கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2024
பார்வையிட்டோர்: 356 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“யாரது? இன்னிக்கு ஜோலி- ஐயோ சாமியா? ஐயா வாங்க. மன்னிச்சுக்கிடுங்க. ஏட்டுலேருந்து தலை நிமிரல்லே. யாருன்னு கவனிக்கல்லே. பாயிலே குந்தா தீங்க. வேணாம், வேணாம். சோபாவுல அமருங்களே துரை, ஐயாவுக்கு இடம் விடுலே ! ஐயாவை தெரியுமா டெய் – தெரியாது? ஏசண்டு ஐயாடா! ஓ நீங்க இங்கே மாத்தலாயி மாசம் நாலாயும் இந்தப் பக்கம் வல்லெல்லா ? கவனமா வல்லே. இப்பவாச்சும் அதான் காளிக்குக் ஐயாவுக்கு நெனப்பு வந்துருச்சே, சந்தோசம். காளியும் உங்களுக்கு எப்படித் தெரியும் ? முதலாளி மவங்க. நீங்களும் காளியை மன்னிச்சுக்கிடணும். சின்னவங்க பெரிய வங்க மருவாதை சொல்லிக் கொடுத்தாத்தானே தெரியும்! எப்படியும் முதலாளி மவனில்லே? முதலாளியைக் காட்ட யும் இந்த காலத்துக்கு முதலாளி மவன்தான் துரை. நாளாக ஆக உரைகல்லுலே முதலாளியை மிஞ்சிடுவான். அப்படித்தானே இருக்கணும்! காளி கணக்கப்புள்ளைக்குக் காவல். ஏலே நானும் பேசிக்கிட்டு இருக்கேன் நீயும் பாத்துக்கிட்டு நிக்கே? ஐயாவுக்கு ஒரு ‘பாண்டா’ வாங்கி வா. கண்ணுல்லே ? காளி ரொம்ப நல்ல பையன். 

வந்தவுடனே சாமி வந்த காரியம் என்னான்னு நான் என் வாயாலே கேட்கக் கூடாது. கேக்க மாட்டேன். எங்க பேரேட்டைப் ஏன் கேக்கணும் ? ஐயா வந்தது பாக்கத்தானே? நீங்க வர்ரப்போ நான் கண்ணைக் கவிச் சுக்கிட்டிருந்தேனே அதைப் பாக்காதீங்க. அதைக் கண்ணுல கூடக் காட்டக் கூடாது. அது எங்க சத்யம்; அரிச்சந்திரன் கட்டின தாலி. இந்தக் கச்சாக்காட்டுலே கரடி, சிங்கம், புலி எல்லாம் நடமாடும். காடு முதலாளிது. கரடி, புலி கணக்கப்புள்ளைது. கணக்கப்புள்ளையை கரடி கட்டினா என்ன? புலி தின்னா என்ன? அவங்க இங்கே புளைக்க வந்தவங்க. நாம் இங்கேயே பிறந்து வளந்தும் அவங்ககிட்டே புளைக்கற வங்க. ஒவ்வொருத்தன் உலகமே பிறத்தியான் எழும்பு மேலே எழுப்பின கட்டடந்தானே! ஐயா மன்னிச்சுக்கிட ணும். நான் வயசாளி, சாக்கடை, ஏதேதோ எனக்கே பேசிக்கிட்டேன். இதோ இளுத்து மூடிட்டேன். அதெல் தனிப்புள்ளி லாம் ஐயா கண்டுக்காதீங்க. பாங்குக்குத் வச்சிருக்கோம். அதை எடுத்துக் காட்டீடறேன். 

என் மனது என்ன சிரிக்கிறீஹ? சாமி சிரிச்சுது. மலர்ந்தது. இதோ காளி வந்துட்டான். என்ன தம்பி ‘பாண்டா’ வாங்கி வரச்சொன்னா கோலா கொண்டு வந்துருக்கே? அதுவும் கோலி! என்ன, கடையிலே பாண்டா தீர்ந்து போச்சா? இந்த ஊர்லே உனக்கு சோடாக் கடையே ஒண்ணுதானா, பாண்டா இல்லாத கடையாப் பாத்து…? என்னா சொன்னேன்சாமி. பாத்தீங்களா பையனை! அப்பன் மாகாணியிலே மரமா காய்ச்சா, மகன் முந்திரியிலே முத்துக் குளிக்கிறான். இதெல்லாம் சொல்லியா வருது? பரம்பரையா ரத்தத்துலே ஊறின தில்லே! என்ன முதலாளி உன்பக்கம் பேசுதேன்னு பாக் கயா? போய் கோலியை மாத்திவாடா! சரி சரி. அதையே கொண்டா. ஐயாவுக்கு கூல்டிங்கே ஆவாதாம். ஆவா துக்கு எதுவானா என்ன? கடை காப்பி குடிக்க மாட்டாரு. கடுக்காக்கஷாயம், பாரு ஐயா கேக்கறாரு பாரு:”கணக்கப் பிள்ளைவாள் உங்ககடையிலேகலர் குடிக்கவா வந்தேன்”னு உனக்கு காது கேக்கல்லே? நேக்கு கேக்கு. நேக்கு சொல் லாததும் நல்லா கேக்கும். சொன்னாத்தான் சொல்லா? ஐயா கண்டிப்பா கலர் குடிக்க வல்லே. நமக்கு தெரியாதா ஐயா ஈட்டுக்கடை பேரமும் இல்லை. நமக்குத் தெரியாதா? ஆனா எங்க கடை மரியாதை, என்ன ஆவறது? பச்சைத் தண்ணியைப் பச்சையா குடுக்கறதா ? சாயம் கொஞ்சமாச் சும் தோயணுமிள்ளா ! பரவாயில்லே. கோலியானாலும் நுரை எப்படி கக்குது பாக்கையளா ? சும்மா சாப்பிடுங் கன்னா. உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது. கியாஸ் ஏகமா அடைச்சு வெச்சுருக்கான். என்ன அதுக்குள்ளேயும் எளுந்துட்டீஹ? அவசரமென்ன, குந்துங்க. ஓ ! நம்ம இடம் சுத்திப் பாக்கணுமோ? அதைவிட சந்தோசம் எங்க ளுக்கு என்ன ? இதோ ஒரு நிமிடம் பொறுங்க.கல்லா வைப் பூட்டிக்கிறேன். எலே காளி நான் வர வரைக்கி வாசல்லே கண்ணாயிரு. சோபாவுல மல்லாந்திடாதே. 

ஐயா இந்தப் பக்கமா வாங்க கொஞ்சம் இருட்டுத் தான். இந்த வியாபாரத்துக்கு வெளிச்சம் ஒவ்வாது. அதி லேயே ஒரு தருமம் இருக்கில்லே! எங்க முதலாளி பக்திமா னுங்க. பெரிய கோவில் பிரம்மோற்சவத்துல குதிரை வாகன மண்டகப்படி பூரா அவருது. இதைத் தவிர வருஷா வருஷம் பங்குனி உத்தரத்தன்னி கல்யாணத்திலே அம்மன் சுண்டு விரலுக்கு கெட்டி மோதிரம் அஞ்சு தலை பாம்பு படம் எடுத்து சொளையா மூணு பவுனுக்கு குறைவில்லே. எங்க முதலாளிக்கு முழுகிப்போன தங்கத்துக்குப் பஞ்சமா? 

இத பாருங்க. சூத்திரத்தின் சூத்திரத்தின் சூச்சுமமே இதான். மாஹாணியும் முந்திரியையும் அவங்க மந்திரமா ஜெபிச்சா பவுனு, தானா களுத்துலேயும், காதிலேயும் இடுப்புலேயும் (இடுப்பா அது? மாவாட்டற கல்லா ?) பூட்டிக்கிது. இதுநான் சொல்லுது. மண்ணுலே புதைச்சு மறந்தது போக, பானையில உண்டை உண்டையா ஒளிச்சு, வந்தவன்கண்டுபிடிச்சுப் போனது போக மிச்சம் இன்னும் மூணு தலைமுறைக்கு கவலையில்லை. 

சாமி நான் அனுமாரா வாயைப் பொத்திக்கிட்டுப் பேசறேன். ராமரைச் சொல்லியும் ஆவனும். ராமனைக் காட்டிக் கொடுக்கவும் மாட்டேன். நான் கவுடு இல்லாமே விட்டுப் பேசறேன். அவ்வளவுதான். நான் குத்தம் சொல்லல்லே. பத்து வயசுலே இந்தக் கடைக்குத் தினம் மத்யானச்சயா, மாசம் முப்பது முடிஞ்சதும் முளுசா மூணு ருவா சம்பளத்துக்கு வந்தேன். எனக்கு இப்போ வயது அறுவத்திஏளு. ஏந்தா, நின்னா, முட்டிப்பூட்டு விட்டுப் போவுது. எனக்கும் என் பொண்ணு மூணுக்கும் கல்யாணத்துக்கு உதவினது அவாதான். கோவில்ல வச்சுத்தான் கல்யாணம். கோவில் வெளிச்சத்துலே. நாலு பக்கமும் வச்சு நாலு பந்தி வடியலுக்கு அரிசி அளந்தது அவாதான். தாலியும் புடவையும் அவங்க உபயம். ஆனா மூலம் ரெண்டு, இரணியா ஒண்ணு ஆபரேசன் மூணுக்குக் கொடுத்தது கடன்தான்னு கங்கணம் கட்டனாங்க. நான் எங்கே கடனை கொடுக்கப் போறேன்? என் கடன் தீருமா? நான் சொல்லியாச்சு, ஐயா நான் உங்க காலில் தேஞ்ச செருப்புத் தோல், உள்ளங்காலோட ஓட்டிப்போய் குதிகால் சதையோட வளந்தாச்சுன்னு. இந்த ரூவாயை மூக்கை சொரிஞ்சு காதைத் திருவி, கன்னத்தைக் கிள்ளிக் காட்டற பரிபாஷையில் பற்று எழுதினாலும் இதெல்லாம் காட்டாத கணக்குல சேர்த்ததுதான். காலத்துக்கேப்ப ஒரு பச்சை நோட்டும் அதுல பாதியும் பாக்கறேன். பாவம் பொழைச்சுப் போறேன். அம்பது வருடத்துலே மூணு தலைமுறை முதலாளி பார்த்து, இதுகூட இல்லாம இருக்குமா? 

ஆனா இத்தெல்லாம் என்னை நம்பித்தானே விட்டு ருக்காங்க! அவங்க காரைக்குடியில் அமர்ந்துகிட்டு! அந்த நன்றி மறக்கலாமா? அத்தாலேதான் ஒரு நாளைக்கு ரெண்டுதாட்டியேனும் இந்த தள்ளாமையிலேயும் திருப்பதி மலையாட்டம் பாங்கு மாடி ஏர்றேன். மாடி ஏர்றபாவமோ புண்ணியமோ. பாங்கு கணக்கு படியேறி வந்த இடத்துல குந்த வச்சி நீங்கதான் பேசறீங்க ஓரொரு நாள் காப்பியும் ஆர்டராவுது. எல்லாம் நீங்க கொடுத்த இடந்தான் இப்படிப் பேச வைக்குது. 

பேங்குல மட்டுமில்லே. நாங்களும் இரும்புப் பெட்டி வச்சிருக்கோம் பாத்தேயளா? முட்ட முட்ட அத்தனையும் தங்க நகைங்க. பேங்க்குல மறு அடகு வச்சுருக்கோம்- வெறும் கண் துடைப்பு. பேர் பொறிச்சுது, கல் பதிச்சது நீங்க எடுக்க மாட்டீங்களே. நாங்க எல்லாம் எடுப்போம். பாட்டன் சொத்தா, திருட்டுச் சொத்தா கேக்கமாட்டோம். திருப்பினா அவனுது முழுகினா நம்மது. நியாயந் தானே. ஏழைபாழை மட்டுமில்லை. பணக்காரன்கூட பாங்க்குவரை பேர் போகாமே மானம் பாக்கறவன், அப்பாவுக்கு தெரியாமே புள்ளே, புருஷனுக்கு தெரியாமே பெண் சாதி, ஒரு வைப்பாட்டிக்குத் தெரியாமே மைனர் … அவங்க அக்கப்போர் எல்லாம் நமக்கு எதுக்கு? ‘அப்பா, கடனை கொடுத்துட்டு பொருளை மீட்டுக்க’, இந்த ருத்திராச்ச கண்டியைப் பார்த்தீங்களா? சும்மா கையிலே தூக்கிப் பாருங்க. இந்த நாள்லே இப்படிச் செய்ய முடியுமா? இந்தப் பொன்னுதான் உண்டா? பிணகனம் கனக்கல்லே? வச்சுட்டுப் போனவன் இன்னும் திருப்பப் போறான். மூணு தலைமுறையாச்சு. அவன் பொணத்தை அவன் வயல் கிணத்துலேருந்தே எடுத்தாங்க, கழுத்துலே ரெண்டு கத்திக்குத்து. பொணத்தை நானே பார்த்தேன். நானே அழுதேன். அவன் புள்ளையைக் கட்டிக்கிட்டு ஆனா பண்டத்தைப்பத்தி மூச்சு விட்டிருப்பேனா? இது போல ஏதேதோ, என்னென்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இங்கே அடுக்கி வெச்ச பண்டத்துல ஒரு குந்து மணி குறைஞ்சாலும் முதலாளி ஆச்சிக்கு மூக்கிலே வேர்த்துடும். 

ஓ! படி ஏறியும் பார்க்கணுமா? வாங்க!! வெண்கலத் துக்கும் பித்தளைக்கும் கொடுக்க மாட்டீங்களே! பார்த்து ஏறுங்க. இங்கே எல்லாம் படி குறுகல். நம்ப மாதிரி தாட்டிகளுக்கு தகறாறுதான். 

ஆ! என்ன மலைச்சு நிக்கறய எத்தனை குத்து விளக்கு ஒரு முகம், மூணு முகம், அஞ்சு முகம்-எத்தனை குடம், எத்தனை அண்டா, எத்தனை தவலை தட்டு, டிபன் செட், சின்னது பெரிசு, நடு ஸைசு, இதென்ன பாத்திரக் கடையோன்னு பாக்கறையளா? இது மேடையில் ஏழை கடன். கீழே பேழையிலே பணக்காரன் கடன். ஐயா நான் சொல்றேன். உழவன் கணக்கு ஓயாக் கணக்கு. அதைச் சித்திரபுத்ரன் கூட கட்ட முடியாது. அவனுக்கு கஷ்டத்தை மறக்கணுனாச்சும் குடிச்சாவணும். சுகத்தைக் கொண் டாடினாச்சும் குடிச்சாவணும். ஐயா பசுவிலே சாது இல்லை பிராம்ணன்லே சாது இல்லேன்னு (சாமி மன்னிக்க!) சொல்றோமில்லே! அத்தோட சம்சாரியும் சேர்த்துக்கணும்னு நான் சொல்வேன். அப்புறம் என்ன எல்லோரும் பொல்லாதவரே. கடன் வாங்கற வரைக்கும் காலைப் பிடி. வாங்கினப்புறம் காணாம போயிடு. இத பாத்தீங்களா இந்த சோத்துக் கிண்ணத்தை? இதுக்குள்ளவன் வெச்சு வாங்க வந்தப்போ மாட்டேன்னு அடிச்சுக்கிட்டேன். 

“ஏம்பா இசக்கி இதுக்கு என்னதான் வரும்னு நினைக்கே?” 

“கொடுக்கறதைக் கொடுங்க.” 

“வச்சப்புறம் எதுலே சாப்பிடுவே?” 

“உள்ளங்கையை எதுக்கு ஆண்டவன் படைச்சிருக்கான். அள்ளுக்குத்தானே! கிண்ணி வர்ர வரைக்கு அவளே ஊத்தறா. அதுமேலே ஊறுகாயும் வெக்கறா. அதுவே ஒரு ருசி.” 

ஆமாம். பசிக்கிறவன் ருசியா பாக்கறான்? என்னென் னவோ சொல்லிப் பார்த்தேன். உடனே மேல்துண்டுலே கட்டின மூட்டைலேந்து முள்ளங்கி முடியை எடுத்தான் பாருங்க. இலையும் தழையுமா தவப்பிஞ்சு அஞ்சு முள்ளங்கி. முள்ளங்கின்னா எனக்கு ரொம்ப பிரியமுங்க. பருப்பு வேணாம். தேங்காயும் தேவையில்லை. வெத்தா அவிச்சுக் கொட்டி உப்போடு தாளிதம்..ஆஹா. நாக்கிலே ஜலம் ஊறுது. லஞ்சம்னு நீங்க சொல்லுவீக. 
அன்புன்னு அவன் சொல்லுதான். ஆமான்னு சொல்லுதேன். சரி எல்லாமே அப்பிடி அப்பிடித்தான் ஐயா, அவனுக்கு மூணு வட்டிக்கொடுத்து வாங்கி மீட்டு மூணு நாள் பொறுத்து, திரும்ப வெச்சாத்தான் அவன் மாடா உழைச்சது அவன் உடம்புலே ஒட்டுது. நீங்களும் நானும் என்ன செய்ய? இன்னொரு பீரோலே அவங்க அவங்க அவசரத்துக்கு வச்சுட்டு போன புடவை, வேட்டி அடுக்கி வச்சிருக்கு. இன்னுங் கேட்டா சோம்பு அள்ளித் தெளிச்சாப் போல அவன் பையன் படிச்சு பெரிய சர்டிபேட்டு கூட சரி சரி. அதெல்லாம் நீங்க தாள மாட்டீங்க. இப்பவே உங்க கண் துளும்புது. நீங்க உங்க வேலைக்கு லாயக்கில்லேன்னு கண்டுகிட்டேன். சாமி மன்னிக்க. சரி இறங்குவோமா? 

சாமி தப்பா நினைக்காதீங்க. ஆச்சிக்கு இஷ்டப் பட்டா சொல்லி விடுங்க. விளக்கோ, குடமோ, தவலையோ, எந்தப் பண்டமோ சகாயமா முடிச்சுத் தர்ரேன். வாங்கிப் போட்டா பொண்ணுக்கு சீர் ஆவுது. சுறுசுறுப்பா செவத்த தோலா இரட்டைப் பின்னல் போட்டுகிட்டு ஒன்பது மணிக்கு கிளம்புதே அதுதானே? அந்த வேளைக்குத்தான் நான் வேலைக்கு வர்ரேன். செல்லப் பொண்ணு. நல்லாயிருக்கணும். சரி. வர்ரீங்களா?” 


அன்றிரவு நான் ஒரு கனாக்கண்டேன். 

அத்தனை குத்து விளக்குகளும் குப்பென தானே ஏற்றிக் கொள்கின்றன. அவைகளின் வரிசை பாம்பு வளைவில் நெளிகின்றது. அதினின்று ஆடும் நிழலும் ஒளியும் இழைந்து கலந்த தண்ணொளிப் பிழம்பு இதழ் இதழாய் விரிந்து கொண்டே கண்ணைக் கவிகிறது. இப்பெருமலரின் வயிற்றிலிருந்து மங்கலக் குலவையா? உயிரின் ஓலமா? பிரித்துப் புரியவில்லை. பின்னணியில் ஒரு இரைச்சல் அலை பாய்கிறது. 

இவ்வொளி மலரின் இதழ்களில்:- ஒன்றில், 

ஒருத்தி படத்துக்கெதிரே குத்துவிளக்கு ஏற்றுகிறாள். அவளுடைய புதுப் புடவை புசுபுசுக்கிறது. 

இன்னொரு இதழில்: 

கழுத்து வரை இழுத்துப் போர்த்தி, தரையில் வளர்த்தியிருக்கும் உருவத்தின் தலைமாட்டில் தட்டில் அகல் எரிகிறது. தேங்காய் உடைத்து வைத்திருக்கிறது. அவன் அருகே அவனுடைய ஸ்த்ரி கைகூப்பி அமர்ந்திருக்கிறாள். நெற்றி மஞ்சள் பூச்சின் நடுவில் குங்குமம் விழியுருட்டுகிறது. 

மற்றுமொரு இதழில்: 

ஒரு கிழவி வெண்கலக் கின்னியில் அவளுடைய கிழவனுக்கு சோறு வட்டிக்கிறாள். படகு போன்ற உடல், நெற்றியில் தகடு போன்று பொட்டு, அவள் குனியுமுன் அவள் தொந்தி சரிகின்றது. பேறுக்கு இடம் கொடுத்துக் கொடுத்து அகன்று விட்ட புவனம். ரவிக்கையைத் துறந்த திரண்ட தோளோடு தொங்கத் தொங்கக் கட்டிய மஞ்சள் கயிற்றில் இரட்டைத்தாலி வெற்றி வீசுகிறது. 

வேறு ஒரு இதழில்: 

ஒருத்தி தன் மகனைத் தோள்மேல் சாத்திக்கொண்டு அவன் வாயில் எதையோ புகட்டிக் கொண்டிருக்கிறாள் மருந்தோ பாலோ? மார்த்துணி கலைந்தது அறியாள். பொங்கும் பாற்கடலில் ரவிக்கை நனைந்ததுமறியாள். வாயில் செலுத்தியது கடைவாயில்தான் வழியுமோ? அல்லது அத்தோடு சேர்ந்த கண்ணீர் மகிமையில் நெஞ்சு வரைப் போய் சஞ்சீவியாய் மாறுமோ? 

ஒரு பெரு இதழின் மட்டத்தினன்று ஒரு மாட்டின் கழுத்தும் அதைக் கட்டிக் கொண்டு ஒரு முகமும் மட்டுமே தெரிகின்றன. மாட்டின் கொம்புகள் அதன் எசமானனின் முகத்தை ப்ரபை போல் சட்டம் கட்டுகின்றன. அவன் கண்களில் தான் என்னே கடல் விளிம்பில் கரை ஓரம் தனி உருவம் நிற்கும் ஆற்றொணாத் துயரம்! மாடு கண்ணாடி பளபளப்பு ஏறிக் கொண்டே வரும் அதன் கடைசிப் பார்வையை அவன் மேல் நிலைகுத்த முயல்கிறது, 

பூவின் வயிற்றிலிருந்து ஒரு அழகி இடுப்பில் குடத் துடன் இதழ்ப் படிகளில் ஏறி வருகிறாள் குத்து விளக்கின் வரிசையை ஒட்டிக் குலுங்கிக் குலுங்கி வருகிறாள். விளக் கின் சுடர்கள் அவளைத் தனித்தனியாய்த் தழுவப் பார்க்கின்றன. குனிந்து பாதத்தில் பணிய வருகின்றன. அவளைத் தொட விழைகின்றன. அவைகளின் வியர்த் தத்தைக்கண்டு அவள் வாய்விட்டுச் சிரிக்கையில் மேல்பல் வரிசையில் ஒரு தெற்றுப் பல் ஒளி வீசுகின்றது. 

இதழில் அவள் குதிகால் பட்டுவிட்ட இடத்தில் பொன்னும், மஞ்சளும், சிவப்புப் பொட்டும் பொட்டுப் பொட்டாகச் சிந்தி ரேகை மின்னுகிறது அவள் இடை என் நெஞ்சில் சென்றுபோன என் இளமையின் நாட் களைக் கடைகிறது. கூந்தலின் கோடரி முடிச்சில் நீலக் வரும் வழியில் கனகாம்பரம் தளையவிழ்ந்து ‘சிரிக்கிறது. குத்துவிளக்கின் பாதம்தடுக்கி. 

ஐயோ !!! 

என் நெஞ்சு தாவுகிறது. நல்ல வேளை விழவில்லை.

ஆனால் குடம் இடையிலிருந்து நழுவி உருண்டு இதழ்களின் படிகளில் தத்தித் தத்தி ஓடுகையில் பாலருவி பூ பூரா பாய்கிறது. 

ஆ! இதென்ன, இதழ்களின் பாறைகளில், பாலோடு ரத்தமா ? என் வயிறு சில்லிடுகிறது. அதைப் பார்த்தும், மெதுவாக என் பக்கம் அவள் சிரிப்பு ஓயவில்லை. திரும்புகிறாள் ‘என்னைப் பார்க்கிறாள்.’ அவள் முகத்தில் கோபமற்ற தீ கொழுந்து விட்டு எரிகின்றது. 

‘ஜ்வாலமுகி’

‘ஜெகத்தீபா’ 

‘காலகல்பாந்தகி’ 

கூந்தலிலிருந்து பூச்சரத்தைப் பிய்த்து என்மேல் எறி கிறாள். அது கங்குபோல் காற்றில் மிதந்து என் மேல்- 

நான் விழித்துக் கொண்டேன். 

விடியிருட்டு, மார்கழி குளிர் கன்னத்தில் வெடுக் கெனத் தேள் கொட்டிற்று. மசூதியிலிருந்து இமாமின் கூவல் நமாசுக்கு எழுப்புகிறது என் கன்னங்கள் நனைந்திருக்கின்றன. 

நான் கண்ட தரிசனத்தின் நெருப்பு ஏழையின் வயிற்றெரிச்சலா அல்லது இன்னும் அவன் நம்பிக்கையின் ஒளியா? 

*தீபக் ராகத்தை தான்சென் பாடியதும் தீபங்கள் தாமே ஏற்றிக் கொண்டனவாம்.

– த்வனி (சிறுகதைகள்), இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 1990, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *