கூடாரத்தில் இருந்து மற்றொரு கூடாரத்துக்கு வெட்டவெளி இரவு, வாசலில் ஏங்கி நின்று அழைத்துக்கொண்டே இருந்தது. என்னால் முடிந்தது எல்லாம் சில இரவுகளில் மொட்டைமாடியில் சென்று உலாவுவதுதான்.

‘மோகினிப் பிசாசு’ என்பான் கதிர்.

ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டாண்ட் வந்ததும் சென்னை செல்லும் பஸ்ஸைத் தேடிப் பிடித்து ஏறி அமர, 20 நிமிடங்கள் ஆனது. உள்ளே ஏறும்போதே கண்டக்டர் ஏற இறங்கப் பார்த்தார். ஒருவேளை ஊதா நிறத்தில் சமிக்கி வேலைப்பாடுகள் செய்த பளபள புடைவை காரணமாக இருக்கும். அதுவேதான் காரணம் என பேருந்தில் ஏறியதும் புரிந்தது. பெரும்பாலும் பேருந்தில் இருந்த எல்லோருடைய கண்களும் என் மீது ஒரு நொடி நிலைத்து விலகியது. ஏதேனும் சௌகரியமான உடை அணிந்து வந்திருக்கலாம். ஆனால், அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? உட்காருவதற்கு இடம் தேடினேன்.

இந்த உலகம் ஆண்களால் மட்டுமே நிரம்பியதுபோல ஒரு தோற்றம். எல்லா இருக்கைகளையும் ஆண்களே ஆக்கிரமித்து இருந்தார்கள். டீன் பருவத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் தென்பட்டாள். அவளுக்கு அருகில் அவளது அப்பாவைப் போல ஒரு மனிதர் இருந்தார். அவர்களுக்கு முன்னும் பின்னும் இருக்கைகள் காலியாக இல்லை. கண்களால் மெள்ளத் துழாவி டிரைவர் இருக்கையில் இருந்து மூன்றாவது இருக்கை காலியாக இருக்கக் கண்டு, சென்று அதில் அமர்ந்தேன்.

எனக்கு என்னவோ பதற்றமாக இருந்தது. ஏதோ ஓர் அசௌகரியம். இந்த நாள் வழக்கமான ஒன்றல்ல. ஏதோ வேறுபாடு இருக்கிறது. பையை முன் சீட்டின் அடியில் வைத்துவிட்டு அமர்ந்தேன். நெருங்க முடியாத தைரியமான ஒரு பெருமாட்டியைப் போல தோற்றமளிக்க விரும்பித் தோற்றேன். இன்னமும் பரபரப்பு அடங்கவில்லை.

பேருந்து மெள்ளக் கிளம்பியது. கண்ணாடி ஜன்னலைத் திறக்க முயன்றேன். இறுக்கமாக இருந்தது. எவ்வளவு முயற்சித்தும் திறக்க முடியவில்லை. மூச்சு முட்டுவதுபோல இருந்தது. கண்டக்டர் இங்கும் அங்கும் டிக்கெட் தருவதில் முனைப்பாக இருந்தாலும்கூட, நான் ஜன்னலைத் திறக்கச் சிரமப்படுவதை ஓரக்கண்ணால் பார்த்தும் தன் பாட்டுக்கு நகர்ந்துகொண்டிருந்தார். எரிச்சலாக இருந்தது. யாரிடமாவது உதவி கேட்கவும் தயக்கம். ‘இல்லை… நான் பலவீனமானவள் அல்ல. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் என்னால் திறக்க முடியும்.’

‘எக்ஸ்க்யூஸ் மீ…’ என்று மிக அருகே, அநேகமாக காதுகளுக்குள் ஒரு குரல். பின் பிடரியில் சூடான மூச்சு. நாசி தொட்டுச் செல்லும் வியர்வை வாசனை. திடுக்கிட்டுத் திரும்பியதும் அவன் முகம் மிக மிக அருகே தெரிந்தது. வழுக்கைத் தலை, முன் தொப்பை, இன் செய்யப்பட்ட சட்டை, கண்ணாடி… என இவற்றை வைத்து தயங்காமல் வங்கி அதிகாரி என்றோ பேராசிரியர் என்றோ கணிக்கலாம்.

”ரொம்ப நேரமாச் சிரமப்படுறீங்க. நான் ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று பதிலை எதிர்பார்க்காமல் சர்ரென இழுத்ததில் ஜன்னல் திறந்துகொண்டு காற்று முகத்தில் சிலீரென அறைந்தது. வெட்கமாக இருந்தது.

”தேங்க்ஸ்ங்க” என்றேன்.

‘அண்ணா’ அல்லது ‘அங்கிள்’ எதைச் சேர்த்துச் சொல்வதென குழப்பமாக இருந்தது.

கண்டக்டர் அருகில் வந்து ”சென்னையா?” என்றார்.

”ஆமா…”

”ஒண்ணா?” என்றார்.

இதென்ன கேள்வி நான் ஒருத்திதானே இருக்கிறேன். நான் ஏன் இப்படி எரிச்சலடைகிறேன். இதுபோல எல்லோரிடமும் கேட்டுப் பழக்கமாக இருக்கும். டிக்கெட்டை வாங்கி கைப்பையில் வைத்ததும் ஐ-பாடை எடுத்து ஹெட்போனைக் காதுகளுக்குள் திணித்தேன். பாடல் மெள்ளக் கசியத் தொடங்கியதும் மனது இறகாகத் தொடங்கியது.

ஜன்னலின் வழியே இருண்ட வானை நோக்கினேன். நிலா. நான் வீட்டில் இருந்தோ மொட்டைமாடியில் இருந்தோ பார்த்த நிலா அல்ல. இது முற்றிலும் வேறானது. நிலா ஒரு பட்டமாகி அதன் நூல் எனது விரல்களில் இருப்பதுபோல பேருந்து செல்லச் செல்ல என்னுடனே ஓடிவரத் தொடங்கியது. ஆஹா..! இதைத்தானே ஆசைப்பட்டேன். கண்களை மூடி பாடல்களுக்குள் லயிக்கத் தொடங்கினேன். இந்த இரவு மறக்க முடியாத ஒன்றாக இருக்கப்போகிறது. மறுபடியும் குதூகலம் வந்து தொற்றிக்கொண்டது.

பேருந்து குலுங்கி நிற்பதுபோல இருந்ததும் கண்களைத் திறந்தேன். யாரோ கை காட்டி நிறுத்தி இருக்கிறார்கள்போலும். ஒரு பெண் பேருந்தினுள் ஏறினாள். தன்னந்தனியாக. என்னைப் போல. என்னைப் போலவா? இந்த அத்துவானக் காட்டில் தனியாகக் கை காட்டி பேருந்தை நிறுத்துகிறாளா?! இந்த அகால நேரத்தில் என்ன துணிச்சல் இவளுக்கு?! அவள் நேராக என் அருகே வந்துதான் அமர வேண்டும். வேறு வழி இல்லை. ஏனோ எனக்கு அது பிடிக்கவில்லை. அவளைப் பிடிக்கவில்லை. முதல் பார்வையில் காரணமே இன்றி சிலரைப் பிடித்தோ, பிடிக்காமலோபோகும் இல்லையா? அதுபோல அல்லது அவள் அணிந்திருக்கும் இந்த ஆடை அவள் வயதுக்கு சற்றும் பொருந்தாமல் இருக்கிறது. அது பிடிக்கவில்லை. அதைப் பற்றி எனக்கென்ன? என்ன இது மேல்தட்டு ஆணவம்? இதுதான் நானா? இந்த முழு இருக்கையையும் நான் சொந்தம் கொண்டாட முடியாது அல்லவா. அருகில் வந்து அவள் அமர்ந்ததும் மற்றவர்கள் எனக்கு செய்ததைப் போல நானும் அவளை நோட்டமிடத் தொடங்கினேன். நடுத்தர வயதுப் பெண்மணி போல இருந்தாள். கொஞ்சம் மலிவான ஆனால், பளிச்சென்ற நிறத்தில் சேலை உடுத்தியிருந்தாள். அது அவளது நிறத்துக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தது. அவளது தோற்றத்தை வைத்து அவளை வேறு எதுவும் கணிக்க முடியவில்லை.

கண்டக்டர் விளக்கை அணைத்ததும் பேருந்தின் உள்ளே செல்போனின் மங்கிய விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அந்த டீன் ஏஜ் பெண் தனது இரு கைகளாலும் அநாயாசமாக செல்போனை நோண்டிக்கொண்டிருந்தாள். அவளது முகம் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதைப் போன்றதொரு பாவனையில் இருந்தது. அவளது அப்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

திடீரென இத்தனை நேரமாகியும் ஏன் கதிரிடம் இருந்தோ, அம்மாவிடம் இருந்தோ ஓர் அழைப்புகூட வரவில்லை என்பது நினைவில் வந்தது. கைப்பையைத் திறந்து மொபைலை எடுத்தேன். நெட்வொர்க் சுத்தமாக இல்லை. பேட்டரியும் சிவப்பாக (அபாயம் என்பது போல) எரிந்தது. இன்னும் 10 நிமிடங்கள்கூட தாங்காது.

”சே..! சார்ஜ் போட மறந்துவிட்டேன்” – ‘தட்’ என்று அனிச்சையாக முன் நெற்றியில் அடித்துக்கொண்டேன். பக்கத்தில் அமர்ந்திருந்த அவள் உணர்ச்சியற்ற பாவனையில் என்னைத் திரும்பிப் பார்த்து பின் தலையைக் குனிந்துகொண்டாள். வழியில் ஏதேனும் விபத்து நடந்தால், யாருக்கு எப்படித் தகவல் சொல்வது? பேருந்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், என்ன செய்வது? வேறு பேருந்து பிடிக்க வேண்டும். அதுவரை ஒன்றும் நேர்ந்துவிடாதே. இந்தப் பயணம் பாதுகாப்பானதுதானா? கால்களின் வழியாகக் குருதி வடியும் படங்களும் முள்புதரின் உள்ளே கிழிந்த ஆடையுடன் கிடைக்கப்பெற்ற பெண் சடலத்தைப் பற்றிய செய்திகளும் நினைவில் வந்து, மேலும் பீதியை அதிகரித்தது. எங்கோ வாசித்த நினைவு. இதுதான் நோமோஃபோபியாவா? என்ன நான் இப்படிக் கோழையாக இருக்கிறேன். நான் உறுதியான பெண் இல்லையா? மொபைல் இல்லையென்றால் உலகுடன் ஆன ஒட்டுமொத்தத் தொடர்பும் அற்றுப்போகுமா என்ன? ஏன் காரணமே இல்லாமல் மனம் இப்படிச் சஞ்சலப்படுகிறது? அம்மாவைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். பொத்திப் பொத்தி வளர்த்தது அவள் தவறு. இனியேனும் தனியாக இப்படியான பயணங்களை மேற்கொள்ள வேண்டும். நான் மன திடம் உள்ளவள். பாரதியைப் படிக்கிறவள். கல்லூரியில் என்.சி.சி-யில் இருந்திருக்கிறேன். லேசாகப் புன்னகைத்துக்கொண்டு மறுபடியும் இருண்ட வானை ஆராயத் தொடங்கினேன்.

உறங்குவதற்கு விருப்பம் இல்லை. இந்த இரவின் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. இதை நான் இழக்கத் தயாராக இல்லை என்று எண்ணினாலும்கூட, கண்கள் சுழற்ற ஆரம்பித்தன. மெள்ளக் குளிர் அதிகரிக்கத் தொடங்கியதும் முந்தானையை முதுகைச் சுற்றிப் போத்திக் கொண்டு உறங்க ஆரம்பித்தேன்.

எத்தனை நேரம் ஆனது என்று தெரியவில்லை. பின்னங்காலில் ஏதோ நெருடல். நகங்களால் சுரண்டுவதைப் போல… ஆமாம், யாருடைய கால்களோதான். திரும்பிப் பார்த்ததும் அவன் லேசாக முறுவலித்தான். கால்களை முன்னே நீட்டிப் படுத்திருப்பானாக இருக்கும். மன்னிப்புக் கோரும் பாவனையில் லேசாக முறுவலித்தான். நான் தலையைத் திருப்பிக்கொண்டேன். உறங்கினால் தேவலாம் போல இருந்தது. பாட்டும் வேண்டாம்; நிலாவும் வேண்டாம். மெள்ள நான் நழுவி விழ ஆரம்பித்தேன். இதோ கீழே கீழே வீழ்கிறேன்.

யாரோ என்னை இறுகப் பற்றுவது போல. இதென்ன கனவா? பயண உறக்கத்திலும்கூட கனவு வருமா என்ன? இல்லை நிஜமாகத்தான். யாரோ எனது இடுப்பைப் பற்றுகிறார்கள். மெள்ள விரல்கள் ஊருகின்றன. ஆயிரம் கரப்பான்கள் ஒன்றாக ஊர்வதைப் போன்ற அசூயையில் சட்டெனத் திரும்பிப் பார்த்தேன். கரப்பான்கள் ஓடி ஒளிந்துகொண்டன. பின் இருக்கையில் அவன் மட்டும்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவனைப் போன்றதொரு பாவனையில் இருந்தான். வாயைப் பிளந்துகொண்டு உண்மையாகவே உறங்குவதைப் போல அவன் நடிப்பதைப் பார்க்க அருவருப்பாக இருந்தது. வேண்டுமென்றேதான் செய்கிறான்.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும். இந்த அனுபவம் எனக்குப் புதிது. உரக்கச் சத்தமிட வேண்டுமா? ஊசியால் அவன் கைகளில் குத்த வேண்டுமா? கண்டக்டரிடம் சொல்லி அவனைப் பேருந்தில் இருந்து இறக்கிவிடச் சொல்ல வேண்டுமா? என்ன செய்வது? சரி தொலையட்டும். நான் திரும்பி முறைத்தேன் என்பதை அவன் அறிந்திருப்பான். இன்னொரு முறை இப்படி முயற்சிக்க மாட்டான்.

இப்போது கண்களை மூடிக்கொண்டேன் உறக்கம் என்னைவிட்டுக் காத தூரம் ஓடியிருந்தது. அவன் கால் விரலோ கைகளோ என்னை நோக்கி வருகிறதா என எச்சரிக்கையாகக் கவனித்துக்கொண்டே இருந்தேன். இன்னும் ஒரு மணி நேரம்தான் ஊர் சென்று சேர்ந்துவிடலாம் என்பது ஆசுவாசமாக இருந்தது. கதிர், அழைக்க வந்தால் நன்றாக இருக்கும்.

இதென்ன… ஐயோ… இதென்ன மறுபடியும் அவனது கைகள் எனது இருக்கையின் பக்கவாட்டில் நுழைகிறது. பொந்தினுள் நுழையும் பாம்பைப் போல அத்தனை லாகவமாக. நான் அந்த விரல்களை நெரித்து அந்த எலும்புகளை நொறுக்கப்போகிறேன். இனி அவன் யாருக்கும் இதைச் செய்யத் துணியக் கூடாது. அந்த விரல்கள் இடுப்புக்கும் மேலே… மேலே… பற்றி… அழுத்தி… என்னால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. நான் சுதாரிப்பதற்குள் எனது மூளை துரிதமாக வேலை செய்யத் தொடங்கும் முன்… ”ஆ…” என் அழுகையும் ஆத்திரமும் சேர்ந்து க்ரீச்சிட்டேன்.

”என்னாச்சு… என்ன… என்ன?” என்று பல குரல்கள் கேட்டன. கண்டக்டர் விளக்கைப் போட்டதும் டிரைவரும் வண்டியை நிறுத்திவிட்டார். ”என்னமா ஆச்சு?” என்று சத்தமாக கண்டக்டர் கேட்கவும், எனக்குக் குரலே எழும்பவில்லை. என்ன நடந்திருக்கும் என எல்லோரும் யூகிக்கத் தொடங்கியிருப்பார்கள். நான் ஏன் இப்படி நிலைகுலைந்துபோனேன்? என் தவறு என்ன இதில்? என் பேச்சு எங்கே ஓடி ஒளிந்துகொண்டது? என் தைரியம் எங்கே முக்காடிட்டுப்போனது? சில நிமிடங்கள் எல்லோரும் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தார்கள். உறக்கம் அளைந்த முணுமுணுப்பில் சிலரும், ”இந்தப் பொம்பளைங்க ஏன் ராத்திரியில தனியாப் பயணம் கிளம்பறாங்க? அப்புறம் அங்க தொட்டான் இங்க தொட்டான்னுக்கிட்டு…” என்று பலரின் மனக்குரல்களையும் என்னால் உணர முடிந்தது.

இத்தனை களேபரங்களுக்கும் காரணமான அவன் அப்போதுதான் விழித்தவன்போல ”என்ன நடந்தது?” என்று குழம்பியவனைப் போல… என்ன ஒரு தேர்ந்த நடிப்பு? நான் சொன்னால் இவர்கள் நம்புவார்களா? உதவிக்கு வருவார்களா? இல்லை… உண்மையிலேயே எனக்கு அப்படி எதுவும் நிகழவில்லையா? கெட்ட சொப்பனம் ஏதும் கண்டேனா?

‘டும்’ என ஒரு சத்தம். என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அவன் பின் சீட்டில் கால்களைப் பரப்பி விழுந்துகிடந்தான். கைகளால் கன்னத்தைப் பிடித்திருந்தான். அவனது கண்ணாடி கண்களைவிட்டு இறங்கிச் சற்றே சரிந்துகிடந்தது. கண்களை மூடித் திறப்பதற்குள் ‘தப்’ என்று மறுபடியும் ஒரு சத்தம். காலணி கழற்றப்படாத கால்களால் அவனது நெஞ்சில் ஓங்கி ஓர் உதை உதைத்தாள், என் அருகில் இருந்த பெண்மணி. எழுந்து நிற்க முயன்ற அவன், மறுபடியும் தடுமாறி விழுந்தான். வலி தாங்க முடியாமல் அவனது முகம் அஷ்டகோணலானது. பின் சரமாரியாக அவள் அவனது முகத்திலும் மார்பிலும் உக்கிரமாக அடிக்கத் தொடங்கினாள். அவளது ரௌத்திரம் அடங்க நேரமானது. திகைத்து நின்ற ஆண்கள், தங்களது நல்தன்மைகளை நிலைநாட்டவும் தம் வீட்டுப் பெண்கள் நினைவில் வந்ததாலும் அவர்களும் அவளுடன் சேர்ந்துகொண்டு கும்பலாக அடித்து ஒரு வழியாக்கிவிட்டனர். அவன் பை வெளியே தூக்கி எறியப்பட, அவனைப் பேருந்தில் இருந்து அடித்து விரட்டி நடுக்காட்டில் கட்டாயமாக இறக்கிவிட்டனர்.

நெடுநேரம் வரை நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். என்ன நடந்தது என்று நினைவுபடுத்திப் பார்க்க முயன்றேன். அவள் எனது கைகளை மெள்ள அழுத்தினாள். ”விட்டுத்தள்ளுப்பா… அவன் பொறம்போக்கு நாயி…” என்று சிநேகமாகச் சிரித்தாள். அவள் தலை கலைந்து புடைவை விலகி அலங்கோ லமாக இருந்தாள். பையில் இருந்த சீப்பை எடுத்து பின்னலை அவிழ்த்து மறுபடியும் நேர்த்தியாக பின்னத் தொடங்கினாள். பின் ஒரு வெள்ளைக் கவரில் இருந்த கனகாம்பரப் பூவை சூடி, இரு பக்கமும் சமமாக இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொண்டாள். லேசான பவுடரும் லிப்ஸ்டிக்கும் பூசி, சிறிய வட்ட வடிவக் கண்ணாடியில் தன் ஒப்பனையைப் பார்த்துத் திருப்தியானாள். அவளுக்கு ஒரு போன் வந்தது. ”அஞ்சே நிமிஷம் சார். வயலெட் கலர் சேலை கட்டியிருப்பேன். சிகப்பு கலர் டி ஷர்ட்டா… யமஹா பைக்கா?” என்று ஏதேதோ தொடர்பு இல்லாமல் பேசினாள். பேருந்து நின்றதும் விடுவிடுவென பேருந்தைவிட்டு இறங்கிச் சென்றாள்.

நானும் இறங்கினேன். அவளைத் தேடினேன். அதோ தூரமாக அந்த போஸ்ட் மரத்தின் கீழே நிற்பவனை நோக்கி வேகமாகச் சென்றுவிட்டாள். அவன் இளைஞனாக இருந்தான். அவன் அவளுக்காகத்தான் காத்திருக்கிறான் போலும்.

நான் இந்தச் சம்பவத்தை கதிரிடமோ அம்மாவிடமோ பகிர்ந்துகொள்ளவே இல்லை. எனக்குப் பயணங்கள் வேண்டியிருக்கிறது. ஆனால், எத்தனையோ இரவுகளில் உறக்கத்தின் நடுவே நான் திடுக்கிட்டு விழித்திருக்கிறேன். அவனை எனது கரங்களால் நான் ஓர் அடிகூட அடிக்காததும், அவளுக்கு வாயைத் திறந்து ‘நன்றி’ என்று சொல்லாததும் என்றென்றைக்கும் ஒரு முள்ளாக என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது!

– மார்ச் 2014

Print Friendly, PDF & Email

1 thought on “முள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *