திருந்தாத‌ ஜென்மங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 29, 2021
பார்வையிட்டோர்: 3,252 
 
 

கட்சி அலுவலகம்.

தேர்தல் அறிவித்த தேதி முதலே கலகலப்பாக மாறிவிட்டது. யாரோ ஒருத்தர் வந்து போன இடமாக சில நாட்களுக்கு முன்பாக இருந்தது, இப்போது கூட்டம் கூட்டமாக கட்சிப்பணியாளர்கள் வந்து போகும் இடமாக மாறி இருந்தது.

கட்சித்தலைமை ஒரு வழியாக கூட்டணி பேச்சு வார்த்தையை இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் முடித்திருந்தது.

இன்று போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த வேட்பாளர்களின் நேர்காணல்..

கட்சியின் மேல் மட்டத்தலைவர்கள், முக்கியப் பொறுப்பாளர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் போன்றோர் நேர்காணல் செய்ய‌ ஒரு வழியாக வந்து சேர்ந்தனர்.

நேர்காணல் தொகுதி வாரியாக ஆரம்பமானது.

தெய்வானையும் அங்கு காத்திருப்போரின் வரிசையில் அமர்ந்திருந்தாள். படிப்பு டிகிரி.. பணி சமூக சேவை.. இன்னும் திருமணமாகவில்லை.. அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என சொல்லிக்கொண்டிருப்பவள்.

இன்னும் பல விஷயங்களை அவள் நம்புவதில்லை.. அவை சாதி, மதம், கடவுள், மூட நம்பிக்கை, பழமைக்குத் தள்ளும் சம்பிரதாயங்கள்.

இப்போது கூட எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வேட்பாளருக்கான நேர்காணலுக்கு வந்துள்ளாள்.

வரும்போது இவளது சக நட்புகள் இவளை நன்றாக கலாய்த்து தான் அனுப்பி வைத்தனர்..

“அம்பது சதவீதம் எவ்வளவு உன்னால செலவு பண்ண முடியும்னு கேப்பாங்க, மீது அம்பது சதவீதம் உன் சாதி, மதம் அங்கே எத்தனை சதவீதம்னு பாப்பாங்க.. தட்ஸ் இட்.. அவ்ளோ தான் மேக்சிமம் எதிர்பார்ப்பாங்க.. நீ வேணா பாரு, ஏன்டா போனோம்னு வெறுத்துப் போய் தான் திரும்பி வருவ”

“பார்க்கலாம்.. அதையும்”, என நினைத்துக் கொண்டிருந்த பொழுது, இவளது பேர் அழைக்கப்பட்டது..

மெல்ல எழுந்து,

நேர்காணலுக்கான அறையில் சென்று, எல்லாருக்கும் வணக்கம் செய்துவிட்டு அமர்ந்தாள்.

எல்லோருக்கும் இவளைப் பார்த்ததுமே ஒரு புன்னகையை உதிர்த்தனர்.

“வெரி குட்.. இவ்ளோ சின்ன வயசுல அரசியலுக்கு தைரியமா வந்திருக்கியேமா, உன்ன நான் பாராட்டறேன்”, என்றார் மூத்த தலைவர்.

“மிக்க நன்றீங்க சார்”

“சரி விஷயத்துக்கு வருவோம்.. உன் பேரு, சாதி, மதமெல்லாம் என்னானு சொல்லுமா?”

“சார்… என் பேர் தெய்வானை, எனக்கு சாதி, மதமெல்லாம் எதுவுமே இல்ல..”

“என்னமா இப்படி சொல்லிட்ட, உன் பேர வச்சே, நீ எந்த மதமுனு சொல்ல முடியுமே..”

“இருங்க இருங்க, நான் என்னோட முழுப்பேரச் சொல்லாதற்கு இப்ப வருந்தறேன்.. என்னோட முழுப்பேரு தெய்வானை ரோஸி பேகம்.. சுருக்கமா டிஆர்பி..”

“ஓ.. ஒரு தெளிவான முடிவோடத்தான் வந்திருக்க”

“ஆமா சார்.. இந்தாங்க.. நான் எந்த சாதி, மதமும் சாராதவள் அப்படீனு கவர்ன்மென்டே எனக்கு கொடுத்த சர்டிபிகேட்”

“ஓ.. இதெல்லாம் கூட கவர்ன்மென்ட் கொடுக்கறாங்களா?”

“ஆமா சார்.. இது மாதிரி தமிழ் நாட்டுல இப்ப சர்டிபிகேட் வாங்கினவங்க பத்தாயிரம் பேர் இருக்கோம்..”

“அட”

“ஆமா சார்.. என்னோட ஆசையெல்லாம் சாதி மதம் இல்லா சமத்துவ சமுதாயம், லஞ்ச ஊழல் இல்லா சகோதரத்துவ அரசாங்கம், இன்னைக்கும் அதத் தருவோம், இதத் தருவோம், ஏழ்மையை நீக்குவோம், காசு தருவோம், பணம் தருவோம், ஓட்டு போடுங்க காது குத்துவோம்னு எதச் சொல்லியும் மக்கள ஏமாத்தி ஓட்டு வாங்கறதுல்ல எனக்கு துளியும் இஷ்டமில்ல.. நியாயமா ஜெயிச்சா நியாயமா மக்களுக்கு என்னென்ன வேணுமோ அத ஒன்னு விடாம செய்ய என்னால நிச்சயம் முடியும்”

“சூப்பர்மா நல்லா பேசுற.. ஆனா அத வச்செல்லாம் கொஞ்சம் பேர கவரலாம்.. ஓட்டு வாங்க கூட்டம் போடனும்.. மக்களச் சேர்க்கனும்.. தொண்டர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுக்க ஏதாவது செஞ்சுக்கிட்டே இருக்கனும்.. நாம கொஞ்சம் தொய்வா ஆனாலும் நமக்காக உழைக்கறவங்க பீல் ஆயிருவாங்க.. அதுக்கெல்லாம் ரொம்ப செலவு பண்ணனும்.. எல்லாத்தையும் மேலிடத்துக்கிட்ட எதிர்பார்க்க முடியாது பாரு..”

“கரெக்ட் சார்.. என்னோட சொந்தக் காசு ஒரு நாப்பதாயிரம் இருக்கு.. அத வச்சு டிபாசிட் கட்டிடுவேன்.. மத்த செலவெல்லாம் கட்சி பாத்துக்கிட்டா நான் ஜெயிச்சுக் காட்டுறேன்..”

“பட் உன்னவிட சாதி, மத, பண செல்வாக்குள்ள பல பேரு இதே தொகுதியில போட்டி போட வாய்ப்பு கேக்கறாங்களே.. அவங்களவிட நீ எந்த விதத்துல பெட்டர்னு சொல்லு”

“எனக்கு என்னைத் தெரியும் சார்.. இதே தொகுதியில பல வருஷமா குப்ப கொட்டறேன்.. எந்தெந்த இடத்துல மக்களுக்கு என்னென்ன பிரச்சனைனு இந்த பைல்ல அக்கு வேறு ஆணி வேறா எழுதியிருக்கறேன்… அதுக்கெல்லாம் என்ன தீர்வு.. அத கொண்டு வர எவ்வளவு நாள் ஆகும்.. குத்து மதிப்பா என்ன செலவாகும்னு எல்லாமே இதப் பார்த்தீங்கனா விலாவாரியா உங்களுக்குப் புரியும்.. லாஸ்ட் ஒன் இயரா நான் இந்த முயற்சியில ஈடுபட்டு இருக்கேன் சார்… எனக்கு வாய்ப்பு கொடுங்க… ஜெயிச்சுக் காட்டறேன்.. சாதி மதம் பணம் மட்டும் முக்கியமல்ல.. தீர்க்கமான சிந்தனை.. வலுவான உதவி மனப்பான்மை… உழைக்கனுங்கற எண்ணம் இருந்தாக்கூட போதும் சாதிக்கலாம்னு என்னால நிரூபிக்க முடியும்..”

“குட் மா.. நல்ல எண்ணம்.. சொல்ல வேண்டியத அற்புதமா சொன்ன.. கேட்கும் போதே, இப்படியெல்லாம் எல்லாரும் இருந்தா நாடு எங்கேயோ போயிரும்னு தோணுது.. கிரேட்.. உனக்கான நல்ல சேதி சீக்கிரமா உன்னைச் சேரும்.. இப்ப கிளம்பலாம்..”

“ரொம்ப‌ நன்றிங்க சார்ஸ்..”, என அனைவரிடமும் விடை பெற்று உற்சாகமாகக் கிளம்பினாள் தெய்வானை..

அவள் கிளம்பியதும்,

“என்ன சார்.. கண்ணு கலங்கறீங்க?”

“இத்தன வருஷம் அரசியல்ல இருந்துட்டோம். எதாவது ஒன்னாவது மக்களுக்கு, நாட்டுக்கு தேவையானது செஞ்சிருக்கோமானு நெனச்சுப்பார்த்தா, ஒன்னுமே இல்ல. இந்தப் பொண்ணு தெய்வானை, எவ்ளோ சின்ன வயசு, எவ்ளோ தீர்க்கமா சிந்திக்கறாங்க. மக்கள் நலத்துல என்ன ஒரு வெறி.. ச்ச.. எனக்கு வெக்கமா இருக்குயா.. இனியும் திருந்தாத ஜென்மமா, பணம் சேர்க்கற ஆளா இருக்க ஆசையில்ல, மாறப்போறேன், அப்படி இருக்கற ஒவ்வொரு மனசையும் மாத்தப்போறேன். கண்டிப்பா கட்சி மேலிடத்துல பேசி, தெய்வானைக்கு சீட்டு வாங்கித் தர்றதோட மட்டுமில்லாம, தெய்வானை வெற்றிக்காக கடுமையா பிரச்சாரம் பண்ணி ஜெயிக்க வைக்கப்போறேன்.. சரிதானே?”, என அந்த மூத்த தலைவர் சொன்னதும், ‘சரி’ என்பதாய் தலையாட்டினர் கூட இருந்தோர்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த காற்று, தெய்வானை விண்ணப்பம் தவிர்த்து, மற்ற எல்லா விண்ணப்பங்களையும் அங்கும் இங்கும் பறக்க வைத்தது.

– பாவையர் மலர் மாத இதழ் – மே 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *