பெரியமனுசத்தனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 11, 2022
பார்வையிட்டோர்: 3,912 
 
 

“ஐயா! கும்புடுறேனுங்கோ!”

“என்னய்யா ராமசாமி! என்ன திடீர்னு என்னை பாக்க வந்திருக்க.. ஏதாவது விஷேசமா?”, என்றார் மீசையை முறுக்கியவாறே ஊரின் பெரிய மனிதரான ஜம்புலிங்கம். பக்கத்திலேயே அவரது வலதுகை கணேசு நின்று கொண்டிருந்தான்.

“விஷேசந்தாங்கையா, பொண்ணுக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம் வச்சிருக்கேனுங்க.. நீங்கதாய்யா வந்து நல்லபடியா நடத்திக் கொடுக்கோணும்”, என்றார் கும்பிட்ட கையை அகற்றாமலேயே ராமசாமி.

“அதுக்கென்னய்யா.. வந்துட்டா போச்சு. நீ எந்த கவலையும் படாதே”, என்றவர் கணேசுவை பார்த்து,

“எலே கணேசு! நாம எல்லா கல்யாணத்துக்கும் கொடுப்பமில்ல, அத கொடுத்து ராமசாமிய அனுப்பிவைய்யா. அவருக்கும் எவ்வளவோ கல்யாண வேலை இருக்கும். இல்லே ராமசாமி” என்றார்.

“அப்பிடி அவசர வேலை ஒண்ணும் இல்லீங்கய்யா”, என்ற ராமசாமி மெதுவாய் தலையை சொறிந்தார்.

அதனைப்பார்த்த ஜம்புலிங்கம், “என்னய்யா! தலைய சொறியிற. என்னவாயிருந்தாலும் வெட்கப்படாம சொல்லுய்யா”, என்று ராமசாமியை பார்த்துக் கூறினார்.

வலதுகை சும்மாயிருந்தா அப்ப அய்யாவோட கௌரவம் என்னாகிறதாம்..

“வாயைத்தொறந்து சொல்லுய்யா”, என்று பின்பாட்டு பாடினான் கணேசு.

“எலேய்! இன்னும் நீ இங்க ஏன் நின்னுகிட்டு இருக்கே. போய் நான் சொன்னத செய். நீ நிக்கேனு கூச்சப்படறாரோ என்னவோ”, என்றவாறே கணேசுவை விரட்டினார் ஜம்புலிங்கம்.

“அது ஒண்ணுமில்லீங்கய்யா! மாப்பிள்ளை வீட்ல என் தகுதிக்கு மேலேயே கேக்கறாங்க. இன்னும் இரண்டு இடத்திலேயும் கேட்டு வச்சிருக்கேனுங்க..அங்கெல்லாம் கெடைக்குமானு சந்தேகமா இருக்குதுங்கோ.. நீங்க ஒரு இருபதாயிரம் கொடுத்தீங்கன்னா ரொம்ப சௌகரியமா இருக்குமுங்க”, என்றார் ராமசாமி.

“அவ்வளவு தானே. இதுக்குப்போயி ஏன்யா கவலைப்படறே. எங்கிட்ட சொல்லீட்டியில்ல. இன்னும் ரெண்டு நாள்ல வந்து வாங்கிட்டு போய்யா. நான் தயாரா வச்சிருக்கேன்”, என்றார் ஜம்புலிங்கம்.

அதற்குள் கணேசுவும் உள்ளேயிருந்து வந்தான்.

“அப்ப நான் கிளம்பட்டுங்களாய்யா” என்றார் ராமசாமி.

அப்போது கணேசு தேங்காய் பூ மற்றும் பழத்துடன் இருந்த ஒரு தாம்பலத்தை ராமசாமியிடம் கொடுத்தான்.

ராமசாமி பணிவுடன் அதை வாங்கிக்கொண்டார்.

“சரிய்யா. இன்னும் ரெண்டு நாள்ல வந்து என்னைப்பாரு”, என்றார் ஜம்புலிங்கம்.

“சரிங்கய்யா”, என்ற ராமசாமி கல்யாணமே முடிந்தது மாதிரி சந்தோஷமாக கிளம்பினார்.

“என்னங்கய்யா என்னவாம்?”, என்றான் கணேசு.

“ஐயாவுக்கு இருபதாயிரம் ரூபாய் வேணுமாம். நான் என்னமோ அந்தாளுக்கிட்ட சொல்லீட்டேன், இன்னும் ரெண்டு நாள்ல வந்து வாங்கிட்டு போனு. ஆனா எனக்கென்னமோ இஷ்டமில்லையா. என்னோட பாட்டனும், அப்பனும் இதுமாதிரி ஒரு பழக்கம் ஏற்படுத்தி வச்சிபுட்டாங்க. எப்பப்பாரு எவனாவது ஒருத்தன் இது மாதிரி வந்து வீட்டுமுன்னாடி நிப்பானுக, ஐயா எனக்கு அது வேணும் இது வேணும்னு. என்னா பண்றது. ஊருக்கு பெரிய மனுசன்னு பேரு. அவங்க கேட்டு நான் கொடுக்கலைனா கௌரவக்குறைச்சல் வேற, என்னத்தையா பண்றது”, என்று கணேசுவைப் பார்த்து புலம்பித்தள்ளினார் பெரியமனுசன் ஜம்புலிங்கம்.

“ஐயா, நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க. நான் ஒரு திட்டம் போடறேன். இன்னமே ஒருத்தன் கூட இங்க காசு வாங்க வர மாட்டனுக. என்ன சொல்றீங்க”, என்றான் கணேசு.

“அது என்னய்யா திட்டம்?”, என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ஜம்புலிங்கம்.

“ராமசாமி இன்னும் ரெண்டு நாள்ல பணம்வாங்க வருவானில்லையா, அப்பவே அத நான் அரங்கேற்றம் பண்றேன்”, என்று சிரித்தவாறே கூறினான் கணேசு.

அந்த நாளும் வந்தது.

ராமசாமி வருவதற்கு முன் கணேசு அவருடைய வீட்டிற்கு சென்றான்.

“வாய்யா கணேசு! ஒங்கிட்டையே ஐயா பணம் கொடுத்தூட்டாரா என்ன?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ராமசாமி.

“அது ஒண்ணும் இல்ல ராமசாமி. நேத்துராத்திரி ஐயா வீட்ல ஒரு பெரிய கொள்ளை நடந்து போச்சு. இருந்த பணத்தையெல்லாம் எவனோ அடிச்சிட்டு போயிட்டான். ஐயா ரொம்ப துக்கத்தில இருக்காரு. இன்னிக்கு உரம் வாங்கிட்டு வரலாமுன்னு வேற இருந்தோம். இன்னிக்கு உரம் போடாட்டி பயிரெல்லாம் வாடி வதங்கி போயிடும். அதுக்கே ஒரு பத்தாயிரம் ரூபா தேவப்படுது. இப்ப என்ன பண்றதுன்னே தெரியல. இருந்தாலும் ஐயா உன்ன கஷ்டப்படுத்த விரும்பல. இந்தா அவரிட்ட இருந்த ஐநூறு ரூபாய் ஒங்கிட்ட கொடுத்துட்டு வரச்சொன்னார்”, என கூறியவாறே பணத்தை நீட்டினான் கணேசு.

“ஐய்யய்யோ ஐயா வீட்லயே கொள்ளையா? என்னாலே நம்பவே முடியலையே கணேசு. கொள்ளையடிச்சவன விடக்கூடாது. ரெண்டுல ஒண்ணு பாத்துரணும். ஒரு நிமிஷம் இரு. நான் வரேன்”, என்ற ராமசாமி வேகவேகமாக வீட்டிக்குள் சென்றார்.

கையில் ஒரு பையுடன் வந்தவர்,

“வா கணேசு! ஐயாவப் போயி பாக்கலாம்”, என்று கணேசுவை கூட்டிக்கொண்டு ஜம்புலிங்கம் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

கணேசுக்கு ஒண்ணுமே புரியவில்லை.

நாம கொடுத்த இந்த ஐநூறு ரூபாயை வாங்கவே இல்லை. இப்ப என்னானா ஒரு பைய தூக்கிட்டு வா ஐயா வீட்டுக்கு போலான்றான் இந்த ராமசாமி. ஒரே குழப்பமா இருக்கே என யோசித்தவாறே வேகவேகமாக செல்லும் ராமசாமியின் பின் தொடர்ந்தான் கணேசு.

ஜம்புலிங்கம் கணேசும், ராமசாமியும் ஒன்றாக வருவதை கண்டவுடன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார்.

கணேசு ஒரு நமட்டுச்சிரிப்புடன் ராமசாமிக்கு தெரியாமல் ஐயாவை பார்த்தான். ஜம்புலிங்கமும் ரகசியப் புன்னகை ஒன்று பூத்தார்.

ஜம்புலிங்கத்தின் முன் வந்த ராமசாமி,

“ஐயா! எப்படீங்கய்யா இந்த கொள்ளை நடந்துச்சு. திருடன விடக்கூடாதுங்கையா. அப்புறம் நான் கேட்டிருந்த ரெண்டு இடத்திலே இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எனக்கு பணம் கெடச்சிருச்சுங்கையா. கணேசு சொன்னான், நீங்க இன்னைக்கு உரம் வாங்கணும்னு நினைச்சிருந்தீங்கன்னு. உரம் போடாட்டி பயிருக்கு வேற ஆபத்தாயிரும். பத்தாயிரம் வரைக்கும் தேவைப்படிதுன்னு வேற சொன்னாய்யா. நீங்க கவலைப்படாதீங்கய்யா. பயிருக்கு ஆபத்துன்னா என் மனசு தாங்காதுங்கய்யா. அப்புறம் நீங்க நல்லா வாழ்ந்துட்டு வர்றவரு. பரம்பர பரம்பரையா இல்லேனு சொல்ற மனசுக்காரங்க. இந்தாங்கையா, இந்த பத்தாயிரத்த வச்சு உங்க உரம் வாங்கற வேலைய பாருங்கையா. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. அதுக்குள்ள நான் வேற எங்கையாவது கெடைக்குமானு பாக்கறேங்கையா. வேண்டாம்னு சொல்லாம வாங்கிக்கோங்கோ”, என்று கெஞ்சலுடன் சொன்னார் ராமசாமி.

இதனைக்கேட்ட ஜம்புலிங்கத்தின் கள்ள மனது கலங்கியது. கணேசுவை ஒரு சோகப்பார்வை பார்த்தார். கணேசு தலைகுனிந்தான்.

பெரிய மனுசன்றவன் பணத்தால இல்ல மனசால என்பதை புரிந்துகொண்டார்.

திருந்திய ஜம்புலிங்கம் ராமசாமியிடம் மன்னிப்பு கேட்டதும், எல்லா உதவியும் செய்து அவரது மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்தி வைத்ததையும் சொல்லவும் வேண்டுமா??

– அத்திப்பூ பல்சுவை மாதஇதழ், செப்டம்பர் 2016,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *