பிணை வந்து அணையும் சாரல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 26, 2023
பார்வையிட்டோர்: 2,615 
 
 

“மஞ்ச கலர் மங்களகரமா  இருக்கும்னு உயிர வாங்காத அம்மா. அது பழசாயிடிச்சு. மடிச்சு போய் வருஷ கணக்கா ஆச்சி. புது சுடி ரெண்டு எடுத்து குடும்மா” என்று கத்தினாள் புனிதா. இருக்கிற நாலு துணில இவ்ளோ நாள் தள்ளியாச்சி. ஸ்கூலுக்கு சரி. காலேஜ்க்கு என்று நினைக்கும்பொழுது உள்ளுக்குள் அழுகை வரும்போல் இருந்தது அவளுக்கு. அம்மா தந்த சூடு பண்ணிய நேற்று மீந்த அரிசி உப்புமா சாப்பிட்டதுவேறு  வயிற்றை குழைத்தது.  

“புனிதா..இங்க பாரு. கோயில்ல பூஜை பண்றதுல புண்ணியத்ததான்  சேத்து வெச்சிருக்கிறார் அப்பா. பணம் இல்ல. புரியுதா.  நீ பிளஸ் டூல 87 பெர்ஸன்ட் வாங்கிட்டேன்னு துள்ளாத. காலேஜிக்கு பணம்  ரெடி பண்ணியாகணும் 3 வாரத்தில. தெரியும்ல. அதுக்கே அப்பாவ பிராண்டிட்ருக்கேன்”.

“நகை செட்டியார்கிட்ட வச்சாச்சு, திருவாளூர்  மாமிகிட்ட கடன் கொஞ்சம், தீபாவளி வாங்கிற டிரஸ் கட்டு. பணம் இன்னும் பாதிகூட  ரெடியா இல்ல. என்ன பண்றதுனு தலைய பிச்சிட்ருக்கேன். சும்மா தெரியாம.  இருக்கறத போட்டுட்டு போடி” என்று அம்மா கத்த ஆரம்பித்தது வேதனையாக இருந்தது.

“யம்மா..ஆரம்பிக்காத. எப்படியாவது காலேஜ் பீஸோட ரெண்டு டிரஸ் எடுத்து கொடு. காலேஜ் முடிக்கிறேன், கேம்பஸ்ல செலக்ட் ஆறன். அப்புறம் பாரு”. என்று வெளியில் கிளம்பினாள் புனிதா.

“போடி உண்டக்கட்டி..” என்று விரக்தியில் சிரித்து பெருமூச்சுடன் அடுப்பங்கரையில் தேங்காய் துருவ ஆரம்பித்தாள் புனிதா அம்மா.

புனிதா வாயிற் நிலையில் குனிந்து திண்ணை தாண்டும் போது இடது பக்கம் பார்த்தாள். பாட்டி சாய்ந்து உட்கார்ந்து இருப்பதாக தோன்றியது. பாட்டி அவளை  என்றுமே  பேர் சொல்லி அழைப்பதில்லை. பேத்தி பிறந்திருக்கிறாள் என்று சொன்னவுடன் அவள் சொன்னது வீணா வாத விதூஷனி வந்து விட்டாள் என்றாம்.  அம்மா அந்த பேர் பெரிதாக இருப்பதாக சொல்லி பின்னர் புனிதா என்று தேர்வாயிற்றாம். இருந்தாலும் பாட்டி புனிதாவை ‘வெல்ல குண்டான்’ என்று அழைப்பாள். யாருடனாவது பேசும்போது வருடமோ மாதமோ பற்றி பேச்சு வரும்போது விதுஷினி பொறந்த வருஷம்  என்றோ, காது குத்த னப்ப என்றோ, ருதுவான அன்றோ, 5 வது படிக்கிறப்ப என்று அவளை வைத்து  சொல்வது வழக்கம். 3 வருடங்களுக்கு முன்பு பள்ளிக்கூடம் கிளம்பும்போது ஒரு கார்த்திகை சோமவாரத்தில் பாட்டி புனிதாவை கூப்பிட்டு அணைத்துக்கொண்டு 2 ரூபாய் கையில் கொடுத்து கன்னத்தில் முத்தமிட்டு ஆசிர்வதித்தாள். எப்பொழுதும் முத்தமோ தலையை கோதியோ   அனுப்புவது  வழக்கம். ஆனா அன்று பணம் ஏன் கொடுத்தாள் என்றுதான் புரியவில்லை. பள்ளி முடிந்து வரும்போது தெருவே வீட்டிற்கு முன் நின்றது. அம்மா அழுதுகொண்டே சொன்னாள் “பாட்டி கிளம்பிட்டாடி”. புனிதாவுக்கு கொஞ்சம் நேரம் அழுகை வரவில்லை, அப்புறம் பீறிட்டு வந்தது. 2 நாள் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள்.

புனிதா பாட்டியிடம் கேட்காத கேள்விகள் இல்லை. “ஏம்பாட்டி நம்மகிட்ட பணம் இல்லை, மழை ஏன் பேயுது, செம்பருத்தி சேப்பா இருக்கு, நந்தியாவட்டை ஏன் வெள்ளையா இருக்கு” இது மாதிரி ஆயிரம் கேள்விகள் புனிதாவுக்கு தோன்றியிருக்கிறது.  அம்மாவிடம் என்ன கேள்வி கேட்டாலும் அவள் சொல்லுவது “பாட்டிகிட்ட கேள்டி”. பாட்டி எப்பொழுதும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லுவாள். ஒரு நாள் புனிதா ‘ஏன் பாட்டி நம்மகிட்ட பணம் இல்ல. நாம்தான் டெய்லி ப்ரகதீஸ்வரரை கும்பிடுறோமே’ என்று கேட்டாள். பாட்டி சிரித்துக்கொண்டே  “பண இருந்தவங்க புண்ணியம் செயலேனா பணம் இல்லாதவங்காள பிறந்து பண்ண பாவத்தை தீக்கணும்” என்றாள். “அப்புறம் என் சாமி கும்பிடனும்” என்று கேட்டாள் புனிதா.

பாட்டி பாடினாள், “அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்”

தேவாரம் என்று தெரிந்தது. ஆனா எதற்கு என்பது தெரியவில்லை. ஆனால் பாட்டி பாடுவது பிடித்து இருந்தது. பாட்டி ஏதோ சொல்ல வர, எழுந்து விளையாட ஓடி போனது நியாபகம் வந்தது.

புனிதா நினைவிலிருந்து மீண்டு பர்ஸை அவரசமாக திறந்து பார்த்தாள். சின்ன கவர் – பிள்ளையாருடன் பாட்டி  கொடுத்த 2 ரூபாய். மனதிற்கு இதமாக இருந்தது. திண்ணை முடிந்து தாழ்வாரம் வந்து செருப்பை போட்டுகொண்டு ஒர திண்ணை தாண்டி மூங்கில் தட்டியை தள்ளி கீழே இறங்கினாள். ஒர திண்ணையில் ஆட்டு குட்டியோ, நாயோ எப்பொழுதும் படுத்திருக்கும். ‘தொரத்தாத’ என்பாள் அம்மா. இறங்கி இடது புறம்  கோயிலை பார்த்து வணங்கி தெருவில் நடக்க ஆரம்பித்தாள்.


“இங்க பாருங்க கே.ஆர். சார். எனக்கு மேல அதுக்கு மேலன்னு எல்லாருக்கும்  பெர்ஸன்ட் குடுக்கணும். பார்கைனே கிடையாது. பழைய ஆளுன்னு விளக்கிட்ருக்கேன். பாத்துக்கிடுங்க” என்று குரலை உயர்த்தினார் ஈ.ஈ. அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாவது தெரிந்தது. இந்த அலுவலகம் வந்து 2 மாதம்தான் ஆகிறது. வேலைக்கு சேர்ந்த புதிதில் யாரிடமும் கை நீட்டியதில்லை. அதன் பிறகு சில வருடங்கள் கொடுத்ததை வாங்கிக் கொள்வார்.

ஆறு மாதங்கள் முன்பு ஜெகனின் புதுமனை புகுவிழா சென்று வந்த பிறகு எல்லாம் மாறி போனது.  ஜெகன், அவருக்குப்பின் வேலைக்கு சேர்ந்தவன். திறமை குறைவு, யாரையாவது வைத்து வேலை வாங்குவான். எந்த வேலைக்கும், கையெழுத்துக்கும் வாங்க வேண்டியதை வாங்குவான் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது. எல்லோருக்கும் கடன் வேறு கொடுத்திருந்தான். ஆகவே யாரும் அவனை பத்தி குறையோ புகாரோ சொல்வதில்லை.  ஜெகனின் வீடு பங்களா மாதிரி இருந்தது. 2 மாடிகள் சகல வசதிகள். க்ரிகபிரவேசம் போயிட்டு வந்ததிலிருந்து இ.இ மனைவி கத்தி கொண்டே இருந்தாள். “உங்க ஜூனியர் வீட்டோட பாத்ரூம் நம்ம ஹால் சைஸுற்கு இருக்கு. நீங்க இத்தனை வருஷம் என்னத்த கிழிச்சீங்க” என்று ஆரம்பித்து தினமும் ஒரு முறையாவது சொல்லி காண்பிப்பாள்.  காண்ட்ராக்டர் கே.ஆர். பேச ஆரம்பித்ததும் ஈ.ஈ மீண்டார்.

“சார். ஏற்கனவே செலவு பண்ணிட்டேன். பழைய ஈ.ஈகிட்ட கேட்டு பாருங்க சார். வேல முடிச்சி பில் சாங்க்ஷன் பண்றோப்ப முதலிருந்து ஆரம்பிச்சா எப்படி? கொஞ்சம்னா சரி.  சொலயா ரௌண்டா கேட்டா எப்படி சார்?” என்று கே.ஆர் மெதுவாக சொன்னார். நேரம் சரியில்லைன்னு அவரது மனைவி லட்சுமி புலம்பியது வந்து போனது. வீட்டிற்கு சென்று அவளை அழைத்துக்கொண்டு சாயங்காலம் கோயிலுக்கு போக வேண்டும் என்று நினைத்து கொண்டார். பணம் வந்த பிறகு திருப்பதி சென்று காணிக்கை செலுத்துவதாகவும்  வேண்டி கொண்டார்.

காண்ட்ராக்ட்ல பணம் மட்டும் வேணும். வேல ஒண்ணும் சரியாய் பண்றதுல. கட்சிகாரங்க அழுத்தம் வேற. எனக்கு குடுக்கறதினா மட்டும் வலிக்குதோ என்று நினைத்து கொண்டு  ஈ.ஈ பேச ஆரம்பித்தார்;

“ஒன்னும் பண்ண முடியாது. கைய கடிக்காம இருக்கானு பாருங்க..மைண்டெனன்ஸ் இருக்கு. அடுத்த 3 ப்ராஜெக்ட் இருக்கு. அதில சரி பண்ணிக்கலாம்.. அத விட்டுட்டு வர்ற பிசினஸ கெடுத்துக்காதிங்க”

“சார். சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. இறங்கிட்டேன். வழி இல்ல. ஒரு வாரம் குடுங்க. ரெடி பண்றேன்.” என்று பெருமூச்சு விட்டு நகர்ந்தார் கே.ஆர்.


“உங்களுக்கு புரியற மாதிரி சொல்றம்மா. உங்க ஹஸ்பண்டுக்கு அட்டாக் வந்திருக்கு. ஐஸுயுல இப்ப இருக்கட்டும். மூணு நாள்ல அணிப்பிடறேன். மாத்திரைகொடுக்கிறேன். அவருகிட்டேயும் பேசுறேன். கவல படாதீங்க. ஆபரேஷன் எவ்ளோ சீக்கிறோம் பண்றோமோ அவ்ளோ நல்லது. போன தடவையே சொன்னேன். கேக்கல.” என்றார் கார்டியாலஜிஸ்ட் டாக்டர்.

ஈ.ஈ மனைவிக்கு படபடப்பாக இருந்தது. ஜெகன் வீடு கிரகப்ரவேசத்திற்கு சென்று வந்தது முதல்  அவரை மட்டம் தட்டியது வந்து போனது. கண்ணீர் அழைப்பு மணி அடித்தமாதிரி எட்டி பார்த்தது.

“டாக்டர்..பெரிய  யகுசிட்டிவ் ஆஃபீஸ்ர்னு பேரு. உடம்ப பாத்துக்க தெரியல. கண்ட இடத்தில சாப்பிட வேண்டியது. எப்போதும் டென்ஷனாவே இருக்கறது. எரிஞ்சி உள்றது. நான் சொல்றத காதிலேயே வாங்கிறதில.  சண்டை போட்டா எதையாவது வாங்கி குடுக்க வேண்டியது. இனி விட போறதில்ல நீங்க எவ்ளோ சொன்னாலும் ரெடி பண்றேன் டாக்டர். நீங்க சொல்றத அப்படியே பாலோவ் பண்றோம்.” என்றவாறு கண் கலங்கினாள்  ஈ.ஈ மனைவி. பழைய சிந்தனைகள் பனைமர பொந்துயிலிருந்து வெளி வரும் கிளிகள் மாதிரி எட்டி பாத்து கத்தின. ஆரம்பித்தில் ஈ.ஈ அதிர்ந்து கூட பேசியதில்லை. இனிமையாகவே இருந்தார். திருமணம் முடித்த இரண்டு ஆண்டுகளில் இவளது ஆடம்பர ஆசைகள் அவரை கொஞ்சம் அசைத்து பார்த்தது. குழந்தைகள் இல்லாதது வேறு மனக்கசப்பை அதிகரித்தது. காலையில் அலுவலகம் கிளம்பும்போது ஒரு சண்டை, வீடு திரும்போது ஒரு சண்டை. ஈ.ஈ கொஞ்ச கொஞ்சமாக அவளுடன் பேசுவதை  குறைத்தார். அலுவலகத்தில் எரிந்துவிழ  ஆரம்பித்தார். அது முத்தத்தொடங்கி,   கூட இருந்தவர்கள் முறையிட, கடந்த ஆண்டு பணி மாற்றத்தில் இந்த பகுதி வந்தார்.

“சரி. சீக்கிரம் முடிவெடுக்கிறது நல்லது. ஆபீஸ்ல பேசி டேட் வாங்கிக்குங்க. பெமென்ட் பண்ணிட்டு  என்ன பாருங்க. தியேட்டர் பிளாக் பண்ணிட்றேன்” என்று சொல்லி அனுப்பிவிட்டு யோசிக்க ஆரம்பித்தார் டாக்டர். மனதில் ஹாஸ்பிடலுக்காக வாங்கிய  லோன் வந்து நின்றது. மாசத்திற்கு 10-12 ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று சொல்லிக்கொண்டார்.


“ஒரு ப்ளோர் எக்ஸ்ட்ரா கட்டிருக்கீங்க. சுத்தி டீவியேஷன். ஆபீஸ்ல என்கிட்ட கேக்கறாங்க. கவுன்சிலரா இருக்கறதால எல்லாத்திலேயும் நாமளே இறங்க வேண்டிருக்கு” கொஞ்சம் நக்கலோடதான் சொன்னார் கவுன்சிலர்.

“அதுக்காக இவ்ளோவா கேப்பீங்க சார்? நானே தள்ளி வந்துதான் ஹாஸ்பிடல் கட்டிருக்கேன். அதுக்கே இப்படியா?” என்றார் கார்டியாலஜி டாக்டர். சில நொடிகள் நினைவில் கடந்த சில ஆண்டுகள் வந்தது. அவரது காதல்  மனைவி பிறந்தவூர்  என்பதும், அவளது 48 ஏக்கர் நிலமும் அவரை இந்த பகுதியில் இருக்க வைத்தது. இதுவே நகரத்தில் ஹாஸ்பிடல் கட்டியிருந்தால் இதை விட பல மடங்கு செலவு இருக்கும் என்பதை நினைத்தார். நிலம் நெடுஞ்சாலையில் இருந்ததால், ஒரு சிறிய மருத்துவமனை கட்டி,  அருகில் உள்ள பெரிய டாக்டர்களை விசிட்டிங் கன்சல்டண்ட்களாக வர வைத்தார். இரண்டே ஆண்டுகளில் வருமானம் பெறுக பெறுக இந்த பகுதியிலையே மருத்துவ நகரம் அமைக்க வேண்டும் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வலுக்கத் தொடங்கியது.

“சார் இதெல்லாம் கோயில் இடம். உங்களுக்கு எப்படி வந்ததுனு எனக்கு தெரியும். அதெல்லாம் நான் எதாவது சொன்னானா?. என்ன உங்களுக்கு நல்லா தெரியும்ல டாக்டர். நான் மத்த ஆளு மாதிரி ஓவரா பண்றதுல. பாத்து பண்ணுங்க. கட்சி, ஆபீஸ்னு  செலவு இருக்கு டாக்டர். மத்த பிசினஸ் மாதிரியில இல்ல உங்கோளடது. ஆஸ்பத்திரி கட்டறீங்க. யோசீக்காதீங்க. ரெடி பண்ணுங்க. இன்னும் ஒரு வாரத்தில, சரியா?. பேப்பர் வீடு தேடி வரும்”. என்று சொல்லிவிட்டு கிளம்பினார் கவுன்சிலர்.


“சாமி, எதோ நேரம் சரியில்லைன்னு வீட்ல சொன்னிச்சேன்னு வந்தேன். என்ன பண்ணுனும்னு சொல்லுங்க.” என்று கோயில் குருக்களை பார்த்து கேட்டார் காண்ட்ராக்டர் கே.ஆர்.

அந்த கோயில் நெடுஞ்சாலையில் இருந்து ½ மைல் நடக்கும் தூரத்தில் இருந்தது. நால்வர் பாடியது. நான்கு கோபுரங்கள். கீழ்கோபுரம் ராஜ கோபுரம், சன்னதி தெரு. இரு பக்கம் மரங்கள் தோட்டம் என்று அழகாக இருக்கும். கோயில் திறந்திருந்தால் வடக்குகோபுரம் நுழைந்து மேலகோபுரம் வழியாக மக்கள் நடந்து செல்வது வழக்கம். இல்லையென்றால் கோயிலை சுற்றி செல்ல வேண்டும். கையில் செருப்புடன் மக்கள் போவது சர்வ சாதாரணமாக இருந்தது. தென் கோபுரம் உள்ளூர் சாலையில் இருந்ததால், சாலை சிறியதாக இருந்ததால் கோயில் நிர்வாகம் அதனை திறப்பதே இல்லை. முடியே இருந்தது.

கோயில் ராஜகோபுரம் நுழைந்த இடது புறத்தில் அலுவலகம். நேரே பிள்ளையார், பலி பீடம், கொடி மரம், நந்தி, இன்னொரு கோபுரம் நுழைந்தால் ஆஸ்தான மண்டபம். உள்ளே நுழைந்த இடது புறம் திரும்பினாள் சாமி சன்னதி. கற்றளி கர்ப்பகிரகம். வெயில் நேரத்திலும் குளிமையாக இருக்கும். ஆனால் இருட்டு பரவி இருக்கும். ஒற்றை டூப்லைட் அதனை அளித்தவர் பேருடன் பாதி மறைக்க  எரியும். நந்தியிலிருந்து பரிவார தெய்வங்கள் வழி விட்டு இருபுறமும் இரும்பு தடுப்புகள். பிரதோஷம், சிவராத்திரி, அய்யப்ப விரத நாட்களில் மட்டுமே கூட்டம் வழியும். மற்ற நேரங்களில் கூட்டம் சொற்பம்தான். குருக்கள் காலை ஐந்தரை மணிக்கு நடை திறந்து சாமிக்கும், பிள்ளையார், அம்பாள் அபிஷேகம் முடிக்கும்போது ஏழரை ஆகும். கூட உதவிக்கு மெய்யப்பன் வருவான். அபிஷேக முடிந்து நெய்வேத்தியம் ஆனபிறகு,  கற்பக்கிர வெளியே வலதுபுற கத்தவே அருகே  சிறிய முக்காலி போடு அமர்ந்துகொள்வார் குருக்கள். ஊரின் முக்கிய பிரமுகர்கள் வாரம் இருமுறை மும்முறை வருவது வழக்கம். கே.ஆர். அவர்களில் ஒருவர்.

குருக்கள் பரம்பரையாக  இக்கோயிலில் சிவாச்சாரியார்களாக இருப்பவர்கள். கோயில் கிரியைகளில் நன்கு அனுபவ ஞானம் பெற்றவர்கள். அவர்களில் பலர் யாழ்ப்பாணம் வேள்விகளிலும் சித்தாந்த தர்ககங்களிலும் பங்கு கொள்ள சென்று வந்தவர்கள். கோயிலும் நிர்வாகமும், மடங்களும், ஆர்வலர்களும், பொதுமக்களும் அந்த குடும்பத்திற்கு தேவையானவற்றை மரியாதையுடன் கடந்த தலைமுறை வரை செய்து வந்துள்ளனர். இவர் கோயில் பூஜைக்கு வந்தபொழுது எல்லாமே கெஞ்சி கேட்க வேண்டியிருந்தது. பொருளாதார அழுத்தம் காரணமாக, வேறு வழியே இல்லாமல், குருக்களும் பரிகார ஹோமங்கள்  சொல்ல ஆரம்பித்து செய்யவும் ஆரம்பித்தார். அதன் மூலமாக கணிசமான வருமானமும் வந்தது. அவரது சிந்தாந்த வினைக்கொள்கை பரிகாரத்திற்கு எதிராக எழும்போதெல்லாம் அதனை அடக்கி வந்தார். 

“உங்க ராசிக்கு இப்ப நேரம் சரியில்ல. ஒரு ஹோமம் பண்ணி வேண்டிக்கலாம் அபிஷேகம் பண்ணலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு விளக்கு ஏத்துங்க. எல்லாம் சரியாகும். உங்க பிரண்டு கவுன்சிலர் கூட ஜெயிக்கணும்னு வேண்டிட்டார். நடந்துச்சு. இப்போ, நாளன்னைக்கு ஹோமம் அப்புறம் மறுநாள் அபிஷேகம் சொல்லிருக்கார். நீங்களும் நம்பி பண்ணுங்க. எல்லாம் சரியாகும்.” என்றார் குருக்கள்.

“சரி நானும் பண்ணிட்றேன் சாமி. எப்போனு பாத்து வீட்ல சொல்லுங்க. பணம் கொடுத்தனுப்பறேன்” என்று ப்ரசாத்துடன் கிளம்பினார் கே.ஆர்.

பெருமூச்சுடன் குருக்கள் “புனிதாவின் கல்லூரிக்கு வேண்டிய பணம் வந்துவிடும்” என்று மனதில் சொல்லி கொண்டார்.


“என்ன பண்ற..புனிதா சாப்பிட்டாளா?” என்றவாறு வீட்டில் நுழைந்தார் குருக்கள்.

“வந்தாச்சா..புனிதா பிரண்டை பாத்திட்டு வரேன் போனா, இன்னும் வரல. பணம் விஷயம் நியாபகம் இருக்கா?” என்றாள் புனிதா அம்மா.

“இப்பகூட அபிஷேகம், ஹோமம்னு சொல்லிட்டுதான் வந்தேன். என்ன பண்றது. பக்தி தர பலனை விட பயம் தர பரிகாரம் ஜாஸ்தி ஆயிடிச்சு. இந்த வாரம் கிடைச்சுடும். சளி பிடிக்கற மாதிரி இருக்கு. கொஞ்சம் சுக்கு காபி கொடேன்”  என்கிறார் குருக்கள்.

“இன்னும் உங்க பொண்ணு வரல. நீங்க அவள்கிட்டே சொல்லக்கூடாதா. நான் சொன்னா காதில எர்ரதே இல்ல. இவ்ளோ நேரம் ஆச்சு. சீக்ரம் வாடினு சொன்னா கோவம் வருது மாட்டுக்கு.

ரோடு வேற மோசமா இருக்கு. ஒரு மழையில ரோடு போட்டதிற்கான அடையாளமே இல்ல. காண்ட்ராக்டர் பணம் அடிச்சிட்டானு ஊருக்கே தெரியுது. என்ன பண்றது.

புதுசா வந்த கவுன்சிலர் ஆரம்பித்த பார் தொந்தரவு வேறு. பார் பஸ் ஸ்டாப் பக்கத்திலதான் வைக்கணுமா. எல்லாம் நாம வாங்கிட்டு வந்த வரம்”

என்று புலம்பியவாறு சுக்கு மல்லி பொடியை கொதிக்க வைத்தாள் புனிதா அம்மா.

புலம்பலை கேட்ட குருக்கள் துணுக்குற்றார். அவரது தாயார் திண்ணையிலிருந்து சிவப்பிரகாசம் பாடுவது நினைவுக்கு வந்தது.

உற்றதொழில்  நீனைவு உரையில்  இருவினையு முளவாம்
ஒன்றொன்றால்  அழியாதூ ஊண் ஒழியாதுன்னின்…

குருக்கள் அம்மா விளக்கம்  சொன்னால் – “நாம் செய்யும் தொழிலினால், நினைவினால், சொல்லினால் ஏற்படும் நல்வினைகள்  தீவினைகள்  நம்மை தொடரும். அதை  நாமே அனுபவிக்க வேண்டும்”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *