நோக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 7,361 
 
 

அலை அடிக்கும் கடலோரம் ஆயாசமாக அமர்ந்தான் ராமன். கடல் கடந்து வருகையில் தண்ணீருக்குத் தவித்துப் போய்விட்டாள் சீதை. நடுவிலே இளைப்பார வசதியில்லா வெயில். சிவனை பூஜித்துப் புறப்படுவதாக எண்ணம் ராமனுக்கு. லட்சுமணன் இந்தப் பிராந்தியம் பாதுகாப்பானதுதானா? காட்டுவிலங்குகள் தாக்கக் கூடிய இடமா என்பதிலேயே கவனமாக இருந்தான். அவன் சற்றுத் தள்ளி நின்றவாறு இலங்காபுரி நோக்கி பார்வையிட்டுக் கொண்டிருந்தான். வானரங்கள் அங்கும் இங்கும் மரத்தடிகளிலே களைப்பாறிக் கொண்டிருந்தன.

மணல் வெளியில் ஊற்றெடுத்து சீதாபிராட்டிக்கு சுரைக்குடுவையில் நீர் முகர்ந்து கொடுத்தான் ஹனுமன். அமர்ந்து நீரை கையேந்திக் குடித்தாள் சீதா. அவள் அருந்திய இடத்தில் மணலில் சிந்திய நீர், திட்டாகப் பரவி நின்றது. அதைக் கையால் அள்ளித் திரட்டி குழவி போலாக்கினாள் சீதா. மணலில் விளையாட விரும்பாத மனிதர் உண்டா? இல்லை எனத் தெரியும். கடவுளும் இல்லையென்று சிரித்துக் கொண்டான் ராமன்.

“ஏன் சிரிக்கிறீர்கள்? மிதிலா புரியிலோ, அயோத்தியிலோ கடற்கரையே இல்லை. இப்போது விட்டால் பிறகு எப்போது இப்படி கடற்கரையில் விளையாட முடியும்? பாற்கடலிலோ பாம்பே கதி…”

“சிரித்தது உன் விளையாட்டைப் பார்த்தல்ல. சிவபூஜையில் ஈடுபட விரும்பினேன். திரும்பிப் பார்த்தால் நீ லிங்கேஸ்வரனை கையில் ஏந்தியிருக்கிறாய்?”

“இல்லை. ராமநாதீஸ்வரன்” ஹனுமன் உரிமையோடு பெயரிட்டான். ராமனிடம் அதே மாறாத புன்னகை.

சற்றைக்கெல்லாம் “ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய..” ராமனின் உதடுகள் மென்மையாக உச்சரிக்கத் தொடங்கின. இமைகள் மூடியிருந்தன. ஒருக்களித்து அவனருகில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தாள் சீதா. மனிதப் பிறவியெடுத்து வந்து இறைவன் தன்னைத்தானே வணங்கி மகிழும் நாடகத்தை ரஸித்துக் கொண்டிருந்தான் ஹனுமன். அவனுடைய இமைகளும் மெல்ல திரையிட்டன. ராமனின் மென்குரல் மட்டும் ஏகாந்த வெளியெங்கும் பரவி ஓடிக் கொண்டிருந்தது. யுகங்களே கரைந்து கழிந்தது போல காலம் கடந்து கரைபுரண்டு கொண்டிருந்தது. மூவருமே பிரபஞ்மெங்கும் வியாபித்து பொருளற்ற ஓர் உருவாய் எங்கும் நிறைந்து கிடப்பதாய் நினைத்தான் ஹனுமன். அக்கணமே பிரபஞ்சத்தின் ஒரு துளியாய் எங்கோ ஒரு புள்ளியாக மாறியும் தோன்றியது.

“இரவு இங்கேயே தங்கி காலை அயோத்தி நோக்கிப் புறப்படுவோமா?” ராமன் குரல் குளிர்த் தென்றல் போல தழுவியது. சீதையும் லட்சுமணனும் ஹனுமனும் ஆமோதித்தனர்.

காலை-

வானரங்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு நால்வரும் வடதிசை நோக்கிப் பிரயாணத்தை ஆரம்பிக்க இருந்த நேரத்தில், இந்த வனாந்திரத்தில் லிங்கத்தை அப்படியே விட்டுவிட்டுப் போவது உசிதமில்லையென தன் வாலால் சுழற்றி இழுக்க எத்தனித்தான் ஹனுமன். மணல் லிங்கம்தானே என்ற அசிரத்தை அவன் வால் வழியே வெளிப்பட்டது. லிங்கம் உறுதியாக இருந்தது. அதீத ஆவேசத்துடன் இழுத்துப் பார்த்தான். அசைவதற்கான அறிகுறியே இல்லை. அட மணலுக்கு இத்தனை வலிமையா?

மானிட அவதாரமாயினும் முக்காலம் உணர்ந்த ராமன், இந்தச் செயலை ரசித்துக் கொண்டிருந்தான். ஹனுமன் ஆவேசத்துக்கு வால் அறுந்ததுதான் மிச்சம்.

அறுந்த வாலை மீண்டும் ஒட்ட வைத்தபடி ராமன் கேட்டான். “எதற்கிந்த ஆவேசம் ஹனுமா?”

வெட்கித் தலைகுனிந்து, “வழிபடும் நோக்கம் முடிந்தபின்பு வழியில் இப்படியொரு விக்ரகம் இருக்க வேண்டாமே என்று நினைத்தேன். இந்த மணல் திட்டை அகற்றிவிடலாம் என்று…”

“லங்காபுரிக்குச் செல்வதற்காகப் பாலம் அமைத்தோம். அதற்கான நோக்கமும் முடிந்துவிட்டது. இனிமேல் பாலம் அவசியம் என்று நினைத்தாயா?” ஹனுமன் அலைகளுக்கிடையே கோடுபோல கிடந்த கடற்பாதையைப் பார்த்தான். எத்தனை உழைப்பு… எத்தனை உழைப்பு… எவ்வளவு பாறைகள், எவ்வளவு மணல் குவியல், எத்தனை ஆக்ரோஷமாக உருவானது இந்த பாலம்… இதையும் இந்த மணல் லிங்கத்தையும் ஒன்றென்பதா?

“ராமா நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்த லிங்கமும் இறைவன்தான் என்பதை அறியாமல் இல்லை. இந்த ஆளற்ற மணல் பூமியில் பராமரிக்க யாருமின்றி ஈசனை விட்டுச் செல்வதை விரும்பாமல்தான் அதை அகற்ற எண்ணினேன். அது அறியாமல் செய்த பாபம்தான். அதற்காக நல்ல நோக்கத்துக்காக உருவான பாலத்தைக் களைய நினைப்பதுபற்றி யோசிக்க முடியுமா? எதற்காக இரண்டையும் ஒப்பிட்டீர்கள் என்று எனக்கு விளக்க வேண்டும்” தலைவணங்கி வினவினான் ஹனுமன்.

“எந்த நோக்கத்துக்காக எது உருவாக்கப்பட்டதோ அது நிறைவேறியவுடன் உருவாக்கப்பட்ட அம்சம் நோக்கத்துக்கு விரோதமாக மாறிக் கொண்டிருப்பதை நீ கவனிக்கவில்லையா? இறைவன் சிருஷ்டியில் எல்லாமே அவன் நோக்கத்துக்கு விரோதமாக மாறிக் கொண்டுதான் இருக்கிறது?”

“என்ன சொல்கிறீர்கள் பிரபோ…?”

“பதறாதே வாயு புத்ரா… இதோ இந்த வில் எதற்காக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது?”

“பாதுகாப்புக்கு..”

“யாருடைய பாதுகாப்புக்கு?”

“பிரபோ என்னைச் சோதிக்காதீர்கள்… வில்லை சிங்கமும் புலியுமா பிரயோகிக்கின்றன. மனிதன்தான் பிரயோகிக்கிறான். அவனுடைய பாதுகாப்புக்குத்தான்…”

“மனிதர்களை அழிக்கவும் அதே வில்லைத்தான் மனிதன் பயன்படுத்துகிறான்.. நடப்பது திரேதா யுகம். துவாபர யுகத்தில் ஆயுதத்தின் நோக்கம் காத்துக் கொள்வதில் இருந்து அழித்துக் கொள்வதற்காக என்று மாறிவிடும். கலியுகத்தில் ஆயுதம் செய்வது, அதை விற்பது அதை விற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது, அதற்கான சந்தையை ஏற்படுத்துவது, அப்படியான அரசியல் சூழலை நியாயப்படுத்துவது, புதிய ஆயுதங்கள் உருவாக்கும் சிந்தனையாளர்களை உருவாக்குவது, போர் செய்வது, போர் செய்யாமல் இருப்பது குறித்து விவாதிப்பது, அமைதிக்காகப் போராடுவது, போராடாமலேயே அழிப்பது, அழியாமல் இருப்பதற்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது… என ஆயுதத்தை மையப்படுத்திதான் உலகமே இயங்கும்…”

“எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரிய வேண்டாம். இந்த லிங்கமும் இந்த பாலமும்… நோக்க முரண்களாக மாறிப் போகுமா?” கலக்கத்துடன் கேட்டான் காற்றின் மைந்தன்.

சுற்றும் முற்றும் பார்த்தான் ராமன். வனவிலங்குகள் ஏதும் தாக்க வருமோ என்பதில் கவனமாக இருந்தான் லட்சுமணன். சீதா தேவி போகும் தூரம் எண்ணி மரநிழலில் துயில் கொண்டிருந்தாள்.

“இந்த பாலம் வேண்டுமா, வேண்டாமா என கலியுகத்தில் விவாதம் பிறக்கும்… அப்போது நாம் பேசிக் கொண்டது போல அத்தனை எளிமையான விஷயமாக இது இருக்காது”

சபர்மதி ஆஸ்ரமத்தில் நேரு, படேல் இருவருமே மகாத்மா காந்தியிடம் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“சுதந்திரத்தை அடைவதுதான் நம் நோக்கமாக இருந்தது. அதற்காகத்தான் இந்தப் பேரியக்கம். சுதந்திரம் கிடைத்ததுமே நாம் அதை கலைத்துவிடுவதுதான் சரி. இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை”

“ஏற்றுக் கொள்கிறோம். இப்போது ஆட்சி அமைப்பது யார்? புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கி அதை மக்கள் மத்தியில் பதியச் செய்து ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமா?” நேரு தன் குல்லாவைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு தலையைத் தடவிக் கொண்டார். அவருடைய வழுக்கைத் தலை வியர்த்திருந்தது.

“இப்போது சாத்தியமில்லை போலத் தோன்றும். பின்னர் இதே கட்சி நூறு கட்சியாக சிதறுண்டு போகும். காங்கிரஸ் பேரியக்கம். வேறு அற்பக் காரணங்களுக்காக – தனிமனித விருப்பு வெறுப்புகளுக்காக வெவ்வேறு தலைமையில் துண்டுபட்டு நிற்கும். அப்போது மக்கள் தங்களுக்குப் பாடுபடப் போகிறவர்கள் யார் என்று தீர்மானிக்கத்தான் போகிறார்கள். அதை இப்போதே செய்துவிட்டால் காங்கிரஸýக்கு நற் பெயர் மிஞ்சும்.” காந்தி தீர்மானமாகச் சொன்னார். நேரு, படேலைப் பார்த்தார். தனித் தனி ராஜாங்கமாகச் சிதறுண்டு கிடந்த மாநிலங்களை ஒன்று சேர்த்த இரும்பு மனிதர் படேல், மகாத்மாவின் தர்மத்தையும் நேருவின் நியாயத்தையும் மனத்தராசில் நிறுத்திப் பார்த்தார். விவாதம் முற்று பெறாமலேயே பிரிந்தனர்.

இந்தியச் சுதந்திரம் இந்து} முஸ்லிம் கலவரத்துக்கிடையே பிறந்தது. காந்தி கசப்பான சூழலில் எல்லோரையும் போல அவராலும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. தில்லியில் நேரு சுதந்திரக் கொடியை ஏற்றும்போது கல்கத்தாவில் வகுப்புக் கலவரம் நடந்து கொண்டிருந்த பகுதியில் அவர் அமைதிக்காகப் போராடிக் கொண்டிருந்தார்.

பாகிஸ்தானில் இருந்து அகதியாக இந்தியா வந்தவர்கள், இந்தியாவில் இருந்து அகதிகளாக பாகிஸ்தான் சென்றவர்கள் என்று நாட்டில் ரத்த ஆறு ஓடியது. இரு தரப்பு இழப்புகளுக்கும் அவர் வருந்தினார். “பாகிஸ்தான் சென்று அங்குள்ள இந்துக்களுக்கு ஆறுதல் சொல்லலாம் என்றால் இங்கும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே… நான் எந்த முகத்தோடு பாகிஸ்தான் இந்துக்களுக்கு ஆறுதல் சொல்ல முடியும்?” உலக உத்தமரின் பேச்சில் அதீத வருத்தம் வெளிப்பட்டது.

பிர்லா மாளிகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மகாத்மா மீது சிலருக்குக் கோபம். ஒருவன் மாளிகைக்கே வந்து குண்டு வீசிவிட்டுப் போனான். அவர் இந்துக்கள் மீதுமட்டும் பரிவு காட்ட வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அடுத்த சில நாளில் பாகிஸ்தானில் இருந்து வந்திருந்த அகதிகள் காந்தியைச் சந்தித்தனர். கூட்டத்தில் இருந்த ஒரு கோபக்கார இளைஞன். “”உங்களால்தான் நாங்கள் இப்படி ஆனோம். நீங்கள் பேசாமல் இமயமலைக்குப் போய்விடுங்கள்” என்று கத்தினான். அவனை சமாதானம் செய்து அழைத்துப் போனார்கள்.

“”வெள்ளையனை இந்தியாவைவிட்டு வெளியேற்றுவதற்காகப் பாடுபட்டவரை இந்தியாவைவிட்டு வெளியேற்றப் பார்க்கிறார்களே” பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்த புண்ணியவான் ஒருவர் மனம் நொந்து புலம்பினார். மறுநாள் ஜனவரி 30, 1948. உலகப்பிதா காந்தியை முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற காரணத்துக்காக கோட்சே என்பவன் சுட்டுக் கொன்றுவிட்டான். இறக்கும்போது “ஹேராம்’ என்றபடி தரையில் சாய்ந்தார் மகாத்மா.

“இந்த பூமியில் இப்படியொரு மகாபுருஷர் ஒருவர் வாழ்ந்தார் என்பதை வருங்காலத் தலைமுறையினர் நம்புவதுகூடச் சிரமமானதாக இருக்கும்” என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

“சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் இருக்கக் கூடாது என்றார் காந்தி. அவரையே இருக்கக் கூடாதுனு சொல்லிப்புட்டான் நம்ம ஆளு. இந்தியாவுக்கு காந்திதேசம்னு பெயர் வைக்கச் சொல்லி தலையங்கம் எழுதப் போறேன்” என்று தம் தோழர்களிடம் கூறிக் கொண்டிருந்தார் பெரியார்.

மனிதனுக்குத்தான் திரேதாயுகம் கலியுகம் எல்லாம். மகாவிஷ்ணுவுக்கு…? ஹனுமனை அழைத்துச் சொன்னார்: “ராம அவதாரத்தில் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? பூலோகத்தில் நடப்பதைப் பார்த்தாயா?”

“கொடுமை.. இறைவனுடைய நோக்கம் என்று ஒன்று இல்லையா? எல்லாமே மனிதர்களின் செயலாக அல்லவா இருக்கிறது?”

“இறைவன் நோக்கமற்றவன். இல்லையென்றால் கொலைகளுக்கும் பூகம்பத்துக்கும் மதக் கலவரத்துக்கும் அவன் பொறுப்பேற்க வேண்டியதாகிவிடும். மனித சாபம் பொல்லாதது ஹனுமா”

“அப்படியானால் இறைவனின் வேலை?”

“இறைவனாக இருப்பதுதான்”

மகாவிஷ்ணுவின் மாறாத புன்னகை. ஹனுமன் “சரி நான் கிளம்புகிறேன்” என்றான்.

“நாளை வா… இன்னொரு காட்சியிருக்கிறது”

“சரி” வாயு மகன் விரைந்தான்.

அரசு உறுதியாக இருந்தது. “சேது சமுத்திர திட்டம் நிறைவேறியே தீரும். சேது மணல் திட்டு பகுதியில் 300 மீட்டர் பகுதியை ஆழப்படுத்துவதன் மூலம் கப்பல் போக்குவரத்து நடைபெறும். இந்தியா முன்னேறும். இது ஒரு தொலை நோக்குத் திட்டம். சற்றேறக் குறைய 150 ஆண்டுகளாகவே சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற பல அரசுகள் போராடி வந்திருக்கின்றன. எங்கள் ஆட்சியில் இது நிறைவேறுகிறது என்பதுதான் இவர்களின் ஆத்திரத்துக்குக் காரணம்.”- முதல்வர் அறிக்கை சூடாக இருந்தது.

“இந்து மக்களின் புனிதச் சின்னமான ராமர் பாலத்தை இடித்தால் கலவரம் வெடிக்கும். உலமெங்கும் இருக்கும் ஹிந்துக்களின் புனிதச் சின்னமான இதை இடிப்பதால் இவர்கள் அரசியல் செல்வாக்கு சரிந்துவிட்டது. உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டும். மறு தேர்தலுக்கு உத்தரவிடவேண்டும்.” -எதிர்க் கட்சிகளும் ஹிந்து அமைப்புகளும் பதில் அறிக்கை வெளியிட்டன.

“ராமேஸ்வரம் பகுதியில் கப்பல் போக்குவரத்து துவங்குவதன் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று அந்தமான் நிக்கோபார் பகுதிவரை சென்று மீன் பிடிக்கலாம். சர்வதேச கப்பல்கள் வருவதால் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். தமிழகம் சிங்கப்பூராகும். அது ராமர் கட்டினார் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. சின்னச் சின்ன மணல் திட்டுகள் அவ்வளவே.”- ஓர் அறிஞர்.

“கப்பல் வந்தால் ராமேஸ்வரம் கடற்பகுதி பவழப் பாறைகள் பாதிக்கப்படும்.பல கடல் உயிரினங்கள் செத்து மடியும். அதில் சிறிய கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். சர்வதேச கப்பல்கள் அவ்வளவு குறைந்த ஆழத்தில் பயணிக்க முடியாது.” – தினமானி நாளிதழ் கட்டுரை வெளியிட்டது.

(மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் இருவர்)

“நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்துனு கடற்படை அதிகாரி சொல்லியிருக்கிறாரு. அப்படியிருந்தும் இந்தத் திட்டத்தை அமல் படுத்துவதில் முதல்வருக்கு ஏன் இவ்ளோ அக்கறை? இதனால பல கோடி கொள்ளை அடிக்கலாங்கிற திட்டம்தான் அது.”

“அதான் ஒரு ஆபத்தும் இல்லனு அமைச்சர் சொல்லிட்டாரே. திட்டம் முடிவாகி ரெண்டு வருஷம் கழிச்சி எதிர்த்துக் குரல் கொடுக்கிறாங்களே.. இவனுங்களுக்குப் பங்கு சரியா வந்து சேரலைனு இப்படி தகராறு பண்றானுங்களோ என்னமோ?”

“என்ன பிரபோ இந்தக் காட்சிகளைப் பார்க்கவா என்னை வரச் சொன்னீர்கள். பெருங்கவலையாக இருக்கிறது. அப்போதே இந்தப் பாலத்தை அகற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது.”

“கடவுளாகவே இருந்துவிடுவதுதான் கவலையை மறப்பதற்கு ஒரே வழி” விஷ்ணு புன்னகைத்தார். பல நெடுங்காலமாய் படுத்துக் கொண்டே இருக்கும் அவருக்குக் கால்களைப் பிடித்துவிட்டு பணிவிடை செய்து கொண்டிருந்தாள் மகாலட்சுமி. “ஏன் இப்படி கால் அழுத்திக் கொண்டிருக்கிறீர்கள் தேவி?” என்று ஹனுமன் பேச்சை மாற்றினார்.

“பார்க்கிறாய் அல்லவா, சினிமாவிலும் காலண்டிரிலும் என்னை இப்படித்தான் படம் போடுகிறார்கள். எனக்கும் அதைப் பார்த்து அதே பழக்கம் வந்துவிட்டது.” தேவி சிரித்தபடியே “உள்ளங்கையில் இருந்து பொற்காசுகளாக பிரவகிப்பதற்கு இது எவ்வளவோ மேல். வேறு என்னதான் செய்வதென்று எனக்கும் புரியவில்லை.”

இறைவியின் கிண்டலை ரசித்தபடி அங்கிருந்து புறப்பட்டான் ஹனுமன்.

“”அந்த இடத்துக்கு நேரே வானத்திலேயே பெர்னூலியா சற்று நேரம் நின்றது. அது ஒரு விண் கப்பல்.

“”இவ்வளவு பணம் கட்டி வந்து பார்த்துவிட்டுப் போவது நாகரீகமாகிவிட்டது. குளோபல் வார்மிங் நிலப்பரப்பைச் சுருக்குவிட்டபின், மூழ்கிப் போன ஏராளமான கடற்கரைகளைக் காட்டி பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்” முதியவர் வேண்டா வெறுப்பாகப் பேசினாலும் கோவிலின் கோபுரம் தெரிகிறதா என்று பார்த்தார். ஆழ்கடலில் எல்லாமும் ஒரே மாதிரிதான் தெரிந்தது.

“”பூம்புகார் கடல் கொண்டபோது செட்டியார் வம்சத்தினர் நீரே இல்லாத மேடான இடத்தில் குடியேற விரும்பி சிவகங்கை பகுதிக்குப் போய், பத்துபடி உயரத்தில்தான் வீட்டையே கட்டினார்கள். அவர்கள் கணித்தபடி இப்போது கடல், சிவகங்கை பகுதி வரை வந்து நிற்கிறது. இதோ இதுதான் ராமேஸ்வரம்.. சென்ற முறை வந்த போது ஓரளவுக்குத் தெரிந்தது” என்றார் கைடு. கீழே கடலில் வழக்கமான கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

நாராயணன் அப்போதும் கடவுளாகவே இருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *