மந்திரகோல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 4,712 
 
 

“சீட் இருக்குதா….”

பஸ் நிற்கும் முன்பே அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறும் கூட்டத் திலிருந்து சற்றே விலகி நின்றபடி சிங்களத்தில் வினவுகின்றாள் அவள்.

கேட்ட மொழி சிங்களம் என்றாலும் கேட்டவர் சிங்களம் இல்லை என்பது ஒன்றும் பெரிய ரகசியம் அல்ல.

அது கண்டக்ரருக்கும் விளங்கும். ஆடையால் கூற முடியாவிட்டாலும் உரையாடலால் கூறிவிடலாம். தமிழா? முஸ்லிமா? என்று.

ஒடிந்து தொங்கும் மரக்கிளை போல் பஸ் வாசலில் உள்ளேயும் வெளியேயுமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்த பஸ் கண்டக்டர் “எய் நெத்தே ஓணதரங் சீட் தியனவா!. நகிண்ட நகிண்ட” என்று கூறியபடி இடைகளை அணைத்து அணைத்து ஆட்களை ஏற்றிக் கொண்டிருக் கின்றான். அதுவும் அழுத்தமாகப் பெண் பயணிகளை.

அவனது இடையணைவை மீறி ஏறிவிடும் யுக்தியை எவராலும் கடைப்பிடிக்க முடிவதில்லை. எப்படித்தான் வளைந்து நெளிந்து ஏறி னாலும் ஒதுங்கி ஏறிவிட இடமும் வேண்டுமே! வாசலும் படியும் அவ்வளவுதான். அதில் கண்டக்ரரின் ஊஞ்சலாட்டம் வேறு.

“சீட் தியனவாத” என்று கேட்ட பெண்ணும் இறுதியாகப் படியேறுகின்றாள்.

இடை என்பதே கிடையாத நேர்கோட்டுருவம் தான் என்றாலும் இடை நோக்கி நீண்ட அவனது கரத்தினை கைப்பையால் ஒதுக்கித் தள்ளிவிட்டபடி ஒரு வெறுப்பான முறைப்புடன் உள் நுழைகின்றாள் அவள்.

“ஹறி யங்” என்று குரல் கொடுத்தபடி பஸ்ஸின் இழுப்புக்கேற்ப உடலை வளைத்தொடித்து சமன் செய்து கொண்டு உள் நுழையத் தொடங்கினான்.

கடைசியாக ஏறி முன்னால் நிற்கும் தடித்த பெண்ணின் பின் பக்கம், கைப்பிடியை எட்டிப் பிடிக்க உயரத் தூக்கிய கையுடன் அவனைச் சீண்டி விடுகின்றது.

கையடியில் கறை மினுங்கும் அக்குளை, டிக்கட் மட்டையால் அழுத்தி அவளை ஒதுக்கியபடி உள் நுழைகின்றான்.

பருவங்கள் கடந்தும் பூக்கும் இயல்பு கொண்ட பெண்ணுடலின் விசித்திரம் அவளைத் தொட்டொதுக்க அவனைத் தூண்டினாலும் “உனக்கு அவ்வளவிருந்தால் எனக்கு எவ்வளவிருக்கும்” என்னும் ஆணாதிக்க எரிச்சல் அந்த டிக்கெட் மட்டை விலக்கலில் விளங்குகிறது.

அந்தத் தீண்டலால் திடுக்கிட்டுத் திரும்பியவள் “கை” அல்ல டிக்கட் மட்டைதான் என்பதால் சற்றே சுதாகரித்துக் கொண்டாலும் ஒரு கோபத்துடன் அவனை நோக்கி “சீட்” தியனவா கிவ்வா நே! கோ” என்று சீறினாள்.

அவளுடைய கோபத்தையோ சீற்றத்தையோ அவன் ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை.

“சீட் ஏன் இல்லை? இதோ இவைகள் எல்லாம் என்ன? சீட் இல்லாமல! நாற்பது சீட்டுக்கு மேல் இருக்கிறது!” என்று எகத் தாளத் துடன் கூறியபடி முன் கதவு நோக்கி முண்டி நகர்ந்தான். அந்தப் பதிலால் மேலும் சினமடைந்தவள் உயர்ந்த குரலெடுத்து “பொய்க்காரன், புளுகன், சங்கை கெட்ட ஏமாத்துக்காரன்” என்று ஏதேதோ கூறிச் சத்தமிட்டாள்.

அவைகள் எதனையுமே அவன் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஒரு அசட்டையுடன் தனது வேலையில் ஐக்கியமானான். பஸ் நடத்துனர்கள் மட்டுமல்ல, எல்லா நடத்துனர்களிடமுமே அநீதிக்கெதிராகக் குரல் கொடுப்பவர்கள் பற்றிய ஒரு அசட்டை இருக் கவே செய்கிறது! இருக்கவே செய்யும்!

இந்த நடத்துனர்கள் அனைவருமே ஒரு விதத்தில் மந்திரவாதிகள் போலத்தான். மந்திரக்கோலைத் தூக்கி ஆட்டி ஏகப்பட்ட பூதங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். அவைகளும் தங்களை உருவாக்கிய வனுக்குச் சாதகமான முறையில் கூத்தடிக்கும். கை

நாட்டின் அதியுயர் மன்றமான நாடாளுமன்றக் கூத்தாட்டங்களும் கேள்வி நேர அசட்டைகளும் கண்டக்டரினதை விட எத்தனை விரசமானவை.

இருந்தும் அவள் கோபத்தால் குமுறினாள்!

விம்மி விம்மித் தணியும் அந்தப் பெரிய நெஞ்சு அந்தக் குமுறலை அடக்கிக் கொள்ள அவள் முயல்வதைத் துல்லியமாக உணர்த்துகிறது.

இன்னும் அவள் டிக்கட் வாங்கவில்லை. கண்டக்டர்மிகவும் முன்னால் தெரிகின்றான். பதினேழு ரூபாய் பயணத்துக்கு ஐம்பது ரூபாவை நீட்டிய பெண்ணிடம் சில்லறை கேட்டு கத்திக் கொண்டிருந்தான்.

அவளும் விட்டபாடில்லை.

ஐம்பது ரூபாய்த் தாளை விரலிடுக்கில் திணித்தபடி அவளுடைய கத்தலை ஒரு அசட்டையுடன் புறமொதுக்கி விட்டு இன்னொருவருக்கு டிக்கட் கொடுக்கின்றான் அவன்.

மீதிக் காசை அவனிடமிருந்து பெற்றுக் கொள்ள அவன் பின்னால் திரிய வேண்டும். ஏதோ சலுகைக்காகத் திரிவது மாதிரி. இறங்கும் இடம் வருகின்றபோது சிலவேளைகளில் கண்டக்டர் முன் வாசலிடம் நிற்பான். பின்னால் இருந்து சனத்தை நீவி நெரித்துக் கொண்டு அவனிடம் வருவதற்குள் இறங்கும் இடம் தாண்டி அடுத்த நிறுத்தம் வந்துவிடும்.

பஸ் பயணமே ஒரு யுத்தமென்றால் இந்தக் கண்டக்டர்மார்களிடம் மீதிக்காசு வாங்குவது அதில் ஒரு தனி வியூகம்.

அந்தப் பெண்ணும் எப்படியோ கைப்பையைக் குடைந்து சில்லறை தேடிக் கொடுத்து மீதிப் பணத்தை வாங்கிக் கொண்டாள்.

இந்தக் கண்டக்டர்மார்களின் அடாவடித்தனங்கள், வம்புத்தனங்கள், கத்தல்கள் எல்லாம் பெண்களிடமும், தமிழர்களிமும் தான். அதிலும் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களிடம்.

இந்த நாட்டின் சனநாயகக் கோட்பாடுகளுக்கு பஸ் கண்டக்டர் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஐந்து பேர் அமரும் கடைசிச் சீட்டில் நைந்து நசுங்கியபடி ஆறுபேர் அமர்ந்திருக்கின்றார்கள்.

ஜன்னலருகே ஓரத்தில் அமர்ந்திருப்பது ஒரு தமிழ்ப் பெண். நெற்றி யில் பொட்டும் கொண்டையில் பூவுமாக.

அவளருகே அமர்ந்திருந்தவர் இருபக்க நசுக்கலிலிருந்து உந்தி நகர்ந்து உயரத்தில் இருக்கும் கம்பியை எட்டிப்பிடித்து எழுந்து இறங்க ஆயத்தமானார்.

காலியாகும் அந்த இடத்தை நோக்கி நாலைந்து பேர் படை எடுத்தனர். “சீட் இருக்கா” என்று கேட்ட பெண் உட்பட.

ஒரு பெண்ணும் முயற்சிக்கின்றதைக் கண்ட மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்; அவள் அமர்ந்து கொண்டாள். அசைந்து அசைந்து பின் நகர்ந்து இருக்கையை வசதிப்படுத்திக் கொண்டாள்.

சுற்றி நிற்பவர்களையும் தன்னருகே அமர்ந்திருப்பவர்களையும் ஒரு கணம் நோட்டமிட்டாள்.

தான் வசதியாக அமர்ந்த பிறகே சுற்றியுள்ளவர்கள் பற்றிய நினைவுகள் எழுவது இயற்கைதான்!

அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணை ஏறிட்டுப் பார்க்கின்றாள். எண்ணைத் தேய்ப்பில் பளபளத்து மின்னும் கரிய கூந்தலின் மறைவில் இருந்து எட்டிப் பார்க்கிறது ஒரு வெள்ளை நிறப்பூ.

அவள் மிகவும் ஒடுங்கிப் போய் அசௌகரியப்படுவதை உணர்கின்றாள்.

ஒடுங்க மறுக்கும் தனது தடித்த கால்களை ஒடுக்கி சற்றே ஒதுங்கி அவளுக்குக் கொஞ்சமாக வசதி செய்து கொடுக்கின்றாள்.

ஒரு திருப்தியுடன் அவளும் திரும்ப இருவரும் புன்னகைத்துக் கொள்கின்றனர். வ சுற்றியுள்ள எதிரணி ஆண்பாலர் மத்தியில் தாங்கள் பெண்கள் என்னும் இன உணர்வு தந்த ஒற்றுமையின் வெளிப்பாடே அந்தப் புன்னகை.

நின்று கொண்டிருப்பவர்களின் இடைவெளியில் கண்டக்டர் தூரத்தில் தெரிகின்றான். அவனுடைய நினைவே அவளுக்குள் காய்கிறது.

நிற்கச் சங்கடப்படும் வாதக்காரியான தன்னை சீட் இருப்பதாகக் கூறி ஏமாற்றிய பொய்யன் அவன். ஏறிய பிறகும் இதோ இவைகள் எல்லாம் சீட் இல்லையா என்று நக்கலடித்த ஹறாமி அவன்.

அகத்துள் அவனை வைது வசைபாடி, நிமிர் கையில் “கொய்த?” என்றவாறு நீட்டிய கையுடன் நின்றான் கண்டக்டர்.

இறங்கும் இடத்தையும் கூறி காசையும் நீட்டியவள் “சீட் தியனவா கிவ்வா நே, கோ? எய்மினிஸுறவட்டான்னே?” என்று பொரிந்தாள்.

அவள் இறங்குவதாகக் கூறிய இடம் கொழும்பில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் ஒரு பகுதி.

“ஹப்போய்…!” என்று ஒரு எள்ளலுடன் அவளை ஏறிட்டுப் பார்த்தவன்…. “ஹித்துவா…! மங் ஹித்துவா…. ஏக்காய் மெச்சற கட்ட” என்றபடி நீட்டிய நூறு ரூபாவை விரலிடுக்கில் செருகிக் கொண்டு “பொடி சல்லி துனக் ஹரி ஹத்தரக் ஹரி தென்ன..!” என்றான்.

“வாயில்லாட்டிதான் துன்ருவீங்களே” என்று முனகியபடி கைப் பையைத் துழாவினாள். சில்லறை இருக்கவில்லை. கண்டக்டரோ இன்னும் கை ஏந்தியபடியே நிற்கின்றான்.

அவனைப் பார்க்கையில் அவளுக்குள் ஒரு சினம். சட்டையில் ஊரும் கம்பளிப்பூச்சி தோல் நோக்கி நகர்வது போன்ற வெறுப்பு. அவளது கக்கத்தில் இடித்து அழுத்திய டிக்கட் மட்டை அவனது கக்கத்தில்.

“காலைல இருந்து எத்தனை ட்றிப் அடிச்சிருப்பே! வாங்குன ஒரு ரூபா ரெண்டு ரூபாவெல்லாம் எங்க போச்சி? கைக்குள்ள தான் வரு சையா சில்லறை அடுக்கி வச்சிருக்கியே!” என்று சிங்களத்தில் பரபரத்தாள்.

அவளுடைய சிங்கள மொழியாடலில் ஒரு கனத்துடன் கூடிய சரளம் இருந்தது.

தமிழில் நினைத்து அதை மௌனமாக உள் மனதில் மொழி மாற்றி சிங்களமாய்க் கூறும் அந்நியத் தன்மையற்ற சுயம் இருந்தது.

நினைத்ததை நினைத்தபடியே கூறிவிடும் வல்லமை இருந்தது.

அந்த வல்லமை தான் அவனுக்குள் ஒரு எரிச்சலை ஏற்படுத்தியது.

அவனது எதிர்பார்ப்பு மொழி தெரியாத ஒரு அச்சம். அதனால் மேற்கிளம்பும் அடங்கிப் போகும் தன்மை! இவளிடம் அது இல் லாமை அவனை எரிச்சலுறச் செய்கிறது.

“வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம்” என்றொரு வாய்மொழிச் சொல்லடை தமிழில் உண்டு.

இந்த நாட்டின் சிறுபான்மை இனத்தின் நிலையும் அதுதான்.

ஆதிக்க மனம் கொண்ட ஆண்களும் அடங்கிப் போக மறுக்கும் மனைவிகளுமாய்!

மீதிக்காசை மிகக் கவனமாக எண்ணி நீட்டியபடி “அய்யோ நவத்த கண்ட ஒயாகே பறபறய! சக்கிலி வாகே..!” என்றான்.

“சக்கிலி..! சக்கிலி…! ஒயா ஹித்துவாத மம தெமல்கியலா?” நரம் புகள் வெடித்து வெளியே வந்துவிடும் வண்ணம் புடைத்து நின்றது கழுத்து.

அவளால் எழ முடியவில்லை என்றாலும் உணர்வுகள் எழுந்து நின்றன.

“தெமளு கியலா ஹித்துவாத?” என்னும் அவளது உச்சக்குரல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த தமிழ்ப் பெண்ணின் செவிகளுக்குள் பழுக்கக் காய்ச்சிய ஈயக் கோலாய் இறங்கியது. வலி தாங்கா வேதனை!

கண்டக்டருக்கு மகிழ்வாக இருக்கிறது.

பூவும் பொட்டுமாய் உட்கார்ந்திருந்த தமிழ்ப் பெண்ணை ஒரு கணம் உற்று நோக்கினான்.

“ஒன்ன நங்கி ஒயாட்ட தெமளு கிவ்வா! சக்கிலித் கிவ்வா!” என்று அவளை உசுப்பி விட்டான்.

நெற்றிக் கண்ணுடன் திரும்பியவள் தீக்கங்குகள் தழல் பறக்க முஸ்லிம் பெண்ணை முறைத்தாள்.

‘தெமளு’ என்ற வார்த்தை ‘பர’ என்னும் ரீங்காரத்துடனேயே அவள் செவிப்பறையில் படர்ந்தது. ‘சக்கிலி’ என்ற கோபக் குரலும் இணைந்தே இறங்கியது.

எண்பதுகளுக்குப் பிறகு தமிழினத்தை இழிவுபடுத்துவதற்காகவே உபயோகிக்கப்படும் ஒரு சொற்பதமாக அடையாளம் கொண்ட சொல் இந்தப் ‘பர தெமளு’ என்பது.

“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பது போல் தெமளு என்னும் சொல்லுடன் ‘பர’வும் ரீங்காரமிட்டபடி முன்னோடி வரும்.

சாதீய தாக்கங்கள் வேரோடி வேரோடி தழைத்தும் தடித்தும் நிற்கின்ற தமிழ்ச் சமூகத்தில் ‘பர தெமுளு’ என்றதும் கீழ்சாதிக்காரன் என்று தங்களை இழிவுப்படுத்துவதாக எண்ணிக் குமைகிறது. குமுறிக் கிளம்புகிறது மனம்.

உண்மையில் தெமளுவுடனான ‘பர’ என்னும் சொல்லின் இணைவு அந்நியன் அல்லது இந்த நாட்டைச் சேராதவன் என்பதையே குறிக்கின்றது.

“பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே…” என்று இறைவனைக் குறிப்பதைப் போல

அப்படியே பார்த்தாலும் ஆளில்லாத இந்த ஊரில் அனைவருமே ‘பர’ தான்! கூறுபவர்கள் முந்திய பர கூறப்படுபவர்கள் பிந்திய ‘பர’ என்பதுதான் நிஜம்.

பொய்களே நிஜங்களாகிப் போய்விட்டதொரு சூழலில் நிஜங்கள் எல்லாம் பொய்யாகித்தான் போகின்றன.

இதையெல்லாம் பகுத்தாய்ந்தொழுகும் மனப்பக்குவம் யாருக்கிருக்கிறது….! இவளுக்கிருக்க…

இவளை உசுப்பி விட்ட கண்டக்டர், காசுக்காகக் கை ஏந்திய வண்ணம் கூட்டத்துடன் கலந்து ஒதுங்கிக் கொண்டான்.

பெண்கள் இருவரும் மல்லுக்கு நிற்கின்றனர். இவள் குமுறிக் கிளம்பியது போலவே அவளும் குமுறிக் கிளம்பினாள்.

இவளைப் பற்றிய குறைகளை அவளும் அவளைப் பற்றிய குறைகளை இவளுமாக ஏலமிட்டனர். விற்றனர். கொட்டித் தீர்த்தனர், கத்தித் தீர்த்தனர்.

கொதித்துக் கிளம்பிய இரு பெண்கள் வாயிலாகப் பெண்ணுடல் ரகசியங்கள், பெண்ணுடல் மொழியாகப் பீறிட்டுக் கிளம்பின.

ஆண்களுக்குத் தெரியாத சங்கதிகள் அகோரமாக வந்து விழுகின்றன. மொழி புரிந்தவர்கள் குதூகலம் கொண்டார்கள். மற்றவர்கள் குளிர் காய்ந்தார்கள்.

“ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறார்….” என்று ஒரு பழைய சினிமாப் பாடல் இருக்கின்றது.

ஆண் மனங்கள் அப்படித்தான்! பெண்கள் சண்டை போட்டாலும் ரசிப்பார்கள். ஆட்டாம் போட்டாலும் ரசிப்பார்கள். விம்பிள்டன் டென்னிஸ் என்றதும் விழுந்து விழுந்து பார்க்கின்றார்களே ஏன்?

ஆட்டத்துக்காகவா? அல்லது ஆட்ட நுணுக்கங்களுக்காகவா? பெண்கள் அடித்துக் கொள்ளும் மல் யுத்தம்…சி.டி. வி.சி.டி என்று எப்படி விற்பனையாகின்றது.

கை தூக்கும்போது… கழுத்தாடும்போது… இடை நெளியும்போது…உடலாடும்போது…ஆடை விலகும் இடங்கள்…ஆடை மூடா இடங்கள்…ஆடை மூடியும் திமிர் விடும் இடங்கள்….என்று இரை தேடும் வக்கிரப் பார்வைக் கூட்டங்கள்!

பஸ்ஸுக்குள் அதே நிலைதான். பெண் குறைகள் பாடி முடித்த பெண்கள் இரு பக்க ஆண் குறைகளுக்கத் தாவி அதிலிருந்து இனக்குறை வரை எழுந்து விட்டனர்.

வெறும் வாய்ச் சண்டையாகத் தொடங்கியது கை கலப்பாக மாறும் நிலைக்கு விரைகின்றது.

பருவங்கள் கடந்தும் பசுமை பூக்கும் பெண்ணுடலின் புன்னகை திடீரென கோரப் பற்களையும் பல் நுனியின் ரத்தத்தையும் கண்டு பதை பதைத்துப் பார்வைகளைத் திருப்பிக் கொண்டனர்.

சண்டையில் குளிர் காய்ந்தவர்கள் கொழுத்தத் தொடங்கிய அத் தீச் சுவாலையில் பொசுங்கிப் போய் விடும் அச்சத்தில் தூரமாகத் தொடங்கினர்.

பொது மக்கள் பயணம் செய்யும் பஸ்ஸுக்குள் நடக்கும் தமிழ் முஸ்லீம் பெண்களின் சண்டை பயணிகளை அசௌகரியத்துக்குள் ளாக்கும் நிலைமை பற்றி இப்போது தான் உணர்வு பெற்றவர்கள் போல் சிலிர்த்துக் கொண்டார்கள்.

நடத்துனரைப் பார்த்துக் கத்தினார்கள்! “என்ன நடத்துனர் நீ பயணிகளின் சௌகரியம் பார்க்கத் தெரியாமல்…” என்று கோஷமிட்டார்கள்.

ஒதுங்கிப் போன கண்டக்டர் ஓடி வந்தான். சண்டையிடுபவர்களை நிறுத்தச் சொன்னான். ஒன்றும் நடக்கவில்லை. கெஞ்சினான். பிறகு கத்தினான். ஒன்றும் நடக்கவில்லை .

கிளப்பி விடப்பட்ட பூதம் மந்திரவாதிக்கும் மசியவில்லை ! மந்திரக் கோலிற்கும் மசியவில்லை.

வந்த வேகத்துடனேயே டிரைவரிடம் ஓடினான். பஸ் அருகிலிருந்த பொலிஸ் ஸ்ரேசனை நோக்கி ஓடியது.

இரண்டு பெண்களையும் பொலிஸில் ஒப்படைத்துவிட்டு, “ஹரி யங்” என்றான் கண்டக்டர்.

பஸ் ஓடத் தொடங்கியது.

– தாயகம், ஜனவரி – மார்ச் 2009 – தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *