பச்சை மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 9, 2019
பார்வையிட்டோர்: 5,675 
 

ஒரு மரத்தைக் கடந்து போகும் போது உனக்குள்ளேயே ஹலோ சொல்லிக் கொள்ளத் தவறாதே. அதைக் கரிசனத்தோடு பார்க்காமல் போகாதே. இதில் செலவு ஏதுமில்லை. நீ மரத்தை சந்தோசப் படுத்தினால் மரம் உன்னை சந்தோசப்படுத்தும். மரத்தை வசப்படுத்துவது அவ்வளவு சுலபலமல்ல. மனிதர்கள் மிக மோசமாகத்தான் மரத்தை நடத்தி வந்திருக்கிறார்கள். அவற்றிற்கு மனிதனைக் கண்டாலே பயமாகப் போய்விட்டது. நீ நெருங்கினால் உலகத்திலேயே அபாயமான ஜந்து இவன் தான் என எண்ணுகிறது. ஒரு மரத்துப் பக்கம் போ. மரத்தோடு பேசு. மரத்தை தொட்டுப் பார். அணைத்துக் கொள். உன்னால் கேடு இல்லை என்பதை மரம் உணர்ந்து கொள்ளட்டும். தோழமை வளரும். நீ அருகே வருகையில் மரத்தின் பட்டையில் பிரமாதமான ஒரு ஜீவசக்தி ஓடுவதை தெரிவாய். நீ அதைத் தொடும்போது ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை அந்த மரம் உணர்வதைத் தெரிவாய். வெகு சீக்கிரம் நீ வருத்தப்படுகையில் எல்லாம் அந்த மரம் நோக்கி போக ஆரம்பித்து விடுவாய்.
-ஓஷோ (வெற்றியின் அபாயம்)

அந்த கடல் கிராமத்துக் குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் மணலை வாரித் தூற்றிக் கொண்டிருந்த போது சூரியன் மேற்கு வானில் மறைந்து கொண்டிருந்தான். கட்டுமரங்களில் மீன் பிடிக்கச் சென்றிருந்த கிராமவாசிகள் சிலரைக் காணவில்லை என கடல் கிராமமே பிதிர் கெட்டு கடலோரத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளில் ஒன்றுதான் முதலில் கரையில் வந்து ஒதுங்கிக் கிடந்த அந்தப் பொருளை முதலில் கண்டது. மணல் தூற்றும் விளையாட்டை நிறுத்தி விட்டு கூட விளையாடிக் கொண்டிருந்த சிறார்களையும் அழைத்துக் கொண்டு அந்தப் பொருளை நோக்கிச் சென்றது. அருகே சென்றபோது தான் அது பொருள் அல்ல என்பதை சிறார்கள் உணர்ந்தார்கள்.

“இது ஏதோ பச்சைப் பூச்சியாட்ட இருக்குடி” என்றது ஒன்று.

”இல்ல இது பச்சை விளக்கு மனுசன்.. அங்கங்க பச்சை பச்சையா மினுக்குது பாரு”

“உசுரு இருக்குதான்னு பாருடா”

“உசுரு இருக்கும்.. உடம்புக்குள்ள பச்சைத் தண்ணி ஓடுறது தெரியுது பாரு”

“ஏய், அதோட வாயைப் பாரு, மீன் வாய் மாதிரி மூடி மூடி திறக்குது.. அது கிட்ட பேசிப் பார்ப்பமா?”

“ஏய் பச்சை மனுஷா!”

“காது செவுடோ என்னுமோ?”

“ஏய் காதவே காணோம்டா”

“அதா தூரத்துல டேவிட் அண்ணனும் கூட ரெண்டு பேரும் போறாங்க பாரு. கூப்பிடு அவிங்களை. அவங்களுக்கு இது யாருன்னும், என்னான்னும் தெரிஞ்சிருக்கும். கடல்ல அவங்க முன்னமே பார்த்திருப்பாங்க இந்த மீனை”

அவர்கள் டேவிட் அண்ணனை கூவி அழைத்தார்கள்.

மூவரும் இவர்களைத் திரும்பிப் பார்த்து, என்ன? என சைகையில் கேட்டார்கள். இவர்களும் ‘இங்க வாங்கண்ணா!’ என்று கூவினார்கள்.

“இதுங்க அங்க என்னத்தை கண்டுதுக? இந்தக் கூப்பாடு போடுதுங்க?” என்று டேவிட் மற்ற இருவருடன் அந்த இடத்திற்கு வந்து கரையில் கிடந்த உடலைப் பார்த்தார்கள். அவர்களுக்கும் அது என்னவெனத் தெரியவில்லை. அவர்கள் முதலாக சிறார்களை அந்த இடத்தை விட்டு வீட்டுக்குச் செல்லுமாறு அனுப்ப முயற்சித்தார்கள்.

“கொழந்தைங்களா, இது கடல் பெசாசு..எந்திரிச்சா சின்னக் குழந்தைங்களை கடிச்சுத் தின்னுடும். ஓடுங்க வீட்டுக்கு” என்றார்கள். அப்படி அண்ணன் சொன்னதும் குழந்தைகள் மிரட்சியில் இடத்தைக் காலி செய்தார்கள் ஒரு சேர.

கிராமத்திற்குள் ஓடி வந்தவர்கள் கடல் வழியாக பச்சை நிறப் பிசாசு நீஞ்சிக் கொண்டு வந்து கரையொதுங்கி இருப்பதாக கூவிக் கூவிச் சொல்லி கிராமத்தின் சந்துகளில் ஓடினார்கள். சிறிது நேரத்தில் அந்த பச்சை நிற உருவத்தைச் சுற்றிலும் கணிசமாய் கூட்டம் கூடி விட்டது.

டேவிட்டுக்கு அந்த உடலைத் தொட்டுப் பார்க்க கூச்சமாய் இருந்தது. அதை நினைக்கையிலேயே உடல் கூசி நடுங்கியது. இருந்தாலும் சிறிது நேரம் உடலைச் சுற்றி வந்து பார்த்துவிட்டு அதன் கை கால்களை தொட்டுப் பார்த்து பிசின் மாதிரி வழுக்குவதாக எல்லோருக்கும் சொன்னான். சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் இருவர் மட்டும் தைரியம் பெற்று அந்த உடலைத் தொட்டுப் பார்த்து டேவிட் கூறியதை ஆமோதித்தார்கள். பச்சை மனிதனின் வாய் கூம்பு வடிவில் இருந்தது. அது சிறுமீன்களைப் போல திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு அனைவருக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டு மணலில் படுத்திருப்பதாய் தோணிற்று அவர்களுக்கு.

இந்தப் பச்சை மனுஷன் வானத்திலிருந்து நட்சத்திரம் வெடித்து அதிலிருந்து கீழே விழுந்தவனாக இருக்கலாமென்றான் ஒருவன். அவனே மீண்டும், ஒருவேளை கடல்கன்னி பெத்துப் போட்ட அரை குறை பிரசவமாகக் கூட இருக்கலாமென்றான். யாராய் இருந்தால் என்ன? கிராமத்திற்கு தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியது தான் என்றொருவன் கூற, ’அது தான் சரி இதோ வந்து விடுகிறோம் அதற்கான ஏற்பாடுகளோடு’ என்று இருவர் கிராமம் நோக்கிச் சென்றனர். அவர்கள் திரும்பி வருகையில் செத்துப் போன பெல்லா கிழவியின் கட்டிலோடு வந்தார்கள்.

பெல்லா கிழவியின் குடிசை கிராமத்தின் முகப்பிலேயே இருந்தது. கிழவிக்கு வாரிசுகள் என்று யாருமில்லை. கிழவியின் வீட்டுக்காரன் யோகேபு பல காலம் முன்பே கடல் நோய் கண்டு செத்துப் போயிருந்தான். குடிசையும் அவள் செத்த பிறகு வெறுமனே கிடந்தது. கிராமத்தார் பச்சை மனிதனை பெல்லா கிழவியின் குடிசையிலேயே தூக்கிப் போய்க் கிடத்தி விடுவதுதான் சரியான முடிவென தீர்மானித்தார்கள். கட்டிலை பச்சை மனிதனின் அருகில் வைத்து, முன்பு அவனைத் தொட்டுப் பார்த்தவர்களே கையில் மணலை தொட்டுக் கொண்டு தூக்கி கட்டிலில் கிடத்தினார்கள். நான்கு பேர் கட்டிலின் நான்கு கால்களையும் பிடித்து தூக்கிக் கொண்டு செல்ல மற்றவர்கள் அவர்கள் பின் சென்றார்கள். அது பச்சை மனிதனின் சவ ஊர்வலம் மாதிரிக் கூட பொறத்தே சென்ற பெண்களுக்குத் தெரிந்தது. இருந்தும் அப்படி அபசகுனமாய் நினைப்பதை ஓரங்கட்டினார்கள். பச்சை மனிதனைத் தவற விட்ட சோகத்தில் அலைகள் இறைச்சலோடு வந்து திரும்பிச் சென்று கொண்டிருந்தன.

பச்சை மனிதனைச் சுமந்தபடி கட்டில் பெல்லா கிழவியின் குடிசைக்குள் சென்று இறங்கியது. கட்டிலின் பின்னே குடிசைக்குள் நுழைந்தவர்கள் எல்லோருமே அதிசயத்தைக் கண்டவர்கள் போல திகைத்திருந்தார்கள். பச்சை மனிதனின் உடலில் இருந்து ஒளிக்கற்றைகள் கிளம்பி குடிசை முழுதும் வியாப்பித்திருந்தது. பச்சை மனிதனின் கூம்பு வாய் மட்டும் திறந்து திறந்து மூடிக் கொண்டிராமல் இருந்திருந்தால் செத்துப் போனவன் என்றே இந்த நேரம் புதைத்திருப்பார்கள். நேரம் ஆக ஆக பச்சை நிற ஒளி கூரையை விட்டு வெளியேயும் புகை மாதிரி வியாப்பித்தது. ‘அணையப் போற விளக்கு எப்பயும் பிரகாசமாய்த் தான் எரியும்’ என கிழவியின் அண்டை வீட்டுக்காரி சொன்னாள். அவளே, இன்றிரவு பச்சை மனிதன் செத்துப் போய்விடுவான், என்றாள். ‘பச்சை மனிதனுக்கு சாப்பிட கூலோ கஞ்சியோ கொடுங்கள்’ என்றாள் ஒருத்தி.

டேவிட் பச்சை மனிதனின் வாயைப் பிளந்து பிடித்து ஆற வைத்த கஞ்சியை புணலுக்குள் ஊற்றுவது போல ஊற்றினான். கஞ்சி அவன் வயிற்றுப் பகுதியில் நீர் மாதிரி ஓடி அடிவயிற்றில் நிற்பதைக் கண்ணாடியில் காண்பது போலக் கண்டார்கள். அடிவயிற்றில் தங்கியிருந்த கஞ்சி பின்பாக மேலேறி வருவதையும் கண்டார்கள். குடித்த கஞ்சி முழுவதையுமே கட்டிலைச் சுற்றிலும் பச்சை நிறத்தில் கக்கி வைத்தான். பின் அவன் கருவிழிகள் கூட்டத்தினரை ஒருமுறை பார்த்து விட்டு மூடிக் கொண்டன.

பச்சை மனிதன் களைப்படைந்து போய் தூங்கி விட்டான் என ஒருவன் கூற, கட்டிலில் அவனை அப்படியே விட்டு விட்டு அவர்கள் கிளம்பினார்கள். அன்றைய இரவு அவர்கள் தூங்க வெகு நேரம் ஆயிற்று. தூங்காமல் நடுஜாமம் வரை கிழவியின் வாசலில் படுத்திருந்த அவள் வளர்ப்பு நாயும் கால்களுக்குள் தலையை செருகி கண்களை மூடிக் கொண்டது. பச்சை நிற ஒளி கிராமம் முழுதுமே போர்வை போல் படர்வதைக் காண கிராமத்தில் ஒருவர் கூட விழித்திருக்கவில்லை.

விடிந்ததும் அனைவருமே கிழவியின் குடிசைக்கும் முன்புதான் சென்றார்கள். கட்டிலில் கிடந்த பச்சை மனிதனைக் காணவில்லை என்றதும் அவரவர் முகம் சோம்பிப் போய் அவனுக்காய் வருத்தப்பட்டார்கள். இரவில் நட்சத்திரம் கீழிறங்கி வந்து பச்சை மனிதனை தூக்கிச் சென்றிருக்கலாம் என்றான் ஒருவன். நம்மைத் தேடிவந்த அதிர்ஸ்டம் ஒன்றை இழந்து விட்டதாக அவர்கள் மனதில் நினைத்து வருத்தப்பட்டார்கள். இரவில் கடல்கன்னி தன் குழந்தையை வாரி எடுத்துப் போயிருக்கலாமெனவும் பேசினார்கள். கிழவியின் நாயையும் காணவில்லையே! என்றாள் அண்டை வீட்டுக்காரி. ஆனால் அவர்கள் அனைவருமே பின்னர் கடற்கரை மணலில் சூரிய ஒளி தன் மீது படுமாறு படுத்துக் கிடந்தவனை தொழிலுக்குப் புறப்பட்டுச் செல்கையில் கண்டார்கள். பச்சை மனிதனைச் சுற்றிலும் சிறுமீன்கள் பல துள்ளிக் கொண்டு கிடந்தன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அவன் மாத்திரை வில்லை விழுங்குவது போல விழுங்கிக் கொண்டு படுத்திருந்தான்.

மீண்டும் அவர்கள் கிழவியின் குடிசையிலிருந்து கட்டிலைத் தூக்கி வந்து அவனை அதில் கிடத்தித் தூக்கிப் போய் குடிசையிலேயே படுக்க வைத்தார்கள். பச்சை மனிதன் மீன்களைத்தான் தன் உணவாக உட்கொள்கிறான் என்றறிந்தவர்கள் அவனைச் சுற்றிலும் மீன்களை விதைத்து விட்டு பெண்களிடம், பச்சை மனிதன் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றார்கள்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் பெண்கள் தங்கள் வேலைகளை முடித்து விட்டு கிழவியின் குடிசை வாசலில் குழுமினார்கள். குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் குடிசையை விட்டு வெளிவந்தான் பச்சை மனிதன். பெண்கள் தங்களின் நாசியில் நறுமணம் ஒன்று நுழைந்து மயக்குவதை உணர்ந்தார்கள். ‘அங்க இங்க வெய்யில்ல போகாம கட்டில்லயே கிட’ என்று கூற வாயெடுத்து பேச முடியாமல் நறுமணத்தின் கட்டுக்குள் செயலிழந்து நின்றார்கள். வெளியேறிய பச்சை மனிதனும் கிழவியின் வீட்டை விட்டு சற்று தொலைவு சென்று வெய்யிலில் காயவைக்கும் ஈரத் துணி போல மொட்டை வெய்யலில் படுத்துக் கொண்டான். அவன் தங்களை விட்டு சற்றுத் தள்ளிப் போனதுமே நறுமணமும் குறைந்து போனதை உணர்ந்தார்கள் பெண்கள்.

பச்சை மனிதன் வெய்யிலில் கிடப்பதை அவர்கள் கண்ணுற்றதும் தத்தம் வேலைகளைப் பார்ப்பதற்காக கிளம்பினார்கள். பச்சை மனிதன் கிராமத்தை விட்டு இனி எங்கும் ஓடிப் போய்விட மாட்டான் என்று நினைத்தே தான் அவரவர் காரியங்களுக்கு கிளம்பினார்கள். குழந்தைகள் வழக்கம்போல கிராமத்தின் சந்து பொந்துகளில் ஓடியபடி கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். வெகுநேரம் விளையாடிச் சலித்துப் போன குழந்தைகள் பச்சை மனிதனை வேடிக்கை பார்க்க ஓடி வந்து குழுமினர். வெய்யிலைப் பார்த்தபடி படுத்திருந்த பச்சை மனிதனின் உடலில் செடிகள் முளைத்திருந்தன.

“செடிக முளைச்சிருக்குடி, என்னாமாதிரி வாசமடிக்குது பாரு மல்லீப் பூ வாசம் மாதிரி” என்றது ஒரு குழந்தை.

பின்வந்த நாட்களில் பச்சை மனிதன் விரைவில் வளர்ந்து பெரிய ஆலமரம் மாதிரி நின்றான். அதன் பின் இரவென்பதே இல்லாமல் போயிற்று கிராமத்தினுள். கிராமம் முழுக்க மரத்திலிருந்து எழுந்து கிளம்பிய மணம் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. தமது மந்தைகளை மேய்க்க புல்வெளிக்கு ஓட்டிச் சென்ற பெண்களின் கூந்தலில் மரத்தின் இலைகள் செருகப்பட்டிருந்தன. குழந்தைகள் மரத்தின் நீளமான விழுதுகளில் தூறி ஆடி மகிழ்ந்தார்கள் எந்த நேரமும். ரூத் தனது ஆடுகளுக்கு அந்த மரத்தின் இலைகளை பறித்துப் போட அதைத்தின்ற ஆடுகள் பின்னர் புற்களை உணவாக்கிக் கொள்ளப் பிரியப்படவேயில்லை. மீன்களை உண்பதற்கும், நண்டுகளை துரத்திக் கொண்டு கடற்கரை மணலில் ஓடிக் கொண்டிருந்தன. நண்டுகள் நான்கு கால்களில் தம்மை உண்ணவரும் விலங்கினத்தைக் கண்டு கடலுக்குள் பயந்தோடின. கடற்கரை மணல் துகள்கள் ஆட்டுக்குட்டிகளின் கால் தடங்களைப் பதுக்கிக் கிடந்தன. அப்போது தான் அங்கு அது நடந்தது.

தூர தேசத்திலிருந்து வந்த கப்பலொன்று தூரத்தே நங்கூரமிட்டு நின்றது. பின் கப்பலிலிருந்து விசைப்படகு இறக்கப்பட்டு கிராமம் நோக்கி வந்தது. கப்பலில் குடிநீர் இல்லாமல் போய் விட்டபடியால் குடிநீர் வேண்டி பெரிய பெரிய கேன்களோடு அவர்கள் கிராமத்தினுள் நுழைந்தார்கள். தண்ணீரோடு சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பியும் போய்விட்டார்கள். திரும்பி கப்பலுக்குச் சென்றவர்கள் வாசனை மிக்க மரமொன்று ஊருக்குள் நிற்பதாக கப்பல் கேப்டனிடம் கூறினார்கள். விசயத்தைக் கேட்ட கேப்டன், ‘பெரும் பெரும் துண்டுகளாக நறுக்கி கப்பலுக்குக் கொண்டு வாருங்கள்’ என்று உத்திரவிட்டான். அதன்படியே கப்பலில் இருந்த பணியாட்கள் அனைவரும் மேலுமிருந்த விசைப்படகுகளை இறக்கி கிராமத்தினுள் நுழைந்தார்கள். கிராமவாசிகள் ‘மரம் எங்கள் குலதெய்வம்’ என்றெல்லாம் கூறியும் அவர்கள் செவி மடுக்காமல் ஆளுயர ரம்பங்கள் கொண்டு காரியத்தைத் துவக்கினார்கள்.

எல்லாமும் முடிந்திருந்த ஒரு மாத காலத்திற்குப் பின் கிராமவாசிகள் பச்சை மனிதனையும், மரத்தையும் பற்றி மறந்திருந்த ஒரு மாலையில் கடல் அலைகளில் இருந்து எழுந்த சுள்ளென்ற நெடி கிராமம் முச்சூடும் நிரம்பியது. கிராமத்தில் மாலையில் பெய்திருந்த மழையினால் சொத சொதவென நனைந்திருந்த மண்ணிலிருந்து எழுந்த வாசம் கிராமத்தின் குடிசைகளுக்குள்ளும் நிறைந்திருந்தது. உருண்டை வடிவமான மேகங்கள் மேற்கு நோக்கி பதை பதைப்புடன் ஓடிக் கொண்டிருந்தன. அப்படியான வேளையில் வியாபாரக் கப்பல்காரர்கள் மரத்தின் அடிபாகம் வரை அறுத்துச் சென்றிருந்த இடத்தில் பச்சை மனிதன் மீண்டும் துளிர் விட ஆரம்பித்தான். அன்றைய இரவின் நடு ஜாமத்தில் மீண்டும் பச்சை நிற ஒளியும் சுகந்தமான மணமும் கிராமத்தை ஆட்கொண்டது. காலையில் கிராமவாசிகள் மீண்டும் மரம் நின்றிருந்த அதிசயத்தைக் கண்டார்கள்.

ரூத்தின் ஆடுகள் எப்போதும் போல் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்தன. ரூத்தும் கடலுக்குப் போகும் கணவனை வழியனுப்பி விட்டு தன் குழந்தையோடு குடிசைக்கு வந்தாள். வெளியே கிடந்த கட்டிலில் குழந்தையைக் கிடத்தி விட்டு குடிசைக்குள் நுழைந்தாள். இசரவேலின் ஐந்து வயது மகன் சாமுவேல் மீண்டும் நின்றிருந்த மரத்தைக் கண்டு ஆனந்தத்தில் மரம் நோக்கி ஓடினான். கீழே தொங்கியபடி இருந்த விழுதொன்றைப் பிடித்து உந்தி உந்தி விளையாடினான். பக்கத்து விழுதொன்று மூர்ச்சையிலிருந்து கிளம்பியது போல வளைந்து பையனைப் பிடித்து சுற்றிக் கொண்டே மேலே உயர்ந்தது. தன் நடுமையத்தில் பையனைப் போட்டு விழுங்கி விட்டு ஏதுமறியாதது போல பழைய நிலைக்கு வந்து தொங்கியது. கட்டிலில் கிடந்த ரூத்தின் குழந்தை தன் குறியை விரல்களில் பிடித்து நசுக்கிக் கொண்டு மரத்தைப் பார்த்து சிரித்தபடி படுத்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *