பின்னுக்குப் போங்க!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 6,830 
 

பின்னுக்குப் போங்க….. பின்னுக்குப் போ……., சரிஞ்சு நில்லணை, தம்பி உன்னைத்தான் நட்டமரம் மாதிரி நிற்காம பின்னுக்கா போ, பிறகு இறங்கி நின்று கதைக்கலாம்…….

டிரைவர் சீற்றுக்கு பக்கத்தில் இருந்த குமாரின் சிந்தனைகளைக் குழப்பியது கொண்டக்ரரின் கத்தல்கள். தனது கிராமத்தில் இருந்து பேரூந்தில் ஏறும்போது தாரளமாக இருக்கைகள் இருந்தன. அடுத்தடுத்த கிராமங்கள் தாண்ட பேரூந்தினுள் சனக்கூட்டம் நிறைந்து வழியத்தொடங்கியிருந்தது.

டிரைவர் நேரத்தைப் பார்த்து பார்த்து பேரூந்தை மெதுவா உருட்டிக்கொண்டிருக்க, குமரனின் மனமோ பேரூந்திலிருந்து இறங்கி நடந்தே யாழ்ப்பாணம் போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டது. டிரைவரின் பக்கம் திரும்பி கொஞ்சம் வேகமாகத்தான் ஓடுங்கோவன் என்று சொல்ல வாயெடுத்தவன் டிரைவரின் வாயில் இருந்த வெற்றிலையைப் பார்த்ததும் தனது கதையை அடக்கிக்கொண்டான் முன்னெச்சரிக்கையாக.

வெளியில் எங்கேயும் போவதென்றால் போடுவதற்கு என வைத்திருக்கும் ஒரே ஒரு சேர்ட். தான் கதையைக் கொடுக்க டிரைவர் கதைக்க எச்சில் பறந்துவந்து சேர்ட்டை பதம் பார்த்துவிடுமோ என்ற பயம் அவனுக்கு. இருந்தாலும் தில்லானா மோகனாம்பாள் சிவாஜியைப் போல் கண்ணால் கெஞ்சினான் குமார். தான் மெதுவாக பஸ்சை உருட்டுவதைப் பார்த்து குமார் ரென்சன் ஆனதையுணர்ந்த டிரைவர் குமாரை பார்த்து புன்முறுவல் பூத்தான்.

வீதியோரத்தில் நகரப் பாடசாலைகளுக்குச் செல்வதற்காக பாடசாலை மாணவர்கள் கும்பலாக நின்று பேருந்தை மறித்தனர். இதைக்கண்ட குமாரின் மனம் தனது மகனும் இவ்வாறு நகரப்பாடசாலைக்கு போகவேணும் பெரிய பெரிய படிக்கவேண்டும் என்று ஆசைப்படுவான். ஆனால் பாடசாலையில் மகனின் படிப்பதில்லை, புள்ளிகள் குறைவு, என்றும் மெல்லக் கற்கும் சிறுவனாகவே காணப்படுகின்றான் என்றும் ஆசிரியர்கள் கூறுவதைக்கேட்டு மனம் நொந்துபோவான்.

குமாரின் வீட்டுச் சூழலோ அயல்ச் சூழலோ மகன் படிப்பதற்கு ஏற்றமாதிர இல்லை என்பது குமாருக்கு தெரியும். அண்மையில் கூட நடிகர் ராகவா லாரன்ஸ்சின் பிறந்தநாளை இரவிரவாக ஒலிபெருக்கியில் சினிமாப்படல்களைப் போட்டு ஊரையே கதற விட்டார்கள். அடுத்தநாள் பரீட்சையில் மகன் நித்திரை கொண்டுவிட்டதாக ஆசிரியர் பேசியது ஞாபகத்துக்கு வந்தது. வீட்டில் சுட்டிப்பையனாகவும், சினிமாப்பாடல்களை ஒரேதடவையில் பாடமாக்கும் இயல்புடைய மகனால் எப்படி நான்கு வரித் தேவாரத்தைப் பாடமாக்க முடியாமல் போகின்றது? விஜய்யின் படத்தை அச்சுப்பிசகாமல் வரையம் மகனால் எப்படி காலைக்காட்சி வரையமுடியாமல் போகின்றது? தாய் சமைப்பதற்கு வீட்டில் உள்ள வல்லாரையைப் பிடுங்கிக் கொடுக்கும் மகனால் எப்படி பரீட்சைப்பேப்பரில் வரும் வல்லாரையின் கோட்டுப்படத்தை அடையாளங்கான தெரியாமல் போகின்றது? இவற்றில் எதை வைத்து மகனை மெல்லக் கற்கும் சிறுவன் என்கிறார்கள்? விடைதெரியாது குமாரின் மனம் குழம்பிக்கொள்கிறது.

பள்ளிக்கூட பிள்ளைகள் எல்லாம் பின்னுக்குப் போங்கோ பின்னுக்கு போங்கோ…. கொண்டக்ரரின் குரல் ஓங்கி ஒலிக்க….. “பள்ளிக்கூடம் போற பிள்ளையலை உவன்பாவி ஒவ்வொருநாளும் காலையில் பின்னுக்கு போங்கோ பின்னுக்குப் போங்கோ என்று கத்தினால்… அதுகள் எப்படி முன்னேறுகிறது. பெடியள் பின்தங்கிப்போறதுக்கு காரணமே உவங்கள் கொண்டக்ரர்மார்தான்” என்று பெரியதொரு பகிடி விட்டதுபோல் டிரைவர் சிரிக்க குமாரும் சிரித்துக் கொண்டான்.

டிரைவர் குமாரைப்பார்த்து, எங்கே போறீங்கள்?

கூலி வேலைக்கு….

இவ்வளவு தூரத்திலிருந்தோ?

ஓம்… ஊருக்குள் வேலைகள் குறைவு, இஞ்சால வந்தால் சின்னச்சின்ன வீட்டு வேலைகள் செய்யாலாம், அடுத்த வருடம் மகனை பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேணும்… பள்ளிக்கூடம் ஒரு இரண்டு கிலோமீற்றர் வரும். அதனால் சைக்கிள் ஒன்று வேண்ட வேணும்… இப்படி வந்து அங்கே இங்கே கிடைக்கிற வேலைகளைச் செய்தால்தானே பிள்ளையை பள்ளிக்கூடம் அனுப்ப முடியும்?

ஓ உங்கட ஏரியாவுக்குள் பஸ் ஒன்றும் வாரதில்லைத்தானே; பள்ளிக்கூடம் போய்வருவது கஸ்டந்தான்.

இவர்களது சம்பாசனைக்குள் அருகில் இருந்த வெள்ளைச்சேர்ட்டுக்காரர் புகுந்து…. அப்ப உங்கட மகன் ஸ்கொலர்சிப் பாஸோ?

இல்லை. மொத்தமாகவே 45 புள்ளிதானாம்?

அப்ப பள்ளிக்கூடத்தில சேர்ப்பினமோ? பிறகு பள்ளிக்கூடத்தின் தரம் குறைஞ்சிடும் என்று யோசிப்பினம்?

எங்கட பள்ளிக்கூடத்தில சேர்ப்பினம்… நாங்கள் ஊர் ஆட்கள்.. அதைவிட வேற பாடசாலைகள் அருகிலும் இல்லைத்தானே?

ஐயா, பள்ளிக்கூடத்தில இருக்கிற பிள்ளைகளின்ர அடைவு மட்டத்தை கூட்டி அதன் மூலம் பாடசாலையின் தரத்தை கூட்டவேணுமொழிய, வசதியான படிக்கக்கூடிய, பாஸ் பண்ணின பிள்ளைகளைச் சேர்த்து தரத்தை கூட்டக்கூடாது. இப்ப உந்தப் பள்ளிக்கூடங்கள் செய்யிறது கர்ப்பம் தரிச்ச பொம்பிளையைக் கலியாணம் கட்டி பிள்ளை பெறுகிற மாதிரி.

டிரைவரின் வார்த்தைகளைக் கேட்ட வெள்ளைச்சேர்ட்டுக்காரர் டிரைவரை விநோதமாகப் பார்த்தார். உண்மையை உணர்ந்தாலும் அதனை உள்வாங்க அவர் மனம் மறுத்ததை அவர் முகம் காட்டியது.

பஸ் நகரத்தை அடைந்ததும் எல்லோரும் அவசரஅவசரமாக இறங்கி தம்தம் பாதையில் பயனிக்கத் தொடங்க, குமாரை இயற்கை அழைக்க யாழ் புதிய சந்தைக்கட்டடத் தொகுதிக்குள் இருக்கும் மலசலகூடத்தை நோக்கிப் போனான்.

மலசல கூடத்தின் வெளியில் சிலர் நிற்க, இவனும் இல்லாதவரிசையில் நின்றுகொண்டான். நாற்றம் தாங்கமுடியாமல் சிலர் மூக்கைப் பொத்தியபடி நிற்க, மலசல கூடத்தினுள் மாறி மாறி மக்கள் உள்ளே சென்று வந்து கொண்டார்களே ஒழிய தண்ணீர் ஊற்றிய சத்தமோ கழுவும் சத்தமோ மட்டும் கேட்கவில்லை.

மலசல கூடத்தினுள் போன குமாருக்கு சத்தியே வந்துவிடும் போலிருந்தது. இந்த நிலையிலா எல்லோரும் உள்ளே வந்துபோகின்றார்கள்? மூக்கைப் பொத்தியவாறே வாளி நிறைய தண்ணீர் எடுத்து நாலைந்து முறை ஊற்றிய பின்னர் தன் காலைக்கடனை முடித்தான். மலசல கூடத்தின் மூலைகளில் சாராயப்போத்தல்கள்? இதுக்குள் இருந்து எப்படி? அல்லது இவற்றை குடித்துவிட்டு வந்தால்தான் இதுக்குள் போகமுடியுமோ?

வெளியில் வந்த குமார், தான் வேலை செய்யப்போகும் ஊருக்குப்போகும் பஸ்ஸில் ஏறியிருந்தவனுக்கு ஊரில் பரந்த வளவில் மறைவாக சலம் கழக்கும்போது கூட இவ்வாறான மணம், அரியண்டம் இல்லை. ஆனால் பொதுச்சுகாதார பரிசோதகர் அதை சுகாதாரமற்ற முறையென்று சொல்கிறார்கள்! இங்கே? ஒருவேளை போன திருவிழாவுக்கு கோயிலில் பிரசங்கம் செய்த ஐயா சொன்ன யாழ்ப்பான கந்தபுராணக் கலாச்சாரம் இதுதானோ? எதற்கும் மகனைப்படிப்பிக்க வேண்டும். அப்பதான் அவனுக்காவது இதுகள் விளங்கும் என்று நினைத்துக் கொண்டான்.

அடுத்த நாட்காலை மகனின் பாடசாலை அனுமதிக்காக ஊரில் உள்ள பெரிய பள்ளிக்கூடத்துக்கு சென்றான் குமார். அங்கு பலர் வரிசையில் நிற்க இவனும் அவர்களுடன் சேர்ந்து நின்று கொண்டான்.

எந்தப் பள்ளிக்கூடம்?

குமார் பள்ளிக்கூடத்தின் பெயரைச் சொல்ல….

ஓ அந்தப்பள்ளிக் கூடமோ, பின்னுக்குப்போங்க மற்றவையை சேர்த்தபிறகு இடமிருந்தாப் பார்ப்போம் என்றார் பாடசாலை நிர்வாகி.

குமாருக்கு பயம் வந்தது. நேற்று டிரைவர் சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது. பின்னுக்குப் போங்க பின்னுக்குப் போங்க….பயத்துடன் ஓரமாக நின்றுகொண்டான். ஓர் அரசியல்வாதி தனது மருமகனை சேர்ப்பதற்காக வந்திருந்தார். அவரைப்பார்த்து குமார் விசயத்தைச் சொல்ல… அவரும்..

ஓம் ஒம் நானும் கேள்விப்பட்டனான்… இவங்கள் இப்படித்தான், அவங்கள் ஆட்கள் தொகை கூட அவங்களுடன் எதிராக கதைக்கேலாது, பிறகு வோட் போடமாட்டாங்க என்றவாறு நகர்ந்தார். இருக்கிற அடையாளங்களையும், வளங்களையும் தொலைத்துவிட்டு தேசியம் நோக்கி அவர் பயனம் தொடர்ந்தது.

இறுதியில் வெளியில் வந்த பாடசாலை நிர்வாகி இடமில்லை. உன்னுடைய பிள்ளைக்கு புள்ளிகள் 50 இற்கும் குறைவு அதனால் அடுத்த கிராமத்தில் உள்ள பாடசாலையில் சேருங்கோ. அங்கேதான் மெல்லக் கற்கும் மாணவர்களைப் படிப்பிக்கின்ற வசதி இருக்கு. அந்தப் பாடசாலை ஆறு கிலோமீற்றருக்குள்ளேதானே இருக்கின்றது… என்றவாறு சென்றுவிட்டார். குமார் கால்கள் பின்னிக்கொண்டன….. மனம் முன்னுக்குப்போ முன்னுக்குப்போ என்றது ஆனால் கண்களில் இருந்து கண்ணீர்தான் முன்னுக்கு வந்தது.

முக்கால் காற்சட்டையுடன், காதில் தோடுமாக இருந்தவர், பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் கோட்டைவிட்டு வெளிநாடு சென்று அங்குள்ள கல்விக்கொள்கையால் பட்டம் பெற்ற பழையமாணவர் கூறிக்கொண்டிருந்தார்.

நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்கவேண்டாம் கட்டிடங்கள் எல்லாம் நாங்க கட்டித்தருகின்றோம், தேவையான பணமும் அனுப்புகின்றோம், எங்களுக்கு எங்கள் பள்ளிக்கூடம் நல்ல தரமான பாடசாலையாக இருக்கவேணும். எல்லோரையும் சேர்த்து பள்ளிக்கூடத்தின் தரத்தை கெடுத்துவிடவேண்டாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *