பாலும் பூனைக்கறியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 12,541 
 
 

காலை 6:30 மணிக்கு அவசர அவசரமாக அலுவலகத்திற்கு ஓட்டமும் நடையுமாக போகும் போது தான் சித்தார்த் அந்த காட்சியை பார்த்தான்.

ஒருவாரமே ஆன ஏழு குட்டிகளோடு ஏதாவது கிடைக்குமா சாப்பிட என ஒடுங்கிய வயிறோடு கண்ணில் பசி வெறியோடு அலைந்து கொண்டிருந்தது அந்த பெண் நாய்..

அவன் ஆபீஸ் இருக்கும் பார்க் தெருவில் அதிகபட்சம் பத்து வீடுகள் இருந்தாலே மிச்சம்.இஸ்திரி போடும் ஒரு வண்டி,, இரண்டு பருப்பு குடோன்கள்.. இரும்பு பைப் கம்பெனிகள் இரண்டு.. எப்போதும் பூட்டப்பட்டே இருக்கும் இன்னொரு ஸ்டீல் குடோன்..

தெருவின் முனையில் இருக்கும் பேப்பர் கிடங்கும்,, பிஸியோதெரபி கிளினிக்கிற்கு வருவேரை தவிர்த்து அந்த தெருவில் நீங்கள் எப்போது வந்தாலும் பார்க்கலாம் அரை டவுசர் அணிந்தபடி அழுக்கோடிருக்கும் இரும்பு கம்பெனி கூலிகளை.

வருடம் தவறாமல் அந்த பெண் நாய் டிசம்பர் இறுதியிலோ ஜனவரி தொடக்கத்திலோ வதவதவென குட்டியை போட்டு விடும். போன வருஷம் பாஸ்கர் சாரோடு மனைவி நாள் தவறாம எல்லா நாய்குட்டிக்கும் சாப்பாடு வைக்கறதை சித்தார்த் பார்த்திருக்கான். போன மாசம் பாஸ்கர் சாரோட பையனுக்கு குழந்தை பிறந்துட்டதாலே நாய்களுக்கு சோறு வைக்க இப்போ அந்த தெருவில் ஒரு நாயுமில்ல.

பூட்டியே இருக்கும்னு சொன்ன ஸ்டீல் குடோன் தான் “அம்மா” நாயோட வீடு.எப்பவாவது குடோனோட இரும்பு கேட் மேல சளி ஒழுகிட்டிருக்கற மூக்கோட மேல் சட்டையில்லாம ரெண்டு குழந்தைங்க எட்டி பார்க்கும் போது தான் குடோனுக்குள்ள யாரோ குடியிருக்காங்கன்னே பார்க்கறவங்களுக்கு தெரியும்.

வெளிறிப்போன முகம்.. மூங்கல் குச்சிக்கு ரவிக்கை போட்டமாதிரியான கைகள்,, அள்ளி சொருகிய அழுக்கு புடவையோட ஏதாவது மளிகை சாமான் வாங்க 35 வயசு மதிக்கதக்க ஒரு லேடி அப்பப்போ வெளியவரும்.

அந்த குழந்தைகளோட அம்மா.. தமிழ் சுத்தமாவே தெரியாத வடநாட்டு பெண்மணி.ஸ்கூல் போற வயசுல ரெண்டு பசங்க,, நடக்கற மாதிரி ஒரு குழந்தை,தவழ்ந்து போற வயசுல ஒண்ணுனு மொத்தம் நாலு குழந்தைங்க. இதுக்கும் நாயிக்கும் சம்மந்தம் இருக்கு அதாலதான் இவ்ளோ கதையும்.

நாய் பசியோட கவா கவானு அலைஞ்சிட்டு போனதை பார்த்த சித்தார்த் டிபன் சாப்பிட வெளிய வரும் போது,, மனசு கேக்காம ரெண்டு பால் பாக்கெட்,பிஸ்கெட்,,இட்லியை நல்லா பொடிமாதிரி பெசஞ்சு சட்னி கலந்த ஒரு பார்சல் நாய்க்கு வாங்கிட்டான்.

வழியிலயே வடநாட்டம்மா பசங்கள ஸ்கூலுக்கு போறதை பார்த்துட்டு,, அந்த நாய் குட்டிக்கும் அம்மா நாய்க்கும் கொடுங்கனு சொல்லி பால் பாக்கெட்டை கொடுக்கும் போது கரெக்டா இந்தியும் தமிழும் தெரிஞ்ச பக்கத்து குடோன் செக்யூரிட்டி வந்தாரு.

கொஞ்சம் கோபமா “அவ ஒரு பிச்சைக்காரிங்க அவகிட்ட போய் பால்பாக்கெட்டை தரீங்களே சார் ”

அவ நாய்க்கெல்லாம் தரமாட்டா சார் அதைனுசொல்லிட்டு

“ஹேய் தூத் குத்தாக்கு த்தேனா சமஜ்ஜேனு சொல்ல”

அதுக்கு அந்தம்மா ஏதோ சொல்ல

அவனுக்கு ஒரு எழவும் புரியல.

பால் பாக்கெட் வீட்டுக்குள்ள வைக்கபோன பையன் வந்துட வடநாட்டம்மா பசங்கள ஸ்கூல்ல விட ஏதோ முணு முணுத்தபடி கிளம்பிடுச்சு.

என்ன ஜி சொன்னாங்க ? அந்தம்மானு செக்யூரிட்டிகிட்ட கேட்டா..

“குடோன் ஓனர் கொடுக்கற சம்பளத்துல என் குழந்தைகளுக்கே சோறு போட முடியல”

நானெங்க நாயிக்கு சோறு வைக்கறது,அதுவும் அந்த “அம்மா”நாய் மீன் இல்லாம எதையும் திங்க மாட்டேங்குதுன்னு சொல்றா சார்.

பால்வாங்க கூட காசில்லாம ஒருவாரமா காலைல டீ கூட வீட்ல போடறதில்லேன்னு,சொல்லிட்டு. பச்சைக்குழந்தைக்கு கூட பால் குடுக்க வைக்கில்லாத வாழ்க்கை வாழ்ந்திட்டு இருக்கேன்னு சொல்றா.

நீங்க ஏதோ.. அவ குழந்தைகளுக்கு தான் பால் பாக்கெட் வாங்கி தந்தீங்கன்னு நினைச்சாளம்னு சொல்ல சுரீர்னு இருந்தது.

பதில் எதுவுமே சொல்லத்தோனல சித்தார்த்துக்கு.

குடும்பமே இந்த குடோன்ல தான் குடியிருக்காங்க. ஆனா அந்த குழந்தைகளோட அப்பனை பார்த்ததேயில்லை இதுவரை.

ஆனா அவனுக்காக பீடா கடையில அந்த பசங்க சிகரெட் வாங்கறதை அடிக்கடி பார்த்திருக்கான்.அவனுக்கு தேவையானதெல்லாம் உள்ளயே கிடைச்சுடுது போல.

இந்த தெருவுல வழக்கமா இருக்கும் 5 ஆண் நாய்களையும் ஒரு மாசமா பார்க்க முடியல.

மார்கழி,, தை சீசன் அதனால ஜோடி போட போய்டுச்சி போல எல்லா ஆம்பள நாயும்..

எந்த நாய்க்கும் பேரில்லாத காரணத்தாலயே சித்தார்த் ஆண் நாய், பெண் நாய்னு மட்டும்னு திரும்ப திரும்ப சொல்லிட்டிருக்கான். வழக்கமா மணி, குமார்னு தெரு நாயை கூப்பிடற மாதிரியான பேர் வெச்சு கூட யாரும் அந்த நாய்களை கூப்பிட்டு அவன் இந்த மூனு வருஷத்துல பார்த்ததுமில்ல.

ஒரு நிமிஷம் எதுவும் புரியாம ஃப்ரீஸாகி நின்னவன் சட்டுனு நினைவு திரும்பியவனாய்

சரி ஜி விடுங்கனு சொல்லிட்டு,, இட்லி பொட்டலத்தை பிரிச்சு அம்மா நாய்க்கு வெச்சா கொலை பசியில இருந்தாலும் சீண்டிக்கூட பார்க்கல.

எதிர் வீட்ல வாசல் கூட்டி பெருக்கிட்டிருந்த பாட்டி, “அந்த நாய் கறியில்லாம சாப்பிடாதுப்பான்னு”சொல்ற சத்தம் கேட்டு நிமிர்ந்தவன்.

இதுக்காக இட்லி சூடா இருக்கேன்னு சட்னி மட்டுமே ஊத்தி வாங்கி வந்தேம்மான்னு சொல்லிட்டு,

கைல இருந்த பிஸ்கெட்டை பாக்கெட்டை பிரிச்சு போட வாலை ஆட்டிக்கிட்டே லபக் லபக்னு அம்மா நாய் சாப்பிட்டது.

காலைல இருந்து பச்சைத்தண்ணி கூட குடிக்கல போல,, அய்யோ தொண்டை விக்கற மாதிரி இருக்கே பாவம்ஜி-னு செக்யூரிட்டி கிட்ட சொல்லி,, வேகமாக ஓடிப்போய் ரெண்டு பால் பாக்கெட்டும் வாங்கி வந்தான் சித்தார்த்.

அதுக்குள்ள ஏழு குட்டிகளும் வெளில வந்துடுச்சி.

கொஞ்சம் ஓட்டையா தட்டையா இருக்கும் பிளாஸ்டிக் ப்ளேட்டை செக்யூரிட்டியும் கழுவி ரெடியா வெச்சிருக்க.

பால் பாக்கெட்டை உடைச்சி சித்தார்த் பாலை அதுல ஊத்த ஓரமா நின்னு மண்ணுல கண்ணை வெச்சு சாப்பிட ஏதாவது கிடைக்குமான்னு தேடிட்டிருந்த குட்டிகளை பார்த்தபடி தொண்டையை மட்டும் நனைச்சுக்கற அளவு அம்மா நாய் பாலை குடிச்சது. என்ன நினைச்சதோ நாலு நக்குக்கு பிறகு குடிக்கவே இல்லை. என்னைடா இது வம்பா போச்சுனு அந்த பால் தட்டை குட்டிங்க பக்கமா கொண்டு போக “அம்மா ” நாயோட கண்ணுல சட்டுனு ஒரு மின்னல்.

மடிப்பாலை தவிர்த்து முதல் முறையா மாட்டுப்பாலை லேசா துளிர் நாக்கால சுவைச்சு ரசிச்சு குடிக்க தொடங்கின எல்லா குட்டியும்.

ஏதோ சாதிச்ச திருப்தி அம்மா நாயோட முகத்துல தெரிஞ்சது சித்தார்த்துக்கு.

ஆனாலும் இந்த பெரிய நாய் நல்லா சாப்பிட்டா தான குட்டிகளுக்கு பால் கொடுக்க முடியும்னு நினைக்கும்,, போதே காம்பை கவ்வி பால் குடிக்க எக்கி எக்கி வந்தது குட்டியொன்னு..

வாய் வெச்சு சப்பினா ரத்தம் தான் வரும் தெரிஞ்சிடுச்சோ என்னமோ “அம்மா” நாய் குட்டியோட நாக்கு நுனி கூட மார்காம்புல பட்றகூடாதேங்கற பரிதவிப்புல குட்டிய விரட்டி விடாம சிணுங்கி சிணுங்கி ஒதுங்கி போய்டுச்சி சாமார்த்தியமா.

சரி இவ்வளோ நேரம் பேரில்லாமலே இருக்கற தாய் நாய்க்கு நாம ஏன் பேர் வெக்க கூடாது. அடிக்கடி “அம்மா நாய்” அம்மா நாய்னு சொல்லிட்டதால அதுக்கு “அம்மானே” பெயர் சூட்டிடலாமா !? ஒரு ரூபாய்க்கு இட்லி தரவங்களா மட்டும்தான் அப்படி கூப்பிடனுமா என்ன..!

பசியாத்துற எல்லோருமே இங்க அம்மா தான!

அடுத்த நாள் காலைல கையோட வாங்கி வந்த பிஸ்கெட்டை போடலாம்னு சித்தார்த் அம்மாவை துழாவும் போது,, கேட் ஓரமா பார்த்தவனுக்கு பகீர்னு இருந்தது.

அந்த ஏழு நாய் குட்டிகளும் செத்துகிடந்த ஒரு பூனையோட சதையை பிக்க முடியாம கூர்மையில்லாத பல்லால பிச்சி பிச்சி தின்னுகிட்ட இருந்தது..

அவசரமா ஆபீஸ் போக வேண்டி இருந்ததால பிஸ்கெட் பாக்கெட்டை எதிர்த்த இரும்பு குடோன் செக்யூரிட்டிகிட்ட கொடுத்துட்டு போயிட்டான் சித்தார்த்.

இதே யோசனையா இருந்தாலும் அடுத்தடுத்த ஆபீஸ் வேலைல நாய்குட்டி பூனைக்கறி தின்னதை மறந்துட்டான்.

அடுத்த நாள் பார்க்கும் போது ரெண்டு பெருச்சாலி, ரெண்டு பூனையை வேக வேகமா நாய்குட்டிங்க சாப்பிட்டுகிட்டிருப்பதை பார்த்தான்.

இன்னைக்கு அந்த காட்சி பெரிய அதிர்ச்சியா படல.

ஆனாலும் செத்த பெருச்சாலியை அந்த ரோட்டோரம் அடிக்கடி பார்க்கும் அவனுக்கு பூனை எப்படி சாகுதுன்னு ரொம்ப குழப்பமாவே இருந்தது.

மதியமா டீ குடிக்கலாம்னு போகும் போது,, எதிர்ல வந்த வடநாட்டம்மா கண்ணுல அவ்ளோ குற்ற உணர்ச்சி,, கொஞ்சம் தூரமா நின்னுகிட்டு இருந்த செக்யூரிட்டியும் சித்தார்த்தை பார்த்து வணக்கம் வெச்சபடி,,,ஹேய் நில்லு நில்லுனு வடநாட்டம்மாவ பார்த்து சொல்லிட்டே வந்துட்டார்.

“க்யா குத்தேக்கூ தூத் தே தியாக்ஹா னு”

பால் நாயிக்கு கொடுத்தியா இல்லையான்னு அந்த லேடியா பார்த்து இந்தில கேக்க,,

அந்த லேடி அதுக்கு பதில வேகமா ஏதோ படபடன்னு சொல்ல.

திருதிருனு சித்தார்த் முழிச்சான் எதுவும் புரியாம.

ஏதோ கோபமா சொல்றான்னு மட்டும் தெரிஞ்சது.

இம்மானுவேல் வெர்க்கஸ்னு எழுதியிருக்கும் இரும்பு கதவை திறந்து வடநாட்டம்மா குடோன் வீட்டுக்குள்ள போக.

உயிருக்கு பயந்தபடி,, விட்டா செத்துருவோம்ங்கற பீதியில கருப்பு பூனையொன்னு வீதிக்கு ஓடிவர.கொலை வெறியோட அம்மா நாய் தொரத்திட்டு வந்தது.

அப்போ சரியா காலைல பத்து மணி. பார்க் தெருவுல இருந்த பருப்பு குடோனுக்கு மூட்டையை இறக்கிட்டுருந்த கூலிங்க.

இஸ்திரி வண்டிக்காரு அவரு மனைவி,குழந்தைங்க.சித்தார்த், செக்யூரிட்டினு மொத்தம் பதினஞ்சு பேர் என்ன நடக்க போகுதோன்னு பார்க்க.யாருக்கும் அந்த நாயைப் பார்த்து ஒரு சவுண்ட விடக்கூட தோணல. அதுக்கு காரணம் குற்ற உணர்ச்சியாவும் கூட இருக்கலாம்.

பத்தே நிமிஷ வேட்டை விரட்டி விரட்டி ஒருவழியா அடிச்சு கொன்னுடுச்சு பூனைய அம்மா நாய்.

பல்லால கவ்வி அந்த பூனையை உள்வாங்கிய வயிறு ஊதி ஊதி பெருசாக,,தஸ்புஸ்னு மூச்சு விட்ட படியே கொண்டு வந்து கேட் ஓரமா போட,,ஏழு நாய் குட்டிகளும் வேக வேகமா அதை சாப்பிட ஆரம்பிச்சது.

டெய்லி குழந்தைகளுக்காக காய்ச்சு வைக்கற பாலையெல்லாம் இந்த கருப்பு பூனை தான் குடிச்சுருமாம் சார்”

“நாய்க்குன்னு நீங்க வாங்கி தந்த பாலைக்கூட குடிச்சுடுச்சின்னு அந்த பிச்சைக்காரி பொய் சொல்றா சார்னு செக்யூரிட்டி சொல்ல”

எதுவும் பேசாமா நடந்தான் சித்தார்த்..

பத்தடி தூரம் நகர்ந்த போது எல்லார் வீட்டு பூனையையும் ரெண்டு நாள்ல கொன்னுடுச்சி இந்த நாய்னு

இஸ்திரி வண்டி காரர் அவரோட வொய்ப் கிட்ட சொன்னது தெளிவா அவன் காதுல விழுந்தது.

நாய்கள் கிட்ட நாலு முறை “கடி” வாங்கிய பயமோ என்னமோ இதுவரை நாய்கள் பக்கமா கூட அவன் போனதில்ல. அவனுக்கு அறவே பிடிக்காத ஜீவனும் நாய் மட்டுமே. ஆனா பாருங்க

கற்பாறைல ஊத்து தண்ணி அதிசயமா சுரக்கற மாதிரி,, ஏழு நாய்க்குட்டிகளையும் பார்த்து இரக்க உணர்வில் கரைந்த சித்தார்த் மனசுல. இப்போ ஏதோ ஒரு இனம் புரியாத பீதியும் பயமும். முதன் முதலா வேலையை விட்டு அடுத்து என்ன செய்றதுன்னே தெரியாம மூனு மாசம் சோறு திங்க வழியில்லாம சுத்தின ஞாபங்கள் வேற வந்து மிரட்ட தொடங்கிடுச்சி.

நாளைக்கு அந்த நாய்குட்டிங்க எதை சாப்பிடும்,பூனைக்கறிக்கு பாவம் என்ன செய்ய போகுதுன்னு தெரியலயேன்னு பைத்தியம் போல பார்க்கற எல்லார்கிட்டயும் சொல்லிட்டிருக்கான்.

நீங்களாவது சொல்றீங்களா பதில் தெரிஞ்சா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *