நள்ளிரவு தாண்டிய நேரம்..குடியாத்தம் அரசு மருத்துவமனை..
நான் கிளம்புகிறேன், சீஃப் டாக்டர் வந்தாங்கன்னா சொல்லுங்கள், நான் காலையிலே வருகிறேன், என்று மூத்த செவிலியரிடம் கூறிவிட்டு தனது வீட்டிற்கு கிளம்பிய சிவா, இளம் இருதய சிறப்பு மருத்துவர்.
திருமணமாகி ஆறு மாதமாகிறது. இரவு ,பகல் என வேலைப் பளுவில் தன் மனைவியுடன் இருக்கும் நேரமே மிகக் குறைவு.
மனைவி ரம்யா கணினி பொறியாளர் படிப்பினை முடித்து, வேலைப் பார்த்து திருமணத்திற்குப் பிறகு வீட்டினை நிர்வாகம் செய்கிறார்.
கட்டிலில் அவள் பூ வனமாய் படுத்து உறங்கி இருக்க, அருகில் நெருங்கி முத்தமிட்டு அவளை எழுப்பினான், கண் விழித்தவள் கைகளை வளைத்து கழுத்தை இழுத்து ஏன் டாக்டர் இவ்வளவு லேட், என அவனை பார்வையால் விழுங்க, இவன் அவளிடம் தோல்வியுற தயாரனாபோது..
எதிரே வந்த மகிழுந்து தன் முன்னே சென்ற இரு சக்கர வாகன ஓட்டியை தூக்கி வீசி நிலை தடுமாறி சென்று கொடி மரமேடையில் மோதி நின்றது.
கிரீச்..கிரீச்… என சப்தமிட்டு இரு சக்கர வாகனம் ஒன்று எதிரே வந்து விழுந்து கிடக்க ..
சிந்தை இழந்த சிவா தன் நிலை மறந்து மகிழுந்தின் ஆக்ஸிலேட்டரை அமுக்கிட.. தூரம் போய் நிறுத்தினான்.
என்ன நடந்தது என்று சுதாரித்து திரும்பிப் பார்த்தான், சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை,
இறங்கி அவனைக் கவனி என்று அறிவு சொல்கிறது, வேண்டாம், போய் விடு! என்று மனது சொல்கிறது. அறிவுக்கும் மனத்திற்கும் நடந்த போராட்டத்தில் இறுதியில் மனமே வென்றது,
இவையெல்லாம் ஒரு மூன்றாவது கண் ஒன்று கவனித்துக் கொண்டு இருந்தது எனத் தெரியாமல் வீடு வந்து சேர்ந்து இருந்தான் சிவா.
வந்ததில் இருந்து பதட்டமாய் இருந்த சிவாவைக் கண்ட ரம்யா, என்னாச்சு, உடம்பு சரி இல்லையா? கேட்டாள்.
இல்லை! என்று நடத்ததைக் கூறினான்
விடுங்க, அதுதான் யாரும் பார்க்கலையே,அப்புறம் ஏன் கவலைப் படுறீங்க?
யாருக்கும் தெரியலைன்னாலும் எனக்குத் தெரியுமே!
அது என்னை வாழ்நாள் முழுவதும் உறுத்துமே?ரம்யா,
நான் நின்று அவனைக் கவனித்து இருக்கனும், தப்பு பண்ணிவிட்டேன் என மனதளவில் வருந்தினான்.
என்னங்க எத்தனையோ அறுவை சிகிச்சை செய்யறீங்க, எல்லாமே சக்சஸ் ஆகுதா? அது போலத்தான் இதுவும் என நினைத்து மறந்து விடுங்கள் என்று ஆறுதல் கூறினாள்.
அது என் தொழில் ரம்யா, அதில் ஏற்படும் நிகழ்வுகள் என் முழு முயற்சிக்குப் பின்தான் வெற்றியோ, தோல்வியோ நிகழும்.
அது என் மனத்திற்கு திருப்தியை அளிக்கும், ஆனால் இன்று நான் அவரை காப்பாற்ற முயற்சிக் கூட எடுக்கலையே என நினைக்கும்போது மனசு வலிக்கிறது.
இனிய நினைவுகளெல்லாம் இப்பொழுது கசப்பானது .
தூக்கம் வராமல் புரண்டுப் படுத்து, காலை விழித்து எழுந்து மருத்துவமனைக்கு வந்து இருந்தான்,
புற நோயாளிகளைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வந்து பிரேத பரிசோதனை ஒன்று செய்ய வேண்டி இருப்பதைக் கூறிட,
மனது மீண்டும் பாரமானது .அய்யோ, அது அவனாக இருக்கக் கூடாது என்று தன்னையறியாமல் வேண்டினான்..
நேற்று நெடுஞ்சாலையில் ஒரு ஆக்ஸிடென்ட் சார். டிரங்க் அன்ட் டிரைவ் கேஸ் சார்.
முன்னே சென்ற இரு சக்கர வாகனத்தை தூக்கி வீசியிருக்கு ,தலையிலே அடிபட்டு ஸ்பாட்லேயே உயிர் போயிட்டு என விபரமளித்தார்.
எத்தனை மணி இருக்கும், இரவு 12.30 முதல் 1.00 மணி இருக்கும் சார்.
பதட்டம் அதிகமானது.. பிணவறை வந்து பார்த்த போது , அந்த உடலுக்கு ஐம்பது வயது இருக்கும் மகிழுந்து வாகனம் ஓட்டியவர் இவர்தான்,என்றும்
உடலைக் இங்கு கொண்டு வந்து சேர்த்தவர்,அங்கே அடிபட்ட இருசக்கர வாகன ஓட்டி இவர்தான் என்றும் தலைக்கவசம் அணிந்ததனால் உயிர் பிழைத்தார்,வாகனம் மட்டும் சேதமடைந்துவிட்டது என்று அறிமுகம் செய்து வைத்தார்.
அவனின் கைகளை் இறுக பிடித்துக்கொண்ட சிவா,
நீங்க நல்லா இருக்கீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே?
என அவரைக் கேட்டபோது சிவாவின் கண்கள் குளமாகி இருந்தது, மனத்தை அதுவரை அழுத்தி இருந்த அழுக்கு வெளியேறியது.
அவரின் கைகளை பற்றியபடி இரு சக்கர வாகன ஓட்டி மட்டும் புரியாமல் நின்றுக் கொண்டு இருந்தான்.
வாழ்நாள் முழுவதும் மனத்திற்கு உறுத்தும், அந்த செயல் தன்னை விட்டு விலகியதே பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. மருத்துவ மனிதர் சிவாவிற்கு.