கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 2,188 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உள் சரிந்த கூரை தலையிலிடிக்கும் ஒரு குடிசைத் திண்ணையில் உட்காந்து கொண்டேன். அவன் பூமியில் புதைந்த ஒரு ஆட்டுக்கல்மேல் குந்திட்டுக்கொண்டான்.

“இந்த வெய்யிலைப் பார்த்தீர்களா? இதில் எது புளைக்கும்? இந்த செங்கற்பட்டு ஜில்லாவிலேதான், இந்த மாதிரி வெய்யிலும், இந்தமாதிரி பாழடைந்த பேட்டை யும். ரோட்டுலே போயிட்டேயிருங்க, நடுவுலே நடுவிலே ஒரு பத்து வீடு , பதினைஞ்சு வீடு வெறும் குட்டிச் சுவர் மாத்திரம் நின்னிட்டிருக்கும். மழையிலே கறைஞ்சு, வெய்யில்லே உளுத்து –

இந்தப் பக்கத்திலே தண்ணி நிற்கிறதில்லே. என்னவோ பெரிசா பாலாறு வேகவதின்னு பெருமையா சொல்லு வாங்க. ஆனால் நான் பாக்கறது மணல் தானுங்க. வருசத்திலே பத்து மாசம் எனக்குத் தெரிஞ்சவிடமெல்லாம் மணல் தான். ஏதோ தூத்தலுக்கு குட்டையிலும், ஏரி யிலும் கட்டுதே, அதுதான் குடிக்கறத்துக்கு, குளிக்கறத் துக்கு, கை கால் களுவறத்துக்கு, பயிருக்கு எல்லாத்துக்கும்.

பயிரான பயிர் , என்ன பயிர் போங்க! புளியங்காத்து நெருப்பு தலை சுத்துது . பிணம் வேகறத்துக்குக் கட்டைக்கு குறைவில்லை கந்தக பூமி ; பூமியின் குடலையே புடுங்கி எறியற மாதிரி ஏரையளுத்திப் போட்டு உளுதாலும் கல்லு தடுக்கி இரும்புதான் மொக்கையாவும். இந்தப் பக்கம் ஒரு கதை சொல்லுவாங்க. கிணறு வெட்டறேன் ராசான்னு ஒருத்தன் தோண்டிக்கிட்டே போனானாம், தண்ணி கண்ட பாடேயில்லே. தோண்டினவன் அப்புறம் மேலே வரவேயில்லியாம்! ஊர் நீர்வளம் அப்பிடி!

ஊரிலே உலாத்தற புத்திக்கும் தரித்திரத்துக்கும் குறைச்சலேயில்லே. புளியமரத்திலே புளியம் பழம் காய்க்குதுன்னா நம்பமாட்டானுங்க. பிசாசு தொங்கு தடான்னா எல்லாரும் ரெடியா நம்புவாங்க. உடம்புலே எவனும் சட்டை மாட்டக் கூடாது. கண்ணாலே சுட்டுடு வாங்க. இங்கே நாலெளுத்துக் கூட்டிப்படிக்கத் தெரிஞ்சவன் ஆதிசேசன்.

என்ன இருந்தாலும் ஒரு விசயம் ஒப்புக்கணுங்க. படிச்சவன் படிக்காதவன் எல்லாரும் புளைச்சாவணும். பசி எல்லாருக்கும் ஒண்ணுதான்.

இந்த உசிர் இருக்கிறவரைக்கும், இந்த ஒரு சாண் வவுத்தை வளர்த்து எப்பிடியாவது புளைக்கணும்னு தானே, மனுசன் நாலுபேரோடே கூடறான், பிரியறான், சண்டை போடறான், சமாதானமாவறான்! இடை யிடையே மாரியாத்தா , வாந்தி பேதி, ஒண்ணுமில்லாட்டா வயசு எல்லாம் அவனை வாரியடிச்சுட்டுப் போவுது. அப்பவும் இந்த உசிரிலே இருக்கிற ஆசையை என்னான்னு சொல்றது! எல்லாமே அதுலேதான் அடங்கியிருக்குதுங்க. சாமி, பூதம், பிசாசுகூட. பயிர் தண்ணிக்குக் காஞ்சா, கொடும்பாவி கட்டியிளுத்து அளுவறான். தண்ணி சாஸ்தியாப் போனா , கங்கம்மாளுக்கு ரவிக்கை, மஞ்சா, விளக்கு எல்லாம் முறத்திலே வெச்சு தண்ணியிலே விடறான். கோவமடங்கணும், வாழவைக்கணும் தாயேன்னு எல்லையம்மனுக்குப் பூசைபோடறான். என்னாத்துக்கு சொல்ல வத்தேன்னா இந்த நம்பிக்கைன்னு ஒண்ணு இருக்குதே அதிலே அவ்வளவு இருக்குது – உடம்பிலே இருக்குதே அது உசிரில்லே நம்பிக்கைதான் உசிர்.

அந்த மாதிரி ஒரு நம்பிக்கையிலே தான் இந்த ஊர் ஆதியிலே உருவாச்சுன்னு சொல்லணும். வேறே எந்த எண்ணத்தை, மனசிலே வெச்சுக்கிட்டு ஆதியிலே இங்கே குடியேறின நாலுபேரோ , அஞ்சு பேரோ குடிசை கட்டினாங்கன்னு சொல்ல முடியும்? எனக்கு நெனைப்புத் தெரிஞ்சதிலிருந்தே, இந்த இடம் எல்லாத்துக்கும் ஒதுக்கு மாசாமர்சம் எட்டு மைலுக்கு அப்பாலே ஒரு சந்தை கூடுதே அதுலேதான் உப்பிலேருந்து கற்பூரம் வரை எல்லாம் வாங்கியாவணும். அப்படியும் எனக்கு நெனப்பு வயசு வரவேளைக்கு, அதிலே முளைச்ச நாலு வீடு நாற்பது வீடா வளர்ந்திருந்தது. வெறும் நம்பிக்கை வளத்து மேலே.

அந்த சமயத்திலே பேட்டைக்கு ஒரு ஆண்பிள்ளை யும் பெண்பிள்ளையும் குடியேற வந்தாங்க. புருசன் பெண்சாதின்னு நான் சொல்லமாட்டேன். பொம்புள்ளே களுத்துலே தாலியில்லே. முதுகிலே ஒரு மூட்டை, இடுப்பிலே கொளந்தை, அப்படித்தான் வந்தா. அவன் சக்கரத்தை உருட்டிக்கிட்டு வந்தான். அதோ பாருங்க – மேட்டுலே கூரை உள்ளுக்கு விளுந்து போயிருக்குதே, அந்தக் குடிசைதான் அவுங்களது. அங்கே வாசல்லே ஒரு பள்ளமிருக்குதே, அங்கே ஒரு முருங்க மரமிருந்தது. கொம்புலே புடவையை ஏணை கட்டி அதிலே கொளந்தையை வளத்து மண் பிசைஞ்சா, அவனே செவுரெளுப்பி, ஓலை முடைஞ்சு கூரை போட்டான். அப்புறம் வாசல்லே சக்கரத்தைப் போட்டான். குச வேலை செய்ய ஆரம்பிச்சான்.

நான் ஒரு விசயம் ஒப்புக்கணுங்க. நம்ப ஊரிலே அளகானவங்க ஒருத்தருமேயில்லை. அள குக்கும் அலங்காரத்துக்கும் நேரமில்லே, வசதியில்லே, அப்படியே அளகு பண்ணிக்கிட்டாலும் பாக்கறத்துக்கு கண் இல்லே. இருந்தாலும் அவன் அவள், அவங்க கொளந்தை மூணு பேரையும் போல அவ்வளவு அவலச்சணம் ஒருத்தரையும் நான் பார்த்ததில்லே. யாரையாவது ஏசிப்பேசினா அவன் என்ன கொம்பிலே ஏறிக் குதிச்சானான்னு கேக்கற பளக்கம். இவங்களைப் பார்த்தா கொம்பிலேறிக் குதிச்சவங்க மாதிரிதான் இருந்தது. நான் சொல்றது புரியுதுங்களா அதான், சிரிக்கிறீங்களே, புரிஞ்சுக்கிட்டிங் களா?

அவளுக்கு வாய் கொள்ளாமே பல் வெளியிலே துருத்திக்கிட்டு அதிலே ரத்தம் மாதிரி புகையிலைக் காவி. கண் நானும் இருக்கேன்னு சும்மா கீறினாப் போல. தலைமயிர் சடை போட்டிருக்கும். மூக்குன்னு மூச்சுவிட ரெண்டு தொண்டிதான். இவ இப்படின்னா, அவனுக்கு அவள் ரம்பைன்னுதான் அவன் இருந்தான். இருந்த உதடு அறுந்து தொப்புள் வரைக்கும் தொங்கிச்சு. அப்பிடின்னா அப்படியா? அவ்வளவு மோசம்னு நீங்களே நெனைச்சுப் பார்த்துக்கங்க.. அத்தொடு கன்னத்திலே நீளமா, அசிங்கமா ஒரு வெட்டுத் தளும்பு வேறே.

மிருகங்கள்.

அவங்க சுபாவமும் அப்படித்தான் காட்டிலேயிருந்து பிடுங்கினமாதிரிதானிருந்தது. ஒரே முரட்டுத்தனம். ஒரு நாள் அந்த வழியாப் போனேன். ரெண்டு பேரும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் என்னவோ பேசிட்டு இருந்தாங்க. அவன் மண்ணைச் சக்கரத்திலே கட்டிட்டு, சக்கரத்தை சுத்திக் கிட்டிருந்தான். திடீர்னு ஒரே பாய்ச்சல் பாய்ஞ்சு பூமியிலிருந்து ரெண்டு காலும் எளும்பி, பறக்கற மாதிரி ஒரு பாய்ச்சல் பாஞ்சு புறங்கையை வீசி அவ வாயிலே அடிச்சான் பாருங்க. நான் அலண்டு போயிட்டேனுங்க! உங்க வீட்டு அடியா, எங்க வீட்டு அடியா, மனுசன் தாங்கற அடியா அது? செம்மட்டி அடி அது. அவ உதட்டிலே ரத்தம் அப்படியே பிடுங்கிக் கிட்டுது.

என்னைப் பார்த்துட்டா. அவ புருசன் அடிச்சது கூட தெரியல்லே. நான் பார்த்ததுதான் பொத்துக்கிட்டுது. கன்னா பின்னான்னு வண்டையா திட்டிக்கிட்டு ஒரு கல்லை வீசி என் மேலேயெறிஞ்சா. பெத்தேன் புளைச்சேன்னு ஓடி வந்துட்டேன். நான் சின்ன பையனூங்க!

அவங்க பாசமும் அப்படித்தான். அவங்களுக்கு ஒரு கொளந்தையிருக்குதுன்னு சொன்னேனே அதன் அழகை கேக்கணுமா? என்னாங்க அவரை போட்டால் துவரை மொளைக்குமா? இருந்தாலும் அவங்க பெத்த மகனில்லியா? அந்தப் பனங்கொட்டைத் தலையன் மேலே அவங்க உசிரையே விட்டுட்டாங்க. நாள் தவறாமே விளக்கு வெக்கற வேளைக்கு வெளியிலே களிப்பு களிச்சுபடி யிருக்கும். அதைப் பார்த்துட்டு எச்சில் துப்பித் துப்பி எனக்குத் தொண்டை கூட நோவு எடுத்துக்கும்.

அந்த மன்மதக் குஞ்சை ஒருத்தரும் பார்க்க முடியாது. அவங்களுக்கே , கலகலப்பான சுபாவம் கிடையாது. ஆளைப் பார்த்தாலே கடிக்க வராப் போலயிருக்கும். எங்களுக்கும் அவங்ககிட்டே ஒட்டல்லே . ஒரே ஒரு தெம்பு: தான். ஒரு சட்டி, பானைவேணுமானா சந்தைக்குப் போய் வாங்கி எட்டு மைல் தூக்கி வரணும். இந்தத் தடவை பொங்கப் பானை நம்ம ஊரிலேயே வாங்கலாமில்ல? அதிலே ஒரு சந்தோஷமில்ல? அப்படியும் – இப்படியுமா பொங்கலும் கிட்டக்கிட்ட வந்துட்டுது. அப்பசி போச்சு. கார்த்திகையும் பாதியாச்சு. மார்கழி மள்ளினா பொங்கல்.

இதுக்குள்ளேயும் ஒண்ணு நேர்ந்து போச்சு. அந்தக் குளந்தை இறந்துட்டுதுங்க.

சின்னக் குளந்தை சாவறத்துக்குக் காரணம் வேணுமா? படே படே ஆளெல்லாம் திடீர் திடீர்னு வாயைப் பிளந்துடறாங்க. குளிர் மார்லே தாக்கியிருக்கும். வாயிலே ஊட்டற கூழை மூக்கிலே ஏத்தியிருப்பா. பேச்சுக்கு, சொல்றேனுங்க.

கொளந்தையைத் துணியிலே வாசல்லே நீட்டீட்டு அந்தப் பொம்புள்ளே அதன் பக்கத்திலே சுருண்டு விழுந்து கிடந்தா அவளண்டை அவன் மார்மேலே கையை ஒடுக்கி நின்னுகிட்டு இருந்தான். அவன் அளுவல்லே . கண் ரப்பை யெல்லாம் கள் குடிச்சவன் மாதிரி ஜெவஜெவன்னு இருந்தது. பேட்டையிலே ரெண்டு மூணுபேர் , மனசு இறங்கி வீட்டுங்கிட்டப் போனாங்க. சின்னச் சாவோ பெரிய சாவோ மனுஷன் ஒண்டியாத் திண்டாடினால் கஸ்டமில்லியா?

“ஐயோ பாவம், புளைக்க வந்த இடத்திலே” ன்னு ஒத்தரு ஆரம்பிச்சார். ஏதாவது சொல்லியாவணுமே.

அந்த ஆள் சீறி விளுந்ததைப் பாக்கணுமே!

“போதும் போதும் உங்களை யார் வரச் சொன்னது? நீங்களும் உங்க ஊரும்…!”

இந்த மாதிரி மனுசனோடே யார் என்ன பண்ண முடியும்? என்னமோ அவன் கொளந்தை போனது எங்க பொறுப்பு மாதிரி!

நான் ஒரு தடவை பார்த்தேன். எங்க ஊரிலே ஒரு பூனையிருந்தது. அதுக்குக் குட்டி செத்துப் போச்சு ; தாய்ப் பூனை அப்படியே அதன் பக்கத்திலே குந்திட்டிருந்தது. ஒருத்தரையும் அண்ட விடல்லே . சவம் மூணு நாலு நாள் நாறிட்டு கிடந்தது,

நல்லா உச்சி வேளைக்கு செம்மட்டியை தோளிலே போட்டுக்கிட்டு, அவள் கிட்டேருந்து பிணத்தை முரட்டுத்தனமா பிடுங்கி, ஒரு கையிலே அணைச்சுக்கிட்டு, பேட்டை தாண்டிப் போனான். கொளந்தை கையும் காலும் லொடலொடன்னு ஆடிச்சு.

இந்த மாதிரி மனுசனோடே யார் என்ன பண்ண முடியும்?

அவங்க வீட்டிலே அளுகை சத்தம் அப்புறமே எப்பவுமே கேக்கலே. இருந்தாலும் ஓரோரு சமயம் குனிஞ்சு வேலையாயிருக்கிறவ, திடீர்னு நிமிந்து அவன் குளந்தையையும் செம்மட்டியையும் தூக்கிட்டுப் போன திக்கிலே பார்த்துட்டு நிப்பா. அவங்க புடிச்ச மண் மேலே, அவள் எழுப்பின மண்மேடு, அதோ புளிய மரத்தடியிலே அங்கிருந்தே தெரியும்.

ஒருசமயம் நாங்க ரண்டு மூணு பேர், இன்னும் ரண்டு கொளந்தையோடே சந்தைக்குப் போற ரோட்டோடே போனோம். அவள் எதிரே ஒரு கூடை மண்ணை தலைமேல் வெச்சுக்கிட்டு வந்தா; கையிலே வேறே ஒரு சின்ன மண்கட்டி வெச்சிருந்தா. வழியெல்லாம் ஆடிக்கிட்டு பராக்குப் பாத்திட்டு வந்த பசங்க, குறுக்கே விளுந்தடிச்சு ஓடிவந்து அவ மேலே மோதிக்கிட்டாங்க, பார்த்தா பாருங்க, ஒரு பார்வை! அந்த மனசிலே வெள்ளை முளி யிலே கருப்பு முளி ஒரு தடவை உருண்டு ஆடிச்சு. என்ன குமுறி வந்ததை அடக்கினாளோ , கைமண் மையா உதிர்ந்திச்சு.

ஆனா, என்னதான் வவுறு. மவனை நெனைச்சு உருகினாலும் கேக்குதா? அவங்க அவங்க வேலையை அவங்க அவங்க செஞ்சுதானே ஆவணும், அதுவும் பொங்கல் கிட்டக்கிட்ட வந்துட்டுது. சாவுக்கு ஊதற சங்கைத்தான் வெள்ளி முளைக்கிற வேளைக்கி சந்தோசத் துக்கு ஊதினான்னா சந்தோசமாயிருக்காதா? பொங்கல் வந்துட்டுது கிட்ட வந்துட்ட துன்னு சங்கு ஊதுது. பொங்கப் பானை பண்ண வேணாமா?

வெள்ளைக் காயிதத்தைக் காயிதமாக்கறவங்க, உங்களுக்கெல்லாம் தொழிலாளிகளைக் கண்டாலே ஒரு இளக்காரம். அதுக்கென்ன கண்பார்த்தா கைசெய்யுதுன்னு லேசா சொல்லிடுவீங்க. இந்த மண் வேலையை எடுத்துக் தங்க. இதுலே எவ்வளவு கஸ்டம் இருக்குது தெரியுங்களா? மண்ணை காலும் கையும் நோவப் பொறுக்கி பிசைஞ்சு பதமா மிதிக்கணும். பானை பண்ணறதுன்னா லேசா? சக்கரத்திலேற விண்டு போறது எத்தனை? அப்புறம் அதை அடி மூட ஒரு தடவை பலகையாலே தட்டிக் கொட்டி அப்புறம் உருவாக்கறத்துக்கு மூணு தடவை தட்டி, வெய்யிலிலே காயவெச்சா , வெடிச்சுப் போறது எத்தினி , சூளையிலே உடைஞ்சு போறது எத்தினி! அது வாங்கற வேலைக்கு விக்கற விலை போதாதுங்க. மண்ணு தானேன்னு சொல்லுவாங்க. அப்படின்னா அப்புறம் எல்லாம் மண்தான், நான் மண்; நீங்க மண் , எல்லாமே மண்தான்.

மார்களி மாதம் விடியற்காலை, பல்லு கிட்டற குளுருலே எளுந்து பானையை லொட்டு லொட்டுன்னு தட்டற ஓரொரு தட்டும் பொங்கல் கிட்டக் கிட்ட வந்துட்டு துன்னு , படுத்துட்டு இருக்கிறவங்க காதண்டை வந்து சொல்லுறாப் போலே இருக்கும்.

நம்ம பண்டிகையிலே பொங்கல் தானுங்க ஏளைக்கும் ரொம்ப வேண்டிய பண்டிகை. மத்ததெல்லாம் பணக்காரன் பண்டிகை. எந்த ஏளை வூட்டிலும் பொங்கல் மாத்திரம் புதுப்பானையிலே பொங்கியாவணுங்க. நாங்களெல்லாம் ஏளைங்க.

நடுவூட்லே அடுப்பு வெட்டி, பொங்கல் பொங்கி, இலையிலே பொங்கலை வெச்சு நடுவுலே குழிச்சு பாலை வார்த்து, சூரியனுக்குக் காட்டி, ‘பொங்கலோ! பொங்கல்!’ன்னு கூவுவோம். வளி பிறக்குதோயில்லியோ தை பிறக்குதுங்க. அத்தோடு நல்ல வளிக்கு ஒரு நம்பிக்கையும் பிறக்குதுங்க.

இந்த ஒரு எண்ணத்திலே மாத்திரம் பேட்டையிலே இருக்கிறவங்க அத்தனை பேருக்கும் ஒத்துமைதான். தினப் படிக்கு வெங்கலத்திலே சோறு வேவற நாட்டாமைக்கார் வூட்டிலே கூட பொங்கச்சோறு புதுப் பானையிலேதான் வேவும்.

நாளைக்குப் பொங்கலுன்னா இன்னி சாயங்காலந் தான் பானை வாங்குவாங்க; பொங்கலன்னிக்கே புதுப் பானை வாங்கறவங்களும் இருக்காங்க. புதுவாழ்வுங்க, மார்களி சந்தைக்கு பேட்டையிலே ஒருத்தருமே இந்தத் தடவை பானை வாங்கப் போவல்லே. இந்தத் தடவை சந்தைப் பானையில்லே, நம் சொந்தப் பானை. அதுவே எவ்வளவு சந்தோஷம் தெரியுங்களா?

நான் படிச்சவன் இல்லிங்க, இருந்தாலும் நம்ம பேட்டை , ‘நம்ம ஊர், நம் நாடு’ நம்ம தேசம், எல்லாம் ஒண்ணுதானுங்களே!

புதுப்பானை வாங்கப் போறதே பேட்டைப் பொம் புள்ளேங்களுக்கு அதுவே ஒரு பண்டிகையாட்டந்தான். நடக்கற தூரம் பத்தடி தான் ஆனாலும் பேட்டைப் பொம் புள்ளேங்க, நாலும் அஞ்சுமா கூட்டம் போட்டு, சொருக்குப் பையை இடுப்புலே சொருகிக்கிட்டு கட்டைப் புகையிலையை கடைவாயிலே மாட்டியிளுத்துக்கிட்டு குசாலா பேசிச் சிரிச்சுக்கிட்டு குசவன் குடிசைக்குப் போற ஜோக்கை நான் தூர நின்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.

வாசலுக்கெதிரே நாலாபக்கமும் கவுறு வேலி கட்டி, பானையை ஒண்ணுமேல் ஒண்ணா வரிசையா அடுக்கி அளகாயிருந்தது. இந்த ஒரு பொங்கலில்லே, இன்னும் மூணு பொங்கலுக்கு ஆவும், அத்தினி சாமான் பண்ணியிருந்தான். பொங்கப்பானை, தண்ணிப்பானை…, பதார்த்த ப் பல்லா , அடுக்கு , மடக்கு எல்லாம்…

ரெண்டு பேரும் சிரிச்ச முவமா வரவங்களுக்கு காத்து: நின்னுட்டு இருந்தாங்க. அவங்க சிரிச்சாங்கன்னா, அதுவே ஒரு அதிசயமில்ல?

பேரம் உடனே தொடங்கல்லே. அந்தப் பொம்புள்ளே சொன்னா: “ஊரெல்லாம் வரட்டும்; ஊரெல்லாம், சேர்ந்து நாங்க கண்ணாலே பார்க்கணும்.”

கொஞ்ச நேரத்திலே, குஞ்சும் கொளந்தையுமா சின்னவங்களும் பெரியவங்களுமா குசவன் வாசலுக்கெதிரே கூட்டம் முட்டிப் போச்சு, கசகசன்னு சத்தம்.

“எல்லாரும் வந்துட்டீங்களா?” ன்னு அந்தப் பொம்புள்ளே இறைஞ்சு கேட்டாள். ‘ஆமா’ – ஒரு நூறு பேர் இந்த ஒரே வார்த்தையை ஒரே சமயத்திலே சொன்னா எப்படி இருக்கும் நெனச்சுப் பாருங்க.

அந்தப் பொம்புள்ளே, சிரிச்சுக் கிட்டே அவ எதிரே அடுக்கி இருந்த ஒரு பானை வரிசை மேலே ஒரு உதை விட்டா .

உதை ஒண்ணுதான். ஆனா அந்த அடுக்கு, அடுத்த அடுக்கு மேலே சாஞ்சு, அது ரெண்டும் அதுக்கடுத்தது மேலே , அதுக்கடுத்தது மேலே வரிசை வரிசையா பானை ஒடஞ்சி பார்த்திருக்கீங்களா? கேட்டிருக்கீங்களா? எத்தனை பானை!

எங்களுக்கு என்ன சொல்றது , செய்யறதுன்னு தோணல்லே. பானையிடிஞ்சதிலே எங்க அத்தனை பேர் வவுத்திலேயும் என்னவோ இடிஞ்சது.

“நீங்களும் ஒங்க ஊரும்” – னு அந்த பொம்புள்ளே பாம்பாட்டம் சீறினாள். அவசரமா குனிஞ்சு ஒரு பிடி மண்ணெடுத்து காத்துல்லே ஊதினா. “என் கொளந்தே பூட்டுது – நாங்களும் போறோம் – நீங்க சந்தோசமா யிருங்க……” ரெண்டு பேரும் வேகமா நடந்து போயிட்டாங்க. கண்ணுக்கு கூட மறைஞ்சு போயிட் டாங்க. கல்லா சமைஞ்சிருந்தோம் – அத்தனை பேரும் நின்ன இடத்துலே நின்னுட்டு.

ஒரு பானை கூட மிஞ்சில்லேங்க அப்பவே அந்த இடம் சுடுகாடு மாதிரி ஆயிட்டுது.

அப்புறம் ஊர் உருப்படலேங்க. மாத்தி மாத்தி ஏதாவது நேந்துட்டிருந்தது. பெய்யற மழை கூடப் பெய்யல்லே, பயிர் எல்லாம் செத்துப் போச்சு. வாந்தி பேதி வேண்டிய பேரை வாரிக்கிட்டுப் போச்சு, இருக்கிறவங்க ஒவ்வொத்தரா கயண்டுக்கிட்டாங்க, எல்லோருக்குமே ஒரு கிலி பிடிச்சுப் போச்சு.

ஊரிலே பொங்கலன்னிக்கு, புதுப்பானையிலே பொங்கல் வேகல்லேன்னா அப்புறம் என்னங்க? நீங்களே சொல்லுங்க, நம்பிக்கை பூட்டு துன்னா அப்புறம் என்ன இருக்குது?”

– பச்சை கனவு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *