பழுப்பு நகரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 10,311 
 
 

1

சில பருவங்களில் மட்டுமே எங்கள் நகரத்தில் மழை பொழியும். மற்றபடி நகரம் காய்ந்துபோய், மனிதர்களின் மண்டைகளும் காய்ந்திருக்கும். சரியாக இங்கு நான் எங்கள் நகரம் என்பதை எப்படிப் பயன்படுத்திக்கொண்டேன் அல்லது சுவீகரித்துக் கொண்டேன் என்பது மிகுந்த குழப்பகரமான ஒன்று. வங்கக் கடற்கரையில் நடந்து கடல் நகரம் ஒன்றை அடைந்துவிடுவது அல்லது வறண்ட காடுகளில் புகுந்து செழிப்பான பாலைமரக் காடுகளுக்குள் புகுவதைப்போன்ற முட்டாள்தனமான யோசனை என்னிடம் இருக்கிறது. நகரத்துக்கூடாய்க் கடந்துபோய் வேறொரு நகரத்தை அடைந்துவிடுதல்தான் என் முழுமையான திட்டம்.

2

சந்தடியான அந்த நகருக்குள் நுழைந்தபோது என்னைப் பற்றிய எந்த ரகசியத்தையும் கசிய விட்டுவிடுவதில்லையென ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். நகரில் வசிப்பதற்கான தயாரிப்புகள் எதுவும் என்னிடத்தில் இல்லை. ஒரு திருடனைப்போல் இந்த நகரினுள் நுழைந்திருந்தேன். நுழைந்த சில கணங்களில் பாதிரியொருவன் ‘இந்த நகரத்திற்கு நீ புதிதானவனாய் இருக்கிறாய், இந்த நகரம் உனக்குப் புதிய ஆசுவாசத்தைத் தரட்டும்; அவன் உன் ஜீவனாய் இருக்கிறான். அவன் ஜீவன் இந்த நகரத்தின் உயிர்ப்பாய் எழுகிறது. இந்த நகரம் உனக்குப் புத்துயிர்ப்பை ஜீவ ஆறாய்ச் சுரக்கட்டும்,’ என்று ஆசீர்வதித்தான். ஆசீர்வாதம்பெற்ற என்னிடம் எந்த முன் ஏற்பாடும் இல்லையென்றால் நம்பமுடிகிறதா? அந்த நகரத்தின் குளங்கள், பெயர்கள் சரியாய் நினைவிலில்லை,மூடுண்ட குளங்களின் மேல் அந்த நகரம் கம்பீரமான சாந்துக் கட்டடங்களோடு நிமிர்ந்திருந்தது.

பனிப்பொழுதுகளில் துளிர்க்கிற நீல இலைகளால் மூடுண்டு கிடந்தன வீதிகள். இருளடைந்திருந்தது ஒரு காலம். வெளிச்சம் பாய்ச்சப்படும்போது நகரம் முழித்துக்கொள்கிறது. ஏறத்தாழ எல்லாப் பொழுதுகளிலும் அது முழித்தே கிடந்தது. மின்னுகின்ற உடல்கள்;கருவிழிகளில் தெறிக்கிற வெளிச்சமுமாக அது ஓயாதிருந்தது. ஊறிப்போன அலரி மஞ்சள் ஒளியுடன் விளக்குகள் தூங்கின, துயரம் பொருந்திய சூரியன் ஒன்றும் அந்த நகரத்தில் தோன்றி மறைந்துகொண்டிருந்தது. அந்த நகரத்தின் திரைப்படங்கள்கூட பிழியப்பிழிய அதீதக் காதல் கதைகளையே உற்பத்தி செய்தன.

முதலில் நான் எனக்கான ஒரு வேலையைத் தேர்ந் தெடுக்க வேண்டிய அவசியத்தில் இருந்தேன். கையிலிருந்த சிறுதொகையும் செலவாகிக்கொண்டே இருந்தது. நான் இருக்கிற நிலைக்கு எனக்கு இரண்டு வேலைகளே பொருத்தமாய் இருக்கும். முதலாவதாக,வாயில் காவலன்; இரண்டாவது, விடுதிகளில் ஏவலாள் வேலை. வாயில்காப்போன்; நெஞ்சு நிமிர்த்த வாய்ப்பே இல்லை. நாளையே ஒடிந்து வீழ்பவனைப்போல இருந்தேன். ‘நான் காவலாளி’ என்பதை நம்ப எனக்கே அவகாசம் தேவைப்படுகிறபோது, காவல் எனக்குத் தோதுப்படாது. அதைவிட முக்கியம் காவல் காப்பது. கொஞ்சம் சிரமமான வேலைதான். ஆனால் விடுதிகளில் ஏவலாள்; இது சற்றுப் பரவாயில்லை. சொல்வதைச் செய்யப்போகிறேன்.

விடுதி முதலாளி உருண்டையாக இருந்தான், குண்டாக. தொந்தி அவனது நெஞ்சிலிருந்து வளர்ந்திருந்தது. கையாளைப்போல அவ்வளவு பெரிய உருவத்துக்குப் பக்கத்தில் ஒரு சிறுவன் அவன் கையில் டேப்ரிகார்டரும் இருந்தது – அது டேப்ரிகார்டர்தானா? பொதுவாக தொப்பையோடு இருப்பவர்கள் என்றால் கொஞ்சம் சோம்பலாளிகளாக இருப்பார்கள் என்ற அனுமானம் எனக்கு எப்போதுமே இருக்கும். ஒல்லியாக இருப்பவர்களும் அப்படித்தான் (நான் அப்படித்தான் இருந்தேன்). தன் வாயில் எதையோ குதப்பி அதை முகம் முழுக்க நிறைத்து வைத்திருப்பவனைப் போன்றதான முக அமைப்பு அவனுக்கு. என்னைப் பார்த்தவுடன் கண்களை இடுக்கினான். பின்திரும்பி சிறுவனைப் பார்த்தான்; அவன் தலையைக் குனிந்துகொண்டு, தன் கையிலிருந்த டேப்ரிகார்டரை நோண்டிக்கொண்டிருந்தான். சத்தியமாய் அவனுக்கு நான் ஒரு ஜந்துவைப்போல் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவன் இதற்கு முன்னம் இப்படியொரு உருவத்தைப் பார்த்திருக்கமாட்டான். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. நகரில் பார்த்தவர்களில் பாதி மனிதர்கள் ஒடிசலும் நொடிசலுமாகத்தான் இருந்தார்கள். அந்தப் பார்வை, மிகவும் அருவருப்பூட்டக்கூடியது. அவன் என்னைப் பார்த்தது தன் புருவத்தைத் தடவிப் பார்த்துக்கொண்டது என எல்லாமே நான் சிறுமைப்பட்டிருக்கிறேன் என்று உணர்த்துவதைப்போல இருந்தது; கீறல்விழுந்த தன் சிரிப்பால் அவமானத்தையும் அவன் எனக்குள் தோற்றுவித்தான். என் பார்வையை வேறு எங்கேயாவது திருப்ப அந்த நேரத்தில் எத்தனித்தேன். முகத்தை இறுக்கமாக்கிக்கொண்டான். தொந்தியைத் தளர்த்துவதுபோல் பெருமூச்சொன்றை விட்டெறிந்தான். தன் உடலைத் தளர்த்தி அந்த இருக்கையில் சாய்ந்துகொண்டான். கேட்டான், அவன் குரல் கடினமாகியிருந்தது. இல்லையென்றால் பயத்தில் எனக்கே அவ்வாறு தோன்றியிருக்க வேண்டும்.

‘‘நீ எந்த நகரத்திலிருந்து வருகிறாய்?’’- இதற்கான எந்தப் பதிலையும் நான் தயார் செய்திருக்கவில்லை.

‘‘ஏன் திருடனைப்போல் முழிமுழியென்று முழிக்கிறாய்?’’-அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘ஐயா நான் இந்த நகரத்திற்குள் திருடனைப்போல்தான் நுழைந்தேன்.’இதைச் சொல்வதற்கு எனக்குத் தெரிவுகள் கிடையாது. அவன் என்னைத் திருடனாக்கியதிலும் என் நிலை அவனுக்கு எந்த விதத்திலும் எவ்வாறான ஆபத்தையும் விளைவிக்கப்போவதில்லையெனத் தெரிந்திருந்தவன்போல் அவன்அசைவுகள் இருந்தன. என்னை முட்டாளாக்கி அவன் தன் மிகப்பெரிய அங்கதத் திறமையைச் சோதித்துப் பார்த்தான்.

‘‘ஹிஹிஹீஹ்ஹீஹீர்ர்ர்…’’ என்றபடி சிறுவனைப் பார்த்தான். அவனும் அந்த விடுதி முதலாளியைப் பார்த்து அசட்டுத்தனமாய்ச் சிரித்தான். ஆனால் அவன் கண்கள் சிரிக்கவில்லை. நான் பார்த்தேன்; அந்தச் சிறிய கண்கள் எனக்காக எதையோ சொல்ல எத்தனித்தன.

‘இது அங்கதமில்லை என் எசமானே! இது அங்கதமில்லை.’

3

நேரம்: 09:32:19

நான் விடுதியை அடைந்தபோது அதன் இரும்பு கிரில் வாசல் அரைவாசியாக மூடப்பட்டிருந்தது. தட்டுவதற்கு யோசிக்க வேண்டி இருக்கவில்லை. உருவத்துக்கும் ஆளுக்கும் பொருத்தமில்லாத மேல்சட்டையோடும் நொறுங்கிப்போன நெஞ்சையும் கொண்ட அந்தச் சிறிய விசுவாசமான பையன் ராவுத்தர் (அப்படித்தான் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்) கதவைத் திறந்து உள்ளே அழைத்துவிட்டுத் தலையைக் குனிந்து நின்றிருந்தான். ஏறத்தாழ அவன் இங்குவந்து சேர்ந்ததிலிருந்தே என்னை நேரத்துடன் வந்துசேருங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தான். அவன் எவ்விதக் கட்டுப்பாடுகளையும் என்னிடம் பிரயோகித்தது இல்லை. ஆனாலும் நான் எதையாவது கூறினால் அதை ஆமோதிப்பதுபோலவே நின்றுகொண்டிருப்பான். இப்படியான விடுதிக்கு இப்படி ஒரு ஏவலாள்; காவல்காரன். அது முடைநாற்றமுள்ள வேர்வை புழுங்கி நாற்றமெடுக்கிற விடுதி. மூன்று மணிநேரத் தேடலுக்குப் பிறகு அதைத்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

தடியன், அந்த இரண்டடுக்குச் சுண்ணாம்பு விடுதியின் முதலாளி. சந்தேகமான மஞ்சள் பொங்கும் கண்களைக் கொண்டவன். அரக்குக் கட்டையொன்றின்மேல் உடலைச் சாய்த்து அவன் அமர்ந்திருக்கும் நேரங்களில் அவனைத் தாண்ட முடியாது. நிச்சயமாய் முழுமையாக உரித்துப் பார்த்து என்னை அம்மணமாக அறைக்கு அனுப்பக்கூடியவனாய் அவன் இருந்தான். அதையும்விட அவனிடம் பல்வேறு தனித்திறமைகள் இருந்தன. ஒருவரின் சிறிய அசைவைக் கொண்டே, அவர் வெளியூரைச் சேர்ந்தவரா அல்லது யாரோ ஒருவருக்குப் பயந்துபோய் ஒடுங்கி இடம் தேடக்கூடியவரா என்பதை இலகுவாய் அறிந்துகொள்வான். அதைக்கொண்டே விடுதிக்கும் நீருக்குமாக மூன்று நாட்களுக்குரிய பணத்தை மிரட்டிப் பெற்றுக்கொண்டுவிட முடியும் அவனால். அவன் காவலதிகாரிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலைகளையும் செய்தான். இதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு முன்னமே, டல்கா தன் தற்காலிக வதிவுப் பத்திர அட்டையை அவனிடம் இழந்திருந்தான். உண்மையில் அந்தத் தடியனுக்கு ஐசி பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. சூம்பிப்போன டல்காவின் முகத்தைக் குண்டன் ஏகதேசமாகக் கண்டுபிடித்தான். சிலவேளைகளில் நானும் டல்காவின் அந்த ஐசியைப் பார்த்துக் குழப்பமடைந்திருக்கிறேன். ஆனாலும் அடையாள அட்டை போனதைப் பற்றி அவனிடம் குறையொன்றும் இல்லை. கடவுச் சீட்டு ஒன்றை அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்தான்; அவன் அந்த இருண்ட புத்தகத்தைப் பற்றிப்பேசும்போதெல்லாம் செப்படிவித்தைக்காரனைப்போல அவன் உடல் வளைய ஆரம்பித்திருக்கும். அப்போது அந்த இருண்ட பச்சைப் புத்தகம் தொலைந்து போயிருக்கவில்லை.

முடைநாற்றமுள்ள விடுதி கிட்டத்தட்ட 37 அறை களைக் கொண்டிருந்தது. என்னையும் சேர்த்து என்றென்றைக்குமான விருந்தினர்களாக பதினான்குபேர் தங்கியிருந்தோம். மற்றைய நேரங்களில் அங்கு பழமண்டி,காய்கறி ஏஜெண்டுகளும் விபச்சார முகவர்களும் பெரும்பாலும் தங்கிச் செல்கிறார்கள். இப்போது புதிதாக ஓர் ஏவலாளும் வந்து சேர்ந்திருக்கிறான். எனக்கும் கவர்ச்சிகரமான அந்த இளைஞன் டல்காவுக்கும் முதல் சந்திப்பு ஏற்பட்டது இப்படியான ஒரு அகால வேளையில்தான்.

டல்காவின் தாய் கிராமத்தின் மேட்டுச் சமவெளியில் இருந்தாள். டல்கா கடலைப் பார்க்கிறபோது மட்டும் அவன் உடல் ஒருமுறை தாழ்ந்து ஏறும். அப்போது அவன் கூறுவான் ‘எனது நிலம் மேட்டுச் சமவெளிதான். இடையர்கள் சமவெளிகளில்தான் வாழ்வார்கள்.’

‘நீ இதை ஒரு கனவுமாதிரித் திரும்பத்திரும்பச் சொல்கிறாய்’. இடைஞ்சலான என் குரல் அவனது கவனத்தைத் திசை திருப்புவதில்லை. லெசாவில் அவன் தாயும் தங்கையும் இருந்தார்கள். அவன் கூறுகிற இடங்கள், பெயர்கள், பழங்கள் என எதையுமே என் மண்டைக்குள் பத்திரப்படுத்த முடியாமல் 207வது இரவைக் கடந்த இரவில் நான் கூறினேன். ‘உன் நிலம் பெயர்கிறது… என் தலை கனத்துக்கொண்டிருக்கிறது. நீ லெசாவுக்குச் சுற்றுப் பயணம் செய்யலாம்தானே…’

சுற்றுப்பயணம், அவன் எதையும் என்னிடம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கவில்லை. தன் கைகளை உரஞ்சித் தேய்த்தான். வேறு எதுவும் என்னிடம் பேசத் தயாரில்லாதவனைப்போல் நீலம் ஒளிரும் கண்களுடன் தன் ஒடுங்கிய அறைக்குள் நுழைந்துகொண்டான். இது வழமையாகியிருந்தது. அந்தக் கவர்ச்சியான ஆனால் துடிப்பற்ற மனிதன் விடுதி அறைக்குள் ஒரு முதலையைப்போல் மறைந்திருக்க ஆரம்பித்தான்.

எங்கள் இருவருக்குமான முதல் சந்திப்பு நசநசப்பான பழுப்புக் காலையொன்றில் ஆரம்பித்தது. அவன் முதலில் பார்த்துச் சிரித்தபோது என் முன்னிருந்த பனிச் சுவர் உருக ஆரம்பித்தது. அவனிடமிருந்து எழும் கடுகு வாசனையும் அவனிடமிருக்கும் தாமரையின் ஒற்றை இதழும் டல்கா எனும் சந்திரக் கடவுளின் பெயரும் எனக்குப் புரிந்திராத அல்லது மிகுந்த கோபத்தையும் எண்ணிப் பார்க்கக்கூடாத ஒன்றைப் பற்றியும் விளக்கம் கேட்கவேண்டி நான் அமர்ந்திருந்தேன். அவன் கூறினான்: நீ புரிந்துகொள். இது கடுகின் வாசனை. நாங்கள் கால்களிலும் கைகளிலும் தலையிலும் பூசிக்கொள்வோம்.’

அந்தப் பதிலே எனக்குப் போதுமானதாய் இருந்தது. இருவரின் அறையில் கடுகின் வாசனை எழுந்தடங்கி நிரந்தரமாகத் தங்கிப் போயிருந்தது.

இரண்டொரு நாட்களில் எங்களுக்குள்ளிருந்த தொடர்பு விரிந்தது. பாரிய நில அதிர்வைப்போல் தட்டுக்கள், எங்கள் இருவரின் நிலத் தட்டுக்களுமே ஒன்றிணைந்திருந்தன. மலைகளின் இடையிலிருந்த அவனது மஞ்சள் பூத்திருந்த திபெத்திய நிலமும் எனது நிலத்தின் வேப்பங் கசப்பின் உமிழ்நீரைப் பற்றியும் இருவருமே தெரிந்துகொண்டிருந்தோம். எங்கள் படுக்கை ஆழ்ந்து எங்களை மூடிக்கொண்டது.

மெல்லிய இழையோடும் ஏறக்குறைய ஆசீர்வதிக்கப் பட்ட ஒரு பாடலை அப்போது அவன் ஒலிக்கவிட்டான். அந்த இசை, எங்கள் இருவரிடையேயும் ஆழ்ந்த இழைகளாகப் பற்றி ஏறியது, ஒரு குறிஞ்சிக் கொடிபோல.

மூன்று நாட்களுக்கு முன் சிறிய மூக்கையும் இடுங்கிய கண்களையும் கொண்ட ஒரு மனிதர் வந்திருந்தார். அவரை நானும் டல்காவும் மிக நேர்த்தியாக ஒரு சடங்கைப்போல அவதானிக்க ஆரம்பித்தோம். உண்மையில் எனக்கு அதில் எந்த விருப்பமும் இருக்கவில்லை. ஒரு சோம்பேறிப் பிள்ளையான நான் அவனுக்காக மட்டும் அந்த மனிதரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சானுக்கு அந்த மனிதரின் மூக்கு வியப்பை அளித்திருக்க வேண்டும். ‘அவன் எனது ஊரைச் சேர்ந்தவனாய் இருக்க வேண்டும்’ அவனே தொடர்ந்தான், ‘அவன் கைகளைக் கவனித்தாயா? அது லடாக் தோல் கையணி.’ சலிப்பான அந்த உரையாடலைத் தொடர அதற்குமேல் எனக்குப் பொறுமை இருக்கவில்லை. நான் எழுந்துகொண்டேன். ‘நீ முழுதாகப் பார்த்துவிட்டு… முடிந்தால் அவன் நீளத்தையும் கேட்டுக்கொண்டு வா.’

டல்கா எந்தப் பதிலுமின்றி என்னைப் பார்த்தான். அவன் என்னை ஆழமாக ஊடுருவ முயன்றான். நான் எழுந்து 33ஆம் அறையை நோக்கி நடந்தேன். அவன் மீண்டும் தன் கண்களைத் தாழ்த்தி ‘அப்படிக் கூறியிருக்கக் கூடாது.’அவனது சத்தம் என் காதைக் கடந்தபோது நான் அவனைத் திரும்பிப் பார்த்தேன். ஒரு பிச்சை யுவதியின் கண்களில் தெரியும் துளி கலங்கிய உறுத்தும் நீரைப்போல் இப்போது அவன் என் கண்களில் விழுந்திருந்தான்.

இந்தப் பகுதியில் அவனிடமிருந்து பிரிந்திருக்க ஆரம்பித்தேன் – அவனைக்குறித்த அச்சமும் பதற்றமும் எங்கள் அறைச்சுவர்களில் படிந்திருந்தன – அவனும் அதற்காகத்தான் முயன்றுகொண்டிருந்தான். மெல்லிய கிச்சுக்கிச்சுக்கெல்லாம் நான் முழித்துக்கொள்ள ஆரம்பித்தேன். எச்சங்களும் வீச்சமும் நிறைந்திருந்த அந்த அறை இருவருக்கும் சூடான கொதிக்கும் உலையைப்போல மாறிக்கிடந்தது. இரவுகளில் அவனிடமிருந்து தனி மூலையொன்றில் ஒடுங்க ஆரம்பித்தேன். ஈரம் ஊறிய நிலைக் கதவுகள் அதிர்ந்தன. நிலமொன்று அங்கு பிரிந்திருந்தது, இரண்டாக. ஒரு சிறிய வெடிப்பைப்போல;இருண்ட வாசலில் ஒடின் ரூடின் பறக்கும் குதிரைவீரன் பொறிக்கப்பட்ட பாக்ஸருடனும் கத்தரிக்கப்பட்ட உள்ளாடையொன்றோடும் ஒடிஸியஸின் ஆர்கோவைப்போல கண்கள் தீயும் நாயொன்றாக அவன் நின்றிருப்பான். அதிகப்படியான கடுகு வாசனையுள்ள மனிதன். உண்மையில் கடுகு வாசனை எழுகிற அல்லது கடுகை வெறுமையாக உண்கிற ஒருவனை முடிந்த அளவு தன்மொழியில் இணைக்கும் ஏதோவொன்றை உச்சரிக்க விரும்பிய ஒருவனை நான் வெறுத்தொதுக்கவும் அச்சத்துடன் அவனைச் சந்தேகிக்கவும் முயன்றேன்.

மேகம் கூட்டிக்கொண்டு வந்தும் இந்தப் புழுக்கமான இரவு எங்கள் இருவரையும் பிரித்திருந்தது. டல்கா தன் ஒப்பனைகளைக் குறைத்தே வெளியில் செல்கிறான். இரவுகளில் புழுதிப் பன்றியைப்போல் அவனது அறையில் புகுந்துகொள்கிறான். அவன் நுழைகிறபொழுதிலிருந்தே அந்த அறை அதிர்ந்து சிதறிவிடுவதாகக் கற்பனை செய்கிறேன். அவனை யாராவது அழைத்தால்கூட அவன் அவர்களைத் திருப்பி அழைப்பதில்லை. குடிதண்ணீருக்கு மட்டும் அழைக்கிறான். சுவாரசியமான தண்ணீர் இளைஞன் ஒருவன் எப்போதும் எங்கள் அறையைக் கடக்கையில் தாழிடாத எங்கள் கதவைத் திறந்து தன் பெருத்த வயிற்றையும் சிநேகமான புன்னகையையும் எனக்குத் தந்துவிட்டு நகர்ந்துபோகிறான்.

டல்காவிடம் மிகவும் நிறமிழந்த துணிகள் இருந்தன. பின்பொருநாள் அவன் கூறினான்: ‘நான் அந்த ஆடைகளோடுதான் முகாமிலிருந்து வெளியேறினேன்.’அப்போது அவன் கண்கள் மினுமினுத்தன. ஏறத்தாழ கவர்ச்சிகரமற்ற அந்தச் சிறிய இடது கண் இன்னும் சிறுத்து அசையும். நான் அதை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

பாரதூரமான ஓர் இரவுக்காக இருவருமே காத்திருக்கத் தொடங்கியிருந்தோம். எங்கள் கண்கள் வெளிச்சத் திலும் மறைந்துபோகாத ஒளிர்கிற இரு மிருகங்களின் கண்களைப்போல மின்னி மின்னி எரிந்தன. ஒருவரை யொருவர் மிகக் கூர்மையாக இலகுவில் பொறியிலிருந்து விலக அனுமதிக்காத வேட்டையர்களைப்போல் இருவருமே அவதானித்துக்கொண்டிருந்தோம்.

டல்கா தன் சிதறிக்கிடந்த ஆடைகளைச் சரிசெய்து கொண்டிருந்தான். வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்கிற கைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

4

பிரிட்டிஷ்காரர்கள் நகரத்தை விட்டுத் தற்காலிகமாக வெளியேறிய நாட்களில் அவர்களின் விசுவாசமிகு ஊழியனுக்கு, என் முதலாளியின் தாத்தனுக்கு, தாத்தனின் முதலாளியான வெள்ளைக்காரத் துரையொருத்தன் இந்த விடுதியை அளித்தான். இந்த நகரத்தை உருவாக்கியபோது வெள்ளைக்காரத் துரைமார்கள் வந்து தங்கி,உல்லாசமாகவும் தங்கள் விசுவாசமான குடிமக்களுக்குச் சேவை புரியவும் இந்த உண்டுறை விடுதியைக் கட்டினான். அந்தத் துரையோடு என் முதலாளியின் தாத்தன் முதுகை ஒடுக்கியபடி குட்டி முயலைப்போல் நின்றுகொண்ருக்கும் பழைய சேபியாநிறப் படத்தை என் முதலாளி வைத்திருக்கிறான். தன் அறையிலேயே அதை மாட்டி வைத்திருப்பான். அந்தப் படம் ஏதோ மண்ணுக்குள் தாட்டுவைத்து இப்போதுதான் வெளியே எடுத்து மாட்டியதைப்போலச் செல்லரித்து அப்பாவியாய் அறையில் தொங்கிக்கொண்டிருக்கும். மிகவும் அசட்டுத்தனமாகவோ பெருமையாகவோ தன் தாத்தன் சிரித்துக்கொண்டிருப்பதைக் காண்பித்து பல நேரங்களில் வசை பாடவும் சில நேரங்களில் தாத்தனின் அருமை பெருமைகளைப் பாடவும் செய்வான். வெள்ளைக்காரன் – படத்திலிருக்கிற அந்தத் துரை – தன் தாத்தனை, ‘என் விசுவாமிக்க தோழனுக்கு இந்த உண்டுறை விடுதியை அளிப்பதில் என் அரசும், எங்கள் அதிகாரிகளும் பெருமைகொள்கிறோம்,’ என்று சொல்லியே கொடுத்தானாம். ‘இந்த இருக்கையைப் பார்! யார் அளித்தது தெரியுமா?’ – யார் அளித்திருப்பார்கள் அந்தச் சோப்பிளாங்கித் துரைதான்’ – சேருக்கு வார்னிஷ் பூசுங்கள் பூசுங்கள் என்று தலைதலையாய் அடித்துக்கொள்கிறேன். நீங்கள் கேட்டபாடில்லை. அந்த ஒழிந்துபோவாள் வரவேயில்லையா? பாருங்கள்! இந்த மூட்டைப் பூச்சிகள் அதை அரித்துத் தொலைக்கின்றன. புரிந்துகொள்ளவே மாட்டீர்கள், மோட்டு ஊழியர்களே! இந்த மூட்டைப் பூச்சிகள் நீங்கள், உங்களை விட்டொழிக்கிறேனா இல்லையா பாருங்கள்?’ என்று கத்துவான். அவன் என்னை விரும்பியதில்லை.

5

டல்கா தன் குறைந்த பிராயத்திலேயே அந்தக் கொள்ளை முகாமை விட்டு வெளியேறுவதென முடிவு செய்தபோதே,அவன் தன் சுமைகளைப் புளித்தவிந்து வாசனையெழும் காட்டெருதுத் தோலால் குறுக்கும்நெடுக்குமாக ஒட்டுப்போடப்பட்ட முதுகுப்பையில் அடங்குமாப்போல் பொதிந்துகொண்டான். மூன்று நாட்களாகவே அந்த முதுகுப் பையைக் கீழே வைத்ததாய்த் தெரியவில்லை. அவன் அந்தப் பையுடனே அலைந்து, சரியாக மூன்றாம்

நாள் விடிகையில், இல்லை அதற்கு முன்னமே வெளியேறிப்போனான். சவால்களற்ற நகரமொன்றைக் கண்டுபிடிப்பதை அவன் மூளை லட்சியமாக வரித்திருந்தது.

6

வெள்ளைக்காரன் அவனது விசுவாசமிக்க தோழனான என் குண்டு முதலாளி எஸ்.போரியின் (அந்தச் சிறுவன் போலிருந்தானே அவன்தான் இந்தப் பேரை முதலாளிக்குச் சூட்டினான்) தாத்தனுக்கு விசுவாசத்தின் பேரால் கொடுத்த அந்த உண்டுறை விடுதியின் கூலியான நான் ஜன்னலில் தலையை வைத்தபடி நின்றிருந்தேன். சன்னல் கண்ணாடிகள் அவ்வளவு ஊத்தையாகக் கறைபடிந்து கிடக்கின்றன. என் எசமானன், ‘இவற்றைச் சுத்தப்படுத்து;இல்லையென்றால் உன்னைத் தொலைத்தொழித்துவிட்டு புதிய ஆளை வேலைக்கமர்த்துகிறேனா இல்லையா பார்’என்று என்றைக்குக் கத்தப்போகிறானோ தெரியாது. உண்மையில் அவன் என்னைத் தொலைக்கப்போவதில்லை. என்னிடம் வேலை வாங்க அவன் அப்படி சொல்கிறான். அவன் உண்மையில் இரக்கமானவனாகவே நடந்துகொண்டான்; அவன் அவ்வளவு மோசமானவனுமில்லை. எனக்காக ஒருமுறை அந்தப் போலீஸ்காரனிடம் சண்டைகூடப் போட்டானே. இந்த நகரம் உண்மையில் எவ்வளவு நல்லதாய் இருக்கிறது. உயரத்திலிருந்து பார்க்கிறேன். இந்த நகரத்தின் மக்கள் அமைதியானவர்களாவே தோன்றுகிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைப் பேரம் பேசுகிறார்கள். அமைதியாக (அவர்களின் கடுஞ்சொற்கள் என் காதுகளில் விழுவதில்லை.) அல்லது அங்காடிகளில் உலாத்துகிறார்கள். எதையாவது வாங்கிக்கொள்கிறார்கள். அவர்கள் அமைதியானவர்களாகத்தான் இருக்கிறார்கள். என் முதலாளியும் அப்படித்தான் இருக்கிறான். ஆனால் இந்த நகரத்தில் கொக்குகளும் தாழைக்கோழிகளும் உலாவுவதில்லை. அவை வேறு இடங்களுக்கு நகர்ந்திருந்தன.

‘நீ இங்கே என்ன செய்கிறாய்?’ அந்தச் சிறுவன். சில நாட்களாக அவன் அந்த டேப்ரிகார்டரை எடுத்து வருவதில்லை.

‘நீ அழுதுகொண்டிருக்கவில்லை?’

‘இல்லை’

‘உன் வீட்டைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறாயா?’

‘இல்லை.’

‘அப்புறம்!’

‘முன்பொரு காலத்தில் இங்கே கொக்குகளும் ஊதா தாழைக்கோழிகளும் இருந்திருக்கலாம் இல்லையா?’

‘அதற்காகவா நீ அழுகிறாய்?’

நன்றி:காலச்சுவடு 217 ஜனவரி இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *