நிர்விகற்ப சமாதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 2, 2022
பார்வையிட்டோர்: 7,414 
 
 

ஸ்ரீமான் உலகநாத பிள்ளை பரம வேதாந்தி. தம்முடைய பரம்பரைத் தன்மைக்கு மாறாக சைவ சித்தாந்தத் தத்துவங்களை ஒதுக்கி, மடத்துச் சைவம், ஏகான்மவாதம் என்று ஒதுக்கிய அத்வைதத்துக்குள் தம்மை இழந்தார். ஊர்க் குருக்களையாவுக்கு அவரைக் கண்டால் பிடிக்காது. காரணம் அவரது ஏகான்மவாதம் அல்ல. பணம் இன்மை.

கிராமத்துத் தபாலாபீஸில் போஸ்ட் மாஸ்டராக உத்தியோகம் பார்ப்பதில் உள்ள சங்கடங்களும் சௌகரியங்களும் பல. எந்நேரத்துக்கு வந்தாலும் ஆபீஸ் மூடிவிட்டது என்று சொல்லி தபால் வில்லைகளை விற்பதற்கு மறுக்க முடியாது. மாதத்தில் இருபத்தியொன்பது நாளும் தபால்தான் கிடையாதே என்று மத்தியானம் இரண்டு மணி சுமாருக்கு வெளியே நடந்துவிட முடியாது. வெற்றுப் பையை அரக்கு முத்திரை வைத்து ஒட்டி, ‘ரன்னர்’ எப்போது வந்து தொலைவான் என்று காத்திருக்க வேண்டும். அவனிடம் காலிப் பையைக் கொடுத்துவிட்டு, மற்றொரு காலிப் பையை வாங்கிக் கொள்ள வேண்டும்.

நிற்க. எப்போதோ ஏதோவென்று தபால் பெட்டியில் வந்துவிழும் காகிதங்களை குருக்களையாவுக்கு வாசித்துக்காட்ட வேண்டும். குருக்களையாவுக்கு கடுதாசி வாசிக்கும் பழக்கம், பட்டணத்துக்காரரின் பேப்பர் படிக்கும் தன்மையை ஒத்திருந்தது என்று சொல்லவேண்டும். காந்திஜி பட்டினி கிடக்கிறார் என்றால் ஊரே அல்லோலகல்லோலப்படும்; பத்திரிகையும் மகாலிங்கய்யர் ஓட்டல் இட்டிலி மாதிரி விற்பனையாகும். ஆனால், அதற்காக ஊர்க்காரர்கள் எல்லாம் பட்டினி கிடந்து உயிரை விட்டுவிடுவார்கள் என்பது அர்த்தமா? அப்படி ஒன்றும் ஆபத்து நேர்ந்துவிடாது. இந்தத் தமிழ்நாட்டிலே, சட்டத்தின் பேரிலும் ஒழுங்கின் அடிப்படையிலும் பிரிட்டிஷார் 150 வருஷங்களாகக் கட்டிவைத்த ஏகாதிபத்தியக் கோயில் தமிழ் நாட்டாரின் ஆவேசத்தினால் ஆட்டமெடுத்துவிடாது. திலகர் கட்டத்தில் கூடி நீண்ட பேருரைகள் செய்வோம்; நீண்ட அறிக்கைகள் வெளியிடுவோம்; கோழைத்தனத்துக்கு அஹிம்சைப் போர்வை போர்த்திக் கொள்வோம்; கருத்து வேற்றுமைகளை நயமாக சுசிபிப்போம்; ஆவேசம் காட்டிய ‘ஒரு சிலர்’ கொலை, ஆபத்தில்லையெனவும், சௌகரியம் உண்டு எனவும் பொழிந்து பாராட்டுவோம்; தனிப்பட்ட முறையில் “இந்தப் பசங்களே இப்படித்தான் சார்” என்று சொல்லுவோம்; இதற்கெல்லாம் பேப்பர் அவசியம்! மேலும் ஹோம் மாத்திரைக்கு விலாசம் தெரிந்துகொள்ள பேப்பர் ரொம்ப முக்கியம். இதே மாதிரிதான் குருக்களையாவுக்கு வேற்றாரின் கடுதாசிகளும் கார்டுகளும்.

உலகநாத பிள்ளைக்கு சோம்பல் ஜாஸ்தி; அதனால்தான் கடுதாசி படிக்கும் வழக்கம் வேப்பங்காய்.

குருக்களையா வந்துவிட்டார் என்றார் ஐயாவுக்கு சிம்ம சொப்பனந்தான்.

வரும்போதே, “என்னவே, அந்த மேலத்தெரு கொசப் பய, பணத்துக்கு எழுதினானே, பதில் வந்ததா?” என்று கேட்டுக் கொண்டுதான் நடைப் படியை மிதிப்பார். ‘மேலத் தெரு கொசப்பயல்’ என்று சூட்சுமமாகக் குறிப்பிடுவது சுப்பையர் என்ற முக்காணிப் பிராமணனைத்தான்.

தென்னாட்டில், திருச்செந்தூர் பிராமணர்கள் முன்குடுமி வைத்திருப்பார்கள்; குயத்தொழிலில் ஈடுபட்டுள்ள வகுப்பினரும் முன் குடுமி வைத்திருப்பார்கள். இதனால்தான் இந்த ஏச்சு.

நிற்க, ஸ்மார்த்தர்கள் யாவரும் ஏகான்மவாதிகள்; ஆகையால் அவர்களை வைவது சங்கர சித்தாந்தத்தை நோக்கி எய்யும் பாசுபதாஸ்திரம் என்பது குருக்களையாவின் அந்தரங்க நம்பிக்கை. இம்மாதிரி சொல்வதால் இவரை சைவ சித்தாந்த பவுண்டுக்குள் அடைத்துவிடலாம் என்பது அதற்கு அடுத்தபடியான நம்பிக்கை.

உலகநாத பிள்ளைக்கு இது தைக்காது; ஏனென்றால், சுப்பையரிடம் ஏதோ பாக்கி தண்ட வேண்டும் என, சென்ற பத்து வருஷங்களாக குருக்களையா சொல்லிவரும் புகார், மனசை அந்தத் திசையிலேயே திருப்பிவிடும்.

சுப்பையர் ஏன் பணத்துக்கு கடிதம் எழுத வேண்டும்? அதற்கு இதுவரை பதில் ஏன் வராதிருக்க வேண்டும் என்பதைப் பற்றி உலகநாத பிள்ளை சிந்தித்தது கிடையாது. சிந்திக்கும்படி மனம் தூண்டியதும் கிடையாது. வேலாயுதத் தேவரின் தாயார் மருதி, கொளும்பில் உள்ள தன் பேரனுக்கு முக்காலணா கார்டில் மகாபாரதத்தில் ஒரு சர்க்கத்தையே பெயர்த்து எழுதுகிற மாதிரி, ஒரு மாத விவரங்களை எழுதுவதற்கு பிள்ளையவர்கள் வீட்டு நிழலை அண்டி நிற்பதும் அதை எழுதி முடிப்பதை ஹடயோக ஸித்தியாக நினைத்து பெருமைப்படுவதுடன் மறந்துவிடுவதும் பிள்ளையவர்கள் குணம்.

அதேமாதிரிதான் வேலாயுதத் தேவரின் எதிர்வீட்டு பண்ணையாரான தலையாரித் தேவரின் தேவைக்கும் ஊரில் உள்ள கேட்லாக்குகளை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து, சாம்பிள் காலண்டர் இனாம் என்று இடங்களுக்கெல்லாம் காலணா கார்ட் காலத்திலிருந்து முக்காலணா கார்ட் சகாப்தம் வரை எழுதித் தீர்த்துக் கொண்டிருக்கும் வைபவத்துக்கு உலகநாத பிள்ளையின் ஒடிந்துபோன இங்கிலீஷ் அத்யாவசியம். பூர்வ ஜென்மாந்திர வாசனைபோல் எங்கே உள்ளூர ஒட்டிக்கொண்டிருக்கும் ஷெப்பர்ட் இலக்கண பாஷைப் பிரயோகத்தை அனுசரிப்பதாக நினைத்து ரிலீப்நிப் பேனா வைத்து வாட்ட சாட்டமாக உட்கார்ந்து எழுதி, தபாலை எடுத்துவந்து பையில் போட்டு, அரக்கு முத்திரைவைத்து ஊர்வழி அனுப்புவது உலகநாத பிள்ளையின் கடமை. பிறகு ஒரு வாரமோ அல்லது பத்து நாளோ கழித்து ரன்னர் மத்யானம் இரண்டு மணிக்குக் கொண்டுவரும் பட்டணத்து கடுதாசி வைபவங்களைக் கொண்டு போய் தேவரவர்கள் சன்னிதானத்தில் காலட்சேபம் செய்ய வேண்டும். இங்கிலீஷ் வருஷ முடியும் கட்டம் வந்துவிட்டால் அதாவது டிஸம்பர் மாதத்தில் உலகநாத பிள்ளையின் ‘இலக்கிய சேவைக்கு’ ரொம்ப கிராக்கி உண்டு. பண்ணைத் தேவர் வாங்கின ரவிவர்மாப் படம் போட்டு வெளியான காலண்டர் நன்றாக இருந்துவிட்டால் கம்பனிக்கு இன்னும் சில கடிதங்கள் எழுத வேண்டியேற்படும். ஆனால் அவற்றிற்கு இந்தப் பத்து வருஷங்களாக பதில் வராத காரணம் உலகநாத பிள்ளைக்குப் புரியவில்லை. ஏக காலத்தில் பல விலாசத்தில் ஒரே கையெழுத்தில் இலவச காலண்டர்களுக்கும் சாம்பிள்களுக்கும் கடிதம் போனால் கம்பனிக்காரன் சந்தேகப்படக்கூடுமே என்பதை உலகநாத பிள்ளை அறிவார். அவ்வாறு அறிந்ததினால்தான் ஒவ்வொரு கடிதத்தின் கீழும், ‘கடிதம் எழுதுகிறவருக்குக் காலண்டர் தேவை இல்லை. விலாசதாரர்களுக்கு இங்கிலீஷ் தெரியாததினாலும் தாம் ஒருவர் மட்டுமே அந்த பாஷையை அறிந்தவரானதினாலும், அவர்களுக்காக கடிதம் எழுத வேண்டியிருக்கிறது’ என்பதை ஸ்பஷ்டமாக குறிப்பிடுவார். அப்படி எழுதியும் அந்தக் கம்பனிக்காரர்கள் நம்பாத காரணம் அவருக்குப் புரியவில்லை. ஆனாலும் பண்ணையாருக்கு தவிர வேறு யாருக்கும் அச்சடித்த படம் எதுவும் வந்தது கிடையாது.

இதிலே கொஞ்ச நாள் உலகநாத பிள்ளை பேரில் சந்தேகம் ஜனித்து, அவர் தபால் பைக்குள் கடிதங்களைப் போட்டு முத்திரையிடும் வரை ஒரு கோஷ்டி அவரைக் கண்காணித்தது. கடிதத்தை அவர் கிழித்தெறிந்துவிட்டு பண்ணையாருக்குப் போட்டியாக வேறு யாரும் ஏற்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்ளுகிறாரோ என்ற சந்தேகம் அர்த்தமற்ற சந்தேகமாயிற்று. அதன் பிறகுதான் பண்ணைத் தேவர் அதிர்ஷ்டசாலி என்ற நம்பிக்கை ஊர் ஜனங்களிடையே பலப்பட்டது. அவர் எடுத்த காரியம் நிச்சயமாகக் கைகூடும் என்று ஊர் ஜனங்கள் நினைப்பதற்கு இந்தக் காலண்டர் விவகாரமே மிகுந்த அனுசரணையாக இருந்தது. இதன் விளைவாக விதைப்பதானாலும், வீடு கட்டுவதானாலும் தேவரின் கைராசி நாடாத ஆள் கிடையாது.

பண்ணைத் தேவர் பண்ணைத் தேவரல்லவா; இந்த விவகாரங்களில் எல்லாம் ஜனங்களின் ஆசைக்கு சம்மதித்து இடம் கொடுப்பது, தமது அந்தஸ்துக்கு குறைவு என்று நினைத்தார். உலகநாத பிள்ளையின் கைராசி என்றும் கடிதம் எழுதும் லக்னப் பொருத்தமே அதற்குக் காரணம் என்றும் சொல்லித் தட்டிக் கழித்துப் பார்த்தார். நம்பிக்கையும் வெறுப்பும் கொடுக்கல் வாங்கல் விவகாரமா? நினைத்தால் நினைத்த நேரத்தில் மாறக் கூடியதா?

உலகநாத பிள்ளை இவ்வளவு செய்கிறாரே இத்தனை வருஷ காலங்களில் தமக்கு என்று சொந்தமாக ஒரு காலணா செலவழித்து கார்ட் எழுதியது கிடையாது. இப்போது முக்காலணா கார்ட் யுகத்தின் போது கடிதம் எழுதிவிடப் போகிறாரா?

குருக்களையாவின் சேர்க்கையினால் அவருக்கு ஊர் விவகாரம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் அவருக்குத் தெரியாது. ஏன், சொல்லப்போனால் அவருடைய சொந்த வீட்டு விவகாரமே தெரியாது.

சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்கு போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் மாயை; உள்ளூர நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விசாரத்தை சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பதுபோல தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருந்தும் அவர்களைப் பொருட்படுத்தாது நின்ற கடவுள், ஏதோ எப்போதோ ஒரு சங்கரர் சொன்னதை உலகநாத பிள்ளை வாஸ்தவமாக நம்புகிறாரா? இல்லையானால் சோதிக்கவா மூட்டை கட்டிக்கொண்டு வரப்போகிறார்?

கடவுள் தமது நம்பிக்கையை பரிட்சை பண்ணி சுமார் முப்பத்தி ஐந்து சதவிகிதமாவது பாஸ் மார்க்கெடுக்க வரவேண்டும் எனவோ அல்லது வருவார் எனவோ எதிர்பார்த்தது கிடையாது.

வராமலிருக்க வேண்டுமே என அவர் எதிர்பார்ப்பது எல்லாம் இரண்டு பேரைத்தான். ஒன்று ரன்னர்; இரண்டாவது குருக்களையா. ரன்னரைக்கூட சமாளித்துவிடலாம்; குருக்களையாவை சமாளிக்கவே முடியாது.

அன்று நால்வர் ஏககாலத்தில் வந்து சேர்ந்தார்கள். ‘ஐயாவோ’ என்று கூப்பாடு போட்டுக் கொண்டு வெளியே வந்து நின்ற ரன்னர் முத்தையா தொண்டைமான்.

இரண்டாவது ஆசாமி கார்டும் கவர் கூடும் வாங்க வந்த சுப்பையர்.

மூன்றாவது ஆசாமி குருக்களையா, அவர் தமது வழக்கப் பிரகாரம் ‘பத்திரிகை’ படிக்க வந்திருந்தார்.

நாலாவது ஆசாமி ஏதோ ஊருக்குப் புதிது. பட்டணத்துப் படிப்பாளி போல் இருந்தது. சுமார் நாற்பது நாற்பத்தி ஐந்து வயசிருக்கும். அவரும் ஏதோ ஸ்டாம்பு வாங்குவதற்காக உலகநாத பிள்ளை வீடு தேடி வந்து வெளியில் சைக்கிளை சாத்திவிட்டு உள்ளே நுழைந்தார்.

“யாரது?” என்று கேட்டார் உலகநாத பிள்ளை.

“ஸ்டாம்பு வேணும். வாங்கலாம் என்று வந்தேன்” என்றார் வந்தவர்.

“என்னேடே முத்தையா கடுதாசி எதுவும் உண்டுமா?” என்று முழங்காலை தடவினார் குருக்களையா.

“எனக்கென்ன தெரியும்? பைக்குள்ள என்னவோ. ஆனா எசமானுக்கு சர்க்கார் கடுதாசி வந்திருக்கு” என்றான் முத்தையா.

“பிள்ளைவாள் நமக்கு ஒரு காலணா கார்ட் குடுங்க; கடையிலே யாருமில்லே; சுருக்கா போகணும்” என்றார் சுப்பையர்.

“சுப்பையர்வாள்! என்னமோ செவல்காரன் உங்கள் பாக்கியை குடுத்துடுவான்னு விடேன் தொடேன்னு கடுதாசி எழுதினியளே பார்த்தீரா? ஒரு பதில், உண்டு, இல்லை என்று வந்துதா?” என்று அதட்டினார் குருக்களையா.

“நான் எழுதினது உமக்கு எப்படித் தெரியும்; பதில் வரவில்லை என்று உமக்குக் கெவுளி அடித்ததோ” என்றார் சுப்பையர்.

“ஊர்த் தபால் எல்லாம் உலகநாத பிள்ளை வாசல் வழியாகத்தான் போக வேண்டும்! தெரியுமா? எனக்குக் கெவுளி வேறே வந்து அடிக்கணுமாக்கும்!” என்றார் குருக்களையா மிதப்பாக.

“தாலுக்கா எசமானை மாத்தியாச்சு; நாளைக்கு புது ஐயா வாராரு; இங்கே நாளண்ணைக்கு செக்கு பண்ண வருவாகன்னு சொல்லிக்கிடுராவ” என்றான் முத்தையா.

“அது யாருடா புது எஜமான்!” என்று சற்று உறுமினார் குருக்களையா.

“போடுகிற கடுதாசியையெல்லாம் படிக்கிற வழக்கமுண்டா” என்று புதியவர் உலகநாத பிள்ளையை வினயமாகக் கேட்டார்.

“நாங்க படிப்போம், படிக்கலை, நீ யார் கேட்கிறதுக்கு. படிக்கிறோம்; நீர் என்ன பண்ணுவீர்; ஏன் பிள்ளைவாள், மக்காந்தை மாதிரி உட்காந்திருக்கீர்; தபால் ஸ்டாம்பு குடுக்க முடியாதுன்னு சொல்லி அய்யாவெ வெளியேற்றும்” என்று அதட்டினார் குருக்களையா.

“நீங்க சும்மா இருங்க; ஸார் ஸ்டாம்பு ஸ்டாக்கு ஆயிட்டுது. கையில் இரண்டு ஒரணா ஸ்டாம்பு தானிருக்கு; கார்ட் தரட்டுமா?” என்றார்.

“ஏன் முன்கூட்டியே வாங்கி வைக்கவில்லை?” அதட்டினார் வந்தவர்.

“என்னவே அதட்டுரே?” என்று பதில் அதட்டு கொடுத்தார் குருக்களையா.

“ஏனா நான் தான் புது போஸ்ட் மாஸ்டர்; உம்மை செக் பண்ண வந்தேன். உம்மமீது ‘பிளாக் மார்க்’ போட்டு வேலையை விட்டு நீக்க ஏற்பாடு செய்கிறேன்; கடுதாசி படிக்கிற வழக்கமா?” என்றார் புதியவர்.

“எனக்குக் குத்தம் என்று படல்லே; இதுவரை… புகார்…”

“பரம ஏகான்மவாதமோ… பகிர் நோக்கு இல்லையாக்கும்” என்று குத்தலாகக் கேட்டார் புதியவர்.

“நான் அப்பவே இந்த ஏகான்ம மாயாவாதம் வேண்டாம் என்று சொன்னேனே கேட்டீரா; இனிமேலாவது…” என்று தலையில் அடித்துக் கொண்டார் குருக்களையா.

உலகநாத பிள்ளை பகிர் முகமற்று பேச்சற்று நிர்விகற்ப சமாதியில் ஒடுங்கினார். அந்த மௌனத்திலும் தம் நடத்தை குற்றம் என்று படவில்லை அவருக்கு.

“என்ன பிள்ளைவாள்! அந்தப் பய காலண்டர் அனுப்பலியே” என்று கேட்டுக்கொண்டே வேலாயுதத் தேவர் உள்ளே நுழைந்தார்.

எல்லோரும் மௌனம் சாதிப்பது கண்டு “என்ன விசேஷம்” என்றார்.

“இவகதான் புதுசா தாலுகாவுக்கு வந்த போஸ்ட் மாஸ்டராம்! உலகநாத பிள்ளை வேலையெ போக்கிடுவோம் என்று உருக்குதாவ” என்று ஏளனம் செய்தார் குருக்களையா.

“இவுகளா? சதி. இந்த ஊரு எல்லையெத் தாண்டி கால் வச்சாத்தானே அய்யாவுக்கு வேலை போகும். இங்கே வேலாயுதத் தேவன் கொடியல்ல பறக்குது” என்று துண்டை உதறிப் போட்டுக்கொண்டு மீசையில் கைவைத்தார் வேலாயுதத் தேவர்.

“ஊர் எல்லை தாண்டினாத்தான் என் அதிகாரம்; நான் போணும்னு அவசியம் இல்லெ; என் பொணம் போனாலும் போதும்” என்றார் புதியவர்.

“மயானத்துக்குக் கால் மொளச்சு நடந்துபோன காலத்தில் பாத்துக்குவம். இப்ப பேசாமே சோலிய பாத்துக்கிட்டுபோம்!” என்றார் தேவர்.

“சதி, சதி விடுங்க. குருக்களையாவாலே இவ்வளவும். எவனையா வேலெமெனக்கட்டு வேறொருத்தன் கடுதாசியைப் படிப்பான்” என்றார் சுப்பையர்.

– நவசக்தி பொங்கல் மலர், 1945

Print Friendly, PDF & Email
புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *