கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,889 
 
 

“ரெசிடன்சி கிளப்’பின் அந்த அரை வெளிச்சமான, “பாரில்” அமர்ந்து, தனியாக உற்சாக பானம் பருகிக் கொண்டிருந்தார் விசுவம். ஆயிற்று… இன்றோடு அவர் வேலையிலிருந்தும் ஓய்வு பெற்று, ஆறு மாதங்கள் முடிந்து விட்டன.
“ஒவ்வொரு சமயம், காலம் இறக்கை கட்டி பறக்கிறது; சில சமயங்களில், ஆமை, நத்தை இவற்றை விட மெதுவாக நகர்கிறது… இதுதான், “ரிடையர்ட் லைப்” என்று கொள்ள வேண்டுமா?’ என நினைத்துக் கொண்டார் விசுவம்.
மறுபக்கம்“”மே ஐ ஜாய்ன் யூ…” என்ற குரல் கேட்டு, சற்று திடுக்கிட்டு, எதிரில் நின்ற இளைஞனும் இல்லாமல், மிக முதியவனும் அல்லாத நடுத்தர வயது ஆசாமி ஒருவரை பார்த்தார் விசுவம்.
அவன் கையிலும் ஓர் கோப்பையில் உற்சாக பானம் இருந்தது. பெரும்பாலும், உற்சாக பானம் அருந்த வருபவர்கள், தனியாக வருவது அபூர்வம்; ஆனால், கல்யாணம் செய்து கொள்ளாமல், தனி ஆளாகவே வாழ்ந்து விட்ட விசுவம், இன்று போல் பல தடவை தனியாகவும் வந்திருக்கிறார்; நண்பர்களுடனும் வந்திருக்கிறார்.
தனியாக இது போல் உட்கார்ந்து பருகும் நாட்களில், வேறு எவராவது வந்து பேச்சுக் கொடுப்பதுண்டு.
அதே போல்தான் இன்றும்…
“”ஓ ஷ்யூர்… ப்ளீஸ்…” என்றார் புன்னகையுடன் விசுவம்.
அந்த மனிதன், எதிரே அமர்ந்தான்.
“”ஐ’ம் கிரீஷ்…” என்று வலது கரத்தை நீட்டியவரின் கைகளைப் பற்றிக் குலுக்கி, “”ஐ’ம் விசுவம்…” என்று அறிமுகம் செய்து கொண்டார்.
“”தனியாகவா வந்திருக்கிறீர்கள்?” என்றான் கிரீஷ்.
“”நீங்களும் கூடத்தான்…” என்று சொன்ன விசுவம், “”சில சமயங்களில் நான் இப்படி வருவதுண்டு… வாழ்க்கையில் நாம் எல்லாருமே தனித்தனி ஆட்கள்தானே!” என்றார்.
“”உண்மைதான்… ஆனால், நான் இந்த ஊருக்குப் புதிதாக வந்திருப்பவன். இன்னும் நண்பர்கள் அதிகம் கிடைக்கவில்லை,” என்றார் கிரீஷ் தன் பானத்தை உறிஞ்சியபடி.
“”நான் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியர்; நீங்கள்?” என்ற விசுவத்தின் கேள்விக்கு, “”நான் ஒரு விஞ்ஞானி,” என்று பதில் தந்தான் கிரீஷ்.
“”இன்ட்ரஸ்டிங்…” என்ற விசுவம், “”எந்தத் துறையில்?” என்றார்.
“”கெமிக்கல் இன்ஜினியரிங்…” என்று சொன்ன கிரீஷ், சென்னையில் உள்ள ஓர் பிரபலமான ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயரையும் சொன்னான்.
“”அப்படியா… மகிழ்ச்சி. இதற்கு முன், எங்கே இருந்தீர்கள்?”
“”ம்… கொஞ்சம் அப்படியும் இப்படியுமாக நிலையற்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன்.. ஒரு வருடம் புனேயில், இரண்டு ஆண்டுகள் ஹ்யூஸ்டன், யு.எஸ்.,சில். பின், இரண்டு வருஷம் சிங்கப்பூரில்… இப்போது சென்னையில்… இந்தியாவில்…”
அவனைக் கூர்ந்து பார்த்தார் விசுவம்.
“”எதைத் தேடி நீங்கள் அலைந்து கொண்டிருக்கிறீர்கள். விஞ்ஞானி என்பதால், உங்களைக் கேட்கிறேன்?”
தோள்களைக் குலுக்கிக் கொண்டான் கிரீஷ்.
“”தெரியவில்லை… அதுதான் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது என்று நினைக்கிறேன்,” என்றான் சிரித்தபடி.
“”பெர்ஹாப்ஸ்… எல்லா மனிதர்களுமே எதையோ தேடிக் கொண்டுதான் இருக்கிறோம்.”
“”பேராசிரியரான நீங்கள், எதைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?”
“”நான் எதையுமே வாழ்க்கையில் தேடவில்லை… எனக்குக் கிடைத்த வாழ்க்கையை, கேள்வி கேட்காமல் ரசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார் ஆங்கிலத்தில்.
அவரைப் பார்த்து புன்னகை செய்தான் கிரீஷ்.
“”உங்களுடைய ஆங்கிலம் இலக்கண சுத்தமாக இருக்கிறது.”
“”ரொம்ப நன்றி.”
“”உங்களுக்குத் திரு மணம் ஆகி விட்டதா? இது, சற்றுஅநாகரிகமான கேள்விதான்; இருந் தாலும் கேட்கிறேன்,” என்றார் விசுவம்.
“”ஆகி விட்டது… மனைவி சாப்ட்வேரில் வேலை பார்க் கிறாள்; ஒரு பையன் இருக்கிறான்.”
“”அவர்களுடன் வெளியில் போயிருக் கலாமே… “பாரில்’ தனியாக வந்து அமர்ந்து, ட்ரிங்க் பண்ணுவதற்கு பதில்!”
“”அவள் வேலை அப்படி… லேட்டாகத்தான் வருவாள்… குழந்தையைப் பார்த்துக் கொள்ள வீட்டோடு ஒரு பெண் இருக்கிறாள்.”
“”ஐ… சீ…”
“”உங்கள் குழந்தைகள் எங்கே இருக்கின்றனர்?” என்றான் கிரீஷ்.
தவிர்க்க முடியாத கேள்வி… விசுவம் வாய் விட்டுச் சிரித்தார்.
“”உலகெங்கும் பல குழந்தைகள்… நான் பாட்சிலர்; திருமணம் செய்து கொள்ளவில்லை… என் மாண வர்கள்தான், என் குழந்தைகள் அல்லது வாரிசுகள்.”
அவரை வியப்புடன் பார்த்தான் கிரீஷ். அதற்குள், இருவரின் கோப்பைகளும் காலியாகி விட்டதால், “”நான் மீண்டும் ஆர்டர் செய்யட்டுமா?” என்று கேட்டு, பார் டெண்டரை அழைத்து, “”எனக்கு ஒரு லார்ஜ்… உங்களுக்கு?” என்றான்.
“”எனக்கு ஸ்மால்…” என்றார் விசுவம்.
“”உங்களுக்கு வாழ்க்கை போரடிக்க வில்லையா?” என்றான் கிரீஷ்.
“”இதுவரை இல்லை… இனிமேல் ஒருவேளை போரடிக்கலாம்; ஆனால், அதற்கு சான்ஸ் இல்லை.”
“”எப்படி புரொபசர்?”
“”எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர்!”
“”அப்படியா?”
“”ஆமாம் மிஸ்டர் கிரீஷ்… 20 வயதிலிருந்து, 90 வயது வரை மனிதர்கள்… அதைத் தவிர இசை, புத்தகங்கள், இலக்கியம், எழுத்து என்று என்னை என்கேஜ் செய்து கொண்டிருக்கிறேன்; அதனால்தான், எனக்கு போரடிக்க வாய்ப்பில்லை.”
“”இப்படி, இங்கே தனியாக வந்து உட்கார்ந்து, “தண்ணி’ அடிப்பது…” என்று, பட்டென்று கேட்ட கிரீஷ், நாவைக் கடித்துக் கொண்டான். “”சாரி… நான் கொஞ்சம், “க்ரூடா’கக் கேட்டு விட்டேன்,” என்றான்.
புன்னகைத்தார் விசுவம்.
“”இட்ஸ் ஓ.கே… இது, ஒரு வகையான ரிலாக்சேஷன்… நான் சொன்ன பல நண்பர்கள் கூட்டத்திலிருந்து விடுபட்டு, தனியாகச் சிந்திக்க அல்லது என் மனசுக்கும், மூளைக்கும் ஓய்வு தர வேண்டுமானால் இங்கு வருவேன். உங்கள் கேள்வியை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.”
கிரீஷ் திருப்தியடைந்தவனாக, “”நீங்கள் என்ன மாதிரிப் புத்தகங்கள் படிப்பீர்கள்?” என்றான்.
“”ஜேம்ஸ் ஜாய்சின், “யுலிசிஸ்’லிருந்து இன்றைய, சேதன் பகத் வரை ஆங்கிலத்தில்; தமிழில், கல்கி, தேவன் முதல், இன்றைய நிலையில் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத புதிய எழுத் தாளர்கள் வரை.”
பேச்சு இப்படியாகத் தொடங்கி அரசியல், சினிமா, கலாச்சாரம் என்று பல பகுதிகளைத் தொட்டுவிட்டு முடிவுக்கு வந்தது.
“”மணி பதினொன்றரை… லெட்ஸ் கோ…” என்று எழுந்த விசுவம், “”நாம் ட்ரைவ் செய்வது சட்டப்படி குற்றம். என் டிரைவர் இருக்கிறான். உங்களை நான் என் காரில் ட்ராப் செய்கிறேன்; எங்கே வீடு?” என்றார்.
“”வேளச்சேரியில்… நீங்கள்?” என்றான் கிரீஷ்.
“”நான் பெருங்குடி போக வேண்டும்… பரவாயில்லை… உங்களை ட்ராப் செய்து விட்டுப் போகிறேன்,” என்றார் விசுவம்.
காரில் போகும் போது, “”நீங்கள் மிகவும் சுவாரசியமான ஆசாமியாக இருக்கிறீர்கள் புரொபசர்… உங்களுடன் பேசிக் கொண்டிருந்தால், நேரம் போவதே தெரியவில்லை. நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும்,” என்றான் கிரீஷ்.
“”அது சரி… என் நண்பர்கள் பலர், இதைத்தான் சொல்வர்,” என்றார் விசுவம் பெருமையாக.
“”ஆனால், வீட்டுப் பக்கத்தில், ஒரு நண்பர் இருக்கிறார்; சின்ன வயசுக்காரர்தான். அவர் ஒன்று சொன்னார்…”
“” என்ன சொன்னார்?”
“”அவர் வீட்டுக்கு ஒரு வயதான நண்பர், வாரா வாரம் ஆஜர் ஆகிவிடுவாராம். குழந்தைகளுடன் விளையாடுகிறேன் என்ற சாக்கில்… ஏதேதோ கதைகள் பேசி, அவரையும், அவர் மனைவியையும் போரடித்து, விடுவாராம்.”
“”அடடா… உங்கள் நண்பர், அவரிடம் நேரிடையாகச் சொல்ல வேண்டியதுதானே!”
“”சொல்லலாம்தான்… நானும் அதான் கேட்டேன்… ஆனால், அந்தப் பெரியவர் இவர் குடும்பத்திற்குப் பல உதவிகள் செய்தவராம். அதனால், எப்படி முகத்தில் அடித்தாற்போல் சொல்வது என்று தயங்குகிறோம்,” என்றார்.
விசுவத்தின் புருவங்கள் சுருங்கின.
“”அப்படியா… உங்கள் நண்பரின் பெயர் என்ன?” என்றார் ஜாக்கிரதையாக.
“”கண்ணன்… என் மனைவியுடன் காக்னிசன்ட்டில் வேலை பார்க்கிறார். அவர் வீடு கூட, வேளச்சேரியில் என் வீட்டுக்கு அருகில்தான்,” என்றார்.
திடீரென்று மவுனமானார் விசுவம்.
“”அப்படியா… சரி… உங்கள் வீட்டுக்குச் செல்லும் திருப்பம் எது…”
“”இதோ இங்குதான்…” என்று சொன்னான் கிரீஷ்.
வண்டியைத் திருப்பினான் டிரைவர். அவனுடைய அடுக்கு மாடிக் கட்டடத்தின் அருகே காரை நிறுத்தி, கிரீஷை இறக்கி விட்டபின், “”குட்நைட் மிஸ்டர் கிரீஷ்… உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி…” என்றார் விசுவம்.
“”நாம் மறுபடி சந்திக்க வேண்டும். யு ஆர் லைவ்லி… உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன,” என்றான் கிரீஷ்.
“”ஆனால், நான் இன்று உங்களிடமிருந்து ஒன்று கற்றுக் கொண்டிருக்கிறேன்.”
“”அப்படியா… எதை?” என்றான் கிரீஷ்.
“”ஆங்கிலத்தில், “பிலிப் சைட்…’ அதாவது, “மறுபக்கம்’ என்பர்… அதை…” என்று கூறி, புன்னகை செய்து, காரை ஸ்டார்ட் செய்யச் சொன்னார் விசுவம்.
“நாம் எல்லாரையும் புரிந்து, நம்மையும், நம் பேச்சையும் ரசிப்பதாக நினைத்துக் கொண்டது எவ்வளவு மடமை, சிறுபிள்ளைத்தனம்…’ என்று நினைத்துக் கொண்டார்.
“கண்ணன் குறிப்பிட்ட பெரியவர், நான்தான் என்று கிரீஷûக்குத் தெரிந்திருக்காது. நல்ல வேளை… இனி, நாம்தான் நம்முடைய பேச்சையும், நடவடிக்கைகளையும் கவனமாக நடத்திச் செல்ல வேண்டும்…’ என்று எண்ணிக் கொண்டார் விசுவம்.
இத்தனை படித்த எனக்கு, எல்லாத் திறமைகளுக்கும், உறவுகளுக்கும், பேச்சுக்கும், மறுபக்கம் என்று ஒன்று இருப்பது என்னைப் போன்ற ஒரு படித்த முட்டாளுக்குத் தெரியாமல் போனது ஏன் என்று நினைத்த போது, கண்களில் இரண்டு துளி கண்ணீர் அவரை அறியாமல் எட்டிப் பார்த்தது.
“இளமைக் காலமாக இருந்தால், கோபம் வந்திருக்கும்… வயதானதால் ஏற்படுவது சுய பச்சாதாபம். அதன் வெளிப்பாடுதான் இந்தக் கண்ணீர்த் துளிகள்…’ என்று நினைத்து, கண்ணீரைச் சுண்டி எறிந்தார் அந்த மெத்தப் படித்த மேதை.

– ஏப்ரல் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *