கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 11,459 
 

சின்ன வாய்க்கால், கல்பாலம் தாண்டி இருக்கும் அரசமரத்தடியிலும் அதற்கு மேற்கு பக்கம் இருக்கும் கொண்டை ஐயர் தோப்பிலும் சித்தப்பாவை காணவில்லை.

வெயில் சுள்ளென்று வாட்டி எடுத்தது. காலில் செருப்புப் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம். நடுபாதத்தில் சூடு ஏறி மூளைக்குள் சுட்டது. செருப்பையும் எப்படி போடுவது? அதுதான் வார் அறுந்து கிடக்கிறதே. வேறு வார் வாங்கவோ, அல்லது புது செருப்பு வாங்கவோ இப்போதைக்கு முடியாது. இன்னும் இரண்டு மாதங்கள் அப்பாவின் மணியார்டருக்காக காத்திருக்க வேண்டும். அதுவரைக்கும் சூட்டோடு நடைதான். செருப்பு வந்த பிறகு இந்த வெயில் நின்று போயிருக்கும். இப்படித்தானிருக்கிறது வாழ்க்கை. இது இருந்தால் அது இல்லை, அது இருந்தால் இது இல்லை.

ஏமாற்றத்தோடு தெற்கு நோக்கி நடந்து கொண்டிருந்தேன். கண்ணாடி ஆச்சி கொல்லையில் கொய்யா மரமும் நார்த்தங்காய் மரமும் காய்களோடு நின்றிருந்தன. அதில் அணில்கள் மேலும் கீழும் ஓடிக்கொண்டிருந்தது. கண்ணாடி ஆச்சி வெளியூர் சென்றிருந்தபோது, இங்கு திருடி தின்றதுண்டு. இந்த மரத்தின் கொய்யாவிற்கு மட்டும் அப்படியொரு சுவை. இப்போதும் காம்பவுண்ட் சுவர் மீதேறி நின்றுகொண்டு யாருக்கும் தெரியாமல் பறிக்க முடியும். இந்த வெயிலில் ஆச்சி பேன் போட்டுக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கும். இருந்தாலும் வேண்டாம். சித்தப்பா காதுக்கு சென்றுவிட்டால், இதன் பொருட்டு வாங்கும் அடியை நினைக்கவே முடியவில்லை.

எதிரில் சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த பால்க்கார கணேசனிடம் கேட்டேன்.

‘சித்தப்பாவ பாத்தியேலா’

‘மைக் செட் முருகன் வீட்டுலலா இருந்தாரு, அந்தப் பயலுவோ கூட’

‘சரிண்ணே’

அவன் சொன்ன ‘அந்தப் பயலுவோ’ கல்லூரி படிக்கும் மாணவர்கள். சித்தப்பாவுடன் எப்போதும் அலைந்துகொண்டே இருப்பார்கள். அவரது பேச்சு அப்படி. யாரையும் எளிதில் மயக்கி விடும். அவர் எதைப்பற்றியும் பேசுவார். அவர் படித்துமுடித்ததுமே இரண்டு கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. கட்சிதான் பெரிதென்று வேலைக்கு போக மறுத்துவிட்டார்.

சித்தியை காதலித்து கல்யாணம் முடிக்கும் முன், அவர் நிறைய படித்துக்கொண்டிருப்பார். வீடு முழுவதும் பெயர் புரியாத புத்தகங்கள். இதையெல்லாம் படித்தால் நல்ல சிந்தனை தோன்றும் என்று சொல்லி அந்த மாணவர்களுக்கு கொடுப்பார். படித்துவிட்டு அதுபற்றி சித்தப்பாவுடன் விவாதிக்க வேண்டும். இப்படித்தான் ஒரு வித போதையில் சித்தாப்பாவுடன் இருந்தார்கள், அந்த மாணவர்கள்.

ஒரு நாள் மாலை, ஆற்றுமணலில் படுத்துக்கொண்டு சித்தப்பா, ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றி பேசப்பேச, அவர்கள் ஆ வென கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் பேச்சில் சொல்லடுக்குகளின் இனிமையும் ஆவேசமும், ஏற்ற இறக்கங்களுடன் அவர் சொல்லும்விதமும் நம்மை கட்டிப்போடும்.

அவர் பேசி முடித்ததும் அது பற்றி விவாதம் நடந்தது. விவாதத்தில் போதையிலிருந்த ஒரு மாணவன், எடக்கு மடக்கான சில கேள்விகளை கேட்டான். சித்தப்பா சார்ந்த அரசியல் கட்சிப் பற்றியும் கேள்விகள் வந்தது.

‘‘இந்த தேசம் நமக்கானது. தலைவர்கள் நம்மால் நமக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் போடும் திட்டங்கள் நமக்காக. நம் மக்களுக்காக. ஆனால், ஏன் இன்னும் வறுமையோடும் பட்டினியோடும் இந்த நாடு அவஸ்தைப்பட்டுட்டிருக்கு?’

-என்று கேட்டுவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டார். முன்னால் கிடந்த பாக்கெட்டிலிருந்து அவர்களில் சிலரும் பற்ற வைத்தனர். முழுப்புகையும் வாயிலிருந்து வெளிவரும் முன்பே, சித்தப்பா ஆரம்பித்தார். அவர் வாயிலிருந்து தவணை முறையில் நாக்கு மேவாயிற்குள் நசுங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருந்தது புகை.

‘அததான் சிந்தக்கணும். நீங்கள்லாம் இளைஞர்கள். இந்த தேசம் உங்க
பின்னாலதான் இருக்குன்னு சொல்லிட்டு போக விரும்பல. எல்லாருமே
சுயநலத்துக்காக வாழணும்னா, இந்த நாடு ஏன்? நீங்கதான் யோசிக்கணும்.
காலேஜுக்குப் போனோம். பொண்ணுங்க பின்னால சுத்தினோம்னு இருக்காம, சமூகத்தைப் பத்தியும் சிந்திக்கணும்’

இதைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, சித்தி சாப்பிட்டிருப்பாளா? ஒன்றரை வயது தம்பிக்கு பால் வாங்கி கொடுக்க காசிருந்திருக்குமா? என்ற யோசனைதான் எனக்கு வரும்.

சித்தி மகா பொறுமைசாலி. சித்தப்பாவின் பேச்சில் மயங்கிய பல சொந்தக்கார பெண்களில், சித்தி மட்டுமே அவரது காதல் வலையில் விழுந்தாள். கட்சி, அரசியல் என்று அலையும் சித்தப்பாவை கல்யாணம் செய்துகொண்டதில் வறுமையை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருப்பவள். ஆனால், அந்த கஷ்டங்களை வெளிக்காட்டாமல் இருக்க, எப்படி முடிகிறது அவளால் என்பதும் புதிர்தான்.

யோசனை இப்படி சென்றதுமே, ‘சித்தப்பாவே இதைப் பற்றி சிந்திக்காத போது நமக்கேன் அக்கறை’ என்று தோன்றும். ஏனென்றால் அவள் என் சித்தி. சிறு வயது முதல் என்னை இடுப்பில் வைத்து வளர்த்தவள். நானே பதிலும் சொல்லிக்கொள்வேன்.

ஒரு முறை எனக்குத் தோன்றிய கேள்வியை, ஒரு மாணவன் சித்தப்பாவிடம் கேட்டபோது, மகிழ்ச்சியாக இருந்தது.

‘வறுமையை ஒழிப்பதற்கான போராட்டம் தேவைதான். இவ்வளவு
வறுமையிலயும் குடும்பத்தைக் கண்டுக்காம, போராட்டத்துலயும்
கூட்டங்கள்லயும் பங்கெடுத்துக்கறதுல என்ன அண்ணாச்சி
நியாயம் இருக்கு?’

‘கஷ்டங்கறது இருக்கு. இல்லாம இல்லை. உலக மாற்றத்துக்கு வித்திட்ட
காரல் மார்க்ஸுக்கு வராத கஷ்டமா? அவ்வளவு கஷ்டத்துலதானே அவரு
மூலதனத்தை எழுத முடிஞ்சது? வறுமையில இருக்கிறவன்தான் அதுக்கு
எதிரா போராட முடியும். சுக போக வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்கிறவன்
இதுக்கு ஏன் வரப்போறான்?’

நிறைய பேசிக்கொண்டிருந்தார். இந்தக் கேள்விக்குப் பிறகு சின்ன உறுத்தல் வந்து குடும்பத்தைப் பார்ப்பார் என்று நினைத்தேன். ம்ஹூம்.

தமயந்தி டீச்சர் வீட்டின் பின்பக்கம் இருந்தது மைக்செட் முருகனின் வீடு. டீச்சர் வீட்டிலிருந்து இறைச்சிக் குழம்பின் வாசம் மூக்கைத் துளைத்துக்கொண்டிருந்தது. முயல், கருவாலி, கோழி ஏதாவது ஒன்று வெந்துகொண்டிருக்கலாம். டீச்சர் மகன், நீல் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு வேட்டைக்கு செல்வதைப் பார்த்தேன். அவன் வேட்டை பெரும்பாலும் கருவாலியாகத்தான் இருக்கும். இப்போது, ‘நீலு இருக்கானா டீச்சர்?’ என்று கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தால், குழம்பில் வெந்துகொண்டிருக்கும் கறி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இப்போது எங்கே நேரம் இருக்கிறது?

முருகன் வீட்டுவாசலில் அவன் மனைவி, மீன் கழுவிக்கொண்டிருந்தாள். இது, சித்தப்பா அண்ட் கோ விற்கும் சேர்த்து தயாரிக்கப்படுவதற்காக இருக்கலாம். என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, ‘என்னப்பா சித்தப்பாவ பாக்கவா? அந்தா, பின்னால வாசமடக்கி மரத்து பக்கதுல உக்காந்திருககவோ… பாரு‘ என்றாள்.

இடப்பக்கம் இருந்த வைக்கோல் படப்பில் இரண்டு ஓணான்கள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டிருந்தன.

கசங்கிய வெள்ளைச்சட்டை காலரை, முதுக்குக்குப் பின்னால் தூக்கி விட்டுக்கொண்டு, மரத்தில் சாய்ந்திருந்தார் சித்தப்பா. தரையில் அப்பியிருந்த நிழலில் அந்த மாணவர்கள் அமர்ந்திருந்தார்கள். மைக் செட் முருகன் என்னைப் பார்த்ததும், ‘வாப்பா’ என்றார். அதைத்தொடர்ந்து எல்லோரும் என்னைத் திரும்பி பார்த்தார்கள். ‘இவன் ஏன் இங்கு வந்தான்’ என்பது போல் இருந்தது சித்தப்பாவின் பார்வை.

‘என்னல’

‘தெங்காசியிலருந்து விருந்தாள் வந்திருக்காம். சித்தி கூட்டிட்டு வரச்சொன்னா’

‘இங்ஙன இருப்பம்னு யாரு சொன்னா’

‘பால்கார கணேசன்’

சரி சரி என்று சட்டைப்பாக்கெட்டை தடவினார். புரிந்துகொண்ட ஒரு மாணவன், பத்து ரூபாயை என்னிடம் நீட்டினான்.

‘இங்கரு, சித்திய வெளிய கூப்ட்டு கொடு. நான் அம்பாசமுத்ரம் போயிருக்கேன்னு வந்திருக்கவங்ககிட்ட சொல்ல சொல்லு, என்னா’

‘ம்’

வீட்டுக்கு வந்தபோது, சித்தி அவர்களிடம் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தாள். கடந்த வாரம் சித்தப்பா தென்காசி பொதுக்கூட்டத்தில் பேசியதையும் அதைத் தொடர்ந்து அவரை சந்திக்க முயன்றதாகவும் அங்கு அது முடியாமல் போனதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார் அவர். வெளியில் அழைத்து விஷயத்தை சொன்னதும், ‘அவ்வோ, அம்பாசமுத்ரம் போயிருக்காவளாம்… நீங்க எலுமிச்ச பழ ஜூஸ் குடிச்சுட்டுதாம் போணும். வீட்டுக்கு வந்துட்டு சும்மாவா அனுப்புவேன் உங்களை’ என்றாள்.

வந்திருந்தவர்கள், வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தும், சித்தி பிடிவாதமாக என்னை கடைக்கு அனுப்பினாள் எலுமிச்சைப் பழம் வாங்க.

கடைக்கார லட்சுமணன், ‘ஏய், எண்பத்தெட்டு ரூவா பாக்கி இருக்கு.போன மாசமே தாரம்னான் உங்க சித்தப்பன். இன்னைக்கு வரைக்கும் கண்ணுல காண முடியல. நான் ரூவா கேட்டேன்னு சொல்லுடே. நானென்னா தர்மத்துக்கா யாவாரம் பண்ணிட்டிருக்கேன். நான் வருத்தப்பட்டேன்னு சொல்லு’

‘சரி’

எப்படி வாழ்க்கையை சமாளிக்கிறார் சித்தப்பா. அரிசி, அம்மா கொடுத்துவிடுகிறாள். கட்சியிலிருந்து கிடைக்கிற குறைந்த ஊதியம் அவர் சிகரெட்டுக்கே சரியாகிவிடுகிறது. பிறகெப்படி?

இந்த சம்பவத்துக்குப் பிறகு மும்பையில் காய்கறிகடை வேலைக்கு சென்றுவிட்டேன் நான். சித்தப்பா பற்றிய தகவல்களை, ஊருக்குப் போய்விட்டு வருபவர்கள் வாயிலாக அவ்வப்போது அறிந்துகொள்ள முடிந்தது. சமீபத்திய தகவல்: கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார்.

நான்கு வருடங்களுக்குப் பிறகு அக்காள் திருமணத்துக்காக ஊருக்கு வந்திருந்தேன். தம்பி வளர்ந்திருந்தான், ஒல்லி சித்தி இன்னும் ஒல்லியாகி, பீடிச் சுத்திக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும், யாரோ தெரியாத ஆள் மாதிரி தம்பி ஒளிந்துகொண்டான். சித்தப்பா, கோவையில் ஒரு கார்மென்ட் கம்பெனியில் செக்யூரிட்டியாக இருக்கிறார் என்று சொன்னாள் சித்தி. திருமணத்துக்குப் பிறகு, அட்ரஸ் வாங்கிகொண்டு கோவையில் அவரைச் சந்தித்தேன்.

கண்கள் குழி விழுந்து, கன்னங்கள் உள்ளேப்போய், முகத்தில் பழைய செழுமை குறைந்து… அவரைப் பார்த்ததும் கண்ணீர் வந்தது. சிறிது நேரம் அழுது முடித்துவிட்டு கேட்டேன்.

‘சித்தாந்தங்களைப் பேசிட்டு பொழுதை கழிச்ச காலத்துல, ஏதாவது ஒரு வேலைக்குப் போயிருந்தா, இப்ப நல்லாயிருந்திருக்கலாமே சித்தப்பா’

‘போடா பைத்தியக்காரா, சித்தாந்தங்கள் ஒரு நாளும் சாகாது. செத்துப்போனது உன் சித்தப்பன்தான்’

– 2001-ல் கல்கியில் வெளியான கதை. …………………

எனது ‘பூடம்’ சிறுகதை தொகுதியி்ல் இடம்பெற்றுள்ளது. எனது வலைப்பூ aadumaadu.blogspot.com விலு்ம் இடம்பெற்றுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *