பரிணாமம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 8,693 
 
 

1800 களின் தொடக்கம், தோவாளை,கன்னியாகுமரி

சலசலத்து ஓடும் பழையாறு அங்கிருந்த நிசப்தத்தை தன் ஆயிரம் கரங்களால் தன்னுள்ளே இழுத்துக் கொண்டு சென்றது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த ஆற்றின் கொடை, பச்சை ஆடை உடுத்திய நிலப் பெண்ணால் பறைசாற்றப்பட்டுக் கொண்டிருந்தது.அறுவடைக் காலமாதலால் ஆங்காங்கே வயல்களில் அறுப்பெடுக்கும் பணிகள் நடைப் பெற்றுக் கொண்டிருந்தன.மேலாடை மறுக்கப்பட்ட, கீழ் சாதி பெண்கள் அங்கே வரிசையாய் நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்.மேலாடையில்லாமல் இப்படித் தாங்கள் நிற்க வேண்டிய நிலையை வெட்கி வெட்கியே இயல்பாகவே சற்றுத் தங்கள் உடலைக் குறுக்கி நின்றார்கள் அவர்கள்.அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒவ்வொருப் பெண்களின் முகத்திலும் கலவரம் அப்பட்டமாய்த் தெரிந்தது.நடக்கப் போகும் விபரீதத்தை எண்ணித் தங்களுக்குள் பயந்து ஒடுங்கிப் போய் நின்றிருந்தார்கள் அவர்கள்.

குறுக்கும் நெடுக்குமாய் விஸ்வனாத நம்பூதரி நடந்துக் கொண்டிருந்தார்.அவர் கண்களில் அத்தனை ஒரு குரோதம் இருந்தது.மனிதன் என்ற பெயரில் மறைந்து வாழும் சில வெறிப் பிடித்த மிருகங்களுள் தலையாய மிருகம் அவர்.வானத்தில் இருந்து ‘தொபுக்கடீர்’ எனத் தாங்கள் மட்டும் குதித்து வந்ததுப் போல் உணரும், தங்களைத் தாங்களே மேல் மக்கள் என்று கூறிக் கொள்ளும் மேல் சாதிப் பிரிவைச் சார்ந்தவராம் அவர்.அந்த ஆணவமும் செருக்கும் ஒரு மில்லி மீட்டர் கூட குறையவில்லை குரோதம் நிறைந்த அவர்(வயது ஐம்பதுக்கும் மேல் என்பதால் மரியாதைத் தர வேண்டிய நிர்பந்தம்) கண்களில்.இது யார் கொடுத்த அதிகாரம் என்பது இது நாள் வரைப் புரிபடாத ஒரு புதிர்.சக மனிதனை ஒரு விலங்குக்கும் கீழாய் நடத்துவதும்,அவனை அடிமையாய்த் தங்கள் காலுக்குக் கீழே போட்டு அமிழ்த்துவதும்,இயற்கையின் பாராபட்சமற்ற கொடையான நீர்,நிலம் போன்ற அடிப்படைத் தேவைகளை அவர்களுக்கு மறுக்கவும் செய்யும் தார்மீக உரிமையை அவர்களுக்குக் கொடுத்த்தவர்கள் யார் என்று சத்தியமாய்த் தெரியவில்லை.இதுப் போன்ற எந்த ஒரு அடிப்படைக் கேள்விக்குமான விடையை தங்கள் முன்னோர்களைப் போலவே தன் ஆறாம் அறிவைப் பயன்படுத்தாத விஸ்வனாதர் தன் பணி ஆளைப் பார்த்துக் கேட்டார்.

“என்ன எல்லாம் சரியா இருக்கா?”

“ஒன்னு(!) குறையுதுங்க”

“நான் சொல்லல.இதுங்களாம் ஏமாத்தற கூட்டமினிட்டு.நோக்குடா,அது எவனு இப்ப எனக்குத் தெரிஞ்சாகனும்.போய் அவளை இழுத்துட்டு வா.போ”

அந்த வேலை ஆள் குறைந்ததாய் சொன்ன அந்த ஒன்று யாதெனில், அவர்கள் வயலுக்கு கூலிக்காய் வரும் பெண்களில் ஒருத்தி.வேலைக்கு வரும் ஆட்களில் ஒருத்தி குறையவும்தான் அவருக்கு அத்தனை ஒரு ஆத்திரம்.சற்று நேரத்திற்கெல்லாம் நிறைமாதமாய் வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்த ஒரு பெண்ணை தர தரவென இழுத்துக் கொண்டு வந்தான் அந்த வேளையாள் தன் முதலாளி விசுவாசத்தைக் காட்டும் பொருட்டு.வந்து நின்றவள்,தன் முதலாளியின் காலில் விழுந்து அழத் துவங்கினாள்.

“மன்னிச்சுடுங்கய்யா, மேலுக்கு ரொம்பவும் முடியலை.ஈத்து வலி மாதிரி ஆரம்பிச்சுடுச்சு.அதான் வேலைக்கு வர முடியலைங்கய்யா.மன்னிச்சுடுங்கையா” தன் முதலாளியின் கோபத்தின் விளைவு எப்படி இருக்குமென அவளுக்குத் தெரியுமாதலால் அவர் பேசும் முன்னே அவளாக ஆரம்பித்துவிட்டாள்.

“என்னடீ கழுதை?.மேலுக்கு முடியலையா?கீழ் சாதிக்கார *** க்கெல்லாம் என்ன டீ நோவு நொடி வருது?எல்லாம் உடம்புத் திமிர் வேற என்ன?உனக்கு சரியான தண்டனைக் கொடுத்தாதான் இங்க நிக்கற மத்தவளுங்களுக்கெல்லாம் அது ஒரு பாடமா இருக்கும்.அப்பதான் அவளுங்களுக்கும் அது ஒரைக்கும்” கீழே விழுந்துக் கெஞ்சியவளை அவள் தாய்மையின் நிலையைக் கண்டுக் கூட இரக்கப்படாமல் ஒரு எட்டுத் தள்ளினார் அவர்.
விசுவாசமுள்ள அந்த வேலை ஆளை அழைத்து அவனிடம் சில கட்டளைகளை இட்டார்.சற்று நேரத்திற்கெல்லாம் அவருடை கட்டளை செயல்பாட்டுக்கு வர ஆரம்பித்திருந்தது.எருமைகளைப் பூட்டும் நுகத்தடியில் அவளைப் பூட்டி, காலியாய்க் கிடந்த வயலில் அவளை இழுக்க சொன்னார்கள்.பயந்துப் பின் வாங்கியவளுக்கு சாட்டையில் ஒரு அடிக் கிடைக்க,அந்த நுகத்தடியுடன் நடக்கத் துவங்கினாள் அவள்.பார்த்துக் கொண்டிருந்த மற்றப் பெண்களுக்கு உச்சுக் கொட்டவும், கண்ணீர் சிந்தவும் முடிந்ததே தவிர, ஒரு வார்த்தை எதிர்த்துக் கேட்கும் தைரியம் வரவில்லை.தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

அந்த வரிசையில் கடைசியாய் நின்றுக் கொண்டிருந்த மரிக்கொழுந்துக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை.ஓடி சென்று அந்த விஸ்வனாதனின் முகத்தில் தன் கால்களால் ஒரு உதை விட வேண்டும் போல் இருந்தது.இன்னும் எத்தனைக் கொடுமைகளைத் தான் வாய் மூடி அனுபவிப்பது?மனதிற்குள் ஒரு முடிவெடுத்தவளாய், அந்தப் பெண்கள் கூட்டத்தைக் கடந்து விஸ்வனாதரை நோக்கி சென்றாள்.

இப்படி ஒருத்தித் தன் முன்னே வந்து நிற்கவும், சற்று அதிசயித்தவர் பின் ஒரு ஏளனப் பார்வையை அவள் மீது வீசினார்.

“ஏங்க உங்களை மாதிரி ஆளுங்களுக்குதான் எது ஒண்ணும் வருமா?நாங்களாம் மனுசங்க இல்லையா?உங்க அம்மாவும் மசக்கையா இருந்து பத்து மாசம் தாங்கிதான புள்ள பெத்தாங்க எங்க அம்மா மாதிரி.எங்களை மாதிரியே உங்களுக்கும் ரெண்டு கண்ணு,ரெண்டு காது,ஒரு உசுரு தான?வேற எதுவும் வித்தியாசம் கொண்டு பொறக்கலையே?இப்படி கொஞ்சம் கூட நெஞ்சுல ஈரம் இல்லாத ஒரு புள்ளத்தாச்சிய கொடுமைப்படுத்துறீங்களே,நீங்க கும்படற சாமிக் கூட உங்களை மன்னிக்காது,தயவுசெஞ்சு அந்த புள்ளைய விட சொல்லுங்க” எங்கிருந்துதான் அந்த ஆவேசம் வந்ததோ அவளுக்கு.மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சொல்லி முடித்தாள்.கல்வி அறிவு என்னும் ஏட்டுக் கல்வி இல்லாத,அந்தக் கிராமத்தைத் தன் வாழ்நாளில் ஒரு தடவைக் கூடத் தாண்டியிராத, அந்த இருபது வயதுப் பெண் தன் சுய புத்தியில் அவளாய்ப் பேசினாள்.இத்தனை வருடமாய் அவள் பார்த்து,கேட்டு,அனுபவித்த சித்திரவதைகள் தந்த அனுபவங்களும்,ரணங்களும் அவளை அவ்வாறு பேச செய்தன.கூடி இருந்தப் பெண்கள் அவள் பேச்சைக் கேட்டு ஒரு பக்கம் பெருமையும்,மறுபக்கம் அதன் விளைவை நினைத்து பயமும் கொண்டு சற்று மிரண்டு நின்றிருந்தார்கள்.

விஸ்வனாதருக்கோ அவள் பேச்சு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தி இருந்தது.தன் இத்தனை வருட வாழ்க்கையில் அதை ஒரு பெரிய அவமானமாய்க் கருதினார்.போயும் போயும் இவள் தன்னைப் பார்த்துக் கேள்வி கேட்பதா?தன் அருகில் நின்று பேசுவதற்கு முதலில் இவளுக்குத் தகுதி இருக்கிறதா?அவளை அந்த இடத்திலேயே வெட்டிப் போட்டு விட வேண்டும் என்று அவர் கை பரபரத்தது.தன்னுடைய ஆத்திரத்தை எல்லாம் தன் வார்த்தைகளுக்குக் கொடுத்து அனுப்பினார்.

” ***** ***, யாரைப் பாத்து என்னப் பேசற?எவன் கொடுத்த தைரியம் டீ இது?உன்னை எல்லாம் அடக்கற விதத்துல அடக்கனும்” சொல்லிவிட்டு வேலை ஆளிடம் திரும்பி சொல்ல, சில நொடிகளில் அவளுக்கும் ஒரு நுகத்தடி தயாரானது.

“சாயந்தரம் வரை இந்தக் கழுதையை இழுக்க வைங்கடா” இவர் இங்கு உத்தரவுப் போட்டுக் கொண்டிருக்க, அங்கு நிறை மாதமாய் நுகத்தடியில் இழுத்துக் கொண்டிருந்தவள்,சரிந்துக் கீழே விழுந்திருந்தாள்.ஓடிப் போய்ப் பார்த்தப் பெண்கள், நாடியைத் தொட்டுப் பார்த்து ஓ வென அலறினார்கள்.அவர்கள் வைத்த ஒப்பாரி சத்தமும் பழையாற்றில் கலந்து யாருக்கும் தெரியாமல் கரைந்துப் போனது.அநியாயமாய் ஒரு அடிமையை இழந்துவிட்ட சோகத்தில் விஸ்வனாதரும் அந்த இடத்தில் இருந்து அகன்றார்.அவருடைய கவலை அவருக்கு.

மரிக்கொழுந்துக்குள் ஒரு நெருப்பு கனன்றுக் கொண்டிருந்தது.அவளால் அதை அவ்வளு சீக்கிரம் ஜீரணிக்க முடியவில்லை.

போதகர் சார்லஸ் மீட் அப்போதுதான் தன் இரவு ஜெபத்தை முடித்துக் கொண்டு தன் மனைவி செலஸ்டினாவோடு தேவாலையத்திலிருந்து வந்துக் கொண்டிருந்தார்.தோவாலையத்திலிருந்த மக்களை கிறிஸ்தவ மதத்தைத் தழுவ செய்வதில் முனைப்புடன் ஈடுப்பட்டிருந்தார்.ஏசு பிரானின் பெருமைகளையும், கருணையையும் கூறி மக்களை மூளை சலவை செய்துக் கொண்டிருந்தார்.அவர் எதிர்ப்பார்த்த எந்த ஒரு பலனும் கிடைக்க வில்லையெனினும் விடாது முயற்சி செய்துக் கொண்டிருந்தார்.இந்துவாகவோ முஸ்லிமாகவோ பிறந்து விட்டு, அந்த மதத்திற்குரிய பெயர்களில் தங்களை பொதித்துக் கொண்டு, அந்த நம்பிக்கைகளை தங்கள் உணர்வுகளில் அப்பிக் கொண்டு வாழ்ந்த மக்கள் புதியதாய் ஒன்றை ஏற்றுக் கொள்ள ரொம்பவே தயங்கினார்கள்.அந்தத் தயக்கத்தைக் களைந்துத் தங்கள் மதத்தைப் பரப்புவதில் சார்லஸும்,செலஸ்டினாவும் உறுதியாய் இருந்தார்கள்.

தங்களுக்குள் பேசியபடியே வந்துக் கொண்டிருந்தவர்கள்,தேவாலய வாசலில் இந்த அந்தி வேளையில் ஒரு பெண் வந்து நிற்கவும் மிகுந்த ஆச்சர்யத்திற்குள்ளாகி அவளை அணுகினார்கள்.ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழில் அவளிடம் பேச ஆரம்பித்தார்கள்.

“யாரைப் பாக்க வந்த?”

தன் குரலை செறுமிக் கொண்டு மரிக்கொழுந்து பேசத் துவங்கினாள்.

“உங்களைதான் பாக்க வந்தேன் அய்யா.எனக்கு ஒரு உதவி செய்வீங்களா?”

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள், ‘கேள்’ எனும்படி செய்கை செய்தார்கள்.

“அய்யா, அன்னிக்கு எங்க வூடுகளுக்கு வந்து உங்க மதத்துல சேந்துக்க சொன்னீங்கள்ல.உங்க ஆளுங்களா மாறிட்டா யாருக்கும் பயப்பட வேண்டாம்.அடிமையா இருக்க வேணாம்.அந்த சாமிக்கு மட்டும் பயப்பட்டா போதும்னீங்கள்ல.அது நெசந்தானுங்களா?”

“100 % ட்ரூ”

“அப்படீனா, நான் உங்க மதத்துல சேந்துக்கறேன்யா.எங்க மக்கள் படற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லீங்க.எங்களை மாடுக மாதிரி நடத்துறாங்க அய்யா.எங்களுக்கு இந்த வாழ்க்கை வேனாம்.இப்படி அடிமையா,பரிதாபமா எங்களை வச்சுருக்குற இந்த அமைப்போ,இந்த மதமோ எதுவுமே எங்களுக்கு வேனாம்.முதல்ல நாங்க மனுசங்களா இருக்க விரும்பறோம்.அதுக்கப்பறம் இந்துவாவோ,முஸ்லிமாவோ,கிறிஸ்துவனாவோ இருக்கோம்.மேல் தட்டுப் பெண்கள் போடற மாதிரி நாங்களும் ரவிக்கை போடனும்.மானத்தோட வாழனும்.நாங்களும் பொண்ணுங்கதான அய்யா?தயவுசெஞ்சு என்னை உங்க கூட்டத்துல சேத்துக்கங்க”

அந்த வெள்ளை மனம் சொன்ன, வருத்தமான உண்மையைப் புரிந்துக் கொண்டவ்ர்களாய் அவளை ஆதரவாய்ப் பார்த்தார்கள் அந்தத் தம்பதியர்.அவளது முடிவுக்குத் தாங்கள் உறுதுணையாய் இருப்போம் என உறுதிப் பூண்டார்கள்.

அடுத்த ஒரு நன்னாளில் மரிக்கொழுந்து மேரியானாள்.அவளது சாதிப் பெண்கள் தங்கள் வாழ்நாளில் இது வரை அணியாத மேலாடையை முதல் முதலாய் உடுத்தினாள்.’குப்பாயம்’ எனப்படும், செலஸ்டினா தந்த அந்த ரவிக்கையை அணிந்துக் கொண்டு பெருமிதமாய் நடக்கத் துவங்கினாள்.தன் வாழ்நாளில் அரியதொரு சாதனையை நிகழ்த்திய பெருமை அவள் முகத்தில்.அவளைச் சார்ந்தப் பெண்கள் எல்லாம் அவள் ரவிக்கையைத் தொட்டு தொட்டுப் பார்த்து ரசித்தார்கள்.தாங்களும் அதுப் போல் அணிந்துக் கொள்ள ஆசைப் பட்டார்கள்.அங்கு ஒரு சிறு ஆராவாரம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

செய்தி இந்நேரம் பட்டி தொட்டியெல்லாம் பரவாமல் இருந்திருக்குமா??விஷயம் மேலிடத்துக்குப் போனது.அவர்கள் காதும் மூக்கும் சிவந்தார்கள்.மேரியை பலவந்தமாய் இழுத்துவர ஆணைப் பிறப்பித்தார்கள்.இரண்டு மூன்று முரட்டுக் கரங்களின் பிடியில் மேரி ஆகிய மரிக்கொழுந்து அவர்கள் முன் நிறுத்தி வைக்கப்பட்டாள்.என்ன ஏதென்று விசாரணை இல்லை, என்ன தண்டனை என்று சொல்லப்படவும் இல்லை.

என்ன நடந்து விடப் போகிறது?அதையும்தான் பார்த்துவிடலாமே என்று மனதில் எழுந்த உறுதியால் நின்றிருந்தவளுக்கு சற்றும் ஏதிர்பாராமல் அது நிகழ்ந்துவிட்டது.ஒரு கண நேரத்தில்,அவள் சுதாரிப்பதற்குள் நடந்து முடிந்துவிட்டது.

பெண்மையின் உன்னதமான அவளுடைய இரண்டு தனங்களும் ஒரு மூடனின் அரிவாளால் வெட்டி சாய்க்கப்பட்டன.பெருகிய குருதி அவள் மாரை நனைத்து சென்றது.வலியில் துடி துடித்தவள் குருதிப் பெருக்கின் விளைவால் மயங்கி சரிந்தாள்.அங்கிருந்த கொடு நரிகள் கொக்கரித்தன.சரியான தண்டனைக் கொடுக்கப்பட்டதாய் மார் தட்டிக் கொண்டும்,தொடை தட்டிக் கொண்டும் சிரித்தன.எதை வாரிக் கொண்டு செல்வதற்காய் அந்த ஈனப் பிறவிகள் அவ்விதம் நடந்துக் கொள்கின்றன என்று அதனைப் படைத்த இறைவனும் அறியார்.

விஷயம் கேள்விப்பட்டு ஓடோடி வந்தார்கள் அந்த சாதிப் பெண்கள்.ஒவ்வொருத்திக்குள்ளும் சொல்ல முடியாத வெறி கிளம்பியது.அடக்க முடியாத ஆத்திரம்.அந்தப் பெண்ணை கொன்றுப் போட்டிருந்தால் கூட அவர்களுக்கு அத்தனை ஒரு கோபம் வந்திருக்காது.ஆனால் அந்தப் பாதகர்கள் செய்த அத்தகைய ஒரு இழிவான செயல் அவர்களுக்குள் பொதித்து வைத்திருந்த அனலை வெகுவாகவே கிளறிவிட்டிருந்தது.

ஒருவருக்குள்ளும் ஒரு தீர்மானம் உருவானாது.அது ஒரே தீர்மானமாய் இருந்தது.

அந்தக் கூட்டத்தில் பாதிப் பேர் கிறிஸ்தவ சமயத்தை தழுவி மரிக்கொழுந்து செய்ததுப் போலவே குப்பாயத்தை அணிந்துக் கொண்டார்கள்.இன்னும் சிலப் பேர் ஒரு படி மேலே போய் மதம் மாறாமலேயே அந்த செயலை செய்தார்கள்.ஒருவர் இருவர் என்றால் அடக்கலாம்,ஒரு கூட்டம் என்றால் என்ன செய்வது?அந்த உயர்குடி(!) மக்களுக்கு அது ஒரு பெரிய கடிமான காரியமாய்ப் போய்விட்டது.இவர்களின் போராட்ட தீ மெல்ல மெல்ல பரவி ஆங்கிலேய அரசு இவ்விஷயத்தில் தலை இடும்படி செய்தது.ஆயிரம் கொடுமைகள் நமக்கு இழைத்திருந்தாலும் நமக்கு இழைத்த ஒரு சில நன்மைகளில் அவர்கள் செய்த இந்த நன்மையும் ஒன்று.எந்த சாதி மக்களும் மேலாடை அணியலாம் என உத்தரவிட வைத்தார்கள் ஆங்கிலேயர்கள்.அவர்கள் உத்தரவை மீறி எதுவும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்த உயர்குடிகள் ஒரு பெரிய கோரிக்கையுடன் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்கள்.அதாகப்பட்டது அந்த இனப் பெண்கள் ரவிக்கை அணீந்துக் கொள்ளலாம் ஆனால் மேலாடை அணியக் கூடாது என்பது.ஏனெனில் அந்தப் பெண்களுக்கும் அவர்கள் குலப் பெண்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமாம்.அதற்குத்தான்.

தங்களுடைய முதல் வெற்றியாய் இதை நினைத்து ஆனந்தமாய் ரவிக்கை அணிந்து திரிந்தார்கள் அந்தப் பெண்கள்.தங்களின் மானம் காக்க போராடிய,அதற்கு முதல் விதை ஊன்றிய மரிக்கொழுந்தை மனதுக்குள் தெய்வமாய் வழிப்பட்டுக் கொண்டாடினார்கள்.இதுப் போன்ற சில தியகங்களுக்கு இடையில் கிடைத்த அந்த மிகப் பெரிய உரிமையை உயிராய்க் காத்தார்கள்.

அவர்களின் அந்த போராட்டத்தின் நீட்சி 1855ல் அடிமை முறையை ஒழிக்கும் அளவு வளர்ந்தது.

2012, சென்னை மெரீன கடற்கரை

நுரைத்து பொங்கும் அந்த கடலுக்கு இணையாய் ஆர்ப்பாட்டம் ஒன்று அங்கு நடந்துக் கொண்டிருந்தது.எங்குத் திரும்பினும் பெண்கள் கூட்டம்.வளர் இளம் பருவம் முதல் நடுத்தர வயது வரை வயது வித்தியாசமில்லாமல் அமர்ந்திருந்தார்கள் அந்த மாலை நேர கடற்கரையில்.எழுத்துக்கள் தாங்கிய பலகைகளை அவர்கள் கைகள் ஏந்திக் கொண்டிருந்தன.அவர்கள் வாய் பின் வரும் முழக்கங்களை செய்துக் கொண்டிருந்தன.

“போராடுவோம் போராடுவோம்!எங்கள் உரிமைக் காக்கப் போராடுவோம்.துப்பட்டா அணிவதும்,அணியாததும் தனி ஒருப் பெண்ணின் விருப்பம்.லோ நெக் அணிவதும்,லோ ஹிப் அணிவதும் எங்கள் தனிப்பட்ட உரிமை.இதுப் போன்ற பெண்களின் தனிப்பட்ட உரிமைகளைக் கூட தவறாய்ப் பேசும் மனிதர்களை எதிர்த்துப் போராடுவோம் போராடுவோம்…எங்கள் விருப்பப்படி உடை அணிவோம்..அதற்காய்ப் போராடுவோம்.”

கடலலையின் இரைச்சலையும் மிஞ்சியது அவர்கள் எழுப்பிய ஒலி.

– ஜனவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *