மதுக்கோப்பை நினைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 10,424 
 

வெம்மை முடிந்து வாடைக் காற்றுக்காய் சென்னை நகரம் காத்துக்கிடந்த காலம். ஆஸ்பெஸ்தாஸ் அட்டை போடப்பட்ட என் ஒற்றை அறை, என்னை சூட்டில் குளிப்பாடிக்கொண்டிருந்தது. எதற்கென்று எனக்கே புரியாமல் மார்க்ஸ், நெருடா, டால்ஸ்டாய் எல்லாம் ஒதுக்கிவிட்டு பிளாடோ, அரிஸ்டாடிளுடன் தர்க்க ரீதியான சண்டை புரியத் தொடங்கியிருந்தேன். மெட்டாபிசிக்சும், பினமெட்டாலஜியும் முழுதாய் புரியவேண்டும் எனும் ஆவல். இடையிடையே அவ்வப்போது இடையூறு செய்த டெரிடாவும், பொக்கால்டும். அவர்களின் கட்டவிழ்ப்பும் , பின்நவீனமும். என்னை ஒரு படைப்பாளியாய், படிப்பளியாய் அடையாளப்படுத்த வளர்த்த தாடி.

அன்று சனிக்கிழமை என் அடிமைச் சேவைக்கு விடுப்பு. உறக்கம் களைந்து விழித்தபோது மணி மாலை நாலு. மாதக் கடைசியானதால் காலை, மதிய உணவு என் இரண்டும் ஒன்றாய் முடிக்க வேண்டிய கட்டாயத்தில், மாலை உணவாய் ஒன்றாக முடித்துவிட்டு, என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன், இரவு குடிப்பதற்கு கூடுவதைப் பற்றி.

சரவணன், விஜய், வேணு, விஜய்யின் நண்பனான கந்தா அனைவரும் என் அறைக்கு வந்தனர். வரும்போதே தயாராய் வாங்கிவந்திருந்த சாராயம், குடிக்க பிளாஸ்டிக் குடுவை, தொட்டுக்கொள்ள ஊறுக்காய், முறுக்கு! ஆரம்பமானது…

நான், விஜய் இருவரும் சற்றே விளம்பரப்ரியர்கள். எங்களை அறிவாளியாய் காட்டிக்கொள்வது எங்களக்கு பிடித்த விசயம். அப்பணி செய்ய எங்கள் அடிமைகளாய் உலக சினிமாவும், உலக இலக்கியமும். சரவணன் வழக்கம் போல் முடிந்து போன தன் காதல் பற்றி புலம்பினான். (காதல் மனிதன் பயன்படுத்தும் வார்த்தைகளில் மிகவும் போலியான ஒரு சொல். காமம் என்னும் சொல்லுக்கான பாதுகாப்பு வளையம் காதல்) வேணு அவனைத் தேற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தான்.

“மனுசனடா அவன், அவனை பார்த்துத்தான் சினிமா கத்துக்கிட்டேன்”, தன் கனவு இயக்குனர் மணிரத்னம் பற்றி பேச ஆரம்பித்தான் விஜி (விஜயை நான் உரிமையுடன் அழைக்கும் செல்ல பெயர்).

“அந்தாள பத்தி பேசாத காண்டாகுது!” பதில் கூறினர் கந்தா

” விஜி! அமோறேஸ் பெர்ரோஸ் அப்படின்னு ஒரு மெக்ஸ்சிகன் படம், தெருவில் நடக்கும் ஒரு சாலை விபத்து….படம் ஆரம்பிக்குது…அந்த விபத்துல சம்பந்தப்பட்ட மூணு பேரோட கதை சொல்லப்படுத்து…. மனிதம் பற்றி இவ்வளவு அழகா ஒரு படம் நான் பார்த்து இல்ல… அமோறேஸ் அப்படினா நாய்கள் பெர்ரோஸ்னா அன்பு… இந்த படத்தோட ஜெராக்ஸ் தான் ஆயுத எழுத்து… ஏன் நாயகன் எடுத்துக்கோ கமலே பல சீன்ல மர்லின் ப்ரண்டோவ காப்பியடிச்சிருப்பார்..” என்று மணிரத்னம் கமல் இருவரையும் மட்டம் தட்டி, என் கலை அறிவை பறைசாடினேன்.

” விஜய் நான் தப்பா சொல்றேன் நினைக்காதே இந்த கிழவன மிஞ்ச இன்னும் எவனும் பொறக்கல, பொறக்கவும்மாட்டான்” , தன் எதிரிருந்த சார்லி சாப்ளின் படத்தை பார்த்து கூறினார் கந்தா.

தெய்வம்டா அவரு, சினிமாவுக்கு ஒரு மதிப்ப உருவாக்கின மனுசன். சினிமாங்கிற விஞ்ஞானத்த கலையா மாத்தின முதல் மனுசங்கள்லே ஒருத்தர். கிரேட் டிக்தேடோர், மாடர்ன் டைம்ஸ், தி கிட் எல்லாம் என்ன படம், ஏழ்மையின் கருப்பு வரலாற்றை வெளிப்படையா பேசியது வேறு எவனும் இல்ல”….நான்

சினிமா தாண்டி என் இலக்கிய அறிவை வெளிப்படுத்தும் பொருட்டு என் பேச்சு நெருடா, டால் ஸ்டாய், டெரிடா என பயணிக்க ஆரம்பித்தது (போதை ஏற ஏற நான் பெரிய இலக்கியவாதியாவது வழக்கமான ஒன்று)

உலகம் தட்டைனு சொல்லிச்சு சாமி, உருண்டைனு சொன்னான் மனுசன் அப்ப யார் பெரியவன் சாமியா மனுசனா? இடையே உண்மை இல்ல நாத்திகம் பேசினேன் நான்…

நல்ல முட்டக் குடித்துவிட்டு முழு போதையில் வந்த மூத்திரத்தை அடக்கிக்கொண்டு கழிவறை தேடிச்சென்றேன், மீண்டும் அறைக்குள் நுழையும்வேளையில், என் கண்ணுக்குள் சிக்கினான் அச்சிறுவன் “யாருடா தம்பி புதுசா இருக்க?”

பக்கத்து ரூம் நா.

ஓ, பக்கத்து ரூம்காரங்களோட சொந்தகார பையனா?, லீவுல மெட்ராஸ் (மன்னிக்கவும் சென்னை) சுத்திபார்க்க வந்தயா?

“இல்லனா கீழ இருக்குற லச்சுமி ஸ்வீட்ல வேலைக்கு புதுசா சேந்து இருக்கேன்”

முழுபோதையும் களைந்துப் போய் அவனிடம் பேச ஆரம்பித்தேன், திருநெல்வேலிக்காரன் என்றும், அப்பா இல்லை, மூன்றாம் வகுப்பு மேல் படிக்க வசதி இல்லை என்றும், திருமண வயதில் அக்கா இருப்பதால் அவள் திருமணத்துக்கு பணம் சேர்க்க வேலைக்கு வந்ததாய் கூறினான், தனக்கு சம்பளம் 3000 என்றும் கூறினான்

” சரி, படிக்கிறயா படிக்கவச்சா?”

அடபோங்கனா, படிக்கவைக்கிற காச கைல குடுங்க, எங்கக்கா கல்யானம் பண்ணுவேன். இந்த படிப்பு எழவு எல்லாம் சும்மானா. படிச்சா படிப்பு மனச சாக்கடையாக்கிடும், நல்லவனா இருக்க முடியாது”

மௌனமாய் இருந்தேன் நான். படிப்பு பற்றியும் இலக்கியம் பற்றியும் அதிகம் பேசி பீற்றிக்கொள்ளும் என்னால் அவன் கூறியதை ஏற்க முடியவில்லை…… கண் திறந்து பார்த்தபோது அவன் என் கண்முன் இல்லை.. உள்ளே விஜியும் காந்தாவும் புதுமைப்பித்தன் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *