நாதனுள்ளிருக்கையில்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 18,864 
 
 

தனுஷ்கோடிக்குச் சென்றுகொண்டிருந்த ‘இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸி’ல் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் கட்டையை நீட்டிவிட்டுப் படுத்திருந்தார் பேரின்பநாயகம். கட்டை நல்ல உரமான கட்டை. அதன் சட்டைப் பையில் ராமேசுவரத்துக்கு டிக்கெட் இருந்தது.

அறுபது வயதைத் தாண்டி ஆறு மாதங்கள் கடந்த முற்றி விளைந்த கட்டை அது. வைரம் பாய்ந்த தேகத்தைப் பார்த்தால் நாற்பத்தைந்து வயதுகூட மதிக்க முடியாது.

பெரிய துணிப் பையைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்தது அது. பைக்குள் மாற்றுத் துணிகளும், கெட்டி அட்டைச் சித்தர் பாடல் தொகுப்பொன்றும் இருந்தன. பாம்பாட்டிச் சித்தர் குதம்பைச் சித்தர், அகப்பைச் சித்தர், அழுகணிச் சித்தர் — இப்படிப் பல சித்தர்கள் அந்த ‘பைண்ட் வால்யூமுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தார்கள். பாம்பாட்டிச் சித்தரின் பதினேழாவது பக்கத்தில் ஒரு காகித உறையில் ஒரு நோட்டுக் கற்றை பிதுங்கிக்கொண்டிருந்தது.

வண்டியில் அடுத்த பலகையில் நாலைந்து பையன்கள் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு வந்தார்கள். அதற்கடுத்த பலகைகளில் இலங்கைக்கு கப்பலேறப்போகும் பிரயாணிகள், ராமேசுவரத்துக்கு யாத்திரை போகிறவர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்புகிறவர்கள்– இப்படிப் பலர் இருந்தார்கள்.

ரெயில் ராமநாதபுரத்தைத் தாண்டி மண்டபம் ரெயிலடியை நெருங்கிக்கொண்டிருந்தது.

அடுத்த பலகையிலிருந்த பையன்கள் பிள்ளை வரத்துக்காக ராமேசுவரம் போகிறவர்களைப் பற்றிப் பலவிதமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு வந்தார்கள். ‘மூடநம்பிக்கை’ என்றான் ஒருவன். விஞ்ஞான உண்மை அதில் பொதிந்து கிடப்பதாகச் சொன்னான் மற்றொருவன். ‘மூடநம்பிக்கை இல்லை, கருத்துள்ள நம்பிக்கை’ என்று வாதாடினான் மூன்றாவது பையன். ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்குத் தெரிந்த காரணங்களைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

சித்த சாகரத்தில் முழுகிக்கொண்டிருந்த பேரின்ப நாயகத்திடம் பையன்களின் பேச்சு விழிப்பேற்படுத்திவிட்டது.

அவரே ஒரு சித்தர்; அரைகுறைச் சித்தர். அதாவது அவருக்குச் சித்து விளையாட்டுக்கள் கைவரவில்லை. ஆனால் சித்த வைத்தியம் அவரைக் கைதூக்கி விட்டது.

அவருடைய காளைப் பருவத்தில், இருபதாவது வயதில், அவருடைய கிராமத்துக்கு ஒரு கோவணச் சித்தர் வந்திருந்தார். அவரைப் பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக்கொண்டார்கள். அற்புதமான சித்து விளையாடல்களை அவர் செய்து வந்தாராம். தெருவோரம், வீட்டுத் தின்ணை, மரத்தடி, குப்பைமேடு எங்கே வேண்டுமானாலும் அவர் படுத்து உறங்கினார். வியாதியஸ்தர்களுக்குப் பச்சிலை மருந்துகள் அரைத்துக் கொடுத்துக் குணப்படுத்தினார்.

விசித்திரமான கதை ஒன்று கிளம்பிவிட்டது:

அவர் படுத்து உறங்கியபோது, கை வேறு, கால் வேறு, கழுத்து வேறாகத் தனித் தனி முண்டங்களாகக் காட்சி கொடுத்தாராம். தலைக்குப் பக்கத்தில் அந்தரத்தில் ஒரு விளக்கொளி தெரிந்ததாம். பலர் நேரில் பார்த்ததாகச் சொன்னார்கள். இந்த அதிசயம் உண்மைதானா என்று கண்டுபிடிக்கப் பேரின்பநாயகம் அவருக்குச் சீடரானார். அவருடன் பல ஊர்களைச் சுற்றி, பல மருந்துகள் அரைத்து, பலவிதமான அநுபவங்களைப் பெற்றார். ஆனால் ஒருநாள்கூடத் தமது குரு நாதரிடம் அவர் எதிர்பார்த்த அதிசயம் நடக்கவில்லை.

உறங்கும்போது சித்தர் குறட்டை விட்டார்; தலையும் கழுத்தும் ஒட்டிகொண்டுதான் இருந்தன!

சித்தரே ஒருநாள் தமதுசீடரை மடக்கினார். “ஏண்டா பயலே! நீ பிடிவாதக்காரண்டா, இதற்காகவா என்னைச் சுற்றுகிறாய்?” என்று கேட்டார்.

சீடர் மௌனம் சாதித்தார்.

“வந்ததுதான் வந்தாய்; வைத்தியத்தைக் கற்றுக்கொண்டு சொந்த ஊருக்கே போய்த் தொலை. வயது வந்த பையன் என்னோடு இருந்தால் சம்சாரபந்தம் பற்றிக்கொள்ளும்”.

மூன்று வருஷத் தொண்டு பேரின்பநாயகத்தைச் சித்தராக்கவில்லை; சித்த வைத்தியராக்கியது.

பக்கத்துப் பலகையிலிருந்து ஒரு பையன் வேகத்தோடு பேசினான்:

“மூடப் பழக்கம்! முட்டாள் நம்பிக்கை! யாத்திரைக்கும் பூசைக்கும் காசு செலவு செய்தால் குழந்தை பிறக்குமா?”

பேரின்பநாயகம் அவனுடைய கட்சியைத் தமக்குள் ஆமோதித்தார்.

“நாதனுள்ளிருக்கையில் இவர்கள் ஏன் நட்ட கல்லைத் தேடிப் போகிறார்கள்?”

இதில் செலவழிக்கும் காசையும் நேரத்தையும் வைத்தியரிடம் செலவழிக்கலாம்; மருந்து வாங்கிச் சாப்பிடலாம்” என்று கத்தினான் அதே பையன்.

வைத்தியருக்கு இது ‘சுருக்’கென்று தைத்தது. சித்த வைத்திய முறையில் அவர் பலவிதமான ‘சர்வ ரோக நிவாரணி’களைத் தயார் செய்துவிட்டார். பல வியாதிகளைப் பறக்க அடித்துப் பலலட்சம் திரட்டிவிட்டார். ஆனால் இந்த ஒரே ஒரு விஷயத்தில் அவருடைய வைத்தியம் கைகொடுக்க வில்லை.

அந்த மருந்தை மட்டிலும் அவர் நிறுத்திக்கொண்டு விட்டார்.

பிறவிப் பெருங்கடல் தாண்டிய பின் முத்தி நிலையை எதிர்பார்ப்பதுபோல் பாம்பன் கடலைத் தாண்டியவுடன் ராமேசுவரத்தை எதிர்பார்த்தார் பேரின்பம்.

பழுதடைந்த பாம்பன் பாலத்தில் ரெயில் அட்டையைப்போல் ஒட்டிக்கொண்டு நகர்ந்தது. குபீரென்று கடல் காற்று உள்ளே வீசவே, கட்டையை நிமிர்த்திச் சன்னலோரத்தில் சாயவிட்டார் வைத்தியர். வலது புறத்தில் மீன்பிடிக்கும் சிறு தோணிகள் இரண்டு. பாய்மரங்களில் காற்றை நிரப்பிக்கொண்டு, கடல் நீரைக் கிழித்துச் சென்றன. இடது புறத்தில் சுறாமீன் குஞ்சுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீருக்கு வெளியே எழும்பிக் குதித்துச் சண்டை போட்டுக்கொண்டன. தந்திக் கம்பிகளில் தவயோகம் செய்த மீன்குத்திகள், தரிசனம் கிடைத்தவுடன், தரிசனம் கொடுத்த சிறு மீன்குஞ்சுகளைத் தமக்குள் இழுத்துக்கொண்டன.

பாம்பன் சந்திப்பில் இறங்கி, குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு, அடுத்தாற்போல் காத்திருந்த ராமேசுவரம் வண்டியில் ஏறிக்கொண்டார் பெரியவர்.

யாத்திரைக்காரர்களைப்பிய்த்துப் பிடுங்கும் தரகர்கள் பெரியவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பாம்பாட்டிச் சித்தரின் பதினேழாவது பக்கத்தில் இருக்கும் நோட்டு கற்றையை அவர்கள் எங்கே கண்டார்கள்? கட்டை வெறுங்கட்டை என்று ஒதுக்கினார்கள். ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சைக்காரர்களுக்கென்று ஒதுக்கிய கட்டை அது.

வண்டியை வடக்கத்திக் கூட்டம் அடைத்துக்கொண்டிருந்தது. நாற்றம் சித்தரின் மூக்கைத் துளைத்தது. உள்ளத்தின் அழுக்கைப் போக்கி கொள்ளத்தான் அவர்கள் அங்கு வந்தார்களே தவிர, உடல் அழுக்கையல்ல. பத்து நாட்களுக்கு முன்பு காசியில் கங்கைத் தண்ணீரில் மூழ்கியவர்கள், அந்தப் புனிதத் தன்மை கெட்டுப் போகாதபடி அடுத்த முழுக்குக்கு ராமேசுவரம் கடலுக்கு வந்தார்கள். உள்ளத்தைக் கழுவிக் கொள்ளச் சுவாமி தரிசனம் போதும். உடலைக் கழுவிக் கொள்ள ஒரு கட்டிச் சோப்பும் ஒரு மட்டைத் தேங்காய் நாரும் ஒரு வாளித் தண்ணீரும் வேண்டும்.

ராமேசுவரம் கோயில் பிரகாரத்தைக் கண்டு திகைத்துப் போனார் பேரின்பநாயகம். மணலைத்தவிர கல்லையே காணமுடியாத அந்தத் தீவில் பெரிய பெரிய மலைகளை உடைத்துக் கல் தூண்கலை நிறுத்தியிருந்தான் அதைக் கட்டியவன். மனிதன் கல்லைவிட உறுதி வாய்ந்தவன்தான். கடலைத் தாண்டி மலையைத் தூக்கி வந்து கோயில் எழுப்பி யிருக்கிறான் அல்லவா?

அன்று வைகாசி பௌர்ணமி.

இடித்துப் புடைத்துக் கொண்டு சந்நிதியை மறைத்தது பக்தர்கள் கூட்டம். யானையைவிட பெரிதாய்ப் படுத்துக் கிடந்த நந்திக்கும், உள்ளே நட்டநடுவில் நின்ற சிவலிங்கத்துக்கும் இடையில் நெரிசல் தாங்கவில்லை. சித்த வைத்தியர் பக்தரில்லை. ஆகவே அவர் ஒதுங்கி ஓர் தூணருகில் உட்கார்ந்து, ‘சிவோஹம்– நானே சிவன்’ என்று மூச்சை உள்ளே இழுத்தார். பிறகு வெளியே விட்டார்.

நாதனுள்ளிருக்கையில் இந்த மனிதர்கள் ஏன் இப்படி நட்ட கல்லைச் சுற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்று அவருக்குப் புரியவில்லை. அழுதார்கள், தொழுதார்கள், ஆடினார்கள், பாடினார்கள், அதைக் கேட்டார்கள், இதைக்கேட்டார்கள், அர்ச்சனை அபிஷேகம் என்று என்ன என்ன வெல்லாமோ செய்தார்கள்.

பேரின்பநாயகம் எழுந்து நின்று, தம்முடைய நண்பர் ஒருவரிடம், ‘போய் வருகிறேன்’ என்று சொல்லும் பாவனையில் ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பினார். இதைப் போல் ஒரு நம்பிக்கையில்லாத கட்டை இங்கு எதற்காக வந்தது? வேடிக்கை பார்க்கவா?

இங்கே மட்டும் அது வரவில்லை. இமயமலைக்குப் போய்க் கம்பளிப் போர்வையைச் சுற்றிக்கொண்டு கைலாய நாதரை வேடிக்கை பார்த்தது. காசிக்குப் போய் விசுவநாதரை விசாரித்தது. கன்னியாகுமரிக்குச் சென்று அம்மனைப் பேட்டி கண்டது. கடைசி கடைசியாக ராமேசுவரத்துக்கு வந்திருக்கிறது.

தமக்குள்ளே உள்ள நாதனிடம் தாம் நம்பிகை வைப்பதுபோல், மற்ற மனிதர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மற்ற நாதர்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. பார்த்த பிறகும் அவருக்குப் பக்தி ஏற்படவில்லை. மற்ற மனிதர்களிடம் அனுதாபம் கொண்டார்.

கையில் பணமிருந்தது, தொழிலைப் பிள்ளைகள் கவனித்துக் கொண்டார்கள், வீட்டை மனைவி மேற்பார்த்தாள், கட்டையில் தெம்பிருந்தது; அவர் புறப்பட்டு விட்டார்.

மறுநாள் காலையில் தனுஷ்கோடிக்குப் போய் சேதுக்கடற்கரையில் மூழ்கிவிட்டு ஊர் திரும்ப வேண்டியதுதான்.

2

அன்றைக்குப் பௌர்ணமியல்லவா? அமாவாசை– பௌர்ணமி இந்த இரண்டு இரவுகளும் அவருக்கு மிக முக்கியமானவை. தனிமைச் சமாதியில் உட்கார்ந்து நீண்ட நேரம் தியானத்தில் முழுகி விடுவார். வீட்டில் இருக்கும்போது அறையைத் தாழிட்டுக்கொண்டு நிலைக் கண்ணாடியின் முன்னால் உட்கார்ந்து விடுகிற வழக்கம் அவருக்கு.

இப்போது அவருக்கு அந்தத் தனிமை தேவையாக இருந்தது. சத்திரம், சாவடி, ஓட்டல் அறை ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. பெட்டிக்கடையில் ஓரணா கொடுத்து இரண்டு வாழைப்பழங்களை உள்ளே தள்ளினார். ஊருக்கு வெளியில் தென்னந்தோப்பைக் கடந்தார். தோப்பையும் தாண்டிப் பெரிய மணற் குன்று தென்பட்டது. அதன் உச்சியில் ஏறி எதிர்ப் பக்கம் பார்த்தார். பார்த்த இடமெல்லாம் பாலைப் போல் நிலவு கொட்டிக் கிடந்தது.

ஒரு மைல் தூரத்துக்கப்பால் பசுமையும் வெண்மையும் கலந்த மணல் திட்டுக்கள் மங்கலாகத் தெரிந்தன.இடையில் அங்கங்கே தாழம் புதர்கள். அந்த இடம் அவருக்குப் பிடித்திருந்ததால் வேகமாக நடந்தார்.

பகத்தில் வந்து பார்த்தவுடன் அந்த இடம் அவரை ஏமாற்றி விட்டது. அசைபோடும் கால்நடைகளைப் போல் திசைக்கொன்றாய்த் திரும்பி கொண்டிருந்தன மணல் மேடுகள். குத்துக் குத்தாக முளைத்திருந்த தாழம் புதர்களிலும் ஒரு ஒழுங்கில்லை.

மேலும் நூறடி நடந்தார் ஒரே ஒரு திட்டு இயற்கையின் அழகையெல்லாம் தன்னுள் அடக்கிக்கொண்டு அவரைத் தன்னிடம் அழைத்தது. நான்கு புறமும் சுவர்போல் எழும்பியிருந்தன தாழஞ் செடிகள். கிளைக் குறுத்துக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தாழம்பூ வெடித்திருந்தது. மலர்ந்த தென்னம் பாளைகள்போல், நிலவுக் கீற்றுக்களின் தொகுப்புக்கள்போல் அவை தோன்றின. இயற்கையின் பரந்த மார்பகத்தில் இப்படி ஒரு விசித்திரமான பேரழகு கொப்பளிக்க முடியுமா? பச்சைப் புதர்களின் உச்சித் தலைகளில் கொழுந்துவிட்டெரியும் நெருப்புப் பந்தங்கள்……

அருகில் நெருங்கப் போனவர் திடுக்கிட்டு ஒருகணம் திகைத்தார்.

யாரோ இரண்டு பேர்கள் அந்தப் புதருக்குள் பேசும் சத்தம் கேட்டது. ஒன்று ஆண் குரல்; மற்றொன்று பெண் குரல்.

உண்மைதானா?

இரண்டு கடல்களுக்கு மத்தியில், இரவின் நடுச்சாமத்தில், நடுக்காட்டில் புதருக்குள், மணல்மேட்டுத் தனிமையில் மனிதக்குரல்களா? தம்மால்தான் பயத்தை வெல்ல முடியும் என்று அவர் நினைத்திருந்தார்.அவர்களுக்கு பயமாயிருக்காதா?

சந்தடி செய்யாமல் மறைவில் இருந்துகொண்டு புதர்வழியே எட்டிப் பார்த்தார். உண்மைதான். இறுக்கிப் போயிருந்த மணல் திட்டில் இரண்டு பேர்கள் உல்லாசமான பேச்சில் ஈடுபட்டிருந்தனர். ஆண்மகனின் மடியில் தலைவைத்துப் படுத்து அவனிடம் சிணுங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விட நினைத்தார் பேரின்பநாயகம். ஆனால் கால்கள் நகரவில்லை. தம்மைவிட நூதனமான பிராணிகளாய் அவர்கள் தோன்றியதால் வேடிக்கை பார்த்தார்.

பெண்ணின் கண்களில் வழிந்த நீர் நிலவில் மண்புழுப்போல் நெளிந்தது. அதை அவன் துடைத்து விரல்களால் சுண்டினான்.

அவனுக்கு முப்பது வயதிருக்கும்;அவளுக்கு ஐந்து வயது குறைவாக இருக்கலாம். இருவருமே நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது.

அவள் பேசினாள்:

“என்னுடைய கஷ்டம் உங்களுக்கு எங்கே தெரிகிறது? நீங்களும் பெண்ணாய்ப் பிறந்திருந்தால் தெரியும். என்றைக்குமே உங்களுக்கு சிரிப்பும் விளையாட்டும் தான்.”

“பெண்ணாய்ப் பிறக்க வில்லையே என்று நான் வருத்தப் படுகிறேன்” என்றான் அவன். “பிறந்திருந்தால் கட்டியவனை அதிகாரம் செய்துகொண்டு காலந் தள்ளலாம் நூறு ரூபாய்க் காசுக்கு என்னைப்போல் ஆலாய்ப் பறக்க வேண்டியதில்லை. மதுரையில் இருபது ரூபாய் கொடுத்து நாம் குடியிருக்கும் வீட்டைப் பார்த்தால் எனக்கு எப்படிக்கோபம் வருகிறது, தெரியுமா? இடித்து அதைத் தூள் தூளாக்கத் தோன்றுகிறது.”

“நான் இருப்பது உங்களுக்குப் பாரமா யிருக்கிறதா?” என்று கேட்டாள் அவள்.

“அப்படிச் சொல்லாதே!” என்று அவள் கன்னத்தில் அவன் செல்லமாய்த் தட்டினான். “சிரிப்பும் விளையாட்டும் எனக்கு நீ கொடுத்திருக்கிறாய். இல்லாவிட்டால் இதற்குள் நான் திருடி விட்டோ, சண்டை போட்டுக் கொண்டோ சிறைக்குப் போயிருப்பேன். அல்லது சாமியாராய்ப் போயிருப்பேன்”.

பெருமை தாங்காமல் அவள் அவனுடைய கழுத்தை வளைத்துக்கொண்டு விட்டாள்.

“பிறகு ஏன் என்னைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?”

“எதைப் புரிந்து கொள்ளவேண்டும்?”

“நமக்குக் கல்யாணமாகி ஏழு வருஷங்களுக்கு மேல் ஆகவில்லையா?”

“எழுபது வருஷமானால்தான் என்ன?”

“எழுபது வருஷமானால் அப்புறம் தெரியும். உழைத்துப்போட ஒரு பிள்ளையில்லாமல் என்ன செய்வீர்களாம்?”

“பிள்ளை, பிள்ளை, பிள்ளை! ஏழு வருஷத்தில் ஏழு பிறந்தால்தான் தெரியும் உனக்கு. ஏன், எட்டுகூடப் பிறக்கும்!”

அவன் சிரித்தான்.

“சிரிக்காதீர்கள்” என்று அவள் கத்தினாள்.

“நூறு ரூபாய் சம்பளத்தில் நூலேணியாட்டம் போடுகிறோம் நாம். உனக்கோ குழந்தைப்பைத்தியம் பிடித்திருக்கிறது. வைத்தியருக்கும், மருந்துக்கும் ரொட்டி மிட்டாய்க் கடைக்காரனுக்கும் செலவு வைக்க வேண்டுமென்கிறாய் நீ.”

“ஐம்பது ரூபாய்க்குக் குறைந்து வாங்குகிறவர்களுக்கு ஐந்து குழந்தைகள் இல்லையா?”

“அந்தக் குடும்பத்தில் ஒருநாள் தலை நீட்டிப் பார்த்தால் தெரியும்.”

உங்களுக்கு என்னைத் தெரியவே தெரியாது!” என்று அலறினாள் அவள். “நீங்கள் என்னைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கக் கூடாது.”

சண்டைக்கு வராதே! என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? ராமேசுவரத்துக்கு வரவேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றாய். கூட்டிக்கொண்டு வந்தேன்.”

“உங்களுக்கு இதில் நம்பிக்கை யில்லையா?”

“எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை யில்லை நீ நம்பினால் சரி.”

“உங்களுக்கு வேறே எதில்தான் நம்பிக்கை யுண்டு?”

“சொல்லட்டுமா! உன்னிடம் நம்பிக்கை யுண்டு; என்னிடம் நம்பிக்கை யுண்டு.” அவன் உரக்கச் சிரித்தான்.

பேரின்பநாயகத்துக்கு அவனுடைய தன்னம்பிக்கை பெருமை தந்தது. தம்முடைய தத்துவத்தின் வெற்றி என்று எண்ணிக்கொண்டார்.

“இந்தத் தன்னம்பிக்கை போதவே போதாது” என்று சீறினாள் அவள். “மனிதர்கள் குறையுள்ளவர்கள். அவர்களுடைய குறைகளைக் கடவுள்தான் தீர்த்துவைப்பார்.”

“சரி, அப்படியே வைத்துக்கொள்.”

“நான் என்ன வைத்துக் கொள்வது?” படீரென்று எழுந்து உட்கார்ந்து அவனை வெறித்துப் பார்த்தாள். “பொய் சொல்லாமல் உங்கள் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள். உங்களுக்கு என்னால் ஏதாவது சுகமுண்டா?”

“எல்லாச் சுகமும் உண்டு” என்று அவள் முகத்தைத் திருப்பினான் அவன்.

“கேவலம்! என்னை நீங்கள் பெண்ணாகவே மதிக்கவில்லை. மதித்தால் என் உணர்ச்சியை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். நான் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறேன். உங்களையே கொடுத்திருக்கிறேனா? சொல்லுங்கள்!”

மறைவிலிருந்த பேரின்பநாயகத்தின் உடல் சிலிர்த்தது. அவள் ஏதேதோ பேசிக்கொண்டே போனாள் தாய்மை உணர்ச்சியின் தவிப்பு அவர் கண்டும் கேட்டுமிராத அளவுக்கு அந்தப்பிரதேசத்தில் எதிரொலி செய்தது. தம்முடைய கண்களில் அந்தப் பெண்ணுக்காகக் கசிந்து வழிந்த நீரை அவர் துடைத்து விட்டுக் கொண்டார்.

அவன் அவளருகில் சென்று சமாதானம் செய்ய முயன்றான். அவள் விலகிக்கொண்டு தள்ளி உட்கார்ந்தாள்.

“இதோ பார், உனக்காக இப்போது கோவிலுக்குப் போய் வந்தோம்.”

“‘எனக்காக!’ எனக்காகத்தானே? நமக்காக இல்லையே?”

அவன் பேசவில்லை.

“எனக்காக நீங்கள் அங்கே வந்தீர்கள்; உங்களுக்காக நான் இங்கே வந்திருக்கிறேன். நமக்குள் உள்ள உறவு இவ்வளவுதானே?”

“என்னை நீ என்ன செய்யச் சொல்கிறாய்?” என்று கேட்டான் அவன்.

“இனி உங்களுக்காக என்னிடம் ஒன்றுமே இல்லை. என்னைத் தொடாதீர்கள்” அவள் எழுந்து ஓடத் தொடங்கினாள்.

அவன் பிடித்துக் கொண்டான். அவள் திமிறினாள்.

“நீங்கள் நம்பாத வரையில் நமக்குக் குழந்தை பிறக்காது. என்னை விட்டுவிடுங்கள்.” அவள் அவனுடைய பிடியை விடுவித்துக்கொண்டு போக முயன்றாள். முடியவில்லை. அவன் தோளில் ஓங்கித் தன் தலையை மோதிக்கொண்டு அந்தக் கடலே பொங்கும்படி கதறி அழுதாள்.

“கோயிலில் நீங்கள் கையெடுத்துக் கும்பிடவில்லை. அதை நான் பார்த்தேன். நாலு பேருக்கு மத்தியில் எனக்கொன்றும் சொல்லத் தோன்றவில்லை. இனி நீங்கள் கடவுளைக் கும்பிடாதவரையில் என்னைத் தொடுவதற்கு உங்களை விட மாட்டேன். தொடாதீர்கள். எட்டி நில்லுங்கள்!”

படபடவென்று அவள் தேகம் நடுங்கியது. அவள் மயங்கிப் போய் தரையில் துவண்டு விழுந்தாள். பேச்சு மூச்சில்லை; அசைவில்லை.

3

கால் மணி நேரத்தில் திரும்பவும் அவளுக்குச் சுய உணர்வு திரும்பியது. இந்தக் கால் மணிநேரத்தில் அவளுக்காக அவள் கணவன் துடித்த துடிப்பு, பட்ட வேதனை…

அவளுடைய நாடித் துடிப்பைக் கவனித்தான். மூச்சு வருகிறதா என்று பார்த்தான். கண்களைத் திறந்து விட்டான் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டான். தட்டி எழுப்பினான். ஒன்றிலும் பயனில்லை.

நடுக்காட்டில் நள்ளிரவில், அவள் கட்டையாக விறைத்துப் போய்விட்டாளோ என்ற பயம் அவனைப் பிடித்துக் கொண்டது. பயமும் துக்கமும் அவனைப் படாத பாடு படுத்தின. குழந்தை போல் அவள் பெயரைச் சொல்லி அழைத்துக் கேவிக் கேவி அழுதான்.

பயம், துக்கம், வேதனை! நிராசை! ஏமாற்றம்…

அவளைத் தூக்கி மடியில் போட்டுக்கொண்டு வானத்தை நோக்கிக் கரங்களை உயர்த்தினான். பிறகு கரங்கள் தாழ்ந்து நெஞ்சுக் கெதிரே குவிந்தன. மூடிய கண்களை அவன் திறக்க வில்லை; குவிந்த கரங்களை அவன் தாழ்த்தவில்லை. கும்பிடும் சிலையாக மாறினான்.

கடல் காற்று சில்லென்று அவள் முகத்தில் வீசியது. கணவனின் கண்ணீர் அவள் கண்களில் வழிந்தது. மெல்ல மெல்ல அவள் கண்களைத் திறந்தாள். உதடுகள் துடித்தன. நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.

அவளுக்கு தன்னுடைய துணைவனின் கோலத்தை நம்பவே முடியவில்லை. நன்றாக மூர்ச்சை தெளிந்தவுடன் அவனைப் பார்த்து பல் தெரியச் சிரித்தாள். கும்பிட்ட அவன் கரங்களை அன்புடன் பற்றித் தன்னுடைய நெஞ்சில் புதைத்துக்கொண்டாள்.

நேரம் சென்றது. நிலவு உச்சி வானத்தை விட்டு மேற்கில் ஒதுங்கி அவர்களை வேடிக்கை பார்த்தது.

இரண்டு புறமும் இருந்த கடல்கள் நிலவு மயக்கத்தால் கொந்தளித்து ஒன்றை ஒன்று தழுவிக்கொள்வதற்கு அலைக் கரங்களை வீசிக்கொண்டன.

ஒன்று ஆண் கடல்; மற்றொன்று பெண் கடல். – அப்படித்தான் ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.

ஆண் கடல் அலைகளை எழுப்பி விட்டுக்கொண்டு, முட்டி மோதிக்கொண்டு, சீற்றத்துடன் ஆரவாரம் செய்தது. பெண் கடலின் கொந்தளிப்பு வெளியில் தெரியவில்லை.அமைதியாக அலைகளைச் சுருளவிட்டு மென்காற்றில் அது கிளு கிளுத்தது.

பேரின்பநாயகம் கடல்களின் நிலையில் அந்தத் தம்பதிகளைக் கண்டார். சந்தடி செய்யாமல் அவர்களுடைய தனிமைக்கு வாழ்த்துக் கூறிவிட்டு, அந்த இடத்தை விட்டு நழுவிவிட்டார்.

கால்களுக்குப் புதிய வலிமை பிறந்துவிட்டது. காற்றைப்போல் நடந்து பழைய மணல் குன்றுக்கே வந்தார். உச்சியில் நின்று உலகத்தைத் திரும்பிப் பார்த்தார்.

அவருடைய சித்தத்துக்குள்ளே அடைபட்டுக் கிடந்த ‘நான்’ என்னும் புலி, அதை உடைத்துக்கொண்டு வெளியே பாய்வதற்காகப் பயங்கரமாக உறுமியது. யாரோ முன்பின் தெரியாத ஒரு பெண் பிள்ளை, தன்னுடைய வேதனைச் சுமையெல்லாம் அவளை அறியாமலே இறக்கிவிட்டு, தான் பாட்டில் அங்கே தன் கணவனுடன் உல்லாசமாய்க் குலவிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய கண்ணீர்த் துளிகள் இங்கே இவரது சித்த சாகரத்தில், அறுபதாண்டுகள் வரையிலும் ஏற்படாத கடும் புயலை எழுப்பிவிட்டன.

நாதன் உள் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த நாதனைத் தம்மைத் தவிர வேறு யாருமே நம்பவில்லையே? தம்மை நம்பியவர்கள் தம்முடைய பணத்துக்காக, மருந்துக்காக, தம்முடைய உடைமைகளுக்காக நம்பினார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் கண்ணீர் வெறும் நம்பிக்கையால் துடைக்கப்பட்டுவிட்டதே!

நம்பிக்கை….

உருவம் இல்லாத ஒன்று, பெயர் இல்லாத ஒன்று, நிறம் இல்லாத ஒன்று, பணம் இல்லாத ஒன்று – இதற்கு உருவம் கொடுத்து, பெயர் கொடுத்து, நிறம் கொடுத்து, பொருள் கொடுத்து எப்படியெல்லாம் நம்புகிறார்கள் இந்த மனிதர்கள்! நாதன் வெளியிலும் இருக்கிறானா? அவனுக்கு கண்ணீர்தான் காணிக்கையா?

அவருடைய கண்ணீர் கரை புரண்டு வடிந்தது. “கடவுளே! அந்த ஏழைப் பெண்ணுக்கு ஓர் குழந்தையைக் கொடு! அவளுடைய துன்பத்தைப் போக்கு!” என்று தமக்குள்ளே கதறினார்

இரவெல்லாம் பக்திப் பெருக்கு அவரை ஆட்டிவைத்து விளையாட்டுப் பார்த்தது. பொழுது புலரும் வேளையில் இரண்டு கடல்கள் கூடும் சேதுக் கரைக்கு அவர் குளிக்கப் போனார். அங்கே அவருக்கு முன்னால் அந்த இளம் தம்பதிகள் ஒன்றாய்க் குளித்துக்கொண்டிருந்தார்கள் அவர்களது முகங்களில் எல்லையற்ற மகிழ்ச்சி தண்டவமாடியது.

தனுஷ்கோடியிலிருந்து நடுப்பகலில் ரெயில் புறப்பட்டது. என்ன திருவிளையாடல் இது! அவர் உட்கார்ந்திருந்த அதே பெட்டியில் அவருடைய பலகைக்கு எதிரில் வந்து உட்கார்ந்தார்கள் அந்தத் தம்பதிகள். பேரின்பநாயகம் அவர்களைப் பார்த்துச் சிரித்துவிட்டு, தாமே அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.

பேச்சு அவரை அறியாமலே வெளிப்பட்டதென்று சொல்லலாம்.

“உங்களுக்கு அடுத்த வருஷம் கட்டாயம் குழந்தை பிறக்கும். அப்படிப் பிறந்தால் என்ன தருகிறீர்கள்?”

அந்தப் பெண் பிள்ளையின் முகத்தில் குபீரென்று புதுக்களை பொங்கி வழிந்தது. ஆனந்தப் பெருக்கில் அவளுக்கு அவரிடம் என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை.

“உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று தடுமாறினாள்.

பெரியவர் அவள் கணவனைத் திரும்பிப் பார்த்தார். அவன் கண்களில் கேலிச் சிரிப்புத் துள்ளத் தொடங்கியது. ‘பணம் பிடுங்கும் சாமி ஒன்று எதிரில் வந்து கழுத்தறுக்கத் தொடங்கிவிட்டதே! இவள் நம்மைச் சும்மா விடமாட்டாளே!’

சித்த வைத்தியர் அவன் சிரிப்பைக் கண்டுபிடித்துவிட்டார்.

துணிப் பைக்குள் இருந்த சித்தர் பாடல் தொகுப்பை வெடுக்கென்று வெளியில் இழுத்தார். பாம்பாட்டிச் சித்தரின் பதினேழாவது பக்கத்தில் பதுங்கியிருந்த பணக் கற்றை பக்குவமாய்க் கீழே விழுந்தது. இளைஞன் பிரமித்தான். ‘கட்டை வெறுங் கட்டை இல்லை போல் இருக்கிறதே! புத்தம் புது நோட்டை அச்சடித்து வைத்திருக்கிறதோ?’

“இதில் உங்கள் இருப்பிடத்தை எழுதிக் கொடுங்கள்” என்று துண்டுக் காகிதத்தை அவனிடம் நீட்டினார்.

பணத்தைக் கண்டவுடன் அவனுக்கு அவரிடம் மரியாதை பிறந்துவிட்டது. எழுதிக் கொடுத்தான். தம்முடைய அச்சிட்ட முகவரிச் சீட்டையும் அவனிடம் கொடுத்தார். அவனுக்கு அதைப் படித்தவுடன் தூக்கி வாரிப் போட்டது.

“குழந்தை பிறந்தவுடன் ஒரு முக்காலணா கார்டு போடுங்கள். நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன். ஒரே ஒரு நிமிஷம் அதை என் கையில் கொடுத்தால் போதும். ஒரு முத்தம் கொடுத்து விட்டு உங்களிடம் திருப்பி கொடுத்து விடுகிறேன். எனக்கு அதுதான் காணிக்கை.”

“பிறந்தால் நாங்களே கொண்டு வருகிறோம்.” “பிறந்தாலாவது! பிறக்கும்.”

அவர்களுக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று தினந்தோறும் கடவுளை வேண்டிக்கொண்டார் பேரின்பநாயகம். அன்றிலிருந்து அவர் சித்தர் அல்ல ; பக்தர்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “நாதனுள்ளிருக்கையில்

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு அகிலன் அவர்களின் கதையைப் படித்து மகிழ்ந்தேன்

  2. ஒரு அற்புதமான தர்க்கம். அந்தத் தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்களையும் கூறிவிடுங்கள். நல்ல உரையாடல். தெளிவான மொழி நடை. பாரட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *