‘‘ தகிடு செத்துட்டான்…”
இதுதான் விறகு விற்கும் சந்தையில் விளம்பரமாய் இருந்தது.சிறுவியாபாரிகள் ஒன்று கூடி தகிடுவின் அடையாளமான ஈர்க்குச்சியின் உடம்பைப் பார்த்தார்கள்.வெயிலுக்கும் மழைக்கும் குளிருக்கும் ஒதுங்கிக் கொள்ளும் கட்டிடத்துக்குள் தகிடுவின் உடலைக்கொண்டு செல்வதென முடிவெடுத்தார்கள். இரண்டுபேர் தூக்கிக் கொண்டு கட்டிடத்தின் தரையில் கிடத்தினார்கள். மீண்டும் ஆலோசனை நடந்தது.மாலை, தேங்காய், ஊதுபத்தி கூடவே செண்டு பாட்டிலும் கோடித்துணியும் வாங்கிவர சில்லரைக் காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் அருகே இருந்த முப்பதுவயதான வியாபாரியிடம் கொடுத்தார்கள்.
வியாபாரி1: ‘‘ நேத்து நல்லாத்தானே இருந்தான்.இராவுல எம்பக்கத்தல உக்காந்து சுருட்டுப்புடிச்சானே அப்புறம் கோயில தந்த உண்டகட்டி புளிச்சோறச் சாப்புட்டான்.இளவட்டங்கள் எல்லாம் தகிடுவ புள்ளதாச்சி வவுத்துப் பெருக்கான்னு கிண்டல் பண்ணாங்க. தகிடு பயலும் பொக்க வாய் தெரிய சிரிச்சு மாஞ்சான். நடு இராவுல ஏதும் சொல்லாம போயுட்டானே….. அய்யோ….பாவம்.. ’’
வியாபாரி2: ‘‘ நான் கயிறு கட்டி வச்ச விறவு மேலதான்மேலுக்குச்சாஞ்சி குறட்டவிட்டான். நானும் கண்ண அசந்துட்டேன். நடு இராவுல என்ன நடந்துச்சோ…என்ன வியாதியோ…… மாரடப்பா என்னதுன்னு புரியல ’’.
வியாபாரி3: ‘‘ ஆளுஆளுக்கு இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி…போன உசிரு வரவா போவுது. ஆவுறகாரியத்த பாக்கனும்.கோயில் அறங்காவலருக்குச் சொல்லிஅனுப்புங்க. அனாத பொணத்த அவங்கதான் அடக்கம் பண்ணனும் அததான் முறை ”.
வேப்பங்குச்சியில் பல்துலக்கியபடி வந்த வயதான இன்னொரு வியாபாரியிடம் தகவல் சொல்லிவரும் வேலை ஒப்படைக்கப்பட்டது. அவரும் கரக்…கரக்கென செருப்புத்தேயும்படி அறங்காவலர் வீட்டை நோக்கி நடந்தார்.அவரெல்லாம் வருவதற்குள் தகிடு பற்றிய பிறப்பு, வளர்ப்பு , இறப்பு வரை எனக்குத்தெரிந்தவரை உங்களுக்குச் சொல்லுகிறேன். கதை கேட்கிற உங்களுக்கும் நேரம் போனது மாதிரியும் இருக்கும். இறந்து போன தகிடுவுக்கு வயது அய்ம்பது இருக்கும். தகிடுவோட அம்மா அப்பா சொந்த ஊர் தெரியாது.இங்குள்ள யாரும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன் வாலிப பருவத்திலேயே இந்த விறகுச் சந்தைக்கு வந்து விட்டார். ஏன்வந்தார்…?வயிறு வளர்க்கும் இலட்சியத்துக்குத்தான்.விறகுச்சுமைத் தூக்கியாக.இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் என்ன…? எனக்கும் தெரியாது. இங்குள்ள யாருக்கும் தெரியாது… இந்த விறகுச் சந்தைக்கு வந்தபோது ஒரு தமிழ்ப்படத்தில் வில்லன்நடிகர் ‘‘ தகிடு…தகிடு..” என அடிக்கடி உச்சரிப்பான். அந்த வில்லன் நடிகரைப் போலவே இந்த தகிடுவும் வழுக்கைத்தலை ஒடிசலான உடம்பும் ஒட்டிப்போன வயிறு மாநிறத்தில் கொஞ்சம் சிகப்பு இவைதான் தகிடுவின் தோற்றப்பொலிவு எனலாம்.மனைவி பிள்ளைகள் எதுவும் இல்லை.கூடுதலாகச் சில செய்திகளைச் சொல்லியாக வேண்டும். அவர் ஒழுங்கற்ற தாடியும் தப்பட்டையுமாக இருப்பார்.மேலே அழுக்கேறிய காவித்துண்டு இடுப்பிலே அழுக்கேறிய நிறைய கைத்தையல் போட்ட டவுசர். அது மேலே அழுக்கேறிய கைலி அதையும் டவுசர் தெரியும் படி தூக்கிக்கட்டி இருப்பார். இளைஞர்கள் சிலர், ‘‘ அடே தகிடு இது எத்தினியாவது மாசம்…” என இடுப்பில் கை வைக்க வருவார்கள். காரணம் கைலிகள் நான்கும் துண்டுகள் எட்டும் வைத்துச் சுற்றியிருப்பார்.இப்படிப்பட்ட இடுப்பை யாராவது தொடவந்தால் நெற்றிக்கண் சிவன் கணக்கா கோபம் வந்து கெட்ட வார்த்தைகளில் வசை பாடுவதும் உண்டு. விறகுச் சந்தையும் சிமெண்ட் கூரை கட்டிடமும் தான் அவருடைய உலகம்.சுமை தூக்கும் நேரம் சாப்பிடும் நேரம் தவிர எல்லா நேரங்களிலும் அந்தச் சந்தையில் அவரைப் பார்க்கலாம். விறகுச் சுமை தூக்கும் மூங்கில் கூடை அழகைச் சொல்ல மறந்துவிட்டேன். அந்தக் கூடை பத்தாண்டுக்கு முன்பு பின்னப்பட்ட கூடை அதையும் அவர் சும்மாதான் வாங்கியிருப்பார். பல்வேறு காலகட்டத்தில் புதுமையாக ரிப்பேர் செய்திருக்கவேண்டும். சணல்கட்டு இரும்புக்கம்பிக்கட்டு நூல்கட்டு கிழிந்த துணிக்கட்டு…. புதுக்கவிஞர் சொன்னது போல ‘‘ நெய்தஇடங்களை விட தைத்தஇடங்களே அதிகம் ” என்பது போல மூங்கில் கூடையில் பின்னிய இடங்களைவிட கட்டுப்போட்ட இடங்கள் தான் அதிகம்.மற்றவர்கள் தகிடுவை ஒரு விஷயத்தில் வெறுப்பார்கள்.தகிடு வழவழ கொள கொளவென யாரிடமும் பேசமாட்டார். விறகு வியாபாரிகள் வெட்டிப்பேச்சு நிறைய பேசுவார்கள். தகிடு சுருக்கமாக மெதுவாகப் பேசியே காரியத்தைச் சாதிப்பார். நூறு கருவேலங் குச்சியைத் தூக்கிக்கொண்டு முதல் தெருவுக்குள் நுழைந்தால் இவ்வளவு இரண்டாவது தெருவுக்குள் நுழைந்தால் இவ்வளவு என்று நிர்ணயம் செய்து இருப்பார்.பேசியதற்கு மேல்தான் காசு வாங்குவார்.குறைத்து வாங்கமாட்டார்.‘‘ தாயி… உம்பேரச்சொல்லி ஒருவாயி காபித்தண்ணிச் சாப்படுவேன்…” என்று தன் காரியத்தைச் சாதிப்பார். சாப்பாட்டுக்கு என்ன செய்வார்…?விறகுச் சந்தைக்குஅருகே ஒரு கோவில் உள்ளது.இந்த இடம் கூட அந்தக் கோயிலுக்குச் சொந்தமானதுதான்.வாரிசுஇல்லாத புண்ணியவான்கள் புத்திசாலிகள் பங்காளிகளுக்கு எழுதிவைக்காமல் கோயிலுக்கு எழுதிவைத்தார்கள். அந்தச் சொத்து மூலம் இன்னஇன்ன பூசை அன்னதானம் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகம் தரவேண்டும். அதுவும் சூரியச் சந்திரர் வாழும் காலம் வரை என்று சொத்துக்களை எழுதிக் கோயிலுக்காக விட்டுவிட்டார்கள்.இதிலே அறங்காவலர்கள் தவறு செய்தால்சாமி பார்த்துக் கொள்ளும், கொல்லும் என்பது அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.அச்சம் மிகுந்த நம்பிக்கை நல்ல வழியில் நடக்கத் தூண்டுமாம். வாழ்க அந்த நம்பிக்கை.கோயிலில் இரவில் சாமிக்குப் படைத்த உணவை வறியவாகள் பாடுபரதேசிகளுக்குத் தரவேண்டும். இரண்டு பெரிய ஆண் தாராளமாகச் சாப்பிடலாம். அவ்வளவு பெரிய கட்டிச் சோறை இலையில் தான் வாங்க வேண்டும். கட்டிச்சோறு வாங்கும் கூட்டத்தில் தகிடும் ஒருவர். மீந்து போன கட்டிச் சோறை சிமெண்ட் கூரை கட்டிடத்துக்குள் வைத்துள்ள மண்சட்டியில் வைத்திருந்து காலையில் கெட்டுப்போனாலும் சாப்பிடுவார். மதிய உணவு…? யாரவது ஒருவியாபாரிக்கு எடுபிடி வேலை செய்வார். அவர்கள் ஊர் விட்டு ஊர்வந்து பிழைக்க வந்தவர்கள்.வெட்டவெளியில் சமைத்துச் சாப்பிடுவார்கள். தகிடுவுக்கு சாப்பாட்டில் நிச்சயம் பங்குஉண்டு.சமைப்பது தகிடுதானே.தன்னைப்பற்றி பழம் பெருமை பேசுவதில்லை. கடையில் நின்று டீ ,காபி, வடை, சாப்பாடு என்று காசு கொடுத்து வாங்கியதில்லை. யாரவது ஓசியில் அல்லது உழைப்பை வாங்கிவிட்டுக் கடையில் வாங்கித்தந்தால் வக்கனையாகச் சாப்பிடுவார். அந்த வீதியில் கண்ணுக்கு எட்டிய காதுக்கு எட்டிய தூரத்தில் எத்தகைய விருந்து நடந்தாலும் அழையா விருந்தாளியாகவே பந்தலோரம் நிற்பார். கறி விருந்து என்றால் இன்னும் சீக்கிரமே போவார். சாப்பிடும் நேரம் பார்த்து யாராவது ஒருவரிடம் பேச்சுக் கொடுப்பார். ‘‘ தகிடுவுக்குச் சாப்பாடு போடு…” என்ற வார்த்தைக்காகக் காத்திருப்பார்.வயிறாறச் சாப்பிட்டுவிட்டு முடியுமானால் மண்சட்டி அல்லது இலையில் சேகரித்துக்கொண்டு நகர்வார்.ஊர் பிரமுகர்களிடம் சுருட்டுக்கட்டு ,பழைய வேட்டி, கைலித் துண்டுகளை அவ்வப்போது வாங்கிக் கொள்வார். தகிடுவுக்கு வாங்கி தான் பழக்கம் கொடுத்து பழக்கம் இல்லை. சுருட்டுக் கம்பெனி முதலாளி வீட்டுக்கு விறகுதூக்கிச் சென்று சுமைக்கூலியோடு சுருட்டுக்கட்டையும் ஓசியில் பெறுவார். அப்படியானால் சம்பாதிக்கும் காசெல்லாம் எங்கே…? ரகசியம்.. ரகசியம்.. பரமரகசியம்..மர்மம். சில வியபாரிகள் கிணடலாகவும் உண்மையாகவும் கேட்பார்கள்.
‘‘ தகிடு… ஒழைக்கிற காசெல்லாம் எங்கே…? வைச்சிருக்கே…? கூத்தியாளுட்ட கொடுக்குறீயா… எனக்கு கைமாத்தா இல்லென்னா வட்டிக்காவது பணம் தரக்கூடதா…? ”
பொக்கைவாய் சிரிப்புத்தான் பதிலாக வரும். சில வியபாரிகள் , ‘‘ அந்த மடியில்தானே காசெல்லாம் வைச்சிருக்கே…? ”
என்று மடியைத் தொட வருவார்கள். தகிடு கெட்ட வார்த்தைகளை வீசி அந்த இடத்தை விட்டு விரைவாகச் செல்வார். சில நாட்கள் அவர்களோடு பேச மாட்டார். பிறகு அளவோடு பேசுவார்.
தகிடு கஞசனாக இருந்தவர்.யாரிடமும் கெட்டப் பெயர் வாங்கியதில்லை. தனக்கு எது வேண்டுமானாலும் பிச்சை யெடுத்தே சேர்ப்பார்.சளி ,காய்ச்சல், அஜிரணம் ,வாயு ,இருமல் போன்ற கோளாறுகளுக்கெல்லாம் தகிடுவின் ஆயுதம் எது தெரியுமா? சுருட்டுதான். சுருட்டுப்பிடித்தால் நோய் பக்கத்தில் வராது என்பது அவருடைய நம்பிக்கை.
கோடித்துணி மாலை செண்டு தேங்காய் ஊதுபத்தி…..எல்லாவற்றையும் ஒரு வியாபாரி சைக்கிளில் வந்தார். உயிரோடு இருக்கையில் தான் கஞ்சன் ,வள்ளல் ,பணக்காரன், நல்லவன் ,கெட்டவன், ஆண் ,பெண் எல்லாம். உயிர் போய்விட்டால் ஓரே பெயர் பிணம் என்பார்கள்.நல்லபடியா கொண்டு சேர்க்கனும் என்பார்கள். அப்படித்தான் இந்த வியாபாரிகள் தகிடுவுக்கு இறுதிச் சடங்கைப்புண்ணியமாய் நினைத்துச் செய்கிறார்கள். வாட்டஞ் சாட்டமாய் வெள்ளை வேட்டிச் சட்டையில் அறங்காவலர் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினார். கூடவே கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான பிணவண்டியும் வந்தது. சொற்ப வாடகைதான் அதுவும் தகிடு மாதிரி அனாதைக்குப் பிணவண்டி வாடகை கிடையாது.வண்டியிழுப்பவரும் கூலி வாங்கமாட்டார். அனாதைகளைப் பெரும்பாலும் புதைப்பார்கள்.மண்குழியைத் தோண்டுபவருக்கான பணத்தைக் கோயில் அறக்கட்டளையிலிருந்து கட்டுவார்கள்.
அறங்காவலர், ‘‘ தகிடுவைத் தூக்கிறலாமா…? வேறு யாரும் வரனுமா…?” ஒப்புக்குக் கேட்டார்.
வயதான வியாபாரி , ‘‘ முடிஞ்சது முடிஞ்சுப் போச்சு சொந்த பந்தம் யாரும் இல்லை. தூக்கிறலாம்பா ”
வீதியில் வருகின்றவர்கள் போகின்றவர்கள் தகிடு இறந்தைப் பெரிதாக நினைக்கவில்லை.
அறங்காவலர், ‘‘ மூணு கொடம் தண்ணீ கொண்டு வாங்கப்பா ” கட்டளைப்பறந்தது.சில நிமிடங்களில் வந்தன. அறங்காவலர் தண்ணீர்
குடத்தை வரிசையாக எடுத்துத் தலைமுதல் பாதம்வரை ஊற்றினார்.
தகிடுவின் மேல் துண்டு நீக்கப்பட்டது.இடுப்பில் இருந்த அழுக்குக் கைலியை அவிழ்த்தார்.அதைத்தொடர்ந்து இன்னொரு கைலி. உச் கொட்டியபடி அவிழ்க்க முயன்றார்.சற்றுத் திணறித்தான் போனார்.இடுப்புக் கயிறு இறுகிக்கிடந்தது.மனசுக்குள் வெறுப்பை விழுங்கிக் கொண்டார்.காய்கறி நறுக்கும் கத்தி நீட்டப்பட்டது.கற கறவென அறுத்தெறியப்பட்டது.கைலி கையோடு வந்தது.அதற்கு அடியில் மிகப்பெரிய நீளமாய் அழுக்கான மஞ்சள் பை அதற்கு உள்ளே அழுக்கான வெள்ளைப் பை இருந்தது. அறங்காவலர் அதைப் பொருட்படுத்தாமல் எடுக்கையில் பை நழுவிக் கீழே விழுந்தது.சலக்கென ஓசை எழுப்பியபடி விதவிதமாய் காசுகள் ரூபாய்த்தாள்கள் சிந்தின.சுற்றி நின்றோர் அதிர்ந்தனர்.
‘‘ அடப்பாவி இந்த பணங்காச காப்பத்தத் தான் புள்ளத்தாச்சிக் கணக்கா துணிக்கு மேலே துணியைச் சுத்தியிருந்தியாட தகிடு…”
ஒரு வியாபாரி பையைத் தொட வந்தார். அறங்காவலர் ஹிட்லாராய் கத்தினார். ‘‘ ஏய் ஒருபயலும் காசுப் பணத்தத் தொடக்கூடாது.இது கோயிலுக்குச் சொந்தம்.இது அனாதப்பொணம் தகிடுவோட காசு பணமெல்லாம் கோயில் கணக்குல சேரப் போகுது ”.
சிந்திய காசு பணத்தையெல்லாம் அவரே பொறுக்கிக் கொண்டார்.இவரைப் பகைத்துக்கொண்டு விறகு வியாபாரம் செய்ய முடியாது என்பதால் மறுப்புச் சொல்ல ஆளில்லை. தேங்காய் உடைக்கப்பட்டது. கோடித்துணி சுற்றப்பட்டது.மாலைப் போடப்பட்டது.ஊதுப்பத்திக் கொளுத்தப்பட்டது. தகிடுவின் உடல் அடுத்தவிநாடியே வண்டியில் வைக்கப்பட்டது.ம்…ம்… என்றார் அறங்காவலர்.பிணவண்டி நகரத் தொடங்கியது.யாரும் பின் செல்லவில்லை. பின் செல்ல விரும்பவில்லை. தகிடுவின் பணப்பையுடன் அறங்காவலர் மோட்டார் சைக்கிளில் கிளம்பிவிட்டார்.கூட்டம் தகிடுவின் பணப்பையைப் பற்றிப் பேசத்தொடங்கினார்கள்.
வியாபாரி1: ‘‘ இரண்டாயிரமாவது தேறும் ”
வியாபாரி2 : ‘‘ தகிடு மட்டும் உசிரோட இருந்தால் பணப்பையைத் தொட்டதுக்குக் கெட்ட வார்த்தையில திட்டியிருப்பான் ”.
வியாபாரி 3: ‘‘ காசு பணத்த வைச்சுகிட்டு நல்லது பொல்லதுக்கு ஏங்கியிருக்கான் பாரு ”.
வியாபாரி 4 : ‘‘ பிச்சைப்போட வேண்டியவன் பிச்சைக்காரனா வாழ்ந்துருக்கான் பாரு ”
வியாபாரி 5: ‘‘ ஏழ பாழ யாருக்கும் உதவி செய்யல ”
வியாபாரி 6 : ‘‘ நோவுக்கு உருப்படியா மருந்துமாத்திரை வாங்கி சாப்பிட்டானா? பாவிபய ”
வியாபாரி 7 : ‘‘ எச்சிக் கையில காக்கா ஒட்டாம இருந்தீயே. செத்த பிறகு காசயா திங்கிற ஒன்ன மண்ணுதான் திங்கப்போவுது ”
வியாபாரி 8: ‘‘ அது சரி தகிடு காசு பணமெல்லாம் கோயில் கணக்குல சேருமா..? ”
வியாபாரி 9 : ‘‘ இந்த அறங்காவலர் மலை முழுங்கி மகாதேவன்னு பேரு வாங்கினவன்.ஆளப் பாத்தா தொியல… சரியானத் திருடன். ”
வியாபாரி 10 : ‘‘ மழை, வெயிலு ,இரத்தம் ,வியர்வை ,பசிபட்டினி, களைப்பு, மலைப்புன்னு பாக்காம உழைச்ச காச நல்லபடியா செலவு செய்யாம திருட்டு அறங்காவலருக்கு ஒப்படைச்சுட்டுப் போயிட்டான் பாரு ”
வியாபாரி 11 : ‘‘ உடம்ப அழிச்சு உசிர அழிச்சு சம்பாதிச்சக் காச காப்பத்தத் தெரியாத பாவிப்பய ”
இதையெல்லாம் கேட்டுக் கேட்டு மனம் நொந்து அழுதிட தகிடு இப்ப உயிரோட இல்லை. தகிடுவின் அழுக்குத் துணியும் மூங்கில்கூடையும் குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிட்டது. தகிடு மாதிரி நம்மில் எத்தனைபேர் வாழ்கிறோம்?ஆயிரங்களை இலட்சங்களைக் கோடிகளை ஒருத்தனுக்கே ஒப்படைத்தோம்? ஒப்படைக்கிறோம்? ஒப்படைக்கப் போகிறோம்?என்னிடம் தகிடு எந்தக் கொள்கையில் வாழ்ந்திருக்க வேண்டுமெனக் கேள்வி கேட்டால்? பொதுவுடைமைக்கொள்கை வழியில் வாழ வேண்டுமெனப் பதில் சொல்வேன்.